நான்காம்-திருமுறை

047 கனகமா வயிர

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)

திருச்சிற்றம்பலம்

 

கனகமா வயிர முந்து 

  மாமணிக் கயிலை கண்டும்

உனகனா யரக்க னோடி 

  யெடுத்தலு முமையா ளஞ்ச

அனகனாய் நின்ற ஈச 

  னூன்றலு மலறி வீழ்ந்தான்

மனகனா யூன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  1 

 

 

கதித்தவன் கண்சி வந்து 

  கயிலைநன் மலையை யோடி

அதிர்த்தவன் எடுத்தி டலும் 

  அரிவைதான் அஞ்ச ஈசன்

நெதித்தவ னூன்றி யிட்ட 

  நிலையழிந் தலறி வீழ்ந்தான்

மதித்திறை யூன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  2 

 

 

கறுத்தவன் கண்சி வந்து 

  கயிலைநன் மலையைக் கையால்

மறித்தலும் மங்கை அஞ்ச 

  வானவர் இறைவன் நக்கு

நெறித்தொரு விரலா லூன்ற 

  நெடுவரை போல வீழ்ந்தான்

மறித்திறை யூன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  3 

 

 

கடுத்தவன் கண்சி வந்து 

  கயிலைநன் மலையை யோடி

எடுத்தலும் மங்கை அஞ்ச 

  இறையவ னிறையே நக்கு

நொடிப்பள விரலா லூன்ற 

  நோவது மலறி யிட்டான்

மடித்திறை யூன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  4 

 

 

கன்றித்தன் கண்சி வந்து 

  கயிலைநன் மலையை யோடி

வென்றித்தன் கைத்த லத்தா 

  லெடுத்தலும் வெருவ மங்கை

நன்றுத்தான் நக்கு நாத 

  னூன்றலு நகழ வீழ்ந்தான்

மன்றித்தான் ஊன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  5 

 

 

களித்தவன் கண்சி வந்து 

  கயிலைநன் மலையை யோடி

நெளித்தவ னெடுத்தி டலும் 

  நேரிழை அஞ்ச நோக்கி

வெளித்தவ னூன்றி யிட்ட 

  வெற்பினா லலறி வீழ்ந்தான்

மளித்திறை யூன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  6 

 

 

கருத்தனாய்க் கண்சி வந்து 

  கயிலைநன் மலையைக் கையால்

எருத்தனாய் எடுத்த வாறே 

  ஏந்திழை அஞ்ச ஈசன்

திருத்தனாய் நின்ற தேவன் 

  திருவிர லூன்ற வீழ்ந்தான்

வருத்துவான் ஊன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  7 

 

 

கடியவன் கண்சி வந்து 

  கயிலைநன் மலையை யோடி

வடிவுடை மங்கை அஞ்ச 

  எடுத்தலும் மருவ நோக்கிச்

செடிபடத் திருவி ரலா 

  லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்

வடிவுற வூன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  8 

 

 

கரியத்தான் கண்சி வந்து 

  கயிலைநன் மலையைப் பற்றி

இரியத்தான் எடுத்தி டலும் 

  ஏந்திழை அஞ்ச ஈசன்

நெரியத்தான் ஊன்றா முன்னம் 

  நிற்கிலா தலறி வீழ்ந்தான்

மரியத்தான் ஊன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே.  9 

 

 

கற்றனன் கயிலை தன்னைக் 

  காண்டலும் அரக்கன் ஓடிச்

செற்றவன் எடுத்த வாறே 

  சேயிழை அஞ்ச ஈசன்

உற்றிறை ஊன்றா முன்னம் 

  உணர்வழி வகையால் வீழ்ந்தான்

மற்றிறை ஊன்றி னானேல் 

  மறித்துநோக் கில்லை யன்றே. 10

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
ரசவாதம் புரிதல்
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details