நான்காம்-திருமுறை

043 மறையது பாடிப்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கச்சி மேற்றளி (காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

 

மறையது பாடிப் பிச்சைக் 

  கென்றகந் திரிந்து வாழ்வார்

பிறையது சடைமு டிமேற் 

  பெய்வளை யாள்தன் னோடுங்

கறையது கண்டங் கொண்டார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

இறையவர் பாட லாடல் 

  இலங்குமேற் றளிய னாரே.  1 

 

 

மாலன மாயன் றன்னை 

  மகிழ்ந்தனர் விருத்த ராகும்

பாலனார் பசுப தியார் 

  பால்வெள்ளை நீறு பூசிக்

காலனைக் காலாற் செற்றார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏலநற் கடம்பன் தாதை 

  இலங்குமேற் றளிய னாரே.  2 

 

 

விண்ணிடை விண்ண வர்கள் 

  விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்

பண்ணிடைச் சுவையின் மிக்க 

  கின்னரம் பாடல் கேட்பார்

கண்ணிடை மணியி னொப்பார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

எண்ணிடை யெழுத்து மானார் 

  இலங்குமேற் றளிய னாரே.  3 

 

 

சோமனை அரவி னோடு 

  சூழ்தரக் கங்கை சூடும்

வாமனை வான வர்கள் 

  வலங்கொடு வந்து போற்றக்

காமனைக் காய்ந்த கண்ணார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏமநின் றாடும் எந்தை 

  இலங்குமேற் றளிய னாரே.  4 

 

 

ஊனவ ருயிரி னோடு 

  முலகங்க ளூழி யாகித்

தானவர் தனமு மாகித் 

  தனஞ்சய னோடெ திர்ந்த

கானவர் காள கண்டர் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏனமக் கோடு பூண்டார் 

  இலங்குமேற் றளிய னாரே.  5 

 

 

மாயனாய் மால னாகி 

  மலரவ னாகி மண்ணாய்த்

தேயமாய்த் திசையெட் டாகித் 

  தீர்த்தமாய்த் திரிதர் கின்ற

காயமாய்க் காயத் துள்ளார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏயமென் றோளி பாகர் 

  இலங்குமேற் றளிய னாரே.  6 

 

 

மண்ணினை யுண்ட மாயன் 

  தன்னையோர் பாகங் கொண்டார்

பண்ணினைப் பாடி யாடும் 

  பத்தர்கள் சித்தங் கொண்டார்

கண்ணினை மூன்றுங் கொண்டார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

எண்ணினை யெண்ண வைத்தார் 

  இலங்குமேற் றளிய னாரே.  7 

 

 

செல்வியைப் பாகங் கொண்டார் 

  சேந்தனை மகனாக் கொண்டார்

மல்லிகைக் கண்ணி யோடு 

  மாமலர்க் கொன்றை சூடிக்

கல்வியைக் கரையி லாத 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

எல்லியை விளங்க நின்றார் 

  இலங்குமேற் றளிய னாரே.  8 

 

 

வேறிணை யின்றி யென்றும் 

  விளங்கொளி மருங்கி னாளைக்

கூறியல் பாகம் வைத்தார்

  கோளரா மதியும் வைத்தார்

ஆறினைச் சடையுள் வைத்தார் 

  அணிபொழிற் கச்சி தன்னுள்

ஏறினை யேறு மெந்தை 

  இலங்குமேற் றளிய னாரே.  9 

 

 

தென்னவன் மலையெ டுக்கச் 

  சேயிழை நடுங்கக் கண்டு

மன்னவன் விரலா லூன்ற 

  மணிமுடி நெரிய வாயாற்

கன்னலின் கீதம் பாடக் 

  கேட்டவர் காஞ்சி தன்னுள்

இன்னவற் கருளிச் செய்தார் 

  இலங்குமேற் றளிய னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்