நான்காம்-திருமுறை

040 தானலா துலக

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

தானலா துலக மில்லை 

  சகமலா தடிமை யில்லை

கானலா தாட லில்லை 

  கருதுவார் தங்க ளுக்கு

வானலா தருளு மில்லை 

  வார்குழல் மங்கை யோடும்

ஆனலா தூர்வ தில்லை 

  ஐயனை யாற னார்க்கே.  1 

 

 

ஆலலால் இருக்கை இல்லை 

  அருந்தவ முனிவர்க் கன்று

நூலலால் நொடிவ தில்லை 

  நுண்பொரு ளாய்ந்து கொண்டு

மாலுநான் முகனுங் கூடி 

  மலரடி வணங்க வேலை

ஆலலால் அமுத மில்லை 

  ஐயனை யாற னார்க்கே.  2 

 

 

நரிபுரி சுடலை தன்னில் 

  நடமலால் நவிற்ற லில்லை

சுரிபுரி குழலி யோடுந் 

  துணையலால் இருக்கை யில்லை

தெரிபுரி சிந்தை யார்க்குத் 

  தெளிவலால் அருளு மில்லை

அரிபுரி மலர்கொண் டேத்தும் 

  ஐயனை யாற னார்க்கே.  3 

 

 

தொண்டலாற் றுணையு மில்லை 

  தோலலா துடையு மில்லை

கண்டலா தருளு மில்லை 

  கலந்தபின் பிரிவ தில்லை

பண்டைநான் மறைகள் காணாப் 

  பரிசின னென்றென் றெண்ணி

அண்டவா னவர்கள் ஏத்தும் 

  ஐயனை யாற னார்க்கே.  4 

 

 

எரியலா லுருவ மில்லை 

  ஏறலால் ஏற லில்லை

கரியலாற் போர்வை யில்லை 

  காண்டகு சோதி யார்க்குப்

பிரிவிலா அமரர் கூடிப் 

  பெருந்தகைப் பிரானென் றேத்தும்

அரியலாற் றேவி யில்லை 

  ஐயனை யாற னார்க்கே.  5 

 

 

என்பலாற் கலனு மில்லை 

  எருதலா லூர்வ தில்லை

புன்புலால் நாறு காட்டிற் 

  பொடியலாற் சாந்து மில்லை

துன்பிலாத் தொண்டர் கூடித் 

  தொழுதழு தாடிப் பாடும்

அன்பலாற் பொருளு மில்லை 

  ஐயனை யாற னார்க்கே.  6 

 

 

கீளலால் உடையு மில்லை 

  கிளர்பொறி யரவம் பைம்பூண்

தோளலாற் றுணையு மில்லை 

  தொத்தலர் கின்ற வேனில்

வேளலாற் காயப் பட்ட 

  வீரரு மில்லை மீளா

ஆளலாற் கைம்மா றில்லை 

  ஐயனை யாற னார்க்கே.  7 

 

 

சகமலா தடிமை யில்லை 

  தானலாற் றுணையு மில்லை

நகமெலாந் தேயக் கையான் 

  நாண்மலர் தொழுது தூவி

முகமெலாங் கண்ணீர் மல்க 

  முன்பணிந் தேத்துந் தொண்டர்

அகமலாற் கோயி லில்லை 

  ஐயனை யாற னார்க்கே.  8 

 

 

உமையலா துருவ மில்லை 

  உலகலா துடைய தில்லை

நமையெலா முடைய ராவர் 

  நன்மையே தீமை யில்லை

கமையெலா முடைய ராகிக் 

  கழலடி பரவுந் தொண்டர்க்

கமைவிலா அருள் கொடுப்பார் 

  ஐயனை யாற னார்க்கே.  9 

 

 

மலையலா லிருக்கை யில்லை 

  மதித்திடா அரக்கன் றன்னைத்

தலையலால் நெரித்த தில்லை 

  தடவரைக் கீழ டர்த்து

நிலையிலார் புரங்கள் வேவ 

  நெருப்பலால் விரித்த தில்லை

அலையினார் பொன்னி மன்னும் 

  ஐயனை யாற னார்க்கே. 10

 

திருச்சிற்றம்பலம்