நான்காம்-திருமுறை

034 தேரையு மேல்க

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : மறைக்காடு

திருச்சிற்றம்பலம்

 

தேரையு மேல்க டாவித் 

  திண்ணமாத் தெழித்து நோக்கி

யாரையு மேலு ணரா 

  ஆண்மையான் மிக்கான் தன்னைப்

பாரையும் விண்ணும் அஞ்சப் 

  பரந்த தோள் முடியடர்த்துக்

காரிகை அஞ்ச லென்பார் 

  கலிமறைக் காட னாரே.  1 

 

 

முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை

நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை

அக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே

தெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே.  2 

 

 

மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி

அகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன்

உகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கே

நகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே.  3 

 

 

அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி

உந்தினான் மாம லையை ஊன்றலும் ஒள்ள ரக்கன்

பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்

சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே.  4 

 

 

தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்

கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்

எடுப்பன்நான் என்ன பண்ட மென்றெடுத் தானை ஏங்க

அடுக்கவே வல்ல னூராம் அணிமறைக் காடு தானே.  5 

 

 

நாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்

கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று

நீண்முடிச் சடையர் சேரும் நீள்வரை யெடுக்க லுற்றான்

தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே.  6 

 

 

பத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று

பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக்

கத்திவாய் கதற அன்று கால்விர லூன்றி யிட்டார்

முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காட னாரே.  7 

 

 

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்

புக்கனன் மாம லைக்கீழ்ப் போதுமா றறிய மாட்டான்

மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே

நக்கன பூத மெல்லாம் நான்மறைக் காட னாரே.  8 

 

 

நாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு

பாணஞ்சு முன்னி ழந்த பாங்கிலா மதிய னாகி

நீணஞ்சு தானு ணரா நின்றெடுத் தானை அன்று

ஏணஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காட னாரே.  9 

 

 

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத்

தென்கையான் தேர்க டாவிச் சென்றெடுத் தான் மலையை

முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட

அங்கைவாள் அருளி னானூர் அணிமறைக் காடு தானே. 10

 

திருச்சிற்றம்பலம்