நான்காம்-திருமுறை

026 நம்பனே எங்கள்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் :  அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

நம்பனே எங்கள் கோவே 

  நாதனே ஆதி மூர்த்தி

பங்கனே பரம யோகி 

  என்றென்றே பரவி நாளுஞ்

செம்பொனே பவளக் குன்றே 

  திகழ்மலர்ப் பாதங் காண்பான்

அன்பனே அலந்து போனேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  1 

 

 

பொய்யினால் மிடைந்த போர்வை 

  புரைபுரை அழுகி வீழ

மெய்யனாய் வாழ மாட்டேன் 

  வேண்டிற்றொன் றைவர் வேண்டார்

செய்யதா மரைகள் அன்ன 

  சேவடி இரண்டுங் காண்பான்

ஐயநான் அலந்து போனேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  2 

 

 

நீதியால் வாழ மாட்டேன் 

  நித்தலுந் தூயே னல்லேன்

ஓதியும் உணர மாட்டேன் 

  உன்னையுள் வைக்க மாட்டேன்

சோதியே சுடரே உன்றன் 

  தூமலர்ப் பாதங் காண்பான்

ஆதியே அலந்து போனேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  3 

 

 

தெருளுமா தெருள மாட்டேன் 

  தீவினைச் சுற்ற மென்னும்

பொருளுளே அழுந்தி நாளும்

  போவதோர் நெறியுங் காணேன்

இருளுமா மணிகண் டாநின் 

  இணையடி இரண்டுங் காண்பான்

அருளுமா றருள வேண்டும் 

  அதிகைவீ ரட்ட னீரே.  4 

 

 

அஞ்சினால் இயற்றப் பட்ட 

  ஆக்கைபெற் றதனுள் வாழும்

அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் 

  குழிதரும் ஆத னேனை

அஞ்சினால் உய்க்கும் வண்ணங் 

  காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்

அஞ்சினால் பொலிந்த சென்னி 

  அதிகைவீ ரட்ட னீரே.  5 

 

 

உறுகயி றூசல் போல 

  ஒன்றுவிட் டொன்று பற்றி

மறுகயி றூசல் போல 

  வந்துவந் துலவு நெஞ்சம்

பெறுகயி றூசல் போலப் 

  பிறைபுல்கு சடையாய் பாதத்

தறுகயி றூச லானேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  6 

 

 

கழித்திலேன் காம வெந்நோய் 

  காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி 

  உணர்வெனும் இமைதி றந்து

விழித்திலேன் வெளிறு தோன்ற 

  வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்

அழித்திலேன் அயர்த்துப் போனேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  7 

 

 

மன்றத்துப் புன்னை போல 

  மரம்படு துயர மெய்தி

ஒன்றினால் உணர மாட்டேன் 

  உன்னையுள் வைக்க மாட்டேன்

கன்றிய காலன் வந்து 

  கருக்குழி விழுப்ப தற்கே

அன்றினான் அலமந் திட்டேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  8 

 

 

பிணிவிடா ஆக்கை பெற்றேன் 

  பெற்றமொன் றேறு வானே

பணிவிடா இடும்பை யென்னும் 

  பாசனத் தழுந்து கின்றேன்

துணிவிலேன் தூய னல்லேன் 

  தூமலர்ப் பாதங் காண்பான்

அணியனாய் அறிய மாட்டேன் 

  அதிகைவீ ரட்ட னீரே.  9 

 

 

திருவினாள் கொழுந னாருந் 

  திசைமுக முடைய கோவும்

இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் 

  இணையடி காண மாட்டா

ஒருவனே எம்பி ரானே 

  உன்திருப் பாதங் கண்பான்

அருவனே அருள வேண்டும் 

  அதிகைவீ ரட்ட னீரே. 10

 

திருச்சிற்றம்பலம்