நான்காம்-திருமுறை

016 செய்யர் வெண்ணூலர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : புகலூர்

திருச்சிற்றம்பலம்

 

செய்யர் வெண்ணூலர்

  கருமான் மறிதுள்ளுங்

கையர் கனைகழல்

  கட்டிய காலினர்

மெய்யர் மெய்ந்நின்

  றவர்க்கல்லா தவர்க்கென்றும்

பொய்யர் புகலூர்ப்

  புரிசடை யாரே.  1 

 

 

மேகநல் ஊர்தியர்

  மின்போல் மிளிர்சடைப்

பாக மதிநுத

  லாளையொர் பாகத்தர்

நாக வளையினர்

  நாக வுடையினர்

போகர் புகலூர்ப்

  புரிசடை யாரே.  2 

 

 

பெருந்தாழ் சடைமுடி

  மேற்பிறை சூடிக்

கருந்தாழ் குழலியுந்

  தாமுங் கலந்து

திருந்தா மனமுடை

  யார்திறத் தென்றும்

பொருந்தார் புகலூர்ப்

  புரிசடை யாரே.  3 

 

 

அக்கார் அணிவடம்

  ஆகத்தர் நாகத்தர்

நக்கார் இளமதிக்

  கண்ணியர் நாடொறும்

உக்கார் தலைபிடித்

  துண்பலிக் கூர்தொறும்

புக்கார் புகலூர்ப்

  புரிசடை யாரே.  4 

 

 

ஆர்த்தார் உயிரடும்

  அந்தகன் றன்னுடல்

பேர்த்தார் பிறைநுதற்

  பெண்ணின்நல் லாள்உட்கக்

கூர்த்தார் மருப்பிற்

  கொலைக்களிற் றீருரி

போர்த்தார் புகலூர்ப்

  புரிசடை யாரே.  5 

 

 

தூமன் சுறவந்

  துதைந்த கொடியுடைக்

காமன் கணைவலங்

   காய்ந்தமுக் கண்ணினர்

சேம நெறியினர்

  சீரை யுடையவர்

பூமன் புகலூர்ப்

  புரிசடை யாரே.  6 

 

 

உதைத்தார் மறலி

  உருளவொர் காலாற்

சிதைத்தார் திகழ்தக்கன்

  செய்தநல் வேள்வி

பதைத்தார் சிரங்கரங்

  கொண்டுவெய் யோன்கண்

புதைத்தார் புகலூர்ப்

  புரிசடை யாரே.  7 

 

 

கரிந்தார் தலையர்

  கடிமதில் மூன்றுந்

தெரிந்தார் கணைகள்

  செழுந்தழ லுண்ண

விரிந்தார் சடைமேல்

  விரிபுனற் கங்கை

புரிந்தார் புகலூர்ப்

  புரிசடை யாரே.  8 

 

 

ஈண்டார் அழலி

  னிருவருங் கைதொழ

நீண்டார் நெடுந்தடு

  மாற்ற நிலையஞ்ச

மாண்டார்தம் என்பு

  மலர்க்கொன்றை மாலையும்

பூண்டார் புகலூர்ப்

  புரிசடை யாரே.  9 

 

 

கறுத்தார் மணிகண்டங்

  கால்விர லூன்றி

இறுத்தார் இலங்கையர்

  கோன்முடி பத்தும்

அறுத்தார் புலனைந்தும்

  ஆயிழை பாகம்

பொறுத்தார் புகலூர்ப்

  புரிசடை யாரே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பிட்டுக்கு மண் சுமத்தல்
View Details
கழற்சிங்க நாயனார்
View Details
உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details