நான்காம்-திருமுறை

011 சொற்றுணை வேதியன்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

சொற்றுணை வேதியன்

  சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி

  பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர்

  கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது

  நமச்சி வாயவே.  1 

 

 

பூவினுக் கருங்கலம்

  பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம்

  அரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலங்

  கோட்ட மில்லது

நாவினுக் கருங்கலம்

  நமச்சி வாயவே.  2 

 

 

விண்ணுற அடுக்கிய

  விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை

  யொன்று மில்லையாம்

பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.  3 

 

 

இடுக்கண்பட் டிருக்கினும்

  இரந்தி யாரையும்

விடுக்கிற் பிரானென்று

  வினவுவோ மல்லோம்

அடுக்கற்கீழ்க் கிடக்கினு

  மருளின் நாமுற்ற

நடுக்கத்தைக் கெடுப்பது

  நமச்சி வாயவே.  4 

 

 

வெந்தநீ றருங்கலம்

  விரதி கட்கெலாம்

அந்தணர்க் கருங்கலம்

  அருமறை யாறங்கந்

திங்களுக் கருங்கலந்

  திகழு நீண்முடி

நங்களுக் கருங்கலம்

  நமச்சி வாயவே.  5 

 

 

சலமிலன் சங்கரன்

  சார்ந்த வர்க்கலால்

நலமிலன் நாடொறு

  நல்கு வான்நலன்

குலமில ராகிலுங்

  குலத்திற் கேற்பதோர்

நலமிகக் கொடுப்பது

  நமச்சி வாயவே.  6 

 

 

வீடினார் உலகினில்

  விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி

  கூடிச் சென்றலும்

ஓடினே னோடிச்சென்

  றுருவங் காண்டலும்

நாடினேன் நாடிற்று

  நமச்சி வாயவே.  7 

 

 

இல்லக விளக்கது

  இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது

  சோதி யுள்ளது

பல்லக விளக்கது

  பலருங் காண்பது

நல்லக விளக்கது

  நமச்சி வாயவே.  8 

 

 

முன்னெறி யாகிய

  முதல்வன் முக்கணன்

தன்னெறி யேசர

  ணாதல் திண்ணமே

அந்நெறி யேசென்றங்

  கடைந்த வர்க்கெலாம்

நன்னெறி யாவது

  நமச்சி வாயவே.  9 

 

 

மாப்பிணை தழுவிய

  மாதோர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி

  பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய

  நமச்சி வாயப்பத்

தேத்தவல் லார்தமக்

  கிடுக்க ணில்லையே. 10

 

திருச்சிற்றம்பலம்