நான்காம்-திருமுறை

008 சிவனெனு மோசையல்ல

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் 

  றிருநின்ற செம்மை யுளதே

அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ 

  ததன்மேலொ ராட லரவங்

கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் 

  கலனாவ தோடு கருதில்

அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு 

  மகநேர்வர் தேவ ரவரே.  1 

 

 

விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத 

  விதியல்லர் விண்ணு நிலனுந்

திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் 

  தெளிநீரு மல்லர் தெரியில்

அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக 

  அருள்கார ணத்தில் வருவார்

எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் 

  இமைப்பாரு மல்லர் இவரே.  2 

 

 

தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலொர் திங்கள் 

  திலகம் பதித்த நுதலர்

காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர் 

  கரிகாடர் காலொர் கழலர்

வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய 

  மழுவீசி வேழவுரி போர்த்

தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும் 

  இதுதா னிவர்க்கொ ரியல்பே.  3 

 

 

வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி 

  வடிதோலும் நூலும் வளரக்

கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர் 

  கிளர்காடு நாடு மகிழ்வர்

நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய 

  லவள்தோன்று வாய்மை பெருகிக்

குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி 

  யுளள்போல் குலாவி யுடனே.  4 

 

 

உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர் 

  விடையூர்வ தோடு கலனா

இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச 

  ரொருபா லிசைந்த தொருபால்

பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை 

  பிறழ்பாட நின்று பிணைவான்

அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை 

  கடவா தமர ருலகே.  5 

 

 

கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி 

  கழல்கால் சிலம்ப அழகார்

அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண 

  மியலா ரொருவ ரிருவர்

மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை 

  மலையான் மகட்கு மிறைவர்

அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம் 

  அவர்வண்ண வண்ணம் அழலே.  6 

 

 

நகைவளர் கொன்றைதுன்று நகுவெண் டலையர் 

  நளிர்கங்கை தங்கு முடியர்

மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல 

  கறைகொள் மணிசெய் மிடறர்

முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு 

  மெரியாடு மாறு மிவர்கைப்

பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு 

  மிதுபோலும் ஈச ரியல்பே.  7 

 

 

ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற 

  னுடல்வெந்து வீய சுடர்நீ

றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர் 

  தமியா ரொருவ ரிருவர்

களிகிளர் வேடமுண்டொர் கடமா வுரித்த 

  உடைதோல் தொடுத்த கலனார்

அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக 

  எழில்வேத மோது மவரே.  8 

 

 

மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை 

  மணவாள ராகி மகிழ்வர்

தலைகல னாகவுண்டு தனியே திரிந்து 

  தவவாண ராகி முயல்வர்

விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி 

  விளையாடும் வேட விகிர்தர்

அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த 

  அழல்நஞ்ச முண்ட வவரே.  9 

 

 

புதுவிரி பொன்செயோலை யொருகாதொர் காது 

  சுரிசங்க நின்று புரள

விதிவிதி வேதகீத மொருபாடு மோத 

  மொருபாடு மெல்ல நகுமால்

மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர் 

  குழல்பாக மாக வருவர்

இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம் 

  எழில்வண்ண வண்ண மியல்பே.  10 

 

திருச்சிற்றம்பலம்