மூன்றாம்-திருமுறை

063 பைங்கோட்டு மலர்ப்புன்னைப்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : செங்காட்டங்குடி

திருச்சிற்றம்பலம்

 

பைங்கோட்டு மலர்ப்புன்னைப்

  பறவைகாள் பயப்பூரச்

சங்காட்டந் தவிர்த்தென்னைத்

  தவிராநோய் தந்தானே

செங்காட்டங் குடிமேய

  சிறுத்தொண்டன் பணிசெய்ய

வெங்காட்டுள் அனலேந்தி

  விளையாடும் பெருமானே  1 

 

 

பொன்னம்பூங் கழிக்கானற்

  புணர்துணையோ டுடன்வாழும்

அன்னங்காள் அன்றில்காள்

  அகன்றும்போய் வருவீர்காள்

கன்னவில்தோள் சிறுத்தொண்டன்

  கணபதீச் சரமேய

இன்னமுதன் இணையடிக்கீழ்

  எனதல்லல் உரையீரே.  2 

 

 

குட்டத்துங் குழிக்கரையுங்

  குளிர்பொய்கைத் தடத்தகத்தும்

இட்டத்தால் இரைதேரும்

  இருஞ்சிறகின் மடநாராய்

சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன்

  செங்காட்டங் குடிமேய

வட்டவார் சடையார்க்கென்

  வருத்தஞ்சென் றுரையாயே.  3 

 

 

கானருகும் வயலருகுங்

  கழியருகுங் கடலருகும்

மீனிரிய வருபுனலில்

  இரைதேர்வெண் மடநாராய்

தேனமர்தார்ச் சிறுத்தொண்டன்

  செங்காட்டங் குடிமேய

வானமருஞ் சடையார்க்கென்

  வருத்தஞ்சென் றுரையாயே.  4 

 

 

ஆரலாஞ் சுறவமேய்ந்

  தகன்கழனிச் சிறகுலர்த்தும்

பாரல்வாய்ச் சிறுகுருகே

  பயில்தூவி மடநாராய்

சீருலாஞ் சிறுத்தொண்டன்

  செங்காட்டங் குடிமேய

நீருலாஞ் சடையார்க்கென்

  நிலைமைசென் றுரையீரே.  5 

 

 

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல்

  கடனன்றே குளிர்பொய்கைத்

துறைக்கெண்டை கவர்குருகே

  துணைபிரியா மடநாராய்

கறைக்கண்டன் பிறைச்சென்னி

  கணபதீச்சரம் மேய

சிறுத்தொண்டன் பெருமான்சீர்

  அருளொருநாள் பெறலாமே.  6 

 

 

கருவடிய பசுங்கால்வெண்

  குருகேயொண் கழிநாராய்

ஒருவடியாள் இரந்தாளென்

  றொருநாட்சென் றுரையீரே

செருவடிதோட் சிறுத்தொண்டன்

  செங்காட்டங் குடிமேய

திருவடிதன் திருவருளே

  பெறலாமோ திறத்தவர்க்கே.  7 

 

 

கூராரல் இரைதேர்ந்து

  குளமுலவி வயல்வாழுந்

தாராவே மடநாராய்

  தமியேற்கொன் றுரையீரே

சீராளன் சிறுத்தொண்டன்

  செங்காட்டங் குடிமேய

பேராளன் பெருமான்றன்

  அருளொருநாள் பெறலாமே.  8 

 

 

நறப்பொலிபூங் கழிக்கானல்

  நவில்குருகே யுலகெல்லாம்

அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென்

  அலர்கோடல் அழகியதே

சிறப்புலவன் சிறுத்தொண்டன்

  செங்காட்டங் குடிமேய

பிறப்பிலிபேர் பிதற்றிநின்

  றிழக்கோவெம் பெருநலமே.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10 

 

 

செந்தண்பூம் புனல்பரந்த

  செங்காட்டங் குடிமேய

வெந்தநீ றணிமார்பன்

  சிறுத்தொண்ட னவன்வேண்ட

அந்தண்பூங் கலிக்காழி

  அடிகளையே அடிபரவுஞ்

சந்தங்கொள் சம்பந்தன்

  தமிழுரைப்போர் தக்கோரே. 11

திருச்சிற்றம்பலம்