மூன்றாம்-திருமுறை

050 விரும்புந் திங்களுங்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : தண்டலை நீள்நெறி (தண்டலைச்சேரி)

திருச்சிற்றம்பலம்

 

விரும்புந் திங்களுங்

  கங்கையும் விம்மவே

சுரும்புந் தும்பியுஞ்

  சூழ்சடை யார்க்கிடங்

கரும்புஞ் செந்நெலுங்

  காய்கமு கின்வளம்

நெருங்குந் தண்டலை

  நீணெறி காண்மினே.  1 

 

 

இகழுங் காலன்

  இதயத்தும் என்னுளுந்

திகழுஞ் சேவடி

  யான்திருந் தும்மிடம்

புகழும் பூமக

  ளும்புணர் பூசுரர்

நிகழுந் தண்டலை

  நீணெறி காண்மினே.  2 

 

 

பரந்த நீலப்

  படரெரி வல்விடங்

கரந்த கண்டத்தி

  னான்கரு தும்மிடஞ்

சுரந்த மேதி

  துறைபடிந் தோடையில்

நிரந்த தண்டலை

  நீணெறி காண்மினே.  3 

 

 

தவந்த என்புந்

  தவளப் பொடியுமே

உவந்த மேனியி

  னானுறை யும்மிடஞ்

சிவந்த பொன்னுஞ்

  செழுந்தர ளங்களும்

நிவந்த தண்டலை

  நீணெறி காண்மினே.  4 

 

 

இப்பதிகத்தில் 5 -ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  5 

 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.  7 

 

 

இலங்கை வேந்தன்

  இருபது தோளிற

விலங்க லில்லடர்த்

  தான்விரும் பும்மிடஞ்

சலங்கொள் இப்பி

  தரளமுஞ் சங்கமும்

நிலங்கொள் தண்டலை

  நீணெறி காண்மினே.  8 

 

 

கருவ ருந்தியின்

  நான்முகன் கண்ணனென் 

றிருவ ருந்தெரி

  யாவொரு வன்னிடஞ்

செருவ ருந்திய

  செம்பியன் கோச்செங்கண்

நிருபர் தண்டலை

  நீணெறி காண்மினே.  9 

 

 

கலவு சீவரத்

  தார்கையில் உண்பவர்

குலவ மாட்டாக்

  குழகன் உறைவிடஞ்

சுலவு மாமதி

  லுஞ்சுதை மாடமும்

நிலவு தண்டலை

  நீணெறி காண்மினே.  10 

 

 

நீற்றர் தண்டலை

  நீணெறி நாதனைத்

தோற்று மேன்மையர்

  தோணி புரத்திறை

சாற்று ஞானசம்

  பந்தன் தமிழ்வல்லார்

மாற்றில் செல்வர்

  மறப்பர் பிறப்பையே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பிண்ணாக்கீசர்
View Details
ஸ்ரீ போடோ சித்தர் ஞானி
View Details
உரோம முனி சித்தர்
View Details