மூன்றாம்-திருமுறை

006 கொட்ட மேகமழுங்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : கொள்ளம்பூதூர்

திருச்சிற்றம்பலம்

 

கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்

நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  1 

 

 

கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்

நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  2 

 

 

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்

விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  3 

 

 

குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த்

தவள நீறணி தலைவனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  4 

 

 

கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்

நின்ற புன்சடை நிமலனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  5 

 

 

ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்

ஆடல் பேணிய அடிகளை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  6 

 

 

ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்

ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  7 

 

 

குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்

அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  8 

 

 

பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்

இருவர் காண்பரி யான்கழ லுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  9 

 

 

நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த்

தேர மண்செற்ற செல்வனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தை யார்தொழ

நல்கு மாறருள் நம்பனே.  10 

 

 

கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்

நன்று காழியுள் ஞானசம் பந்தன்

இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்

என்றும் வானவ ரோடிருப்பாரே. 11

 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
சமணர் கழுவேற்றம்
View Details
கணநாத நாயனார்
View Details