முதல்-திருமுறை

128 ஓருரு வாயினை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  சீர்காழி - பல்பெயர்ப்பத்து

திருச்சிற்றம்பலம்

 

ஓருரு வாயினை மானாங் காரத்

தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை

இருவரோ டொருவ னாகி நின்றனை  1 

 

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி

காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை

இருநதி அரவமோ டொருமதி சூடினை

ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்  2 

 

நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்

திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்  3 

 

கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்

முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்

ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ

டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து  4 

 

நான்மறை யோதி ஐவகை வேள்வி

அமைத்தா றங்க முதலெழுத் தோதி

வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை  5 

 

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை

பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை

பாணிமூவுலகும் புதையமேல் மிதந்த

தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை  6 

 

வரபுரம் என்றுணர் சிரபுரத் துறைந்தனை

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்

விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை  7 

 

ஐயுறு மமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை

எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்

மறைமுதல் நான்கும்  8 

 

மூன்று காலமுந் தோன்ற நின்றனை

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்  9 

 

அனைய தன்மையை யாதலின் நின்னை

நினைய வல்லவ ரில்லைநீள் நிலத்தே. 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details
உருத்திர பசுபதி நாயனார்
View Details
குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details