அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சீர் வளர் சிறப்பின் மிக்க செயல்
முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை
நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க
பழம்பதி மதி தோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக்
காம்பீலி என்பதாகும். 1
அந்நகர் அதனில் வாழ்வார்
அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள்
மரபில் மேம்பாடு பெற்றார்
பன்னகா பரணர்க்கு அன்பர்
பணி தலைக்கொண்டு பாதம்
சென்னியில் கொண்டு போற்றும்
தேசினார் நேசர் என்பார். 2
ஆங்கு அவர் மனத்தின் செய்கை
அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த
அஞ்சு எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை
தம்பிரான் அடியார்க்கு ஆகப்
பாங்குடை உடையும் கீளும்
பழுதில் கோவணமும் நெய்வார். 3
உடையொடு நல்ல கீளும்
ஒப்பில் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து
வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர்
கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி
அரனடி நீழல் சேர்ந்தார். 4
கற்றை வேணி முடியார் தம் கழல்
சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச்
சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக
அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்
சோழர் பெருமை கூறுவாம். 5
திருச்சிற்றம்பலம்