பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

057 வாயிலார் நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சொல் விளங்கு சீர்த் தொண்டைநன்னாட்டிடை

மல்லல் நீடிய வாய்மை வளம்பதி

பல்பெருங்குடி நீடு பரம்பரைச்

செல்வ மல்கு திருமயிலா புரி.  1 

 

 

நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத்

தேடும் அப்பெருஞ் சேம வைப்பாம் என

ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி

மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால்.  2 

 

 

கலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து

அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்

நலங் கொள் மேதி நன்னாகும் தெரிக்க ஒணா

சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம்.  3 

 

 

தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்

துவள் பதாகை நுழைந்து அணை தூமதி

பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி

உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால்.  4 

 

 

வீதி எங்கும் விழா அணிக் காளையர்

தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்

ஓதி எங்கும் ஒழியா அணிநிதி

பூதி எங்கும் புனை மணிமாடங்கள்.  5 

 

 

மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல

நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்

தன்மை வாயிலார் என்னும் தபோதனர்.  6 

 

 

வாயிலார் என நீடிய மாக்குடித்

தூய மா மரபின் முதல் தோன்றியே

நயனார் திருத்தொண்டின் நயப்புறு

மேய காதல் விருப்பின் விளங்குவார்.  7 

 

 

மறவாமையான் அமைத்த 

  மனக்கோயிலுள் இருத்தி

உறவாதிதனை உணரும் ஒளி 

  விளக்குச் சுடர் ஏற்றி

இறவாத ஆனந்தம் எனும் 

  திருமஞ்சனம் ஆட்டி

அறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து 

  அர்ச்சனை செய்வார்.  8 

 

 

அகம் மலர்ந்த அர்ச்சனையில் 

  அண்ணலார் தமை நாளும்

நிகழ வரும் அன்பினால் 

  நிறை வழிபாடு ஒழியாமே

திகழ நெடுநாள் செய்து 

  சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்

புகல் அமைத்துத் தொழுது இருந்தார் 

  புண்ணிய மெய்த் தொண்டனார்.  9 

 

 

நீராருஞ் சடையாரை 

  நீடுமன ஆலயத்துள்

ஆராத அன்பினால் அருச்சனை 

  செய்து அடியவர்பால்

பேராத நெறி பெற்ற 

  பெருந் தகையார் தமைப்போற்றிச்

சீர் ஆரும் திரு நீடூர் 

  முனையடுவார் திறம் உரைப்பாம்.  10 

திருச்சிற்றம்பலம்

மேலும்

இயற்பகை நாயனார்
View Details
நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details
அரிவாட்டாய நாயனார்
View Details