பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

056 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தடுமாறும் நெறி அதனைத் தவம் 

  என்று தம் உடலை

அடுமாறு செய்து ஒழுகும் 

  அமண் வலையில் அகப்பட்டு 

விடுமாறு தமிழ் விரகர் வினை 

  மாறும் கழல் அடைந்த

நெடுமாறனார் பெருமை உலகு 

  ஏழும் நிகழ்ந்ததால்.  1 

 

 

அந்நாளில் ஆளுடைய 

  பிள்ளையார் அருளாலே

தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் 

  உய்த்து அறம் அளித்து

சொன்னாம நெறிபோற்றிச் சுரர் 

  நகர்க்கோன் தனைக் கொண்ட

பொன்னாரம் அணி மார்பில் 

  புரவலனார் பொலி கின்றார்.  2 

 

 

ஆய அரசு அளிப்பார் பால் 

  அமர் வேண்டி வந்து ஏற்ற

சேய புலத் தெவ்வர் எதிர் 

  நெல்வேலிச் செருக் களத்துப்

பாய படைக் கடல் முடுகும் 

  பரிமாவின் பெரு வெள்ளம்

காயும் மதக் களிற்றின் நிரை 

  பரப்பி அமர் நடக்கின்றார்.  3 

 

 

எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் 

  பொரு படைஞர்

படுத்த நெடுங் கரித்துணியும் பாய் 

  மாவின் அறு குறையும்

அடுத்து அமர் செய் வயவர் கருந் 

  தலையும் மலையும் அலை செந்நீர்

மடுத்த கடல் மீளவும் தாம் 

  வடிவேல் வாங்கிடப் பெருக.  4 

 

 

வயப்பரியின் களிப்பு ஒலியும் 

  மறவர் படைக்கல ஒலியும்

கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் 

  கலந்து எழு பல்லிய ஒலியும்

வியக்குமுகக் கடை நாளின் மேக 

  முழக்கு என மீளச்

சயத்தொடர் வல்லியும் இன்று தாம் 

  விடுக்கும் படி தயங்க.  5 

 

 

தீயுமிழும் படை வழங்கும் 

  செருக்களத்து முருக்கும் உடல்

தோயும் நெடும் குறுதி மடுக் 

  குளித்து நிணம் துய்த்து ஆடி

போய பருவம் பணிகொள் 

  பூதங்களே அன்றிப்

பேயும் அரும் பணி செய்ய 

  உணவு அளித்தது எனப் பிறங்க.  6 

 

 

இனைய கடுஞ் சமர் 

  விளைய இகலுழந்த பறந்தலையில்

பனை நெடுங்கை மதயானைப் 

  பஞ்சவனார் படைக் குடைந்து

முனை அழிந்த வடபுலத்து 

  முதல் மன்னர் படைசரியப்

புனையும் நறும் தொடை வாகை 

  பூழியர் வேம்புடன் புனைந்து.  7 

 

 

வளவர் பிரான் திருமகளார் 

  மங்கையருக்கு அரசியார்

களப மணி முலை 

  திளைக்கும் தடமார்பில் கவுரியனார்

இளவள வெண் பிறை அணிந்தார்க்கு 

  ஏற்ற திருத்தொண்டு எல்லாம்

அளவில் புகழ் பெற விளங்கி 

  அருள் பெருக அரசு அளித்தார்.  8 

 

 

திரை செய் கடல் உலகின் 

  கண் திருநீற்றின் நெறி விளங்க

உரைசெய் பெரும்புகழ் விளக்கி 

  ஓங்கு நெடு மாறனார்

அரசு உரிமை நெடும் காலம் 

  அளித்து இறைவர் அருளாலே

பரசு பெரும் சிவலோகத்தில் இன் 

  புற்று பணிந்து இருந்தார்.  9 

 

 

பொன் மதில் சூழ் புகலி 

  காவலர் அடிக்கீழ்ப் புனிதராந்

தென்மதுரை மாறனார் செங் 

  கமலக் கழல் வணங்கிப்

பன்மணிகள் திரை ஓதம் பரப்பு 

  நெடும் கடல் படப்பைத்

தொல் மயிலை வாயிலார் 

  திருத்தொண்டின் நிலைதொழுவாம்.  10 

 

திருச்சிற்றம்பலம்