பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

054 கணம்புல்ல நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

திருக்கிளர் சீர் மாடங்கள் 

  திருந்து பெருங்குடி நெருங்கிப் 

பெருக்கு வட வெள்ளாற்றுத் தென் 

  கரைப்பால் பிறங்கு பொழில்

வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு 

  நிறைத்து வயல் விளைக்கும்

இருக்கு வேளூர் என்பது 

  இவ்வுலகில் விளங்கு பதி.  1 

 

 

அப்பதியில் குடி முதல்வர்க்கு 

  அதிபராய் அளவிறந்த

எப்பொருளும் முடிவு அறியா 

  எய்து பெருஞ் செல்வத்தார்

ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் 

  மேற்பட எழுந்தார் 

மெய் பொருளாவன ஈசர் கழல் 

  என்னும் விருப்பு உடையார்.  2 

 

 

தாவாத பெருஞ் செல்வம் தலை 

  நின்ற பயன் இது என்று

ஓவாத ஒளிவிளக்குச் சிவன் 

  கோயிலுள் எரித்து

நாவாரப் பரவுவார் நல்குரவு 

  வந்து எய்தத்

தேவதி தேவர்பிரான் திருத்தில்லை 

  சென்று அடைந்தார்.  3 

 

 

தில்லை நகர் மணி 

  மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்

அல்கிய அன்புடன் இறைஞ்சி 

  அமர்கின்றார் புரம் எரித்த

வில்லியார் திருப் புலீச் சரத்தின் 

  கண் விளக்கு எரிக்க

இல்லிடை உள்ளன மாறி 

  எரித்துவரும் அந்நாளில்.  4 

 

 

ஆய செயல் மாண்டதற்பின் அயல் 

  அவர் பால் இரப்பஞ்சி

காய முயற்சியில் அரிந்த கணம் 

  புல்லுக் கொடு வந்து

மேய விலைக்குக் கொடுத்து 

  விலைப் பொருளால் நெய்மாறித்

தூயதிரு விளக்கு எரித்தார் 

  துளக்கறு மெய்த் தொண்டனார்.  5 

 

 

இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து 

  வர அங்கு ஒரு நாள்

மெய் வருந்தி அரிந்து 

  எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்

எவ்விடத்தும் விலை போகாது 

  ஒழியவும் இப்பணி ஒழியார்

அவ்வரிபுல் லினைமாட்டி அணி 

  விளக்காயிட எரிப்பார்.  6 

 

 

முன்பு திருவிளக்கு எரிக்கும் 

  முறையாமம் குறையாமல்

மென் புல்லும் விளக்கு 

  எரிக்கப் போதாமை மெய்யான

அன்பு புரிவார் அடுத்த 

  விளக்குத் தம் திருமுடியை

என்புருக மடுத்து எரித்தார் 

  இருவினையின் தொடக்கு எரித்தார்.  7 

 

 

தங்கள் பிரான் திரு உள்ளம் 

  செய்து தலைத் திருவிளக்குப்

பொங்கிய அன்புடன் எரித்த 

  பொருவில் திருத்தொண்டருக்கு

மங்கலமாம் பெரும் கருணை 

  வைத்து அருளச் சிவலோகத்து

எங்கள் பிரான் கணம் புல்லர் 

  இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்.  8 

 

 

மூரியார் கலி உலகின் 

  முடி இட்ட திருவிளக்குப்

பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் 

  தம் கழல் பேணி

வேரியார் மலர்ச் சோலை 

  விளங்கு திருக்கடவூரில்

காரியார் தாம் செய்த 

  திருத்தொண்டு கட்டுரைப்பாம்.  9 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மதுரை நகர் அமைத்தல்
View Details
பிண்ணாக்கீசர்
View Details
குண்டோதரனுக்கு உண்டியிடல்
View Details