பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

052 சத்தி நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்

குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை

அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய

வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.  1 

 

 

வரிஞ்சையூரினில் வாய்மை வேளாண் குலம்

பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார்

விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்

அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார்.  2 

 

 

அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை

இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை

வைத்த நாவை வலித்து அரி சத்தியால்

சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார்.  3 

 

 

தீங்கு சொற்ற திருவிலர் நாவினை

வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து

தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்

ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.  4 

 

 

அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி

மன்னு பேருலகத்தில் வலியுடன்

பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து

சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர்.  5 

 

 

ஐயம் இன்றி அரிய திருப்பணி

மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர்

வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார்

செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.  6 

 

 

நாயனார் தொண்டரை நலம் கூறலார்

சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து

ஆய மாதவத்து ஐயடிகள் எனும்

தூய காடவர் தம் திறம் சொல்லுவாம்.  7 

 

திருச்சிற்றம்பலம்