பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

041 சிறப்புலி நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பொன்னி நீர் நாட்டின் நீடும் 

  பொற்பதி புவனத்து உள்ளோர்

இன்மையால் இரந்து சென்றோர்க்கு 

  இல்லை என்னாதே ஈயும்

தன்மையார் என்று நன்மை 

  சார்ந்த வேதியரைச் சண்பை

மன்னனார் அருளிச்செய்த மறைத் 

  திருவாக்கூர் ஆக்கூர்.  1 

 

 

தூ மலர்ச் சோலை தோறும் 

  சுடர் தொடுமாடம் தோறும்

மாமழை முழக்கம் தாழ மறை 

  ஒலி முழக்கம் ஓங்கும்

பூ மலி மறுகில் இட்ட 

  புகை அகில் தூபம் தாழ

ஓம நல் வேள்விச் சாலை 

  ஆகுதித் தூபம் ஓங்கும்.  2 

 

 

ஆலை சூழ் பூக வேலி 

  அத்திரு ஆக்கூர் தன்னில்

ஞாலமார் புகழின் மிக்கார் நான் 

  மறைக் குலத்தின் உள்ளார்

நீலமார் கண்டத்து எண் தோள் 

  நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற

சீலராய்ச் சாலும் ஈகைத் 

  திறத்தினில் சிறந்த நீரார்.  3 

 

 

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த 

  போது அடியில் தாழ்ந்து

மூளும் ஆதரவு பொங்க 

  முன்பு நின்று இனிய கூறி

நாளும் நல் அமுதம் ஊட்டி 

  நயந்தன எல்லாம் நல்கி

நீளும் இன்பத்துள் தங்கி 

  நிதிமழை மாரி போன்றார்.  4 

 

 

அஞ்சு எழுத்து ஓதி அங்கி 

  வேட்டு நல் வேள்வி எல்லாம்

நஞ்சணி கண்டர் பாதம் 

  நண்ணிடச் செய்து ஞாலத்து

எஞ்சலில் அடியார்க்கு என்றும் 

  இடையறா அன்பால் வள்ளல்

தஞ்செயல் வாய்ப்ப ஈசர் 

  தாள் நிழல் தங்கினாரே.  5 

 

 

அறத்தினில் மிக்க மேன்மை 

  அந்தணர் ஆக்கூர் தன்னில்

மறைப் பெரு வள்ளலார் வண் 

  சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்

சிறப்புடைத் திருச் செங்காட்டங் 

  குடியினில் செம்மை வாய்ந்த

விறற் சிறுத் தொண்டர் செய்த 

  திருத்தொழில் விளம்பல் உற்றேன்.  6 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கல்லுளிச் சித்தர்
View Details
ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details
சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details