பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

034 திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வேத நெறி தழைத்து ஓங்க 

  மிகு சைவத் துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியப் புனித 

  வாய் மலர்ந்து அழுத

சீத வள வயல் 

  புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக் கொண்டு 

  திருத் தொண்டு பரவுவாம்.  1 

 

 

சென்னி வளர் மதி அணிந்த 

  சிலம்பு அணி சேவடியார் தம்

மன்னிய சைவத் துறையின் வழி 

  வந்த குடி வளவர்

பொன்னி வளம் தரு நாடு 

  பொலிவு எய்த நிலவியதால்

கன்னி மதில் மருங்கு முகில் 

  நெருங்கும் கழுமல மூதூர்.  2 

 

 

அப் பதி தான் அந்தணர் தம் 

  கிடைகள் அரு மறை முறையே

செப்பும் ஒலி வளர் பூகச் 

  செழும் சோலை புறம் சூழ

ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் 

  கடை நாள் அன்றியே

எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது 

  என இசைந்து உளதால்.  3 

 

 

அரி அயனே முதல் அமரர் 

  அடங்க எழும் வெள்ளங்கள்

விரி சுடர் மா மணிப் பதணம் 

  மீது எறிந்த திரை வரைகள்

புரிசை முதல் புறம் சூழ்வ 

  பொங்கு ஓதம் கடை நாளில்

வரி அரவ மந்தரம் சூழ் 

  வடம் போல வயங்குமால்.  4 

 

 

வளம் பயிலும் புறம் பணைப் 

  பால் வாசப் பாசடை மிடைந்த

தளம் பொலியும் புனல் செந்தாமரைச் 

  செவ்வித் தட மலரால்

களம் பயில் நீர்க் கடல் மலர்வது 

  ஒரு பரிதி எனக் கருதி

இளம் பரிதி பல மலர்ந்தாற் 

  போல்ப உள இலஞ்சி பல.  5 

 

 

உளம் கொள் மறை வேதியர் 

  தம் ஓமத் தூமத்து இரவும்

கிளர்ந்த திரு நீற்று ஒளியில் 

  கெழுமிய நண் பகலும் அலர்ந்து

அளந்து அறியாப் பல்லூழி 

  ஆற்றுதலால் அகல் இடத்து

விளங்கிய அம்மூதூர்க்கு வேறு 

  இரவும் பகலும் மிகை.  6 

 

 

பரந்த விளைவயல் செய்ய 

  பங்கயமாம் பொங்கு எரியில்

வரம்பில் வளர் தேமாவின் கனி 

  கிழிந்த மது நறு நெய்

நிரந்தரம் நீள் இலைக் கடையால் 

  ஒழுகுதலால் நெடிது அவ்வூர்

மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய 

  என மணந்து உளதால்.  7 

 

 

வேலை அழல் கதிர் படிந்த 

  வியன் கங்குல் வெண்மதியம்

சோலை தொறும் நுழைந்து புறப்படும் 

  பொழுது துதைந்த மலர்ப்

பால் அணைந்து மதுத் தோய்ந்து 

  தாது அளைந்து பயின்று அந்தி

மாலை எழும் செவ்வொளிய 

  மதியம் போல் வதியுமால்.  8 

 

 

காமர் திருப்பதி அதன் கண் 

  வேதியர் போல் கடி கமழும்

தாமரையும் புல்லிதழும் தயங்கிய 

  நூலும் தாங்கித்

தூமரு நுண் துகள் அணிந்து 

  துளி வருகண்ணீர் ததும்பித்

தேமரு மென் சுரும்பு இசையால் 

  செழும் சாமம் பாடுமால்.  9 

 

 

புனைவார் பொன் குழை அசையப் 

  பூந்தானை பின் போக்கி

வினை வாய்ந்த தழல் வேதி 

  மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும்

கனை வானமுகில் கூந்தல் கதிர் 

  செய் வடமீன் கற்பின்

மனை வாழ்க்கைக் குலமகளிர் 

  வளம் பொலிவ மாடங்கள்.  10 

 

 

வேள்வி புரி சடங்கு அதனை 

  விளையாட்டுப் பண்ணை தொறும்

பூழியுற வகுத்து அமைத்துப் பொன் 

  புனை கிண்கிணி ஒலிப்ப

ஆழி மணிச் சிறு தேர் 

  ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்

வாழி வளர் மறைச் சிறார் 

  நெருங்கியுள மணி மறுகு.  11 

 

 

விடு சுடர் நீள் மணி மறுகின் 

  வெண் சுதை மாளிகை மேகம்

தொடு குடுமி நாசி தொறும் 

  தொடுத்த கொடி சூழ் கங்குல்

உடுஎனு நாள் மலர் அலர 

  உறு பகலில் பல நிறத்தால்

நெடு விசும்பு தளிப்பது என 

  நெருங்கியுள மருங்கு எல்லாம்.  12 

 

 

மடை எங்கும் மணிக்குப்பை வயல் 

  எங்கும் கயல் வெள்ளம்

புடை எங்கும் மலர்ப் பிறங்கல் 

  புறம் எங்கும் மகப் பொலிவு

கிடை எங்கும் கலைச் சூழல் 

  கிளர் எங்கும் முரல் அளிகள்

இடை எங்கும் முனிவர் குழாம் 

  எயில் எங்கும் பயில் எழிலி.  13 

 

 

பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு 

  வெங்குரு நீர்ப்

பொருவில் திருத் தோணிபுரம் 

  பூந்தராய் சிரபுரம் முன்

வருபுறவம் சண்பை நகர் வளர் 

  காழி கொச்சை வயம்

பரவு திருக் கழுமலமாம் 

  பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.  14 

 

 

அப்பதியின் அந்தணர் தம் குடி 

  முதல்வர் ஆசில் மறை

கைப்படுத்த சீலத்துக் கவுணியர் 

  கோத்திரம் விளங்கச்

செப்பும் நெறி வழிவந்தார் 

  சீவபாத இருதயர் என்று

இப் புவி வாழத் தவம் 

  செய் இயல்பினார் உளர் ஆனார்.  15 

 

 

மற்றவர் தம் திரு மனையார் 

  வாய்ந்த மரபின் வரு

பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு 

  அரிய பெருமையினார்

பொற்புடைய பகவதியார் எனப் 

  போற்றும் பெயர் உடையார்

கற்பு மேம்படு சிறப்பால் 

  கணவனார் கருத்து அமைந்தார்.  16 

 

 

மரபு இரண்டும் சைவ 

  நெறி வழிவந்த கேண்மையராய்

அரவு அணிந்த சடை 

  முடியார் அடியலால் அறியாது

பரவு திருநீற்று அன்பு 

  பாலிக்கும் தன்மையராய்

விரவு மறை மனை வாழ்க்கை 

  வியப்பு எய்த மேவு நாள்.  17 

 

 

மேதினி மேல் சமண் கையர் 

  சாக்கியர் தம் பொய்ம்மிகுத்தே

ஆதி அருமறை வழக்கம் அருகி 

  அரன் அடியார் பால்

பூதி சாதன விளக்கம் போற்றல் 

  பெறாது ஒழியக் கண்டு

ஏதமில் சீர் சிவபாத இருதயர் 

  தாம் இடர் உழந்தார்.  18 

 

 

மனை அறத்தில் இன்பம் உறு 

  மகப் பெறுவான் விரும்புவார்

அனையநிலை தலை நின்றே 

  ஆடிய சேவடிக் கமலம்

நினைவுற முன் பர சமயம் 

  நிராகரித்து நீறு ஆக்கும்

புனை மணிப்பூண் காதலனைப் 

  பெறப் போற்றும் தவம் புரிந்தார்.  19 

 

 

பெருத்து எழும் அன்பால் பெரிய 

  நாச்சியார் உடன் புகலித்

திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக் 

  கீழ் வழிபட்டுக்

கருத்து முடிந்திடப் பரவும் 

  காதலியார் மணி வயிற்றில்

உருத் தெரிய வரும் பெரும் 

  பேறு உலகு உய்ய உளதாக.  20 

 

 

ஆளுடையாளுடன் தோணி அமர்ந்த 

  பிரான் அருள் போற்றி

மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் 

  மறைநூல் முறைச் சடங்கு

நாள் உடைய ஈரைந்து 

  திங்களினும் நலம் சிறப்பக்

கேளிருடன் செயல் புரிந்து 

  பெரிதின்பம் கிளர்வுறுநாள்.  21 

 

 

அருக்கன் முதல் கோன் 

  அனைத்தும் அழகிய உச்சங்களிலே

பெருக்க வலியுடன் நிற்கப் 

  பேணிய நல்லோரை எழத்

திருக்கிளரும் ஆதிரை நாள் 

  திசை விளங்கப் பரசமயத்

தருக்கொழியச் சைவம் முதல் 

  வைதிகமும் தழைத்து ஓங்க.  22 

 

 

தொண்டர் மனம் களி சிறப்பத் 

  தூய திருநீற்று நெறி

எண் திசையும் தனி நடப்ப 

  ஏழ் உலகும் குளிர் தூங்க

அண்டர் குலம் அதிசயிப்ப 

  அந்தணர் ஆகுதி பெருக

வண் தமிழ் செய்தவம் நிரம்ப 

  மாதவத்தோர் செயல் வாய்ப்ப.  23 

 

 

திசை அனைத்தின் பெருமை எலாம் 

  தென்திசையே வென்று ஏற

மிசை உலகும் பிறவுலகும் 

  மேதினியே தனி வெல்ல

அசைவில் செழும் தமிழ் வழக்கே 

  அயல் வழக்கின் துறைவெல்ல

இசை முழுதும் மெய் அறிவும் 

  இடம் கொள்ளும் நிலை பெருக.  24 

 

 

தாளுடைய படைப்பு என்னும் தொழில் 

  தன்மை தலைமை பெற

நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் 

  நவை நீங்க

வாளுடைய மணிவீதி 

  வளர்காழிப் பதிவாழ

ஆளுடைய திருத்தோணி அமர்ந்த 

  பிரான் அருள் பெருக.  25 

 

 

அவம் பெருக்கும் புல் அறிவின் 

  அமண் முதலாம் பரசமயப்

பவம் பெருக்கும் புரை நெறிகள் 

  பாழ்பட நல் ஊழி தொறும்

தவம் பெருக்கும் சண்பையிலே 

  தாவில் சராசரங்கள் எலாம்

சிவம் பெருக்கும் பிள்ளையார் 

  திரு அவதாரம் செய்தார்.  26 

 

 

அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்

எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி

மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே

ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார்.  27 

 

 

சிவன் அருள் எனப் பெருகு 

  சித்தம் மகிழ் தன்மை

இவண் இது நமக்கு வர 

  எய்தியது என் என்பார்

கவுணியர் குலத்தில் ஒரு 

  காதலன் உதித்தான்

அவன் வருநிமித்தம் இது 

  என்று அதிசயித்தார்.  28 

 

 

பூ முகை அவிழ்ந்து மணம் 

  மேவும் பொழில் எங்கும்

தே மருவு தாதோடு 

  துதைந்த திசை எல்லாம்

தூ மருவு சோதி 

  விரியத் துகள் அடக்கி

மா மலய மாருதமும் 

  வந்து அசையும் அன்றே.  29 

 

 

மேலை இமையோர்களும் 

  விருப்பொடு கரப்பில்

சோலை மலர் போல மலர் 

  மா மழை சொரிந்தே

ஞாலம் மிசை வந்து வளர் 

  காழி நகர் மேவும்

சீல மறையோர்கள் உடன் 

  ஓம வினை செய்தார்.  30 

 

 

பூத கண நாதர் புவி 

  வாழ அருள் செய்த

நாதன் அருளின் பெருமை 

  கண்டு நலம் உய்ப்பார்

ஓதும் மறையோர் பிறிது 

  உரைத்திடினும் ஓவா

வேத மொழியால் ஒலி 

  விளங்கி எழும் எங்கும்.  31 

 

 

பயன் தருவ பஃறருவும் 

  வல்லிகளும் மல்கித்

தயங்கு புனலும் தெளிவு 

  தண்மையுடன் நண்ணும்

வயங்கு ஒளி விசும்பு 

  மலினம் கழியும் மாறா

நயம் புரிவ புள் ஒலிகள் 

  நல்ல திசை எல்லாம்.  32 

 

 

அம்கண் விழவில் பெருகு 

  சண்பை அகல் மூதூர்ச்

சங்கம் படகம் கருவி 

  தாரை முதலான

எங்கணும் இயற்றுபவர் 

  இன்றியும் இயம்பும்

மங்கல முழக்கு ஒலி 

  மலிந்த மறுகு எல்லாம்.  33 

 

 

இரும் புவனம் இத்தகைமை 

  எய்த அவர் தம்மைத்

தரும் குல மறைத் தலைவர் 

  தம் பவன முன்றில்

பெரும் களி வியப்பொடு 

  பிரான் அருளினாலே

அரும் திரு மகப் பெற 

  அணைந்த அணி செய்வார்.  34 

 

 

காதல் புரி சிந்தை 

  மகிழக் களி சிறப்பார்

மீது அணியும் நெய் அணி 

  விழாவொடு திளைப்பார்

சூத நிகழ் மங்கல 

  வினைத் துழனி பொங்கச்

சாதக முறைப் பல 

  சடங்கு வினை செய்வார்.  35 

 

 

மா மறை விழுக்குல 

  மடந்தையர்கள் தம்மில்

தாம் உறு மகிழ்ச்சியொடு 

  சாயல் மயில் என்னத்

தூ மணி விளக்கொடு 

  சுடர்க் குழைகள் மின்னக்

காமர் திரு மாளிகை 

  கவின் பொலிவு செய்வார்.  36 

 

 

சுண்ணமொடு தண் மலர் 

  துதைந்த துகள் வீசி

உண்ணிறை விருப்பினுடன் 

  ஓகை உரை செய்வார்

வெண் முளைய பாலிகைகள் 

  வேதி தொறும் வைப்பார்

புண்ணிய நறும் புனல் கொள் 

  பொன் குடம் நிரைப்பார்.  37 

 

 

செம் பொன் முதலான பல 

  தான வினை செய்வார்

நம்பர் அடியார் அமுது 

  செய்ய நலம் உய்ப்பார்

வம்பலர் நறும் தொடையல் 

  வண்டொடு தொடுப்பார்

நிம்பம் முதலான கடி 

  நீடு வினை செய்வார்.  38 

 

 

ஐயவி உடன் பல 

  அமைத்த புகையாலும்

நெய் அகில் நறுங்குறை 

  நிறைத்த புகையாலும்

வெய்ய தழல் ஆகுதி 

  விழுப் புகையினாலும்

தெய்வ மணம் நாறவரு 

  செய் தொழில் விளைப்பார்.  39 

 

 

ஆய பல செய் தொழில்கள் 

  அன்று முதல் விண்ணோர்

நாயகன் அருள் பெருமை 

  கூறும் நலம் எய்த

தூய திரு மாமறை 

  தொடர்ந்த நடை நூலின்

மேய விதி ஐயிரு 

  தினத்தினும் விளைத்தார்.  40 

 

 

நாம கரணத்து அழகு 

  நாள் பெற நிறுத்திச்

சேம உதயப் பரிதியில் 

  திகழ் பிரானைத்

தாமரை மிசைத் தனி 

  முதல் குழவி என்னத்

தூ மணி நிரைத்து அணி 

  செய் தொட்டில் அமர்வித்தார்.  41 

 

 

பெரு மலை பயந்த கொடி 

  பேணும் முலையின் பால்

அரு மறை குழைத்த 

  அமுது செய்து அருளுவாரைத்

தருமிறைவியார் பரமர் 

  தாள் பரவும் அன்பே

திருமுலை சுரந்து அமுது 

  செய்து அருளுவித்தார்.  42 

 

 

ஆறுலவு செய்ய சடை 

  ஐயர் அருளாலே

பேறு உலகினுக்கு என 

  வரும் பெரியவர்க்கு

வேறு பல காப்பு மிகை 

  என்று அவை விரும்பார்

நீறு திரு நெற்றியில் 

  நிறுத்தி நிறைவித்தார்.  43 

 

 

தாயர் திரு மடித்தலத்தும் 

  தயங்கு மணித் தவிசினிலும்

தூய சுடர்த் தொட்டிலினும் 

  தூங்கு மலர்ச் சயனத்தும்

சேய பொருள் திருமறையும் 

  தீம் தமிழும் சிறக்க வரு

நாயகனைத் தாலாட்டு 

  நலம் பல பாராட்டினார்.  44 

 

 

வரும் முறைமைப் பருவத்தில் 

  வளர் புகலிப் பிள்ளையார்

அரு மறைகள் தலை எடுப்ப 

  ஆண்ட திருமுடி எடுத்துப்

பெரு மழுவர் தொண்டு அல்லால் 

  பிறிது இசையோம் என்பார் போல்

திருமுக மண்டலம் அசையச் 

  செங்கீரை ஆடினார்.  45 

 

 

நாம் அறியோம் பர சமயம் 

  உலகிர் எதிர் நாடாது

போம் அகல என்று அங்கை 

  தட்டுவதும் புனிதன் பால்

காமரு தாளம் பெறுதற்கு 

  ஒத்துவதும் காட்டுவ போல்

தாமரைச் செங்கை களினால் 

  சப்பாணி கொட்டினார்.  46 

 

 

விதி தவறுபடும் வேற்றுச் 

  சமயங்கள் இடை விழுந்து

கதி தவழ இரு விசும்பு 

  நிறைந்த கடிவார் கங்கை

நதி தவழும் சடை முடியார் 

  ஞானம் அளித்திட உரியார்

மதி தவழ் மாளிகை முன்றின் 

  மருங்கு தவழ்ந்து அருளினார்.  47 

 

 

சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் 

  தோகையரும் தாதியரும்

காழியர் தம் சீர் ஆட்டே 

  கவுணியர் கற்பகமே என்று

ஏழ் இசையும் பலகலையும் எவ் 

  உலகும் தனித் தனியே

வாழ வரும் அவர் தம்மை 

  வருக வருக என அழைப்ப.  48 

 

 

திரு நகையால் அழைத்து அவர் 

  தம் செழு முகங்கள் மலர்வித்தும்

வருமகிழ்வு தலை சிறப்ப 

  மற்றவர் மேல் செலவுகைத்தும்

உருகி மனம் கரைந்து அலைய 

  உடன் அணைந்து தழுவியும் முன்

பெருகிய இன்புற அளித்தார் 

  பெரும் புகலிப் பிள்ளையார்.  49 

 

 

வளர் பருவ முறை ஆண்டு 

  வருவதன் முன் மலர் வரிவண்டு

உளர் கரு மென் சுருள் 

  குஞ்சியுடன் அலையச் செந்நின்று

கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் 

  கீழ்மை நெறிச் சமயங்கள்

தளர் நடை இட்டு அறத் தாமும் 

  தளர் நடை இட்டு அருளினார்.  50 

 

 

தாதியர் தங்கைப் பற்றித் தளர் 

  நடையின் அசைவு ஒழிந்து

சோதி அணி மணிச் சதங்கை 

  தொடுத்த வடம் புடை சூழ்ந்த

பாத மலர் நிலம் பொருந்தப் 

  பருவ முறை ஆண்டு ஒன்றின்

மீது அணைய நடந்து அருளி 

  விளையாடத் தொடங்கினார்.  51 

 

 

சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் 

  செழுமணல் சிற்றில்கள் இழை

நறு நுதல் பேதையார் மழுங்கு 

  நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்

குறு வியர்ப்புத் துளி அரும்பக் 

  கொழும்பொடி ஆடிய கோல

மறுகு இடைப் பேர் ஒளி 

  பரப்ப வந்து வளர்ந்தருளினார்.  52 

 

 

மங்கையோடு உடன் ஆகி வளர் 

  தோணி வீற்று இருந்த

திங்கள் சேர் சடையார் தம் திரு 

  அருட்குச் செய் தவத்தின்

அங்குரம் போல் வளர்ந்து அருளி 

  அரு மறையோடு உலகு உய்ய

எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் 

  ஓர் ஆண்டு எய்து தலும்.  53 

 

 

நாவாண்ட பல கலையும் நா 

  மகளும் நலம் சிறப்பப்

பூவாண்ட திருமகளும் புண்ணியமும் 

  பொலிவு எய்த

சேவாண்ட கொடியவர் தம் 

  சிரபுரத்துச் சிறுவருக்கு

மூவாண்டில் உலகு உய்ய 

  நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்.  54 

 

 

பண்டு திருவடி மறவாப் 

  பான்மையோர் தமைப் பரமர்

மண்டு தவ மறைக் குலத்தோர் 

  வழிபாட்டின் அளித்து அருளத்

தொண்டின் நிலை தர வருவார் 

  தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்

கொண்டு எழலும் வெருக் கொண்டாற் 

  போல் அழுவார் குறிப்பு அயலாய்.  55 

 

 

மேதகைய இந் நாளில் வேறு 

  ஒரு நாள் வேத விதி

நீதி முறைச் சடங்கு நெறி 

  முடிப்பதற்கு நீர் ஆடத்

தாதையார் போம் பொழுது தம் 

  பெருமான் அருள் கூடச்

சோதி மணி மனை முன்றில் 

  தொடர்ந்து அழுது பின் சென்றார்.  56 

 

 

பின் சென்ற பிள்ளையார் 

  தமை நோக்கிப் பெருந்தவத்தோர்

முன்செல்கை தனை ஒழிந்து 

  முனிவார் போல் விலக்குதலும்

மின் செய் பொலங் கிண் கிணிக் 

  கால் கொட்டி அவர் மீளாமை

உன் செய்கை இது ஆகில் போ 

  என்று அங்கு உடன் சென்றார்.  57 

 

 

கடை யுகத்தில் தனி வெள்ளம் 

  பல விரிக்கும் கருப்பம் போல

இடை அறாப் பெரும் தீர்த்தம் 

  எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்

விடை உயர்த்தார் திருத் தோணிப் 

  பற்று விடா மேன்மை அதாம்

தடம் அதனில் துறை அணைந்தார் 

  தருமத்தின் தலை நின்றார்.  58 

 

 

பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் 

  தாம் பிரிவு அஞ்சித்

தெள்ளு நீர்ப் புக 

  மாட்டார் தேவியொடும் திருத்தோணி

வள்ளலார் இருந்தாரை எதிர் 

  வணங்கி மணி வாவி

உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு 

  உய்ய மகப் பெற்றார்.  59 

 

 

நீர் ஆடித் தருப் பித்து 

  நியமங்கள் பல செய்வார்

நீர் ஆடும் திரு மகனார் 

  காண்பதன் முன் செய்து அதன்பின்

ஆராத விருப்பினால் அகமர் 

  உடம்படிய நீர்

பேராது மூழ்கினார் பெரும் 

  காவல் பெற்றாராய்.  60 

 

 

மறை முனிவர் மூழ்குதலும் 

  மற்றவர் தம்மைக் காணாது

இறை தெரியார் எனும் நிலைமை 

  தலைக்கீடா ஈசர் கழல்

முறை புரிந்த முன் உணர்வு 

  மூள அழத் தொடங்கினார்

நிறை புனல் வாவிக் கரையில் 

  நின்று அருளும் பிள்ளையார்.  61 

 

 

கண் மலர்கள் நீர் ததும்பக் 

  கைம் மலர்களால் பிசைந்து

வண்ண மலர்ச் செங்கனிவாய் 

  மணி அதரம் புடை துடிப்ப

எண்ணில் மறை ஒலி பெருக 

  எவ் உயிரும் குதூகலிப்ப

புண்ணியக் கன்று அனையவர் 

  தாம் பொருமி அழுதருளினார்.  62 

 

 

மெய்ம் மேல் கண் துளி பனிப்ப 

  வேறு எங்கும் பார்த்து அழுவார்

தம் மேலைச் சார்பு உணர்ந்தோ 

  சாரும் பிள்ளை மைதானோ

செம் மேனி வெண் நீற்றார் 

  திருத் தோணி சிகரம் பார்த்து

அம்மே அப்பா என்றென்று 

  அழைத்தருளி அழுதருள.  63 

 

 

அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் 

  அருள் நோக்கால்

முன் நிலைமைத் திருத் தொண்டு 

  முன்னி அவர்க்கு அருள் புரிவான்

பொன் மலை வல்லியும் தாமும் 

  பொருவிடை மேல் எழுந்தருளிச்

சென்னி இளம் பிறை திகழச் 

  செழும் பொய்கை மருங்கு அணைந்தார்.  64 

 

 

திரு மறைநூல் வேதியர்க்கும் 

  தேவியர்க்கும் தாம் கொடுத்த

பெருகு வரம் நினைந்தோதான் தம் 

  பெருமைக் கழல் பேணும்

ஒரு நெறியில் வரு ஞானம் 

  கொடுப்பதனுக்கு உடன் இருந்த

அரு மறையாள் உடையவளை அளித்து 

  அருள அருள் செய்வார்.  65 

 

 

அழுகின்ற பிள்ளையார் தமை 

  நோக்கி அருள் கருணை

எழுகின்ற திரு உள்ளத்து 

  இறையவர் தாம் எவ்வுலகும்

தொழுகின்ற மலைக் கொடியைப் 

  பார்த்தருளித் துணை முலைகள்

பொழிகின்ற பால் அடிசில் பொன் 

  வள்ளத்து ஊட்டு என்ன.  66 

 

 

ஆரணமும் உலகு ஏழும் 

  ஈன்று அருளி அனைத்தினுக்கும்

காரணமாய் வளம் பெருகு 

  கருணை திருவடிவான

சீர் அணங்கு சிவபெருமான் 

  அருளுதலும் சென்று அணைந்து

வார் இணங்கு திருமுலைப்பால் 

  வள்ளத்துக் கறந்து அருளி.  67 

 

 

எண்ணரிய சிவஞானத்து இன் 

  அமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட 

  உமை அம்மை எதிர் நோக்கும்

கண் மலர் நீர் துடைத்து அருளிக் 

  கையில் பொன் கிண்ணம் அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து 

  அங்கணனார் அருள் புரிந்தார்.  68 

 

 

யாவர்க்கும் தந்தை தாய் எனும் 

  இவர் இப்படி அளித்தார்

ஆவதனால் ஆளுடைய 

  பிள்ளையாராய் அகில

தேவருக்கும் முனிவர்க்கும் 

  தெரிவரிய பொருளாகும்

தாவில் தனிச் சிவ 

  ஞான சம்பந்தர் ஆயினார்.  69 

 

 

சிவன் அடியே சிந்திக்கும் 

  திருப்பெருகு சிவஞானம்

பவம் அதனை அற மாற்றும் 

  பாங்கினில் ஓங்கிய ஞானம்

உவமை இலாக் கலை ஞானம் 

  உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்

தவ முதல்வர் சம்பந்தர் தாம் 

  உணர்ந்தார் அந்நிலையில்.  70 

 

 

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே 

  எனும் உணர்வும்

அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் 

  எனும் அறிவும்

இப்படியால் இது அன்றித் தம் 

  இசைவு கொண்டு இயலும்

துப்புரவில்லார் துணிவு துகளாகச் 

  சூழ்ந்து எழுந்தார்.  71 

 

 

சீர் மறையோர் சிவபாத 

  இருதயரும் சிறு பொழுதில்

நீர் மருவித் தாம் செய்யும் 

  நியமங்கள் முடித்து ஏறி

பேர் உணர்வில் பொலிகின்ற 

  பிள்ளையார்தமை நோக்கி

யார் அளித்த பால் அடிசில் 

  உண்டது நீ என வெகுளா.  72 

 

 

எச்சில் மயங்கிட உனக்கு ஈது 

  இட்டாரைக் காட்டு என்று

கைச் சிறியது ஒருமாறு 

  கொண்டோச்சக் கால் எடுத்தே

அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் 

  கண் துளி பெய்து

உச்சியின் மேல் எடுத்தருளும் ஒரு 

  திருக்கை விரல் சுட்டி.  73 

 

 

விண் நிறைந்த பெருகு ஒளியால் 

  விளங்கு மழ விடைமேல்

பண் நிறைந்த அருமறைகள் பணிந்து 

  ஏத்தப் பாவை உடன்

எண் நிறைந்த கருணையினால் 

  நின்றாரை எதிர் காட்டி

உள் நிறைந்து பொழிந்து எழுந்த 

  உயர் ஞானத் திருமொழியால்.  74 

 

 

எல்லை இலா மறை முதல் 

  மெய்யுடன் எடுத்த எழுது மறை

மல்லல் நெடும் தமிழால் இம் 

  மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப

பல் உயிரும் களிகூரத் தம் 

  பாடல் பரமர் பால்

செல்லு முறை பெறுவதற்குத் 

  திருசெவியைச் சிறப்பித்து.  75 

 

 

செம்மை பெற எடுத்த திருத் 

  தோடுடைய செவியன் எனும்

மெய்ம்மை மொழித் திருப்பதிகம் 

  பிரமபுரம் மேவினார்

தம்மை அடையாளங்களுடன் 

  சாற்றித் தாதையார்க்கு

எம்மை இது செய்த பிரான் 

  இவன் அன்றே என இசைத்தார்.  76 

 

 

மண் உலகில் வாழ்வார்கள் 

  பிழைத்தாலும் வந்தடையின்

கண் நுதலான் பெரும் கருணை 

  கைக் கொள்ளும் எனக்காட்ட

எண்ணம் இலா வல் அரக்கன் 

  எடுத்து முறிந்து இசைபாட

அண்ணல் அவற்கு அருள் புரிந்த 

  ஆக்கப்பாடு அருள் செய்தார்.  77 

 

 

தொழுவார்க்கே அருளுவது 

  சிவபெருமான் எனத் தொழார்

வழுவான மனத்தாலே மாலாய 

  மால் அயனும்

இழிவாகும் கருவிலங்கும் 

  பறவையுமாய் எய்தாமை

விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து 

  உய்ந்த படி விரித்தார்.  78 

 

 

வேத காரணராய வெண் பிறை 

  சேர் செய்ய சடை

நாதன் நெறி அறிந்து உய்யார் 

  தம்மிலே நலம் கொள்ளும்

போதம் இலாச் சமண் 

  கையர் புத்தர் வழியாக்கும்

ஏதமே என மொழிந்தார் 

  எங்கள் பிரான் சம்பந்தர்.  79 

 

 

திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் 

  காப்புச் சாத்தி

இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் 

  தொழுது நின்று அருள

அருள் கருணைத் திருவாளனார் அருள் 

  கண்டு அமரர் எலாம்

பெருக்க விசும்பினில் ஆர்த்துப் 

  பிரசமலர் மழை பொழிந்தார்.  80 

 

 

வந்து எழும் மங்கலமான வான் 

  அகத் துந்துபி முழக்கும்

கந்தருவர் கின்னரர்கள் கான 

  ஒலிக் கடல் முழக்கும்

இந்திரனே முதல் தேவர் எடுத்து 

  ஏத்தும் இசைமுழக்கும்

அந்தம் இல் பல் கண நாதர் 

  அர எனும் ஓசையின் அடங்க.  81 

 

 

மறைகள் கிளர்ந்து ஒலி வளர 

  முழங்கிட வானோர் தம்

நிறை முடி உந்திய நிரை மணி 

  சிந்திட நீள் வானத்து

உறை என வந்து உலகு 

  அடைய நிறைந்திட ஓவாமெய்ப்

பொறை பெருகும் தவமுனிவர் எனும் 

  கடல் புடை சூழ.  82 

 

 

அணைவுற வந்து எழும் அறிவு 

  தொடங்கின அடியார் பால்

இணை இல் பவம் கிளர் 

  கடல்கள் இகந்திட இரு தாளின்

புணை அருள் அங்கணர் பொருவிடை 

  தங்கிய புணர் பாகத்

துணையொடு அணைந்தனர் சுருதி 

  தொடர்ந்த பெருந் தோணி.  83 

 

 

அண்ணல் அணைந்தமை கண்டு 

  தொடர்ந்து எழும் அன்பாலே

மண்மிசை நின்ற மறைச் 

  சிறு போதகம் அன்னாரும்

கண் வழி சென்ற கருத்து 

  விடாது கலந்து ஏகப்

புண்ணியர் நண்ணிய பூமலி 

  கோயிலின் உள் புக்கார்.  84 

 

 

ஈறில் பெரும் தவம் முன் செய்து 

  தாதை எனப் பெற்றார்

மாறு விழுந்த மலர்க்கை 

  குவித்து மகிழ்ந்து ஆடி

வேறு விளைந்த வெருட்சி 

  வியப்பு விருப்போடும்

கூறும் அரும் தமிழின் 

  பொருளான குறிப் போவார்.  85 

 

 

தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் 

  தம்மைப் போல்

காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன 

  கண்டு உள்ளார்

தோணி புரத்திறை தன் அருள் 

  ஆதல் துணிந்து ஆர்வம்

பேணும் மனத்தொடு முன்புகு 

  காதலர் பின் சென்றார்.  86 

 

 

அப்பொழுது அங்கண் அணைந்தது 

  கண்டவர் அல்லாதார்

முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் 

  முகிழ்ப்பு எய்தி

இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு 

  உளது என்று என்றே

துப்பு உறழ் வேணியர் கோயிலின் 

  வாயில் புறம் சூழ.  87 

 

 

பொங்கு ஒளி மால் விடை மீது 

  புகுந்து அணி பொன் தோணி

தங்கி இருந்த பெரும் 

  திரு வாழ்வு தலைப்பட்டே

இங்கு எனை ஆளும் உடையான் 

  உமையோடும் இருந்தான் என்று

அங்கு எதிர் நின்று புகன்றனர் 

  ஞானத்து அமுது உண்டார்.  88 

 

 

இன் இசை ஏழும் இசைந்த 

  செழும் தமிழ் ஈசற்கே

சொன்முறை பாடும் தொழும்பர் 

  அருள் பெற்ற தொடக்கோடும்

பல் மறை வேதியர் காண 

  விருப்பொடு பால் நாறும்

பொன்மணி வாயினர் கோயிலின் 

  நின்று புறப்பட்டார்.  89 

 

 

பேணிய அற்புத நீடு அருள் 

  பெற்ற பிரான் முன்னே

நீண் நிலையில் திகழ் கோபுர 

  வாயிலின் நேர் எய்தி

வாண் நிலவில் திகழ் வேணியர் 

  தொண்டர்கள் வாழ்வு எய்தும்

தோணி புரத்தவர் தாம் 

  எதிர் கொண்டு துதிக்கின்றார்.  90 

 

 

காழியர் தவமே கவுணியர் 

  தனமே கலை ஞானத்து

ஆழிய கடலே அதன் இடை 

  அமுதே அடியார் முன்

வாழிய வந்து இம்மண் மிசை 

  வானோர் தனி நாதன்

ஏழ் இசை மொழியாள் தன் திரு 

  அருள் பெற்று அனை என்பார்.  91 

 

 

மறை வளர் திருவே வைதிக 

  நிலையே வளர் ஞானப்

பொறை அணி முகிலே 

  புகலியர் புகலே பொருபொன்னித்

துறை பெறு மணியே சுருதியின் 

  ஒளியே வெளியே வந்து

இறையவன் உமையாள் உடன் 

  அருள் தர எய்தினை என்பார்.  92 

 

 

புண்ணிய முதலே புனை மணி 

  அரை ஞாணொடு போதும்

கண் நிறை கதிரே கலை 

  வளர் மதியே கவின் மேவும்

பண் இயல் கதியே 

  பருவமது ஒரு மூவருடத்தே

எண்ணிய பொருளாய் நின்றவர் 

  அருள் பெற்றனை என்பார்.  93 

 

 

என்று இனைய பல கூறி இருக்கு 

  மொழி அந்தணரும் ஏனையோரும் 

நின்று துதி செய்து அவர்தாள் நீள் 

  முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது 

சென்று அணைந்த தாதையர் சிவபாத 

  இருதயர் தாம் தெய்வ ஞானக் 

கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் 

  மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல.  94 

 

 

மாமறையோர் குழாத்தின் உடன் மல்கு 

  திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து

தாம் அறுவை உத்தரியம் தனி 

  விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே 

பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு 

  போத அதன் மீது பொங்கும் 

காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன 

  போல் விளங்கும் பெரும் காட்சித்தாக.  95 

 

 

நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் 

  மாளிகை மேல் நெருங்கி அங்கண்

மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் 

  மொழிகளால் வாழ்த்தி வாசத்

தோடு மலி நறுமலரும் சுண்ணமும் 

  வெண் பொரியினொடும் தூவிநிற்பார்

கோடு பயில் குல வரை மேல் மின் 

  குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக.  96 

 

 

மங்கல தூர் இயந்து வைப்பார் மறைச் 

  சாமம் பாடுவார் மருங்கு வேதிப்

பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண 

  கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்

அங்கு அவர்கள் மனத்து எழுந்த 

  அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்

தங்கு திரு மலி வீதிச் சண்பை 

  நகர் வலம் செய்து சாரும் காலை.  97 

 

 

தம் திரு மாளிகையின் கண் எழுந்து 

  அருளிப் புகும் பொழுது சங்க நாதம்

அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு 

  ஒலி தழைப்ப அணைந்து புக்கார்

சுந்தரப் பொற்றோணி மிசை இருந்த 

  பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும்

பைந்தொடியாள் திரு முலையின் பால் 

  அறா மதுர மொழிப் பவள வாயார்.  98 

 

 

தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து 

  அருளி அன்று இரவு தொல்லை நாத

மா மறைகள் திரண்ட பெரும் திருத் 

  தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய

கா மரு சேவடிக் கமலம் 

  கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு

நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் 

  திருத் தோணி நம்பர் கோயில்.  99 

 

 

காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் 

  கலந்து வீற்று இருந்த தங்கள்

தாதை யாரையும் வெளியே தாங்க 

  அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து

போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் 

  தாயாரையும் முன் வணங்கிப் போற்றி

மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் 

  கா இறைஞ்ச விருப்பில் சென்றார்.  100 

 

 

பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் 

  காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த 

வரிக் கோல வண்டு ஆட மாதரார் 

  குடைந்து ஆடும் மணி நீர் வாவி 

திருக் கோலக்கா எய்தித் தேவர்பிரான் கோயில் 

  வலம் செய்து முன் நின்று 

இருக்கோல் இட்டு அறிவு அரிய 

  திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்.  101 

 

 

மெய்ந் நிறைந்த செம் பொருளாம் 

  வேதத்தின் விழுப் பொருளை வேணிமீது 

பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் 

  திங்கள் பரித்து அருளுவானை 

மைந் நிறைந்த மிடற்றானை மடையில் 

  வாளைகள் பாய என்னும் வாக்கால் 

கைந் நிறைந்த ஒத்து அறுத்து கலைப் 

  பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை.  102 

 

 

கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் 

  கண்டு அருளி கருணை கூர்ந்த 

செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் 

  எழுதிய நல் செம்பொன் தாளம் 

ஐயர் அவர் திரு அருளால் எடுத்த 

  பாடலுக்கு இசைந்த அளவால் ஒற்ற  

வையம் எல்லாம் உய்ய வரு மறைச் 

  சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே.  103 

 

 

காழி வரும் பெரும் தகையார் கையில் 

  வரும் திருத் தாளக் கருவி கண்டு 

வாழிய தம் திருமுடி மேல் கொண்டு 

  அருளி மனம் களிப்ப மதுர வாயில் 

ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை 

  வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் 

தாழும் மணிக் குழையார் முன் தக்க 

  திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்.  104 

 

 

உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய 

  நாதத்து அளவின் உண்மை நோக்கித் 

தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் 

  துறை உள்ளோர் துதித்து மண் மேல் 

வம்பலர் மா மழை பொழிந்தார் மறை 

  வாழ வந்தருளும் மதலையாரும் 

தம் பெருமான் அருள் போற்றி மீண்டருளிச் 

  சண்பை நகர் சாரச் செல்வார்.  105 

 

 

செங்கமல மலர்க் கரத்துத் திருத் 

  தாளத்துடன் நடந்து செல்லும் போது 

தங்கள் குலத் தாதையார் தரியாது 

  தோளின் மேல் தரித்துக் கொள்ள 

அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து 

  அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்

திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி 

  புரத் தோணிச் சிகரக் கோயில்.  106 

 

 

திருப் பெருகு பெருங் கோயில் சூழ 

  வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே 

அருள் பெருகு திருப்பதிகம் எட்டு 

  ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று 

விருப்புறு பொன் திருத்தோணி வீற்று 

  இருந்தார் தமைப் பாட மேவும் காதல் 

பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை.  107 

 

 

எடுத்த திருப் பதிகத்தின் இசை 

  திருத் தாளத்தினால் இசைய ஒற்றி  

அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற 

  வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி 

மடுத்த வயல் பூந் தராய் அவர் 

  வாழ மழ விளங் கோலத்துக் காட்சி 

கொடுத்தருளி வைகினார் குறைவு இலா 

  நிறை ஞானக் கொண்டலார் தாம்.  108 

 

 

அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் 

  தமை முன்னம் அளித்த தாயார் 

முன் உதிக்க முயன்ற தவத் திரு 

  நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் 

மன்னு பெரு மகிழ்ச்சியுடன் மங்கல 

  தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் 

கன்னி மதில் சண்பை நகர் வந்து 

  அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்.  109 

 

 

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்பப் 

  பெற்ற பெரு வார்த்தையாலே 

எங்கணும் நீள் பதி மருங்கில் 

  இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும் 

பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் 

  குழாங் கொண்டு புகலியார் தம் 

சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து 

  கழல் பணியும் சிறப்பின் மிக்கார்.  110 

 

 

வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு 

  செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் 

சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது 

  முதல் ஆன சிறப்பின் செய்கை 

தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் 

  கடன் ஆற்றும் சண்பை மூதூர் 

எந்தை பிரான் சிவலோகம் என 

  விளங்கி எவ்வுலகும் ஏத்தும் நாளில்.  111 

 

 

செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி 

  பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் 

கொழுந்து அணியும் சடையாரை எங்கள் 

  பதியினில் கும்பிட்டருள அங்கே 

எழுந்தருள வேண்டும் என இசைந்து 

  அருளித் தோணி வீற்றிருந்தார் பாதம்  

தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் 

  பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார்.  112 

 

 

தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் 

  போல் சீர் அடிகள் தரையின் மீது 

போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் 

  பொறா அன்பு புரிந்த சிந்தை 

மாதவம் செய் தாதையார் வந்து 

  எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள 

நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட 

  கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார்.  113 

 

 

தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி 

  பள்ளியினைச் சாரச் செல்வார் 

வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது 

  எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப் 

பானல் வயல் திரு நன்னி பள்ளி 

  எனத் தாதையர் பணிப்பக் கேட்டு 

ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் 

  சொல் தொடை மாலை நவிலல் உற்றார்.  114 

 

 

காரைகள் கூகை முல்லை என 

  நிகழ் கலை சேர் வாய்மைச் 

சீர் இயல் பதிகம் பாடித் 

  திருக் கடைக் காப்புத்தன்னில் 

நாரியோர் பாகர் வைகும் நனி 

  பள்ளி உள்குவார் தம் 

பேர் இடர் கெடுதற்கு ஆணை 

  நமது எனும் பெருமை வைத்தார்.  115 

 

 

ஆதியார் கோயில் வாயில் அணைந்து 

  புக்கு அன்பு கூரும்  

நீதியால் பணிந்து போற்றி நீடிய 

  அருள் முன் பெற்றுப் 

போதுவார் தம்மைச் சூழ்ந்து 

  பூசுரர் குழாங்கள் போற்றும் 

காதல் கண்டு அங்கு அமர்ந்தார் 

  கவுணியர் தலைவனார் தாம்.  116 

 

 

அம்பிகை அளித்த ஞானம் 

  அகிலமும் உய்ய உண்ட 

நம் பெரும் தகையார் தம்மை 

  எதிர் கொண்டு நண்ண வேண்டி 

உம்பரும் வணங்கும் மெய்ம்மை 

  உயர் தவத் தொண்டரோடு 

தம் பெரும் விருப்பால் வந்தார் 

  தலைசை அந்தணர்கள் எல்லாம்.  117 

 

 

காவணம் எங்கும் இட்டுக் 

  கமுகொடு கதலி நாட்டிப்  

பூவணத் தாமம் தூக்கிப் 

  பூரண கும்பம் ஏந்தி 

ஆவண வீதி எல்லாம் 

  அலங்கரித்து அண்ணலாரை 

மாவண மலர் மென் சோலை 

  வளம் பதி கொண்டு புக்கார்.  118 

 

 

திரு மறையோர்கள் சூழ்ந்து 

  சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் 

பெரு மறை ஓசை மல்கப் 

  பெருந் திருக் கோயில் எய்தி 

அரு மறைப் பொருள் ஆனாரைப் 

  பணிந்து அணிநல் சங்கத்தின் 

தரு முறை நெறி அக் கோயில் 

  சார்ந்தமை அருளிச் செய்தார்.  119 

 

 

கறை அணி கண்டர் கோயில் 

  காதலால் பணிந்து பாடி  

மறையவர் போற்ற வந்து 

  திரு வலம் புரத்து மன்னும் 

இறைவரைத் தொழுது பாடும் 

  கொடியுடை ஏத்திப் போந்து  

நிறைபுனல் திருச் சாய்க்காடு 

  தொழுதற்கு நினைந்து செல்வார்.  120 

 

 

பன்னகப் பூணினாரைப் 

  பல்லவ னீச்சரத்துச் 

சென்னியால் வணங்கி ஏத்தித் 

  திருந்து இசைப்பதிகம் பாடிப்  

பொன்னி சூழ் புகாரில் நீடு 

  புனிதர்தம் திருச்சாய்க் காட்டு 

மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து 

  எதிர் கொள்ளப் புக்கார்.  121 

 

 

வான் அளவு உயர்ந்த வாயில்லுள் 

  வலம் கொண்டு புக்குத் 

தேன் அலர் கொன்றையார் தம் 

  திருமுன்பு சென்று தாழ்ந்து 

மானிடம் தரித்தார் தம்மைப் 

  போற்றுவார் மண்புகார் என்று 

ஊன் எலாம் உருக ஏத்தி 

  உச்சி மேல் குவித்தார் செங்கை.  122 

 

 

சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் 

  கடைக் காப்புப் போற்றிப் 

பாரினில் பொலிந்த தொண்டர் 

  போற்றிடப் பயில்வார் பின்னும் 

ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் 

  போந்து இறைவர் வெண்காடு 

ஆரு மெய்க் காதலோடும் 

  பணிவதற்கு அணைந்தார் அன்றே.  123 

 

 

பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் 

  இள மதியம் நீடு 

சென்னியர் திருவெண் காட்டுத் 

  திருத் தொண்டர் எதிரே சென்று அங்கு

இன்ன தன்மையர்கள் ஆனார் என 

  ஒணா மகிழ்ச்சி பொங்க 

மன்னுசீர்ச் சண்பை ஆளும் 

  மன்னரைக் கொண்டு புக்கார்.  124 

 

 

முத்தமிழ் விரகர் தாமும் 

  முதல்வர் கோபுரத்து முன்னர்ச் 

சித்த நீடு உவகை யோடும் 

  சென்று தாழ்ந்து எழுந்து புக்குப் 

பத்தராம் அடியார் சூழப் பரமர் 

  கோயிலைச் சூழ் வந்து 

நித்தனார் தம் முன்பு எய்தி 

  நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்.  125 

 

 

மெய்ப் பொருள் ஆயினாரை 

  வெண்காடு மேவினாரைச் 

செப்பரும்பதிக மாலை கண் காட்டு 

  நுதல் முன் சேர்த்தி 

முப்புரம் செற்றார் பாதம் 

  சேரும் முக்குளமும் பாடி 

ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் 

  மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.  126 

 

 

அருமையால் புறம்பு போந்து வணங்கி 

  அங்கு அமரும் நாளில் 

திருமுல்லை வாயில் எய்திச் 

  செந்தமிழ் மாலை சேர்த்தி 

மருவிய பதிகள் மற்றும் 

  வணங்குவார் மறையோர் ஏத்தத் 

தருமலி புகலி வந்து 

  ஞானசம்பர் சார்ந்தார்.  127 

 

 

தோணி வீற்றிருந்தார் தம்மைத் 

  தொழுது முன் நின்று தூய 

ஆணியாம் பதிகம் பாடி அருள் 

  பெரு வாழ்வு கூரச் 

சேண் உயர் மாடம் ஓங்கும் 

  திருப்பதி அதனில் செய்ய 

வேணியார் தம்மை நாளும் 

  போற்றிய விருப்பின் மிக்கார்.  128 

 

 

வைகும் அந்நாளில் கீழ் பால் 

  மயேந்திரப் பள்ளி வாசம் 

செய் பொழில் குருகா வூரும் 

  திருமுல்லை வாயில் உள்ளிட்டு 

எய்திய பதிகள் எல்லாம் 

  இன்புற இறைஞ்சி ஏத்தித் 

தையலாள் பாகர் தம்மைப் பாடினார் 

  தமிழ்ச் சொல் மாலை.  129 

 

 

அவ்வகை மருங்கு சூழ்ந்த 

  பதிகளில் அரனார் பொற்றாள் 

மெய் வகை ஞானம் உண்ட 

  வேதியர் விரவிப் போற்றி 

உய் வகை மண்உளோருக்கு 

  உதவிய பதிகம் பாடி 

எவ்வகையோரும் ஏத்த இறைவரை 

  ஏத்து(ம்) நாளில்.  130 

 

 

திரு நீல கண்டத்துப் பெரும் 

  பாணர் தெள் அமுதின் 

வருநீர்மை இசைப்பாட்டு மதங்க 

  சூளா மணியார் 

ஒரு நீர்மையுடன் உடைய 

  பிள்ளையார் கழல் வணங்கத் 

தரு நீர்மை யாழ் கொண்டு 

  சண்பையிலே வந்து அணைந்தார்.  131 

 

 

பெரும் பாணர் வரவு அறிந்து 

  பிள்ளையார் எதிர் கொள்ளச் 

சுரும்பு ஆர் கமல மலர்த் 

  துணைப் பாதம் தொழுது எழுந்து 

விரும்பு ஆர்வத்தொடும் ஏத்தி 

  மெய்ம் மொழிகளால் துதித்து 

வரும் பான்மை தரு வாழ்வு 

  வந்து எய்த மகிழ் சிறந்தார்.  132 

 

 

அளவு இலா மகிழ்ச்சியினார் 

  தமை நோக்கி ஐயர் நீர் 

உளம் மகிழ இங்கு அணைந்த 

  உறுதி உடையோம் என்றே 

இள நிலா நகை முகிழ்ப்ப 

  இசைத்த அவரை உடன் கொண்டு 

கள நிலவு நஞ்சு அணிந்தார் 

  பால் அணையும் கவுணியனார்.  133 

 

 

கோயிலினில் புற முன்றில் 

  கொடு புக்குக் கும்பிடுவித்து 

ஏயும் இசை யாழ் உங்கள் 

  இறைவருக்கு இங்கு இயற்றும் என 

ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் 

  பெற்ற அதற்கு இறைஞ்சி 

மேய தொடைத் தந்திரி யாழ் 

  வீக்கி இசை விரிக்கின்றார்.  134 

 

 

தான நிலைக் கோல் வடித்துப் 

  படி முறைமைத் தகுதியினால் 

ஆன இசை ஆராய்வுற்று 

  அங்கணர்தம் பாணியினை 

மான முறைப் பாடினியார் 

  உடன் பாடி வாசிக்க 

ஞான போனகர் மகிழ்ந்தார் 

  நான் மறையோர் அதிசயித்தார்.  135 

 

 

யாழில் எழும் ஓசையுடன் இருவர் 

  மிடற்று இசை ஒன்றி 

வாழி திருத் தோணி உளார் 

  மருங்கு அணையும் மாட்சியினைத் 

தாழும் இரு சிறைப் பறவை படிந்த 

  தனி விசும்பு இடை நின்று 

ஏழ் இசை நூல் கந்தருவர் 

  விஞ்சையரும் எடுத்து இசைத்தார்.  136 

 

 

எண்ணரும் சீர் திருத்தோணி 

  எம் பெருமான் கழல் பரவிப் 

பண் அமையாழ் இசை கூடப்பெரும் 

  பாணர் பாடிய பின் 

கண் நுதலார் அருளினால் காழியர் 

  கோன் கொடு போந்து 

நண்ணி உறைவிடம் சமைத்து 

  நல் விருந்து சிறந்து அளிப்ப.  137 

 

 

பிள்ளையார் அருள் பெற்ற 

  பெரும்பாணர் பிறை அணிந்த 

வெள்ள நீர்ச் சடையாரை அவர் 

  மொழிந்த மெய்ப் பதிகம் 

உள்ளபடி கேட்டலுமே உருகு 

  பெரு மகிழ்ச்சியராய்த் 

தெள் அமிர்தம் அருந்தினர் போல் 

  சிந்தை களிப்புறத் தொழுதார்.  138 

 

 

காழியார் தவப்பயனாம் கவுணியர் 

  தம் தோன்றலார் 

ஆழி விடம் உண்டவர் தம் 

  அடி போற்றும் பதிக இசை

யாழின் முறைமையின் இட்டே 

  எவ் உயிரும் மகிழ்வித்தார் 

ஏழ் இசையும் பணி கொண்ட 

  நீல கண்ட யாழ்ப்பாணர்.  139 

 

 

சிறிய மறைக் களிறு அளித்த 

  திருப்பதிக இசை யாழின் 

நெறியில் இடும் பெரும் பாணர் 

  பின்னும் நீர் அருள் செய்யும் 

அறிவரிய திருப்பதிக இசை 

  யாழில் இட்டு அடியேன் 

பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற 

  வேண்டும் எனத் தொழுதார்.  140 

 

 

மற்றதற்குப் பிள்ளையார் மனம் 

  மகிழ்வுற்று இசைந்து அருளப்  

பெற்றவர் தாம் தம்பிரான் அருள் 

  இதுவே எனப் பேணிச் 

சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதி 

  யாழ் முறை தொடுத்தே 

அற்றை நாள் போல் என்றும் 

  அகலா நண்புடன் அமர்ந்தார்.  141 

 

 

சிரபுரத்தில் அமர்ந்தருளும் 

  திருஞான சம்பந்தர் 

பரவு திருத் தில்லை நடம் 

  பயில்வாரைப் பணிந்து ஏத்த 

விரவி எழும் பெரும் 

  காதல் வெள்ளத்தை உள்ளத்தில் 

தர இசையும் குறிப்பு அறியத் 

  தவ முனிவர்க்கு அருள் செய்தார்.  142 

 

 

பிள்ளையார் அருள் செய்யப் பெரும் 

  தவத்தால் பெற்று எடுத்த 

வள்ளலார் தாமும் உடன் 

  செல்வதற்கு மனம் களிப்ப 

வெள்ளி மால் வரை என்னத் 

  திருத் தோணி வீற்றிருந்த 

புள்ளி மான் உரியாரைத் 

  தொழுது அருளால் புறப்பட்டார்.  143 

 

 

தாழ்வில் யாழ்ப் பாணரொடும் 

  தாதையார் தம்மோடும் 

மேவிய சீர் அடியார்கன் புடை 

  வர வெம் குரு வேந்தர் 

பூவின் மேல் அயன் போற்றும் 

  புகலியினைக் கடந்து போய்த் 

தேவர்கள் தம் பெரும் தேவர் 

  திருத் தில்லை வழிச் செல்வார்.  144 

 

 

நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை 

  பதி நடுவு கண்டன போற்றி 

முள்ளிடைப் புற வெள் இதழ்க் 

  கேதகை முகிழ் விரி மணம் சூழப் 

புள்ளிடைத் தடம் பழனமும் படு 

  கரும்புடை கழிந்திடப் போந்து 

கொள்ளிடத் திரு நதிக்கரை அடைந்தனர் 

  கவுணியர் குல தீபர்.  145 

 

 

வண்டிரைத்து எழு செழு மலர்ப் 

  பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் 

தண்டலைப் பல வளத்தொடும் 

  வருபுனல் தாழ்ந்து சேவடிதாழத்  

தெண் திரைக் கடல் பவளமும் பணிலமும் 

  செழு மணித் திரள் முத்தும் 

கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் 

  கொள்ளிடம் கடந்து ஏறி.  146 

 

 

பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் 

  உடன் வரும் பயில் மறையவர் சூழச் 

செல் கதிப் பயன் காண்பவர் போல் 

  களி சிந்தை கூர் தரக் கண்டு 

மல்கு தேவரே முதல் அணைத்து 

  உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் 

நல்கு தில்லை சூழ் திரு எல்லை 

  பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார்.  147 

 

 

செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி 

  இத் திருந்து உலகினிற்கு எல்லாம் 

மங்கலம் தரு மழவிளம் போதகம் 

  வரும் இரு மருங்கு எங்கும் 

தங்கு புள்ளொலி வாழ்த்துரை எடுத்து 

  முன் தாமரை மது வாசப் 

பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் 

  முகம் காட்டின புனல் பொய்கை.  148 

 

 

கலவ மென் மயில் இனம் களித்து அழைத்திடக் 

  கடி மணக் குளிர் கால் வந்து 

உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து 

  எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப 

இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ்தர 

  இரு குழை புடை ஆட 

மலர் முகம் பொலிந்து அசைய மென் 

  கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை.  149 

 

 

இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் 

  கொடி இன் அமுது என ஞானம் 

குழைத்து அளித்திட அமுது செய்து 

  அருளிய குருளையார் வரக் கண்டு 

மழைத்த மந்த மாருதத்தினால் நறு மலர் 

  வண்ண நுண் துகள் தூவித் 

தழைத்த பொங்கு எழில் முகம் செய்து 

  வணங்கின தடம் பணை வயல் சாலி.  150 

 

 

ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் 

  எழுந்தருளும் அந் நலம் கண்டு 

சேல் அலம்பும் தண் புனல் தடம் 

  படிந்து அணை சீத மாருதம் வீசச் 

சாலவும் பல கண் பெறும் பயன் 

  பெறும் தன்மையில் களி கூர்வ 

போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின 

  புறம்பு அணை நறும் பூகம்.  151 

 

 

பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் 

  எல்லையில் மறையவர் பயில் வேள்விச் 

சிவம் தரும் பயன் உடைய 

  ஆகுதிகளின் செழும் புகைப் பரப்பாலே 

தவம் தழைப்ப வந்தருளிய பிள்ளையார் 

  தாம் அணைவுற முன்னே 

நிவந்த நீல நுண் துகில் 

  விதானித்தது போன்றது நெடுவானம்.  152 

 

 

கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து 

  உயர் கழனி அம் பணை நீங்கி 

அரும்பு மென் மலர் தளிர் பல 

  மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன 

மருங்கில் நந்தன வனம் பணிந்து 

  அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி 

நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் 

  திரு வாயில் நேர் அணித்தாக.  153 

 

 

பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ் 

  ஞானமாம் போனகம் பொன் குன்ற 

மங்கை செங்கையால் ஊட்ட உண்டருளிய 

  மதலையார் வந்தார் என்று 

அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை 

  அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி 

எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து 

  எதிர் கொள அணைவார்கள்.  154 

 

 

வேத நாதமும் மங்கல முழக்கமும் 

  விசும்பிடை நிறைந்து ஓங்க 

சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் 

  திசை எலாம் நிறைந்து ஆரச் 

சோதி மா மணி வாயிலின் புறம் சென்று 

  சோபன ஆக்கமும் சொல்லிக் 

கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் 

  கொண்டு புக்கார்.  155 

 

 

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் 

  தென் திசைத் திருவாயில் 

எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு 

  நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ 

மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் 

  மறையவர் நிறை வாழ்க்கைத் 

தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் 

  தொழுது அணைந்தனர் தூயோர்.  156 

 

 

மலர்ந்த பேரொளி குளிர் தரச் சிவமணம் 

  கமழ்ந்து வான் துகள் மாறிச் 

சிலம்பு அலம்பு சேவடியவர் 

  பயில்வுறும் செம்மையால் திருத்தொண்டு 

கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் 

  திருவீதி கண் களி செய்யப் 

புலம் கொள் மைந்தனார் எழுநிலைக் 

  கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி.  157 

 

 

நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு 

  நிலவிய திரு முன்றின் 

மாடு செம் பொனின் மாளிகை வலம் 

  கொண்டு வானுற வளர் திங்கள் 

சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து 

  அருமறை தொடர்ந்து ஏத்த

ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் 

  அணிகிளர் மணிவாயில்.  158 

 

 

நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் 

  நலம் கொள்பன் முறை கூட 

அந்தம் இல்லவர் அணுகி முன் 

  தொழுதிரு அணுக்கனாம் திருவாயில் 

சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் 

  சிறிய செங்கை யேற 

உய்ந்து வாழ் திரு நயனங்கள் 

  களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார்.  159 

 

 

அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் 

  ஞானமே ஆன அம்பல முந்தம் 

உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த 

  ஒரு பெரும் தனிக் கூத்தும் 

கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு 

  எழும் களிப்பொடும் கடல் காழிப்

புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் 

  புனிதர் ஆடிய பொற்பு.  160 

 

 

உணர்வின் நேர் பெற வரும் சிவ 

  போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண் 

அணையும் ஐம் பொறி அளவினும் 

  எளிவர அருளினை எனப் போற்றி 

இணை இல் வண் பெருங் கருணையே 

  ஏத்தி முன் எடுத்த சொற் பதிகத்தில் 

புணரும் இன் இசை பாடினர் 

  ஆடினர் பொழிந்தனர் விழி மாரி.  161 

 

 

ஊழி முதல்வர்க்கு உரிமைத் 

  தொழில் சிறப்பால் 

வாழி திருத் தில்லை வாழ் 

  அந்தணரை முன் வைத்தே 

ஏழ் இசையும் ஓங்க 

  எடுத்தார் எமை ஆளும் 

காழியர் தம் காவலனார் 

  கற்றாங் கெரியோம்பி.  162 

 

 

பண்ணார் பதிகத் திருக் 

  கடைக் காப்புப் பரவி 

உள் நாடும் என்பும் 

  உயிரும் கரைந்து உருக்கும் 

விண் நாயகன் கூத்து 

  வெட்ட வெளியே திளைத்துக் 

கண்ணார் அமுது உண்டார் 

  காலம் பெற அழுதார்.  163 

 

 

முன் மால் அயன் அறியா 

  மூர்த்தியார் முன் நின்று 

சொல் மாலையால் காலம் 

  எல்லாம் துதித்து இறைஞ்சிப்  

பல் மா மறை 

  வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற 

பொன் மாளிகையை வலம் 

  கொண்டு புறம் போந்தார்.  164 

 

 

செல்வத் திருமுன்றில் தாழ்ந்து 

  எழுந்து தேவர் குழாம் 

மல்கும் திருவாயில் வந்து 

  இறைஞ்சி மா தவங்கள் 

நல்கும் திரு வீதி 

  நான்கும் தொழுது அங்கண் 

அல்கும் திறம் அஞ்சுவார் 

  சண்பை ஆண்டகையார்.  165 

 

 

செய்ய சடையார் 

  திருவேட்களம் சென்று 

கை தொழுது சொல் பதிகம் 

  பாடிக் கழுமலக் கோன் 

வைகி அருளும் இடம் 

  அங்கு ஆக மன்றாடும் 

ஐயன் திருக் கூத்துக் 

  கும்பிட்டு அணைவுறும் நாள்.  166 

 

 

கைம் மான் மறியார் 

  கழிப்பாலை உள் அணைந்து 

மெய்ம் மாலைச் சொற் பதிகம் 

  பாடி விரைக் கொன்றைச் 

செம்மாலை வேணித் திரு 

  உச்சி மேவியுறை 

அம்மானைக் கும்பிட்டு அருந் 

  தமிழும் பாடினார்.  167 

 

 

பாடும் பதிக இசை 

  யாழ்ப்பாணரும் பயிற்றி 

நாடும் சிறப்பு எய்த 

  நாளும் நடம் போற்றுவார் 

நீடும் திருத்தில்லை அந்தணர்கள் 

  நீள் மன்றுள் 

ஆடும் கழற்கு அணுக்கராம் 

  பேறு அதிசயிப்பார்.  168 

 

 

ஆங்கு அவர் தம் சீலத்து 

  அளவு இன்மையும் நினைந்தே 

ஓங்கி எழும் காதல் 

  ஒழியாத உள்ளத்தார் 

தேன் கமழும் சோலைத் 

  திருவேட்களம் கடந்து 

பூங்கிடங்கு சூழ் புலியூர் 

  புக்கு அணையும் போழ்தின்கண்.  169 

 

 

அண்டத்து இறைவர் அருளால் 

  அணி தில்லை 

முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் 

தொண்டத் தகைமைக் கண 

  நாதராய்த் தோன்றக் 

கண்ட அப் பரிசு 

  பெரும் பாணர்க்கும் காட்டினார்.  170 

 

 

செல்வம் பிரிவு அறியாத் 

  தில்லை வாழ் அந்தணரும் 

எல்லையில் சீர்ச் சண்பை 

  இளவேறு எழுந்து அருளி 

ஒல்லை இறைஞ்சா முன் 

  தாமும் உடன் இறைஞ்சி 

மல்லல் அணி வீதி 

  மருங்கு அணைய வந்தார்கள்.  171 

 

 

பொங்கி எழும் காதல் புலன் 

  ஆகப் பூசுரர் தம் 

சிங்கம் அனையார் 

  திரு முடியின் மேல் குவித்த 

பங்கயத்தின் செவ்வி பழித்து 

  வனப்பு ஓங்கும் 

செங்கையொடும் சென்று 

  திருவாயில் உட்புக்கார்.  172 

 

 

ஒன்றிய சிந்தை உருக 

  உயர் மேருக் 

குன்று அனைய பேரம்பலம் 

  மருங்கு கும்பிட்டு 

மன்றுள் நிறைந்து ஆடும் 

  மாணிக்கக் கூத்தர் எதிர் 

சென்று அணைந்து தாழ்ந்தார் 

  திருக்களிற்றுப் படிக் கீழ்.  173 

 

 

ஆடினாய் நறு நெய்யொடு பால் 

  தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் 

பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் 

  பரவிய பாட்டு ஒன்றில் 

நீடு வாழ் தில்லை நான் மறையோர் 

  தமைக் கண்ட அந் நிலை எல்லாம் 

கூறுமாறு கோத்து அவர் தொழுது 

  ஏத்து சிற்றம் பலம் எனக் கூறி.  174 

 

 

இன்ன தன்மையில் இன்னிசைப் பதிகமும் 

  திருக்கடைக் காப்பு ஏற்றி  

மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து 

  எதிர் வந்து முன் நின்று ஆடும் 

பின்னுவார் சடைக் கூத்தர் பேரருள் 

  பெறப் பிரியாத விடைபெற்றுப் 

பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து 

  எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில்.  175 

 

 

அப் புறத்திடை வணங்கி அங்கு 

  அருளுடன் அணிமணித் திருவாயில் 

பொற்புறத் தொழுது எழுந்து உடன் 

  போதரப் போற்றிய புகழ்ப் பாணர் 

நற்பதம் தொழுது அடியனேன் பதி 

  முதல் நதி நிவாக்கரை மேய 

ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று 

  உரை செய அது நேர்வார்.  176 

 

 

பொங்கு தெண்திரைப் புனித நீர் 

  நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து 

தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் 

  தவ முனிவரும் செல்லச் 

செங்கை யாழ்த் திரு நீலக் 

  கண்டப் பெரும் பாணருடன் சேர 

மங்கையார் புகழ் மதங்க 

  சூளாமணியாருடன் வரவந்தார்.  177 

 

 

இரும் தடங்களும் பழனமும் கடந்து 

  போய் எருக்கத்தம் புலியூரின் 

மருங்கு சென்றுற நீல கண்டப் 

  பெரும்பாணனார் வணங்கிக் கார் 

நெருங்கு சோலை சூழ் இப்பதி 

  அடியனேன்பதி என நெடிது இன்புற்று 

அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் 

  அங்கணைந்து அருள் செய்வார்.  178 

 

 

ஐயர் நீர் அவதரித்திட இப்பதி 

  அளவில் மாதவம் முன்பு 

செய்தவாறு எனச் சிறப்பு உரைத்து 

  அருளி அச் செழும்பதி இடம் கொண்ட 

மை கொள் கண்டர் தம் கோயிலினுட் 

  புக்கு வலம் கொண்டு வணங்கி பார் 

உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் 

  அங்கு இசையுடன் உரை செய்தார்.  179 

 

 

அங்கு நின்று எழுந்து அருளி 

  மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி 

பங்கர் தாம் இனிது உறையும் 

  நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் 

துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் 

  போய்த் தொல்லை வெங்குரு வேந்தர் 

செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் 

  தொழுது சென்று அணைகின்றார்.  180 

 

 

மொய் கொள் மாமணிக் கொழித்து முத்தாறு 

  சூழ் முது குன்றை அடைவோம் என்று 

எய்து சொல்மலர் மாலை வண் பதிகத்தை 

  இசையொடும் புனைந்து ஏத்தி 

செய் தவத் திரு முனிவரும் தேவரும் 

  திசையெலாம் நெருங்கப் புக்கு 

ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் 

  ஆதரவுடன் சென்றார்.  181 

 

 

வான நாயகர் திருமுது குன்றினை 

  வழிபட வலம் கொள்வார் 

தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் 

  குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி 

ஞான போனகர் நம்பர் தம் கோயிலை 

  நண்ணி அங்கு உள்புக்கு 

தேன் அலம்பு தண் கொன்றை யார் 

  சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.  182 

 

 

தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் 

  எனும் தண் தமிழ்த் தொடை சாத்தி 

வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி 

  அதனிடை வைகுவார் மணி வெற்புச் 

சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு 

  தொடுத்த சொல் தொடை மாலை 

வீழ்ந்த காதலால் பல முறை 

  விளம்பியே மேவினார் சில நாள்கள்.  183 

 

 

ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் 

  அணைந்து அருமறை ஓசை 

ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற 

  ஒரு தனிப் பரஞ்சோதிப் 

பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு 

  பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை 

தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் 

  இசைப் பதிகமும் தெரிவித்தார்.  184 

 

 

கருவரைப்பில் புகாதவர் கை தொழும் 

ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் 

பெருவரத்தினில் பெற்றவர் தம்முடன் 

திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்.  185 

 

 

முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது 

தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து 

அந்தணாளர் அவர் அருகே செலச் 

சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்.  186 

 

 

ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 

காதலால் அணைவார் கடிது ஏகிட 

தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் 

பாத தாமரை நொந்தன பைப்பய.  187 

 

 

மறை அனைத்தும் ஒரு வடிவாம் என 

நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் 

துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை 

இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்.  188 

 

 

பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை 

ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 

தேசு மிக்க திருவுரு ஆனவர் 

ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்.  189 

 

 

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட 

வந்த வைதிக மாமணி ஆனவர் 

சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் 

தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்.  190 

 

 

மாறன் பாடி எனும் பதி வந்துற 

ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 

வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார் 

ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட.  191 

 

 

உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு 

எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் 

கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் 

வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்.  192 

 

 

அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் 

சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் 

பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் 

வெற்றி மாதவத்தோருடன் மேவினார்.  193 

 

 

இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் 

மன்னனார் தம் வழி வருத்தத் தினை 

அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் 

சென்னியாற்றர் திருவுளம் செய்தனர்.  194 

 

 

ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 

கூறி ஊதக் குலவு பொற் சின்னங்கள் 

மாறில் முத்தின் படியினால் மன்னிய 

நீறு வந்த நிமலர் அருளுவார்.  195 

 

 

நீடு வாழ் பதி யாகு(ம்) நெல் வாயிலின் 

மாட மாமனை தோறு(ம்) மறையோர்க்குக் 

கூடு கங்குல் கனவில் குலமறை 

தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்.  196 

 

 

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 

மான முத்தின் சிவிகை மணிக் குடை 

ஆன சின்ன(ம்) நம் பால் கொண்டு அருங்கலைக் 

கோன் அவன் பால் அணைந்து கொடும் என.  197 

 

 

அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் 

வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் 

சிந்தையோடும் செழுநீர் அரத்துறை 

இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர்.  198 

 

 

ஆங்கு மற்ற அருள் அடியாருடன் 

ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயிட  

ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் 

தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்.  199 

 

 

சால மிக்க வியப்புறு தன்மையின் 

பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் 

காலம் எய்திடக் காதல் வழிப்படும் 

சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.  200 

 

திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 

துங்க வெண் குடை தூய சிவிகையும் 

பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 

அங்கண் நாதர் அருளினால் கண்டனர்.  201 

 

 

கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து 

எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் 

தொண்ட ரோடு மறையவர் சூழ்ந்து எழுந்து 

அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.  202 

 

 

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 

பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 

அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 

பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்.  203 

 

 

மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் 

ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் 

தேசுடைச் சிவிகை முதலாயின 

ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்.  204 

 

 

இத்தலை இவர் இன்னணம் ஏகினார் 

அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா 

முத்த நற் சிவிகை முதல் ஆயின 

உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்.  205 

 

 

அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை 

வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை 

கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என 

உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்.  206 

 

 

சண்பை ஆளியார் தாம் கண்ட மெய்யருள்

பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் 

தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் 

விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.  207 

 

 

மாலை யாமம் புலர் உறும் வைகறை 

வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி 

கோல மேனியராய்க் கைம் மலர் குவித்து 

ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்.  208 

 

 

போத ஞானப் புகலிப் புனிதரைச் 

சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் 

காதல் செய்பவன் போலக் கருங்கடல் 

மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்.  209 

 

 

ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன் 

தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 

மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 

ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்.  210 

 

 

வந்து தோன்றிய அந்தணர் மாதவர் 

கந்த வார் பொழில் காழி நன்னாடர் முன் 

அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் 

தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.  211 

 

 

என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது 

ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் 

நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது

மன்றுளார் அருள் என்று வணங்கினார்.  212 

 

 

மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் 

தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் 

செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் 

எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே.  213 

 

 

எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் 

வந்தவாறு மற்று எவ் வணமோ என்று 

சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை 

புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார்.  214 

 

 

பொடி அணிந்த புராணன் அரத்துறை 

அடிகள் தம் அருளே இதுவாம் எனப் 

படி இலாத சொல் மாலைகள் பாடியே 

நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.  215 

 

 

சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் 

மீது தாழ்ந்து வெண் நீற்று 

  ஒளி போற்றி நின்று 

ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து 

ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்.  216 

 

 

தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் 

  ஆர்த்தன தொல்லை 

அண்டர் ஆர்த்தனர் அகிலமும் 

  ஆர்ப்புடன் எய்தக் 

கொண்டல் ஆர்த்தன முழவமும் 

  ஆர்த்தன குழுமி 

வண்டு அறாப் பொலி மலர் 

  மழை ஆர்த்தது வானம்.  217 

 

 

வளையும் ஆர்த்தன வயிர்களும் 

  ஆர்த்தன மறையின் 

கிளையும் ஆர்த்தன கிளைஞரும் 

  ஆர்த்தனர் கெழுவும் 

களைகண் ஆர்த்ததொர் கருணையினார் 

  கவின் முத்தின்  

விளையும் மாக் கதிர் 

  வெண்குடை ஆர்த்தது மிசையே.  218 

 

 

பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் 

  நித்திலச் சிவிகைப் 

புல்கு நீற்று ஒளியுடன் பொலி 

  புகலி காவலனார் 

அல்கு வெள் வளை அலைத்து 

  எழு மணி நிரைத் தரங்கம் 

மல்கு பாற்கடல் வளர்மதி 

  உதித்தது என வந்தார்.  219 

 

 

நீடு தொண்டர்கள் மறையவர் 

  ஏனையோர் நெருங்கி 

மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் 

  மலர்க்கை மேல் குவித்தே 

ஆடு கின்றனர் அயர்ந்தனர் 

  அளவில் ஆனந்தம் 

கூடுகின்ற கண் பொழி புனல் 

  வெள்ளத்தில் குளித்தார்.  220 

 

 

செய்ய பொன் புனை 

  வெண்டரளத்து அணிசிறக்கச்  

சைவ மாமறைத் தலைவர்பால் 

  பெறும் தனிக் காளம் 

வையம் ஏழுடன் மறைகளும் 

  நிறை தவத்தோரும் 

உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத.  221 

 

 

சுற்று மாமறைச் சுருதியின் 

  பெருகு ஒலி நடுவே 

தெற்றினார் புரம் எரித்தவர் 

  தரு திருச்சின்னம் 

முற்றும் ஆனவண் ஞானமே 

  முலை சுரந்து ஊட்டப்  

பெற்ற பாலறா வாயன் 

  வந்தான் எனப் பிடிக்க.  222 

 

 

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் 

  போதுவார் முன்னே 

இணைந்த நித்திலத்து இலங்கு 

  ஒளி நலங்கிளர் தாரை 

அணைந்த மாமறை முதல் 

  கலை அகிலமும் ஓதாது 

உணர்ந்த முத்தமிழ் விரகன் 

  வந்தான் என ஊத.  223 

 

 

தெருளும் மெய்க்கலை விளங்கவும் 

  பார் உளோர் சிந்தை 

இருளும் நீங்கவும் எழுது சொன் 

  மறை அளிப்பவர் தாம் 

பொருளும் ஞானமும் போகமும் 

  போற்றி என்பாருக்கு 

அருளும் அங்கணர் திரு அரத் 

  துறையை வந்து அணைந்தார்.  224 

 

 

வந்து கோபுர மணி நெடு 

  வாயில் சேய்த்து ஆகச் 

சந்த நித்திலச் சிவிகை நின்று 

  இழிந்து தாழ்ந்து எழுந்து 

சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் 

  பொங்கி முன் செல்ல 

அந்தி நாண்மதி அணிந்தவர் 

  கோயிலுள் அடைந்தார்.  225 

 

 

மன்னு கோயிலை வலம் கொண்டு 

  திரு முன்பு வந்து 

சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து 

  அன்பொடு திளைப்பார் 

என்னையும் பொருளாக இன் 

  அருள் புரிந்து அருளும் 

பொன் அடித்தலத் தாமரை 

  போற்றி என்று எழுந்தார்.  226 

 

 

சூடினார் கர கமலங்கள் 

  சொரிந்து இழி கண்ணீர் 

ஆடினார் திரு மேனியில் 

  அரத்துறை விரும்பி 

நீடினார் திருவருட் பெருங் 

  கருணையே நிகழப் 

பாடினார் திருப் பதிகம் 

  ஏழ் இசையொடும் பயில.  227 

 

 

இசை விளங்கிட இயல்பினில் 

  பாடி நின்று ஏத்தி 

மிசை விளங்கு நீர் 

  வேணியார் அருளினால் மீண்டு 

திசை விளங்கிடத் திருவருள் 

  பெற்றவர் சில நாள் 

அசைவில் சீர்த் தொண்டர் 

  தம்முடன் அப்பதி அமர்ந்தார்.  228 

 

 

தேவர் தம்பிரான் திரு அரத் 

  துறையினில் இறைஞ்சி 

மேவு நாள்களில் விமலனார் 

  நெல் வெண்ணெய் முதலாத் 

தாவில் அன்பர்கள் தம்முடன் 

  தொழுது பின் சண்பைக் 

காவலர் அருள் பெற்று உடன் 

  கலந்து மீண்டு அணைந்தார்.  229 

 

 

விளங்கு வேணு புரத் 

  திருத் தோணி வீற்றிருந்த 

களம் கொள் கண்டர் தம் 

  காதலியார் உடன் கூட 

உளம் கொளப் புகுந்து 

  உணர்வினில் வெளிப்பட உருகி 

வளம் கொள் பூம்புனல் புகலிமேல் 

  செல மனம் வைத்தார்.  230 

 

 

அண்ணலார் திரு அரத்துறை 

  அடிகளை வணங்கி 

நண்ணு பேரருளால் விடை கொண்டு 

  போய் நடம் கொண்டு 

உள் நிறைந்த பூங்கழலிணை 

  உச்சி மேல் கொண்டே 

வெண்ணிலா மலர் நித்திலச் 

  சிவிகை மேற் கொண்டார்.  231 

 

 

சிவிகை முத்தினில் பெருகு ஒளி 

  திசை எலாம் விளக்க  

கவிகை வெண்மதிக் குளிர் 

  ஒளி கதிர் செய்வான் கலப்பக் 

குவிகை மேல் கொண்டு மறையவர் 

  குணலை இட்டு ஆடப் 

புவிகைம்மாறு இன்றிப் போற்ற 

  வந்து அருளினார் போந்தார்.  232 

 

 

மறை முழங்கின தழங்கின 

  வண்தமிழ் வயிரின் 

குறை நரன்றன முரன்றன 

  வளைக்குலம் காளம் 

முறை இயம்பின இயம்பல 

  ஒலித்தன முரசப் 

பொறை கறங்கின பிறங்கின 

  போற்றிசை அரவம்.  233 

 

 

உடைய பிள்ளையார் வரும் 

  எல்லை உள்ள அப்பதியோர் 

புடை இரண்டினும் கொடியொடு 

  பூந்துகில் விதானம் 

நடை செய் காவணம் தோரணம் 

  பூகம் நல் கதலி 

மிடையும் மாலைகள் நிறை 

  குடம் விளக்கொடு நிரைத்தார்.  234 

 

 

அனைய செய்கையால் எதிர் 

  கொளும் பதிகள் ஆனவற்றின் 

வினை தரும் பவம் 

  தீர்ப்பவர் கோயில்கள் மேவிப் 

புனையும் வண் தமிழ் மொழிந்து 

  அடி பணிந்து போந்து அணைந்தார் 

பனை நெடும் கை மா 

  உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்.  235 

 

 

அங்கு அணைந்து இளம்பிறை 

  அணிந்த சென்னியார் 

பொங்கு எழில் கோபுரம் 

  தொழுது புக்க பின் 

துங்க நீள் விமானத்தைச் 

  சூழ்ந்து வந்துமுன் 

பங்கயச் சேவடி 

  பணிந்து பாடுவார்.  236 

 

 

மண்ணினில் பொலிகுல மலையர் 

  தாம் தொழுது 

எண்ணில் சீர்ப் பணிகள் 

  செய்து ஏத்தும் தன்மையில் 

நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப் 

பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்.  237 

 

 

பாவினது இசை வழிபாடி அங்கு அகன்றி 

யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் 

மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் 

மேவிய பெரும் திரு விசய மங்கையில்.  238 

 

 

அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் 

தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் 

வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய 

செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.  239 

 

 

விசய மங்கையின் இடம் 

  அகன்று மெய்யர் தாள் 

அசைவில் வைகாவினில் அணைந்து 

  பாடிப் போந்து 

இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார் 

திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்.  240 

 

 

புறம் பயத்து இறைவரை 

  வணங்கிப் போற்றி செய் 

திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ் 

நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய 

அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார்.  241 

 

 

அத் திருப்பதி பணிந்து 

  அகன்று போய் அனல் 

கைத் தலத்தவர் பதி 

  பிறவும் கை தொழும்  

முத் தமிழ் விரகராம் 

  முதல்வர் நண்ணினார் 

செய்த் தலைப் பணிலம் 

  முத்து ஈனும் சேய்ஞலூர்.  242 

 

 

திரு மலி புகலிமன் 

  சேரச் சேய் ஞலூர் 

அரு மறையவர் பதி 

  அலங்கரித்து முன் 

பெரு மறையொடு முழவு 

  ஒலி பிறங்கவே 

வருமுறை எதிர் 

  கொள வந்து முந்தினார்.  243 

 

 

ஞான சம்பந்தரும் நாயனார் சடைத் 

தூ நறும் தொடையல் 

  முன் சூட்டும் பிள்ளையார் 

பான்மையில் வரும் பதி 

  என்று நித்தில 

யானமுன் இழிந்து எதிர் 

  இறைஞ்சி எய்தினார்.  244 

 

 

மா மறையாளர் வண் 

  புகலிப் பிள்ளையார் 

தாம் எழுந்தருளிடத் 

  தங்கள் பிள்ளையார் 

காமரும் பதியில் வந்து 

  அருளக் கண்டனர் 

ஆமகிழ்வுடன் பணிந்து 

  ஆடி ஆர்த்தனர்.  245 

 

 

களித்தனர் புண்ணியக் கரக வாசநீர் 

தெளித்தனர் பொரிகளும் 

  மலரும் சிந்தினர் 

துளித்தனர் கண் மழை 

  சுருதி ஆயிரம் 

அளித்தவர் கோயிலுள் அவர் 

  முன்பு எய்தினார்.  246 

 

 

வெங்குரு வேந்தரும் விளங்கு 

  கோயிலைப் 

பொங்கிய விருப்பினால் புடை 

  வலம் கொடு 

செங்கைகள் சென்னிமேல் குவித்துச் 

  சென்று புக்கு 

அங்கணர் முன்புற 

  அணைந்து தாழ்ந்தனர்.  247 

 

 

வேதியர் சேய்ஞலூர் விமலர் 

  தம் கழல் 

காதலில் பணிந்தவர் 

  கருணை போற்றுவார் 

தாதை தாள் தடிந்த 

  சண்டீசப் பிள்ளையார் 

பாதகப் பயன் பெறும் 

  பரிசு பாடினார்.  248 

 

 

இன்னிசை வண் தமிழ் 

  பாடி ஏத்தியே 

நன்னெடும் பதி உளோர் 

  நயக்க வைகிய 

பின்னர் வெண்பிறை அணி 

  வேணிப் பிஞ்ஞகர் 

மன்னிய திருப்பனந்தாள் 

  வணங்கினார்.  249 

 

 

ஆங்கணி சொன் மலர் 

  மாலை சாத்தி அப் 

பாங்கு பந்தணை நலூர் 

  பணிந்து பாடிப் போய்த் 

தீங்கு தீர் மா மறைச் 

  செம்மை அந்தணர் 

ஓங்கும் ஓமாம் புலியூர் 

  வந்து உற்றனர்.  250 

 

 

மற்ற நற்பதி வட 

  தளியின் மேவிய 

அற்புதர் அடி பணிந்து 

  அலர்ந்த செந்தமிழ்ச் 

சொல் தொடைபாடி அங்கு 

  அகன்று சூழ் மதில் 

பொன் பதி வாழ் 

  கொளி புத்தூர் புக்கனர்.  251 

 

 

சீர் வளர் கோயிலை 

  அணைந்து தேமலர்க் 

கார் வளர் கண்டர் 

  தாள் பணிந்து காண்பவர் 

பார் புகழ் பதிகங்கள் 

  பாடி நீடுவார் 

வார் பொழில் கடம்பையும் 

  வணங்கி வாழ்ந்தனர்.  252 

 

 

நம்பரை நலம் திகழ் 

  நாரையூரினில் 

கும்பிடும் விருப்பொடு 

  குறுகிக் கூடிய 

வம்பலர் செந்தமிழ் மாலை 

  பாடி நின்று 

எம்பிரான் கவுணியர் 

  தலைவர் ஏத்தினார்.  253 

 

 

அப்பதி பணிந்து அரும் 

  தமிழ் புனைந்து தம் 

மெய்ப்படு விருப்பொடு 

  மேவு நாள் அரன் 

பொன் பதி பலவும் முன் 

  பணிந்து போந்தனர் 

பைப் பணியவர் 

  கருப் பறியலூரினில்.  254 

 

 

பரமர் தம் திருக் 

  கருப் பறியலூரினைச் 

சிரபுரச் சிறுவர் கை 

  தொழுது செந்தமிழ் 

உரை இசை பாடி 

  அம் மருங்கின் உள்ளவாம் 

சுரர் தொழும் பதிகளும் 

  தொழுது பாடினார்.  255 

 

 

மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள 

  வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி 

எண்ணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப 

  இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் 

கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் 

  செஞ்சாலி கதலி கமுகுடன் ஓங்கும் கழனி நாட்டுத் 

தெண் நிலவு சூடிய தம் பெருமான் 

  வைகும் திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது.  256 

 

 

பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப் 

  பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்

உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும் 

  உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர 

வெள்ள மறை ஒலிபெருக மறுகு தோறும் 

  மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் 

தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழுங் 

  கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார்.  257 

 

 

ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க 

  அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப் 

பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் 

  புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி

வாரணங்கு முலை உமையாள் குழைத்த 

  செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச் 

சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது 

  செழுந்தரளக் குடை நிழல் கீழ்ச் சென்று கண்டார்.  258 

 

 

கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு 

  கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித் 

தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து 

  சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை 

எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு 

  விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி 

வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று 

  வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்.  259 

 

 

திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி 

  சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர் 

மங்கல வாழ்த்திசை இரண்டு மருங்கு மல்க 

  வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து 

துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச் 

  சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் 

தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று 

  தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்.  260 

 

 

பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரங் 

  கருணைத் திருவருளின் பரிசு போற்றி 

விரவு மலர்க் கண் பனிப்பக் கைகள் கூப்பி 

  விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச் 

சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது 

  திருநீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே 

வர அவரை வளம் பெருகு மனையில் 

  போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார்.  261 

 

 

மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் 

  மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில் 

நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் 

  உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த 

இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று 

  ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த 

முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்துப் புக்கார் 

  முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்.  262 

 

 

செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் 

  திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து 

மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி 

  மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில் 

ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த 

  உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார் 

தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத் 

  தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.  263 

 

 

ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை 

  உலகு இயல்பின் உபநயன முறைமையாகும் 

இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி 

  எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று 

வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் 

  என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் 

பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த 

  புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.  264 

 

 

சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன 

  தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப் 

பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் 

  பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை 

கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை 

  மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன் 

வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி 

  தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்.  265 

 

 

மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து 

  மற்று அவற்றின் வைதிக நூல் சடங்கின் வந்த 

சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு 

  மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் 

முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் 

  முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார் 

அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று 

  அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார்.  266 

 

 

அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள் 

  அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து

சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத் 

  திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து 

மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி 

  விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து 

பத்தருடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர் 

  தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில்.  267 

 

 

பந்து அணை மெல் விரலாளும் 

  பரமரும் பாய் விடை மீது 

வந்து பொன் வள்ளத்து அளித்த 

  வரம்பில் ஞானத்து அமுது உண்ட 

செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் 

  கேட்டு இறைஞ்சு தற்காக 

அந்தணர் பூந்தராய் தன்னில் 

  அணைந்தனர் நாவுக் கரையர்.  268 

 

 

வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து 

  அணைந்தார் எனக் கேட்டுப்  

பூக்கமழ் வாசத் தடம் 

  சூழ் புகலிப் பெருந்தகையாரும் 

ஆக்கிய நல் வினைப் பேறு என்று 

  அன்பர் குழாத் தொடும் எய்தி 

ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் 

  கொள எய்தும் பொழுதில்.  269 

 

 

சிந்தையிடை அறா அன்பும் 

  திருமேனி தன்னில் அசைவும் 

கந்தம் மிகையாம் கருத்தும் 

  கை உழவாரப் படையும் 

வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் 

  பொலி திரு நீறும் 

அந்தம் இலாத் திரு வேடத்து 

  அரசும் எதிர் வந்து அணைய.  270 

 

 

கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் 

  பரவு மெய்க் காதல் 

தொண்டர் திருவேடம் நேரே 

  தோன்றியது என்று தொழுதே 

அண்டரும் போற்ற அணைந்து அங்கு 

  அரசும் எதிர் வந்து இறைஞ்ச 

மண்டிய ஆர்வம் பெருக மதுர 

  மொழி அருள் செய்தார்.  271 

 

 

பேரிசை நாவுக்கரசைப் பிள்ளையார் 

  கொண்டு உடன் போந்து 

போர் விடையார் திருத்தோணிப் பொற் 

  கோயில் உட்புகும் போதில் 

ஆர்வம் பெருக அணையும் 

  அவருடன் கும்பிட்டு அருளால் 

சீர்வளர் தொண்டரைக் கொண்டு 

  திருமாளிகையினில் சேர்ந்தார்.  272 

 

 

அணையும் திருத்தொண்டர் தம்மோடு 

  ஆண்ட அரசுக்கும் அன்பால் 

இணையில் திரு அமுது ஆக்கி 

  இயல்பால் அமுது செய்வித்துப் 

புணரும் பெருகு அன்பு நண்பும் 

  பொங்கிய காதலில் கும்பிட்டு 

உணரும் சொல் மாலைகள் சாத்தி 

  உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்.  273 

 

 

அந்நாள் சில நாள்கள் 

  செல்ல அருள் திருநாவுக்கரசர் 

மின்னார் சடை அண்ணல் எங்கும் 

  மேவிடம் கும்பிட வேண்டி 

பொன் மார்பில் முந்நூல் புனைந்த 

  புகலிப் பிரான் இசைவோடும் 

பின்னாக எய்த இறைஞ்சிப் 

  பிரியாத நண்பொடும் போந்தார்.  274 

 

 

வாக்கின் தனி மன்னர் ஏக 

  மாறாத் திரு உளத்தோடும் 

பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த 

  புகலியின் மீண்டும் புகுந்து 

தேக்கிய மாமறை வெள்ளத் 

  திருத்தோணி வீற்று இருந்தாரைத் 

தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது 

  அங்கு உறைகின்ற நாளில்.  275 

 

 

செந்தமிழ் மாலை விகற்பச் 

  செய்யுள்களான் மொழி மாற்றும் 

வந்த சொல் சீர் மாலை மாற்றும் 

  வழி மொழி எல்லா மடக்குச் 

சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் 

  இருக்குக் குறள் சாத்தி 

எந்தைக்கு எழு கூற்றிருக்கை 

  ஈரடி ஈரடி வைப்பு.  276 

 

 

நாலடி மேல் வைப்பு மேன்மை 

  நடையின் முடுகும் இராகம் 

சால்பினில் சக்கரம் ஆதி 

  விகற்பங்கள் சாற்றும் பதிக

மூல இலக்கியமாக எல்லாப் 

  பொருள்களும் முற்ற 

ஞாலத்து உயர் காழியாரைப் 

  பாடினார் ஞான சம்பந்தர்.  277 

 

 

இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் 

  பெரும் பாணனார் தாமும் 

மன்னும் இசை வடிவான 

  மதங்க சூளா மணியாரும் 

பன்னிய ஏழ் இசை பற்றிப் 

  பாடப் பதிகங்கள் பாடிப் 

பொன்னின் திருத்தாளம் பெற்றார் 

  புகலியில் போற்றி இருந்தார்.  278 

 

 

அங்கண் அமர் கின்ற நாளில் 

  அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் 

திங்கள் சடை அண்ணலார்தம் 

  திருப்பதி யாவையும் கும்பிட்டு 

எங்கும் தமிழ் மாலை பாடி 

  ஏத்தி இங்கு எய்துவன் என்று 

தம் குலத் தாதையா ரோடும் 

  தவ முனிவர்க்கு அருள் செய்தார்.  279 

 

 

பெருகு விருப்புடன் நோக்கிப் 

  பெற்ற குலத் தாதையாரும் 

அருமையால் உம்மைப் பயந்த அதனால் 

  பிரிந்து உறைவு ஆற்றேன் 

இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் 

  யான் செய வேண்டும் 

ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் 

  எய்துவேன் என்று உரைத்தார்.  280 

 

 

ஆண்டகையாரும் இசைந்து அங்கு 

  அம்பொன் திருத்தோணி மேவும் 

நீண்ட சடையார் அடிக்கீழ் பணிவுற்று 

  நீடு அருள் பெற்றே 

ஈண்டு புகழ்த் தாதையார் 

  பின் எய்திட யாழ்ப்பாணரோடும் 

காண் தகு காழி தொழுது 

  காதலினால் புறம் போந்தார்.  281 

 

 

அத்திரு மூதூரின் உள்ளார் 

  அமர்ந்து உடன்போதுவார் போத 

மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை 

  கொண்டு மீள்வார்கள் மீள 

முத்தின் சிவிகை மேல் கொண்டு 

  மொய் ஒளித் தாமம் நிரைத்த 

நித்தில வெண்குடை மீது நிறை 

  மதி போல நிழற்ற.  282 

 

 

சின்னம் தனிக் காளம் தாரை 

  சிரபுரத்து ஆண்டகை வந்தார் 

என்னும் தகைமை விளங்க ஏற்ற 

  திருப் பெயர் சாற்ற 

முன் எம்மருங்கும் நிரத்த முரசு 

  உடைப் பல்லியம் ஆர்ப்ப 

மன்னும் திருத்தொண்டரானார் வந்து 

  எதிர் கொண்டு வணங்க.  283 

 

 

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு 

  பொற் கோடு முழங்க 

மங்கல வாழ்த்துரை எங்கும் மல்க 

  மறை முன் இயம்பத் 

திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி 

  எங்கும் முன் சென்று

பொங்கிய காதலில் போற்றப் 

  புகலிக் கவுணியர் போந்தார்.  284 

 

 

திருமறைச் சண்பையர் ஆளி 

  சிவனார் திருக்கண்ணார் கோயில் 

பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் 

  பிஞ்ஞகர் கோயில் பிறவும் 

உருகிய அன்பால் இறைஞ்சி உயர் 

  தமிழ் மாலை கொண்டு ஏத்தி 

வரு புனல் பொன்னி வடபால் 

  குட திசை நோக்கி வருவார்.  285 

 

 

போற்றிய காதல் பெருக 

  புள்ளிருக்கும் திருவேளூர் 

நால் தடம் தோளுடை மூன்று 

  நயனப் பிரான் கோயில் நண்ணி 

ஏற்ற அன்பு எய்த வணங்கி 

  இருவர் புள் வேந்தர் இறைஞ்சி 

ஆற்றிய பூசனை சாற்றி 

  அஞ்சொற் பதிகம் அணிந்தார்.  286 

 

 

நீடு திரு நின்றியூரின் நிமலனார் 

  நீள் கழல் ஏத்திக் 

கூடிய காதலில் போற்றிக் 

  கும்பிட்டு வண் தமிழ் கூறி 

நாடு சீர் நீடூர் வணங்கி 

  நம்பர் திருப் புன்கூர் நண்ணி 

ஆடிய பாதம் இறைஞ்சி 

  அருந் தமிழ் பாடி அமர்ந்தார்.  287 

 

 

அங்கு நின்று ஏகி அப்பாங்கில் 

  அரனார் மகிழ் கோயிலான 

எங்கணும் சென்று பணிந்தே 

  ஏத்தி இமவான் மடந்தை 

பங்கர் உறை பழ மண்ணிப் 

  படிக்கரைக் கோயில் வணங்கித் 

தங்கு தமிழ் மாலை சாத்தித் 

  திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.  288 

 

 

திருக்குறுக்கைப் பதி மன்னித் 

  திரு வீரட்டானத்து அமர்ந்த 

பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து 

  அன்னியூர் சென்று போற்றிப் 

பருக்கை வரை உரித்தார் 

  தம் பந்தணை நல்லூர் பணிந்து 

விருப்புடன் பாடல் இசைந்தார் 

  வேதம் தமிழால் விரித்தார்.  289 

 

 

அப்பதி போற்றி அகல்வார் 

  அரனார் திருமணஞ் சேரி 

செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று 

  தொழுது இசை பாடி 

எப்பொருளும் தரும் ஈசர் எதிர் 

  கொள் பாடிப் பதி எய்தி 

ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு 

  வேள்விக் குடி உற்றார்.  290 

 

 

செழுந்திரு வேள்விக் குடியில் 

  திகழ் மணவாள நற்கோலம் 

பொழிந்த புனல் பொன்னி மேவும் 

  புனிதத் துருத்தி இரவில் 

தழும்பிய தன்னைமையும் கூடத் தண் 

  தமிழ் மாலையில் பாடிக் 

கொழுந்து வெண் திங்கள் 

  அணிந்தார் கோடிகாவிற் சென்றடைந்தார்.  291 

 

 

திருக்கோடி காவில் அமர்ந்த 

  தேவர் சிகாமணி தன்னை 

எருக்கோடு இதழியும் பாம்பும் 

  இசைந்து அணிந்தானை வெள்ளேனப் 

பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து 

  சொல் மாலைகள் பாடிக் 

கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் 

  கை தொழச் சென்றார்.  292 

 

 

கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் 

  கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து 

மஞ்சணி மாமதில் சூழும் 

  மாந்துறை வந்து வணங்கி 

அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி 

  அங்கு அகன்று அன்பர் முன்னாகச் 

செஞ்சடை வேதியர் மன்னும் 

  திருமங்கலக் குடி சேர்ந்தார்.  293 

 

 

வெங் கண் விடை மேல் வருவார் 

  வியலூர் அடிகளைப் போற்றித் 

தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் 

  பதிகத் தொடை சாத்தி 

அங்கண் அமர்வார் தம் முன்னே 

  அருள் வேடம் காட்டத் தொழுது 

செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து 

  தேவன் குடி சேர்ந்தார்.  294 

 

 

திருந்து தேவன் குடி மன்னும் 

  சிவ பெருமான் கோயில் எய்திப் 

பொருந்திய காதலில் புக்குப் 

  போற்றி வணங்கிப் புரிவார் 

மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் 

  இவர் வேடமாம் என்று 

அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் 

  ஞானத்து அமுது உண்டார்.  295 

 

 

மொய் திகழ் சோலை அம் மூதூர் 

  முன் அகன்று அந் நெறி செல்வார் 

செய் தரு சாலி கரும்பு தெங்கு 

  பைம் பூகத்து இடை போய் 

மை திகழ் கண்டர் தம் கோயில் 

  மருங்கு உள்ள எல்லாம் வணங்கி 

எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் 

  ஈசர்தம் கோயில்.  296 

 

 

இன்னம்பர் மன்னும் பிரானை 

  இறைஞ்சி இடை மடக்கான 

பன்னும் தமிழ்த் தொடை மாலைப் 

  பாடல் புனைந்து பரவிப்  

பொன்னங் கழல் இணை போற்றிப் 

  புறம் போந்து அணைந்து புகுந்தார் 

மன்னும் தடம் கரைப் 

  பொன்னி வட குரங்காடுதுறையில்.  297 

 

 

வட குரங்காடுதுறையில் வாலியார் 

  தாம் வழிபட்ட 

அடைவும் திருப்பதிகத்தில் அறிய 

  சிறப்பித்து அருளிப் 

புடை கொண்டு இறைஞ்சினர் போந்து 

  புறத்துள்ள தானங்கள் போற்றி 

படை கொண்ட மூவிலை வேலர் 

  பழனத் திருப்பதி சார்ந்தார்.  298 

 

 

பழனத்து மேவிய முக்கண் 

  பரமேட்டியார் பயில் கோயில் 

உழைபுக்கு இறைஞ்சி நின்று 

  ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி 

விழை சொல் பதிகம் விளம்பி 

  விருப்புடன் மேவி அகல்வார் 

அழனக்க பங்கய வாவி 

  ஐயாறு சென்று அடைகின்றார்.  299 

 

 

மாட நிரை மணி வீதித் 

  திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் 

நாடு உய்யப் புகலிவரு ஞான 

  போனகர் வந்து நண்ணினார் என்று 

ஆடலொடு பாடல் அறா அணி 

  மூதூர் அடைய அலங்காரம் செய்து 

நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள 

 

  நித்தில யானத்து நீங்கி.  300 

 

வந்து அணைந்து திருத்தொண்டர் மருங்கு 

  வர மான் ஏந்து கையர் தம்பால் 

நந்தி திருவருள் பெற்ற நன்னகரை 

  முன் இறைஞ்சி நண்ணும் போதில் 

ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து 

  அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்று 

புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை 

  போற்றி இசைத்தார் புகலி வேந்தர்.  301 

 

 

மணி வீதி இடம் கடந்து மால் 

  அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் 

அணி நீடு கோபுரத்தை அணைந்து 

  இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல் 

தணியாத கருத்தினோடும் தம்பெருமான் கோயில் 

  வலம் கொண்டு தாழ்ந்து 

பணி சூடும் அவர் முன்பு பணிந்து 

  வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்.  302 

 

 

கோடல் கோங்கம் குளிர் கூவிளம் 

  என்னும் திருப்பதிகக் குலவு மாலை 

நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த 

  திரு உள்ளத்து நிலைமை தோன்ற 

ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று 

  எம் ஐயனே என்று நின்று 

பாடினார் ஆடினார் பண்பினொடும் 

  கண் பொழி நீர் பரந்து பாய.  303 

 

 

பல முறையும் பணிந்து எழுந்து புறம் 

  போந்து பரவு திருத் தொண்டரோடு 

நிலவு திருப்பதி அதன் கண் நிகழும் 

  நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை 

அலையும் மதி முடியார் தம் 

  பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக் 

குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு 

  அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்.  304 

 

 

குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு 

  அங்கு அருள் பெற்றுக் குறிப்பின்னோடும் 

படரும் நெறி மேல் அணைவார் 

  பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி 

அடையும் மனம் உற வணங்கி அரும் 

  தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும் 

புடைவளர் மென் கரும்பினொடு 

  பூகமிடை மழபாடி போற்றச் சென்றார்.  305 

 

 

செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் 

  புறத்துச் சேரச் செல்வார் 

அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் 

  எடுத்து அருளி அணைந்த போழ்தில்

மங்கை வாழ் பாகத்தார் 

  மழபாடி தலையினால் வணங்குவார்கள் 

பொங்கு மா தவம் உடையார் எனத் 

  தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார்.  306 

 

 

மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து 

  மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி 

செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் 

  சென்று தாழ்ந்து எழுந்து நின்று 

தொழுது ஆடிப் பாடி நறும் சொல் 

  மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே 

ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு 

  அங்கு உறைந்தார் சின்னாள்.  307 

 

 

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் 

  பணிந்து ஏத்தி ஆன்ற சைவ 

முதன் மறையோர் அன்பிலாலந் துறையின் 

  முன்னவனைத் தொழுது போற்றிப் 

பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் 

  பயில் பதியும் பணிந்து பாடி 

மத கரட வரை உரித்தார் வட கரை 

  மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்.  308 

 

 

சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் 

  திருநதி வாழ் சென்னியார் தம் 

முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை 

  வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து 

துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் 

  தொழுது வழிபாடு செய்ய 

நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் 

  சொல் மாலை நிகழப் பாடி.  309 

 

 

அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர் 

  தம் பதி பிறவும் அணைந்து போற்றிச் 

செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும் 

  வயல் மதுவால் சேறு மாறாப் 

பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி 

  வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர் 

நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம் 

  பணிய நண்ணும் போதில்.  310 

 

 

அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் 

  பெறல் ஆர் அமுத மென் சொல் 

கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக் 

  கொழுந்தின் கதிர் செய் மேனி 

மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து 

  அணைவுற மெய் வருத்தம் எய்தித் 

தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத் 

  தானும் மனம் தளர்வு கொள்வான்.  311 

 

 

மற்று வேறு ஒருபரிசால் தவிராமை 

  மறி வளரும் கையார் பாதம் 

பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் 

  ஆதலினால் பரிவு தீரப் 

பொற்றொடியைக் கொடு வந்து போர்க் 

  கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும் 

செற்றவர் தம் கோயிலினுட் கொடு புகுந்து 

  திரு முன்பே இட்டு வைத்தான்.  312 

 

 

அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார் 

  எழுந்தருளி அணுக எய்தச் 

செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் 

  திருஞான சம்பந்தன் வந்தான் என்றே 

எவ்வுலகும் துயர் நீங்கப் பணி மாறும் 

  தனிக் காளத்து எழுந்த ஓசை 

எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்லியலை 

  விட்டு எதிரே விரைந்து செல்வான்.  313 

 

 

மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம் 

  நாட்டும் மணி நீர் வாசத் 

தூ நறும் பூரண கும்பம் சோதி 

  மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் 

ஏனை அணி பிறவும் எலாம் எழில் 

  பெருக இயற்றும் என ஏவித் தானும் 

வானவர் நாயகர் மகனார் வருமுன்பு 

  தொழுது அணைந்தான் மழவர் கோமான்.  314 

 

 

பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று 

  ஆனந்தம் பெருகு காதல் 

வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின் 

  சிவிகையின் முன் வீழ்ந்த போது 

வள்ளலார் எழுக என மலர்வித்த 

  திருவாக்கால் மலர்க்கை சென்னி 

கொள்ள மகிழ்ந்து உடன் சென்று 

  குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.  315 

 

 

மங்க தூரியம் முழங்கும் மணி வீதி 

  கடந்து மதிச் சடையார் கோயில் 

பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆகப் 

  புனை முத்தின் சிவிகை நின்றும் 

அங்கண் இழிந்து அருளும் முறை 

  இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்  

தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு 

  திருமுன் வணங்கச் சாரும் காலை.  316 

 

 

கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து 

  நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி 

என் இது என்று அருள் செய்ய 

  மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற 

பொன் இவளை முயலகனாம் பொருவில் 

  அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில் 

முன் அணையக் கொணர்வித்தேன் இது 

  புகுந்தபடி என்று மொழிந்து நின்றான்.  317 

 

 

அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் 

  கேட்டு அந் நிலையின் நின்றே 

பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய 

  பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து 

மணி வளர் கண்டரோ மங்கையை வாட 

  மயல் செய்வதோ இவர் மாண்பது என்று 

தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் 

  தண்தமிழ் பாடினார் சண்பை நாதர்.  318 

 

 

பன்னு தமிழ் மறையாம் பதிகம் 

  பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி 

மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் 

  பயந்த மழலை மென் சொல் 

கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் 

  எனப் பார் மிசை நின்று எழுந்து 

பொன்னின் கொடி என ஒல்கிவந்து 

  பெருவலித் தாதை புடை அணைந்தாள்.  319 

 

 

வன்பிணி நீங்கு மகளைக் கண்ட 

  மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கத்  

தன்தனிப் பாவையும் தானும் கூடச் 

  சண்பையர் காவலர் தாளில் வீழ 

நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்அணி 

  வேணி நிமலர் பாதம் 

ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் 

  பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்.  320 

 

 

நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை 

  பாகத்தர் தாள் வணங்கிக் 

கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் 

  கொள்கை மேற்கொண்டு போந்தே 

ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து 

  பணிந்து அடிபோற்றி ஏகிச் 

சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் 

  சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.  321 

 

 

பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் 

  பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து 

மண் பரவும் தமிழ் மாலை பாடி 

  வைகி வணங்கி மகிழ்ந்து போந்து 

திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் 

  சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச் 

சண்பை வளம் தரும் நாடர் வந்து 

  தடம் திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார்.  322 

 

 

செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் 

  திரு ஈங்கோய் மலையில் மேவும் 

கங்கைச் சடையார் கழல் பணிந்து 

  கலந்த இசைப் பதிகம் புனைந்து 

பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் 

  புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக் 

கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் 

  கோதில் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார்.  323 

 

 

அண்டர் பிரான் ஆலயங்கள் 

  அம்மருங்கு உள்ளன பணிந்து 

தெண்திரை நீர்த் தடம் பொன்னித் 

  தென் கரையாம் கொங்கின் இடை 

வண்டு அலையும் புனல் சடையார் 

  மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்

கொண்டல் பயில் நெடும் புரிசைக் 

  கொடி மாடச் செங்குன்றூர்.  324 

 

 

அந் நகரில் வாழ்வாரும் 

  அடியவரும் மனம் மகிழ்ந்து 

பன்னெடுந்தோரணமுதலாப் பயில் 

  அணிகள் பல அமைத்து 

முன் உறவந்து எதிர் கொண்டு 

  பணிந்து ஏத்திமொய் கரங்கள் 

சென்னியுறக் கொண்டு அணைந்தார் 

  சினவிடையார் செழுங்கோயில்.  325 

 

 

தம் பெருமான் கோயிலினுள் எழுந்தருளித் 

  தமிழ் விரகர் 

நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து 

  எழுந்து நலம் சிறக்க 

இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை 

  வண் தமிழ் பாடிக் 

கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ 

  நகரில் இனிது அமர்ந்தார்.  326 

 

 

அப்பாலைக் குட புலத்தில் 

  ஆறணிந்தார் அமர் கோயில் 

எப்பாலும் சென்று ஏத்தித் 

  திரு நணாவினை இறைஞ்சிப் 

பைப் பாந்தள் புணைந்த வரைப் 

  பரவிப் பண்டு அமர்கின்ற 

வைப்பான செங்குன்றூர் வந்து 

  அணைந்து வைகினார்.  327 

 

 

ஆங்கு உடைய பிள்ளையார் 

  அமர்ந்து உறையும் நாளின்கண் 

தூங்கு துளி முகில் குலங்கள் 

  சுரந்து பெயல் ஒழிகாலை 

வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் 

  வெயில் பெறா விருப்பு வரப் 

பாங்கர் வரையும் குளிரும் 

  பனிப் பருவம் எய்தியதால்.  328 

 

 

அளிக்குலங்கள் சுளித்து அகல 

  அரவிந்தம் முகம் புலரப்

பளிக்கு மணி மரகத வல்லியில் 

  கோத்த பான்மை எனத் 

துளித் தலைமெல் அறுகு பனி 

  தொடுத்து அசையச் சூழ் பனியால் 

குளிர்க் குடைந்து வெண் படாம் 

  போர்த்து அனைய குன்றுகளும்.  329 

 

 

மொய் பனி கூர் குளிர் வாடை 

  முழுது உலவும் பொழுதேயாய்க் 

கொய் தளிர் மென் சோலைகளும் 

  குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி 

வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் 

  போல் விசும்பின் இடை 

ஐது வெயில் விரிப்பதுவும் 

  அடங்குவதும் ஆகுமால்.  330 

 

 

நீடிய அப் பதிகள் எலாம் 

  நிறை மாடத்து உறையுள் தொறும் 

பேடையுடன் பவளக்கால் புறவு 

  ஒடுங்கப் பித்திகையின் 

தோடு அலர் மென் குழல் மடவார் 

  துணைக் கலச வெம் முலையுள் 

ஆடவர் தம் பணைத்தோளும் 

  அணி மார்பும் அடங்குவன.  331 

 

 

அரிசனமும் குங்குமமும் அரைத்து 

  அமைப்பார் அயல் எல்லாம் 

பரிய அகில் குறை பிளந்து 

  புகைப்பார்கள் பாங்கு எல்லாம் 

எரி உமிழ் பேழ் வாய்த் தோணி 

  இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம் 

விரி மலர் மென் புறவு 

  அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.  332 

 

 

அந்நாளில் கொடி மாடச் செங் 

  குன்றூர் அமர்ந்து இருந்த

மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் 

  மேவும் பரிசனங்கள் 

பன்னாளும் அந்நாட்டில் பயின்ற 

  அதனால் பனித்த குளிர் 

முன் ஆன பிணி வந்து 

  மூள்வது போல் முடுகுதலும்.  333 

 

 

அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு 

  அவர்கள் எல்லாம் 

முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் 

  அருள் தொழுதே 

இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு 

  எய்தப் பெறா என்று 

சென்னி மதி அணிந்தாரைத் 

  திருப்பதிகம் பாடுவார்.  334 

 

 

அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து 

  ஐயர் அமுது செய்த 

வெவ்விடம் முன் தடுத்து எம் 

  இடர் நீக்கிய வெற்றியினால் 

எவ்விடத்தும் அடியார் இடர் 

  காப்பது கண்டம் என்றே 

செய்வினை தீண்டா திரு நீல கண்டம் 

  எனச் செப்பினார்.  335 

 

 

ஆய குறிப்பினில் ஆணை 

  நிகழ அருளிச் செய்து 

தூய பதிகத் திருக் கடைக் 

  காப்புத் தொடுத்து அணிய 

மேய அப்பொற்பதி வாழ்பவர்க்கே 

  அன்றி மேவும் அந்நாள் 

தீய பனிப் பிணி அந்நாடு 

  அடங்கவும் தீர்ந்தது அன்றே.  336 

 

 

அப்பதியின் கண் அமர்ந்து சில 

  நாளில் அங்கு அகன்று 

துப்புறழ் வேணியர் தானம் 

  பலவும் தொழுது அருளி 

முப்புரி நூலுடன் தோல் 

  அணி மார்பர் முனிவரொடும் 

செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் 

  கொடுமுடி சென்று அணைந்தார்.  337 

 

 

பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக் 

  கொடு முடியார் தம்பாதம் 

மருவி வணங்கி வளத் தமிழ் 

  மாலை மகிழ்ந்து சாத்தி 

விரி சுடர் மாளிகை வெஞ்ச 

  மாக் கூடல் விடையவர் தம் 

பொருவில் தானம் பல 

  போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.  338 

 

 

செல்வக் கருவூர்த் திருவானிலைக் 

  கோயில் சென்று இறைஞ்சி 

நல்லிசை வண் தமிழ்ச் சொல் 

  தொடை பாடி அந்நாடு அகன்று 

மல்கிய மாணிக்க வெற்பு 

  முதலா வணங்கி வந்து 

மல்கு திரைப் பொன்னித் 

  தென் கரைத் தானம் பல பணிவார்.  339 

 

 

பன்னெடும் குன்றும் படர் பெரும் 

  கானும் பல பதியும் 

அந் நிலைத் தானங்கள் ஆயின 

  எல்லாம் அமர்ந்து இறைஞ்சி 

மன்னு புகலியில் வைதிக 

  வாய்மை மறையவனார் 

பொன் இயல் வேணிப் புனிதர் 

  பராய்த் துறையுள் புகுந்தார்.  340 

 

 

நீடும் பராய்த் துறை நெற்றித் 

  தனிக் கண்ணர் கோயில் நண்ணிக் 

கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் 

  தமிழ்ச் சொல் மாலை 

பாடும் கவுணியர் கண்பனி 

  மாரி பரந்து இழியச் 

சூடும் கரதலத்து அஞ்சலி 

  கோலித் தொழுது நின்றார்.  341 

 

 

தொழுது புறம்பு அணைந்து அங்கு 

  நின்று ஏகிச் சுரர் பணிவுற்று 

எழு திரு ஆலந்துறை 

  திருச்செந்துறையே முதலா 

வழுவில் பல் கோயில்கள் சென்று 

  வணங்கி மகிழ்ந்து அணைவார் 

செழு மலர்ச் சோலைத் 

  திருக் கற்குடி மலை சேர வந்தார்.  342 

 

 

கற்குடி மாமலை மேல் எழுந்த 

  கனகக் கொழுந்தினைக் கால் வளையப் 

பொன் திரள் மேருச் சிலை வளைத்த 

  போர் விடையாளியைப் போற்றி இசைத்து 

நற்றமிழ் மாலை புனைந்தருளி 

  ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும் 

செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து 

  திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்.  343 

 

 

செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் 

  பள்ளி மேய செழுஞ்சுடரைக்  

கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் 

  கண் நுதலாரைக் கழல் பணிந்து 

மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர 

  விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து 

மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை 

  வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்.  344 

 

 

விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் 

  வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை 

நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து 

  எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும் 

அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த 

  அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப் 

பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப் 

  பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்.  345 

 

 

நாரணன் நான்முகன் காணா உண்மை 

  வெண் நாவல் உண்மை மயேந்திரமும் 

சீரணி நீடு திருக்கயிலை செல்வத் 

  திருவாரூர் மேய பண்பும் 

ஆரணத்து உட் பொருள் ஆயினாரை 

  ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி 

ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை 

  ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்.  346 

 

 

கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து 

  காமர் பதி அதன் கண் சில நாள் 

வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் 

  மன்னும் தவத்துறை வானவர் தாள் 

எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் 

  தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து 

வைதிக மாமணி அம்மருங்கு மற்று 

  உள்ள தானம் வழுத்திச் செல்வார்.  347 

 

 

ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் 

  எறும்பியூர் மாமலையே முதலா 

வேறு பதிகள் பலவும் போற்றி 

  விரவும் திருத்தொண்டர் வந்து சூழ 

ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் 

  எண் திசையோரும் தொழுது இறைஞ்ச 

நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள 

  மா நகர் சென்று சேர்ந்தார்.  348 

 

 

நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் 

  நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் 

இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும் 

  இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி 

அடும் பணிச் செஞ்சடையார் பதிகள் 

  அணைந்து பணிந்து நியமம் போற்றிக் 

கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த 

  காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார்.  349 

 

 

சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செஞ்சடை 

  நம்பர் தம் கோயில் எய்தி 

முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து 

  மொய் கழல் சேவடி கை தொழுவார் 

கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் 

  கண் நுதலாரை முன் போற்றி செய்து 

மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் 

 

  வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார்.  350 

 

அங்கு அப்பதி நின்று எழுந்தருளி 

  அணிந்திரு வாலம் பொழில் வணங்கி 

பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி 

  பொய்யிலியாரைப் பணிந்து போற்றி 

எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் 

  எதிர் கொள்ள எப்பதியும் தொழுது 

செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த 

  திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்.  351 

 

 

கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் 

  கலந்து அடியாருடன் காதல் பொங்கக் 

கொண்ட விருப்புடன் தாழ்ந்து 

  இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் 

தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று 

  தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில் 

அண்டர் பிரான் தன் அருளின் 

  வண்ணம் அடியார் பெருமையில் கேட்டருளி.  352 

 

 

வினவி எடுத்த திருப் பதிகம் 

  மேவு திருக்கடைக் காப்பு தன்னில் 

அனைய நினைவு அரியோன் செயலை 

  அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை 

புனைவுறு பாடலில் போற்றி செய்து 

  போந்து புகலிக் கவுணியனார் 

துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் 

  சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்.  353 

 

 

அப்பர் சோற்றுத் துறை 

  சென்று அடைவோம் என்று 

ஒப்பில் வண் தமிழ் 

  மாலை ஒருமையால் 

செப்பியே சென்று 

  சேர்ந்தனர் சேர்விலார் 

முப்புரம் செற்ற முன்னவர் 

  கோயில் முன்.  354 

 

 

தொல்லை நீள் திருச் சோற்றுத் 

  துறை உறை 

செல்வர் கோயில் வலம் 

  கொண்டு தேவர்கள் 

அல்லல் தீர்க்க நஞ்சு 

  உண்ட பிரான் அடி 

எல்லையில் அன்பு கூர 

  இறைஞ்சினார்.  355 

 

 

இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன்னிசை 

நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு 

உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் 

சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்.  356 

 

 

வேத வேதியர் வேதி குடியினில்

நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் 

பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து 

ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.  357 

 

 

எழுது மா மறையாம் பதிகத்து இசை 

முழுதும் பாடி முதல்வரைப் 

  போற்றி முன் 

தொழுது போந்து வந்து 

  எய்தினார் சோலை சூழ் 

பழுதில் சீர்த்திரு வெண்ணிப் 

  பதியினில்.  358 

 

 

வெண்ணி மேய விடையவர் கோயிலை 

நண்ணி நாடிய காதலின் நாண் மதிக் 

கண்ணியார் தம் கழல் இணை போற்றியே 

பண்ணில் நீடும் பதிக முன் பாடினார்.  359 

 

 

பாடி நின்று பரவிப் பணிந்து போய் 

ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன 

மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் 

நீடு சண்பை நிறை புகழ் வேதியர்.  360 

 

 

மொய் தரும் சோலை சூழ் 

  முளரி முள்ளடவி போய் 

மெய் தரும் பரிவிலான் 

  வேள்வியைப் பாழ்படச் 

செய்த சங்கரர் 

  திருச்சக்கரப் பள்ளி முன்பு 

எய்த வந்தருளினார் இயல் 

  இசைத் தலைவனார்.  361 

 

 

சக்கரப் பள்ளியார் தம் 

  தனிக் கோயில் உள் 

புக்கு அருத்தியின் உடன் புனை 

  மலர்த் தாள் பணிந்து 

அக்கரைப் பரமர்பால் அன்பு 

  உறும் பரிவு கூர் 

மிக்க சொல் தமிழினால் 

  வேதமும் பாடினார்.  362 

 

 

தலைவர் தம் சக்கரப் பள்ளி 

  தன்னிடை அகன்று 

அலைபுனல் பணைகளின் அருகு 

  போய் அருமறைப் 

புலன் உறும் சிந்தையார் 

  புள்ள மங்கைப் பதி 

குலவும் ஆலந்துறைக் 

  கோயிலைக் குறுகினார்.  363 

 

 

மன்னும் அக் கோயில் 

  சேர் மான் மறிக் கையர்தம் 

பொன் அடித்தலம் உறப் 

  புரிவொடும் தொழுது எழுந்து 

இன்னிசைத் தமிழ் புனைந்து 

  இறைவர் சேலூருடன் 

பன்னு பாலைத் துறைப் 

  பதி பணிந்து ஏகினார்.  364 

 

 

காவின் மேல் முகில் எழும் 

  கமழ் நறும் புறவு போய் 

வாவி நீடு அலவன் வாழ் 

  பெடையுடன் மலர் நறும் 

பூவின் மேல் விழைவுறும் 

  புகலியார் தலைவனார் 

சேவின் மேல் அண்ணலார் 

  திருநலூர் நண்ணினார்.  365 

 

 

மன்றலங் கழனி சூழ் 

  திரு நலூர் மறைவலோர் 

துன்று மங்கல வினைத் 

  துழனியால் எதிர் கொளப் 

பொன் தயங்கு ஒளி 

  மணிச் சிவிகையில் பொலிவுறச் 

சென்று அணைந்தருளினார் 

  சிரபுரச் செம்மலார்.  366 

 

 

நித்திலச் சிவிகை மேல் 

  நின்று இழிந்து அருளியே 

மொய்த்த அந்தணர் குழாம் முன் 

  செலப் பின் செலும் 

பத்தரும் பரிசனங்களும் 

  உடன் பரவவே 

அத்தர் தம் கோபுரம் 

  தொழுது அணைந்து அருளினார்.  367 

 

 

வெள்ளி மால் வரையை நேர் 

  விரிசுடர்க் கோயிலைப் 

பிள்ளையார் வலம் வரும் 

  பொழுதினில் பெருகுசீர் 

வெள்ள ஆனந்தம் மெய் பொழிய 

  மேல் ஏறி நீர் 

துள்ளுவார் சடையரைத் தொழுது 

  முன் பரவுவார்.  368 

 

 

பரவு சொல் பதிகம் 

  முன் பாடினார் பரிவுதான் 

வர அயர்த்து உருகு நேர் 

  மனனுடன் புறம் அணைந்து 

அரவுடைச் சடையர் 

  பேரருள் பெறும் பெருமையால் 

விரவும் அப்பதி அமர்ந்து 

  அருளியே மேவினார்.  369 

 

 

அன்ன தன்மையில் அப்பதியினில் 

  அமர்ந்து அருளி 

மின் நெடும் சடை விமலர் 

  தாள் விருப்பொடு வணங்கிப்

பன்னும் இன்னிசைப் பதிகமும் 

  பல முறை பாடி 

நன்னெடும் குல நான் 

  மறையவர் தொழ நயந்தார்.  370 

 

 

நீடும் அப்பதி நீங்குவார் 

  நிகழ் திருநல்லூர் 

ஆடுவார் திருவருள் பெற 

  அகன்று போந்து அங்கண் 

மாடும் உள்ளன வணங்கியே 

  பரவி வந்து அணைந்தார் 

தேடும் மால் அயற்கு 

  அரியவர் திருக்கருகாவூர்.  371 

 

 

வந்து பந்தர் மாதவி 

  மணம் கமழ் கருகாவூர்ச் 

சந்த மாமறை தந்தவர் 

  கழல் இணை தாழ்ந்தே 

அந்தம் இல்லவர் வண்ணமாம் 

  அழல் வண்ணம் என்று 

சிந்தை இன்புறப் பாடினார் 

  செழுந் தமிழ்ப் பதிகம்.  372 

 

 

பதிக இன்னிசை பாடிப் 

  போய்ப் பிறப்பதி பலவும் 

நதி அணிந்தவர் கோயில்கள் 

  நண்ணியே வணங்கி 

மதுர முத்தமிழ் வாசகர் 

  அணைந்தனர் மன்றுள் 

அதிர் சிலம்பு அடியார் மகிழ் 

  அவள் இவள் நல்லூர்.  373 

 

 

மன்னும் அப்பதி வானவர் 

  போற்றவும் மகிழ்ந்த 

தன்மையார் பயில் கோயில் 

  உள் தம்பரிசு உடையார் 

என்னும் நாமமும் நிகழ்ந்திட 

  ஏத்தி முன் இறைஞ்சிப் 

பன்னு சீர்ப் பதி பலவும் 

  அப்பால் சென்று பணிவார்.  374 

 

 

பழுதில் சீர்த் திருப் பரிதி 

  நல் நியமும் பணிந்து அங்கு 

எழுது மாமறையாம் பதிகத்து 

  இசை போற்றி 

முழுதும் ஆனவர் கோயில்கள் 

  வணங்கியே முறைமை

வழுவிலார் திருப்பூவனூர் வணங்கி 

  வந்து அணைந்து.  375 

 

 

பொங்கு காதலில் போற்றி 

  அங்கருளுடன் போந்து 

பங்கயத் தடம் பணைப் பதி 

  பலவும் முன் பணிந்தே 

எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி 

  எடுக்க வந்து அணைந்தார் 

அங்கணர்க்கு இடம் ஆகிய 

  பழம்பதி ஆவூர்.  376 

 

 

பணியும் அப்பதிப் பசுபதி 

  ஈச்சரத்தின் இனிது இருந்த 

மணியை உள் புக்கு 

  வழிபடும் விருப்பினால் வணங்கித் 

தணிவு இல் காதலினால் தண் 

  தமிழ் மாலைகள் சாத்தி 

அணி விளங்கிய திருநலூர் 

  மீண்டும் வந்து அணைந்தார்.  377 

 

 

மறை விளங்கும் அப்பதியினில் 

  மணிகண்டர் பொற்றாள் 

நிறையும் அன்பொடு வணங்கியே 

  நிகழ்பவர் நிலவும் 

பிறை அணிந்தவர் அருள் பெறப் 

  பிரச மென் மலர் வண்டு 

அறை நறும் பொழில் 

  திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார்.  378 

 

 

மதி புனைந்தவர் வலஞ்சுழி 

  மருவு மாதவத்து 

முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் 

  தம் முன் வந்து 

எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் 

  எதிர் செல மதியைக் 

கதிர் செய் வெண் முகில் 

  குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார்.  379 

 

 

கலந்த அன்பர்கள் தொழுது 

  எழக் கவுணியர் தலைவர் 

அலர்ந்த செங்கமலக் கரம் 

  குவித்து உடன் அணைவார் 

வலஞ்சுழிப் பெருமான் மகிழ் 

  கோயில் வந்து எய்திப் 

பொலம் கொள் நீள் சுடர்க் 

  கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்.  380 

 

 

மருவலார் புரம் முனிந்தவர் 

  திரு முன்றில் வலம் கொண்டு 

உருகும் அன்புடன் உச்சி 

  மேல் அஞ்சலியினராய்த் 

திருவலஞ்சுழி உடையவர் 

  சேவடித் தலத்தில் 

பெருகும் ஆதரவுடன் பணிந்து 

  எழுந்தனர் பெரியோர்.  381 

 

 

ஞான போனகர் நம்பர் முன் 

  தொழுது எழும் விருப்பால் 

ஆன காதலில் அங்கணவர் 

  தமை வினவும் 

ஊனமில் இசையுடன் 

  விளங்கிய திருப்பதிகம் 

பானலார் மணிகண்டரைப் 

  பாடினார் பரவி.  382 

 

 

புலன் கொள் இன் தமிழ் 

  போற்றினர் புறத்தினில் அணைந்தே 

இலங்கு நீர்ப் பொன்னி 

  சூழ் திருப்பதியினில் இருந்து 

நலம் கொள் காதலின் 

  நாதர்தாள் நாள்தொறும் பரவி 

வலஞ்சுழிப் பெருமான் தொண்டர் 

  தம்முடன் மகிழ்ந்தார்.  383 

 

 

மகிழ்ந்த தன்தலை வாழும் 

  அந் நாளிடை வானில் 

திகழ்ந்த ஞாயிறு துணைப் 

  புணர் ஓரை உள் சேர்ந்து 

நிகழ்ந்த தன்மையில் நிலவும் 

  ஏழ் கடல் நீர்மை குன்ற

வெகுண்டு வெம் கதிர் 

  பரப்பலின் முதிர்ந்தது வேனில்.  384 

 

 

தண் புனல் குளிர் கால் 

  நறும் சந்தனத் தேய்வை 

பண்பு நீடிய வாச மென் 

  மலர் பொதி பனி நீர் 

நண்புடைத் துணை நகை 

  மணி முத்தணி நாளும் 

உண்ப மாதுரியச் சுவை 

  உலகு உளோர் விரும்ப.  385 

 

 

அறல் மலியும் கான் ஆற்றின் 

  நீர் நசையால் அணையுமான் 

பெறல் அரிய புனல் என்று 

  பேய்த்தேரின் பின் தொடரும் 

உறை உணவு கொள்ளும் புள் 

  தேம்பிஅயல் இரை தேரும் 

பறவை சிறை விரித்து 

  ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்.  386 

 

 

நீண் நிலை மாளிகை மேலும் 

  நிலா முன்றின் மருங்கினும் 

வாண் நிழல் நல் சோலையிலும் 

  மலர் வாவிக் கரை மாடும் 

பூண் நிலவு முத்து அணிந்த 

  பூங்குழலார் முலைத் தடத்தும் 

காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து 

  மாந்தர் கலந்து உறைவாரால்.  387 

 

 

மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் 

  கமல முகை விரியக்  

குயில் ஒடுங்காச் சோலையின் மென் 

  தளிர் கோதிக் கூவி எழத் 

துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் 

  துயில் பயிலச் சுடர் வானில் 

வெயில் ஒடுங்கா வெம்மை தரும் 

  வேனில் விரி தரு நாளில்.  388 

 

 

சண்பை வரும் பிள்ளையார் 

  சடா மகுடர் வலஞ்சுழியை 

எண் பெருகத் தொழுது 

  ஏத்திப் பழையாறை எய்துதற்கு 

நண்பு உடைய அடியார்களுடன் 

  போத நடந்தருளி 

விண் பொரு நீள் மதிள் ஆறை 

  மேல் தளி சென்று எய்தினார்.  389 

 

 

திருவாறை மேற்றளியில் திகழ்ந்து 

  இருந்த செந்தீயின் 

உருவாளன் அடிவணங்கி உருகிய 

  அன்பொடு போற்றி 

மருவாரும் குழல் மலையாள் 

  வழிபாடு செய்ய அருள் 

தருவார் தம் திரு சத்தி 

  முற்றத்தின் புறம் சேர்ந்தார்.  390 

 

 

திருச் சத்தி முற்றத்தில் 

  சென்று எய்தித் திருமலையாள் 

அருச்சித்த சேவடிகள் ஆர்வம் 

  உறப் பணிந்து ஏத்திக் 

கருச் சுற்றில் அடையாமல் 

  கை தருவார் கழல் பாடி 

விருப்புற்றுத் திருப் பட்டீச்சரம் 

  பணிய மேவுங்கால்.  391 

 

 

வெம்மை தரு வேனிலிடை 

  வெயில் வெப்பம் தணிப்பதற்கு 

மும்மை நிலைத் தமிழ் 

  விரகர் முடிமீதே சிவபூதம் 

தம்மை அறியாதபடி தண் 

  தரளப் பந்தர் எடுத்து 

எம்மை விடுத்து அருள் புரிந்தார் 

  பட்டீசர் என்று இயம்ப.  392 

 

 

அவ்வுரையும் மணி முத்தின் 

  பந்தரும் ஆகாயம் எழச் 

செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் 

  சிரபுரத்துப் பிள்ளையார் 

இவ் வினைதான் ஈசர் திரு அருளால் 

  ஆகில் இசைவது என 

மெய் விரவு புளகம் உடன் 

  மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.  393 

 

 

அது பொழுதே அணி முத்தின் 

  பந்தரினை அருள் சிறக்கக் 

கதிர் ஒளிய மணிக் காம்பு 

  பரிசனங்கள் கைக் கொண்டார் 

மதுர மொழி மறைத் தலைவர் 

  மருங்கு இமையோர் பொழிவாசப் 

புது மலரால் அப்பந்தர் 

  பூம் பந்தரும் போலும்.  394 

 

 

தொண்டர் குழாம் ஆர்ப்பு 

  எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி 

எண் திசையும் நிறைந்து 

  ஓங்க எழுந்தருளும் பிள்ளையார் 

வெண் தரளப் பந்தர் நிழல் 

  மீது அணையத் திருமன்றில் 

அண்டர்பிரான் எடுத்த திருவடி 

  நீழல் என அமர்ந்தார்.  395 

 

 

பாரின் மிசை அன்பர் 

  உடன் வருகின்றார் பன்னகத்தின் 

ஆரம் அணிந்தவர் தந்த அருள் 

  கருணைத் திறம் போற்றி 

ஈர மனம் களி தழைப்ப 

  எதிர் கொள்ள முகம் மலர்ந்து 

சேர வரும் தொண்டர் 

  உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்.  396 

 

 

சென்று அணைந்து திருவாயில் 

  புறத்து இறைஞ்சி உள்புக்கு 

வென்றி விடையவர் கோயில் வலம் 

  கொண்டு வெண் கோட்டுப் 

பன்றி கிளைத்து அறியாத 

  பாத தாமரை கண்டு 

முன் தொழுது விழுந்து எழுந்து 

  மொழி மாலை போற்றி இசைத்தார்.  397 

 

 

அருள் வெள்ளத் திறம் 

  பரவி அளப்பரிய ஆனந்தப் 

பெரு வெள்ளத்திடை மூழ்கிப் 

  பேராத பெருங்காதல் 

திருவுள்ளப் பரிவுடனே செம்பொன் 

  மலை வல்லியார் 

தரு வள்ளத்து அமுது உண்ட 

  சம்பந்தர் புறத்து அணைந்தார்.  398 

 

 

அப்பதியில் அமர்கின்ற 

  ஆளுடைய பிள்ளையார் 

செப்பரும் சீர் திருவாறை வட 

  தளியில் சென்று இறைஞ்சி 

ஒப்பரிய தமிழ் பாடி 

  உடன் அமரும் தொண்டரொடு 

எப்பொருளுமாய் நின்றார் இரும் 

  பூளை எய்தினார்.  399 

 

 

தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் 

  பூளை சென்று எய்தக் 

காவண நீள் தோரணங்கள் நாட்டி 

  உடன் களி சிறப்பப் 

பூவண மாலைகள் நாற்றிப் பூரண 

  பொற்குடம் நிரைத்து அங்கு 

யாவர்களும் போற்றி இசைப்பத் 

  திருத் தொண்டர் எதிர் கொண்டார்.  400 

 

 

வண் தமிழின் மொழி 

  விரகர் மணிமுத்தின் சிவிகையினைத் 

தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு 

  அவர் தொழத் தாமும் தொழுதே 

அண்டர்பிரான் கோயிலினை அணைந்து 

  இறைஞ்சி முன் நின்று 

பண்டரும் இன்னிசைப் பதிகம் 

  பரம் பொருளைப் பாடுவார்.  401 

 

 

நிகர் இலா மேருவரை 

  அணுவாக நீண்டானை 

நுகர்கின்ற தொண்டர் தமக்கு 

  அமுதாகி நொய்யானை 

தகவு ஒன்ற அடியார்கள் தமை 

  வினவித் தமிழ் விரகர் 

பகர்கின்ற அருமறையின் பொருள் 

  விரியப் பாடினார்.  402 

 

 

பாடும் அரதைப் பெரும் 

  பாழியே முதலாகச் 

சேடர் பயில் திருச்சேறை 

  திருநாலூர் குட வாயில் 

நாடிய சீர் நறையூர் தென் 

  திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி 

நீடு தமிழ்த் தொடை புனைந்து 

  அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.  403 

 

 

அங்கண் இனிது அமரு நாள் 

  அடல் வெள் ஏனத்து உருவாய்ச்  

செங்கண் நெடுமால் பணியும் 

  சிவபுரத்துச் சென்று அடைந்து 

கங்கைச் சடை கரந்தவர் தம் 

  கழல் வணங்கிக் காதலினால் 

பொங்குமிசைத் திருப்பதிகம் முன் 

  நின்று போற்றி இசைத்தார்.  404 

 

 

போற்றி இசைத்துப் புனிதர் அருள் 

  பெற்றுப் போந்து எவ் உயிரும் 

தோற்றுவித்த அயன் போற்றும் 

  தோணிபுரத்து அந்தணனார் 

ஏற்றும் இசை ஏற்று உகந்த 

  இறைவர் தமை ஏத்துதற்கு 

நாற்றிசை யோர் பரவும் 

  திருக் குடமூக்கு நண்ணினார்.  405 

 

 

தேமருவு மலர்ச் சோலைத்திரு 

  குடமூக்கினில் செல்வ 

மாமறையோர் பூந்தராய் 

  வள்ளலார் வந்தருளத் 

தூமறையின் ஒலி பெருகத் 

  தூரிய மங்கலம் முழங்க 

கோ முறைமை எதிர் கொண்டு 

  தம்பதி உள் கொடு புக்கார்.  406 

 

 

திருஞான சம்பந்தர் திருக்குட 

  மூக்கினைச் சேர 

வருவார் தம் பெருமானை 

  வண் தமிழின் திருப்பதிகம் 

உருகா நின்று உளம் மகிழ்க் 

  குட மூக்கை உகந்து இருந்த 

பெருமான் எம் இறை என்று 

  பெருகு இசையால் பரவினார்.  407 

 

 

வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து 

  இருந்த வான் பொருளைச்  

சிந்தை மகிழ்வுற வணங்கித் 

  திருத்தொண்டருடன் செல்வார் 

அந்தணர்கள் புடை சூழ்ந்து 

  போற்றி இசைப்ப அவரொடும் 

கந்த மலர் பொழில் சூழ்ந்த 

  காரோணம் சென்று அடைந்தார்.  408 

 

 

பூ மருவும் கங்கை முதல் 

  புனிதமாம் பெரும் தீர்த்தம் 

மா மகம் தான் ஆடுதற்கு 

  வந்து வழிபடும் கோயில்

தூ மருவும் மலர்க் கையால் 

  தொழுது வலம் கொண்டு அணைந்து 

காமர் கெட நுதல் விழித்தார் 

  கழல் பணிந்து கண் களித்தார்.  409 

 

 

கண்ணாரும் அருமணியைக் 

  காரோணத்து ஆர் அமுதை 

நண்ணாதார் புரம் எரித்த 

  நான் மறையின் பொருளானைப் 

பண் ஆர்ந்த திருப்பதிகம் 

  பணிந்து ஏத்திப் பிறபதியும் 

எண் ஆர்ந்த சீர் 

  அடியாருடன் பணிவுற்று எழுந்தருளி.  410 

 

 

திரு நாசேச் சரத்து அமர்ந்த 

  செங்கனகத் தனிக் குன்றைக்  

கரு நாகத்து உரி புனைந்த கண் 

  நுதலைச் சென்று இறைஞ்சி 

அருஞானச் செந்தமிழின் 

  திருப்பதிகம் அருள் செய்து 

பெரு ஞான சம்பந்தர் 

  பெருகு ஆர்வத்தின்புற்றார்.  411 

 

 

மா நாகம் அர்ச்சித்த மலர்க் 

  கமலத் தாள் வணங்கி 

நாள் நாளும் பரவுவார் பிணி 

  தீர்க்கும் நலம் போற்றிப்  

பால் நாறும் மணி வாயர் 

  பரமர் திருவிடை மருதில் 

பூ நாறும் புனல் பொன்னித் 

  தடங்கரை போய்ப் புகுகின்றார்.  412 

 

 

ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் 

  என்று எடுத்தருளித் 

தாங்க அரிய பெருமகிழ்ச்சி 

  தலை சிறக்கும் தன்மையினால் 

ஈங்கு எனை ஆளுடைய பிரான் 

  இடை மருது ஈதோ என்று 

பாங்கு உடைய இன் 

  இசையால் பாடி எழுந்தருளினார்.  413 

 

 

அடியவர்கள் எதிர் கொள்ள 

  எழுந்தருளி அங்கு அணைந்து 

முடிவில் பரம் பொருள் ஆனார் 

  முதற் கோயில் முன் இறைஞ்சிப் 

படியில் வலம் கொண்டு திரு முன்பு 

  எய்திப் பார் மீது 

நெடிது பணிந்தெழுந்து அன்பு 

  நிறை கண்ணீர் நிரந்து இழிய.  414 

 

 

பரவுறு செந்தமிழ்ப் பதிகம் 

  பாடி அமர்ந்த அப்பதியில் 

விரவுவார் திருப்பதிகம் பல 

  பாடி வெண் மதியோடு 

அரவு சடைக்கு அணிந்தவர் தம் 

  தாள் போற்றி ஆர்வத்தால் 

உரவு திருத் தொண்டருடன் பணிந்து 

  ஏத்தி உறையும் நாள்.  415 

 

 

மருங்கு உள நற் பதிகள் பல 

  பணிந்து மா நதிக்கரை போய்க் 

குரங்காடு துறை அணைந்து 

  குழகனார் குரை கழல்கள் 

பெரும் காதலில் பணிந்து 

  பேணிய இன்னிசை பெருக 

அரும் கலை நூல் 

  திருப்பதிகம் அருள் செய்து பரவினார்.  416 

 

 

அம் மலர்த் தடம் பதிபணிந்து 

  அகன்று போந்து அருகு 

மைம்மலர்க் களத்து இறைவர் 

  தம் கோயில்கள் வணங்கி 

நம் மலத்துயர் தீர்க்க 

  வந்தருளிய ஞானச் 

செம்மலார் திருவாவடு 

  துறையினைச் சேர்ந்தார்.  417 

 

 

மூவர்க்கு அறிவரும் பொருள் 

  ஆகிய மூலத் 

தேவர் தம் திருவாவடு துறைத் 

  திருத் தொண்டர் 

பூ அலம்பு தண் பொரு புனல் 

  தடம் பணைப் புகலிக் 

காவலர்க்கு எதிர் கொள்ளும் 

  ஆதரவுடன் கலந்தார்.  418 

 

 

வந்து அணைவார் தொழா முனம் 

  மலர் புகழ்ச் சண்பை 

அந்தணர்க்கு எலாம் அருமறைப் 

  பொருள் என வந்தார் 

சந்த நித்திலச் சிவிகை நின்று 

  இழிந்து எதிர் தாழ்ந்தே 

சிந்தை இன்புற இறைவர் தம் 

  கோயில் முன் சென்றார்.  419 

 

 

நீடு கோபுரம் இறைஞ்சி உள் 

  புகுந்து நீள் நிலையான்

மாடு சூழ் திரு மாளிகை 

  வலம் கொண்டு வணங்கி 

ஆடும் ஆதியை ஆவடு 

  துறையுள் ஆரமுதை 

நாடு காதலில் பணிந்தெழுந்து 

  அருந் தமிழ் நவின்றார்.  420 

 

 

அன்பு நீடிய அருவி கண் 

  பொழியும் ஆர்வத்தால் 

முன்பு போற்றியே புறம்பு 

  அணை முத்தமிழ் விரகர் 

துன்பு போம் மனத் திருத்தொண்டர் 

  தம்முடன் தொழுதே 

இன்பம் மேவி அப்பதியினில் 

  இனிது அமர்ந்திருந்தார்.  421 

 

 

மேவி அங்கு உறை நாளினில் 

  வேள்வி செய்வதனுக்கு 

ஆவது ஆகிய காலம் வந்து 

  அணைவுற அணைந்து 

தாவில் சண்பையர் தலைவர்க்குத் 

  தாதையார் தாமும் 

போவதற்கு அரும் பொருள் பெற 

  எதிர் நின்று புகன்றார்.  422 

 

 

தந்தையார் மொழி கேட்டலும் 

  புகலியார் தலைவர் 

முந்தை நாளிலே மொழிந்தமை 

  நினைந்து அருள் முன்னி 

அந்தமில் பொருள் ஆவன 

  ஆவடு துறையுள் 

எந்தையார் அடித் தலங்கள் 

  அன்றோ என எழுந்தார்.  423 

 

 

சென்று தேவர் தம்பிரான் மகிழ் 

  கோயில் முன்பு எய்தி 

நின்று போற்றுவார் நீள் 

  நிதி வேண்டினார்க்கு ஈவது 

ஒன்றும் மற்றிலேன் உன்னடி 

  அல்லது ஒன்று அறியேன் 

என்று பேரருள் வினவிய 

  செந்தமிழ் எடுத்தார்.  424 

 

 

எடுத்த வண் தமிழ்ப் பதிக 

  நாலடியின் மேல் இரு சீர் 

தொடுத்த வைப்பொடு தொடர்ந்த 

  இன்னிசையினால் துதிப்பார் 

மடுத்த காதலில் வள்ளலார் 

  அடி இணை வழுத்தி 

அடுத்த சிந்தையால் ஆதரித்து 

  அஞ்சலி அளித்தார்.  425 

 

 

நச்சி இன் தமிழ் பாடிய 

  ஞான சம்பந்தர் 

இச்சையே புரிந்து அருளிய 

  இறைவர் இன் அருளால் 

அச் சிறப்பு அருள் பூதம் 

  முன் விரைந்தகன் பீடத்து 

உச்சி வைத்தது பசும் பொன் 

  ஆயிரக் கிழி ஒன்று.  426 

 

 

வைத்த பூதம் அங்கு அணைந்து 

  முன் நின்று நல் வாக்கால் 

உய்ந்த இக்கிழி பொன் 

  உலவாக் கிழி உமக்கு 

நித்தனார் அருள் செய்தது என்று 

  உரைக்க நேர் தொழுதே 

அத்தனார் திருவருள் நினைந்து தவ 

  மேனி மேல் பணிந்தார்.  427 

 

 

பணிந்து எழுந்து கை தொழுது 

  முன் பனி மலர்ப் பீடத்து 

அணைந்த ஆடகக் கிழிதலைக் 

  கொண்டு அருமறைகள் 

துணிந்த வான் பொருள் தரும் 

  பொருள் தூய வாய்மையினால் 

தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு 

  அளித்து உரைசெய்வார்.  428 

 

 

ஆதி மாமறை விதியினால் 

  ஆறு சூழ் வேணி 

நாதனாரை முன்னாகவே புரியும் 

  நல் வேள்வி 

தீது நீங்க நீர் செய்யவும் 

  திருக் கழுமலத்து 

வேத வேதியர் அனைவரும் 

  செய்யவும் மிகுமால்.  429 

 

 

என்று கூறி அங்கு அவர்தமை 

  விடுத்த பின் அவரும் 

நன்றும் இன்புறும் மனத்தொடும் 

  புகலி மேல் நண்ண 

வென்றி ஞான சம்பந்தரும் 

  விருப்பொடு வணங்கி 

மன்றல் ஆவடு துறையினில் 

  மகிழ்ந்து இனிது இருந்தார்.  430 

 

 

அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை 

உள் நிலாவிய காதலினால் 

  பணிந்து உறைந்து 

மண் எலாம் உய வந்தவர் 

  போந்து வார் சடைமேல் 

தெள் நிலா அணிவார் 

  திருக் கோழம்பம் சேர்ந்தார்.  431 

 

 

கொன்றைவார் சடைமுடியரைக் 

  கோழம்பத்து இறைஞ்சி 

என்றும் நீடிய இன்னிசைப் 

  பதிகம் முன் இயம்பி 

மன்று உளார் மகிழ் வைகல் 

  மாடக் கோயில் மருங்கு 

சென்று சார்ந்தனர் 

  திருவளர் சிரபுரச் செல்வர்.  432 

 

 

வைகல் நீடு மாடக் கோயில் 

  மன்னிய மருந்தைக் 

கைகள் அஞ்சலி கொண்டு 

  தாழ்ந்தெழுந்து கண் அருவி 

செய்ய இன்னிசைச் செந்தமிழ் 

  மாலைகள் மொழிந்து 

நையும் உள்ளத்தராய்த்திரு 

  நல்லத்தில் நண்ணி.  433 

 

 

நிலவு மாளிகைத் திரு நல்ல 

  நீடு மாமணியை 

இலகு சேவடி இறைஞ்சி இன் 

  தமிழ் கொடு துதித்துப் 

பலவும் ஈசர் தம் திருப்பதி 

  பணிந்து செல்பவர் தாம் 

அலை புனல் திருவழுந்தூர் 

  மாடக் கோயில் அடைந்தார்.  434 

 

 

மன்னுமாடம் மகிழ்ந்த வான் 

  பொருளினை வணங்கிப் 

பன்னு பாடலில் பதிக 

  இன்னிசை கொடு பரவிப் 

பொன்னி மா நதிக் கரையினில் 

  மீண்டு போந்து அணைந்து 

சொன்னவாறு அறிவார் 

  தமைத் துருத்தியில் தொழுதார்.  435 

 

 

திரைத் தடம் புனல் 

  பொன்னி சூழ் திருத்துருத்தியினில் 

வரைத்தலைப் பசும் பொன் 

  எனும் வண் தமிழ்ப்பதிகம் 

உரைத்து மெய்யுறப் பணிந்து 

  போந்து உலவும் அந்நதியின் 

கரைக் கண் மூவலூர்க் கண் 

  நுதலார் கழல் பணிந்தார்.  436 

 

 

மூவலூர் உறை முதல்வரைப் 

  பரவிய மொழியால் 

மேவு காதலில் ஏத்தியே 

  விருப்பொடும் போந்து 

பூ அலம்பு தண் புனல் 

  பணைப் புகலியார் தலைவர் 

வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் 

  வந்தார்.  437 

 

 

மல்கு தண்டலை 

  மயிலாடு துறையினில் மருவும் 

செல்வ வேதியர் தொண்டரொடு 

  எதிர் கொளச் சென்று

கொல்லை மான்மறிக் கையரைக் 

  கோயில் புக்கு இறைஞ்சி 

எல்லை இல்லதோர் இன்பம் 

  முன் பெருகிட எழுந்தார்.  438 

 

 

உள்ளம் இன்புற உணர்வுறும் 

  பரிவு கொண்டு உருகி 

வெள்ளம் தாங்கிய சடையரை 

  விளங்கு சொல் பதிகத் 

தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் 

  புறத்து அணைந்தருளி 

வள்ளலார் மற்ற வளம் 

  பதி மருவுதல் மகிழ்ந்தார்.  439 

 

 

அத்திருப்பதி அகன்று போய் 

  அணிகிளர் சூலக்  

கைத்தலப் படை வீரர் செம் 

  பொன் பள்ளி கருதி 

மெய்த்த காதலில் விள நகர் 

  விடையவர் பாதம் 

பத்தர் தம்முடன் பணிந்து இசைப் 

  பதிகம் முன் பகர்ந்தார்.  440 

 

 

பாடும் அப்பதி பணிந்து 

  போய்ப் பறியலூர் மேவும் 

தோடுலா மலர் இதழியும் 

  தும்பையும் அடம்பும் 

காடு கொண்ட செஞ்சடைமுடிக் 

  கடவுளர் கருது 

நீடு வீரட்டம் பணிந்தனர் 

  நிறை மறை வேந்தர்.  441 

 

 

பரமர் தம் திருப் பறியலூர் 

  வீரட்டம் பரவி 

விரவு காதலின் வேலையின் 

  கரையினை மேவி 

அரவு அணிந்தவர் பதி பல 

  அணைந்து முன் வணங்கிச் 

சிரபுரத்தவர் திருத்தொண்டர் 

  எதிர் கொளச் செல்வார்.  442 

 

 

அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி 

  பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக் 

கடி கமழும் மலர்ப்பழனக் கழிநாட்டு 

  அகன் பதிகள் கலந்து நீங்கிக் 

கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார் 

  குண்டர் சாக்கியர் தம் கொள்கை 

படி அறியப் பழுது என்றே மொழிந்து 

  உய்யும் நெறி காட்டும் பவள வாயர்.  443 

 

 

தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் 

  பிறப்பிடமாம் அதனால் சார 

வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் 

  கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு 

பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு 

  உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த 

அருமை உடைப் பதிகம் தாம் யாழினால் 

  பயிற்றும் பேறு அருளிச் செய்தார்.  444 

 

 

கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு 

  திரு பதிகத்திற் கிளர்ந்த ஓசை 

அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து 

  இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் 

வளர இசை நிகழ்வது என விளம்புதலும் 

  வளம் புகலி மன்னர் பாதம் 

உளம் நடுங்கிப் பணிந்து திருநீல 

  கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்.  445 

 

 

அலகில் திருப்பதிக இசை அளவு படா 

  வகை இவர்கள் அன்றி ஏயும் 

உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை 

  அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் 

பலர் புகழும் திருப்பதிகம் பாடி 

  அருளப் பெற்றால் பண்பு நீடி 

இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் 

  காட்டப் பெறுவன் என்றார்.  446 

 

 

வேத நெறி வளர்ப்பவரும் விடையவர் 

  முன் தொழுது திருப்பதிகத்து உண்மை 

பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் 

  நிலத்த நூல் புகன்ற பேத 

நாத இசை முயற்சிகளால் அடங்காத 

  வகை காட்ட நாட்டுகின்றார் 

மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் 

  வானவரும் வணங்கி ஏத்த.  447 

 

 

வண் புகலி வேதியனார் மாதர் 

  மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப் 

பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த 

  அணைந்து பெரும் பாணனார் தாம் 

நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு 

  போல் கைக்கொண்டு நடத்தப்புக்கார்கு   

எண் பெருகும் அப் பதிகத்து இசை 

  நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே.  448 

 

 

அப்பொழுது திருநீல கண்ட இசைப் 

  பெரும்பாணர் அதனை விட்டு 

மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் 

  கழல் இணை வீழ்ந்தெழுந்து நோக்கி 

இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து 

  இசை யாழில் ஏற்பன் என்னச் 

செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் 

  நன்றோ என்று தெளிந்து செய்வார்.  449 

 

 

வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது 

  இது என்று அங்கு அதனைப் போக்க 

ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே 

  உற்ற இசை அளவினால் நீர் 

ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என 

  வாங்கிக் கொண்டு அவனி செய்த 

பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் 

  அறா வாயர் பணித்து அருளுகின்றார்.  450 

 

 

ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் 

  அதென்  ஆள் உடையாள் உடனே கூடச் 

செய்ய சடையார் அளித்த திருவருளின் 

  பெருமை எலாம் தெரிய நம்பால் 

எய்திய இக் கருவியினில் அளவு 

  படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப 

வையகத்தோர் அறிவுற இக்கருவி அளவையின் 

  இயற்றல் வழக்கே என்றார்.  451 

 

 

சிந்தையால் அளவு படா இசைப் பெருமை 

  செயல் அளவில் எய்துமோ நீர் 

இந்த யாழினைக் கொண்டே இறைவர் 

  திருப் பதிக இசை இதனில் எய்த 

வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் 

  கொடுப்பப் புகலி மன்னர் 

தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு 

  பெரும் பாணர் தலை மேல் கொண்டார்.  452 

 

 

அணைவுறும் அக் கிளைஞருடன் பெரும் பாணர் 

  ஆளுடைய பிள்ளையார் தம் 

துணை மலர்ச் சேவடி பணிந்து 

  துதித்தருளத் தோணிபுரத் தோன்றலாரும் 

இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன் 

  அப்பதியில் இனிது மேவிப் 

பணை நெடும் கை மதயானை உரித்தவர் 

  தம் பதி பிறவும் பணியச் செல்வார்.  453 

 

 

பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன 

  நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி 

மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் 

  எனைப் பலவும் வணங்கிப் போற்றித் 

தங்கிசை யாழ்ப் பெரும் பாணருடன் 

  மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் 

செங்கை மான் மழு ஏந்தும் சின 

  விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு.  454 

 

 

நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் 

  குழாம் நயந்து சென்று 

கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன் 

  சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத் 

தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் 

  இறைஞ்சிச் செல்வக் கோயில் 

உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு 

  தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்.  455 

 

 

உருகிய அன்புறு காதல் உள் உருகி 

  நனை ஈரம் பெற்றால் போல 

மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த 

  மயிர்ப் புளகம் வளர்க்கும் நீரால்  

அருவி சொரி திரு நயனத்து ஆனந்த 

  வெள்ளம் இழிந்து அலைய நின்று 

பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண் 

  முலையாள் என்று எடுத்துப் போற்றி.  456 

 

 

யாழ்நரம்பில் ஆர இயல் இசை 

  கூடப் பாடியே எண்ணில் கற்பச் 

சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் 

  காப்புச் சாத்திச் செங்கண் நாகப் 

பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் 

  புறத்து அணைந்து புவனம் ஏத்தும் 

பாணனார் யாழில் இடப் பாலறா 

  வாயர் அருள் பணித்த போது.  457 

 

 

பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் 

  பின்பு பெரும் பாணனார் தாம் 

தெள் அமுத இன்னிசையின் தேம் பொழி 

  தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக் 

கொள்ள இடும் பொழுதின் கண் 

  குவலயத்தோர் களிகூரக் குலவு சண்பை 

வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து 

  திருத் தொண்டருடன் மருவும் காலை.  458 

 

 

மன்னு திரு நள்ளாற்று மருந்தை 

  வணங்கிப் போந்து வாச நன்னீர்ப் 

பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு அணை 

  சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச் 

செந் நெல் வயல் செங்கமல முகம் 

  மலரும் திருச் சாத்த மங்கை மூதூர் 

தன்னில் எழுந்தருளினார் சைவ சிகா 

  மணியார் மெய்த் தவத்தோர் சூழ.  459 

 

 

நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் 

  நீல நக்கர் தாமும் சைவ 

மறையவனார் எழுந்தருளும் படி கேட்டு 

  வாழ்ந்து வழி விளக்கி எங்கும் 

துறை மலி தோரணம் கதலி கமுகு 

  நிறை குடம் தூப தீபம் ஆக்கி 

முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் 

  அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்.  460 

 

 

அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் 

  கோயில் மருங்கு அணைந்து வானோர் 

உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் 

  கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர் 

மய வந்தி மதிச் சடையார் முன் 

  தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம் 

செய வந்த அந்தணனார் செங்கைமேல் 

  குவித்து எழுந்து திருமுன் நின்றார்.  461 

 

 

போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி 

  எழும் ஆதரவு பொழிந்து விம்ம 

ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் 

  நின்று துதித்துப் போந்து எல்லை இல்லா 

நீற்று நெறி மறையவனார் நீல 

  நக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் 

ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன் 

  இன்புற்று அங்கு அமுது செய்தார்.  462 

 

 

நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் 

  விருந்து அமுது செய்து நீர்மைப் 

பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க 

  அங்கு இரவு பள்ளி மேவி 

ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு 

  அன்பருடன் அணைந்து சென்று 

நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் 

  நாதர் கழலில் தாழ்ந்து.  463 

 

 

கோதிலா ஆரமுதைக் கோமளக் கொம்புடன் 

  கூடக் கும்பிட்டு ஏத்தி 

ஆதியாம் மறைப் பொருளால் அரும் 

  தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார் 

நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் 

  பெரும் சீர் நிகழ வைத்துப் 

பூதி சாதனர் பரவும் புனித இயல் 

  இசைப் பதிகம் போற்றி செய்தார்.  464 

 

 

பரவிய காதலில் பணிந்து பாலறா 

  வாயர் புறத்து அணைந்து பண்பு 

விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு 

  உறு காதலில் தங்கி மேவும் நாளில் 

அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய 

  எழும் ஆதரவால் அணைந்து செல்வார் 

உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் 

  உடையவர்க்கு விடை உவந்து நல்கி.  465 

 

 

மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு 

  மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் 

பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் 

  பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் 

கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் 

  கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச் 

சொற்றமிழ் மாலைகள் பாடிச் சிலநாள் வைகித் 

  தொழுதகன்றார் தோணிபுரத் தோன்றலார் தாம்.  466 

 

 

கழிக் கானல் மருங்கு அணையும் கடல் 

  நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச் 

சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் 

  பரவிப் போய்த் தோகைமார் தம் 

விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் 

  விமலர் கழல் வணங்கி ஏத்தி 

மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி 

  அங்கு அகன்றார் மூதூர் நின்றும்.  467 

 

 

அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம் 

  அங்கணரைப் பணிந்து போற்றிப் 

பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் 

  எழுந்தருளும் பெருமை கேட்டுத் 

திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் 

  சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு 

உருகு மனம் களி சிறப்ப எதிர் 

  கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார்.  468 

 

 

சிறுத் தொண்டருடன் கூடச் செங்காட்டங் 

  குடியில் எழுந்தருளிச் சீர்த்தி 

நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர் 

  அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்

பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் 

  சரத்தின் கண் போகம் எல்லாம் 

வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் 

  மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்.  469 

 

 

அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டருளி 

  அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து 

செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு 

  பணிந்து எழுந்து செங்கை கூப்பித் 

தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் 

  தொழ இருந்த தன்மை போற்றிப் 

பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து 

  அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்.  470 

 

 

போந்து மா மாத்தியர் தம் போர் 

  ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை 

வாய்ந்த மாதவர் அவர் தாம் 

  மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும் 

காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் 

  சரம் பரவு காதல் கூர 

ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று 

  அங்கு அன்பருடன் இருந்த நாளில்.  471 

 

 

திருமருகல் நகரின் கண் எழுந்தருளித் 

  திங்களுடன் செங்கட் பாம்பு 

மருவு நெடும் சடைமவுலி மாணிக்க 

  வண்ணர் கழல் வணங்கிப் போற்றி 

உருகிய அன்புறு காதல் உள் 

  அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப் 

பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு 

  இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.  472 

 

 

அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி 

  அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டு 

பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு 

  புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது 

மின்னார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த 

  விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத் 

தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு 

  சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள்.  473 

 

 

வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் 

  மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி 

ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே 

  அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது 

கோள் உருமும் புள் அரசும் அனையார் 

  எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக 

நீள் இரவு புலர் காலை மாலை வாச 

  நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்.  474 

 

 

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை 

  அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி 

என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் 

  செய்கேன் இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை 

மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் 

  வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே 

சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் 

  திசைநோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்.  475 

 

 

அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை 

  கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண் 

நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட 

  அரவு அணிந்த நிமலா வெந்து 

பொடியான காமன் உயிர் இரதி வேண்டப் 

  புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக் 

கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும் 

  கவின் மருகற் பெருமானே காவாய் என்றும்.  476 

 

 

வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் 

  சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும் 

செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம் 

  சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா 

இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான் 

  இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும் 

அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி 

  அணி மருகற் பெருமானே அருளாய் என்றும்.  477 

 

 

இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் 

  இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் 

அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை 

  ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம் 

மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார 

  மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல் 

வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு 

  மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார்.  478 

 

 

சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் 

  அருள் போற்றிச் சிந்தை நைந்து 

பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் 

  நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக் 

கரமலர்கள் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு 

  கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப் 

புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள் 

  போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்.  479 

 

 

வளம் பொழில் சூழ் வைப்பூர்க்கோன் தாமன் 

  எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல 

இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் 

  இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக் 

குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும் 

  ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் 

தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு 

  அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன்.  480 

 

 

மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் 

  மறி கடலில் கலம் கவிழ்த்தால் போலநின்றேன் 

சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம் 

  எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக் 

கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி 

  வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப் 

பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு 

  பணைமருகற் பெருமானைப் பாடலுற்றார்.  481 

 

 

சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை 

  சசி கண்ட மவுலியானை 

விடையானை வேதியனை வெண் நீற்றானை 

  விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற 

படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு 

  அணையில் துயின்றானும் பரவும் கோலம் 

உடையானை உடையானே தகுமோ இந்த 

  ஒள்ளிழையாள் உள் மெலிவு என்று எடுத்துப் பாட.  482 

 

 

பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த 

  பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப 

அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு 

  அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த 

நங்கை அவள் தனை நயந்த நம்பியோடு 

  நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் 

மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் 

  மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.  483 

 

 

மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் 

  நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம் 

செற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும் 

  செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப் 

பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று 

  பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும் 

சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் 

  மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்.  484 

 

 

புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் 

  பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த 

செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம் 

  திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக 

மைக் குலவு கண்டத்தார் மருகற் கோயில் 

  மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் 

கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் 

  காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்.  485 

 

 

மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு 

  செங் காட்டங் குடியின் மன்னிப் 

பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு 

  உடைக் கோலமே ஆகித் தோன்ற 

உருகிய காதலும் மீது பொங்க உலகர் 

  முன் கொள்ளும் உணர்வு நீட 

அருவி கண் வார்வுறப் பாடலுற்றார் 

  அங்கமும் வேதமும் என்று எடுத்து.  486 

 

 

கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் 

  கணபதி ஈச்சரம் காதலித்த 

அண்டர் பிரானை வணங்கி வைகும் 

  அப்பதியில் சில நாள்கள் போற்றித்

தொண்டருடன் அருள் பெற்று மற்றத் 

  தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப் 

புண்டரிகத் தடம் சூழ் பழனப் 

  பூம் புகலூர் தொழப் போதுகின்றார்.  487 

 

 

சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் 

  தொண்டர் நண்புடன் செல்ல நல்ல 

வேரி நறும் தொங்கல் மற்றவரும் 

  விடை அருளப் பெற்று மீண்ட பின்பு 

நீரின் மலிந்த சடையர் மேவி 

  நிகழும் பதிகள் பல பணிந்து 

பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் 

  புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்.  488 

 

 

திருப்புகலூர்த் திருத் தொண்டரோடும் செம்மை 

  முருகனார் மெய்ம் மகிழ்ந்த 

விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து 

  வேத முதல்வர் தம் கோயில் எய்திப் 

பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து 

  பூமலி முன்றில் புடை வலம் கொண்டு 

ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார் 

  ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்.  489 

 

 

புக்கு எதிர் தாழ்ந்து விழுந்தெழுந்து 

  பூம் புகலூர் மன்னு புண்ணியரை 

நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க 

  நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய 

மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி 

  மேவிய ஏழ் இசை பாடிப் போந்து 

திக்கு நிறை சீர் முருகர் முன்பு 

  செல்ல அவர் மடம் சென்று புக்கார்.  490 

 

 

ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி 

  அப் பதி தன்னில் அமரு நாளில் 

வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த 

  வர்த்த மானீச்சரம் தான் வணங்கி 

ஓங்கிய அன்பின் முருகனார் தம் 

  உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் 

பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் 

  பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்.  491 

 

 

மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் 

  பெரு விறல் மன்னனார் தாம் 

புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் 

  மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச் 

சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும் 

  திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து 

கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் 

  குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.  492 

 

 

நாவுக்கு அரசர் எழுந்தருளும் நல்ல 

  திருவார்த்தை கேட்ட போதே 

சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன 

  திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு 

மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து 

  எதிர் கொள்ள மெய் அன்பரோடும் 

பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர்ப் 

  புறம்பு அணை எல்லை கடந்து போந்தார்.  493 

 

 

அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் 

  எதிர் வந்து அணைய வாசப் 

பொங்கு புனல்தண் புகலி வந்த 

  பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித் 

தங்களின் அன்பின் முறைமை யாலே 

  தாழ்ந்து வணங்கித் தனித் தனியே 

மங்கலம் ஆகிய நல் வரவின் 

  வாய்மை விளம்பி மகிழும் போது.  494 

 

 

மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் 

  வேந்தரை நோக்கி விருப்பினாலே 

அப்பரை இங்கு அணையப் பெறும் 

  பேரருள் உடையோம்யாம் அந்தண் ஆரூர் 

எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று 

  வினவிட ஈறில் பெரும் தவத்தோர் 

செப்பிய வண் தமிழ் மாலையாலே 

  திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்.  495 

 

 

அரசு அருளிச் செய்த வாய்மை கேட்ட 

  அப்பொழுதே அருள் ஞானம் உண்ட 

சிரபுர வேந்தரும் சிந்தையின் கண் 

  தென் திருவாரூர் வணங்குதற்கு 

விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் 

  வந்து உம்முடன் மேவுவன் என்று 

உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு 

  உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்.  496 

 

 

சொற் பெரு வேந்தரும் தோணி மூதூர்த் 

  தோன்றல் பின் காதல் தொடரத் தாமும் 

பொற் புகலூர் தொழச் சென்று அணைந்தார் 

  புகலிப் பிரானும் புரிந்த சிந்தை 

விற்குடி வீரட்டம் சென்று மேவி 

  விடையவர் பாதம் பணிந்து போற்றிப் 

பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் 

  நான் மறைப் பாடிப் போந்தார்.  497 

 

 

துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் 

  துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின் 

மண மலி கானமும் ஞானமும் உண்டார் 

  மருங்கு உற நோக்கி மகிழ்ந்தருளி 

அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் 

  என மொழிந்து அன்பு பொங்கப் 

புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் 

  பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்.  498 

 

 

வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு 

  அணையும் கொடி மன்னும் ஆரூர் 

தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் 

  தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த 

பால் நிற நீற்றர் பருக்கையானைப் 

  பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்

தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி 

  மற்றதன் எல்லை சேர்ந்தார்.  499 

 

 

பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் 

  பொழிந்து புவிமேல் பொலிவது என்ன 

எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் 

  இலங்கு சிவிகை இழிந்தருளிச் 

செங்கை நிறை மலர் கொண்டு தூவித் 

  திரு இருக் குறள் பாடி ஏத்தித் 

தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் 

 

  தனைப் பணிவுற்றார் தமிழ் விரகர்.  500 

 

படியில் ஞானம் உண்டருளிய 

  பிள்ளையைப் பணிதற்கு 

அடியர் சென்று எதிர் கொள 

  எழுந்தருளும் அஞ்ஞான்று 

வடி கொள் சூலத்தர் 

  மன்னிய பொன்மதில் ஆரூர்க் 

கடி கொள் பேரணிப் 

  பொலிவையார் முடிவுறக் காண்பார்.  501 

 

 

நான மான் மத நளிர் 

  பெரும் சேற்றிடை நறும் பொன் 

தூ நறுந்துகள் சொரிதலில் 

  சுடர் ஒளிப் படலை 

யான வீதிகள் அடி 

  வலித்து அவை கரைந்தலைய 

வான மாரியில் பொழிந்தது 

  மலர் மது மாரி.  502 

 

 

ஆடல் நீடுவ துகில் கொடி 

  அணி குழல் கொடிகள் 

தோடு சூழ்வன சுரும்பொடு 

  தமனியத் தசும்பு 

காடு கொண்டன கதலி 

  தோரணம் நிரைக் கமுகு 

மாட மாளிகை மண்டபங்களின் 

  மருங்கு எல்லாம்.  503 

 

 

மாலை சூழ் புறம் கடைகளின் 

  மணி நிரை விளக்கின் 

கோல நீள் சுடர் 

  ஒளியுடன் கோத்திடை தூக்கும் 

நீல மா மணி நிழல் 

  பொர நிறம்புகர் படுக்கும் 

பால வாயின பவள 

  வேதிகை மலர்ப் பந்தர்.  504 

 

 

தழை மலர்த்தடஞ் சாலைகள் 

  தெற்றிகள் சதுக்கம் 

குழை முகத்தவர் ஆடரங்கு 

  இமையவர் குழாமும் 

விழை சிறப்பின வியல் 

  இடம் யாவையும் மிடைந்து 

மழை முழக்கு என 

  இயம்பின மங்கல இயங்கள்.  505 

 

 

விரவு பேரணி வேறு 

  வேறு இன்னன விளங்கும் 

பிரசமென்மலர்ச் சோலை 

  சூழ் பெருந் திருவாரூர் 

அரசளிப்பவர் அருளினால் 

  அடியவர் குழுவும் 

புரிசனங்களும் புறத்து அணைந்து 

  எதிர் கொள்ளும் பொழுது.  506 

 

 

வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் 

  தம் குழாத்து எதிர் வணங்கிச் 

சந்த முத்தமிழ் விரகராம் 

  சண்பையர் தலைவர் 

அந்தமாய் உலகு ஆதியாம் 

  பதிகம் அங்கு எடுத்தே 

எந்தை தான் எனை ஏன்று 

  கொள்ளும் கொல் என்று இசைத்தார்.  507 

 

 

ஆன அத்திருப் பதிகம் 

  முன் பாடிவந்து அணையும் 

ஞான வித்தகர் மெய்த்தவர் 

  சூழ அந் நகரார் 

தூ நறும் சுண்ண மலர் 

  பொரி தூஉய்த் தொழுது ஏத்த 

வான நாயகர் கோயில் 

  வாயிலின் மருங்கு அணைந்தார்.  508 

 

 

மன்னு தோரண வாயில் முன் 

  வணங்கி உள் புகுவார் 

தன்னுள் எவ்வகைப் பெருமையும் 

  தாங்கிய தகைத்தாம் 

பன் நெடும் சுடர்ப் 

  படலையின் பரப்பினைப் பார்த்துச் 

சென்னி தாழ்ந்து தேவாசிரியன் 

  தொழுது எழுந்தார்.  509 

 

 

மாடு சூழ் திரு மாளிகை 

  வலம் கொண்டு வணங்கிக் 

கூடு காதலில் கோபுரம் 

  பணிந்து கை குவித்துத் 

தேடு மால் அயற்கு 

  அரியராய்ச் செழுமணிப் புற்றில் 

நீடு வாழ் முன்பு நிலமுறப் 

  பல முறை பணிந்தார்.  510 

 

 

பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் 

  பரப்பிய புளகம் 

அணிந்த மேனியோடு ஆடினர் 

  பாடினர் அறிவில் 

துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் 

  தமைக் கண்டு துதிப்பார் 

தணிந்த சிந்தையின் விரைந்து 

  எழு வேட்கையில் தாழ்ந்தார்.  511 

 

 

செஞ் சொல் வண் தமிழ்த் 

  திருப்பதிகத்து இசை எடுத்து 

நஞ்சு போனகம் ஆக்கிய 

  நம்பர் முன் பாடி 

மஞ்சு சூழ் திரு மாளிகை 

  வாயிலின் புறம் போந்து 

அஞ்சு எழுத்து மெய் 

  உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்.  512 

 

 

அங்கு அணைந்து அமர்ந்து 

  அருளுவார் அரநெறி அமர்ந்த 

செங்கண் ஏற்றவர் சேவடி 

  வணங்கி முன் திளைத்துப் 

பொங்கு பேரொளிப் புற்று 

  இடம் கொண்டவர் புனிதப் 

பங்கயப் பதம் தொழுது 

  காலம் தொறும் பணிந்தார்.  513 

 

 

புற்றிடம் கொளும் புனிதரைப் 

  போற்றி இசை பெருகப்  

பற்றும் அன்பொடு பணிந்து 

  இசைப் பதிகங்கள் பாடி 

நற்றவத் திருத்தொண்டர்களோடு 

  நலம் சிறப்ப 

மற்ற வண்பதி தன்னிடை 

  வைகும் அந் நாளில்.  514 

 

 

மல்லல் நீடிய வலி 

  வலம் கோளிலி முதலாத் 

தொல்லை நான் மறை முதல்வர் 

  தம் பதி பல தொழுதே 

எல்லையில் திருப்பதிகங்களால் 

  பணிந்து ஏத்தி 

அல்லல் தீர்ப்பவர் மீண்டும் 

  ஆரூர் தொழ அணைந்தார்.  515 

 

 

ஊறு காதலில் ஒளி 

  வளர் புற்றிடம் கொண்ட 

ஆறு உலாவிய சடை முடி 

  ஐயரைப் பணிந்து 

நீறு வாழ்வு என நிகழ் திருத் 

  தொண்டர் களோடும் 

ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் 

  அங்கு இருந்தார்.  516 

 

 

அங்கு நன்மையில் வைகும் 

  அந்நாள் சில அகல 

நங்கள் தம் திரு நாவினுக்கு 

  அரசரை நயந்து 

பொங்கு சீர்ப் புகலூர் 

  தொழ அருளினால் போவார் 

தங்கும் அப்பதிப் புறம்பணை 

  சார்ந்தருள் செய்வார்.  517 

 

 

புவன ஆரூரினிற் புறம் போந்து 

  அதனையே நோக்கி நின்றே 

அவம் இலா நெஞ்சமே அஞ்சல் 

  நீ உய்யுமாறு அறிதி அன்றே 

சிவனது ஆரூர் தொழாய் நீ 

  மறவாது என்று செங்கை கூப்பிப்  

பவனமாய்ச் சோடையாய் எனும் 

  திருப்பதிகம் முன் பாடினாரே.  518 

 

 

காழியார் வாழ வந்து அருள் 

  செயும் கவுணியப் பிள்ளையார் தாம் 

ஆழியான் அறியொணா அண்ணல் 

  ஆரூர் பணிந்து அரிது செல்வார் 

பாழி மால் யானையின் உரி 

  புணைந்தார் பனையூர் பணிந்து 

வாழி மாமறை இசைப் பதிகமும் 

  பாடி அப் பதியில் வைகி.  519 

 

 

அங்கு நின்று அரிது எழுந்தருளுவார் 

  அகில காரணமும் ஆனார் 

தங்கு நற் பதிகளும் பிற 

  பணிந்தருளி வண் தமிழ் புனைந்தே 

எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் 

  கொளத் தொழுதெழுந்து அருளி வந்தார் 

பொங்கு தண் பாசடைப் பங்கயப் 

  புனல் வயல் புகலூர் சார.  520 

 

 

நாவினுக்கு அரசரும் நம்பி சீர் 

  முருகரும் மற்று நாமச் 

சேவுகைத்தவர் திருத் தொண்டர் 

  ஆனவர்கள் முன் சென்று சீதப் 

பூவினில் பொலி புனல் புகலியார் 

  போதகத்து எதிர் பணிந்தே 

மேவ மற்று அவருடன் கூடவே 

  விமலர் கோயிலை அடைந்தார்.  521 

 

 

தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு 

  அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி 

பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி 

  முன் பரவுவார் புறம்பு அணைந்தே 

தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி 

  அத் தனி முதற் தொண்டர் தாமே 

யாவையும் குறைவறுத்திட அமர்ந்து அருளுவார் 

  இனிதின் அங்கு உறையும் நாளில்.  522 

 

 

நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் 

  உடன் அணைந்து எய்தும் நீர்மைச் 

சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் 

  செய்கை நேர் நின்று வாய்மைச்  

சால்பின் மிக்கு உயர் திருத் தொண்டின் 

  உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக் 

காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து 

  அருளினார் காழி நாடர்.  523 

 

 

கும்பிடும் கொள்கையில் குறி கலந்திசை எனும் 

  பதிக முன் ஆன பாடல் 

தம் பெரும் தலைமையால் நிலைமை சால் 

  பதியதன் பெருமை சால்புற விளம்பி 

உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் 

  உள்ளம் மெய்க் காதல் கூர 

நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் 

  பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்.  524 

 

 

புள்ளலம்பு தண்புனல் புகலூர் 

  உறை புனிதனார் அருள் பெற்றுப் 

பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் 

  பிற பதி தொழச் செல்வார் 

வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல 

  நக்கரும் வளம் பதிக்கு ஏக 

உள்ளம் அன்புறும் முருகர் அங்கு 

  ஒழியவும் உடன்பட இசைவித்தார்.  525 

 

 

கண்ணகன் புகலூரினைத் தொழுது 

  போம் பொழுதினில் கடல் காழி 

அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் 

  தம் அருகு விட்டு அகலாதே 

வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர 

  வழிக்கொள உறும் காலை 

எண்ணில் சீர்த்திரு நாவினுக்கரசரும் 

  மற்று அவர்க்கு இசைக்கின்றார்.  526 

 

 

நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த 

  இந் நலம் கிளர் ஒளி முத்தின் 

தூய யானத்தின் மிசை எழுந்து 

  அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள் 

மேய வேணியர் அருளும் இவ்வாறு 

  எனில் விரும்பு தொண்டர்களோடும் 

போய தெங்குநீர் அங்கு யான் பின் 

  வரப் போவது என்று அருள் செய்தார்.  527 

 

 

என்று பிள்ளையார் மொழிந்து அருள் 

  செய்திட இரும் தவத்து இறையோரும் 

நன்று நீர் அருள் செய்ததே செய்வன் 

  என்று அருள் செய்து நயப்பு உற்ற 

அன்றை நாள் முதல் உடன் செல்லும் 

  நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார் 

சென்று முன்னுறத் திருவம்பர் 

  அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.  528 

 

 

சண்பை மன்னரும் தம்பிரான் அருள் 

  வழி நிற்பது தலைச் செல்வார் 

பண்பு மேம் படு பனிக்கதிர் 

  நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி  

வண் பெரும் புகலூரினைக் கடந்து 

  போய் வரும் பரிசனத்தோடும் 

திண் பெரும் தவர் அணைந்தது எங்கு 

  என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்.  529 

 

 

அம்பர்மா நகர் அணைந்து 

  மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற 

செம் பொன் மாமதிற் கோயிலை வலம் 

  கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி 

வம்புலா மலர் தூவி முன் பரவிய 

  வண் தமிழ் இசை மாலை 

உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் 

  பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்.  530 

 

 

தாழ்ந்து நாவினுக்கரசுடன் தம்பிரான் 

  கோயில் முன்புறம் எய்திச் 

சூழ்ந்த தொண்டரோடு அப்பதி 

  அமர்பவர் சுரநதி முடிமீது 

வீழ்ந்த வேணியர் தமைப் பெறும் 

  காலங்கள் விருப்பினால் கும்பிட்டு

வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ 

  வந்தருளிய மறை வேந்தர்.  531 

 

 

பொருவு இலாத சொல் புல்கு பொன் 

  நிற முதற் பதிகங்களால் போற்றித் 

திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் 

  அந்நகர்ச் செய்த கோயிலைச் சேர்ந்து 

மருவு வாய்மை வண் தமிழ் 

  மலர் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப் 

பெருகு காதலில் பணிந்து முன் 

  பரவினார் பேணிய உணர்வோடும்.  532 

 

 

இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து 

  இறைஞ்சி அங்கு அமர் நாளில் 

கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக் 

  காதல் செய்து அருளிப்போய்

மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே 

  வாக்கின் மன்னவ ரோடும் 

அந்நெடும்பதி அணைவுறக் கலையரோடு 

  அடியவர் எதிர்கொண்டார்.  533 

 

 

மற்ற வண் பதி அணைந்து 

  வீரட்டத்து மழவிடையார் கோயில் 

சுற்று மாளிகை வலம் கொண்டு 

  காலனை உதைத்து உருட்டிய செய்ய 

பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் 

  போற்றி உய்ந்து எதிர் நின்று 

பற்று அறுப்பவர் சடை உடையான் 

  எனும் பதிக இன்னிசை பாடி.  534 

 

 

பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து 

  பார் பரவு சீர் அரசோடு 

விரவு நண்பு உடை குங்கிலியப் 

  பெருங் கலயர் தம் மனை மேவிக் 

கரையில் காதல் மற்று அவர் 

  அமைத்தருளிய விருந்து இனிதமர்ந்து அங்குச் 

சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து 

  இருந்தனர் சிறப்பு எய்தி.  535 

 

 

சிறப்பு உடைத் திருப்பதி அதனிடைச் 

  சில நாள் அமர்ந்து அருளோடும் 

விறல் பெரும் கரி உரித்தவர் 

  கோயில்கள் விருப்போடும் தொழச் செல்வார் 

மறைப் பெரும் திருக் கலயரும் 

  உடன்பட வணங்கிய மகிழ்வோடும் 

அறப் பெரும் பயன் அனைய 

  அத் தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர்.  536 

 

 

தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் 

  தான் தோன்றி மாடத்துச் 

செக்கர் வார் சடை அண்ணலைப் 

  பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடி 

மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது 

  போய் மீயச்சூர் பணிந்து ஏத்திப் 

பக்கம் பாரிடம் பரவ நின்று 

  ஆடுவார் பாம்புர நகர் சேர்ந்தார்.  537 

 

 

பாம்புரத் துறை பரமரைப் பணிந்து 

  நற் பதிக இன்னிசை பாடி 

வாம்புனல் சடை முடியினார் மகிழ்விடம் 

  மற்றும் உள்ளன போற்றிக் 

காம்பினில் திகழ் கரும்பொடு 

  செந்நெலின் கழனியம்பணை நீங்கித் 

தேம் பொழில் திரு வீழி நன் 

  மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.  538 

 

 

அப்பொழுதின் ஆண்ட அரசை 

  எதிர் கொண்ட 

மெய்ப் பெருமை அந்தணர்கள் 

  வெங்குரு வாழ் வேந்தனார் 

பிற்பட வந்து எய்தும் பெரும் 

  பேறு கேட்டு உவப்பார் 

எப் பரிசினால் வந்து அணைந்து 

  அங்கு எதிர் கொண்டார்.  539 

 

 

நிறை குடம் தூபம் தீபம் 

  நீட நிரைத்து ஏந்தி 

நறை மலர்ப் பொற் சுண்ணம் 

  நறும் பொரியும் தூவி 

மறை ஒலி போய் வான் 

  அளப்ப மா முரசம் ஆர்ப்ப 

இறைவர் திரு மைந்தர் தமை 

  எதிர் கொள் வரவேற்றார்.  540 

 

 

வந்து திரு வீழி மிழலை மறை வல்ல 

அந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும் 

  மணி முத்தின் 

சந்த மணிச் சிவிகை நின்று 

  இழிந்து தாழ்ந்து அருளி 

உய்ந்த மறையோருடன் அணைந்து 

  அங்கு உள் புகுவார்.  541 

 

 

அப்போது அரையார் விரிகோவண ஆடை 

ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி 

மெய்ப் போதப் போது அமர்ந்தார் 

  தம் கோயில் மேவினார் 

கைப் போது சென்னியின் 

  மேல் கொண்டு கவுணியனார்.  542 

 

 

நாவின் தனி மன்னர் 

  தாமும் உடன் நண்ண 

மேவிய விண் இழிந்த 

  கோயில் வலம் கொள்வார் 

பூவியலும் உந்தியான் போற்றப் 

  புவிக் கிழிந்த 

தேவியலும் மெய் கண்டு 

  சிந்தை வியப்பு எய்தினார்.  543 

 

 

வலம் கொண்டு புக்கு எதிரே 

  வந்து வர நதியின் 

சலம் கொண்ட வேணித் 

  தனி முதலைத் தாழ்ந்து 

நிலம் கொண்ட மேனியராய் 

  நீடு பெரும் காதல் 

புலம் கொண்ட சிந்தையினால் 

  பொங்கி இசை மீப்பொழிந்தார்.  544 

 

 

போற்றிச் சடையார் புனல் 

  உடையான் என்று எடுத்து 

சாற்றிப் பதிகத் தமிழ் 

  மாலைச் சந்த இசை 

ஆற்ற மிகப் பாடி 

  ஆனந்த வெள்ளத்தில் 

நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று 

  அலைந்து நீடினார்.  545 

 

 

நீடிய பேரன்பு உருகி 

  உள்ளலைப்ப நேர் நின்று 

பாடி எதிர் ஆடிப் 

  பரவிப் பணிந்து எழுந்தே 

ஆடிய சேவடிகள் ஆர்வம் 

  உற உட்கொண்டு 

மாடுயர் கோயில் புறத்து 

  அரிது வந்து அணைந்தார்.  546 

 

 

வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து 

  ஓர் மா மடத்துச் 

செந் தமிழ்ச் சொல் 

  வேந்தரும் செய்தவரும் சேர்ந்தருளச் 

சந்த மணிக் கோபுரத்துச் 

  சார்ந்த வடபால் சண்பை 

அந்தணர் சூளா மணியார் அங்கு 

  ஓர் மடத்து அமர்ந்தார்.  547 

 

 

அங்கண் அமர்வார் அரனார் 

  அடி இணைக் கீழ்த் 

தங்கிய காதலினால் 

  காலங்கள் தப்பாமே 

பொங்கு புகழ் வாகீசரும் 

  கூடப் போற்றி இசைத்தே 

எங்கும் இடர் தீர்ப்பார் 

  இன்புற்று அமர்கின்றார்.  548 

 

 

ஓங்கு புனல் பேணு 

  பெருந்துறையும் உள்ளிட்ட 

பாங்கர் திலதைப் 

  பதிமுற்றமும் பணிந்து 

வீங்கு ஒலி நீர் வீழி மிழலையினில் 

  மீண்டும் அணைந்து 

ஆங்கு இனிது கும்பிட்டு 

  அமர்ந்து ஒழுகும் அந்நாளில்.  549 

 

 

சேண் உயர் மாடப் புகலி உள்ளார் 

  திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக் 

காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம் 

  மிகு காதல் கரை இகப்பப்

பூணும் மனத்தொடு தோணி மேவும் 

  பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி 

வேணு புரத்தை அகன்று போந்து 

  வீழி மிழலையில் வந்து அணைந்தார்.  550 

 

 

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து 

  ஓங்கிய காழி உயர் பதியில் 

வாழி மறையவர் தாங்கள் எல்லாம் 

  வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன 

வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு 

  மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா 

ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி 

  எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார்.  551 

 

 

சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் 

  தம் பிரானாரைப் பணிந்து போந்து 

நண்பில் பெருகிய காதல் கூர்ந்து 

  ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப் 

பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் 

  பாதம் பணிந்து பூண்டே 

எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு 

  எழுந்தருளப் பெற வேண்டும் என்றார்.  552 

 

 

என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் 

  ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும் 

நன்று இது சாலவும் தோணி மேவும் 

  நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச 

இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் 

  அருள் பெற்றுப் போவது என்றே 

அன்று புகலி அருமறையோர்க்கு அருள் 

  செய்து அவர்க்கு முகம் அளித்தார்.  553 

 

 

மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் 

  வேதியர்க்கு ஆய விருந்து அளிப்பப்  

பாற் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் 

  பொருள் ஆனார் தமைப் பரவும் 

சீர்ப் பட்ட எல்லை இனிது செல்லத் 

  திருத் தோணி மேவிய செல்வர் தாமே 

கார்ப் பட்ட வண்கைக் கவுணியர்க்குக் 

  கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார்.  554 

 

 

தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் 

  தூமறை வீழி மிழலை தன்னுள் 

சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச் 

  சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம் 

பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து 

  அருள் செய்யப் பெரும் தவங்கள் 

வேணு புரத்தவர் செய்ய வந்தார் 

  விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.  555 

 

 

அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே 

  அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி 

வெறிவுற்ற கொன்றையினார் மகிழ்ந்த 

  விண்ணிழி கோயிலில் சென்று புக்கு 

மறி உற்ற கையரைத் தோணி மேல் 

  முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து 

குறியில் பெருகும் திருப்பதிகம் 

  குலவிய கொள்கையில் பாடுகின்றார்.  556 

 

 

மைம் மரு பூங்குழல் என்று எடுத்து 

  மாறில் பெரும் திருத்தோணி தன் மேல் 

கொம்மை முலையினாள் கூட நீடு 

  கோலம் குலாவு மிழலை தன்னில்  

செம்மை தரு விண்ணிழிந்த கோயில் 

  திகழ்ந்தபடி இது என் கொல் என்று 

மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் 

  பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்.  557 

 

 

செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித் 

  திருக் கடைக் காப்புச் சாத்தி 

அஞ்சலி கூப்பி விழுந்தெழுவார் ஆனந்த 

  வெள்ளம் அலைப்பப் போந்து 

மஞ்சிவர் சோலைப் புகலி மேவும் 

  மா மறையோர் தமை நோக்கி வாய்மை 

நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த 

  நீர்மைத் திறத்தை அருள் செய்கின்றார்.  558 

 

 

பிரம புரத்தில் அமர்ந்த முக்கட் 

  பெரிய பிரான் பெருமாட்டி யோடும் 

விரவிய தானங்கள் எங்கும் சென்று 

  விரும்பிய கோலம் பணிந்து போற்றி 

வருவது மேற் கொண்ட காதல் கண்டு அங்கு 

  அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று 

தெரிய உரைத் தருள் செய்து நீங்கள் 

  சிரபுர மாநகர் செல்லும் என்றார்.  559 

 

 

என்று கவுணியப் பிள்ளையார் தாம் 

  இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே 

ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் 

  ஒழிய ஒருவாறு அகன்று போந்து 

மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த 

  தானம் பலவும் வணங்கிச் சென்று 

நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் 

  பணியும் நியதியராய் உறைந்தார்.  560 

 

 

சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் 

  திருவீழி மேவிய செல்வர் பாதம் 

பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் 

  வழாத் திருத் தொண்டர் சூழ 

உரவுத் தமிழ்த் தொடை மாலை 

  சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் 

விரவிப் பெருகிய நண்பு கூர மேவி 

  இனிது அங்கு உறையும் நாளில்.  561 

 

 

மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி 

  மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி 

விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்றா 

  மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு 

பண் அமரும் மொழி உமையாள் முலையின் 

  ஞானப் பாலறா வாயருடன் அரசும் பார் மேல் 

கண் நுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை 

  வருமோ என்று கருத்தில் கொண்டார்.  562 

 

 

வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய் 

  இரு சுடராய் நீரும் ஆகி 

ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள் 

  அனைத்துமாய் உலகுக்கு அப்பால் 

ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி 

  பரவி அன்று இரவு துயிலும் போது 

கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் 

  காதலித்தார் கனவில் அணைந்து அருளிச் செய்வார்.  563 

 

 

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி 

  நோய் உமை அடையாது எனினும் உம்பால் 

நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் 

  நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் 

இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் 

  யாமளித்தோம் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால் 

அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே 

  அருள் புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.  564 

 

 

தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச் 

  சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து 

நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே 

  நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி 

வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக் 

  கோயில் வலம் செய்யப் புகுந்த வேலை  

அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம் 

  அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார்.  565 

 

 

காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று 

  கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க 

நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் 

  நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று 

தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் 

  திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன 

ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் 

  இருதிறத்துப் பெரும் தவரும் இருந்த நாளில்.  566 

 

 

நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் 

  நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு 

சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் 

  திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித் 

தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் 

  திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு 

மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் 

  விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார்.  567 

 

 

திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத் 

  திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் 

ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை 

  உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு 

கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால் 

  காசு தனை வாசி பட வேண்டும் என்பார் 

பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு 

  பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார்.  568 

 

 

திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் 

  சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த 

ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று 

  ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் 

பெரு வாய்மைத் திருநாவுக்கரசர் தொண்டால் 

  பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை 

வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன் 

  என்று எண்ணியது மனத்துள் கொண்டார்.  569 

 

 

மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி 

  தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப் 

பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து 

  போய் ஆவண வீதியினில் காட்ட 

நல் தவத்தீர் இக் காசு சால நன்று 

  வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க 

அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் 

  அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்.  570 

 

 

அருவிலையில் பெரும் காசும் அவையே 

  ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவிறந்துபொங்கி 

வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து 

  உண்ண இன் அடிசில் மாளாது ஆகத் 

திருமுடி மேல் திங்களொடு கங்கை சூடும் 

  சிவ பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க 

பெருமை தரு சண்பை நகர் வேந்தர் 

  நாவுக்கரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.  571 

 

 

அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி 

  அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே 

புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்தப் 

  புரிசடையார் கழல் பலநாள் போற்றி வைகித்  

தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத் 

  தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது 

சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார் 

  தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்.  572 

 

 

நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் 

  நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப் 

பாடொலி நீர்த் தலையாலங்காடு மாடு 

  பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி 

நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் 

  நண்ணி நம்பர் திருக்கரவீரம் நயந்து பாடித் 

தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் 

  திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்.  573 

 

 

நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து 

  நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப் 

பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து 

  போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி 

உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் 

  ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி 

செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் 

  திருமலி வெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார்.  574 

 

 

மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் 

  அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் 

பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும் 

  திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் 

கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட கனக 

  மதில் திருக்களரும் கருதார் வேள்வி 

செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக்

  காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.  575 

 

 

காரமண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் 

  கடற்காழிக்  கவுணியர் தம் தலைவர் தாமும் 

சேர எழுந்தருளிய அப் பேறு கேட்டுத் 

  திருமறைக்காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி 

ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள 

  உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் 

வார் முரச மங்கள நாதங்கள் மல்க 

  எதிர் கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.  576 

 

 

முன் அணைந்த திருநாவுக்கரசர் தம்மை முறைமையால் 

  எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப் 

பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் 

  தம் பெருகிய பொற்காளத்தின் ஓசை கேட்டுச் 

சென்னி மிசைக் கரம் குவித்து முன்பு சென்று 

  சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை 

மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று 

  வந்திழிந்து வணங்கி உடன் மகிழ்ந்து போந்தார்.  577 

 

 

சொல்லரசர் உடன் கூடப் பிள்ளையாரும் தூமணி 

  நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர் 

மல்கு திரு மறுகின்கண் புகுந்த போது 

  மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் 

எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை 

  இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி 

ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி 

  விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே.  578 

 

 

அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி 

  மறுகினூடு எய்தி அருகு சூழ்ந்த 

கொடி நுடங்கு செழுந்திரு மாளிகையின் முன்னர்க் 

  கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு 

முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ 

  முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள் 

படியின் மறை அருச்சித்துக் காப்புச் செய்த பைம் 

  பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார்.  579 

 

 

அரு மறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக்கதவம் 

  திறந்திட அம் மறைகள் ஓதும் 

பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப் 

  பெறாமையினால் அன்று முதலாகப் பின்னை 

ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் 

  தன்மை உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத் 

திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி 

  நின்று திருநாவுக்கரசருக்குச் செப்புகின்றார்.  580 

 

 

அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை 

  அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே 

எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே 

  இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு 

மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன 

  விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை 

இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது 

  செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட.  581 

 

 

பாடிய அப் பதிகப் பாட்டான பத்தும் பாடல் 

  நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில் 

சேடு உயர் பொற்கதவு திருக் காப்பு 

  நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து 

நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி 

  நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட 

ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் 

  ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க.  582 

 

 

மற்றது கண்ட போதே 

  வாக்கின் மன்னவரை நோக்கிப் 

பொற்புறு புகலி மன்னர் 

  போற்றிட அவரும் போற்றி 

அற்புத நிலையினார்கள் அணி 

  திரு மறைக்காடு ஆளும் 

கொற்றவர் கோயில் வாயில் 

  நேர்வழி குறுகிப் புக்கார்.  583 

 

 

கோயில் உட்புகுவார் உச்சி 

  குவித்த செங்கைகளோடும் 

தாயிலும் இனிய தங்கள் 

  தம்பிரானாரைக் கண்டார் 

பாயும் நீர் அருவி கண்கள் 

  தூங்கிடப் படியின் மீது 

மேயின மெய்யர் ஆகி 

  விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.  584 

 

 

அன்பினுக்கு அளவு காணார் 

  ஆனந்த வெள்ளம் மூழ்கி 

என்பு நெக்கு உருக நோக்கி 

  இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் 

முன்பு நிற்பதுவும் ஆற்றார் 

  மொழி தடுமாற ஏத்தி 

மின்புரை சடையார் தம்மைப் 

  பதிகங்கள் விளம்பிப் போந்தார்.  585 

 

 

புறம்பு வந்து அணைந்த போது 

  புகலி காவலரை நோக்கி 

நிறம் கிளர் மணிக் கபாடம் 

  நீக்கமும் அடைப்பும் நிற்கத் 

திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் 

  நீர் என்றார் தீய 

மறம் புரி அமணர் செய்த 

  வஞ்சனை கடக்க வல்லார்.  586 

 

 

அன்று அரசு அருளிச் 

  செய்ய அருமறைப் பிள்ளையாரும் 

வென்றி வெள் விடையார் தம்மை 

  விருப்பினால் சதுரம் என்னும் 

இன் தமிழ்ப் பதிகப் பாடல் 

  இசைத்திட இரண்டு பாலும் 

நின்ற அக் கதவு 

  காப்பு நிரம்பிட அடைத்ததன்றே.  587 

 

 

அடைத்திடக் கண்டு சண்பை 

  ஆண்டகையாரும் அஞ்சொல் 

தொடைத் தமிழாளி யாரும் தொழுது 

  எழத் தொண்டர் ஆர்த்தார் 

புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் 

  பூமழை புகலி வேந்தர் 

நடைத் தமிழ்ப் பதிக மாலை 

  நிரம்பிட நவின்று போற்றி.  588 

 

 

அத்திரு வாயில் தன்னில் அற்றை 

  நாள் தொடங்கி நேரே 

மெய்த்திரு மறைகள் போல 

  மேதினி புக்குப் போற்ற 

வைத்து எதிர் வழக்கம் செய்த 

  வரம்பு இலாப் பெருமையோரை 

கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது 

  கடல் சூழ் வையம்.  589 

 

 

அருமறை ஆன எல்லாம் அகல் 

  இரு விசும்பில் ஆர்த்துப் 

பெருமையின் முழங்கப் பஞ்ச 

  நாதமும் பிறங்கி ஓங்க 

இரு பெரும் தகையோர் தாமும் 

  எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து 

திரு மடங்களின் முன் புக்கார் 

  செழும்பதி விழவு கொள்ள.  590 

 

 

வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து 

  செய் பணியை மிக்க 

ஏதங்கள் நம்பால் நீப்பார் 

  இருவரும் செய்து வைத்தார் 

நாதம் கொள் வடிவாய் நின்ற 

  நதி பொதி சடையார் செய்ய 

பாதங்கள் போற்றும் மேலோர் 

  பெருமையார் பகரும் நீரார்.  591 

 

 

திருமறை நம்பர் தாம் முன்பு 

  அருள் செய்த அதனைச் செப்பும் 

ஒருமையில் நின்ற தொண்டர் 

  தம்பிரானார் பால் ஒக்க 

வரும் அருள் செய்கை தாமே 

  வகுத்திட வல்லோர் என்றால் 

பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு 

  இடையீடு பெரிதாம் அன்றே.  592 

 

 

இவ்வகை திருமறைக் காட்டு 

  இறையவர் அருளை உன்னி 

மெய் வகை தெரிந்த வாக்கின் 

  வேந்தர் தாம் துயிலும் போதில் 

மை வளர் கண்டர் சைவ 

  வேடத்தால் வந்து வாய்மூர் 

அவ்விடை இருத்தும் அங்கே வா 

  என்று அங்கு அருளிப் போக.  593 

 

 

கண்ட அப்போதே கைகள் குவித்து 

  உடன் கடிது செல்வார் 

மண்டிய காதலோடு மருவுவார் 

  போன்றும் காணார் 

எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் 

  போல எய்தா 

அண்டர் தம்பிரானார் தம் பின் 

  போயினார் ஆர்வத் தோடும்.  594 

 

 

அங்கு அவர் ஏகச் 

  சண்பை ஆண்டகையாரும் அப்பர் 

எங்கு உற்றது என்று 

  கேட்ப எய்தினார் திருவாய்மூரில் 

பொங்கிய காதலால் என்று 

  உரைத்திடப் போன தன்மை 

சங்கை உற்று என்கொல் என்று 

  தாமும் அங்கு அணையப் போந்தார்.  595 

 

 

அந்நிலை அணைந்த போதில் 

  அம்பிகை உடனே கூட 

மன்னிய ஆடல் காட்டத் தளர் 

  இளவள ரும் பாடிச் 

சென்னியால் வணங்கி வாய்மூர் 

  அரசொடும் சென்று புக்கு அங்கு 

இன் இயல்பு உற முன் 

  கூடி இருவரும் போற்றி செய்தார்.  596 

 

 

நீடு சீர்த் திருவாய் மூரில் 

  நிலவிய சிவனார் தம்மைப் 

பாடு சொற் பதிகம் தன்னால் 

  பரவி அப் பதியில் வைகிக் 

கூடு மெய் அன்பு பொங்க 

  இருவரும் கூடி மீண்டு 

தேடு மா மறைகள் கண்டார் 

  திரு மறைக்காடு சேர்ந்தார்.  597 

 

 

சண்பை நாடு உடைய பிள்ளை 

  தமிழ் மொழித் தலைவரோடு 

மண் பயில் சீர்த்திச் செல்வ 

  மா மறைக் காட்டு வைகிக் 

கண் பயில் நெற்றியார் தம் 

  கழல் இணை பணிந்து போற்றிப் 

பண் பயில் பதிகம் பாடிப் 

  பரவி அங்கு இருந்தார் அன்றே.  598 

 

 

இவ் வகை இவர்கள் அங்கண் 

  இருந்தனர் ஆக இப்பால் 

செய் வகை இடையே தப்பும் 

  தென்னவன் பாண்டி நாட்டு 

மெய் வகை நெறியில் நில்லா 

  வினை அமண் சமயம் மிக்குக் 

கை வகை முறைமைத் தன்மை 

  கழிய முன் கலங்கும் காலை.  599 

 

 

தென்னவன் தானும் முன் 

  செய் தீவினைப் பயத்தினாலே 

அந் நெறிச் சார்வு தன்னை 

  அறம் என நினைந்து நிற்ப 

மன்னிய சைவ வாய்மை 

  வைதிக வழக்கம் ஆகும் 

நன் நெறி திரிந்து மாறி 

  நவை நெறி நடந்தது அன்றே.  600 

 

பூழியர் தமிழ் நாட்டு உள்ள 

  பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம் 

பாழியும் அருகர் மேவும் 

  பள்ளிகள் பலவும் ஆகிச்

சூழ் இருள் குழுக்கள் போலத் 

  தொடை மயில் பீலி யோடு 

மூழி நீர் கையில் பற்றி 

  அமணரே ஆகி மொய்ப்ப.  601 

 

 

பறிமயிர்த் தலையும் பாயும் 

  பீலியும் தடுக்கு மேனிச் 

செறியுமுக் குடையும் ஆகித் 

  திரிபவர் எங்கும் ஆகி 

அறியும் அச் சமய நூலின் 

  அளவினில் அடங்கிச் சைவ 

நெறியினில் சித்தம் செல்லா 

  நிலைமையில் நிகழும் காலை.  602 

 

 

வரிச் சிலைத் தென்னவன் தான் 

  உய்வதற்கு வளவர் கோமான் 

திரு உயிர்த்து அருளும் 

  செல்வப் பாண்டிமா தேவியாரும் 

குரை கழல் அமைச்சனாராங் 

  குலச் சிறையாரும் என்னும் 

இருவர் தம் பாங்கும் அன்றிச் 

  சைவம் அங்கு எய்தாதாக.  603 

 

 

ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் 

  பெறல் தமிழ் நாடு உற்ற 

தீங்கினுக்கு அளவு தேற்றாச் 

  சிந்தையில் பரிவு கொண்டே 

ஓங்கிய சைவ வாய்மை 

  ஒழுக்கத்தில் நின்ற தன்மை 

பூங்கழல் செழியன் முன்பு புலப்படா 

  வகை கொண்டு உய்த்தார்.  604 

 

 

இந் நெறி ஒழுகு கின்றார் 

  ஏழ் உலகு உய்ய வந்த 

மன்னிய புகலி வேந்தர் 

  வைதிக வாய்மைச் சைவச் 

செந்நெறி விளக்கு கின்றார் 

  திரு மறைக்காடு சேர்ந்த 

நல்நிலை கன்னி நாட்டு 

  நல்வினைப் பயத்தால் கேட்டார்.  605 

 

 

கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து 

  எழு மகிழ்ச்சி பொங்க 

நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை 

  நகை முகத்தர் ஆகி 

வாள் படை அமைச்சனாரும் 

  மங்கையர்க்கரசியாரும் 

சேட் படு புலத்தாரேனும் சென்று 

  அடி பணிந்தார் ஒத்தார்.  606 

 

 

காதலால் மிக்கோர் தாங்கள் 

  கை தொழும் கருத்தினாலே 

போது அவிழ் சோலை வேலிப் 

  புகலி காவலனார் செய்ய 

பாதங்கள் பணிமின் என்று 

  பரிசன மாக்கள் தன்மை 

மா தவம் சுருதி செய்த 

  மா மறைக் காட்டில் விட்டார்.  607 

 

 

ஆங்கவர் விட முன் 

  போந்த அறிவுடைமாந்தர் அங்கண் 

நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை 

  பிற்பட நெறியின் ஏகி 

ஞாங்கர் நீர் நாடும் காடும் 

  நதிகளும் கடந்து வந்து 

தேன் கமழ் கைதை நெய்தல் 

  திருமறைக் காடு சேர்ந்தார்.  608 

 

 

திருமறைக்காடு நண்ணிச் சிரபுர 

  நகரில் வந்த 

அருமறைப் பிள்ளையார் தாம்  

  அமர்ந்து இனிதருளும் செல்வப்  

பெருமடத்து அணைய வந்து 

  பெருகிய விருப்பில் தாங்கள் 

வரு முறைத் தன்மை எல்லாம் 

  வாயில் காவலர்க்குச் சொன்னார்.  609 

 

 

மற்றவர் சென்று புக்கு வளவர் 

  கோன் மகளார் தென்னர் 

கொற்றவன் தேவி யாரும் 

  குலச்சிறையாரும் ஏவப் 

பொற்கழல் பணிய வந்தோம் எனச் 

  சிலர் புறத்து வந்து 

சொற்றனர் என்று போற்றித் 

  தொழுது விண்ணப்பம் செய்தார்.  610 

 

 

புகலி காவலர் தாம் கேட்டுப் 

  பொருவிலா அருள் முன் கூர

அகம் மலர்ந்து அவர்கள் தம்மை 

  அழையும் என்று அருளிச் செய்ய 

நகை முகச் செவ்வி நோக்கி 

  நல்தவ மாந்தர் கூவத் 

தகவுடை மாந்தர் புக்குத் 

  தலையினால் வணங்கி நின்றார்.  611 

 

 

நின்றவர் தம்மை நோக்கி நிகரில் 

  சீர்ச் சண்பை மன்னர் 

மன்றல் அங்குழலியாராம் மானியார் 

  தமக்கும் மானக் 

குன்று என நின்ற மெய்ம்மை 

  குலச் சிறையார் தமக்கும் 

நன்று தான் வினவக் கூறி 

  நல் பதம் போற்றுவார்கள்.  612 

 

 

கன்னி நாடு அமணர் தம்பால் 

  கட்டு அழிந்து இழிந்து தங்கள் 

மன்னனும் அவர்கள் மாயத்து 

  அழுந்த மா தேவியாரும் 

கொன்னவில் அயில் வேல் 

  வென்றிக் குலச்சிறையாரும் கூடி 

இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் 

  என்று இறைஞ்சி விட்டார்.  613 

 

 

என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் 

  ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம் 

நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் 

  நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை

வென்றருளி வேதநூல் நெறியே ஆக்கி 

  வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு 

நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து 

  அருள வேண்டும் என நின்று போற்ற.  614 

 

 

மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும் 

  வாகீச முனிவருடன் கூடச் சென்று 

பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து 

  பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு 

உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை 

  அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை 

சொற்றனி மன்னவருக்குப் புகலி மன்னர் 

  சொல்லி எழுந்தருளுதற்குத் துணிந்தபோது.  615 

 

 

அரசு அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த 

  அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை 

உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய 

  எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன 

பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் 

  பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய 

விரை செய் மலர்த்தாள் போற்றிப் புகலி 

  வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே.  616 

 

 

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த 

  திருப்பதிகம் கேட்டதற்பின் திருந்து நாவுக்கு 

அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் 

  அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது 

புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் 

  புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று 

கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் 

  காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்.  617 

 

 

வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் 

  வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்

பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் 

  பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து 

மாதவத்து வாகீசர் மறாத வண்ணம் வணங்கி 

  அருள் செய்து விடை கொடுத்து மன்னும் 

காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக் 

  கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்.  618 

 

 

திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால் 

  திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின் 

பெருநாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம் 

  உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து 

ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று 

  ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் 

வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன 

  மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே.  619 

 

 

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று 

  எடுப்பார் நால் திசையும் 

மங்கல தூரியம் தழங்க மறை 

  முழங்க மழை முழங்கும் 

சங்க படகம் பேரி 

  தாரை காளம் தாளம் 

எங்கும் எழுந்து எதிர் இயம்ப 

  இரு விசும்பு கொடி தூர்ப்ப.  620 

 

 

மலர் மாரி பொழிந்து இழிய 

  மங்கல வாழ்த்து இனிது இசைப்ப 

அலர் வாசப் புனல் குடங்கள் 

  அணி விளக்குத் தூபமுடன் 

நிலை நீடு தோரணங்கள் நிரைத்து 

  அடியார் எதிர் கொள்ளக் 

கலை மாலை மதிச் சடையார் 

  இடம் பலவும் கை தொழுவார்.  621 

 

 

தெண் திரை சூழ் கடல் 

  கானல் திரு அகத்தியான் பள்ளி 

அண்டர் பிரான் கழல் வணங்கி 

  அருந்தமிழ் மா மறை பாடிக் 

கொண்டல் பயில் மணல் கோடு 

  சூழ் கோடிக் குழகர் தமைத் 

தொண்டருடன் தொழுது அணைந்தார் 

  தோணிபுரத் தோன்றலார்.  622 

 

 

கண் ஆர்ந்த திரு நுதலார் 

  மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி

எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் 

  ஏத்தி எழுந்தருளி 

மண் ஆர்ந்த பதி பிறவும் 

  மகிழ் தரும் அன்பால் வணங்கிப் 

பண் ஆர்ந்த தமிழ் பாடிப் 

  பரவியே செல்கின்றார்.  623 

 

 

திரு உசாத் தானத்துத் 

  தேவர் பிரான் கழல் பணிந்து 

மருவிய செந்தமிழ்ப் பதிகமால் 

  போற்றும் படி பாடி 

இரு வினையும் பற்று 

  அறுப்பார் எண்ணிறந்த தொண்டருடன் 

பெருகு விருப்பினர் ஆகிப் 

  பிற பதியும் பணிந்தணைவார்.  624 

 

 

கருங்கழி வேலைப் பாலைக் 

  கழிநெய்தல் கடந்தருளித் 

திருந்திய சீர்ப் புனல் நாட்டுத் 

  தென் மேற்பால் திசை நோக்கி 

மருங்கு மிடை தடஞ் சாலி 

  மாடு செறி குலத்தெங்கு 

நெருங்கி வளர் கமுகு உடுத்த 

  நிறை மருத வழிச் சென்றார்.  625 

 

 

சங்கங்கள் வயல் எங்கும் சாலி 

  கழைக் கரும்பு எங்கும் 

கொங்கு எங்கும் நிறை கமலக் 

  குளிர் வாசத் தடம் எங்கும் 

அங்கங்கே உழவர் குழாம் 

  ஆர்க்கின்ற ஒலி எங்கும் 

எங்கெங்கும் மலர்ப் படுகர் 

  இவை கழிய எழுந்தருளி.  626 

 

 

தடம் எங்கும் புனல் குடையும் 

  தையலார் தொய்யில் நிறம் 

இடம் எங்கும் அந்தணர்கள் 

  ஓதுகிடையாக நிலை 

மடம் எங்கும் தொண்டர் குழாம் 

  மனை எங்கும் புனைவதுவை 

நடம் எங்கும் ஒலி ஓவா 

  நற்பதிகள் அவை கடந்து.  627 

 

 

நீர் நாடு கடந்து அருளி 

  நெடும் புறவில் குறும்புதல்கள் 

கார் நாடு முகை முல்லைக் 

  கடிநாறு நிலம் கடந்து 

போர் நாடுஞ் சிலை மறவர் 

  புன் புலவைப் பிடை போக்கிச் 

சீர் நாடு தென் பாண்டி 

  நன்னாடு சென்று அணைவார்.  628 

 

 

மன்றல் மலர்ப் பிறங்கல் மருங்கு 

  எறிந்து வரும் நதிகள் பல 

சென்று அணைந்து கடந்து ஏறித் 

  திரி மருப்பின் கலை புணர்மான் 

கன்று தெறித்தன உகைக்கும் கான 

  அதர் கடந்து அணைந்தார் 

கொன்றை நறும் சடை முடியார் 

  மகிழ்ந்த திருக்கொடுங் குன்றம்.  629 

 

 

கொடுங் குன்றத்து இனிது அமர்ந்த 

  கொழும்பவளச் செழுங் குன்றை 

அடும் குன்றம் உரித்தாரை வணங்கி 

  அரும் தமிழ் பாடி 

நெடும் குன்றும் படர் காணும் 

  நிறை நாடும் கடந்து மதி 

தொடும் குன்ற மதில் மதுரைத் 

  தொன் நகர் வந்து அணைகின்றார்.  630 

 

 

இந்நிலை இவர் வந்து எய்த 

  எண் பெரும் குன்றம் மேவும் 

அந்நிலை அமணர் தங்கள் கழிவு 

  முன் சாற்றல் உற்றுப் 

பல்முறை வெருக் கொண்டு 

  உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும் 

துன் நிமித்தங்கள் அங்கு 

  நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்.  631 

 

 

பள்ளிகள் மேலும் மாடு பயில் 

  அமண் பாழி மேலும் 

ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு 

  செய் கவளம் கையில் 

கொள்ளு மண்டபங்கள் மேலும் 

  கூகையோடு ஆந்தை தீய 

புள் இனம் ஆன தம்மில் 

  பூசல் இட்டு அழிவு சாற்றும்.  632 

 

 

பீலியும் தடுக்கும் பாயும் 

  பிடித்தகை வழுவி வீழக் 

கால்களும் தடுமாறாடிக் கண்களும் 

  இடமே ஆடி 

மேல் வரும் அழிவுக்கு ஆக 

  வேறு காரணமும் காணார் 

மால் உழந்து அறிவு கெட்டு 

  மயங்கினர் அமணர் எல்லாம்.  633 

 

 

கந்தியர் தம்மில் தாமே கனன்று 

  எழு கலாங்கள் கொள்ள 

வந்தவாறு அமணர் தம்மில் மாறு 

  கொண்டு ஊறு செய்ய 

முந்தைய உரையில் கொண்ட 

  பொறை முதல் வைப்பும் விட்டுச் 

சிந்தையில் செற்ற முன்னாத் தீக் 

  குணம் தலை நின்றார்கள்.  634 

 

 

இப்படி அமணர் வைகும் எப் 

  பெயர்ப் பதியும் எய்தும் 

ஒப்பில் உற்பாதம் எல்லாம் 

  ஒருவரின் ஒருவர் கூறி 

மெய்ப்படு தீக்கனாவும் வேறு 

  வேறு ஆகக் கண்டு

செப்புவான் புறத்து உளோரும் 

  தென்னவன் மதுரை சேர்ந்தார்.  635 

 

 

அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு 

  நின்று அணைவார் கூடி 

மன்னவன் தனக்கும் கூறி 

  மருண்ட உள்ளத்தர் ஆகித் 

துன்னிய அழுக்கு மெய்யில் 

  தூசிலார் பலரும் ஈண்டி 

இன்னன கனவு கண்டோம் என 

  எடுத்து இயம்பல் உற்றார்.  636 

 

 

சீர் மலி அசோகு தன் கீழ் 

  இருந்த நம் தேவர் மேலே 

வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் 

  அதன் பின் ஆக 

ஏர் கொள் முக்குடையும் தாமும் 

  எழுந்து கை நாற்றிப் போக 

ஊர் உளோர் ஓடிக் காணக் 

  கண்டனம் என்று உரைப்பார்.  637 

 

 

குண்டிகை தகர்த்துப் பாயும் 

  பீறியோர் குரத்தி ஓடப் 

பண்டிதர் பாழி நின்றும் கழுதை 

  மேல் படர்வார் தம்பின் 

ஒண்தொடி இயக்கி யாரும் உளை 

  இட்டுப் புலம்பி ஓடக் 

கண்டனம் என்று சொன்னார் 

  கையறு கவலை உற்றார்.  638 

 

 

கானிடை நட்டம் ஆடும் கண் 

  நுதல் தொண்டர் எல்லாம் 

மீனவன் மதுரை தன்னில் 

  விரவிடக் கண்டோம் என்பார் 

கோன் அவன் தானும் வெய்ய 

  கொடும் தழல் முழுகக் கண்டோம் 

ஆனபின் எழவும் கண்டோம் 

  அதிசயம் இதுவாம் என்பார்.  639 

 

 

மழவிடை இளம் கன்று ஒன்று 

  வந்து நம் கழகம் தன்னை 

உழறிடச் சிதறி ஓடி 

  ஒருவரும் தடுக்க அஞ்சி 

விழ ஒரு புகலும் இன்றி 

  மேதினி தன்னை விட்டு 

நிழல் இலா மரங்கள் ஏறி 

  நின்றிடக் கண்டோம் என்பர்.  640 

 

 

ஆவது என் பாவிகாள் இக் 

  கனாத்திறம் அடிகள் மார்க்கு 

மேவிய தீங்கு தன்னை 

  விளைப்பது திடமே என்று 

நோவுறு மனத்தர் ஆகி நுகர் 

  பெரும் பதமும் கொள்ளார் 

யாவது செயல் என்று எண்ணி 

  இடர் உழன்று அழுங்கினார்கள்.  641 

 

 

அவ்வகை அவர்கள் எல்லாம் 

  அந்நிலைமையர்கள் ஆகச் 

சைவ நன் மரபில் வந்த தட 

  மயில் மட மென் சாயல் 

பை வளர் அரவேர் அல்குல் 

  பாண்டி மா தேவியார்க்கும் 

மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் 

  நன் நிமித்தம் மேன் மேல்.  642 

 

 

அளவு இலா மகிழ்ச்சி காட்டும் 

  அரும் பெரும் நிமித்தம் எய்த 

உள மகிழ் உணரும் காலை 

  உலகெலாம் உய்ய வந்த 

வளர் ஒளி ஞானம் உண்டார் 

  வந்து அணைந்தருளும் வார்த்தை 

கிளர்வுறும் ஓகை கூறி 

  வந்தவர் மொழியக் கேட்டார்.  643 

 

 

அம்மொழி விளம்பினோர்க்கு 

  வேண்டுவ அடைய நல்கி 

மெய்ம்மையில் விளங்கு காதல் 

  விருப்புறு வெள்ளம் ஓங்கத்  

தம்மையும் அறியா வண்ணம் 

  கை மிக்குத் தழைத்துப் பொங்கி 

விம்மிய மகிழ்ச்சி கூர 

  மேவிய சிறப்பின் மிக்கார்.  644 

 

 

மங்கையர்க் கரசியார் பால் வந்து 

  அடி வணங்கி நின்ற 

கொங்கலர் தெரியலாராம் குலச்சிறை 

  யாரை நோக்கி 

நங்கள் தம்பிரானாராய ஞான 

  போனகர் முன்பு எய்தி 

இங்கு எழுந்தருள உய்ந்தோம் என 

  எதிர் கொள்ளும் என்றார்.  645 

 

 

மன்றலங் குழலினாரை வணங்கிப் 

  போந்த அமைச்சனாரும் 

வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே 

  என விரைந்து 

பொன் திகழ் மாட வீதி 

  மதுரையின் புறத்துப் போகி 

இன் தமிழ் மறை தந்தாரை 

  எதிர்கொள எய்தும் காலை.  646 

 

 

அம்புய மலராள் போல்வார் 

  ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் 

கும்பிட வேண்டும் என்று 

  கொற்றவன் தனக்கும் கூறித்  

தம் பரிசனங்கள் சூழத் 

  தனித் தடையோடும் சென்று 

நம்பரை வணங்கித் தாமும் 

  நல் வரவேற்று நின்றார்.  647 

 

 

திரு நிலவு மணி முத்தின் 

  சிவிகையின் மேல் சேவித்து 

வரு நிலவு தரு மதி போல் 

  வளர் ஒளி வெண் குடை நிழற்றப் 

பெருகு ஒளிய திரு நீற்றுத் 

  தொண்டர் குழாம் பெருகிவர 

அருள் பெருக வரு(ம்) ஞானத்து 

  அமுது உண்டார் அணைகின்றார்.  648 

 

 

துந்துபிகள் முதலாய 

  தூரியங்கள் கிளராமே 

அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் 

  மா மறை எடுப்ப 

வந்து எழும் மங்கல நாத 

  மாதிரம் உட்பட முழங்கச் 

செந்தமிழ் மாருதம் எதிர் 

  கொண்டு எம்மருங்கும் சேவிப்ப.  649 

 

 

பண்ணிய வஞ்சனைத் தவத்தால் 

  பஞ்சவன் நாட்டிடைப் பரந்த 

எண்ணில் அமண் எனும் 

  பாவ இருஞ்சேனை இரிந்து ஓட 

மண் உலகமே அன்றி வான் 

  உலகம் செய்த பெரும் 

புண்ணியத்தின் படை எழுச்சி போல் 

  எய்தும் பொலிவு எய்த.  650 

 

 

துன்னும் முழு உடற்றுகளால் 

  சூழும் உணர்வின் இற்றுகளால் 

அன்னெறியில் செறிந்து அடைந்த 

  அமண் மாசு கழுவுதற்கு 

மன்னி ஒளிர் வெண்மையினால் 

  தூய்மையினால் வழுதியர் தம் 

கன்னி நாட்டிடைக் கங்கை அணைந்தது 

  எனும் கவின் காட்ட.  651 

 

 

பானல் வயல் தமிழ் நாடு 

  பழி நாடும்படி பரந்த 

மானம் இலா அமண் என்னும் 

  வல் இருள் போய் மாய்வதனுக்கு 

ஆன பெருகு ஒளிப்பரப்பால் அண்டம் 

  எலாம் கொண்டதொரு 

ஞான மணி விளக்கு எழுந்து 

  வருவது என நலம் படைப்ப.  652 

 

 

புரசை வயக் கடக்களிற்றுப் பூழியர் 

  வண் தமிழ் நாட்டுத் 

தரை செய் தவப் பயன் விளங்கச் 

  சைவ நெறி தழைத்து ஓங்க 

உரை செய்திருப்பேர் பலவும் ஊது 

  மணிச் சின்னம் எலாம் 

பரசமய கோளரி வந்தான் 

  என்று பணிமாற.  653 

 

 

இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் 

  எழுந்தருளும் பொழுது இசைக்கும் 

ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் காளம் 

  உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை 

செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம் 

  செவி நிறை அமுது எனத் தேக்க 

அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே 

  அளப்பு அரும் களிப்பினர் ஆனார்.  654 

 

 

அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் 

  அணைந்திடக் கடிது சென்று அணைவார் 

நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் 

  உடன் வரும் நல்தவக் கடலை 

நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் 

  கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து 

பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் 

  பாங்குற அணைந்து முன் பணிந்தார்.  655 

 

 

நிலமிசைப் பணிந்த குலச் சிறையாரை 

  நீடிய பெரும் தவத் தொண்டர் 

பலரும் முன் அணைந்து வணங்கி மற்று 

  அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு 

மலர் மிசைப் புத்தேள் வழிபடும் 

  புகலி வைதிக சேகரர் பாதம் 

குலவி இங்கு அணைந்தார் தென்னவன் 

  அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற.  656 

 

 

சிரபுரச் செல்வர் அவர் உரை 

  கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து 

விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று 

  இழிந்து விரைந்து சென்றவர் தமை அணைந்து 

கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை 

  தொழுது அவரும் முன் நிற்ப 

வரமிகு தவத்தால் அவரையே நோக்கி 

  வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்.  657 

 

 

செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் 

  திருந்திய சிந்தையீர் உமக்கும் 

நம் பெருமான் தன் திருவருள் பெருகும் 

  நன்மை தான் வாலிதே என்ன 

வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் 

  மண் மிசைத் தாழ்ந்து அடி வணங்கித் 

தம் பெரும் தவத்தின் பயன் 

  அனையார்க்குத் தன்மையாம் நிலை உரைக்கின்றார்.  658 

 

 

சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் 

  இனி எதிர் காலத்தின் சிறப்பும் 

இன்று எழுந்தருளப் பெற்ற பேறு 

  இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம் 

நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் 

  நற்றமிழ் வேந்தனும் உய்ந்து 

வென்றி கொள் திருநீற்று ஒளியினில் 

  விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்.  659 

 

 

இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டருளி 

  எய்துதற்கு அரிய பேறு எய்தி 

மங்கையர்க் கரசியாரும் நம்முடைய 

  வாழ்வு எழுந்தருளியது என்றே 

அங்கு நீர் எதிர்சென்று அடிபணிவீர் 

  என்றருள் செய்தார் எனத் தொழுதார்வம் 

பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து 

  போற்றினார் புரவலன் அமைச்சர்.  660 

 

 

ஆங்ஙனம் போற்றி அடி பணிந்தவர் 

  மேல் அளவுஇலா அருள்புரி கருணை 

தாங்கிய மொழியால் தகுவன விளம்பித் 

  தலை அளித்து அருளும் அப்பொழுதில் 

ஓங்கு எயில் புடைசூழ் மதுரை தோன்றுதலும் 

  உயர் தவத் தொண்டரை நோக்கி 

ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் 

  மற்று எம்மருங்கினது என வினவ.  661 

 

 

அன்பராய் அவர் முன் பணிந்த சீர் 

  அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி 

முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி 

  முருகு அலர் சோலைகள் சூழ்ந்து 

மின் பொலி விசும்பை அளக்கும் நீள் 

  கொடி சூழ் வியன் நெடும் கோபுரம் தோன்றும் 

என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து 

  அருளும் திருவாலவாய் இது என்றார்.  662 

 

 

தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு 

  துணைமலர்க் கரம் குவித்தருளி 

மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து 

  மங்கையர்க்கரசி என்று எடுத்தே 

எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது 

  இதுவே என்று இருவர் தம் பணியும் 

கொண்டமை சிறப்பித்தருளி நற் பதிகம் 

  பாடினார் குவலயம் போற்ற.  663 

 

 

பாடிய பதிகம் பரவியே 

  வந்து பண்புடை அடியவரோடும் 

தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த 

  திரு ஆலவாய் மருங்கு அணைந்து 

நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி 

  நிறை பெரு விருப்புடன் புக்கு 

மாடு சூழ் வலம் கொண்டு உடையவர் 

  கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.  664 

 

 

ஆளும் அங்கணர் ஆலவாய் 

  அமர்ந்து இனிது இருந்த 

காள கண்டரைக் கண்களின் 

  பயன் பெறக் கண்டு 

நீள வந்து எழும் அன்பினால் 

  பணிந்து எழ நிறையார் 

மீளவும் பல முறை நிலம் 

  உற விழுந்து எழுவார்.  665 

 

 

அங்கம் எட்டினும் ஐந்தினும் 

  அளவு இன்றி வணங்கிப் 

பொங்கு காதலின் மெய்ம் 

  மயிர் புளகமும் பொழியும் 

செங்கண் நீர் தரும் அருவியும் 

  திகழ் திரு மேனி 

எங்கும் ஆகி நின்று 

  ஏத்தினார் புகலியர் இறைவர்.  666 

 

 

நீல மா மிடற்று 

  ஆலவாயான் என நிலவும் 

மூலம் ஆகிய திரு இருக்குக் 

  குறள் மொழிந்து 

சீல மாதவத் திருத் 

  தொண்டர் தம்மொடும் திளைத்தார் 

சாலும் மேன்மையில் தலைச்சங்கப் 

  புலவனார் தம்முன்.  667 

 

 

சேர்த்தும் இன்னிசைப் பதிகமும் 

  திருக்கடைக் காப்புச் 

சாத்தி நல்லிசைத் தண் தமிழ்ச் 

  சொல் மலர் மாலை 

பேர்த்தும் இன்புறப் பாடி வெண் 

  பிறை அணி சென்னி 

மூர்த்தியார் கழல் பரவியே 

  திருமுன்றில் அணைய.  668 

 

 

பிள்ளையார் எழுந்தருளி முன் 

  புகுதும் அப்பொழுது 

வெள்ள நீர் பொதி வேணியார் 

  தமைத் தொழும் விருப்பால் 

உள் அணைந்திட எதிர் செலாது 

  ஒரு மருங்கு ஒதுங்கும் 

தெள்ளு நீர் விழித் தெரிவையார் 

  சென்று முன்பு எய்த.  669 

 

 

மருங்கின் மந்திரியார் பிள்ளையார் 

  கழல் வணங்கிக் 

கருங்குழல் கற்றை மேல் 

  குவி கைத்தளிர்  உடையார் 

பருங்கை யானை வாழ் வளவர் 

  கோன் பாவையார் என்னப் 

பெருங் களிப்புடன் விரைந்து 

  எதிர் பிள்ளையார் அணைந்தார்.  670 

 

 

தென்னவன் பெருந் தேவியார் 

  சிவக் கன்றின் செய்ய 

பொன்னடிக் கமலங்களில் பொருந்த 

  முன் விழுந்தார் 

மன்னு சண்பையர் வள்ளலார் 

  மகிழ் சிறந்து அளிக்கும்

இன்னருட் பெரும் சிறப் பொடும் 

  திருக்கையால் எடுத்தார்.  671 

 

 

ஞான போனகர் எதிர் தொழுது 

  எழுந்த நல்தவத்து 

மானியார் மனக் கருத்து 

  முற்றியது என மதித்தே 

பானலங் கண்கள் நீர் 

  மல்கப் பவளவாய் குழறி 

யானும் என் பதியும் செய்த 

  தவம் என் கொல் என்றார்.  672 

 

 

யாழின் மென் மொழியார் மொழிந்து 

  எதிர் கழல் வணங்கக் 

காழி வாழ வந்தருளிய 

  கவுணியர் பிரானும் 

சூழும் ஆகிய பர 

  சமயத்திடைத் தொண்டு 

வாழும் நீர்மையீர் உமைக் 

  காண வந்தனம் என்றார்.  673 

 

 

இன்னவாறு அருள் செய்திடத் 

  தொழுது அடி வீழ்ந்தார் 

மன்னும் மந்திரியார் வரும் 

  திறம் எலாம் மொழிய

அன்ன மென் நடையார் தமக்கு 

  அருள் செய்து போக்கித் 

துன்னு மெய்த் தொண்டர் சூழ 

  வந்தருளும் அப் பொழுது.  674 

 

 

செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் 

  பணி செய்து 

அல்கு தொண்டர்கள் பிள்ளையார் 

  மருங்கு அணைந்து இறைஞ்சி 

மல்குகார்அமண் இருள் 

  கெட ஈங்கு வந்து அருள 

எல்லையில் தவம் செய்தனம் 

  என எடுத்து இசைத்தார்.  675 

 

 

அத் திருத் தொண்டர் தங்களுக்கு 

  அருள் முகம் அளித்து 

மெய்த்த காதலின் அவரொடும் 

  புறத்தினில் மேவிச் 

சித்தம் இன்புறும் அமைச்சனார் 

  திரு மடம் காட்டப் 

பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் 

  இனிது அமர்ந்தார்.  676 

 

 

பரவு காதலில் பாண்டிமா 

  தேவியார் அருளால் 

விரவு நண்பொடு குலச் சிறையார் 

  விருந்து அளிப்பக் 

சிரபுரத்து வந்தருளிய செல்வர் 

  அங்கு இருந்தார் 

இரவி மேல்கடல் அணைந்தனன் 

  எல்லி வந்து அணைய.  677 

 

 

வழுதி மாநகர் அதனிடை 

  மாமறைத் தலைவர் 

பழுதில் சீர் அடியாருடன் 

  பகல் வரக் கண்ட 

கழுது போல் வரும் கார் 

  அமண் குண்டர்கள் கலங்கி 

இழுது மைஇருட்கு இருள் என 

  ஈண்டினர் ஒரு பால்.  678 

 

 

அங்கண் மேவிய சமணர்கள் 

  பிள்ளையார் அமர்ந்த 

துங்க மா மடம் தன்னிடைத் 

  தொண்டர் தம் குழாங்கள் 

எங்கும் ஓதிய திருப்பதிகத்து 

  இசை எடுத்த 

பொங்கு பேர் ஒலி 

  செவிப்புலம் புக்கிடப் பொறாராய்.  679 

 

 

மற்றிவ் வான்பழி மன்னவன் 

  மாறனை எய்திச் 

சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் 

  ஒரு படி துணிவார் 

கொற்றவன் கடைக் காவலர் 

  முன் சென்று குறுகி 

வெற்றி வேலவர்க்கு எங்களை 

  விளம்புவீர் என்றார்.  680 

 

 

வாயில் காவலர் மன்னவன் 

  தனை எதிர் வணங்கி 

ஆய மாகி வந்து அடிகள் 

  மார் அணைந்தனர் என்ன 

ஏயினான் அணைவாரென அவரும் 

  சென்று இசைத்தார் 

பாயினால் உடல் மூடுவார் 

  பதைப்புடன் புக்கார்.  681 

 

 

புக்க போது அவர் 

  அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி 

மிக்க தன்மையை வேந்தனும் 

  கண்டு எதிர் வினவி 

ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு 

  உற்றது என் என்னத் 

தக்கது அல்ல தீங்கு 

  அடுத்தது சாற்றுதற்கு என்றார்.  682 

 

 

ஆவதேல் நுமக்கு அடுத்தது 

  கூறுவீர் என்று 

காவலன் பரிந்து உரைத்தலும் 

  கார் அமண் கையர் 

மாவலாய் உன்தன் மதுரையில் 

  சைவ வேதியர் தாம் 

மேவலால் இன்று கண்டுமுட்டியாம் 

  என்று விளம்ப.  683 

 

 

என்று கூறலும் கேட்டு முட்டி 

  யானும் என்று இயம்பி 

நன்று நல் அறம் புரிந்தவா 

  நான் என்று நகுவான் 

கன்றும் உள்ளத்தன் ஆகி 

  அக் கண்நுதல் அடியார் 

இன்று இம்மாநகர் அணைந்தது என் 

  அவர்கள் யார் என்றான்.  684 

 

 

மாலை வெண் குடை 

  வளவர் சோணாட்டு வண்புகலிச் 

சூல பாணிபால் ஞானம் 

  பெற்றான் என்று சுருதிப் 

பாலன் அன்பர்தம் குழாத்தொடும் 

  பனி முத்தின் சிவிகை 

மேல் அணைந்தனன் எங்களை 

  வாதினில் வெல்ல.  685 

 

 

என்று கூறுவார் இத்திறம் 

  முன்பு தாம் அறிந்தது 

ஒன்றும் அங்கு ஒழியா 

  வகை உரைத்தலும் தென்னன் 

மன்றலம் பொழில் சண்பையார் 

  வள்ளலார் நாமம் 

சென்று தன் செவி நிறைத்தலும் 

  செயிர்த்து முன் சொல்வான்.  686 

 

 

மற்ற மா மறை மைந்தன் 

  இம் மருங்கு அணைந்தானேல் 

உற்ற செய் தொழில் யாது 

  செய்கோம் என உரைப்பச்  

செற்றம் மீக் கொண்ட 

  சிந்தையும் செய்கையும் உடையோர் 

கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் 

  குறித்து உரை செய்வார்.  687 

 

 

வந்த அந்தணன் தன்னை நாம் 

  வலிது செய்து போக்கும் 

சிந்தை அன்றி அச் 

  சிறுமறையோன் உறை மடத்தில் 

வெந்தழல் பட விஞ்சை 

  மந்திரத் தொழில் விளைத்தால் 

இந்த நன்னகர் இடத்திரான் 

  ஏகும் என்று இசைத்தார்.  688 

 

 

ஆவது ஒன்று இதுவே ஆகில் 

  அதனையே விரைந்து செய்யப் 

போவது என்று அவரைப் போக்கிப் 

  பொய் பொருளாகக் கொண்டான் 

யாவதும் உரையாடாதே 

  எண்ணத்தில் கவலையோடும் 

பூவணை அமளி புக்கான் பொங்கு 

  எழில் தேவி சேர்ந்தாள்.  689 

 

 

மன்னவன் உரைப்பது இன்றி 

  இருக்க மா தேவியார்தாம் 

என் உயிருக்கு உயிராய் உள்ள 

  இறைவ நீ உற்றது என்னோ 

முன் உள மகிழ்ச்சி இன்றி 

  முகம் புலர்ந்து இருந்தாய் இன்று 

பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் 

  அருள் செய் என்றார்.  690 

 

 

தேவியார் தம்மை நோக்கித் 

  தென்னவன் கூறுகின்றான் 

காவிநீள் கண்ணினாய் கேள் 

  காவிரி நாட்டில் மன்னும் 

தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் 

  அருள் பெற்று இங்கு 

மேவினான் அடிகள் மாரை 

  வாதினில் வெல்ல என்று.  691 

 

 

வெண் பொடி பூசும் தொண்டர் 

  விரவினார் அவரை எல்லாம் 

கண்டு முட்டு அடிகள் மார்கள் 

  கேட்டு முட்டியானும் காதல் 

வண்டுணத் துதைந்த கோதை 

  மானியே இங்கு வந்த 

பண்பு மற்று இதுவேயாகும் பரிசு 

  வேறு இல்லை என்றான்.  692 

 

 

மன்னவன் உரைப்பக் கேட்டு 

  மங்கையர்க்கரசியார் தாம் 

நின்னிலை இதுவே யாகில் 

  நீடிய தெய்வத் தன்மை 

அன்னவர் வாது செய்தால் 

  வென்றவர் பக்கம் சேர்ந்து 

துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் 

  மன்ன என்றார்.  693 

 

 

சிந்தையில் களிப்பு மிக்குத் 

  திருக் கழுமலத்தார் வேந்தன் 

வந்தவாறு எம்மை ஆள என 

  வரு மகிழ்ச்சி யோடும் 

கொந்தலர் குழலார் போதக் குலச் 

  சிறையார் அங்கு எய்த 

இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு 

  உரைத்து இருந்த பின்னர்.  694 

 

 

கொற்றவன் அமைச்சனாரும் கைதலை 

  குவித்து நின்று 

பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் 

  பெறும் பேறு என்பார் 

இற்றை நாள் ஈசன் அன்பர் 

  தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம் 

மற்று இனிச் சமணர் செய்யும் 

  வஞ்சனை அறியோம் என்றார்.  695 

 

 

மானியார் தாமும் அஞ்சி 

  வஞ்சகப் புலையர் தாங்கள் 

ஈனமே புரிய வல்லார் செய்வது 

  என்னாம் என்று எண்ணி 

ஞான சம்பந்தர் தம்பால் 

  நன்மை அல்லாது செய்ய 

ஊனம் வந்து அடையில் யாமும் 

  உயிர் துறந்து ஒழிவது என்றார்.  696 

 

 

இவர் நிலை இதுவே ஆக 

  இலங்குவேல் தென்னவன் ஆன 

அவன் நிலை அதுவாம் அந்நாள் 

  அருகர் தம் நிலை யாது என்னில் 

தவம் மறைந்து அல்ல செய்வார் 

  தங்கள் மந்திரத்தால் செந்தீ 

சிவ நெறி வளர்க்க வந்தார் 

  திருமடம் சேரச் செய்தார்.  697 

 

 

ஆதி மந்திரம் அஞ்சு 

  எழுத்து ஓதுவார் நோக்கும் 

மாதிரத்தினும் மற்றை மந்திர 

  விதி வருமே 

பூதி சாதனர் மடத்தில் 

  தாம் புனைந்த சாதனைகள் 

சாதியா வகை கண்ட 

  அமண் குண்டர்கள் தளர்ந்தார்.  698 

 

 

தளர்ந்து மற்று அவர் தாம் 

  செய்த தீத்தொழில் சரியக் 

கிளர்ந்த அச்சம் முன் 

  கெழுமிய கீழ்மையோர் கூடி 

விளங்கு நீள் முடி வேந்தன் 

  ஈது அறியின் நம் மேன்மை 

உளம் கொள்ளான் நமர் விருத்தியும் 

  ஒழிக்கும் என்று உணர்வார்.  699 

 

 

மந்திரச் செயல் வாய்த்தில 

  மற்று இனிச் செய்யும் 

புந்தியாவது இங்கு இது எனப் 

  பொதி தழல் கொடு புக்கு 

அந்தண் மாதவர் திரு மடப் 

  புறத்து அயல் இருள் போல் 

வந்து தம் தொழில் 

 

  புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்.  700 

 

திரு மடப் புறச் சுற்றினில் 

  தீய பாதகத்தோர் 

மருவுவித்த அத்தொழில் 

  வெளிப்படுதலும் மறுகிப் 

பரிசனத்தவர் பதைப்பொடும் 

  சிதைத்தது நீக்கி 

அருகர் இத்திறம் புரிந்தமை 

  தெளிந்து சென்று அணைவார்.  701 

 

 

கழுமலப் பதிக் கவுணியர் 

  கற்பகக் கன்றைத் 

தொழுது நின்று அமண் குண்டர் 

  செய் தீங்கினைச் சொன்ன 

பொழுது மாதவர் துயிலும் 

  இத்திரு மடப் புறம்பு 

பழுது செய்வதோ பாவிகள் 

  எனப் பரிந்து அருளி.  702 

 

 

என் பொருட்டு அவர் செய்த 

  தீங்கு ஆயினும் இறையோன் 

அன்பருக்கு எய்துமோ என்று 

  பின்னையும் அச்சம் 

முன்புற பின்பு முனிவுற 

  முத்தமிழ் விரகர் 

மன் புரக்கும் மெய்ம்முறை வழு 

  என மனம் கொண்டார்.  703 

 

 

வெய்ய தீங்கு இது வேந்தன் 

  மேற்று எனும் விதி முறையால் 

செய்யனே திரு ஆலவாய் 

  எனும் திருப்பதிகம்

சைவர் வாழ் மடத்து அமணர்கள் 

  இட்ட தீத் தழல் போய்ப் 

பையவே சென்று பாண்டியற்கு 

  ஆக எனப் பணித்தார்.  704 

 

 

பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் 

  நெடு மங்கல நாண் பாதுகாத்தும் 

ஆண் தகையார் குலச் சிறையார் 

  அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும் 

மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் 

  வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர் 

தீண்டியிடப் பேறு உடையன் ஆதலாலும் 

  தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.  705 

 

 

திருந்திசைப் பதிகத் தொடை 

  திரு ஆல வாயின் 

மருந்தினைச் சண்பை மன்னவர் 

  புனைந்திட அருளால் 

விரிந்த வெந்தழல் வெம்மை 

  போய்த் தென்னனை மேவிப் 

பெருந்தழல் பொதி வெதுப்பு 

  எனப் பெயர் பெற்றதன்றே.  706 

 

 

செய்ய மேனியர் திருமகனார் 

  உறை மடத்தில் 

நையும் உள்ளத்தராய் அமண் கையர் 

  தாம் நணுகிக் 

கையினால் எரி இட உடன் 

  படும் எல்லி கரப்ப 

வெய்யவன் குண கடலிடை 

  எழுந்தனன் மீது.  707 

 

 

இரவு பாதகர் செய்த தீங்கு 

  இரவி தன் மரபில் 

குரவ ஓதியார் குலச் சிறை 

  யாருடன் கேட்டுச் 

சிவபுரப் பிள்ளை யாரை 

  இத் தீயவர் நாட்டு 

வரவழைத்த நாம் மாய்வதே 

  என மன(ம்) மயங்கி.  708 

 

 

பெருகும் அச்சமோடும் ஆருயிர் 

  பதைப்பவர் பின்பு 

திரு மடப்புறம் மருங்கு 

  தீது இன்மையில் தெளிந்து 

கரும் உருட்ட மண்கையர் 

  செய்தீங்கு இது கடைக்கால் 

வருவது எப்படியாம் என 

  மனம் கொளும் பொழுது.  709 

 

 

அரசனுக்கு வெப்பு அடுத்தது 

  என்று அருகு கஞ்சுகிகள் 

உரை செயப் பதைத்து ஒரு 

  தனித் தேவியார் புகுத 

விரைவும் அச்சமும் 

  மேற்கொளக் குலச்சிறையாரும் 

வரை செய் பொன்புய மன்னவன் 

  மருங்கு வந்து அணைந்தார்.  710 

 

 

வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற 

  வெதுப்புறும் வெம்மை 

காந்து வெந்தழல் கதும் என 

  மெய் எலாம் கவர்ந்து 

போந்து மாளிகைப் புறத்து 

  நின்றார்களும் புலர்ந்து 

தீந்து போம்படி எழுந்தது 

  விழுந்துடல் திரங்க.  711 

 

 

உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு 

  ஒரு புடை ஒதுங்க 

அணையல் உற்றவர் அருகு 

  தூரத்திடை அகலப் 

புணர் இளம் கதலிக் 

  குருத்தொடு தளிர் புடையே 

கொணரினும் சுருக்கொண்டு 

  அவை நுண்துகள் ஆக.  712 

 

 

மருத்து நூலவர் தங்கள் 

  பல் கலைகளில் வகுத்த 

திருத்தகும் தொழில் யாவையும் 

  செய்யவும் மேல் மேல் 

உருத்து எழுந்த வெப்பு 

  உயிரையும் உருக்குவது ஆகக் 

கருத்து ஒழிந்து உரை 

  மறந்தனன் கௌரியர் தலைவன்.  713 

 

 

ஆனவன் பிணி நிகழ்வுழி 

  அமணர்கள் எல்லாம் 

மீனவன் செயல் கேட்டலும் 

  வெய்து உயிர்த்து அழிந்து 

போன கங்குலில் புகுந்ததின் 

  விளைவு கொல் என்பார் 

மான முன் தெரியா வகை 

  மன்னன் மாட்டு அணைந்தார்.  714 

 

 

மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து 

  வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் 

மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி 

  நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் 

பீலிகொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த 

  பீலிகள் பிரம்பினோடும் தீந்து 

மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு 

  வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்.  715 

 

 

கருகிய மாசு உடை யாக்கைத் தீயோர் தங்கள் 

  கைத்தூங்கு குண்டிகை நீர் தெளித்துக் காவாய் 

அருகனே அருகனே என்றென்று ஓதி அடல் 

  வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப் 

பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகிப் 

  பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல 

ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று 

  அமணரைப் பார்த்து உரைத்து அரசன் உணர்வு சோர்ந்தான்.  716 

 

 

பாண்டி மாதேவியாரும் பயம் 

  எய்தி அமைச்சர் பாரம் 

பூண்டவர் தம்மை நோக்கிப் 

  புகலியில் வந்து நம்மை 

ஆண்டு கொண்டவர் பால் கங்குல் 

  அமணர் தாம் செய்த தீங்கு 

மூண்டவாறு இனையது ஆகி 

  முடிந்ததோ என்று கூற.  717 

 

 

கொற்றவன் அமைச்சராம் 

  குலச்சிறையாரும் தாழ்ந்து 

மற்று இதன் கொடுமை இந்த 

  வஞ்சகர் மதில்கள் மூன்றும் 

செற்றவர் அன்பர் தம்பால் செய்தது 

  ஈங்கு அரசன் பாங்கு 

முற்றியது இவர்கள் தீர்க்கின் 

  முதிர்வதே ஆவது என்பார்.  718 

 

 

இரு திறத்தவரும் மன்னன் எதிர் 

  பணிந்து இந்த வெப்பு 

வரு திறம் புகலி வந்த 

  வள்ளலார் மதுரை நண்ண 

அருகர்கள் செய்த தீய 

  அனுசிதம் அதனால் வந்து 

பெருகியது இதற்குத் தீர்வு 

  பிள்ளையார் அருளே என்று.  719 

 

 

காயமும் மனமும் மாசு 

  கழுவுதல் செய்யார் செய்யும் 

மாயமும் இந்த நோயை வளர்ப்பதே 

  வளர் வெண் திங்கள் 

மேய வேணியர்பால் ஞானம் 

  பெற்றவர் விரும்பி நோக்கில் 

தீய இப்பிணியே அன்றி இப் 

  பிறவியும் தீரும் என்றார்.  720 

 

 

மீனவன் செவியின் ஊடு 

  மெய் உணர்வளிப்போர் கூற 

ஞான சம்பந்தர் என்னும் 

  நாம மந்திரமும் செல்ல 

ஆன போது அயர்வு தன்னை 

  அகன்றிட அமணர் ஆகும் 

மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் 

  ஒன்று உரைக்கல் உற்றான்.  721 

 

 

மன்னவன் அவரை நோக்கி மற்று 

  இவர் செய்கை எல்லாம் 

இன்னவாறு எய்து நோய்க்கே ஏது 

  ஆயின என்று எண்ணி 

மன்னிய சைவ நீதி மா மறைச் 

  சிறுவர் வந்தால் 

அன்னவர் அருளால் இந்நோய் 

  அகலுமேல் அறிவேன் என்றான்.  722 

 

 

என்று முன் கூறிப் பின்னும் 

  யான் உற்ற பிணியைத் தீர்த்து 

வென்றவர் பக்கம் சேர்வன் விரகு 

  உண்டேல் அழையும் என்ன 

அன்று அவர் உவகை பொங்கி 

  ஆர்வத்தால் அணையை நூக்கிச் 

சென்ற நீர் வெள்ளம் போலும் 

  காதல் வெள்ளத்தில் செல்வார்.  723 

 

 

பாய் உடைப் பாதகத்தோர் 

  திரு மடப் பாங்கு செய்த 

தீவினைத் தொழிலை நோக்கி 

  உள்ளழி திரு உள்ளத்தான் 

மேய அத்துயரம் நீங்க 

  விருப்புறு விரைவினோடு 

நாயகப் பிள்ளையார் தம் 

  நற்பதம் பணிவார் ஆகி.  724 

 

 

மன்னவன் இடும்பை தீர மற்று 

  அவன் பணி மேல் கொண்டே 

அன்னமென் நடையினாரும் 

  அணிமணிச் சிவிகை ஏறி 

மின் இடை மடவார் சூழ 

  வேற்படை அமைச்சனாரும் 

முன் அணைந்து ஏகச் சைவ 

  முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.  725 

 

 

திருமடம் சாரச் சென்று 

  சேயரிக் கண்ணினார் முன் 

வருபரி இழிந்து நின்ற 

  அமைச்சனார் வந்த பான்மை 

சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் 

  செய்வீர் என்னப் 

பரிசனத்தவரும் புக்குப் பதம் 

  அறிந்து உணர்த்து கின்றார்.  726 

 

 

பாண்டி மாதேவியாரும் 

  பரிவுடை அமைச்சனாரும் 

ஈண்டும் வந்து அணைந்தார் என்று 

  விண்ணப்பம் செய்யச் சண்பை 

ஆண் தகையாரும் ஈண்ட அழையும் 

  என்று அருளிச் செய்ய 

மீண்டு போந்து அழைக்கப் புக்கார் 

  விரைவுறும் விருப்பின் மிக்கார்.  727 

 

 

ஞானத்தின் திரு உருவை நான் 

  மறையின் தனித் துணையை 

வானத்தின் மிசை அன்றி மண்ணில் 

  வளர் மதிக் கொழுந்தைத் 

தேன் நக்க மலர்க் கொன்றைச் 

  செஞ் சடையார் சீர் தொடுக்கும் 

கானத்தின் எழுபிறப்பைக் கண் 

  களிப்பக் கண்டார்கள்.  728 

 

 

கண்ட பொழுது அமண் கொடியோர் 

  செய்த கடும் தொழில் நினைந்தே 

மண்டிய கண் அருவி நீர் 

  பாய மலர்க் கை குவித்துப் 

புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த 

  நில முற விழுந்தார் 

கொண்ட குறிப் போடு 

  நெடிது உயிர்த்த கொள்கையராய்.  729 

 

 

உரை குழறி மெய்ந் நடுங்கி 

  ஒன்றும் அறிந்திலர் ஆகித் 

தரையின் மிசைப் புரண்டு அயர்ந்து 

  சரண கமலம் பற்றிக் 

கரையில் கவலைக் கடலுக்கு ஓர் 

  கரை பற்றினால் போன்று 

விரைவுறு மெய் அன்பினால் 

  விடாது ஒழிவார் தமைக்கண்டு.  730 

 

 

அருமறை வாழ் பூம்புகலி 

  அண்ணலார் அடி பூண்ட 

இருவரையும் திருக்கையால் எடுத்து 

  அருளித் தேற்றிடவும் 

தெரு மந்து தெளியாதார் தமை 

  நோக்கிச் சிறப்பு அருளிச் 

திருவுடையீர் உங்கள் பால் தீங்கு 

  உளதோ என வினவ.  731 

 

 

வெஞ்சமணர் முன் செய்த 

  வஞ்சனைக்கு மிக அழிந்தே 

அஞ்சினோம் திருமேனிக்கு அடாது 

  என்றே அது தீர்ந்தோம் 

வஞ்சகர் மற்று அவர் செய்த 

  தீத்தொழில் போய் மன்னவன் பால் 

எஞ்சல் இலாக் கொடுவெதுப்பாய் எழா 

  நின்றது எனத் தொழுது.  732 

 

 

வெய்ய தொழில் அமண் குண்டர் 

  விளைக்க வரும் வெதுப்பவர் தாம் 

செய்யும் மதி மாயைகளால் 

  தீராமைத் தீப்பிணியால் 

மையல் உறு மன்னவன் முன் 

  மற்று அவரை வென்று அருளில் 

உய்யும் எமது உயிரும் அவன் 

  உயிரும் என உரைத்தார்கள்.  733 

 

 

என்று அவர் உரைத்த போதில் எழில் 

  கொள் பூம் புகலி வேந்தர் 

ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா 

  உணர்வு இலா அமணர் தம்மை 

இன்று நீர் உவகை எய்த 

  யாவரும் காண வாதில் 

வென்று மீனவனை வெண்ணீறு 

  அணிவிப்பன் விதியால் என்றார்.  734 

 

 

மொழிந்தருள அது கேட்டு முன் 

  இறைஞ்சி முகம் மலர்வார் 

அழுந்தும் இடர்க் கடல் இடை 

  நின்று அடியோமை எடுத்து அருளச்  

செழும் தரளச் சிவிகையின் 

  மேல் தென்னாடு செய்தவத்தால் 

எழுந்து அருளப் பேறு உடையோம் 

  என் பெறோம் எனத் தொழலும்.  735 

 

 

ஆவதும் அழிவும் எல்லாம் அவர் 

  செயல் அமணர் ஆகும் 

பாவ காரிகளை நோக்கும் பழுது 

  உடன் நீங்கி வெல்லச் 

சேவுயர் கொடியினார் தம் 

  திரு உள்ளம் அறிவேன் என்று 

பூவலர் பொழில் சூழ் 

  சண்பைப் புரவலர் போதுகின்றார்.  736 

 

 

வையகம் உய்ய வந்த 

  வள்ளலார் மடத்தினின்று 

மெய்யணி நீற்றுத் தொண்டர் 

  வெள்ளமும் தாமும் போந்து 

கை இணை தலையின் மீது 

  குவியக் கண் மலர்ச்சி காட்டச் 

செய்யவார் சடையார் மன்னும் 

  திரு ஆல வாயுள் புக்கார்.  737 

 

 

நோக்கிட விதி இலாரை நோக்கி 

  யான் வாது செய்யத் 

தீக் கனல் மேனியானே 

  திருவுளமே என்று எண்ணில் 

பாக்கியப் பயனாய் உள்ள 

  பாலறா வாயர் மெய்ம்மை

நோக்கி வண் தமிழ் செய் மாலைப் 

  பதிகந்தான் நுவலல் உற்றார்.  738 

 

 

கானிடை ஆடுவாரைக் காட்டுமா 

  உரி முன் பாடித் 

தேன் அலர் கொன்றையார் தம் 

  திருவுளம் நோக்கிப் பின்னும் 

ஊனமில் வேத வேள்வி என்று 

  எடுத்துத்து உரையின் மாலை 

மானமில் அமணர் தம்மை 

  வாதில் வென்று அழிக்கப்பாடி.  739 

 

 

ஆலமே அமுதம் ஆக 

  உண்டு வானவர்க்கு அளித்துக் 

காலனை மார்க் கண்டர்க்காக் 

  காய்ந்தனை அடியேற்கு இன்று 

ஞலம் நின் புகழே ஆக 

  வேண்டும் நான் மறைகள் ஏத்தும் 

சீலமே  ஆலவாயில் 

  சிவ பெருமானே என்றார்.  740 

 

 

நாதர் தம் அருள் முன்பெற்று 

  நாடிய மகிழ்ச்சி பொங்கப் 

போதுவார் பணிந்து போற்றி விடை 

  கொண்டு புனித நீற்று 

மேதகு கோலத்தோடும் 

  விருப்புறு தொண்டர் சூழ 

மூது எயில் கபாடம் நீடு 

  முதல் திரு வாயில் சார்ந்தார்.  741 

 

 

அம் மலர்க் குழலினார்க்கும் 

  அமைச்சர்க்கும் அருள வேண்டிச் 

செம் மணிப் பலகை முத்தின் 

  சிவிகை மேல் கொண்ட போதில் 

எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த 

  ஆர்ப்பு எல்லை இன்றி 

மும்மை நீடு உலகம் எல்லாம் 

  முழுதுடன் நிறைந்தது அன்றே.  742 

 

 

பல்லிய நாதம் பொங்கப் 

  படர் திருநீற்றின் சோதி 

நல் ஒளி வட்டம் ஆகி 

  நண்ணி மேல் வருவது என்ன 

வில் வளர் தரளக் கோவை 

  வெண்குடை நிழற்றி வெவ்வேறு 

எல்லையில் முத்தின் காளம் தாரை 

  சங்கு எங்கும் ஓத.  743 

 

 

கண்ணினுக்கு அணியாய் உள்ளார் 

  எழுச்சியில் காட்சி பெற்றார் 

நண்ணிய சமயம் வேறு 

  நம்பினர் எனினும் முன்பு 

பண்ணிய தவங்கள் என் கொல் 

  பஞ்சவன் தஞ்சம் மேவிப் 

புண்ணிய மூர்த்தி வந்து 

  மதுரையில் புகுத என்றார்.  744 

 

 

தென்னவர் தேவி யாரும் 

  திருமணிச் சிவிகை மீது 

பின் வர அமைச்சர் முன்பு 

  பெரும் தொண்டர் குழாத்துச் செல்லப் 

பொன் அணி மாட வீதியூடு 

  எழுந்தருளிப் புக்கார் 

கன்னி நாடு உடையான் கோயில் 

  காழி நாடு உடைய பிள்ளை.  745 

 

 

கொற்றவன் தன் பால் முன்பு 

  குலச்சிறையார் வந்து எய்திப் 

பொற்றட மதில் சூழ் சண்பைப் 

  புரவலர் வரவு கூற 

முன் துயர் சிறிது நீங்கி 

  முழுமணி அணிப் பொற் பீடம் 

மற்றவன் முடியின் பக்கத்து இடுக 

  என வல்லன் ஆனான்.  746 

 

 

மந்திரி யாரைப் பின்னும் எதிர் 

  செல மன்னன் ஏவச் 

சிந்தையுள் மகிழ்ந்து போந்தார் செயலை 

  யான் சமயத்து உள்ளோர் 

பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு 

  கண்டு இதுவோ பண்பால் 

நம் தனிச் சமயம் தன்னை 

  நாட்டு மாறு என்று பின்னும்.  747 

 

 

நின் அற நெறியை நீயே 

  காத்து அருள் செய்தி ஆகில் 

அன்னவர் தம்மை இங்கே 

  அழைத்தனை அவரும் யாமும் 

முன் உற ஒக்கத் தீர்க்க 

  மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது 

என்னினும் யாமும் தீர்த்தோம் 

  ஆகவும் இசைவாய் என்றார்.  748 

 

 

பொய் தவம் ஆகக் கொண்ட 

  புன் தலைச் சமணர் கூறச் 

செய்தவப் பயன் வந்து எய்தும் 

  செவ்வி முன் உறுதலாலே 

எய்திய தெய்வச் சார்வால் 

  இரு திறத்தீரும் தீரும் 

கைதவம் பேசமாட்டேன் என்று 

  கைதவனும் சொன்னான்.  749 

 

 

என்று அவன் உரைப்பக் குண்டர் 

  எண்ணம் கெட்டு இருந்த எல்லைத் 

தென் தமிழ் நாடு செய்த 

  செய்தவக் கொழுந்து போல்வார் 

வன் தனிப் பவன முன்னர் 

  வாயிலுள் அணைந்து மாடு 

பொன் திகழ் தரளப் பத்திச் 

  சிவிகை நின்று இழிந்து புக்கார்.  750 

 

 

குலச்சிறையார் முன்பு எய்த 

  கொற்றவன் தேவியாரும் 

தலத்திடை இழிந்து சென்றார் தண் 

  தமிழ் நாட்டு மன்னன் 

நிலத்து இடை வானின் நின்று 

  நீள் இருள் நீங்க வந்த 

கலைச் செழும் திங்கள் போலும் 

  கவுணியர் தம்மைக் கண்டார்.  751 

 

 

கண்ட அப்பொழுதே வேந்தன் கை 

  எடுத்து எய்த நோக்கித் 

தண்டுணர் முடியின் பாங்கர்த் 

  தமனியப் பீடம் காட்ட

வண் தமிழ் விரகர் மேவி 

  அதன் மிசை இருந்தார் மாயை 

கொண்டவல் அமணர் எல்லாம் 

  குறிப்பினுள் அச்சம் கொண்டார்.  752 

 

 

செழியனும் பிள்ளையார் தம் 

  திருமேனி காணப் பெற்று 

விழி உற நோக்கலாலே வெம்மை 

  நோய் சிறிது நீங்கி 

அழிவுறு மன்னோர் நிற்க 

  அந்தணர் வாழ்வை நோக்கிக் 

கெழுவுறு பதியாது என்று 

  விருப்புடன் கேட்ட போது.  753 

 

 

பொன்னி வளம் திருநாட்டுப் புனல் 

  பழனப் புறம் பணை சூழ் 

கன்னி மதில் கழுமலம் நாம் 

  கருதும் ஊர் எனச் சிறந்த 

பன்னிரண்டு பெயர் பெற்றுப் 

  பரவிய சொல் திருப்பதிகம் 

தென்னவன் முன்பு அருள் 

  செய்தார் திருஞான சம்பந்தர்.  754 

 

 

பிள்ளையார் செம் பொன் மணிப் 

  பீடத்தில் இருந்த பொழுது 

உள்ள நிறை பொறாமையினால் 

  உழை இருந்த கார் அமணர் 

கொள்ளும் மனத்திடை அச்சம் 

  மறைத்து முகம் கோபத்தீத் 

துள்ளி எழும் எனக் கண்கள் 

  சிவந்து பல சொல்லுவார்.  755 

 

 

காலை எழும் கதிரவனைப் புடை 

  சூழும் கருமுகில் போல் 

பீலி சேர் சமண் கையர் 

  பிள்ளையார் தமைச் சூழ்வார் 

ஏலவே வாதினால் வெல்வதனுக்கு 

  எண்ணித் தாங்கு 

கோலுநூல் எடுத்து ஓதித் 

  தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்.  756 

 

 

பிள்ளையார் அது கேளாப் பேசுக 

  நும் பொருள் எல்லை 

உள்ளவாறு என்றருள ஊத்தைவாய்ப் 

  பறி தலையர் 

துள்ளி எழும் அநேகராய்ச் 

  சூழ்ந்து பதறிக் கதற 

ஒள்ளிழையார் அது கண்டு பொறார் 

  ஆகி உள் நடுங்கி.  757 

 

 

தென்னவன் தன்னை நோக்கித் 

  திருமேனி எளியர் போலும் 

இன் அருள் பிள்ளையார் மற்று 

  இவர் உவர் எண்ணிலார்கள் 

மன்ன நின் மயக்கம் எங்கள் 

  வள்ளலார் தீர நல்கும் 

பின்னை இவ்வமணர் மூள்வார் 

  வல்லரேல் பேச என்றார்.  758 

 

 

மாறனும் அவரை நோக்கி 

  வருந்தநீ என்று மற்றும்  

வேறு ஆவது என் கொல் என்மேல் 

  வெப்பு ஒழித்து அருகர் நீரும் 

ஆறு அணி சடையினார்க்கு 

  அன்பராம் இருவரும் நீங்கள் 

தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் 

  தெரிப்பீர் என்றான்.  759 

 

 

ஞான ஆரமுதம் உண்டார் 

  நல்தவத் திருவை நோக்கி 

மானினேர் விழியினாய் கேள் மற்று 

  எனைப் பாலன் என்று 

நீ நனி அஞ்ச வேண்டா 

  நிலையிலா அமணர்க்கு என்றும் 

யான் எளியேன் அலேன் 

  என்று எழும் திருப்பதிகம்பாடி.  760 

 

 

பெற்றியால் அருளிச் செய்த 

  பிள்ளையார் தமக்கு முன்னம் 

சுற்று நின்று அழைத்தல் ஓவா 

  அருகர்க்கும் தென்னர் கோமான் 

இற்றைநாள் என்னை உற்ற பிணியை 

  நீர் இகலித் தீரும் 

தெற்று எனத் தீர்த்தார் வாதில் 

  வென்றவர் என்று செப்ப.  761 

 

 

மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு 

  போல் மனத்து மாசு 

துன்னிய அமணர் தென்னர் 

  தோன்றலை நோக்கி நாங்கள் 

உன் உடம்பு அதனில் வெப்பை 

  ஒருபுடை வாம பாகம் 

முன்ன மந்திரித்துத் தெய்வ 

  முயற்சியால் தீர்த்தும் என்றார்.  762 

 

 

யாதும் ஒன்று அறிவு இலாதார் 

  இருள் என அணையச் சென்று

வாதினில் மன்னவன் தன் 

  வாம பாகத்தைத் தீர்ப்பார் 

மீது தம் பீலி கொண்டு 

  தடவிட மேன்மேல் வெப்புத் 

தீதுறப் பொறாது தென்னன் 

  சிரபுரத்தவரைப் பார்த்தான்.  763 

 

 

தென்னவன் நோக்கம் கண்டு 

  திருக்கழு மலத்தார் செல்வர் 

அன்னவன் வலப்பால் வெப்பை 

  ஆலவாய் அண்ணல் நீறே 

மன்னும் மந்திரமும் ஆகி 

  மருந்துமாய்த்  தீர்ப்பது என்று 

பன்னிய மறைகள் ஏத்திப் 

  பகர் திருப்பதிகம் பாடி.  764 

 

 

திருவளர் நீறு கொண்டு 

  திருக்கையால் தடவத் தென்னன் 

பொருவரு வெப்பு நீங்கிப் 

  பொய்கையில் குளிர்ந்தது அப்பால் 

மருவிய இடப்பால் மிக்க அழல் 

  என மண்டு தீப்போல்    

இருபுடை வெப்பும் கூடி 

  இடம் கொளாதுஎன்னப் பொங்க.  765 

 

 

உறி உடைக் கையர் பாயின் 

  உடுக்கையர் நடுக்கம் எய்தி 

செறி மயில் பீலி தீய 

  தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை 

ஏறிய மாகடலும் கன்றி அருகு 

  விட்டு ஏற நிற்பார் 

அறிவுடையாரை ஒத்தார் அறிவு 

  இலா நெறியில் நின்றார்.  766 

 

 

பலர் தொழும் புகலி மன்னர் 

  ஒரு புடை வெப்பைப் பாற்ற 

மலர்தலை உலகின்மிக்கார் வந்து 

  அதிசயத்துச் சூழ 

இலகு வேல் தென்னன் மேனி 

  வலம் இடம் எய்தி நீடும் 

உலகினில் தண்மை வெம்மை 

  ஒதுங்கினால் ஒத்தது அன்றே.  767 

 

 

மன்னவன் மொழிவான் என்னே மதித்த 

  இக் காலம் ஒன்றில் 

வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு 

  இன்பம் ஒரு பால் ஆகும் 

துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் 

  சுவை அமுது ஒரு பால் ஆகும் 

என் வடிவு ஒன்றில் உற்றேன் 

  இரு திறத்து இயல்பும் என்பான்.  768 

 

 

வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை 

  விட்டு அகல நீங்கும் 

வந்து எனை உய்யக் 

  கொண்ட மறைக்குல வள்ளலாரே 

இந்த வெப்பு அடைய நீங்க 

  எனக்கு அருள் புரிவீர் என்று 

சிந்தையால் தொழுது சொன்னான் செல் 

  கதிக்கு அணியன் ஆனான்.  769 

 

 

திருமுகம் கருணை காட்டத் 

  திருக்கையால் நீறு காட்டிப் 

பெருமறை துதிக்கும் ஆற்றால் 

  பிள்ளையார் போற்றிப் பின்னும் 

ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்து 

  வெப்பு அகன்று பாகம் 

மருவு தீப் பிணியும் நீங்கி 

  வழுதியும் முழுதும் உய்ந்தான்.  770 

 

 

கொற்றவன் தேவியாரும் 

  குலச்சிறையாரும் தீங்கு 

செற்றவர் செய்ய பாத தாமரை 

  சென்னி சேர்த்துப் 

பெற்றனம் பெருமை இன்று 

  பிறந்தனம் பிறவா மேன்மை 

உற்றனன் மன்னன் என்றே உளம் 

  களித்து உவகை மிக்கார்.  771 

 

 

மீனவன் தன் மேல் உள்ள 

  வெப்பு எலாம் உடனே மாற 

ஆன பேரின்பம் எய்தி உச்சி 

  மேல் அங்கை கூப்பி 

மானம் ஒன்று இல்லார் முன்பு 

  வன் பிணி நீக்க வந்த 

ஞான சம்பந்தர் பாதம் நண்ணி 

  நான் உய்ந்தேன் என்றான்.  772 

 

 

கந்து சீறும் மால் யானை 

  மீனவன் கருத்து நேர் 

வந்து வாய்மை கூற மற்று 

  மாசுமேனி நீசர் தாம் 

முந்தை மந்திரத்து விஞ்சை 

  முற்றும் எஞ்ச அஞ்சியே 

சிந்தை செய்து கைவரும் 

  திறம் தெரிந்து தேடுவார்.  773 

 

 

சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த 

  இன் சொல் மாலையால் 

கைதவன் தன் வெப்பு ஒழிந்த 

  தன்மை கண்டு அறிந்தனம் 

மெய் தெரிந்த தர்க்க வாதம் 

  வெல்லலால் ஆவது அன்று வேறு 

எய்து தீயின் நீரில் வெல்வது 

  என்று தம்மில் எண்ணினார்.  774 

 

 

பிள்ளையாரும் உங்கள் வாய்மை 

  பேசுமின்கள் என்றலும் 

தள்ளு நீர்மை யார்கள் வேறு 

  தர்க்கவாதின் உத்தரம் 

கொள்ளும் வென்றி அன்றியே 

  குறித்த கொள்கை உண்மைதான் 

உள்ளவாறு கண் புலத்தில் 

  உய்ப்பது என்ன ஒட்டினார்.  775 

 

 

என்று வாது கூறலும் 

  இருந்த தென்னர் மன்னனும் 

கன்றி என் உடம்பு ஒடுங்க 

  வெப்புநோய் கவர்ந்த போது 

ஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள் 

  என்னவாது உமக்கு எனச் 

சென்று பின்னும் முன்னும் நின்று 

  சில்லி வாயர் சொல்லுவார்.  776 

 

 

என்ன வாது செய்வது என்று 

  உரைத்ததே வினா எனச் 

சொன்னவாசகம் தொடங்கி ஏடு 

  கொண்டு சூழ்ச்சியால் 

மன்னு தம் பொருட் கருத்தின் 

  வாய்மை தீட்டி மாட்டினால் 

வெம் நெருப்பின் வேவுறாமை 

  வெற்றி ஆவது என்றனர்.  777 

 

 

என்ற போது மன்னன் ஒன்று 

  இயம்பும் முன்பு பிள்ளையார் 

நன்று நீர் உரைத்தவாறு 

  நாடு தீயில் ஏடுதான் 

வென்றிடில் பொருள் கருத்து 

  மெய்ம்மை ஆவது என்றிரேல் 

வன் தனிக்கை யானைமன்னன் 

  முன்பு வம்மின் என்றனர்.  778 

 

 

அப்படிக்கு எதிர் அமணரும் 

  அணைந்துறும் அளவில் 

ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் 

  காவலர் உரையால் 

செப்பரும் திறல் மன்னனும் 

  திருந்து அவை முன்னர் 

வெப்புறும் தழல் அமைக்க 

  என வினைஞரை விடுத்தான்.  779 

 

 

ஏய மாந்தரும் இந்தனம் 

  குறைத்து உடன் அடுக்கித்  

தீ அமைத்தலும் சிகை விடு 

  புகை ஒழிந்து எழுந்து 

காயும் வெவ்வழல் கடவுளும் 

  படர் ஒளி காட்ட 

ஆயும் முத்தமிழ் விரகரும் 

  அணைய வந்து அருளி.  780 

 

 

செங்கண் ஏற்றவரே பொருள் 

  என்று தாம் தெரித்த 

பொங்கு இசைத் திருப்பதிக 

  நன்முறையினைப் போற்றி 

எங்கள் நாதனே பரம் பொருள் 

  எனத் தொழுது எடுத்தே 

அங்கையால் முடி மிசைக் கொண்டு 

  காப்பு நாண் அவிழ்த்தார்.  781 

 

 

சாற்றும் மெய்ப் பொருள் 

  தரும் திருமுறையினைத் தாமே 

நீற்று வண்கையால் மறித்தலும் 

  வந்து நேர்ந்து உளதால் 

நால்தடம் புயத்து அண்ணலார் 

  மருவு நள்ளாறு 

போற்றும் அப்பதிகம் போகம் 

  ஆர்த்த பூண் முலையாள்.  782 

 

 

அத் திருப் பதிகத்தினை 

  அமர்ந்து கொண்டு அருளி 

மைத்த வெங்கடு மிடற்று 

  நள்ளாறரை வணங்கி 

மெய்த்த நல் திரு ஏட்டினைக் 

  கழற்றி மெய்ம் மகிழ்ந்து 

கைத் தலத்திடைக் கொண்டனர் 

  கவுணியர் தலைவர்.  783 

 

 

நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் 

  நாதன் என்று எடுத்தும் 

என்னை ஆள் உடை ஈசன் 

  தன் நாமமே என்றும் 

மன்னும் மெய்ப் பொருளாம் 

  எனக் காட்டிட வன்னி 

தன்னில் ஆக எனத் தளிர் 

  இள வளர் ஒளி பாடி.  784 

 

 

செய்ய தாமரை அக 

  இதழினும் மிகச் சிவந்த 

கையில் ஏட்டினைக் கைதவன் 

  பேர் அவை காண 

வெய்ய தீயினில் வெற்று 

  அரையவர் சிந்தை வேவ 

வையம் உய்ந்திட வந்தவர் 

  மகிழ்ந்து முன் இட்டார்.  785 

 

 

இட்ட ஏட்டினில் எழுதிய 

  செந்தமிழ்ப் பதிகம் 

மட்டுலாங்குழல் வனமுலை 

  மலைமகள் பாகத்து 

அட்ட மூர்த்தியைப் பொருள் 

  என உடைமையால் அமர்ந்து 

பட்ட தீயிடைப் பச்சையாய் 

  விளங்கியது அன்றே.  786 

 

 

மையல் நெஞ்சு உடை அமணரும் 

  தம் பொருள் வரைந்த 

கையில் ஏட்டினைக் கதுவு 

  செந்தீயினில் இடுவார் 

உய்யுமோ இது என உறும் 

  கவலையாம் உணர்வால் 

நையும் நெஞ்சினர் ஆகியே 

  நடுங்கி நின்றிட்டார்.  787 

 

 

அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் 

  அறிவிலா அமணர் 

வெம் சுடர்ப் பெரும் 

  தீயினில் விழுத்திய ஏடு 

பஞ்சு தீயிடைப் பட்டது 

  படக் கண்டு பயத்தால் 

நெஞ்சு சோரவும் பீலிகை 

  சோர்ந்திலர் நின்றார்.  788 

 

 

மான மன்னவன் அவையின் 

  முன் வளர்த்த செந்தீயின்

ஞானம் உண்டவர் இட்ட 

  ஏடு இசைத்த நாழிகையில் 

ஈனம் இன்மை கண்டு 

  யாவரும் வியப்பு உற எடுத்தார் 

பான்மை முன்னையில் பசுமையும் 

  புதுமையும் பயப்ப.  789 

 

 

எடுத்த ஏட்டினை அவையின் முன் 

  காட்டி அம் முறையில் 

அடுத்த வண்ணமே கோத்தலும் 

  அதிசயித்து அரசன் 

தொடுத்த பீலி முன் 

  தூக்கிய கையரை நோக்கிக் 

அடுத்த நீர் இட்ட 

  ஏட்டினைக் காட்டுமின் என்றான்.  790 

 

 

அருகர் தாம் இட்ட ஏடு 

  வாங்கச் சென்று அணையும் போதில் 

பெருகு தீக் கதுவ வெந்து 

  பேர்ந்தமை கண்ட மன்னன் 

தருபுனல் கொண்டு செந்தீத் 

  தணிப்பித்தான் சமணர் அங்குக் 

கருகிய சாம்ப ரோடும் கரி 

  அலால் மற்று என் காண்பார்.  791 

 

 

செய்வது ஒன்று அறிகிலாதார் 

  திகைப்பினால் திரண்ட சாம்பல் 

கையினால் பிசைந்து தூற்றிப் 

  பார்ப்பது கண்ட மன்னன் 

எய்திய நகையினோடும் ஏடு 

  இன்னம் அரித்துக் காணும் 

பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த 

  நீர் போமின் என்றான்.  792 

 

 

வெப்பு எனும் தீயில் யான் முன் 

  வீடு பெற்று உய்ய நீங்கள் 

அப்பொழுது அழிந்து தோற்றீர் 

  ஆதலால் அதுவாறு ஆக 

இப்பொழுது எரியில் இட்ட ஏடு 

  உய்ந்தது இல்லை என்றால் 

துப்புர உடையீர் நீங்கள் 

  தோற்றிலீர் போலும் என்றான்.  793 

 

 

தென்னவன் நகை உட்கொண்டு 

  செப்பிய மாற்றம் தேரார் 

சொன்னது பயனாகக் கொண்டு 

  சொல்லுவார் தொடர்ந்த வாது 

முன்னுற இருகால் செய்தோம் முக்காலில் 

  ஒரு கால் வெற்றி 

என்னினும் உடையோம் மெய்ம்மை இனி 

  ஒன்று காண்பது என்றார்.  794 

 

 

தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் 

  சொல்லக் கேட்டு இம் 

மாற்றம் என் ஆவது என்று 

  மன்னவன் மறுத்த பின்னும் 

நீற்று அணி விளங்கு மேனி 

  நிறை புகழ்ச் சண்பை மன்னர் 

வேற்று வாது இனி என் 

  செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்.  795 

 

 

நீடு மெய்ப் பொருளின் உண்மை 

  நிலை பெறும் தன்மை எல்லாம் 

ஏடுற எழுதி மற்றவ் 

  வேட்டினை யாமும் நீரும் 

ஓடு நீர் ஆற்றில் இட்டால் 

  ஒழுகுதல் செய்யாது அங்கு 

நாடி முன் தங்கும் ஏடு 

  நற்பொருள் பரிப்பது என்றார்.  796 

 

 

என்று அமண் கையர் கூற 

  ஏறு சீர் புகலி வேந்தர் 

நன்று அது செய்வோம் என்று அங்கு 

  அருள் செய நணுக வந்து 

வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு 

  இனிச் செய்யும் இவ்வாது 

ஒன்றினும் தோற்றார் செய்வது 

  ஒட்டியே செய்வது என்றார்.  797 

 

 

அங்கது கேட்டு நின்ற அமணரும் 

  அவர் மேல் சென்று 

பொங்கிய வெகுளி கூரப் 

  பொறாமை காரணமே ஆகத் 

தங்கள் வாய் சோர்ந்து தாமே 

  தனிவாதில் அழிந்தோம் ஆகில் 

வெங்கழு ஏற்றுவான் இவ் 

  வேந்தனே என்று சொன்னார்.  798 

 

 

மற்றவர் சொன்ன வார்த்தை 

  கேட்டலும் மலய மன்னன் 

செற்றத்தால் உரைத்தீர் உங்கள் 

  செய்கையும் மறந்தீர் என்று 

பற்றிய பொருளின் ஏடு படர் 

  புனல் வைகை ஆற்றில் 

பொற்புற விடுவதற்குப் போதுவது 

  என்று கூற.  799 

 

 

பிள்ளையார் முன்னம் பைம் பொன் 

  பீடத்தில் இழிந்து போந்து 

தெள்ளு நீர்த் தரளப் பத்திச் 

  சிவிகை மேல் ஏறிச் சென்றார் 

வள்ளலார் அவர் தம் பின்பு 

  மன்னன் மா ஏறிச் சென்றான் 

உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு 

 

  மால் ஏறிச் சென்றார்.  800 

 

தென்னவன் வெப்புத் தீர்ந்து 

  செழுமணிக் கோயில் நீங்கிப் 

பின்னுற அணைந்த போது 

  பிள்ளையார் பெருகும் செல்வம் 

மன்னிய மதுரை மூதூர் மறுகில் 

  வந்தருளக் கண்டு 

துன்னிய மாதர் மைந்தர் தொழுது 

  வேறு இனைய சொன்னார்.  801 

 

 

மீனவன் கொண்ட வெப்பை நீக்கி 

  நம் விழுமம் தீர்த்த 

ஞான சம்பந்தர் இந்த 

  நாயனார் காணும் என்பார் 

பால் நறும் குதலைச் செய்ய 

  பவளவாய் பிள்ளையார் தாம் 

மான சீர்த் தென்னன் நாடு 

  வாழ வந்து அணைந்தார் என்பார்.  802 

 

 

எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு 

  நம் அருகர் என்பார் 

புரிசடை அண்ணல் நீறே பொருள் 

  எனக் கண்டோம் என்பார் 

பெருகு ஒளி முத்தின் பைம் பொன் 

  சிவிகை மேல் பிள்ளையார் தாம் 

வரும் அழகு என்னே என்பார் 

  வாழ்ந்தன கண்கள் என்பார்.  803 

 

 

ஏதமே விளைந்த இந்த அடிகள் 

  மார் இயல்பால் என்பார் 

நாதனும் ஆல வாயில் 

  நம்பனே காணும் என்பார் 

போதம் ஆவதுவும் முக்கண் 

  புராணனை அறிவது என்பார் 

வேதமும் நீறும் ஆகி 

  விரவிடும் எங்கும் என்பார்.  804 

 

 

அடிகள்மார் முகங்கள் எல்லாம் 

  அழிந்தன பாரீர் என்பார் 

கொடிய வஞ்சனைகள் எல்லாம் 

  குலைந்தன போலும் என்பார் 

வடிகொள் வேல் மாறன் காதல் 

  மாறின வண்ணம் என்பார் 

விடிவதாய் முடிந்தது இந்த 

  வெஞ்சமண் இருளும் என்பார்.  805 

 

 

நெருப் பினில் தோற்றார் தாங்கள் 

  நீரில் வெல்வர்களோ என்பார் 

இருப்பு நெஞ்சு உடையரேனும் 

  பிள்ளையார்க்கு எதிரோ என்பார் 

பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் 

  படுவன் பாரீர் என்பார் 

மருப்புடைக் கழுக்கோல் செய்தார் 

  மந்திரியார் தாம் என்பார்.  806 

 

 

ஏடுகள் வைகை தன்னில் 

  இடுவதற்கு அணைந்தார் என்பார் 

ஓடும் நீருடன் செலாது 

  நிற்குமோ ஓலை என்பார் 

நீடிய ஞானம் பெற்றார் 

  நிறுத்தவும் வல்லர் என்பார் 

நாடெலாம் காண இங்கு 

  நண்ணுமா காணீர் என்பார்.  807 

 

 

தோற்றவர் கழுவில் ஏறத் 

  துணிவதே அருகர் என்பார் 

ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு 

  அழகு இது என்பார் 

நீற்றினால் தென்னன் தீங்கு 

  நீங்கிய வண்ணம் கண்டார் 

போற்றுவார் எல்லாம் சைவ 

  நெறியினைப் போற்றும் என்பார்.  808 

 

 

இன்னன இரண்டு பாலும் 

  ஈண்டினர் எடுத்துச் சொல்ல 

மின் ஒளி மணிப் பொற்காம்பின் 

  வெண் குடை மீது போதப் 

பன் மணிச் சிவிகை தன் 

  மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு 

நன்நெறி காட்ட வந்தார் 

  நான் மறை வாழ வந்தார்.  809 

 

 

தென் தமிழ் விளங்க வந்த 

  திருக்கழு மலத்தான் வந்தான் 

மன்றுளார் அளித்த ஞான 

  வட்டில் வண்கையன் வந்தான் 

வென்றுலகு உய்ய மீள வைகையில் 

  வெல்வான் வந்தான் 

என்றுபன் மணிச் சின்னங்கள் 

  எண் திசை நெருங்கி ஏங்க.  810 

 

 

பன் மணி முரசம் சூழ்ந்த 

  பல்லியம் இயம்பப் பின்னே 

தென்னனும் தேவியாரும் உடன் 

  செலத் திரண்டு செல்லும் 

புன் நெறி அமணர் வேறு 

  ஓர் புடைவரப் புகலி வேந்தர் 

மன்னிய வைகை ஆற்றின் கரை 

  மிசை மருவ வந்தார்.  811 

 

 

கார் கெழு பருவம் வாய்ப்பக் 

  காமுறும் மகளிர் உள்ளம் 

சீர் கெழு கணவன் தன்பால் 

  விரைவு உறச் செல்லுமா போல்

நீர் கெழு பௌவம் நோக்கி 

  நிரை திரை இரைத்துச் செல்லும் 

பார் கெழு புகழின் மிக்க 

  பண்புடை வைகை ஆறு.  812 

 

 

ஆற்றில் நீர் கடுக ஓடும் 

  மருங்கு உற அரசன் நோக்கி 

நீற்று அணி திகழ்ந்த மேனி 

  நிறை மதிப் பிள்ளையாரும் 

வேற்றுரு அருகர் நீரும் விதித்த 

  ஏடு இடுக என்றான் 

தோற்றவர் தோலார் என்று 

  முன்னுறத் துணிந்து இட்டார்கள்.  813 

 

 

படு பொருள் இன்றி நெல்லில் பதடி 

  போல் உள் இலார் மெய் 

அடுபவர் பொருளை அத்தி நாத்தி 

  என்று எழுதி ஆற்றில் 

கடுகிய புனலைக் கண்டும் 

  அவாவினால் கையில் ஏடு 

விடுதலும் விரைந்து கொண்டு 

  வேலை மேல் படர்ந்ததன்றே.  814 

 

 

ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் 

  தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத் 

தேறு மெய் உணர்வு இலாதார் 

  கரைமிசை ஓடிச் சென்றார் 

பாறும் அப்பொருள் மேல் கொண்ட 

  பட்டிகை எட்டாது அங்கு 

நூறுவில் கிடைக்கு முன்னே 

  போனது நோக்கிக் காணார்.  815 

 

 

காணவும் எய்தா வண்ணம் கடலின் 

  மேல் செல்லும் ஏடு 

நாணிலா அமணர் தம்மை 

  நட்டாற்றில் விட்டுப் போகச் 

சேணிடைச் சென்று நின்றார் 

  சிதறினார் திகைத்தார் மன்னன் 

ஆணையில் வழுவ மாட்டாது 

  அஞ்சுவார் அணைய மீண்டார்.  816 

 

 

வேறு ஒரு செயல் இலாதார் 

  வெருவுற்று நடுங்கித் தம்பால் 

ஈறு வந்து எய்திற்று என்றே 

  மன்னவன் எதிர் வந்து எய்தி 

ஊறுடை நெஞ்சில் அச்சம் 

  வெளிப்பட ஒளிப்பார் போன்று 

மாறு கொண்டீரும் இட்டால் 

  வந்தது காண்டும் என்றார்.  817 

 

 

மாசு சேர் அமணர் எல்லாம் 

  மதியினில் மயங்கிக் கூற 

ஆசிலா நெறியில் சேர்ந்த 

  அரசனும் அவரை விட்டுத் 

தேசு உடைப் பிள்ளையார் தம் 

  திருக்குறிப்பு அதனை நோக்கப் 

பாசுரம் பாடல் உற்றார் 

  பர சமயங்கள் பாற.  818 

 

 

தென்னவன் மாறன் தானும் 

  சிரபுரத்துத் தலைவர் தீண்டிப் 

பொன் நவில் கொன்றையார் 

  தம் திருநீறு பூசப் பெற்று 

முன்னை வல் வினையும் நீங்கி 

  முதல்வனை அறியும் தன்மை 

துன்னினான் வினைகள் ஒத்துத் 

  துலை என நிற்றலாலே.  819 

 

 

உலகியல் வேத நூல் 

  ஒழுக்கம் என்பது 

நிலவு மெய்ந் நெறி 

  சிவ நெறியது என்பதும் 

கலதி வாய் அமணர் 

  காண்கிலார்கள் ஆயினும் 

பலர் புகழ் தென்னவன் 

  அறியும் பான்மையால்.  820 

 

 

அந்தணர் தேவர் ஆன் 

  இனங்கள் வாழ்க என்று 

இந்த மெய்ம் மொழிப் 

  பயன் உலகம் இன்புறச் 

சந்த வேள்விகள் முதல் 

  சங்கரர்க்கு முன் 

வந்த அர்ச்சனை 

  வழிபாடும் அன்னவாம்.  821 

 

 

வேள்வி நற்பயன் வீழ் புனல் ஆவது 

நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் 

ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை 

மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.  822 

 

 

ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி 

வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் 

சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் 

வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே.  823 

 

 

சொன்ன வையகமும் துயர் தீர்கவே 

என்னும் நீர்மை இக பரத்தில் துயர் 

மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட 

முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்.  824 

 

 

அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத் 

தெரியலாம் நிலையால் தெரியார் என 

உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் 

பெரிய நல் அடையாளங்கள் பேசினார்.  825 

 

 

ஆயினும் பெரியார் அவர் என்பது 

மேய இவ் இயல்பே அன்றி விண் முதல் 

பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் 

ஏயும் யாவும் இவர் வடிவு என்றதாம்.  826 

 

 

பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே 

என்பது யார் உணர்வான் 

  எனும் சென்று எட்ட ஒணா 

மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார் 

அன்பு சூழ் சண்பை ஆண்தகையாரவர்.  827 

 

 

வெந்த சாம்பல் விரை என்பது தமது 

அந்தம் இல் ஒளியல்லா ஒளி எலாம் 

வந்து வெந்தற மற்றப் பொடி அணி 

சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்.  828 

 

 

தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும் 

அமைத்து இங்கு யாவையும் 

  ஆங்கு அவை வீந்த போது

இமைத்த சோதி அடக்கிப் பின் ஈதலால் 

எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்.  829 

 

 

தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான் 

மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என 

இம்மையே நினைவார் தம் இருவினைப் 

பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம்.  830 

 

 

எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று 

இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் 

முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று 

அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்.  831 

 

 

ஆதி ஆட்பாலவர்க்கு அருளும் திறம் 

நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால் 

ஓதும் எல்லை உலப்பில ஆதலின் 

யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்பதாம்.  832 

 

 

அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து 

இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் 

முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத் 

தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்.  833 

 

 

மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் 

தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் 

இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு 

அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்.  834 

 

 

தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது 

ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில் 

ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் 

ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம்.  835 

 

 

மாதுக்கம் நீங்கல் உறுவீர் 

  மனம் பற்றும் என்பது 

ஆதிச் சுடர்ச் சோதியை 

  அன்பின் அகத்துள் ஆக்கிப் 

போதித்த நோக்கு உற்று 

  ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து 

பேதித்த பந்தப் பிறப்பின் 

  நெறி பேர்மின் என்றாம்.  836 

 

 

ஈண்டு சாதுக்கள் என்று 

  எடுத்து ஓதிற்று 

வேண்டும் வேட்கைய 

  எல்லாம் விமலர்தாள் 

பூண்ட அன்பினில் 

  போற்றுவீர் சார்மின் என்று 

ஆண்ட சண்பை 

  அரசர் அருளினார்.  837 

 

 

ஆடும் எனவாம் திருப்பாட்டின் 

  அமைத்த மூன்றும் 

நீடும் புகழோ பிறர் 

  துன்பம் நீத்தற்கோ என்று 

தேடும் உணர்வீர் உலகுக்கு 

  இவை செய்த ஈசர் 

கூடும் கருணைத் திறம் 

  என்றனர் கொள்கை மேலோர்.  838 

 

 

கருதும் கடிசேர்ந்த என்னும் 

  திருப் பாட்டில் ஈசர் 

மருவும் பெரும் பூசை 

  மறுத்தவர்க் கோறல் முத்தி 

தரு தன்மையது ஆதல் சண்டீசர் 

  தம் செய்கை தக்கோர் 

பெரிதும் சொலக் கேட்டனம் 

  என்றனர் பிள்ளையார் தாம்.  839 

 

 

வேத முதல்வன் எனும் 

  மெய்த் திருப்பாட்டினினேர் 

ஆதி உலகோர் இடர் 

  நீங்கிட ஏத்த ஆடும் 

பாத முதலாம் பதிணெண் 

  புராணங்கள் என்றே 

ஓது என்று உரை செய்தனர் 

  யாவும் ஓதாது உணர்ந்தோர்.  840 

 

 

பாவுற்ற பார் ஆழி 

  வட்டத் திருப்பாட்டின் உண்மை 

காவல் தொழிலான் எனும் 

  கண்ணனும் காவல் பெற்றது 

யாவர்க்கும் மேலாய ஈசன் 

  அருள் ஆழி பெற்று 

மேவுற்ற சீர் உற்றது 

  என்றனர் வேத வாயர்.  841 

 

 

மாலா யவன் என்ன 

  வரும் திருப்பாட்டில் மாலும் 

தோலா மறை நான்முகனும் 

  தொடர்வாம் அமரர் 

ஏலா வகை சுட்ட நஞ்சு 

  உண்டு இறவாமை காத்த 

மேலாம் கருணைத் திறம் 

  வெங்குருவேந்தர் வைத்தார்.  842 

 

 

ஆன அற்று அன்றி என்ற 

  அத்திருப் பாட்டில் கூடல் 

மா நகரத்துச் சங்கம் 

  வைத்தவன் தேற்றத் தேறா 

ஈனர்கள் எல்லைக் கிட்ட 

  ஏடு நீர் எதிர்ந்து செல்லில் 

ஞானம் ஈசன் பால் அன்பே 

  என்றனர் ஞானம் உண்டார்.  843 

 

 

வெறியார் பொழில் சண்பையர் 

  வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் 

குறி ஏறிய எல்லை 

  அறிந்து கும்பிட்டேன் அல்லேன் 

சிறியேன் அறிவுக்கு அவர்தம் 

  திருப்பாதம் தந்த 

நெறியே சிறிது யான் அறி 

  நீர்மை கும்பிட்டேன் அன்பால்.  844 

 

 

அலரும் விரை சூழ் பொழில் 

  காழியுள் ஆதி ஞானம் 

மலரும் திருவாக்கு உடை 

  வள்ளலார் உள்ள வண்ணம் 

பலரும் உணர்ந்து உய்யப் 

  பகர்ந்து வரைந்து ஆற்றில் 

நிலவும் திரு ஏடு 

  திருக்கையால் நீட்டி இட்டார்.  845 

 

 

திருவுடைப் பிள்ளையார் தம் 

  திருக்கையால் இட்ட ஏடு 

மருவிய பிறவி ஆற்றில் மாதவர் 

  மனம் சென்றால் போல் 

பொரு புனல் வைகை ஆற்றில் 

  எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் 

இரு நிலத்தோர் கட்கு எல்லாம் 

  இது பொருள் என்று காட்டி.  846 

 

 

எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் 

  என்று எழுதும் ஏட்டில் 

தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை 

  முன் ஓங்கப் பாட 

அம்புய மலராள் மார்பன் 

  அனபாயன் என்னும் சீர்த்திச் 

செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் 

  கூன் நிமிர்ந்தது அன்றே.  847 

 

 

ஏடு நீர் எதிர்ந்து செல்லும் 

  பொழுது இமையோர்கள் எல்லாம் 

நீடிய வாழ்த்தில் போற்றி 

  நிமிர்ந்த பூமாரி தூர்த்தார் 

ஆடியல் யானை மன்னன் 

  அற்புதம் எய்தி நின்றான் 

பாடு சேர் அமணர் அஞ்சி 

  பதைப்புடன் பணிந்து நின்றார்.  848 

 

 

ஆற்றின் மேல் செல்லும் ஏடு 

  தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக் 

காற்றென விசையில் செல்லும் கடும் 

  பரி ஏறிக் கொண்டு 

கோல் தொழில் திருத்த வல்ல 

  குலச்சிறையார் பின் சென்றார் 

ஏற்று உயர் கொடியினாரைப் 

  பாடினார் ஏடு தங்க.  849 

 

 

ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி 

  என்று எடுத்துப் பாடக் 

கூடிய நீரில் ஏடு 

  குலச்சிறை யாரும் கூடிக் 

காடு இடமாக 

  ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு 

நீடுநீர் நடுவுட் புக்கு நின்ற 

  ஏடு எடுத்துக் கொண்டார்.  850 

 

 

தலை மிசை வைத்துக்கொண்டு 

  தாங்கரும் மகிழ்ச்சி பொங்க 

அலைபுனல் கரையில் ஏறி அங்கு 

  இனிது அமர்ந்த மேருச் 

சிலை உடையவர் தாள் போற்றி 

  மீண்டு சென்று அணைவார் தெய்வ 

மலை மகள் குழைத்த ஞானம் 

  உண்டவர் தம்பால் வந்தார்.  851 

 

 

மற்றவர் பிள்ளையார் தம் மலர் 

  அடி வணங்கிப் போற்றிக் 

கொற்றவன் முதலாய் உள்ளோர் காண 

  முன் கொணர்ந்த ஏடு 

பற்றிய கையில் ஏந்திப் 

  பண்பினால் யார்க்கும் காட்ட 

அற்றருள் பெற்ற தொண்டர் 

  அர ஒலி எழுந்ததன்றே.  852 

 

 

மன்னவன் மாறன் கண்டு 

  மந்திரியாரை நோக்கி 

துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற 

  இச் சமணர் தாங்கள்

முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் 

  முற்றச் செய் தார் 

கொல் நுனைக் கழுவில் ஏற 

  முறை செய்க என்று கூற.  853 

 

 

புகலியில் வந்த ஞானப் 

  புங்கவர் அதனைக் கேட்டும் 

இகல் இலர் எனினும் சைவர் 

  இருந்து வாழ் மடத்தில் தீங்கு 

தகவு இலாச் சமணர் செய்த 

  தன்மையால் சாலும் என்றே 

மிகை இலா வேந்தன் செய்கை 

  விலக்கிடாது இருந்த வேலை.  854 

 

 

பண்பு உடை அமைச்சனாரும் பார் 

  உளோர் அறியும் ஆற்றால் 

கண்புடை பட்டு நீண்ட 

  கழுத்தறி நிரையில் ஏற்ற 

நண்பு உடை ஞானம் உண்டார் 

  மடத்துத் தீ நாடி இட்ட 

எண் பெரும் குன்றத்து 

  எண்ணாயிரவரும் ஏறினார்கள்.  855 

 

 

தோற்றவர் கழுவில் ஏறித் 

  தோற்றிடத் தோற்றும் தம்பம் 

ஆற்று இடை அமணர் ஓலை 

  அழிவினால் ஆர்த்த தம்பம் 

வேற்று ஒரு தெய்வம் இன்மை 

  விளக்கிய பதாகைத் தம்பம் 

போற்று சீர்ப் பிள்ளையார் தம் 

  புகழ்ச் சயத் தம்பம் ஆகும்.  856 

 

 

தென்னவன் தனக்கு நீறு 

  சிரபுரச் செல்வர் ஈந்தார் 

முன்னவன் பணிந்து கொண்டு 

  முழுவதும் அணிந்து நின்றான் 

மன்னன் நீறு அணிந்தான் என்று 

  மற்றவன் மதுரை வாழ்வார் 

துன்னி நின்றார்கள் எல்லாம் தூய 

  நீறு அணிந்து கொண்டார்.  857 

 

 

பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் 

  புனிதனாய் உய்ந்த போது 

நீதியும் வேதநீதி ஆகியே 

  நிகழ்ந்தது எங்கும் 

மேதினி புனிதம் ஆக 

  வெண்ணீற்றின் விரிந்த சோதி 

மாதிரம் தூய்மை செய்ய அமண் 

  இருள் மாய்ந்தது அன்றே.  858 

 

 

மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் 

  நெறி காட்டி மிக்க 

ஊனமாம் சமணை நீக்கி உலகு 

  எலாம் உய்யக் கொண்ட 

ஞான சம்பந்தர் வாய்மை 

  ஞாலத்தில் பெருகி ஓங்கத் 

தேனலர் கொன்றையார் தம் 

  திருநெறி நடந்தது அன்றே.  859 

 

 

மறையவர் வேள்வி செய்ய 

  வானவர் மாரி நல்க 

இறைவன் நல் நெறியின் ஓங்க 

  இகத்தினில் அவனி இன்பம் 

குறைவிலது எனினுங் கூற்றை 

  உதைத்தவர் நாமம் கூறி 

நிறை கடல் பிறவித் துன்பம் 

  நீங்கிடப் பெற்றது அன்றே.  860 

 

 

அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய் 

  அமர்ந்த அண்ணல் 

பங்கயச் செய்ய பாதம் பணிவன் 

  என்று எழுந்து சென்று 

பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் 

  புகலியர் வேந்தர் போந்தார் 

மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் 

  போற்றி வந்தார்.  861 

 

 

எண்ணரும் பெருமைத் தொண்டர் 

  யாவரும் மகிழ்ச்சி எய்திப் 

புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்துடன் 

  போற்றிப் போத 

மண் எலாம் உய்ய வந்த 

  வள்ளலார் தம்மைக் கண்டு 

கண்ணினால் பயன் கொண்டார்கள் 

  கன்னி நாட்டவர்கள் எல்லாம்.  862 

 

 

ஆலவாய் அண்ணல் கோயில் அம் 

  கண் முன் தோன்றக் கண்டு 

பால் அறாவாயர் மிக்க பண்பினால் 

  தொழுது சென்று 

மாலும் நான்முகனும் போற்ற 

  மன்னினார் கோயில் வாயில் 

சீல மாதவத்தோர் முன்பு சிவிகை 

  நின்று இழிந்து புக்கார்.  863 

 

 

தென்னவன் தானும் எங்கள் 

  செம்பியன் மகளார் தாமும் 

நன்னெறி அமைச்சனாரும் 

  ஞான சம்பந்தர் செய்ய 

பொன்னடிக் கமலம் போற்றி உடன் 

  புகப் புனிதர் கோயில் 

தன்னை முன் வலம் கொண்டுள்ளால் 

  சண்பையர் தலைவர் புக்கார்.  864 

 

 

கைகளும் தலை மீது ஏறக் 

  கண்ணில் ஆனந்த வெள்ளம் 

மெய் எலாம் பொழிய வேத 

  முதல்வரைப் பணிந்து போற்றி 

ஐயனே அடியனேனை அஞ்சல் 

  என்று அருள வல்ல 

மெய்யனே என்று வீடல் 

  ஆலவாய் விளம்பல் உற்றார்.  865 

 

 

ஒன்று வேறு உணர்வும் இல்லேன் 

  ஒழிவற நிறைந்த கோலம் 

மன்றில் நான் மறைகள் ஏத்த 

  மானுடர் உய்ய வேண்டி 

நின்று நீ ஆடல் செய்கை 

  நினைப்பதே நியமம் ஆகும் 

என்று பூம் புகலி மன்னர் 

  இன் தமிழ்ப் பதிகம் பாட.  866 

 

 

தென்னவன் பணிந்து நின்று 

  திரு ஆல வாயில் மேவும் 

மன்னனே அமணர் தங்கள் 

  மாயையால் மயங்கி யாதும் 

உன்னை யான் அறிந்திலேனை உறு 

  பிணி தீர்த்து ஆட் கொள்ள

இன் அருள் பிள்ளையாரைத் 

  தந்தனை இறைவ என்றான்.  867 

 

 

சீர் உடைப் பிள்ளையாரும் 

  சிறப்பு உடை அடியாரோடும் 

காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் 

  தாள் வணங்கிக் காதல் 

ஆரருள் பெற்றுப் போற்றி அங்கு 

  நின்று அரிது நீங்கி 

ஏர் இயல் மடத்தில் உள்ளால் 

  இனிது எழுந்து அருளிப் புக்கார்.  868 

 

 

நீடு சீர்த் தென்னர் 

  கோனும் நேரியன் பாவையாரும் 

மாடு சென்று இறைஞ்சி நோக்கி 

  மாளிகை தன்னில் போக்கிக் 

கூடிய மகிழ்ச்சி பொங்கக் 

  கும்பிடும் விருப்பினாலே 

நாடி அங்கு இருந்து தங்கள் 

  நாதரைப் பாடல் உற்றார்.  869 

 

 

திருவியமகத்தின் உள்ளும் 

  திரு நீல கண்டப் பாணர்க்கு 

அருளிய திறமும் போற்றி 

  அவரோடும் அளவளாவித் 

தெருள் உடைத் தொண்டர் சூழத் 

  திருத் தொண்டின் உண்மை நோக்கி 

இருள் கெட மண்ணில் வந்தார் 

  இனிது அமர்ந்து இருந்தார் அன்றே.  870 

 

 

பூழியன் மதுரை உள்ளார் புறத்து 

  உளார் அமணர் சேரும் 

பாழியும் அருகர் மேவும் 

  பள்ளியும் ஆன எல்லாம் 

கீழ் உறப் பறித்துப் போக்கிக் 

  கிளர் ஒளித் தூய்மை செய்தே 

வாழி அப் பதிகள் எல்லாம் 

  மங்கலம் பொலியச் செய்தார்.  871 

 

 

மீனவன் தேவி யாரும் 

  குலச் சிறையாரும் மிக்க 

ஞான சம்பந்தர் பாதம் நாள் 

  தொறும் பணிந்து போற்ற 

ஆன சண்பையர் கோனாரும் 

  ஆலவாய் அமர்ந்தார் பாதம் 

ஊன் அமர்ந்து உருக ஏத்தி 

  உளம் களித்து உறையும் நாளில்.  872 

 

 

செய் தவத்தால் சிவ பாத 

  இருதயர் தாம் பெற்றெடுத்த 

வைதிக சூளா மணியை 

  மா தவத்தோர் பெரு வாழ்வை 

மை திகழும் திரு மிடற்றார் 

  அருள் பெற்ற வான் பொருளை 

எய்திய பூம் புகலியிலே 

  இருந்த நாள் மிக நினைந்தார்.  873 

 

 

ஆன புகழ்த் திருநாவுக்கரசர் 

  பால் அவம் செய்த 

மானம் இலா அமணர் உடன் 

  வாது செய்து வெல்வதற்கும் 

மீனவன் தன் நாடு உய்ய 

  வெண் நீறு பெருக்குதற்கும் 

போனவர் பால் புகுந்தபடி 

  அறிவன் எனப் புறப்படுவார்.  874 

 

 

துடி இடையாள் தன்னோடும் 

  தோணியில் வீற்றிருந்த பிரான் 

அடி வணங்கி அலர் சண்பை 

  அதனின்றும் வழிக் கொண்டு 

படியின் மிசை மிக்கு உளவாம் 

  பரன் கோயில் பணிந்து ஏத்தி 

வடி நெடு வேல் மீனவன் 

  தன் வள நாடு வந்து அணைந்தார்.  875 

 

 

மா மறையோர் வளம் பதிகளிடைத் 

  தங்கி வழிச் செல்வார் 

தே மருவு நறும் பைந்தார்த் 

  தென்னவன் தன் திரு மதுரை 

தாம் அணைந்து திரு ஆலவாய் 

  அமர்ந்த தனி நாதன் 

பூ மருவும் சேவடிக் கீழ் 

  புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார்.  876 

 

 

அங்கணரைப் பணிந்து போந்து அருகு 

  அணைந்தார் தமை வினவ 

இங்கு எம்மைக் கண் விடுத்த 

  காழியார் இள ஏறு 

தங்கும் இடம் திரு நீற்றுத் 

  தொண்டர் குழாம் சாரும் இடம் 

செங்கமலத் திருமடம் மற்று இது 

  என்றே தெரிந்து உரைத்தார்.  877 

 

 

செப்புதலும் அது கேட்டுத் 

  திரு மடத்தைச் சென்று எய்த 

அப்பர் எழுந்து அருளினார் எனக் 

  கண்டோர் அடி வணங்கி 

ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு 

  ஓகை உரை செய்ய 

எப்பொழுது வந்து அருளிற்று 

  என்று எதிரே எழுந்தருள.  878 

 

 

சிவ பாத இருதயர் தாம் 

  முன் தொழுது சென்று அணையத் 

தவம் ஆன நெறி அணையும் 

  தாதையார் எதிர் தொழுவார் 

அவர் சார்வு கண்டு அருளித் 

  திருத் தோணி அமர்ந்து அருளிப் 

பவ பாசம் அறுத்தவர் 

  தம் பாதங்கள் நினைவுற்றார்.  879 

 

 

இருந்தவத்தோர் அவர் முன்னே 

  இணை மலர்க்கை குவித்தருளி 

அரும் தவத்தீர் எனை அறியாப் 

  பருவத்தே எடுத்து ஆண்ட 

பெருந் தகை எம் பெருமாட்டி 

  உடன் இருந்ததே என்று 

பொருந்து புகழ்ப் புகலியின் மேல் 

  திருப் பதிகம் போற்றி இசைத்தார்.  880 

 

 

மண்ணின் நல்ல என்று எடுத்து 

  மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி 

உள் நிறைந்த காதலினால் 

  கண் அருவி பாய்ந்து ஒழுக 

அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் 

  அருள் செய்தார் 

தண் நறும்பூஞ் செங்கமலத்தார் 

  அணிந்த தமிழ் விரகர்.  881 

 

 

திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் 

  சாத்திச் சிறப்பின் மிகு

விருப்பினால் அவர் தமக்கு விருந்து 

  அளித்து மேவும் நாள் 

அருப்புறு மெய்க் காதல் 

  புரி அடியவர்கள் தம்மோடும் 

பொருப்புறு கைச் சிலையார் சேர் 

  பதி பிறவும் தொழப் போவார்.  882 

 

 

ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று 

  அறம் உரைத்த அங்கணனை 

நூலின் கண் பொருள்பாடி 

  நூல் அறிவார்க்கு ஈந்தானைக்  

காலம் பெற்று இனிது இறைஞ்சிக் 

  கை தொழுது புறம் போந்தார் 

சீலம் கொள் தென்னவனும் 

  தேவியரும் உடன் போத.  883 

 

 

தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் 

  போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தை 

ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு 

  கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே 

யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு 

  இறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்று 

ஞானம் உணர்வார் அருள அவரும் போத 

  நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே.  884 

 

 

ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் 

  போற்றி அணி ஆப்பனூரை அணைந்து பணிந்துபாடி 

நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து 

  நிலவு திருப் பதிகங்கள் நிகழப் பாடிச் 

சேறு அணிந்த வயற் பழனக் கழனி 

  சூழ்ந்த சிரபுரத்து வந்தருளும் செல்வர் செங்கண் 

ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை 

  எய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே.  885 

 

 

பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் 

  செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து 

புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் 

  பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக் 

கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் 

  கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக் 

குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக் 

  கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே.  886 

 

 

புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப் 

  புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று 

நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து 

  பாடி நல்தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார்

விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்ற 

  மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித் 

திண்ணிய பொற் சிலைத் தடக்கை இராமன் செய்த 

  திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார்.  887 

 

 

செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் 

  திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடு 

மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை 

  மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் 

பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப் 

  புடைவலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்து 

பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று 

  பாடினார் மன்னவனும் பரவி ஏத்த.  888 

 

 

சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த 

  சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து 

காதலுடன் அந் நகரில் இனிது மேவிக் 

  கண் நுதலான் திருத் தொண்டனார்க் கெல்லாம் 

கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க் 

  குலச்சிறையார் குறைவு அறுத்துப் போற்றிச் செல்ல 

நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி 

  நளிர் வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே.  889 

 

 

அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி 

  ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில் 

மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண் 

  மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடிச்  

சென்னி மதி புனை மாட மாதோட்டத்தில் 

  திருக் கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம் 

உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் 

  உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார்.  890 

 

 

அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார் 

  அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் 

புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப் 

  புணரி பொரு தலை கரைவாய் ஒழியப் போந்தே 

செப்பரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ் 

  மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும் 

ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் 

  உலகு உய்ய ஞானம் உண்டார்.  891 

 

 

பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் 

  பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி 

விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி 

  வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த 

கதி அருளிக் காழிநகர் வாழ வந்தார் கண் 

  நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ 

மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல 

  மந்திரியார் பதி மண மேற்குடியில் வந்தார்.  892 

 

 

அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த 

  பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து 

மன்னு திருத் தொண்டருடன் மீண்டு 

  சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும் 

கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக் 

  குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச் 

சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் 

  சிரபுரத்துச் செல்வர் இனிது இருந்த நாளில்.  893 

 

 

பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு 

  போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் பெற்று  

மங்கையருக்கு அரசியார் தாமும் தென்னர் 

  மன்னவனும் மந்திரியார் தாமும் கூட 

அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது 

  உடன் போக ஒருப்படும் அவ்வளவு நோக்கி 

இங்கு நான் மொழிந்ததனுக்கு இசைந்தீர் 

  ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று.  894 

 

 

சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம் 

  தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு 

மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி 

  மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து 

ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரைப் 

  பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் 

ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற 

  அந் நாட்டை அகன்று மீண்டு அணையச் செல்வார்.  895 

 

 

பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க 

  பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும் 

பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும் 

  பத்தருடன் பதி உள்ளோர் போற்றச் சென்று 

கன்னி மதில் திருக்களரும் போற்றிக் 

  கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி 

முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி 

  முள்ளிவாய்க் கரை அணைந்தார் முந்நூல் மார்பர்.  896 

 

 

மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப் 

  பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி 

அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் 

  ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம் 

நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை 

  நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக் 

கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு 

  அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை.  897 

 

 

தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர் 

  தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று 

மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி 

  ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக் 

காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் 

  நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி 

நாவலமே கோலாக அதன் மேல் நின்று 

  நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட.  898 

 

 

உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் 

  செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று 

செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம் 

  பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு 

நம்பர் அவர் தமை வணங்க ஞானம் 

  உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து 

வம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் 

  வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.  899 

 

 

நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு 

  நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று 

வாணிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி 

  மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று 

தாணுவே  ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் 

  தன்மையால் அருள் தந்த தலைவா நாகப் 

பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே 

  எனப் பணிந்து போற்றிச் செய்தார்.  900 

 

 

போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும் 

  நாளில் பூழியன் முன் புன்சமயத்து அமணர் தம்மோடு 

ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் 

  பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி 

ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம் 

  அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ 

நாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி 

  நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே.  901 

 

 

நீடு திருத் தொண்டர் புடை சூழ அங்கண் நித்தில 

  யானத்திடை நின்று இழிந்து சென்று 

பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் 

  பிறை அணிந்த சென்னியார் மன்னும் கோயில் 

மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு 

  மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப் 

பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று 

  பரவினார் கண் அருவி பரந்து பாய.  902 

 

 

தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் 

  தீயின் கண் இடும் ஏடு பச்சையாக்கி 

என் உள்ளத் துணையாகி ஆலவயில் அமர்ந்து 

  இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று 

பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப்போந்து 

  பண்பினிய தொண்டருடன் அங்குவைகி 

மன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை 

  வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.  903 

 

 

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து 

  சிவபெருமான் தனைப் பரவிச் செல்லும் போது 

சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை 

  சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம் 

ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு 

  தாரை அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 

பார் குலவு தனிக் காளம் சின்னம் எல்லாம் 

  பரசமய கோளரி வந்தான் என்று ஊத.  904 

 

 

புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப் 

  புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள் 

எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர் 

  எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று 

மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம் 

  கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் 

கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி 

  முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார்.  905 

 

 

மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார் முன் 

  வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் 

பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் 

  ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது 

செற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து 

  எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று 

வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்றன்றோ 

  பிடிப்பது என வெகுண்டு சொன்னான்.  906 

 

 

புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி 

  பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும் 

மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை 

  வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி 

இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது 

  இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று 

முத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து 

  முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.  907 

 

 

வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் 

  மற்று இவர் தம் பொருள் நிலைமை மறாத வண்ணம் 

பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி பொய்ம் 

  மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற 

அருமறை சொல் திருப்பதிகம் எழுதும் 

  அன்பர் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே 

உரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம் 

  உருண்டு வீழ்க எனப் பொறா உரை முன் விட்டார்.  908 

 

 

ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க 

  எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் 

மாறில் வலி மந்திரமாம் அசனி போல 

  வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே 

வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த 

  புத்தன் மேனியையும் தலையினையும் வெவ்வேறாகக் 

கூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து 

  ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே.  909 

 

 

மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி வாக்கின் 

  போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும் 

அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர் 

  அறுத்ததுவும் கண்ட அரன் அடியார் எல்லாம் 

வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பம் 

  செய எதிர்ந்த விலக்கு நீங்க 

உற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம் 

  ஒதுக என அவ்வொலி வான் உற்றது அன்றே.  910 

 

 

அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எள்லாம் 

  அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி 

வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ 

  வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் 

எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு 

  பொருள் பேசுவற்கு இசைவது என்று 

தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன் 

  தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார்.  911 

 

 

அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த அடல் 

  ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று 

மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் 

  தரளச் சிவிகையினின்று இழிந்து வேறு ஓர் 

சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு 

  சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் 

புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார் 

  புகலி காவலர் ஏவல் போற்றிச் சென்றார்.  912 

 

 

சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் 

  செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் 

வென்றி மழ இளம் களிறு சண்பை யாளி 

  வேத பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன் 

நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும் 

  நண்ணும் எனக் கூறுதலும் நன்மை சாராத் 

தன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன் 

  சத்திர மண்டபம் முன்பு சார வந்தான்.  913 

 

 

அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும் 

  பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் 

எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் 

  இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர் 

பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் 

  போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை 

உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன 

  உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்.  914 

 

 

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து 

  கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில் 

பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த 

  நிலை யோகமே பொருந்தச் செய்ய 

உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து 

  ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் 

பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன 

  பான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான்.  915 

 

 

என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து 

  ஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும் 

நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று 

  நாட்டுகின்ற முத்தி தான் யாவது என்றார் 

நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர் 

  நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் 

ஒன்றிய அகந்தத்த விவேமுத்தி என்ன உரை 

  செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.  916 

 

 

ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட 

  அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித் 

தாங்கிய ஞானத்துடனாங்கு அந்தம் ஐந்தும் தாம் 

  வீந்து கெட்டன வேல் தலைவன் தானும் 

ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் 

  ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து 

ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை 

  கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான்.  917 

 

 

கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் 

  கலந்து உளன் முத்தியில் என்றான் என்னக் காணும் 

இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும் 

  இல்லையேல் அவர் உணர்ச்சி இல்லை என்றார் 

முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து 

  மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு 

வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும் 

  அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான்.  918 

 

 

சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் 

  தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு 

அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன 

  போது அவன் பெறுதல் இல்லை என்றார் 

முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி 

  முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் 

இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது 

  அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான்.  919 

 

 

இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு 

  எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல் 

மெய்ப் படிய கரணங்கள் உயிர் தாம் இங்கு 

  வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது 

செப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித் திரிவு 

  இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான் 

அப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால் 

  அம்முத்தியுடன் இன்பம் அணையாது என்றார்.  920 

 

 

அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது 

  இன்றி அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம் 

கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக் 

  கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர் 

பொய்வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் 

  எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய் 

எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் 

  இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார்.  921 

 

 

உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன் 

  உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப் 

புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் 

  இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம் 

கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வேறு 

  குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து 

உணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத் 

  தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான்.  922 

 

 

எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் 

  எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய் 

அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன 

  அனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன் 

தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த 

  இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் 

கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது 

  அல்லால் காணாத காலத்துக் கதுவாது என்றார்.  923 

 

 

ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் 

  அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே 

ஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும் 

  என்றவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்ய 

வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன் 

  மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர் 

பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் 

  பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.  924 

 

 

புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை 

  பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற 

மந்தவுணர்வு உடையவரை நோக்கிச் சைவம் 

  அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே 

அந்தமில் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில 

  கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்யச்  

சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத் 

  திரு மறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.  925 

 

 

அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை 

  நோக்கம் அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கி 

முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் 

  முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் 

நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை 

  அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர் 

சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித் 

  திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்.  926 

 

 

அந்நகரில் அடியார்கள் எதிர் 

  கொள்ளப் புக்கு அருளி 

கொன்னவிலும் கூற்று உதைத்தார் குரை 

  கழல்கள் பணிந்து ஏத்தி 

மன்னி அமர்ந்து உறையும் 

  நாள் வாகீசமா முனிவர் 

எந்நகரில் எழுந்து அருளிற்று என்று 

  அடியார் தமை வினவ.  927 

 

 

அங்கு அவரும் அடி போற்றி 

  ஆண்ட அரசு எழுந்து அருளிப் 

பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் 

  கண் போற்றி இசைத்து 

தங்கு திருத்தொண்டு செயும் 

  மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி 

எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி 

  எல்லாம் இயம்பினார்.  928 

 

 

அப்பரிசு அங்கு அவர் மொழிய 

  ஆண்ட அரசினைக் காணும் 

ஒப்பரிய பெருவிருப்பு மிக்கு 

  ஓங்க ஒளிபெருகு 

மைப் பொருவு கறைக் கண்டர் 

  கழல் வணங்கி அருள் பெற்றுச் 

செப்பரிய புகழ்ப் புகலிப் 

  பிள்ளையார் செல்கின்றார்.  929 

 

 

பூ விரியும் தடம் சோலை 

  புடை பரப்பப் புனல் பரக்கும் 

காவிரியின் தென்கரை போய்க்கண் 

  நுதலார் மகிழ்ந்த இடம் 

மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி 

  விருப்பு உறுமெய்த் தொண்டரோடு 

நாவரசர் உழைச் சண்பை 

  நகர் அரசர் நண்ணுவார்.  930 

 

 

அந்தணர் சூளா மணியார் 

  பூந்துருத்திக்கு அணித்தாக 

வந்தருளும் பெருவார்த்தை 

  வாகீசர் கேட்டருளி 

நம் தமையாளுடையவரை நாம் 

  எதிர் சென்று இறைஞ்சுவது 

முந்தை வினைப்பயன் என்று முகம் 

  மலர அகம் மலர்வார்.  931 

 

 

எதிர் சென்று பணிவன் 

  என எழுகின்ற பெருவிருப்பால் 

நதி தங்கு சடை முடியார் 

  நற்பதங்கள் தொழுது அந்தப் 

பதி நின்றும் புறப்பட்டு பர 

  சமயம் சிதைத்தவர் பால் 

முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் 

  எய்த வந்து அணைந்தார்.  932 

 

 

திருச்சின்னம் பணிமாறக் கேட்ட 

  நால்திசை உள்ளோர் 

பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் 

  தமைச் சூழ்ந்த 

நெருக்கினிடை யவர் காணா வகை 

  நிலத்துப் பணிந்து உள்ளம் 

உருக்கி எழும் மனம் பொங்கத் 

  தொண்டர் குழாத்துடன் அணைந்தார்.  933 

 

 

வந்து அணைந்த வாகீசர் வண் 

  புகலி வாழ் வேந்தர் 

சந்த மணித் திருமுத்தின் 

  சிவிகையினைத் தாங்கியே 

சிந்தை களிப்பு உற 

  வந்தார் திருஞான சம்பந்தர் 

புந்தியில் வேறு ஒன்று 

  நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.  934 

 

 

அப்பர் தாம் எங்கு உற்றார் 

  இப்பொழுது என்று அருள் செய்யக் 

செப்பரிய புகழ்த் திருநாவுக் 

  கரசர் செப்புவார் 

ஒப்பரிய தவம் செய்தேன் 

  ஆதலினால் உம் அடிகள் 

இப்பொழுது தாங்கிவரப் பெற்று 

  உய்ந்தேன் யான் என்றார்.  935 

 

 

அவ் வார்த்தை கேட்டு அஞ்சி 

  அவனியின் மேல் இழிந்தருளி 

இவ்வாறு செய்தருளிற்று என்னாம் 

  என்று இறைஞ்சுதலும் 

செவ்வாறு மொழி நாவலர் 

  திருஞான சம்பந்தர்க்கு 

எவ்வாறு செயத் தகுவது 

  என்று எதிரே இறைஞ்சினார்.  936 

 

 

சூழ்ந்து மிடைந்தருகணையும் தொண்டர் 

  எல்லாம் அது கண்டு 

தாழ்ந்து நிலம் உற வணங்கி 

  எழுந்து தலை கை குவித்து 

வாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று 

  இவரை வணங்கப் பெற்று 

ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று 

  அண்டமெலாம் உற ஆர்த்தார்.  937 

 

 

திருஞான சம்பந்தர் 

  திருநாவுக்கரசர் தமைப் 

பெருகு ஆர்வத் தொடும் அணைந்து 

  தழீஇக் கொள்ளப் பிள்ளையார் 

மருவாரும் மலர் அடிகள் வணங்கி 

  உடன் வந்து அணைந்தார் 

பொருவாரும் புனல் சடையார் 

  மகிழ்ந்த திருப்பூந் துருத்தி.  938 

 

 

அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் 

  ஏற்றார் மகிழ் கோயில் 

முன் பணித்து ஆகச் சென்று 

  கோபுரத்தை முன் இறைஞ்சித் 

துன்பம் இலாத் திருத் 

  தொண்டருடன் தொழுது புக்கருளி 

என்பு உருக வலம் கொண்டு 

  பணிந்து ஏத்தி இறைஞ்சினார்.  939 

 

 

பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே 

  புறத்து அணைவார் 

செய்ய சடையார் கோயில் 

  திருவாயில் முன்னாக 

மையறு சீர்த் தொண்டர் குழாம் 

  வந்து புடை சூழ உலகு 

உய்யவருவார் தங்களுடன் மகிழ்ந்து 

  அங்கு இனிது இருந்தார்.  940 

 

 

வாக்கின் தனி மன்னர் 

  வண்புகலி வேந்தர் தமை

போக்கும் வரவும் வினவப் 

  புகுந்தது எல்லாம்

தூக்கின் தமிழ் விரகர் 

  சொல்லிறந்த ஞான மறை 

தேக்கும் திருவாயால் செப்பி 

  அருள் செய்தார்.  941 

 

 

காழியினில் வந்த கவுணியர் 

  தம் போர் ஏற்றை 

ஆழி மிசைக் கல் 

  மிதப்பில் வந்தார் அடிவணங்கி 

வாழி திருத்தொண்டு என்னும் 

  வான் பயிர்தான் ஒங்குதற்குச் 

சூழும் பெரு வேலி 

  ஆனீர் எனத் தொழுதார்.  942 

 

 

பிள்ளையார் தாமும் அவர் 

  முன் தொழுது பேரன்பின் 

வெள்ளம் அனைய புகழ் 

  மானியர் மேன்மையையும் 

கொள்ளும் பெருமைக் 

  குலச் சிறையார் தொண்டினையும் 

உள்ள பரிசு எல்லாம் மொழிந்து 

  அங்கு உவந்து இருந்தார்.  943 

 

 

தென்னற்கு உயிரோடு நீறு 

  அளித்துச் செங்கமலத்து 

அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் 

  அன்பு அருளித் 

துன்னும் நெறி வைதிகத்தின் 

  தூ நெறியே ஆக்குதலால் 

மன்னு புகழ் வாகீசர் 

  கேட்டு மனம் மகிழ்ந்தார்.  944 

 

 

சொல்லின் பெரு வேந்தர் தொண்டை 

  வள நாடு எய்தி 

மல்கு புகழ்க் காஞ்சி 

  ஏகாம்பரம் மன்னும் 

செல்வர் கழல் பணிந்து 

  சென்றது எல்லாம் செப்புதலும் 

புல்கு நூல் மார்பரும் போய்ப் 

  போற்றும் திறம் புரிந்தார்.  945 

 

 

அங்கணரைப் போற்றி எழுந்து 

  ஆண்ட அரசு அமர்ந்த 

பொங்கு திரு மடத்தில் புக்கு 

  அங்கு இனிது அமர்ந்து 

திங்கள் பகவணியும் 

  சென்னியார் சேவடிக்கீழ்த் 

தங்கு மனத்தோடு தாள் 

  பரவிச் செல்லும் நாள்.  946 

 

 

வாகீச மாமுனிவர் மன்னும் 

  திரு ஆலவாய் 

நாகம் அரைக்கு அசைத்த 

  நம்பர் கழல் வணங்கப் 

போகும் பெரு விருப்புப் 

  பொங்கப் புகலியின்மேல் 

ஏகும் பெரும் காதல் 

  பிள்ளையார் ஏற்று எழுவார்.  947 

 

 

பூந்துருத்தி மேவும் புனிதர் 

  தமைப் புக்கு இறைஞ்சிப் 

போந்து திருவாயில் புறத்து 

  அணைந்து நாவினுக்கு 

வேந்தர் திரு உள்ளம் 

  மேவ விடை கொண்டருளி 

ஏந்தலார் எண்ணிறந்த 

  தொண்டருடன் ஏகினார்.  948 

 

 

மாடு புனல் பொன்னி 

  இழிந்து வட கரையில் 

நீடு திரு நெய்த்தானம் 

  ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப் 

பாடு தமிழ் மாலைகளும் 

  சாத்திப் பரவிப் போய் 

ஆடல் புரிந்தார் திருப் பழனம் 

  சென்று அணைந்தார்.  949 

 

 

செங்கண் விடையார் திருப் பழனம் 

  சேர்ந்து இறைஞ்சிப் 

பொங்கிய காதலின் முன் 

  போற்றும் பதி பிறவும் 

தங்கிப்போய்ச் சண்பை நகர் 

  சார்ந்தார் தனிப் பொருப்பின் 

மங்கை திருமுலைப்பால் உண்டு 

  அருளும் வள்ளலார்.  950 

 

 

தென்னாட்டு அமண் மாசு 

  அறுத்துத் திரு நீறே 

அந்நாடு போற்று வித்தார் வந்து 

  அணையும் வார்த்தை கேட்டு 

எந் நாள் பணிவது என 

  ஏற்று எழுந்த மா மறையோர் 

முன்னாக வேதம் முழங்க 

  எதிர் கொண்டார்.  951 

 

 

போத நீடு மா மறையவர் எதிர் 

  கொளப் புகலி காவலரும் தம் 

சீத முத்து அணிச் சிவிகை நின்று 

  இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி 

நாதர் கோயில் முன் தோன்றிட நகை 

  மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய் 

ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் 

  மணிக் கோபுரம் சென்று உற்றார்.  952 

 

 

அங்கம் மாநிலத் தெட்டுற வணங்கிப் 

  புக்கு அஞ்சலி முடி ஏறப் 

பொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன் 

  பணிந்து போற்றி எடுத்து ஓதித் 

துங்க நீள் பெரும் தோணியாம் 

  கோயிலை அருளினால் தொழுது ஏறி 

மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் 

  மலர்க் கழல் பணிவுற்றார்.  953 

 

 

முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து 

  எழ முகந்து கண் களிகூரப் 

பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் 

  ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி 

உற்றுமை சேர்வது எனும் திருவியமகம் 

  உவகையால் எடுத்து ஓதி 

வெற்றியாக மீனவன் அவை எதிர் 

  நதி மிசைவரு கரன் என்பார்.  954 

 

 

சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் 

  திருக் கடைக் காப்பு ஏற்றி 

வாரின் மல்கிய வன முலையாளுடன் 

  மன்னினார் தமைப் போற்றி 

ஆரும் இன்னருள் பெற்று மீண்டு 

  அணைபவர் அங்கையால் தொழுது ஏத்தி 

ஏரின் மல்கிய கோயில் முன் 

  பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்.  955 

 

 

தாதையாரும் அங்கு உடன் பணிந்து 

  அணைந்திடச் சண்பையார் தனி ஏறு 

மூது எயில் திருவாயிலைத் தொழுது 

  போய் முகை மலர்க் குழலார்கள் 

ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு 

  எழ அணி மறுகிடைச் சென்று 

காதலித்தவர்க்கு அருள் செய்து தம் 

  திருமாளிகைக் கடை சார்ந்தார்.  956 

 

 

நறவம் ஆர் பொழில் புகலியில் 

  நண்ணிய திருஞான சம்பந்தர் 

விறலியாருடன் நீலகண்டப் பெரும் 

  பாணர்க்கு மிக நல்கி 

உறையுளாம் அவர் மாளிகை செல 

  விடுத்து உள் அணைதரும் போதில் 

அறலின் நேர் குழலார் மணி விளக்கு 

  எடுத்து எதிர்கொள அணைவுற்றார்.  957 

 

 

அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் 

  வந்து அடி வணங்கிடத் தாமும் 

துங்க நீள் பெரும் தோணியில் தாயர் 

  தாள் மனம் கொளத் தொழுவாராய்த் 

தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் 

  நாள் தம்பிரான் கழல் போற்றிப் 

பொங்கும் இன்னிசைத் திருப்பதிகம் பல 

  பாடினார் புகழ்ந்து ஏத்தி.  958 

 

 

நீல மா விடம் திரு மிடற்று 

  அடக்கிய நிமலரை நேர் எய்தும் 

காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து 

  உடன் கலந்த அன்பர்களோடும் 

சால நாள்கள் அங்கு உறைபவர் 

  தையலாள் தழுவிடக் குழை கம்பர் 

கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை 

  கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்.  959 

 

 

தண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து 

  வந்து எம்பிரான் மகிழ் கோயில் 

கண்டு போற்றி நாம் பணிவது என்று 

  அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று 

அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் 

  இருந்தவர் அருள் பெற்றுத் 

தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து 

  எழும் தாதையார்க்கு உரை செய்வார்.  960 

 

 

அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து 

  அருமறை அங்கி வேட்டு அன்போடும் 

துப்பு நேர் சடையார் தமைப் பரவியே 

  தொழுது இரும் எனச் சொல்லி 

மெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு 

  எலாம் விடை கொடுத்து அருளிப்போய் 

ஒப்பு இலாதவர் தமை வழியிடைப் 

  பணிந்து உருகும் அன்பொடு செல்வார்.  961 

 

 

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் 

  திரு நடம் பணிந்து ஏத்திப் 

பல் பெரும் தொண்டர் எதிர் கொளப் 

  பரமர் தம் திருத்தினை நகர் பாடி 

அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக் 

  குழியினை அணைந்து ஏத்தி 

மல்கு வார் சடையார் திருப் பாதிரிப் 

  புலியூரை வந்து உற்றார்.  962 

 

 

கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் 

  கழல் இணை பணிந்து அங்கு 

முன்ன மா முடக்கான் முயற்கு அருள் 

  செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி 

மன்னுவார் பொழில் திரு வடுகூரினை 

  வந்து எய்தி வணங்கிப்போய் 

பின்னுவார் சடையார் திருவக்கரை 

  பிள்ளையார் அணைவுற்றார்.  963 

 

 

வக்கரைப் பெருமான் தனை வணங்கி 

  அங்கு அமரும் நாள் அருகாலே 

செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் 

  சென்று தாழ்ந்து உடன் மீண்டு 

மிக்க சீர் வளர் அதிகை 

  வீரட்டமும் மேவுவார் தம் முன்பு 

தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் 

  கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார்.  964 

 

 

ஆதி தேவர் அங்கு அமர்ந்த 

  வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே 

பூதம் பாட நின்று ஆடுவார் 

  திரு நடம் புலப்படும் படி காட்ட 

வேத பாலகர் பணிந்து மெய் 

  உணர்வுடன் உருகிய விருப்போடும் 

கோதிலா இசை குலவு குண்டைக்குறள் 

  பூதம் என்று எடுத்து ஏத்தி.  965 

 

 

பரவி ஏத்திய திருப் பதிகத்து 

  இசை பாடினார் பணிந்து அங்கு 

விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது 

  உறைபவர் விமலரை வணங்கிப் போய் 

அரவ நீள் சடை அங்கணர் 

  தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர் 

சிர புரத்து வந்தருளிய திருமறைச் 

  சிறுவர் சென்று அணைவுற்றார்.  966 

 

 

சென்று அணைந்து சிந்தையின் மகிழ் 

  விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப் 

பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் 

  புனைந்தவர் அடி போற்றிக் 

குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் 

  மெய் குலவிய இசை பாடி 

நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் 

  திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்.  967 

 

 

கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் 

  குரை கழல் பணிந்து ஏத்தி 

ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் 

  அறையணி நல்லூரை அணைந்து ஏத்திப்  

பாவலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் 

  பரவு சீர் அடியார்கள் 

மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை 

  விளங்கிட அருள் செய்தார்.  968 

 

 

சீரின் மன்னிய பதிகம் முன் பாடி 

  அத் திரு அறையணி நல்லூர் 

வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் 

  மலை மிசை வலம் கொள்வார் 

பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் 

  நாள்தொறும் பணிந்து ஏத்தும் 

காரின் மல்கிய சோலை அண்ணாமலை 

  அன்பர் காட்டிடக் கண்டார்.  969 

 

 

அண்ணாமலை அங்கு அமரர்பிரான் 

  வடிவு போன்று தோன்றுதலும் 

கண்ணால் பருகிக் கை தொழுது 

  கலந்து போற்றும் காதலினால் 

உண்ணா முலையாள் எனும் பதிகம் 

  பாடி தொண்டருடன் போந்து 

தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் 

  சென்று சேர்வுற்றார்.  970 

 

 

அங்கண் அணைவார் பணிந்து எழுந்து 

  போற்றி செய்து அம்மலை மீது 

தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள்தாமரைகள் 

  தம் முடி மேல் 

பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து 

  புளகம் அலர்ந்த திருமேனி 

எங்கும் ஆகிக் கண் பொழியும் 

  இன்ப அருவி பெருக்கினார்.  971 

 

 

ஆதி மூர்த்தி கழல் வணங்கி 

  அங்கண் இனிதின் அமரும் நாள் 

பூத நாதர் அவர் தம்மைப் 

  பூவார் மலரால் போற்றி இசைத்துக்  

காதலால் அத் திருமலையில் சில 

  நாள் வைகிக் கமழ் கொன்றை 

வேத கீதர் திருப்பதிகள் 

  பிறவும் பணியும் விருப்புறுவார்.  972 

 

 

மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் 

  போந்து வட திசையில் 

செங்கண் விடையார் பதி பலவும் 

  பணிந்து புகலிச் செம்மலார் 

துங்க வரைகள் கான் பலவும் 

  கடந்து தொண்டைத் திருநாட்டில் 

திங்கள் முடியார் இனிது 

  அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார்.  973 

 

 

தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்த 

  திருவோத்தூரில் திருத் தொண்டர் 

தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் 

  அங்கு அணையக் களி சிறந்து 

மேவும் கதலி தோரணங்கள் விளக்கு 

  நிரைத்து நிறை குடமும் 

பூவும் பொரியும் சுண்ணமும் முன் 

  கொண்டு போற்றி எதிர் கொண்டார்.  974 

 

 

சண்பை வேந்தர் தண் தரளச் 

  சிவிகை நின்றும் இழிந்து அருளி 

நண்பின் மிக்க சீர் அடியார் 

  சூழ நம்பர் கோபுரம் சூழ் 

விண் பின் ஆக முன் ஓங்கும் 

  வியன் பொற்புரிசை வலம் கொண்டு 

பண்பு நீடிப் பணிந்து எழுந்து 

  பரமர் கோயிலுள் அடைந்தார்.  975 

 

 

வாரணத்தின் உரி போர்த்த 

  மைந்தர் உமையாள் மணவாளர் 

ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் 

  தன்முன் அணைந்து இறைஞ்சி 

நாரணற்கும் பிரமற்கும் நண்ணற்கு 

  அரிய கழல் போற்றும் 

காரணத்தின் வரும் இன்பக் 

  கண்ணீர் பொழியக் கைதொழுதார்.  976 

 

 

தொழுது விழுந்து பணிந்து எழுந்து 

  சொல் மாலைகளால் துதி செய்து 

முழுதும் ஆனார் அருள் பெற்றுப் 

  போந்து வைகி முதல்வர் தம்மைப் 

பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி 

  செய்து அங்கு அமர்வார் முன் 

அமுது வணங்கி ஒரு தொண்டர் 

  அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்.  977 

 

 

அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் 

  ஆக்கும் பனைகள் ஆன எலாம் 

மங்குலுற நீள் ஆண் பனையாய்க் 

  காயா வாகக் கண்ட அமணர் 

இங்கு நீர் இட்டு ஆக்குவன 

  காய்த்தற்கு அடைவுண்டோ என்று 

பொங்கு நகை செய்து இழித்து உரைத்தார் 

  அருள வேண்டும் எனப் புகல.  978 

 

 

பரமனார் திருத் தொண்டர் பண்பு 

  நோக்கிப் பரிவு எய்த 

விரவு காதலொடும் விரைந்து 

  விமலர் கோயில் புக்கருளி 

அரவும் மதியும் பகை தீர 

  அணிந்தார் தம்மை அடி வணங்கி 

இரவு போற்றித் திருப்பதிகம் 

  இசையில் பெருக எடுத்தருளி.  979 

 

 

விரும்பு மேன்மைத் திருக் கடைக் 

  காப்பு அதனில் விமலர் அருளாலே 

குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் 

  வாய்மை குலவு தலால் 

நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் 

  நிறைந்த குலைகளாய்க் குரும்பை 

அரும்பு பெண்ணை ஆகியிடக் 

  கண்டோர் எல்லாம் அதிசயித்தார்.  980 

 

 

சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு 

  ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப் 

பாரில் நீடும் ஆண் பனை 

  முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால் 

நேரும் அன்பர் தம் கருத்து 

  நேரே முடித்துக் கொடுத்து அருளி 

ஆரும் உவகைத் திருத் தொண்டர் 

  போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்.  981 

 

 

தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் 

  தம் செய்கை கண்டு திகைத்த அமணர் 

அந்நாடு அதனை விட்டு அகல்வார் 

  சிலர் தம் கையில் குண்டிகைகள் 

என்ன ஆவன மற்று இவை என்று 

  தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த 

பொன்னார் மேனிப் புரிசடையான் 

  அன்றே என்று போற்றினார்.  982 

 

 

பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் 

  அத் தாலமும் முன்பு 

உள்ள பாசம் விட்டு அகல 

  ஒழியாப் பிறவி தனை ஒழித்துக் 

கொள்ளும் நீர்மைக் காலங்கள் 

  கழித்துச் சிவமே கூடினவால் 

வள்ளலார் மற்று அவர் அருளின் 

  வாய்மை கூறின் வரம்பு என்னாம்.  983 

 

 

அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து 

  போந்து ஆடு அரவினுடன் 

பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் 

  மகிழும் பதிகள் பல போற்றி 

மங்கை பாகர் அமர்ந்து அருளும் 

  வயல் மாகறலை வழுத்திப் போய்க் 

கொங்கு மலர் நீர்க் குரங்கணி 

  முட்டத்தைச் சென்று குறுகினார்.  984 

 

 

ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை 

  அணைந்து பணிந்து ஏத்தி 

நீதி வாழும் திருத்தொண்டர் 

  போற்ற நிகரில் சண்பையினில் 

வேதமோடு சைவ நெறி 

  விளங்க வந்த கவுணியனார் 

மாதோர் பாகர் தாம் மன்னும் மதில் 

  சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.  985 

 

 

நீடு காஞ்சி வாழ்நரும் 

  நிலாவு மெய்ம்மை அன்பரும் 

மாடு சண்பை வள்ளலார் 

  வந்து அணைந்த ஓகையால் 

கூடுகின்ற இன்ப நேர் 

  குலாவு வீதி கோலினார் 

காடு கொண்ட பூகம் 

  வாழை காமர் தோரணங்களால்.  986 

 

 

கொடி நிரைத்த வீதியில் 

  கோலவே திகைப்புறம் 

கடி கொள் மாலை மொய்த்த 

  பந்தர் கந்த நீர்த் தசும்புடன் 

மடிவில் பொன் விளக்கு எடுத்து 

  மாதர் மைந்தர் மல்குவார் 

படி விளக்கும் அன்பரும் 

  பரந்த பண்பில் ஈண்டுவார்.  987 

 

 

கோதைமார் ஆடலும் குலாவும் 

  தொண்டர் பாடலும் 

வேத கீத நாதமும் 

  மிக்கு எழுந்து விம்மவே 

காதல் நீடு காஞ்சி வாணர் 

  கம்பலைத்து எழுந்து போய் 

மூது எயில் புறம்பு சென்று 

  அணைந்து முன் வணங்கினார்.  988 

 

 

சண்பை ஆளும் மன்னர் முன்பு 

  தொண்டர் வந்து சார்தலும் 

பண்பு நீடியான முன்பு இழிந்து 

  இறைஞ்சு பான்மை கண்டு 

எண் பெருக்கும் மிக்க தொண்டர் 

  அஞ்சலித்து எடுத்த சொல் 

மண் பரக்க வீழ்ந்து 

  எழுந்து வானமுட்ட ஆர்த்தனர்.  989 

 

 

சேண் உயர்ந்த வாயில்நீடு 

  சீர்கொள் சண்பை மன்னனார் 

வாண் நிலாவும் நீற்று 

  அணி விளங்கிட மனத்தினில் 

பூணும் அன்பர் தம்முடன் 

  புகுந்திடப் புறத்து உளோர் 

காணும் ஆசையில் குவித்த 

  கைந்நிரை எடுத்தனர்.  990 

 

 

வியன் நெடுந் தெருவின் ஊடு 

  மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக் 

கயல் நெடும் கண் மாதரும் 

  காதல் நீடு மாந்தரும் 

புயல் பொழிந்ததாம் எனப் 

  பூவினோடு பொற்சு(ண்)ணம் 

இயலுமாறு வாழ்த்து எடுத்து 

  இரு மருங்கும் வீசினார்.  991 

 

 

இன்ன வண்ணம் யாவரும் 

  இன்பம் எய்த எய்துவார் 

பின்னுவார் சடை முடிப் 

  பிரான் மகிழ்ந்த கோயில்கள் 

முன் உறப் பணிந்து போய் 

  மொய் வரைத் திருமகள் 

மன்னு பூசனை மகிழ்ந்த 

  மன்னர் கோயில் முன்னினார்.  992 

 

 

கம்பவாணர் கோயில் வாயில் 

  கண்டுகை குவித்து எடுத்து 

உம்பர் ஓங்கு கோபுரத்தின் முன் 

  இறைஞ்சி உள் அணைந்து 

அம் பொன் மாளிகைப் புறத்தில் 

  அன்பரோடு சூழ வந்து 

இம்பர் ஞாலம் உய்ய 

  வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.  993 

 

 

செம் பொன் மலைக் கொடி 

  தழுவக் குழைந்து அருளும் திருமேனிக் 

கம்பவரை வந்து எதிர் 

  வணங்கும் கவுணியர்தம் காவலனார் 

பம்பு துளிக் கண்அருவி பாய்ந்து 

  மயிர்ப் புளகம் வரத் 

தம்பெருகு மனக் காதல் 

  தள்ள நிலமிசைத் தாழ்ந்தார்.  994 

 

 

பல முறையும் பணிந்தெழுந்து 

  பங்கயச் செங்கைம் முகிழ்ப்ப 

மலரு முகம் அளித்த 

  திரு மணிவாயால் மறையான் என்று 

உலகுய்ய எடுத்தருளி உருகிய 

  அன்பு என்பு உருக்க

நிலவுமிசை முதற்றாளம் நிரம்பிய 

  நீர்மையில் நிகழ.  995 

 

 

பாடினார் பணிவுற்றார் பரிவுறும் 

  ஆனந்தக் கூத்து 

ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி 

  தம் சென்னியின் மேல் 

சூடினார் மெய்ம் முகிழ்த்தார் 

  சூகரமும் அன்னமுமாய்த் 

தேடினார் இருவருக்கும் 

  தெரிவரியார் திருமகனார்.  996 

 

 

மருவிய ஏழ் இசை பொழிய 

  மனம் பொழியும் பேரன்பால் 

பெருகிய கண் மழை பொழியப் 

  பெரும் புகலிப் பெருந்தகையார் 

உருகிய அன்புள் அலைப்ப 

  உமை தழுவக் குழைந்தவரைப் 

பருகிய மெய் உணர்வினொடும் 

  பரவியே புறத்து அணைந்தார்.  997 

 

 

புறத்து அணைந்த தொண்டருடன் 

  போந்து அமைந்த திருமடத்தில் 

பெறற்கு அரும் பேறு உலகு 

  உய்யப் பெற்றருளும் பிள்ளையார் 

மறப்பரிய காதலுடன் வந்து 

  எய்தி மகிழ்ந்து உறைவார் 

அறப்பெரும் செல்வக் காமக் 

  கோட்டம் அணைந்து இறைஞ்சினார்.  998 

 

 

திரு ஏகம்பத்து அமர்ந்த 

  செழுஞ்சுடரைச் சேவடியில் 

ஒரு போதும் தப்பாதே 

  உள் உருகிப் பணிகின்றார் 

மருவு திரு இயமகமும் 

  வளர் இருக்குக்குறள் மற்றும் 

பெருகும் இசைத் திருப்பதிகத் 

  தொடை புனைந்தார் பிள்ளையார்.  999 

 

 

நீடு திருப் பொலிகாஞ்சி 

  நெறிக்காரைக் காடு இறைஞ்சிச் 

சூடு மதிக் கண்ணியார் துணை 

  மலர்ச் சேவடி பாடி 

ஆடும் அவர் இனிது அமரும் 

  அனேகதங்கா வதம் பரவி 

மாடு திருத் தானங்கள் பணிந்து 

 

  ஏத்தி வைகும் நாள்.  1000 

 

எண் திசையும் போற்றி இசைக்கும் 

  திருப்பதி மற்று அதன் புறத்துத் 

தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை 

  விடம் உண்டு இருண்ட 

கண்டர் மகிழ் மேற்றளியும் 

  முதலான கலந்து ஏத்தி 

மண்டு பெரும் காதலினால் வணங்கி 

  மீண்டு இனிது இருந்தார்.  1001 

 

 

அப்பதியில் விருப்பினோடும் அங்கணரைப் 

  பணிந்து அமர்வார் 

செப்பரிய புகழ்ப் பாலித் திரு 

  நதியின் தென் கரை போய் 

மைப் பொலியும் கண்டர் திருமாற் 

  பேறு மகிழ்ந்து இறைஞ்சி 

முப்புரம் செற்றவர் தம்மை 

  மொழி மாலை சாத்தினார்.  1002 

 

 

திருமாற் பேறு உடையவர் தம் 

  திருவருள் பெற்று எழுந்தருளிக் 

கருமாலும் கருமாவாய்க் காண்பரிய 

  கழல் தாங்கி 

மருவாற்றல் மழவிடையார் திருவல்லம் 

  வணங்கித் தம் 

பெருமாற்குத் திருப்பதிகப் பெரும் 

  பிணையல் அணிவித்தார்.  1003 

 

 

அங்கு உள்ள பிற பதியில் 

  அரிக்கு அரியார் கழல் வணங்கி 

பொங்கு புனல் பால் ஆற்றின் 

  புடையில் வடபால் இறைவர் 

எங்கும் உறை பதி பணிவார் 

  இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச் 

செங்கண் விடை உகைத்தவரைத் 

  திருப்பதிகம் பாடினார்.  1004 

 

 

திருத்தொண்டர் பலர் சூழத் 

  திரு விற் கோலமும் பணிந்து 

பொருட் பதிகத் தொடை மாலை 

  புரம் எரித்த படி பாடி 

அருட்புகலி ஆண் தகையார் 

  தக்கோலம் அணைந்தருளி 

விருப்பினொடும் திருவூறல் மேவினார் 

  தமைப் பணிந்தார்.  1005 

 

 

தொழுது பல முறை போற்றிச் 

  சுரர் குருவுக்கு இளைய முனி 

வழுவில் தவம் புரிந்து ஏத்த 

  மன்னினார் தமை மலர்ந்த 

பழுதில் செழும் தமிழ் மாலைப் 

  பதிக இசை புனைந்தருளி 

முழுதும் அளித்தவர் அருளால் 

  போந்தனர் முத்தமிழ் விரகர்.  1006 

 

 

குன்ற நெடும் சிலையாளர் குலவிய 

  பல் பதி பிறவும் 

நின்ற விருப்புடன் இறைஞ்சி 

  நீடு திருத் தொண்டருடன் 

பொன் தயங்கு மணி 

  மாடப் பூந்தராய்ப் புரவலனார் 

சென்று அணைந்தார் பழையனூர்த் 

  திருவாலங் காட்டு அருகு.  1007 

 

 

இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண 

  ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் 

அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் 

  அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று 

தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச் 

  சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்றார்  

செம்மை நெறி வழுவாத பதியின் மாடோர் 

  செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்.  1008 

 

 

மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும் 

  மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து 

ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை 

  அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய 

ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் 

  நடு இடை யாமத்தினிடைத் தொழுது உணர்ந்து 

வேலை விடம் உண்டவர் தம் கருணை 

  போற்றி மெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்.  1009 

 

 

துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் 

  சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் 

எஞ்சல் இலா வகை முறையே பழையனூரார் 

  இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி 

அஞ்சன மாகரி உரித்தார் அருளாம் என்றே 

  அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப் 

பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் 

  பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்.  1010 

 

 

நீடும் இசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி நெடும் 

  கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை 

மாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த 

  போது மாலையினில் திரு ஆல வனத்து மன்னி 

ஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம் 

  அருளிச் செய்து அகம்மலரப் பாடி ஏத்திச் 

சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து 

  திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்.  1011 

 

 

திருப்பாசூர் அணைந்தருளி அங்கு மற்றச் செழும் 

  பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப் 

பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப் 

  புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்

விருப்பினுடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து 

  வீழ்ந்தெழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே 

அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார் 

  என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்.  1012 

 

 

மன்னு திருப்பதிக இசைப் பாடிப் போற்றி 

  வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு 

பிஞ்ஞகர் தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள 

  பிறபதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் 

முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் 

  ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை 

உன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க 

  உற்ற பெரு வேட்கையுடன் உவந்து சென்றார்.  1013 

 

 

மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ 

  மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் 

தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச் 

  சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி 

முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள 

  முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று 

புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில் 

  வைகிப் பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்.  1014 

 

 

இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் 

  எண்ணில் பெருவரைகள் இருமருங்கும் எங்கும் 

நிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும் 

  நிறை துவலை புடை சிதறி நிகழ் பவாகி 

அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் 

  அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச் 

சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும் 

  சிலை நிலத்தில் எழுந்தருளிச் செல்லா நின்றார்.  1015 

 

 

மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி 

  முத்தின் பரிச்சின்னம் வரம்பு இன்று ஆகப் 

பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப் 

  புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத் 

தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் 

  திருஞான சம்பந்தன் வந்தான் என்னும் 

நாதம் நிறை செவியினவாய் மாக்கள் எல்லாம் 

  நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண.  1016 

 

 

கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த 

  கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய 

மான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான 

  மறை நிலை பெரிய மரமும் தூறும் 

ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி 

  எய்தவரும் பெருமையவாம் எண் இலாத 

தானமும் மற்றவை கடந்து திருக் காளத்தி 

  சார எழுந்தருளினார் சண்பை வேந்தர்.  1017 

 

 

அம்பொன் மலைக் கொடி முலையாள் குழைத்த 

  ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று 

செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த 

  திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப் 

பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் 

  பல வேடச் சைவர் குல வேடர் மற்றும் 

உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோற் 

  உடன் விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார்.  1018 

 

 

திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் 

  மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது 

மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை 

  நின்றும் வேத பாரகர் இழிந்து வணங்கி மிக்க 

அசைவில் பெருந் தொண்டர் குழாம் தொழுது 

  போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் 

இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித் 

  திருமலை இம் மலைகளில் யாது என்று கேட்டார்.  1019 

 

 

வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் 

  தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும் 

இந்த மலை காளனோடு அத்தி தம்மில் 

  இகலி வழிபாடு செய இறைவர் மேவும் 

அந்தமில் சீர்க் காளத்தி மலையாம் என்ன 

  அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு 

சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம் 

  வானவர்கள் தானவர் என்று எடுத்துச் செல்வார்.  1020 

 

 

திருந்திய இன்னிசை வகுப்பு திருக் கண்ணப்பர் 

  திருத் தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப் 

பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து 

  பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகி 

அருந்தவர்கள் எம் மருங்கு மிடைந்து செல்ல 

  ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும் 

மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை 

  அடிவாரம் சார வந்து தாழ்ந்தார்.  1021 

 

 

தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே 

  தடம் சிலாதல சோபானத்தால்  ஏறி 

வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் 

  மருங்கு இறைஞ்சி உட்புகுந்து வளர் பொற் கோயில்

சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித் 

  தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி 

வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் 

  மெய் வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.  1022 

 

 

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் 

  அவ் அன்பின் உள்ளே மன்னும் 

வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண் 

  விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப் 

பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் 

  பைம் பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன் 

வள்ளத்தில் ஞான ஆரமுதம் உண்டார் மகிழ்ந்து 

  எழுந்து பல முறையும் வணங்குகின்றார்.  1023 

 

 

பங்கயக்கண் அருவி நீர் பாய நின்று 

  பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடி 

தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத் 

  தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட 

அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் 

  போற்ற அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்

பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் 

  புக்கருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர்.  1024 

 

 

யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ் 

  உலகும் உடையானை எண் இலாத 

தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின் 

  மிசை வீற்றிருந்த செய்ய தேனைப் 

பூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் 

  புரவலனார் காலங்கள் தோறும் புக்குப் 

பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து 

  பண்பு இனிய திருப்பதியில் பயிலும் நாளில்.  1025 

 

 

அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும் 

  அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக 

திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் 

  சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல 

மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப 

  வீற்று இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடி 

செம் கமல மலர் வாவித் திருக்கேதாரம் 

  தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி.  1026 

 

 

கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி 

  குலவு திருப் பருப்பதத்தின் கொள்கைபாடி 

ஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல 

  பருப்பதமும் பாடி மகிழ்ந்து இறைவர் தானம் 

போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப் 

  புகலியார் தம் பெருந் தகையார் புனிதம் ஆகும் 

நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ 

  நெடிது மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார்.  1027 

 

 

தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி 

  இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை

ஒன்று திரு ஒற்றியூர் உறைவார் தம்மை 

  இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் 

இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் 

  எந்தையார் இணை அடி என் மனத்த என்று 

பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி 

  கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்.  1028 

 

 

மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினொடும் 

  மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும் 

முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து 

  முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப் 

பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும் 

  பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு 

சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு 

  சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்.  1029 

 

 

திருவேற்காடு அமர்ந்த செழுஞ் சுடர் பொற் கோயில் 

  சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி 

வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் 

  வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி 

உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை 

  ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது 

பெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர் 

  பெரும் பதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார்.  1030 

 

 

மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும் 

  தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி 

மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் 

  மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து 

தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர் 

  தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று 

புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று 

  எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்.  1031 

 

 

பொன் திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால் 

  பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்

பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப் 

  பரந்து இழியும் கண் அருவி பாய நின்று 

சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் 

  தொழுது புறத்து அணைந்தருளித் தொண்டரோடும் 

ஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது 

  உறைந்தார் உலகுய்ய உலவாத ஞானம் உண்டார்.  1032 

 

 

இன்ன தன்மையில் பிள்ளையார் 

  இருந்தனர் இப்பால் 

பன்னு தொல் புகழ்த் 

  திரு மயிலாப்புரிப்  பதியில் 

மன்னு சீர்ப் பெரும் வணிகர் 

  தம் தோன்றலார் திறத்து 

முன்னம் எய்தியது ஒன்றினை 

  நிகழ்ந்தவா மொழிவாம்.  1033 

 

 

அரு நிதித் திறம் பெருக்குதற்கு 

  அரும்கலம் பலவும் 

பொரு கடல் செலப் போக்கி 

  அப் பொருள் குவை நிரம்ப 

வரும் மரக்கலம் மனைப் 

  படப்பு அணைக்கரை நிரைக்கும் 

இரு நிதிப் பெரும் 

  செல்வத்தின் எல்லையில் வளத்தார்.  1034 

 

 

தம்மை உள்ளவாறு அறிந்த 

  பின் சங்கரற்கு அடிமை 

மெய்ம்மையே செயும் விருப்புடன் 

  மிக்கதோர் அன்பால் 

பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருள் இது 

  எனக் கொளும் உள்ளச் 

செம்மையே புரி மனத்தினார் 

  சிவநேசர் என்பார்.  1035 

 

 

கற்றை வார் சடை 

  முடியினார் அடியவர் கலப்பில் 

உற்ற செய்கையில் ஒழிவு 

  இன்றி உருகிய மனமும் 

பற்று இலா நெறிப் 

  பர சமயங்களைப் பாற்றும் 

செற்ற(ம்) மேவிய சீலமும் 

  உடையராய்த் திகழ்வார்.  1036 

 

 

ஆன நாள் செல 

  அருமறைக் கவுணியர் பெருமான் 

ஞான போனகம் நுகர்ந்ததும் 

  நானிலம் உய்ய 

ஏனை வெம் சமண் 

  சாக்கியம் இழித்து அழித்ததுவும் 

ஊனம் இல் புகழ் அடியர் 

  பால் கேட்டு உவந்து உளராய்.  1037 

 

 

செல்வம் மல்கிய சிரபுரத் 

  தலைவர் சேவடிக் கீழ் 

எல்லை இல்லதோர் காதலின் 

  இடையறா உணர்வால் 

அல்லும் நண் பகலும் 

  புரிந்தவர் அருள் திறமே 

சொல்லவும் செயல் கேட்கவும் 

  தொழிலினர் ஆனார்.  1038 

 

 

நிகழும் ஆங்கு அவர் நிதிப் 

  பெரும் கிழவனின் மேலாய்த் 

திகழும் நீடிய திருவினில் 

  சிறந்து உளர் ஆகிப் 

புகழும் மேன்மையில் உலகினில் 

  பொலிந்து உளார் எனினும் 

மகவு இலாமையின் மகிழ் 

  மனை வாழ்க்கையின் மருண்டு.  1039 

 

 

அரிய நீர்மையில் அரும் தவம் 

  புரிந்து அரன் அடியார்க்கு 

உரிய அர்ச்சனை உலப்பில 

  செய்த அந் நலத்தால் 

கரியவாங்குழல் மனைவியார் வயிறு 

  எனும் கமலத் 

துரிய பூமகள் என ஒரு 

  பெண் கொடி உதித்தாள்.  1040 

 

 

நல்ல நாள் பெற ஓரையின் 

  நலம் மிக உதிப்பப் 

பல் பெரும் கிளையுடன் பெரு 

  வணிகர் பார் முழுதும்

எல்லையில் தனம் முகந்து 

  கொண்டு யாவரும் உவப்ப 

மல்லல் ஆவண மறுகிடைப் 

  பொழிந்து உளம் மகிழ்ந்தார்.  1041 

 

 

ஆறு சூடிய முடியினார் 

  அடியவர்க்கு அன்பால் 

ஈறு இலாத பூசனைகள் 

  யாவையும் மிகச் செய்து 

மாறு இலா மறையவர்க்கு 

  வேண்டின எல்லாம் அளித்துப் 

பேறு மற்று இதுவே எனும் 

  பெருங் களி சிறந்தார்.  1042 

 

 

சூத நல் வினை மங்கலத் 

  தொழில் முறை தொடங்கி 

வேத நீதியின் விதியுளி 

  வழா வகை விரித்த 

சாதகத் தொழிற் சடங்குகள் 

  தச தினம் செல்லக் 

காதல் மேவிய சிறப்பினில் 

  கடி விழா அயர்ந்தார்.  1043 

 

 

யாவரும் பெரு மகிழ்ச்சியால் 

  இன்புறப் பயந்த 

பாவை நல் உறுப்பு அணி 

  கிளர் பண்பு எலாம் நோக்கி 

பூவினாள் என வருதலில் 

  பூம்பாவை என்றே 

மேவும் நாமமும் விளம்பினர் 

  புவியின் மேல் விளங்க.  1044 

 

 

திங்கள் தோறும் முன் செய்யும் 

  அத் திருவளர் சிறப்பின் 

மங்கலம் புரி நல்வினை 

  மாட்சியில் பெருக 

அங்கண் மாநகர் அமைத்திட 

  ஆண்டு எதிர் அணைந்து 

தங்கு பேர் ஒளிச் 

  சீறடி தளிர் நடை பயில.  1045 

 

 

தளரும் மின்னின் அங்குரம் 

  எனத் தமனியக் கொடியின் 

வளர் இளம் தளிர்க் கிளை 

  என மணி கிளர் ஒளியின் 

அளவில் அஞ்சுடர்க் கொழுந்து 

  என அணைவுறும் பருவத்து 

இள வனப்பிணை அனையவர்க்கு 

  ஏழி ஆண்டு எய்த.  1046 

 

 

அழகின் முன் இளம் பதம் 

  என அணிவிளக்கு என்ன 

விழவு கொண்டு எழும் 

  பேதையர் உடன் விளையாட்டில் 

கழலொடு அம்மனை கந்துகம் 

  என்று மற்று இனைய 

மழலை மென்கிளிக் குலம் 

  என மனையிடை ஆடி.  1047 

 

 

பொற்றொடிச் சிறு மகளிர் 

  ஆயத்தொடும் புணர்ந்து 

சிற்றில் முற்றவும் இழைத்து உடன் 

  அடும் தொழில் சிறு சோறு 

உற்ற உண்டிகள் பயின்று ஒளி 

  மணி ஊசல் ஆடி 

மற்றும் இன்புறு வண்டல் 

  ஆட்டு அயர்வுடன் வளர.  1048 

 

 

தந்தையாரும் அத் தளிர் இளம் 

  கொம்பு அனாள் தகைமை 

இந்த வையகத்து இன்மையால் 

  இன்புறு களிப்பு 

வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று 

  இவள் மணம் பெறுவான் 

அந்தமில் எனது அருநிதிக்கு 

  உரியன் என்று அறைந்தார்.  1049 

 

 

ஆய நாள்களில் அமண் பயில் 

  பாண்டி நாடு அதனைத் 

தூய ஞானம் உண்டு 

  அருளிய தோன்றலார் அணைந்து

மாய(ம்) வல்ல அமண் 

  கையரை வாதில் வென்றதுவும் 

மேய வெப்பு இடர் 

  மீனவன் மேல் ஒழித்ததுவும்.  1050 

 

 

நெருப்பில் அஞ்சினார் தங்களை 

  நீரில் ஒட்டிய பின் 

மருப்பு நீள் கழுக்கோலில் 

  மற்று அவர்கள் ஏறியதும் 

விருப்பினால் திருநீறு மீனவற்கு 

  அளித்து அருளிப் 

பொருப்பு வில்லியார் சாதனம் 

  போற்று வித்ததுவும்.  1051 

 

 

இன்னவாறு எலாம் அறிந்துளார் 

  எய்தி அங்கு இசைப்பச் 

சொன்னவர்க்கு எலாம் இருநிதி 

  தூசு உடன் அளித்து 

மன்னு பூந்தராய் வள்ளலார் 

  தமைத் திசை நோக்கிச் 

சென்னி மேல் கரம் குவித்து 

  வீழ்ந்து எழுந்து செந்நின்று.  1052 

 

 

சுற்றம் நீடிய கிளை எலாம் 

  சூழ்ந்து உடன் கேட்பக் 

கற்ற மாந்தர் வாழ் காழி 

  நாடு உடையவர்க்கு அடியேன் 

பெற்று எடுத்த பூம் 

  பாவையையும் பிறங்கிய நிதியும் 

முற்றும் என்னையும் கொடுத்தனன் 

  யான் என்று மொழிந்தார்.  1053 

 

 

எல்லையில் பெரும் களிப்பினால் 

  இப்பரிசு இயம்பி 

முல்லை வெண் நகை முகிழ் 

  முலையாருடன் முடியா 

மல்கு செல்வத்தின் வளமையும் 

  மறை வளர் புகலிச் 

செல்வரே உடையார் எனும் 

  சிந்தையால் மகிழ்ந்தார்.  1054 

 

 

ஆற்று நாள்களில் அணங்கு 

  அனார் கன்னி மாடத்தின் 

பால் தடம்பொழில் மருங்கினில் 

  பனி மலர் கொய்வான் 

போற்றுவார் குழல் சேடியருடன் 

  புறம் போந்து 

கோல் தொடித் தளிர்க் கையினால் 

  முகை மலர் கொய்ய.  1055 

 

 

அன்பர் இன்புறும் ஆர்வத்தின் 

  அளித்த பாங்கு அல்லால் 

பொன் பிறங்கு நீர்ப் புகலி 

  காவலர்க்கு இது புணராது 

என்பது உள் கொண்ட பான்மை 

  ஓர் எயிற்று இளம் பணியாய் 

முன்பு அணைந்தது போல ஓர் 

  முள் எயிற்று அரவம்.  1056 

 

 

மௌவல் மாதவிப் பந்தரில் 

  மறைந்து வந்து எய்திச் 

செவ்வி நாண்முகை கவர் 

  பொழுதினில் மலர்ச் செங்கை 

நவ்வி வாள் விழி நறு 

  நுதல் செறி நெறி கூந்தல் 

கொவ்வை வாயவள் முகிழ் 

  விரல் கவர்ந்தது குறித்து.  1057 

 

 

நாலு தந்தமும் என்பு உறக் 

  கவர்ந்து நஞ்சு உகுத்து 

மேல் எழும் பணம் விரித்து 

  நின்று ஆடி வேறு அடங்க 

நீல வல் விடம் தொடர்ந்து 

  எழ நேரிழை மென்பூ 

மாலை தீயிடைப் பட்டது 

  போன்று உளம் மயங்கி.  1058 

 

 

தரையில் வீழ் தரச் 

  சேடியர் வெருக்கொண்டு தாங்கி 

விரை செய் மாடத்தின் உள் 

  கொடு புகுந்திட வணிகர் 

உரையும் உள்ளமும் நிலை அழிந்து 

  உறு துயர் பெருகக் 

கரையில் சுற்றமும் தாமும் 

  முன் கலங்கினார் கலுழ்ந்தார்.  1059 

 

 

விடம் தொலைத் திடும் 

  விஞ்சையில் பெரியராம் மேலோர் 

அடர்ந்த தீ விடம் 

  அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் 

திடம் கொள் மந்திரம் தியானம் 

  பாவக நிலை முட்டி 

தொடர்ந்த செய்வினைத் தனித் 

  தனித் தொழிலராய்ச் சூழ்வார்.  1060 

 

 

மருந்தும் எண்ணில மாறில 

  செய்யவும் வலிந்து 

பொருந்து வல் விடம் ஏழு 

  வேகமும் முறை பொங்கிப் 

பெரும் தடங்கண் மெல் கொடியனாள் 

  தலை மிசைப் பிறங்கித் 

திருந்து செய் வினை 

  யாவையும் கடந்து தீர்ந்திலதால்.  1061 

 

 

ஆவி தங்கு பல் 

  குறிகளும் அடைவில ஆக 

மேவு காருட விஞ்சை வித்தகர் 

  இது விதி என்று 

ஓவும் வேலையில் உறு 

  பெரும் சுற்றமும் அலறிப் 

பாவை மேல் விழுந்து அழுதனர் 

  படர் ஒலிக் கடல் போல்.  1062 

 

 

சிந்தை வெம் துயர் 

  உறும் சிவநேசரும் தெளிந்து 

வந்த செய்வினை இன்மையில் 

  வையகத்து உள்ளோர் 

இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு 

  ஈகுவன் என்னுடைய  

அந்தமில் நிதிக் குவை 

  எனப் பறை அறைவித்தார்.  1063 

 

 

முரசு இயம்பலும் மூன்று 

  நாள் அகவையின் முற்ற 

அரசர் பாங்கு உளோர் உள்பட 

  அவனி மேல் உள்ள 

கரையில் கல்வியோர் யாவரும் 

  அணைந்து தம் காட்சிப்  

புரையில் செய்கையில் தீர்ந்திடாது 

  ஒழிந்திடப் போனார்.  1064 

 

 

சீரின் மன்னிய சிவநேசர் 

  கண்டு உளம் மயங்கிக் 

காரின் மல்கிய சோலை 

  சூழ் கழுமலத் தலைவர் 

சாரும் அவ்வளவும் உடல் 

  தழல் இடை அடக்கிச் 

சேர என்பொடு சாம்பல் 

  சேமிப்பது தெளிவார்.  1065 

 

 

உடைய பிள்ளையார்க்கு என இவள் 

  தனை உரைத்த அதனால் 

அடைவு துன்புறுவதற்கு 

  இலையாம் நமக்கு என்றே 

இடர் ஒழிந்த பின் 

  அடக்கிய என்பொடு சாம்பல் 

புடை பெருத்த கும்பத்தினில் 

  புகப் பெய்து வைப்பார்.  1066 

 

 

கன்னி மாடத்தில் முன்பு 

  போல் காப்புற அமைத்துப் 

பொன்னும் முத்தும் மேல் 

  அணிகலன் பூந்துகில் சூழ்ந்து 

பன்னு தூவியின் பஞ்சணை விரைப் 

  பள்ளி அதன் மேல் 

மன்னும் பொன்னரி மாலைகள் 

  அணிந்து வைத்தனரால்.  1067 

 

 

மாலை சாந்தொடும் மஞ்சனம் 

  நாள் தொறும் வழாமைப் 

பாலின் நேர் தரும் 

  போனகம் பகல் விளக்கினைய 

சாலும் நன்மையில் தகுவன 

  நாள்தொறும் சமைத்தே 

ஏலுமா செய யாவரும் 

  வியப்பு எய்தும் நாளில்.  1068 

 

 

சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் 

  நகர் சார்ந்து 

பண்பு பெற்ற நல் தொண்டர் 

  களுடன் பணிந்து இருந்த 

நண்பு மிக்க நல் வார்த்தை 

  அந் நற் பதி உள்ளோர் 

வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு 

  வந்து உரை செய்தார்.  1069 

 

 

சொன்னவர்க்கு எலாம் தூசொடு 

  காசு பொன் அளித்தே 

இன்ன தன்மையர் என ஒணா 

  மகிழ் சிறந்து எய்தச் 

சென்னி வாழ் மதியார் 

  திரு ஒற்றியூர் அளவும் 

துன்னு நீள் நடைக் 

  காவணம் துகில் விதானித்து.  1070 

 

 

மகர தோரணம் வண் 

  குலைக் கமுகொடு கதலி 

நிகரில் பல் கொடித் 

  தாமங்கள் அணிபெற நிரைத்து 

நகர நீள் மறுகு யாவையும் 

  நலம் புனைந்து அணியால் 

புகரில் பொன் உலகம் 

  இழிந்ததாம் எனப் பொலிவித்தார்.  1071 

 

 

இன்னவாறு அணி செய்து பல் 

  குறை அறுப்பு ஏவி 

முன்னம் ஒற்றியூர் நகர் 

  இடை முத்தமிழ் விரகர் 

பொன் அடித் தலம் தலைமிசை 

  புனைவான் என்று எழுவார் 

அந்நகர்ப் பெருந் தொண்டரும் 

  உடன் செல அணைந்தார்.  1072 

 

 

ஆய வேலையில் அருமறைப் 

  புகலியர் பிரானும் 

மேய ஒற்றியூர் பணிபவர் 

  வியன் நகர் அகன்று 

காயல் சூழ் கரைக் 

  கடல் மயிலாபுரி நோக்கித் 

தூய தொண்டர்தம் குழாத்தொடும் 

  எதிர் வந்து தோன்ற.  1073 

 

 

மாறில் வண் பெரு 

  வணிகரும் தொண்டரு மலர்ந்த 

நீறு சேர் தவக் 

  குழாத்தினை நீளிடைக் கண்டே 

ஆறு சூடினார் திருமகனார் 

  அணைந்தார் என்று 

ஈறிலாததோர் மகிழ்ச்சியினால் 

  விழுந்து இறைஞ்ச.  1074 

 

 

காழி நாடரும் கதிர் மணிச் 

  சிவிகை நின்று இழிந்து 

சூழிரும் பெருந் தொண்டர் 

  முன் தொழுது எழுந்தருளி 

வாழி மாதவர் வணிகர் செய் 

  திறம் சொலக் கேட்டே 

ஆழி சூழ் மயிலா 

  புரித் திருநகர் அணைந்தார்.  1075 

 

 

அத் திறத்து முன் நிகழ்ந்தது 

  திரு உள்ளத்து அமைத்துச் 

சித்தம் இன்புறும் சிவநேசர் 

  தம் செயல் வாய்ப்பப் 

பொய்த்த அச் சமண் 

  சாக்கியர் புறத்துறை அழிய 

வைத்த அப்பெருங் கருணை 

  நோக்கால் மகிழ்ந்து அருளி.  1076 

 

 

கங்கை வார் சடையார் 

  கபாலீச்சரத்து அணைந்து 

துங்க நீள் சுடர்க் 

  கோபுரம் தொழுது புக்கருளி 

மங்கை பங்கர்தம் கோயிலை 

  வலம் கொண்டு வணங்கிச் 

செங்கை சென்னி மேல் 

  குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.  1077 

 

 

தேவ தேவனைத் திருக் 

  கபாலீச்சரத்து அமுதைப் 

பாவை பாகனைப் பரிவுறு 

  பண்பினால் பரவி 

மேவு காதலின் விரும்பிய 

  விரைவினால் விழுந்து 

நாவின் வாய்மையில் போற்றினார் 

  ஞான சம்பந்தர்.  1078 

 

 

போற்றி மெய் அருள் திறம் 

  பெறு பரிவுடன் வணங்கி 

நீற்றின் மேனியில் நிறை 

  மயிர்ப் புளகங்கள் நெருங்கக்

கூற்று அடர்த்தவர் கோயிலின் 

  புறம் போந்து அருளி 

ஆற்றும் இன்னருள் வணிகர் மேற் 

  செல அருள் செய்வார்.  1079 

 

 

ஒருமை உய்த்த நல் 

  உணர்வினீர் உலகவர் அறிய 

அருமையால் பெறு மகள் என்பு 

  நிறைத்த அக் குடத்தைப் 

பெரு மயானத்து நடம் 

  புரிவார் பெருங் கோயில் 

திருமதில் புறவாய்தலிற் கொணர்க 

  என்று செப்ப.  1080 

 

 

அந்தமில் பெரு மகிழ்ச்சியால் 

  அவனி மேல் பணிந்து 

வந்து தம் திரு மனையினில் 

  மேவி அம்மருங்கு 

கந்த வார் பொழில் 

  கன்னி மாடத்தினில் புக்கு

வெந்த சாம்பலோடு என்பு சேர் 

  குடத்தை வேறு எடுத்து.  1081 

 

 

மூடு பன் மணிச் 

  சிவிகை உள்பெய்து முன்போத 

மாடு சேடியர் இனம் புடை 

  சூழ்ந்து வந்து அணைய 

ஆடல் மேவினார் திருக் 

  கபாலீச்சரம் அணைந்து 

நீடு கோபுரத்து எதிர் 

  மணிச் சிவிகையை நீக்கி.  1082 

 

 

அங்கணாளர் தம் அபிமுகத்தினில் 

  அடி உறைப்பால் 

மங்கை என்பு சேர் குடத்தினை 

  வைத்து முன் வணங்கப் 

பொங்கு நீள் புனல் 

  புகலி காவலர் புவனத்துத் 

தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் 

  நிலைமை சாதிப்பார்.  1083 

 

 

மாடம் ஓங்கிய மயிலை 

  மா நகர் உளார் மற்றும் 

நாடு வாழ்பவர் நன்றியில் 

  சமயத்தின் உள்ளோர் 

மாடு சூழ்ந்து காண்பதற்கு 

  வந்து எய்தியே மலிய 

நீடு தேவர்கள் ஏனையோர் 

  விசும்பிடை நெருங்க.  1084 

 

 

தொண்டர் தம் பெருங் குழாம் 

  புடை சூழ்தரத் தொல்லை 

அண்டர் நாயகர் கோபுர 

  வாயில் நேர் அணைந்து 

வண்டு வார் குழலாள் என்பு 

  நிறைந்த மண் குடத்தைக் 

கண்டு தம்பிரான் கருணையின் 

  பெருமையே கருதி.  1085 

 

 

இந்த மாநிலத்து இறந்துளோர் 

  என்பினைப் பின்னும் 

நந்து நன்னெறிப் படுத்திட 

  நன்மையாம் தன்மை 

அந்த என்பொடு தொடர்ச்சியாம் 

  என அருள் நோக்கால் 

சிந்தும் அங்கம் அங்குடைய 

  பூம்பாவை பேர் செப்பி.  1086 

 

 

மண்ணினில் பிறந்தார் பெறும் 

  பயன் மதி சூடும் 

அண்ணலார் அடியார் தமை 

  அமுது செய்வித்தல் 

கண்ணினால் அவர் நல்விழாப் 

  பொலிவு கண்டார்தல் 

உண்மையாம் எனில் உலகர் முன் 

  வருக என உரைப்பார்.  1087 

 

 

மன்னுவார் சடையாரை முன் 

  தொழுது மட்டிட்ட 

என்னும் நற் பதிகத்தினில் 

  போதியோ என்னும் 

அன்ன மெய்த் திருவாக்கு 

  எனும் அமுதம் அவ்வங்கம் 

துன்ன வந்து வந்து 

  உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்.  1088 

 

 

ஆன தன்மையின் அத்திரு 

  பாட்டினில் அடைவே 

போன வாயுவும் வடிவமும் 

  பொலிவொடு நிரம்பி 

ஏனை அக்குடத்து அடங்கி முன் 

  இருந்து எழுவதன் முன் 

ஞான போனகர் பின் 

  சமண்பாட்டினை நவில்வார்.  1089 

 

 

தேற்றமில் சமண் சாக்கியத் 

  திண்ணரிச் செய்கை 

ஏற்றது அன்று என எடுத்து 

  உரைப்பார் என்ற போது 

கோல் தொடிச் செங்கை தோற்றிடக் 

  குடம் உடைந்து எழுவாள் 

போற்று தாமரைப் போது 

  அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்.  1090 

 

 

எடுத்த பாட்டினில் வடிவு பெற்று 

  இரு நான்கு திருப்பாட்டு 

அடுத்த அம்முறைப் பன்னிரண்டு 

  ஆண்டு அளவு அணைந்து 

தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் 

  தோன்றிடக் கண்டு 

விடுத்த வேட்கையர் திருக் கடைக் 

  காப்பு மேல் விதித்தார்.  1091 

 

 

ஆங்கனம் எழுந்து நின்ற 

  அணங்கினை நோக்குவார்கள் 

ஈங்கு இது காணீர் என்னா 

  அற்புதம் எய்தும் வேலைப் 

பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் 

  அரகர என்னப் பார்மேல் 

ஓங்கிய ஓசை உம்பர் 

  நாட்டினை உற்றது அன்றே.  1092 

 

 

தேவரும் முனிவர் தாமும் 

  திருவருள் சிறப்பு நோக்கி 

பூவரு விரை கொள் மாரி 

  பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் 

யாவரும் இருந்த வண்ணம் 

  எம்பிரான் கருணை என்றே 

மேவிய கைகள் உச்சி மேல் 

  குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.  1093 

 

 

அங்கு அவள் உருவம் காண்பார் 

  அதிசயம் மிகவும் எய்திப் 

பங்கம் உற்றாரே போன்றார் 

  பர சமயத்தின் உள்ளோர் 

எங்குள செய்கை தான் மற்று 

  என் செய்தவாறு இது என்று 

சங்கையாம் உணர்வு கொள்ளும் 

  சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.  1094 

 

 

கன்னி தன் வனப்புத் தன்னைக் 

  கண்களால் முடியக் காணார் 

முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய் 

  கருங் குழலின் பாரம் 

மன்னிய வதனம் செந் தாமரையின் 

  மேல் கரிய வண்டு 

துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் 

  போல் இருண்டு தோன்ற.  1095 

 

 

பாங்கு அணி சுரும்பு மொய்த்த 

  பனிமலர் அளகப் பந்தி 

தேங்கமழ் ஆரம் சேரும் 

  திருநுதல் விளக்க(ம்) நோக்கில் 

பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் 

  புயல் கீழ் இட்ட 

வாங்கிய வான வில்லின் வளர் 

  ஒளி வனப்பு வாய்ப்ப.  1096 

 

 

புருவ மென் கொடிகள் பண்டு 

  புரம் எரித்தவர் தம் நெற்றி 

ஒரு விழி எரியின் நீறாய் 

  அருள் பெற உளனாம் காமன் 

செரு எழும் தனு அது ஒன்றும் 

  சேம வில் ஒன்றும் ஆக 

இரு பெரும் சிலைகள் முன் 

  கொண்டு எழுந்தன போல ஏற்ப.  1097 

 

 

மண்ணிய மணியின் செய்ய வளர் 

  ஒளி மேனியாள் தன் 

கண்ணிணை வனப்புக் காணில் 

  காமரு வதனத் திங்கள் 

தண்ணளி விரிந்த சோதி 

  வெள்ளத்தில் தகைவின் நீள 

ஒண் நிறக் கரிய செய்ய 

  கயல் இரண்டு ஒத்து உலாவ.  1098 

 

 

பணி வளர் அல்குல் பாவை 

  நாசியும் பவள வாயும் 

நணிய பேரொளியில் தோன்றும் 

  நலத்தினை நாடுவார்க்கு 

மணி நிறக் கோபம் கண்டு 

  மற்றது வவ்வத் தாழும் 

அணி நிறக் காம ரூபி 

  அனையதாம் அழகு காட்ட.  1099 

 

 

இளமயில் அனைய சாயல் ஏந்திழை 

  குழை கொள் காது 

வளமிகு வனப்பினாலும் வடிந்த 

  தாள் உடைமையாலும் 

கிளர் ஒளி மகரம் 

  வேறு கெழுமிய தன்மையாலும் 

அளவில் சீர் அனங்கன் வென்றிக் 

  கொடி இரண்டு அனையவாக.  1100 

 

 

வில் பொலி தரளக் கோவை 

  விளங்கிய கழுத்து மீது 

பொற்பமை வதனமாகும் பதும 

  நல் நிதியம் பூத்த 

நற்பெரும் பணிலம் என்னும் 

  நன்னிதி போன்று தோன்றி 

அல்பொலி கண்டர் தந்த 

  அருட்கு அடையாளம் காட்ட.  1101 

 

 

எரியவிழ் காந்தள் மென்பூத் தலை 

  தொடுத்து இசைய வைத்துத் 

திரள் பெறச் சுருக்கும் செச்சை 

  மாலையோ தெரியின் வேறு 

கரு நெடுங் கயற்கண் மங்கை 

  கைகளால் காந்தி வெள்ளம் 

அருகு இழிந்தனவோ என்னும் 

  அதிசயம் வடிவில் தோன்ற.  1102 

 

 

ஏர் கெழு மார்பில் பொங்கும் 

  ஏந்து இளம் கொங்கை நாகக் 

கார் கெழு விடத்தை நீக்கும் 

  கவுணியர் தலைவர் நோக்கால் 

ஆர் திருவருளில் பூரித்து 

  அடங்கிய அமுதக் கும்பச் 

சீர் கெழு முகிழைக் காட்டும் 

  செவ்வியில் திகழ்ந்து தோன்ற.  1103 

 

 

காம வேள் என்னும் வேடன் 

  உந்தியில் கரந்து கொங்கை 

நேமி அம் புட்கள் தம்மை 

  அகப்பட நேரிது ஆய 

தாம நீள் கண்ணி சேர்ந்த 

  சலாகை தூக்கியதே போலும் 

வாமமே கலை சூழ் வல்லி 

  மருங்கின் மேல் உரோம வல்லி.  1104 

 

 

பிணி அவிழ் மலர் மென் கூந்தல் 

  பெண் அமுது அனையாள் செம்பொன் 

அணி வளர் அல்குல் தங்கள் 

  அரவு செய் பிழையால் அஞ்சி 

மணி கிளர் காஞ்சி சூழ்ந்து 

  வனப்புடை அல்குல் ஆகிப் 

பணி உலகு ஆளும் சேடன் 

  பணம் விரித்து அடைதல் காட்ட.  1105 

 

 

வரிமயில் அனைய சாயல் மங்கை 

  பொன் குறங்கின் மாமை 

கரி இளம் பிடிக்கை வென்று 

  கதலி மென் தண்டு காட்டத்  

தெரிவுறும் அவர்க்கு மென்மைச் 

  செழு முழந்தாளின் செவ்வி 

புரிவுறு பொற் பந்து என்னப் 

  பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க.  1106 

 

 

பூவலர் நறுமென் கூந்தல் பொன் 

  கொடி கணைக்கால் காமன் 

ஆவ நாழிகையே போலும் 

  அழகினில் மேன்மை எய்த 

மேவிய செம்பொன் தட்டின் 

  வனப்பினை மீதிட்டு என்றும் 

ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு 

  ஒளி ஒளிர்வுற்று ஓங்க.  1107 

 

 

கற்பகம் ஈன்ற செவ்விக் 

  காமரு பவளச் சோதிப் 

பொன் திரள் வயிரப் பத்திப் 

  பூந்துணர் மலர்ந்த போலும் 

நற்பதம் பொலிவு காட்ட 

  ஞாலமும் விசும்பும் எல்லாம் 

அற்புதம் எய்தத் தோன்றி 

  அழகினுக்கு அணியாய் நின்றாள்.  1108 

 

 

எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் 

  படைத்தவள் எழிலின் வெள்ளம் 

நண்ணும் நான் முகத்தால் கண்டான் 

  அவளினும் நல்லாள் தன்பால் 

புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் 

  பெறும் புகலி வேந்தர் 

கண் நுதல் கருணை வெள்ளம் 

  ஆயிரம் முகத்தால் கண்டார்.  1109 

 

 

இன்னணம் விளங்கிய ஏர் 

  கொள் சாயலாள் 

தன்னை முன் கண் 

  உறக் கண்ட தாதையார் 

பொன் அணி மாளிகைப் 

  புகலி வேந்தர் தாள் 

சென்னியில் பொருந்த முன் 

  சென்று வீழ்ந்தனர்.  1110 

 

 

அணங்கினும் மேம்படும் 

  அன்னம் அன்னவள் 

பணம் புரி அரவரைப் 

  பரமர் முன் பணிந்து 

இணங்கிய முகில் மதில் 

  சண்பை ஏந்தலை 

வணங்கியே நின்றனள் 

  மண்ணுளோர் தொழ.  1111 

 

 

சீர் கெழு சிவ 

  நேசர் தம்மை முன்னமே 

கார் கெழு சோலை 

  சூழ் காழி மன்னவர் 

ஏர் கெழு சிறப்பில் நும் 

  மகளைக் கொண்டு இனிப் 

பார் கெழு மனையில் 

  படர்மின் என்றலும்.  1112 

 

 

பெருகிய அருள் பெறும் 

  வணிகர் பிள்ளையார் 

மருவு தாமரை அடி 

  வணங்கிப் போற்றி நின்று 

அருமையால் அடியனேன் 

  பெற்ற பாவையைத் 

திருமணம் புணர்ந்து அருள் 

  செய்யும் என்றலும்.  1113 

 

 

மற்றவர் தமக்கு வண் 

  புகலி வாணர் நீர் 

பெற்ற பெண் விடத்தினால் 

  வீந்த பின்னையான் 

கற்றைவார் சடையவர் 

  கருணை காண்வர 

உற்பவிப் பித்தலால் உரை 

  தகாது என.  1114 

 

 

வணிகரும் சுற்றமும் 

  மயங்கிப் பிள்ளையார் 

அணிமலர் அடியில் வீழ்ந்து 

  அரற்ற ஆங்கு அவர் 

தணிவில் நீள் பெருந்துயர் 

  தணிய வேத நூல் 

துணிவினை அருள் செய்தார் 

  தூய வாய்மையார்.  1115 

 

 

தெள்ளு நீதியின் முறை 

  கேட்ட சீர்க்கிளை 

வெள்ளமும் வணிகரும் 

  வேட்கை நீத்திடப் 

பள்ள நீர்ச் செலவு 

  எனப் பரமர் கோயிலின் 

உள் எழுந்தருளினார் 

  உடைய பிள்ளையார்.  1116 

 

 

பான்மையால் வணிகரும் பாவை 

  தன் மணம் 

ஏனையோர்க்கு இசைகிலேன் என்று 

  கொண்டு போய் 

வானுயர் கன்னி 

  மாடத்து வைத்தனர் 

தேனமர் கோதையும் 

  சிவத்தை மேவினாள்.  1117 

 

 

தேவர் பிரான் அமர்ந்து 

  அருளும் திருக் கபாலீச்சரத்து 

மேவிய ஞானத் தலைவர் 

  விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் 

காவலனார் பெருங்கருணை கை 

  தந்த படி போற்றிப் 

பாவலர் செந்தமிழ் பாடிப் பன் 

  முறையும் பணிந்து எழுவார்.  1118 

 

 

தொழுது புறம் போந்தருளித் தொண்டர் 

  குழாம் புடை சூழப்  

பழுதில் புகழ் திருமயிலைப் பதியில் 

  அமர்ந்து அருளும் நாள் 

முழுதுலகும் தரும் இறைவர் முதல் 

  தானம் பல இறைஞ்ச 

அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் 

  மருங்கு அகல்வார்.  1119 

 

 

திருத்தொண்டர் அங்கு உள்ளார் 

  விடை கொள்ளச் சிவநேசர் 

வருத்தம் அகன்றிட மதுர மொழி 

  அருளி விடை கொடுத்து 

நிருத்தர் உறை பிற பதிகள் 

  வணங்கிப் போய் நிறை காதல் 

அருத்தியொடும் திருவான்மியூர் 

  பணிய அணைவுற்றார்.  1120 

 

 

திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் 

  சிறப்பு எதிர 

வருவார் மங்கல அணிகள் 

  மறுகு நிரைத்து எதிர்கொள்ள 

அருகாக இழிந்தருளி அவர் 

  வணங்கத் தொழுது அன்பு 

தருவார் தம் கோயில் 

  மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார்.  1121 

 

 

மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி 

  வியன் திருமுன்றில் 

புக்கருளிக் கோயிலினைப் புடைவலம் 

  கொண்டு உள் அணைந்து 

கொக்கு இறகு(ம்) மதிக் கொழுந்தும் 

  குளிர் புனலும் ஒளிர்கின்ற 

செக்கர் நிகர் சடை முடியார் 

  சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்.  1122 

 

 

தாழ்ந்து பல முறை பணிந்து 

  தம்பிரான் முன் நின்று 

வாழ்ந்து களிவரப் பிறவி 

  மருந்தான பெருந்தகையைச் 

சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் 

  மாலை வினா உரையால் 

வீழ்ந்த பெரும் காதலுடன் 

  சாத்தி மிக இன்புற்றார்.  1123 

 

 

பரவி வரும் ஆனந்த(ம்) நிறைந்த 

  துளி கண் பனிப்ப 

விரவு மயிர்ப் புளகங்கள் மிசை 

  விளங்கப் புறத்து அணைவுற்று 

அரவ நெடும் திரை 

  வேலை அணிவான்மியூர் அதனுள் 

சிரபுரத்துப் புரவலனார் சில நாள் 

  அங்கு இனிது அமர்ந்தார்.  1124 

 

 

அங்கண் அமர்வார் உலகு 

  ஆளுடையாரை அரும் தமிழின் 

பொங்கும் இசைப் பதிகங்கள் 

  பல போற்றிப் போந்தருளிக் 

கங்கை அணி மணி முடியார் பதி 

  பலவும் கலந்து இறைஞ்சிச் 

செங்கண் விடைக் கொடியார் தம் 

  இடைச் சுரத்தைச் சேர்வுற்றார்.  1125 

 

 

சென்னி இள மதி அணிந்தார் 

  மருவு திரு இடைச் சுரத்து 

மன்னும் திருத் தொண்டர் குழாம் 

  எதிர் கொள்ள வந்தருளி 

நல் நெடும் கோபுரம் 

  இறைஞ்சி உள்புகுந்து நற்கோயில் 

தன்னை வலம் கொண்டு அணைந்தார் 

  தம்பிரான் திரு முன்பு.  1126 

 

 

கண்ட பொழுதே கலந்த காதலால் 

  கை தலை மேல் 

கொண்டு தலம் உற விழுந்து 

  குலவு பெரு மகிழ்ச்சியுடன் 

மண்டிய பேரன்பு உருகி மயிர் 

  முகிழ்ப்ப வணங்கி எழுந்து 

அண்டர் பிரான் திருமேனி 

  வண்ணம் கண்டு அதிசயித்தார்.  1127 

 

 

இருந்த இடைச் சுரம் மேவும் 

  இவர் வண்ணம் என்னே என்று 

அருந்தமிழின் திருப்பதிகத்து அலர் 

  மாலை கொடு பரவித் 

திருந்து மனம் கரைந்து உருகத் 

  திருக்கடைக் காப்புச் சாத்திப் 

பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் 

  பேர் உலகின் பேறு ஆனார்.  1128 

 

 

நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று 

  இறைஞ்சி புறம் போந்து அங்கு 

உறைந்து அருளிப் பணிகின்றார் 

  உமைபாகர் அருள் பெற்றுச் 

சிறந்த திருத் தொண்டருடன் 

  எழுந்தருளிச் செந்துருத்தி

அறைந்து அளிகள் பயில் சாரல் 

  திருக்கழுக் குன்றினை அணைந்தார்.  1129 

 

 

சென்று அணையும் பொழுதின் கண் 

  திருத்தொண்டர் எதிர் கொள்ளப் 

பொன் திகழும் மணிச் சிவிகை 

  இழிந்தருளி உடன் போந்து 

மன்றல் விரி நறும் சோலைத் 

  திருமலையை வலம் கொண்டு 

மின் தயங்கும் சடையாரை 

  விருப்பினுடன் பணிகின்றார்.  1130 

 

 

திருக்கழுக் குன்றத்து அமர்ந்த 

  செங்கனகத் தனிக் குன்றைப் 

பெருக்க வளர் காதலினால் 

  பணிந்து எழுந்து பேராத 

கருத்தினுடன் காதல் செயும் 

  கோயில் கழுக்குன்று என்று 

திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தை 

  நிறை மகிழ் உற்றார்.  1131 

 

 

இன்புற்று அங்கு அமர்ந்தருளி 

  ஈறில் பெரும் தொண்டருடன் 

மின் பெற்ற வேணியினார் 

  அருள் பெற்றுப் போந்தருளி 

என்புற்ற மணிமார்பர் எல்லை 

  இலா ஆட்சி புரிந்து 

அன்புற்று மகிழ்ந்த திரு 

  அச்சிறு பாக்கம் அணைந்தார்.  1132 

 

 

ஆதி முதல் வரை வணங்கி 

  ஆட்சி கொண்டார் என மொழியும் 

கோதில் திருப்பதிக இசை 

  குலாவிய பாடலில் போற்றி 

மாதவத்து முனிவருடன் வணங்கி 

  மகிழ்ந்து இன்புற்றுத் 

தீது அகற்றும் செய்கையினார் 

  சின்னாள் அங்கு அமர்ந்தருளி.  1133 

 

 

ஏறணிந்த வெல் கொடியார் இனிது 

  அமர்ந்த பதி பிறவும் 

நீறணிந்த திருத்தொண்டர் எதிர் 

  கொள்ள நேர்ந்து இறைஞ்சி 

வேறு பல நதி கானம் 

  கடந்து அருளி விரிசடையில் 

ஆறணிந்தார் மகிழ்ந்த திரு 

  அரசிலியை வந்து அடைந்தார்.  1134 

 

 

அரசிலியை அமர்ந்து அருளும் 

  அங்கண் அரசைப் பணிந்து

பரசி எழு திருப் 

  புறவார் பனங்காட்டூர் முதலாய 

விரை செய் மலர்க் கொன்றையினார் 

  மேவு பதி பல வணங்கித் 

திரை செய் நெடுங் கடல் 

  உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்.  1135 

 

 

எல்லையில் ஞானத் தலைவர் 

  எழுந்தருள எதிர் கொள்வார் 

தில்லையில் வாழ் அந்தணர் 

  மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு  

மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச 

  மணிமுத்தின் சிவிகை இழிந்து 

அல்கு பெருங் காதலுடன் 

  அஞ்சலி கொண்டு அணைகின்றார்.  1136 

 

 

திரு எல்லையிற் பணிந்து சென்று 

  அணைவார் சேண் விசும்பை 

மருவி விளங்குஒளி தழைக்கும் 

  வடதிசை வாயிலை வணங்கி 

உருகு பெருங் காதலுடன் உள் 

  புகுந்து மறையின் ஒலி 

பெருகி வளர் மணிமாடப் பெருந் 

  திரு வீதியை அணைந்தார்.  1137 

 

 

நலம் மலியும் திருவீதி 

  பணிந்தெழுந்து நற்றவர்தம் 

குல(ம்) நிறைந்த திருவாயில் 

  குவித்த மலர்ச் செங்கையொடு 

தலமுற முன் தாழ்ந்து எய்தித் 

  தமனிய மாளிகை மருங்கு 

வலமுற வந்து ஓங்கிய 

  பேரம்பலத்தை வணங்கினார்.  1138 

 

 

வணங்கி மிக மனம் மகிழ்ந்து 

  மால் அயனும் தொழும் பூத 

கணங்கள் மிடை திருவாயில் பணிந்து 

  எழுந்து கண் களிப்ப 

அணங்கு தனி கண்டருள 

  அம்பலத்தே ஆடுகின்ற 

குணம் கடந்த தனிக் கூத்தர் 

  பெருங் கூத்துக் கும்பிடுவார்.  1139 

 

 

தொண்டர் மனம் பிரியாத 

  திருப்படியைத் தொழுது இறைஞ்சி 

மண்டுபெருங் காதலினால் நோக்கி 

  முக(ம்) மலர்ந்து எழுவார் 

அண்டம் எலாம் நிறைந்து 

  எழுந்த ஆனந்தத்துள் அலைந்து 

கண்ட பேரின் பத்தின் 

  கரையில்லா நிலை அணைந்தார்.  1140 

 

 

அந்நிலைமை அடைந்து திளைத்து 

  ஆங்கு எய்தாக் காலத்தில் 

மன்னு திரு அம்பலத்தை 

  வலம் கொண்டு போந்தருளிப்  

பொன் அணி மாளிகை வீதிப் 

  புறத்து அணைந்து போது தொறும் 

இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு 

  அங்கு இனிது இருந்தார்.  1141 

 

 

திருந்திய சீர்த் தாதையார் 

  சிவ பாத இருதயரும் 

பொருந்து திருவளர் புகலிப் 

  பூசுரரும் மாதவரும் 

பெருந் திருமால் அயன் 

  போற்றும் பெரும்பற்றப் புலியூரில் 

இருந் தமிழாகரர் அணைந்தார் எனக் 

  கேட்டு வந்து அணைந்தார்.  1142 

 

 

ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு 

  அளித்து அருளி அவரோடும் 

தாங்கரிய காதலினால் தம் 

  பெருமான் கழல் வணங்க 

ஓங்கு திருத் தில்லை வாழ் 

  அந்தணரும் உடன் ஆகத் 

தேன் கமழ் கொன்றைச் 

  சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்.  1143 

 

 

தென் புகலி அந்தணரும் தில்லை 

  வாழ் அந்தணர் முன் 

அன்பு நெறி பெருக்குவித்த 

  ஆண்டகையார் அடி போற்றிப்  

பொன் புரி செஞ்சடைக் கூத்தர் 

  அருள் பெற்றுப் போந்தருளி 

இன்புறு தோணியில் அமர்ந்தார் 

  தமை வணங்க எழுந்தருள.  1144 

 

 

நற்றவர் தம் குழாத்தோடு நம்பர் 

  திரு நடம் செய்யும் 

பொற்பதியின் திரு எல்லை 

  பணிந்தருளிப் புறம் போந்து 

பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த 

  பிறபதியும் புக்கு இறைஞ்சிக் 

கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே 

  சென்று அடைவார்.  1145 

 

 

பல் பதிகள் கடந்தருளிப் 

  பன்னிரண்டு பேர் படைத்த 

தொல்லை வளப் பூந்தராய் 

  தூரத்தே தோன்றுதலும் 

மல்கு திரு மணிமுத்தின் சிவிகை 

  இழிந்து எதிர் வணங்கிச்  

செல்வமிகு பதி அதன் மேல் 

  திருப்பதிகம் அருள் செய்வார்.  1146 

 

 

மன்னும் இசை மொழி வண்டார் 

  குழல் அரிவை என்று எடுத்து 

மின்னு சுடர் மாளிகை விண் 

  தாங்குவ போல் வேணுபுரம் 

என்னும் இசைச் சொல் மாலை 

  எடுத்து இயம்பி எழுந்தருளிப் 

புன்னை மணம் கமழ் புறவப் 

  புறம்பு அணையில் வந்து அணைந்தார்.  1147 

 

 

வாழி வளர் புறம்பு அணையின் 

  மருங்கு அணைந்து வரி வண்டு 

சூழும் மலர் நறும் 

  தீப தூபங்களுடன் தொழுது 

காழி நகர் சேர்மின் எனக் 

  கடை முடிந்த திருப்பதிகம் 

ஏழிசையினுடன் பாடி எயின் 

  மூதூர் உள் புகுந்தார்.  1148 

 

 

சேண் உயர்ந்த திருத்தோணி 

  வீற்றிருந்த சிவபெருமான் 

தாள் நினைந்த ஆதரவின் 

  தலைப்பாடு தனை உன்னி 

நீள் நிலைக் கோபுரம் அணைந்து 

  நேர் இறைஞ்சிப் புக்கருளி 

வாள் நிலவு பெருங் கோயில் 

  வலம் கொண்டு முன் பணிந்தார்.  1149 

 

 

முன் இறைஞ்சித் திருவருளின் 

  முழு நோக்கம் பெற்றேறிப் 

பொன் இமயப் பாவையுடன் 

  புணர்ந்து இருந்த புராதனரைச் 

சென்னி மிசைக் குவித்த கரம் 

  கொடு விழுந்து திளைத்தெழுந்து 

மன்னு பெரு வாழ்வு எய்தி 

  மனம் களிப்ப வணங்குவார்.  1150 

 

 

பரவு திருப் பதிகங்கள் 

  பலவும் இசையினில் பாடி 

விரவிய கண் அருவி 

  நீர் வெள்ளத்தில் குளித்தருளி 

அரவு அணிந்தார் அருள் பெருக 

  புறம்பு எய்தி அன்பருடன் 

சிரபுரத்துப் பெருந்தகையார் தம் 

  திருமாளிகை சேர்ந்தார்.  1151 

 

 

மாளிகையின் உள் அணைந்து 

  மறையவர்கட்கு அருள் புரிந்து 

தாள் பணியும் பெருங்கிளைக்குத் 

  தகுதியினால் தலை அளிசெய்து 

ஆளுடைய தம் பெருமான் 

  அடியவர் களுடன் அமர்ந்து 

நீளவரும் பேரின்பம் மிகப் 

  பெருக நிகழு நாள்.  1152 

 

 

காழி நாடு உடைய பிரான் 

  கழல் வணங்கி மகிழ்வு எய்த 

ஆழியினும் மிகப் பெருகும் 

  ஆசையுடன் திருமுருகர் 

வாழி திரு நீல நக்கர் 

  முதல் தொண்டர் மற்று எனையோர் 

சூழும் நெடும் சுற்றமுடன் 

  தோணிபுரம் தொழுது அணைந்தார்.  1153 

 

 

வந்தவரை எதிர் கொண்டு 

  மனம் மகிழ்ந்து சண்பையர்கோன் 

அந்தமில் சீர் அடியார்கள் 

  அவரோடும் இனிது அமர்ந்து 

சுந்தர ஆரணங்கினுடன் 

  தோணியில் வீற்றிருந்தாரைச் 

செந்தமிழின் பந்தத்தால் 

  திருப்பதிகம் பல பாடி.  1154 

 

 

பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் 

  பெரும் தவத்தால் பெற்றவரும் 

மருவு பெரும் கிளையான 

  மறையவரும் உடன் கூடித் 

திருவளர் ஞானத்தலைவர் திருமணம் 

  செய்து அருளுதற்குப் 

பருவம் இது என்று எண்ணி 

  அறிவிக்கப் பாங்கு அணைந்தார்.  1155 

 

 

நாட்டு மறை முறை 

  ஒழுக்கம் ஞான போனகருக்கும் 

கூட்டுவது மனம் கொள்வார் கோதில் 

  மறை நெறிச் சடங்கு 

காட்டவரும் வேள்வி பல 

  புரிவதற்கு ஓர் கன்னிதனை 

வேட்டருள வேண்டும் என 

  விண்ணப்பம் செய்தார்கள்.  1156 

 

 

மற்றவர் தம் மொழி கேட்டு 

  மாதவத்தின் கொழுந்து அனையார் 

சுற்றம் உறும் பெரும் பாசத் 

  தொடர்ச்சி விடும் நிலைமையராய் 

பெற்றம் உயர்த்தவர் அருள் 

  முன் பெற்றதினால் இசையாது 

முற்றியது ஆயினும் கூடாது என்று 

  அவர் முன் மொழிந்து அருள.  1157 

 

 

அருமறையோரவர் பின்னும் கை 

  தொழுது அங்கு அறிவிப்பார் 

இருநிலத்து மறை வழக்கம் 

  எடுத்தீர் நீர் ஆதலினால் 

வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் 

  நெறி ஒழுகும் 

திருமணம் செய்து அருளுதற்குத் 

  திரு உள்ளம் செய்யும் என.  1158 

 

 

மறை வாழ அந்தணர்தம் 

  வாய்மை ஒழுக்கம் பெருகும் 

துறை வாழச் சுற்றத்தார் தமக்கு 

  அருளி உடன் படலும் 

பிறை வாழும் திருமுடியில் பெரும் 

  புனலோடு அரவு அணிந்த 

கறை வாழும் கண்டத்தார் தமைத் 

  தொழுது மனம் களித்தார்.  1159 

 

 

திரு ஞான சம்பந்தர் 

  திரு உள்ளம் செய்ததற்குத் 

தருவாய்மை மறையவரும் 

  தாதையரும் தாங்கரிய 

பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் 

  அருள் என்றே 

உருகா நின்று இன்பம் உறும் 

  உள மகிழ்ச்சி எய்துவார்.  1160 

 

 

ஏதமில் சீர் மறையவரில் 

  ஏற்ற குலத்தோடு இசைவால் 

நாதர் திருப் பெருமணத்து 

  நம்பாண்டார் நம்பி பெறும் 

காதலியைக் காழி நாடு 

  உடையபிரான் கைப்பிடிக்க 

போதும் அவர் பெரும் தன்மை 

  எனப் பொருந்த எண்ணினார்.  1161 

 

 

திருஞான சம்பந்தர் சீர் 

  பெருக மணம் புணரும் 

பெருவாழ்வு திருத்தொண்டர் 

  மறையவர்கள் மிகப்பேண 

வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் 

  சிறப்ப மகள் பேசத் 

தருவார் தண் பணை 

  நல்லூர் சார்கின்றார் தாதையார்.  1162 

 

 

மிக்க திருத்தொண்டர்களும் 

  வேதியரும் உடன் ஏகத் 

திக்கு நிகழ் திருநல்லூர் 

  பெருமணத்தைச் சென்று எய்தத் 

தக்க புகழ் நம்பாண்டார் 

  நம்பிதாம் அது கேட்டுச் 

செக்கர் முடிச்சடையார் தம் 

  திருப்பாதம் தொழுதெழுவார்.  1163 

 

 

ஒப்பரிய பேர் உவகை 

  ஓங்கி எழும் உள்ளத்தால் 

அப்பு நிறை குடம் விளக்கு 

  மறுகு எல்லாம் அணி பெருக்கிச் 

செப்பரிய ஆர்வம் மிகு 

  பெரும் சுற்றத்தொடும் சென்றே 

எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது 

  அங்கு எதிர் கொண்டார்.  1164 

 

 

எதிர் கொண்டு மணி 

  மாடத்தினில் எய்தி இன்பமுறு 

மதுர மொழி பல மொழிந்து 

  வரன் முறையால் சிறப்பு அளிப்ப 

சதுர் முகனின் மேலாய 

  சண்பை வரு மறையவரும் 

முதிர் உணர்வின் மாதவரும் 

  அணைந்த திறம் மொழிகின்றார்.  1165 

 

 

ஞான போனகருக்கு 

  நற்றவத்தின் ஒழுக்கத்தால் 

ஊனமில் சீலத்து உம்பால் 

  மகள் பேச வந்தது என 

ஆன பேர் அந்தணர் பால் 

  அருள் உடைமை யாம் என்று 

வான் அளவு நிறைந்த பெரு 

  மன மகிழ்ச்சியொடு மொழிவார்.  1166 

 

 

உம்முடைய பெரும் தவத்தால் உலகு 

  அனைத்தும் ஈன்று அளித்த 

அம்மை திருமுலைப் பாலில் 

  குழைத்த ஆரமுது உண்டார்க்கு 

எம்முடைய குலக் கொழுந்தை 

  யாம் உய்யத் தருகின்றோம் 

வம்மின் என உரைசெய்து 

  மனமகிழ்ந்து செலவிடுத்தார்.  1167 

 

 

பேர் உவகையால் இசைவு பெற்றவர் 

  தாம் மீண்டு அணைந்து 

கார் உலவு மலர்ச் சோலைக் 

  கழுமலத்தை வந்து எய்திச்  

சீர் உடைய பிள்ளையார்க்கு 

  அவர் நேர்ந்தபடி செப்பிப் 

பார் குலவும் திருமணத்தின் 

  பான்மையினைத் தொடங்குவார்.  1168 

 

 

திருமணம் செய் கலியாணத் 

  திருநாளும் திகழ் சிறப்பின் 

மருவிய ஓரையும் கணித 

  மங்கல நூலவர் வகுப்பப் 

பெருகு மண நாள் ஓலை 

  பெரும் சிறப்பினுடன் போக்கி 

அருள் புரிந்த நன்னாளில் 

  அணிமுளைப் பாலிகை விதைத்தார்.  1169 

 

 

செல்வம் மலி திருப்புகலி செழும் 

  திரு வீதிகள் எல்லாம் 

மல்கு நிறை குடம் விளக்கு 

  மகர தோரணம் நிரைத்தே 

எல்லையிலா ஒளி முத்து 

  மாலைகள் எங்கணும் நாற்றி 

அல்கு பெரும் திரு ஓங்க 

  அணி சிறக்க அலங்கரித்தார்.  1170 

 

 

அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் 

  உள்ளோர் தாம் உய்யப்  

பொருந்து திரு நாள் ஓலை 

  பொருவிறந்தார் கொண்டு அணையத் 

திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி 

  சிறப்பு எதிர் கொண்டு 

வருந்தவத்தான் மகள் கொடுப்பார் 

  வதுவை வினை தொடங்குவார்.  1171 

 

 

மன்னும் பெரும் சுற்றத்தார் 

  எல்லாரும் வந்து ஈண்டி 

நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் 

  நன்னாளில் 

பன்மணி மங்கல முரசம் 

  பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப்  

பொன் மணிப் பாலிகை மீது 

  புனித முளை பூரித்தார்.  1172 

 

 

சேண் உயரும் மாடங்கள் 

  திருப் பெருகு மண்டபங்கள் 

நீணிலைய மாளிகைகள் நிகரில் 

  அணி பெற விளக்கிக் 

காண வரும் கை வண்ணம் 

  கவின் ஓங்கும் படி எழுதி 

வாண் நிலவு மணிக் கடைக்கண் 

  மங்கலக் கோலம் புனைந்து.  1173 

 

 

நீடு நிலைத் தோரணங்கள் நீள் 

  மருகு தொறும் நிரைத்து 

மாடுயரும் கொடி மாலை 

  மணி மாலையிடைப் போக்கிச் 

சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து 

  கொடு நீவிப் 

பீடு கெழு மணி முத்தின் 

  பெரும் பந்தர் பல புனைந்தார்.  1174 

 

 

மன்றல் வினைத் திரு முளை நாள் 

  தொடங்கி வரும் நாள் எல்லாம் 

முன்றில் தொறும் வீதி தொறும் 

  முக நெடுவாயிகள் தோறும் 

நின்று ஒளிரும் மணி 

  விளக்கு நிறைவாசப் பொற்குடங்கள் 

துன்று சுடர்த் தாமங்கள் 

  தூபங்கள் துதைவித்தார்.  1175 

 

 

எங்கணும் மெய்த் திருத்தொண்டர் 

  மறையவர்கள் ஏனையோர் 

மங்கல நீள் மணவினை நாள் 

  கேட்டு மிக மகிழ்வு எய்திப் 

பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் 

  புகுந்து ஈண்ட 

அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் 

  சிறப்பு மிக அளித்தார்.  1176 

 

 

மங்கல தூரிய நாதம் மறுகு 

  தொறும் நின்று இயம்பப் 

பொங்கிய நான்மறை ஓசை கடல் 

  ஓசை மிசைப் பொலியத் 

தங்கு நறும் குறை அகிலின் 

  தழைத்த செழும் புகையினுடன் 

செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ 

  விரை மணம் பெருக.  1177 

 

 

எண் திசையில் உள்ளோரும் 

  ஈண்டு வளத்தொடு நெருங்கப் 

பண்ட நிறை சாலைகளும் பல 

  வேறு விதம் பயில 

மண்டு பெரு நிதிக் குவைகள் 

  மலைப் பிறங்கல் என மலிய 

உண்டி வினைப் பெருந்துழனி 

  ஓவாத ஒலி ஓங்க.  1178 

 

 

மா மறை நூல் விதிச் சடங்கின் 

  வகுத்த முறை நெறி மரபின் 

தூ மணம் நல் உபகரணம் 

  சமைப்பவர் தம் தொழில் துவன்றத் 

தாமரையோன் அனைய பெரும் 

  தவ மறையோர் தாம் எடுத்த 

பூமருவு பொற்கலசப் புண்ணிய 

  நீர் பொலிவு எய்த.  1179 

 

 

குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு 

  அமைப்போர் இனம் குழுமப் 

பொங்குவிரைப் புதுக் கலவைப் 

  புகை எடுப்போர் தொகை விரவத் 

துங்க நறும் கர்ப்பூரச் 

  சுண்ணம் இடிப்போர் நெருங்க 

எங்கும் மலர்ப் பிணை புனைவோர் 

  ஈட்டங்கள் மிகப் பெருக.  1180 

 

 

இனைய பல வேறு தொழில் 

  எம்மருங்கும் நிரைத்து இயற்றும் 

மனை வளரும் மறுகு எல்லாம் மண 

  அணி செய் மறை மூதூர் 

நினைவு அரிய பெருவளங்கள் 

  நெருங்குதலால் நிதிக் கோமான் 

தனை இறைவர் தாம் ஏவச் 

  சமைத்தது போல் அமைந்து உளதால்.  1181 

 

 

மாறிலா நிறை வளம் தரும் 

  புகலியின் மணம் மீக் 

கூறு நாளின் முன் 

  நாளினில் வேதியர் குழாமும் 

நீறு சேர் திருத்தொண்டரும் 

  நிகர் இலாதவருக்கு 

ஆறு சூடினார் அருள் 

  திருக்காப்பு நாண் அணிவார்.  1182 

 

 

வேத வாய்மையின் விதி 

  உளி வினையினால் விளங்க 

ஓத நீர் உலகில் இயன் 

  முறை ஒழுக்கமும் பெருகக் 

காதல் நீள் திருத்தொண்டர்கள் 

  மறையவர் கவினார் 

மாதர் மைந்தர் பொன் காப்பு 

  நாண் நகர்வலம் செய்தார்.  1183 

 

 

நகர் வலம் செய்து புகுந்த 

  பின் நவமணி அணைந்த 

புகரில் சித்திரவிதான 

  மண்டபத்தினில் பொலியப் 

பகரும் வைதிக விதிச் 

  சமாவர்த்தனப் பான்மை 

திகழ முற்றிய செம்மலார் 

  திரு முன்பு சேர்ந்தார்.  1184 

 

 

செம் பொனின் பரிகலத்தினில் 

  செந்நெல் வெண்பரப்பின் 

வம்பு அணிந்த நீள் மாலை 

  சூழ் மருங்குற அமைத்த 

அம் பொன் வாச நீர்ப் பொற் 

  குடம் அரசு இலை தருப்பை 

பம்பு நீள்சுடர் மணி விளக்கு 

  ஒளிர் தரும் பரப்பில்.  1185 

 

 

நாத மங்கல முழக்கொடு 

  நல் தவ முனிவர் 

வேத கீதமும் விம்மிட 

  விரை கமழ் வாசப் 

போது சாந்தணி பூந்துகில் 

  புனைந்த புண்ணியம் போல் 

மீது பூஞ்சயனத்து இருந்தவர் 

  முன்பு மேவி.  1186 

 

 

ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் 

  மலர் அயன் அனைய 

சீர்மறைத் தொழில் சடங்கு செய் 

  திருந்து நூல் முனிவர் 

பார் வழிப்பட வரும் 

  இரு வினைகளின் பந்தச் 

சார்பு ஒழிப்பவர் திருக்கையில் 

  காப்பு நாண் சாத்த.  1187 

 

 

கண்ட மாந்தர்கள் கடி மணம் 

  காண வந்து அணைவார் 

கொண்ட வல்வினையாப்பு அவிழ் 

  கொள்கைய ஆன 

தொண்டர் சிந்தையும் வதனமும் 

  மலர்ந்தன சுருதி 

மண்டு மாமறைக் குலம் 

  எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே.  1188 

 

 

நிறைந்த கங்குலின் நிதிமழை 

  விதி முறை எவர்க்கும் 

புரந்த ஞான சம்பந்தர் தாம் 

  புன் நெறிச் சமய 

அரந்தை வல்லிருள் அகல 

  வந்து அவதரித்தால் போல் 

பரந்த பேர் இருள் துரந்து 

  வந்து எழுந்தனன் பகலோன்.  1189 

 

 

அஞ்சிறைச் சுரும்பு அறை 

  பொழில் சண்பை ஆண்தகையார் 

தஞ்சிவத் திருமணம் செயத் தவம் 

  செய் நாள் என்று 

மஞ்சனத் தொழில் புரிந்து என 

  மாசு இருள் கழுவிச் 

செஞ்சுடர்க் கதிர் பேரணி 

  அணிந்தன திசைகள்.  1190 

 

 

பரம்பு தம் வயின் எங்கணும் 

  உள்ள பல் வளங்கள் 

நிரம்ப முன் கொணர்ந்து 

  எண் திசையவர் நெருங்குதலால் 

தரம் கடந்தவர் தம் 

  திருக் கல்லி யாணத்தின் 

வரம்பில் தன் பயன் 

  காட்டுவது ஒத்தது வையம்.  1191 

 

 

நங்கள் வாழ்வு என 

  வரும் திருஞான சம்பந்தர் 

மங்கலத் திருமண எழுச்சியின் 

  முழக்கு என்னத் 

துங்க வெண்திரைச் சுரிவளை 

  ஆர்ப்பொடு சூழ்ந்து 

பொங்கு பேரொலி முழக்குடன் 

  எழுந்தது புணரி.  1192 

 

 

அளக்கர் ஏழும் ஒன்றாம் 

  எனும் பெருமை எவ்வுலகும் 

விளக்கு மாமண விழாவுடன் 

  விரைந்து செல்வன போல் 

துளக்கில் வேதியர் ஆகுதி 

  தொடங்கிடா முன்னம் 

வளர்க்கும் வேதியில் வலம் 

  சுழித்து எழுந்தது வன்னி.  1193 

 

 

சந்த மென் மலர்த் தாது அணி 

  நீறு மெய் தரித்துக் 

கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு 

  எனும் கண்டிகை பூண்டு 

சிந்தை தூய அன்பர்களுடன் 

  திருமணம் போத 

மந்த சாரியின் மணம் 

  கொணர்ந்து எழுந்தது மருத்து.  1194 

 

 

எண் திசை திறத்து யாவரும் 

  புகலி வந்து எய்தி 

மண்டும் அத்திருமண 

  எழுச்சியின் அணிவாய்ப்பக் 

கொண்ட வெண் நிறக் குரூஉச் 

  சுடர்க் கொண்டல்கள் என்ன 

வெண் துகில் கொடி 

  நிரைத்தது போன்றது விசும்பு.  1195 

 

 

ஏல இந்நலம் யாவையும் 

  எழுச்சி முன் காட்டும் 

காலை செய்வினை முற்றிய 

  கவுணியர் பெருமான் 

மூலமாகிய தோணி மேல் 

  முதல்வரை வணங்கிச் 

சீலமார் திருவருளினால் மணத்தின் 

  மேல் செல்வார்.  1196 

 

 

காழி மாநகர் வேதியர் 

  குழாத்தொடும் கலந்து 

சூழும் அன்பர்கள் ஏனையோர் 

  துதைந்து முன் செல்ல 

வாழி மாமறை முழங்கிட 

  வளம்பதி வணங்கி 

நீழல் வெண்சுடர் நித்திலச் 

  சிவிகை மேற்கொண்டார்.  1197 

 

 

யான வாகனம் ஏறுவார் 

  யாரும் மேற் கொள்ளக் 

கானம் ஆகிய தொங்கல் 

  பிச்சம் குடை கவரி 

மேல் நெருங்கிட விசும்பினும் 

  நிலத்தினும் எழுந்த 

வான துந்துபி முழக்குடன் 

  மங்கல இயங்கள்.  1198 

 

 

சங்கொடு தாரை சின்னம் தனிப் 

  பெரும் காளம் தாளம் 

வங்கியம் ஏனை மற்று மலர் 

  துளைக் கருவி எல்லாம் 

பொங்கிய ஒலியின் ஓங்கிப் 

  பூசுரர் வேத கீதம் 

எங்கணும் எழுந்து மல்கத் 

  திருமணம் எழுந்தது அன்றே.  1199 

 

 

கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து 

  ஒலி ஒரு பால் கோல 

வேதியர் வேத வாய்மை மிகும் 

  ஒலி ஒரு பால் மிக்க 

ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் 

  ஒலி ஒரு பால் ஏத்தும் 

நாத மங்கலங்கள் கீத நயப்பு 

  ஒலி ஒரு பாலாக.  1200 

 

 

விண்ணினை விழுங்க மிக்க வெண் 

  துகில் பதாகை வெள்ளம் 

கண் வெறி படைப்ப மிக்க 

  கதிர் விரி கவரிக் கானம் 

மண்ணிய மணிப் பூண் நீடும் 

  அரிசனம் மலிந்த பொற்பின் 

எண்ணிலா வண்ணத்தூசின் பொதி 

  பரப்பு எங்கும் நண்ண.  1201 

 

 

சிகையொடு மான் தோல் தாங்கும் 

  இடையும் ஆசானும் செல்வார் 

புகை விடும் வேள்விச் செந்தீ 

  இல்லுடன் கொண்டு போவார்

தகையிலா விருப்பின் மிக்க 

  பதிகங்கள் விளம்பிச் சார்வார் 

வகையறு பகையும் செற்ற 

  மாதவர் இயல்பின் மல்க.  1202 

 

 

அறுவகை விளங்கும் சைவத்து 

  அளவிலா விரதம் சாரும் 

நெறி வழி நின்ற வேடம் 

  நீடிய தவத்தின் உள்ளோர் 

மறுவறு மனத்தில் அன்பின் 

  வழியினால் வந்த யோகக் 

குறி நிலை பெற்ற 

  தொண்டர் குழாமாகி ஏக.  1203 

 

 

விஞ்சையர் இயக்கர் சித்தர் 

  கின்னரர் மிடைந்த தேவர் 

அஞ்சனம் நாட்ட ஈட்டத்து 

  அரம்பையர் உடனாய் உள்ளோர் 

தஞ்சுடர் விமானம் ஏறித் 

  தழைத்த ஆதரவினோடு 

மஞ்சுறை விசும்பின் மீது 

  மணஅணி காணச் சென்றார்.  1204 

 

 

மற்றிவர் மிடைந்து செல்லும் 

  மங்கல வனப்பின் காட்சி 

முற்ற இத் தலத்தில் உள்ளோர் 

  மொய்த்து உடன் படரும் போதில் 

அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் 

  மணம் மேல் செல்லும் 

பொற்பு அமை மணத்தின் சாயை 

  போன்று முன் பொலியச் செல்ல.  1205 

 

 

தவ அரசு ஆள உய்க்கும் 

  தனிக்குடை நிழற்றச் சாரும் 

பவம் அறுத்து ஆளவல்லார் 

  பாதம் உள்ளத்துக் கொண்டு 

புவனங்கள் வாழ வந்த 

  பூந்தராய் வேந்தர் போந்து 

சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் 

  திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்.  1206 

 

 

பெருமணக் கோயில் உள்ளார் 

  மங்கலம் பெருகும் ஆற்றால் 

வருமணத் திறத்தின் முன்னர் வழி 

  எதிர் கொள்ளச் சென்று 

திருமணம் புணர எய்தும் 

  சிரபுரச் செம்மலார் தாம் 

இருள் மணந்து இலங்கும் கண்டத்து 

  இறைவர் தம் கோயில் புக்கார்.  1207 

 

 

நாதரைப் பணிந்து போற்றி 

  நற்பொருள் பதிகம் பாடி 

காதல் மெய்யருள் முன் பெற்றுக் 

  கவுணியர் தலைவர் போந்து 

வேதியர் வதுவைக் கோலம் 

  புனைந்திடவேண்டும் என்னப் 

பூத நாயகர் தம் கோயில் 

  புறத்து ஒரு மடத்தில் புக்கார்.  1208 

 

 

பொற்குட(ம்) நிறைந்த வாசப் 

  புனிதமஞ்சன நீராட்டி 

விற்பொலி வெண்பட்டாடை மேதக 

  விளங்கச் சாத்தி 

நற்றிரு உத்தரீய நறும் 

  துகில் சாத்தி நானப் 

பற்பல கலவைச் சாந்தம் 

  பான்மையின் அணிந்த பின்னர்.  1209 

 

 

திருவடி மலர் மேல் பூத்த 

  செழுந்தகைச் சோதி என்ன 

மருவிய தரளக் கோவை 

  மணிச்சரி அணையச் சாத்தி 

விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு 

  பொற் சரட்டில் கோத்த 

பெருகு ஒளி முத்தின் தாமம் 

  பிறங்கிய தொங்கல் சாத்தி.  1210 

 

 

தண் சுடர் பரிய முத்துத் 

  தமனிய நாணில் கோத்த 

கண் கவர் கோவைப் பத்திக் 

  கதிர்க் கடி சூத்திரத்தை 

வெண் சுடர்த் தரள மாலை 

  விரிசுடர்க் கொடுக்கின் மீது 

வண் திரு அரையின் நீடு 

  வனப்பு ஒளிவளரச் சாத்தி.  1211 

 

 

ஒளி கதிர்த் தரளக் கோவை 

  உதர பந்தனத்தின் மீது

தளிர் ஒளி துளும்பு முத்தின் 

  சன்ன வீரத்தைச் சாத்திக் 

குளிர் நிலவு எறிக்கும் முத்தின் 

  பூண நூல் கோவை சாத்தி 

நளிர் கதிர் முத்து மாலை 

  நகு சுடர் ஆரம்சாத்தி.  1212 

 

 

வாள் விடு வயிரக் கட்டு 

  மணிவிரல் ஆழி சாத்தித் 

தாளுறு தடக்கை முத்தின் 

  தண்டையும் சரியும் சாத்தி 

நீளொளி முழங்கைப் பொட்டு நிரை 

  சுடர் வடமும் சாத்தித் 

தோள் வளைத் தரளப் பைம் பூண் 

  சுந்தரத் தோள் மேல் சாத்தி.  1213 

 

 

திருக் கழுத்து ஆரம் தெய்வக் 

  கண்டிகை மாலை சேரப் 

பருத்த முத்து ஒழுங்கு கோத்த 

  படர் ஒளி வடமும் சாத்தி 

பெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய 

  திருவார் காதில் 

வருக்க வெண் தரளக் கொத்தின் 

  வடிக் குழை விளங்கச் சாத்தி.  1214 

 

 

நீற்று ஒளி தழைத்துப் பொங்கி 

  நிறை திரு நெற்றிமீது 

மேற் பட விரிந்த சோதி 

  வெண் சுடர் எழுந்தது என்னப் 

பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் 

  திரணை சாத்தி 

ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் 

  வளர் மகுடம் சேர்த்தார்.  1215 

 

 

இவ்வகை நம்மை ஆளும் 

  ஏர்வளர் தெய்வக் கோலம் 

கைவினை மறையோர் செய்யக் 

  கடிகொள் செங்கமலத் தாதின் 

செவ்வி நீள் தாம மார்பர் 

  திரு அடையாள மாலை 

எவ்வுலகோரும் ஏத்தத் தொழுது 

  தாம் எடுத்துப் பூண்டார்.  1216 

 

 

அழகினுக்கு அணியாம் வெண்ணீறு 

  அஞ்சு எழுத்து ஓதிச்சாத்திப் 

பழகிய அன்பர் சூழப் படர் 

  ஒளி மறுகில் எய்தி 

மழ விடை மேலோர் தம்மை 

  மனம் கொள வணங்கி வந்து 

முழவொலி எடுப்ப முத்தின் 

  சிவிகை மேல் கொண்டபோது.  1217 

 

 

எழுந்தன சங்க நாதம் 

  இயம்பின இயங்கள் எங்கும் 

பொழிந்தன விசும்பில் விண்ணேர் 

  கற்பகப் புதுப்பூ மாரி 

தொழுந்தகை முனிவர் தொண்டர் 

  சுருதியின் வாழ்த்துப் பொங்கி

வழிந்தன திசைகள் மீது 

  மலர்ந்தன உலகம் எல்லாம்.  1218 

 

 

படர் பெரும் தொங்கல் பிச்சம் 

  பைம் கதிர்ப் பீலிப் பந்தர் 

அடர் புனை செம் பொன் 

  பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக் 

கடலின் மீது எழுந்து நிற்கும் 

  கதிர் நிறை மதியம் போல 

வடநிரை அணிந்த முத்தின் 

  மணிக்குடை நிழற்ற வந்தார்.  1219 

 

 

சீரணி தெருவினூடு திருமணம் 

  செல்ல முத்தின் 

ஏரணி காளம் சின்னம் இலங்கு 

  ஒளித் தாரை எல்லாம் 

பேரொலி பெருக முன்னே 

  பிடித்தன மறைகளோடு 

தாரணி உய்ய ஞான சம்பந்தர் 

  வந்தார் என்று.  1220 

 

 

மண்ணினுக்கு இடுக்கண் தீர 

  வந்தவர் திரு நாமங்கள் 

எண்ணில பலவும் ஏத்திச் 

  சின்னங்கள் எழுந்த போது அவ் 

அண்ணலார் வதுவை செய்ய 

  அலங்கரித்து அணையப் பெற்ற 

புண்ணிய மறையோர் மாட 

  மங்கலம் பொழிந்து பொங்க.  1221 

 

 

முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற 

  மூர்த்தியார் செங்கை பற்ற 

நற்பெரும் தவத்தின் நீர்மை நலம் 

  படைத்து எழுந்த தெய்வக் 

கற்பகப் பூங்கொம்பு அன்னார் 

  தம்மையும் காப்புச் சேர்த்துப் 

பொற்புறும் சடங்கு முன்னர்ப் 

  பரிவுடன் செய்தவேலை.  1222 

 

 

செம் பொன் செய் வாசிச் சூட்டுத் 

  திருமணிப் புனை பூண் செல்வப் 

பைம் பொனின் மாலை வேய்ந்த 

  பவள மென் கொடி ஒப்பாரை 

நம்பன் தன் அருளே வாழ்த்தி 

  நல் எழில் விளங்கச் சூட்டி 

அம் பொன் செய் தீபம் என்ன 

  அழகு அலங்கரித்து வைத்தார்.  1223 

 

 

மா மறை மைந்தர் எல்லாம் 

  மணத்து எதிர் சென்று மன்னும் 

தூமலர்ச் செம் பொன் சுண்ணம் 

  தொகு நவமணியும் வீசத் 

தாமரை மலரோன் போல்வார் 

  அரசிலை தருப்பை தோய்ந்த 

காமர் பொற் கலச நன்னீர் 

  இருக்குடன் கலந்து வீச.  1224 

 

 

விண்ணவர் மலரின் மாரி விசும்பு 

  ஒளி தழைப்ப வீச 

மண்ணகம் நிறைந்த கந்த 

  மந்த மாருதமும் வீசக் 

கண் ஒளி விளக்கம் 

  மிக்கார் காமர் தோரணங்களூடு 

புண்ணிய விளைவு போல்வார் 

  பூம் பந்தர் முன்பு சார்ந்தார்.  1225 

 

 

பொன் அணி சங்கின் வெள்ளம் 

  பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப 

மன்னிய தரளப் பத்தி வளர் 

  மணிச் சிவிகை நின்றும் 

பன் மலர் நறும் பொற் 

  சுண்ணம் பரந்த பாவாடை மீது 

முன் இழிந்து அருளி வந்தார் 

  மூவுலகு உய்ய வந்தார்.  1226 

 

 

மறைக்குல மனையின் வாழ்க்கை 

  மங்கல மகளிர் எல்லாம் 

நிரைத்த நீர்ப் பொற் குடங்கள் 

  நிரை மணி விளக்குத் தூபம் 

நறைக் குல மலர் சூழ் மாலை 

  நறுஞ் சுடர் முளைப் பொற் பாண்டில் 

உறைப் பொலி கலவை ஏந்தி 

  உடன் எதிர் ஏற்று நின்றார்.  1227 

 

 

ஆங்கு முன் இட்ட செம் பொன் 

  அணி மணிப் பீடம் தன்னில் 

ஓங்கிய ஞான வெள்ளம் உள் 

  நிறைந்து எழுவது என்னத் 

தாங்கிய முத்தின் பைம் பூண் 

  தண் நிலா எறிப்ப ஏறிப் 

பாங்கு ஒளி பரப்பி நின்றார் 

  பர சமயங்கள் வீழ்த்தார்.  1228 

 

 

எதிர் வரவேற்ற சாயல் 

  இளமயில் அனைய மாதர் 

மதுரமங்கல முன் ஆன வாழ்த்து 

  ஒலி எடுப்ப வந்து 

கதிர் மணிக் கரக வாசக் 

  கமழ் புனல் ஒழுக்கிக் காதல் 

விதி முறை வலம் கொண்டு 

  எய்திமேவு நல் வினைகள் செய்தார்.  1229 

 

 

மங்கலம் பொலிய ஏந்தி 

  மாதரார் முன்பு செல்லக் 

கங்கையின் கொழுந்து செம் பொன் 

  இமவரை கலந்தது என்ன 

அங்கு அவர் செம்பொன் 

  மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார் 

எங்களை வாழ முன்னாள் 

  ஏடு வைகையினுள் இட்டார்.  1230 

 

 

அகில் நறும் தூபம் விம்மி 

  அணிகிளர் மணியால் வேய்ந்த 

துகில் புனை விதான நீழல் 

  தூமலர்த்  தவிசின் மீது 

நகில் அணி முத்த மாலை 

  நகை முக மடவார் வாழ்த்த 

இகலில் சீர் மறையோர் சூழ 

  இனிதின் அங்கு இருந்த வேலை.  1231 

 

 

திருமகள் கொடுக்கப் பெற்ற செழு 

  மறை முனிவர் தாமும் 

அருமையான் முன் செய் 

  மெய்ம்மை அருந்தவ மனைவியாரும் 

பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் 

  பிள்ளையார் முன் 

உரிமையால் வெண்பால் தூ நீர் 

  உடன் எடுத்து ஏத்திவந்தார்.  1232 

 

 

வந்து முன் எய்தித் தான் முன் 

  செய் மா தவத்தின் நன்மை 

நந்து நம்பாண்டார் நம்பி ஞான 

  போனகர் பொற் பாதம் 

கந்தவார் குழலினார் பொற் கரக 

  நீர் எடுத்து வார்ப்ப 

புந்தியால் நினை தியானம் 

  புரி சடையான் என்றுன்னி.  1233 

 

 

விருப்பினால் விளக்கி மிக்க புனித 

  நீர் தலைமேல் கொண்டு 

பொருப்புறு மாடத்து உள்ளும் 

  புறத்துளும் தெளித்த பின்னர் 

உருப்பொலி உதரத் துள்ளும் 

  பூரித்தார் உவகை பொங்கி 

அருப்புறு கிளைஞர் மேலும் 

  தெளித்தனர் ஆர்வத்தோடும்.  1234 

 

 

பெருகொளி ஞானம் உண்ட 

  பிள்ளையார் மலர்க்கை தன்னில் 

மருவும் மங்கல நீர் வாசக் 

  கரகம் முன் ஏந்தி வார்ப்பார் 

தரு முறைக் கோத்திரத்தின் தம் 

  குலம் செப்பி என்றன் 

அருநிதிப் பாவை யாரைப் 

  பிள்ளையார்க்கு அளித்தேன் என்றார்.  1235 

 

 

நல் தவக் கன்னியார் கை 

  ஞான சம்பந்தர் செங்கை 

பற்றுதற்கு உரிய பண்பில் பழுது 

  இல் நற் பொழுது நண்ண 

பெற்றவர் உடன் பிறந்தார் பெரு 

  மணப் பிணை அ(ன்)னாரைச் 

சுற்ற(ம்)முன் சூழ்ந்து போற்றக் 

  கொண்டு முன் துன்னினார்கள்.  1236 

 

 

ஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம் 

  இசைந்தவர் வலப்பால் எய்தி 

நாகமார் பணப்பேர் அல்குல் 

  நல்தவக் கொழுந்து அன்னாரை 

மாகமார் சோதி மல்க 

  மன்னி வீற்றிருந்த வெள்ளை 

மேகமொடு இசையும் மின்னுக் கொடி 

  என விளங்க வைத்தார்.  1237 

 

 

புனித மெய்க் கோல நீடு 

  புகலியார் வேந்தர் தம்மைக் 

குனி சிலை புருவ மென் 

  பூங்கொம்பனார் உடனே கூட 

நனி மிகக் கண்ட போதின் 

  நல்ல மங்கலங்கள் கூறி 

மனிதரும் தேவர் ஆனார் 

  கண்இமையாது வாழ்த்தி.  1238 

 

 

பத்தியில் குயிற்றும் பைம் பொன் 

  பவளக்கால் பந்தர் நாப்பண் 

சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் 

  திரு நீல நக்கர் 

முத் தமிழ் விரகர் முன்பு 

  முதன் மறை முறையினோடு 

மெய்த்த நம் பெருமான் பாதம் 

  மேவும் உள்ளத்தால் செய்ய.  1239 

 

 

மறையொலி பொங்கி ஓங்க 

  மங்கல வாழ்த்து மல்க 

நிறை வளைச் செங்கை பற்ற 

  நேரிழை அவர் முன் அந்தப் 

பொறை அணி முந்நூல் மார்பர் 

  புகரில் பொரிகை அட்டி 

இறைவரை ஏத்தும் வேலை 

  எரிவலம் கொள்ள வேண்டி.  1240 

 

 

அருப்பு மென் முலையினார் தம் 

  அணிமலர்க் கைப் பிடித்து அங்கு 

ஒருப் படும் உடைய பிள்ளையார் 

  திரு உள்ளம் தன்னில் 

விருப்புறும் அங்கியாவார் விடை 

  உயர்த்தவரே என்று 

திருப் பெரு மணத்தை மேவும் 

  சிந்தையில் தெளிந்து செல்வார்.  1241 

 

 

மந்திர முறையால் உய்த்த 

  எரிவலம் ஆக மாதர் 

தம் திருக் கையைப் 

  பற்றும் தாமரைச் செங்கையாளர் 

இந்த இல் ஒழுக்கம் வந்து 

  சூழ்ந்ததே இவள் தன்னோடும் 

அந்தமில் சிவன் தாள் சேர்வன் 

  என்னும் ஆதரவு பொங்க.  1242 

 

 

மலர் பெரும் கிளையும் தொண்டர் 

  கூட்டமும் மல்கிச் சூழ 

அலகில் மெய்ஞ்ஞானத் தெல்லை 

  அடைவுறும் குறிப்பால் அங்கண்

உலகின் எம்மருங்கும் நீங்க உடன் 

  அணைந்து அருள வேண்டிக் 

குல மணம் புரிவித்தார் தம் 

  கோயிலை நோக்கி வந்தார்.  1243 

 

 

சிவன் அமர்ந்து அருளும் செல்வத் 

  திருப் பெரு மணத்துள் எய்தித் 

தவ நெறி வளர்க்க வந்தார் 

  தலைப்படும் சார்பு நோக்கிப் 

பவம் அற என்னை முன்னாள் 

  ஆண்ட அப்பண்பு கூட 

நவம் மலர்ப் பாதம் கூட்டும் 

  என்னும் நல் உணர்வு நல்க.  1244 

 

 

காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் 

  பெருமணம் எடுத்துக் கண்டோர் 

தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் 

  செம் பொருளாக் கொண்டு 

நாதனே நல்லூர் மேவும் பெரு 

  மண நம்பனே உன் 

பாத மெய்ந் நீழல் சேரும் 

  பருவம் ஈது என்று பாட.  1245 

 

 

தேவர்கள் தேவர் தாமும் 

  திருவருள் புரிந்து நீயும் 

பூவை அன்னாளும் இங்கு உன் 

  புண்ணிய மணத்தின் வந்தார் 

யாவரும் எம்பால் சோதி இதனுள் 

  வந்து எய்தும் என்று 

மூவுலகு ஒளியால் விம்ம 

  முழுச் சுடர்த் தாணுவாகி.  1246 

 

 

கோயில் உட் பட மேல் 

  ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி 

வாயிலை வகுத்துக் காட்ட மன்னு 

  சீர்ப் புகலி மன்னர் 

பாயின ஒளியால் நீடு பரம் 

  சுடர்த் தொழுது போற்றி 

மாயிரு ஞாலம் உய்ய 

  வழியினை அருளிச் செய்வார்.  1247 

 

 

ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் 

  நமச்சிவாய அச் சொலாம் என்று 

ஆன சீர் நமச்சிவாயத் 

  திருப்பதிகத்தை அங்கண் 

வானமும் நிலமும் கேட்க அருள் 

  செய்து இம் மணத்தில் வந்தோர் 

ஈனமானம் பிறவி தீர 

  யாவரும் புகுக என்ன.  1248 

 

 

வரு முறைப் பிறவி வெள்ளம் 

  வரம்பு காணாது அழுந்தி 

உரு எனும் துயரக் கூட்டில் 

  உணர்வு இன்றி மயங்குவார்கள் 

திருமணத்துடன் சேவித்து முன் 

  செலும் சிறப்பினாலே 

மருவிய பிறவி நீங்க 

  மன்னு சோதியினுள் புக்கார்.  1249 

 

 

சீர் பெருகு நீல நக்கர் 

  திரு முருகர் முதல் தொண்டர் 

ஏர் கெழுவு சிவபாத 

  இருதயர் நம்பாண்டார் சீர் 

ஆர் திரு மெய்ப் பெரும்பாணர் 

  மற்று எனையோர் அணைந்துளோர் 

பார் நிலவு கிளை சூழப் 

  பன்னிகளோடு உடன் புக்கார்.  1250 

 

 

அணி முத்தின் சிவிகை முதல் 

  அணி தாங்கிச் சென்றேர்கள் 

மணி முத்த மாலை புனை 

  மடவார் மங்கலம் பெருகும் 

பணி முற்றும் எடுத்தார்கள் 

  பரிசனங்கள் வினைப்பாசம்

துணிவித்த உணர்வினராய்த் தொழுது 

  உடன் புக்கு ஒடுங்கினார்.  1251 

 

 

ஆறு வகைச் சமயத்தில் 

  அருந் தவரும் அடியவரும் 

கூறு மறை முனிவர்களும் 

  கும்பிட வந்து அணைந்தாரும் 

வேறு திருவருளினால் வீடு 

  பெற வந்தாரும் 

ஈறில் பெரும் சோதியினுள் 

  எல்லாரும் புக்கதற்பின்.  1252 

 

 

காதலியைக் கைப்பற்றிக் கொண்டு 

  வலம் செய்தருளித் 

தீது அகற்ற வந்து 

  அருளும் திருஞான சம்பந்தர் 

நாதன் எழில் வளர் சோதி 

  நண்ணி அதன் உள்புகுவார் 

போத நிலை முடிந்த வழிப் 

  புக்கு ஒன்றி உடன் ஆனார்.  1253 

 

 

பிள்ளையார் எழுந்து அருளிப் 

  புக்கதன்பின் பெரும் கூத்தர் 

கொள்ள நீடிய சோதிக் குறி 

  நிலை அவ்வழி கரப்ப 

வள்ளலார் தம் பழைய 

  மணக் கோயில் தோன்றுதலும் 

தெள்ளு நீர் உலகத்துப் 

  பேறுஇல்லார் தெருமந்தார்.  1254 

 

 

கண் நுதலார் திருமேனியுடன் 

  கூடக் கவுணியனார் 

நண்ணியது தூரத்தே கண்டு 

  நணுகப் பெறா 

விண்ணவரு(ம்) முனிவர்களும் 

  விரிஞ்சனே முதலானோர்

எண்ணிலவர் ஏசறவு தீர 

  எடுத்து ஏத்தினார்.  1255 

 

 

அரும் தமிழா கரர் சரிதை 

  அடியேனுக்கு அவர் பாதம் 

தரும் பரிசால் அறிந்தபடி 

  துதி செய்தேன் தாரணிமேல் 

பெருங்கொடையும் திண்ணனவும் பேர் 

  உணர்வும் திருத்தொண்டால் 

வரும் தகைமைக் கலிக் காமனார் 

 

  செய்கை வழுத்து வேன். 1256

 

திருச்சிற்றம்பலம்