பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

030 காரைக்கால் அம்மையார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மானம்மிகு தருமத்தின்

  வழிநின்று வாய்மையினில்

ஊனமில்சீர்ப் பெருவணிகர்

  குடிதுவன்றி ஓங்குபதி

கூனல்வளை திரைசுமந்து

  கொண்டுஏறி மண்டுகழிக்

கானல்மிசை உலவுவளம்

  பெருகுதிருக் காரைக்கால்.  1 

 

 

வங்கமலி கடல்காரைக்

  காலின்கண் வாழ்வணிகர்

தங்கள்குலத் தலைவனார்

  தனதத்தனார் தவத்தால்

அங்கவர்பால் திருமடந்தை

  அவதரித்தாள் எனவந்து

பொங்கியபே ரழகுமிகப்

  புனிதவதி யார்பிறந்தார்.  2 

 

 

வணிகர்பெருங் குலம்விளங்க

  வந்துபிறந் தருளியபின்

அணிகிளர்மெல் அடிதளர்வுற்

  றசையுநடைப் பருவத்தே

பணிஅணிவார் கழற்கடிமை

  பழகிவரும் பாங்குபெறத்

தணிவில்பெரு மனக்காதல்

  ததும்பவரும் மொழிபயின்றார்.  3 

 

 

பல்பெருநற் கிளைஉவப்பப்

  பயில்பருவச் சிறப்பெல்லாம்

செல்வமிகு தந்தையார்

  திருப்பெருகுஞ் செயல்புரிய

மல்குபெரும் பாராட்டின்

  வளர்கின்றார் விடையவர்பால்

அல்கியஅன் புடன்அழகின்

  கொழுந்தெழுவ தெனவளர்வார்.  4 

 

 

வண்டல்பயில் வனவெல்லாம்

  வளர்மதியம் புனைந்தசடை

அண்டர்பிரான் திருவார்த்தை

  அணையவரு வனபயின்று

தொண்டர்வரில் தொழுதுதா

  தியர்போற்றத் துணைமுலைகள்

கொண்டநுசுப் பொதுங்குபதக்

  கொள்கையினிற் குறுகினார்.  5 

 

 

நல்லவென உறுப்புநூ

  லவர்உரைக்கும் நலம்நிரம்பி 

மல்குபெரு வனப்புமீக்

  கூரவரு மாட்சியினால்

இல்லிகவாப் பருவத்தில்

  இவர்கள்மர பினுக்கேற்கும்

தொல்குலத்து வணிகர்மகட்

  பேசுதற்குத் தொடங்குவார்.  6 

 

 

நீடியசீர்க் கடல்நாகை

  நிதிபதிஎன் றுலகின்கண்

பாடுபெறு புகழ்வணிகன்

  பயந்தகுல மைந்தனுக்குத்

தேடவருந் திருமரபில்

  சேயிழையை மகட்பேச

மாடமலி காரைக்கால்

  வளநகரில் வரவிட்டார்.  7 

 

 

வந்தமூ தறிவோர்கள்

  மணங்குறித்த மனைபுகுந்து

தந்தையாம் தனதத்தன்

  தனைநேர்ந்து "நீபயந்த

பைந்தொடியை நிதிபதிமைந்

  தன்பரம தத்தனுக்கு

முந்தைமர பினுக்கேற்கும்

  முறைமைமணம் புரி"கென்றார்.  8 

 

 

மற்றவனும் முறைமையினால்

  மனம்இசைந்து செலவிடச்சென்று

உற்றவர்கள் உரைகேட்ட

  நிதிபதியும் உயர்சிறப்புப்

பெற்றனன்போல் உவந்துதனிப்

  பெருமகட்குத் திருமலியும்

சுற்றமுடன் களிகூர்ந்து

  வதுவைவினைத் தொழில்பூண்டான்.  9 

 

 

மணமிசைந்த நாளோலை

  செலவிட்டு மங்கலநாள்

அணையவது வைத்தொழில்க

  ளானவெலாம் அமைவித்தே

இணரலங்கல் மைந்தனையும்

  மணவணியின் எழில்விளக்கி

பணைமுரசம் எழுந்தார்ப்பக்

  காரைக்கால் பதிபுகுந்தார்.  10 

 

 

அளிமிடைதார்த் தனதத்தன்

  அணிமாடத்துள் புகுந்து

தெளிதருநூல் விதிவழியே

  செயல்முறைமை செய்தமைத்துத்

தளிரடிமென் நகைமயிலைத்

  தாதவிழ்தார்க் காளைக்குக்

களிமகிழ்சுற் றம்போற்றக்

  கலியாணஞ் செய்தார்கள்.  11 

 

 

மங்கலமா மணவினைகள்

  முடித்தியல்பின் வைகுநாள்

தங்கள்குடிக் கரும்புதல்வி

  ஆதலினால் தனதத்தன்

பொங்கொலிநீர் நாகையினிற்

  போகாமே கணவனுடன்

அங்கண்அமர்ந் தினிதிருக்க

  அணிமாடம் மருங்கமைத்தான்.  12 

 

 

மகட்கொடையின் மகிழ்சிறக்கும்

  வரம்பில்தனங் கொடுத்ததற்பின்

நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்

  நிதிபதிதன் குலமகனும்

தகைப்பில்பெருங் காதலினால்

  தங்குமனை வளம்பெருக்கி

மிகப்புரியும் கொள்கையினில்

  மேம்படுதல் மேவினான்.  13 

 

 

ஆங்கவன்தன் இல்வாழ்க்கை

  அருந்துணையாய் அமர்கின்ற

பூங்குழலார் அவர்தாமும்

  பொருவிடையார் திருவடிக்கீழ்

ஓங்கியஅன் புறுகாதல்

  ஒழிவின்றி மிகப்பெருகப்

பாங்கில்வரும் மனைஅறத்தின்

  பண்புவழாமையில் பயில்வார்.  14 

 

 

நம்பர்அடி யார்அணைந்தால்

  நல்லதிரு அமுதளித்தும்

செம்பொன்னும் நவமணியும்

  செழுந்துகிலும் முதலான

தம்பரிவி னால்அவர்க்குத்

  தகுதியின்வேண் டுவகொடுத்தும்

உம்பர்பிரான் திருவடிக்கீழ்

  உணர்வுமிக ஒழுகுநாள்.  15 

 

 

பாங்குடைய நெறியின்கட்

  பயில்பரம தத்தனுக்கு

மாங்கனிகள் ஓரிரண்டு

  வந்தணைந்தார் சிலர்கொடுப்ப

ஆங்கவைதான் முன்வாங்கி

  அவர்வேண்டுங் குறையளித்தே

"ஈங்கிவற்றை இல்லத்துக்

  கொடுக்க"என இயம்பினான்.  16 

 

 

கணவன்தான் வரவிடுத்த

  கனிஇரண்டுங் கைக்கொண்டு

மணமலியும் மலர்க்கூந்தல்

  மாதரார் வைத்ததற்பின்

பணஅரவம் புனைந்தருளும்

  பரமனார் திருத்தொண்டர்

உணவின்மிகு வேட்கையினால்

  ஒருவர்மனை யுட்புகுந்தார்.  17 

 

 

வேதங்கள் மொழிந்தபிரான்

  மெய்த்தொண்டர் நிலைகண்டு

"நாதன்தன் அடியாரைப்

  பசிதீர்ப்பேன்" எனநண்ணிப்

பாதங்கள் விளக்கநீர்

  முன்னளித்துப் பரிகலம்வைத்(து)

ஏதந்தீர் நல்விருந்தா

  இன்அடிசில் ஊட்டுவார்.  18 

 

 

கறியமுதங் குதவாதே

  திருஅமுது கைகூட

வெறிமலர்மேல் திருவனையார்

  "விடையவன்தன் அடியாரே

பெறலரிய விருந்தானால்

  பேறிதன்மேல் இல்லை"எனும்

அறிவினராய் அவர்அமுது

  செய்வதனுக் காதரிப்பார்.  19 

 

 

இல்லாளன் "வைக்க"எனத்

  தம்பக்கல் முன்னிருந்த

நல்லநறு மாங்கனிகள்

  இரண்டினில்ஒன் றைக்கொண்டு

வல்விரைந்து வந்தணைந்து

  படைத்துமன மகிழ்ச்சியினால்

அல்லல்தீர்ப் பவர்அடியார்

  தமைஅமுது செய்வித்தார்.  20 

 

 

மூப்புறும்அத் தளர்வாலும்

  முதிர்ந்துமுடு கியவேட்கைத்

தீப்பசியின் நிலையாலும்

  அயர்ந்தணைந்த திருத்தொண்டர்

வாய்ப்புறுமென் சுவைஅடிசில்

  மாங்கனியோ டினிதருந்திப்

பூப்பயில்மென் குழல்மடவார்

  செயல்உவந்து போயினார்.  21 

 

 

மற்றவர் தாம்போயின

  பின்மனைப்பதி ஆகியவணிகன்

உற்றபெரும் பகலின்கண்

  ஓங்கியபேர் இல்எய்திப்

பொற்புறமுன் நீர்ஆடிப்புகுந்து

  அடிசில் புரிந்துஅயிலக்

கற்புடைய மடவாரும்கடப்

  பாட்டில் ஊட்டுவார்.  22 

 

 

இன் அடிசில் கறிகள் உடன் 

  எய்தும் முறை இட்டு அதன்பின்

மன்னிய சீர்க் கணவன் தான் 

  மனை இடை முன் வைப்பித்த

நல் மதுர மாங்கனியில் 

  இருந்ததனை நறும் கூந்தல்

அன்ன மனையார் தாமும் கொடு 

  வந்து கலத்து அளித்தார்.  23 

 

 

மனைவியார் தாம் படைத்த மதுர(ம்) 

  மிக வாய்த்த கனி

தனை நுகர்ந்த இனிய சுவை 

  ஆராமைத் தார் வணிகன்

இனையது ஒரு பழம் இன்னும் 

  உளது அதனை இடுக என

அனையது தாம் கொண்டு வர 

  அணைவார் போல் அங்கு அகன்றார்.  24 

 

 

அம் மருங்கு நின்று அயர்வார் 

  அரும் கனிக்கு அங்கு என்செய்வார்

மெய்ம் மறந்து நினைந்து உற்ற 

  இடத்து உதவும் விடையவர் தாள் 

தம் மனம் கொண்டு உணர்தலுமே 

  அவர் அருளால் தாழ் குழலார்

கைம் மருங்கு வந்து இருந்தது 

  அதிமதுரக் கனி ஒன்று.  25 

 

 

மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து 

  இடலும் அயின்று அதனில்

உற்ற சுவை அமுதினும் மேல் 

  பட உளதாயிட இது தான்

முன் தரு மாங் கனி 

  அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்

பெற்றது வேறு எங்கு என்று 

  பெய் வளையார் தமைக் கேட்டான்.  26 

 

 

அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் 

  உடையார் அளித்து அருளும்

செவ்விய பேரருள் விளம்பும் திறம் 

  அன்று என்று உரை செய்யார்

கை வரு கற்புடை நெறியால் 

  கணவன் உரை காவாமை

மெய் வழி அன்று என விளம்பல் 

  விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்.  27 

 

 

செய்த படி சொல்லுவதே 

  கடன் என்னும் சீலத்தால் 

மை தழையும் கண்டர் சேவடிகள் 

  மனத்து உற வணங்கி

எய்தவரும் கனி அளித்தார் 

  யார் என்னும் கணவனுக்கு

மொய் தரு பூங்குழல் மடவார் 

  புகுந்தபடி தனை மொழிந்தார்.  28 

 

 

ஈசன் அருள் எனக் கேட்ட 

  இல் இறைவன் அது தெளியான்

வாச மலர்த் திரு அனையார் தமை 

  நோக்கி மற்று இது தான்

தேசுடைய சடைப் பெருமான் 

  திருவருளேல் இன்னமும் ஓர்

ஆசில் கனி அவன் அருளால் 

  அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.  29 

 

 

பாங்கு அகன்று மனைவியார் பணி 

  அணிவார் தமைப் பரவி

ஈங்கு இது அளித்து அருளீரேல் 

  என் உரை பொய்யாம் என்ன

மாங்கனி ஒன்று அருளால் வந்து 

  எய்துதலும் மற்று அதனை

ஆங்கு அவன் கைக் 

  கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான்.  30 

 

 

வணிகனும் தன் கைப் புக்க 

  மாங்கனி பின்னைக் காணான்

தணிவரும் பயம் மேற்கொள்ள 

  உள்ளமும் தடுமாறு எய்தி

அணி குழல் அவரை வேறு ஓர் 

  அணங்கு எனக் கருதி நீங்கும்

துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் 

  தொடர்வின்றி ஒழுகு நாளில்.  31 

 

 

விடுவதே எண்ணம் ஆக 

  மேவிய முயற்சி செய்வான்

படுதிரைப் பரவை மீது படர் 

  கலம் கொண்டு போகி

நெடு நிதி கொணர்வேன் என்ன 

  நிரந்தபல் கிளைஞர் ஆகும்

வடுவில் சீர் வணிக 

  மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்.  32 

 

 

கலஞ் சமைத்து அதற்கு 

  வேண்டும் கம்மியருடனே செல்லும்

புலங்களில் விரும்பு பண்டம் 

  பொருந்துவ நிரம்ப ஏற்றிச் 

சலம் தரு கடவுள் போற்றித் 

  தலைமையாம் நாய்கன் தானும்

நலம் தரு நாளில் ஏறி நளிர் 

  திரைக் கடல் மேல் போனான்.  33 

 

 

கடல் மிசை வங்கம் ஓட்டிக் 

  கருதிய தேயம் தன்னில்

அடைவுறச் சென்று சேர்ந்து அங்கு 

  அளவில் பல் வளங்கள் முற்றி

இடை சில நாட்கள் நீங்க 

  மீண்டும் அக் கலத்தில் ஏறிப்

படர் புனல் கன்னி நாட்டோர் 

  பட்டினம் மருங்கு சேர்ந்தான்.  34 

 

 

அப் பதி தன்னில் ஏறி 

  அலகில் பல் பொருள்கள் ஆக்கும்

ஒப்பில் மா நிதியம் எல்லாம் 

  ஒருவழிப் பெருக உய்த்து

மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் 

  விரும்பவோர் வணிகன் பெற்ற

செப்பருங் கன்னி தன்னைத் 

  திருமலி வதுவை செய்தான்.  35 

 

 

பெறல் அரும் திருவினாளைப் பெரு 

  மணம் புணர்ந்து முன்னை

அறல் இயல் நறும் மென் 

  கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்

புறம் ஒரு வெளி 

  உறாமல் பொதிந்த சிந்தனையினோடு

முறைமையின் வழாமை வைகி முகம் 

  மலர்ந்து ஒழுகும் நாளில்.  36 

 

 

முருகலர் சோலை மூதூர் 

  அதன் முதல் வணிகரோடும்

இரு நிதிக் கிழவன் என்ன

  எய்திய திருவின் மிக்குப்

பொரு கடல் கலங்கள் போக்கும் 

  புகழினான் மனைவி தன்பால்

பெருகொளி விளக்குப் போல் ஓர் 

  பெண்கொடி அரிதில் பெற்றான்.  37 

 

 

மட மகள் தன்னைப் பெற்று 

  மங்கலம் பேணித் தான் முன்பு

உடன் உறைவு அஞ்சி நீத்த 

  ஒரு பெரு மனைவி யாரைத்

தொடர்வற நினைந்து தெய்வத் தொழு 

  குலம் என்றே கொண்டு

கடன் அமைத்தவர் தம் நாமம் 

  காதல் செய் மகவை இட்டான்.  38 

 

 

இந்நிலை இவன் இங்கு எய்தி 

  இருந்தனன் இப்பால் நீடும்

கன்னி மா மதில் சூழ் 

  மாடக் காரைக்கால் வணிகன் ஆன

தன் நிகர் கடந்த செல்வத் 

  தனதத்தன் மகளார் தாமும்

மன்னிய கற்பினோடு மனை 

  அறம் புரிந்து வைக.  39 

 

 

விளை வளம் பெருக்க வங்கம் 

  மீது போம் பரம தத்தன்

வளர் புகழ்ப் பாண்டி நாட்டு 

  ஓர் மாநகர் தன்னில் மன்னி

அளவில் மா நிதியம் ஆக்கி 

  அமர்ந்து இனிது இருந்தான் என்று

கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் 

  கிளைஞர் தாம் கேட்டார் அன்றே.  40 

 

 

அம் மொழி கேட்ட 

  போதே அணங்கனார் சுற்றத்தாரும்

தம் உறு கிளைஞர்ப் போக்கி 

  அவன் நிலை தாமும் கேட்டு

மம்மர் கொள் மனத்தர் ஆகி 

  மற்றவன் இருந்த பாங்கர்

கொம்மை வெம் முலையினாளைக் கொண்டு 

  போய் விடுவது என்றார்.  41 

 

 

மாமணிச் சிவிகை தன்னில் மட 

  நடை மயில் அன்னாரைத்

தாமரைத் தவிசில் வைகும் தனித் 

  திரு என்ன ஏற்றிக்

காமரு கழனி வீழ்த்துக் 

  காதல் செய் சுற்றத்தாரும்

தேமொழியவரும் சூழச் சேண் 

  இடைக் கழிந்து சென்றார்.  42 

 

 

சில பகல் கடந்து சென்று 

  செந்தமிழ்த் திருநாடு எய்தி

மலர் புகழ்ப் பரம தத்தன் 

  மாநகர் மருங்கு வந்து

குல முதல் மனைவியாரைக் கொண்டு 

  வந்து அணைந்த தன்மை

தொலைவில் சீர்க் கணவனுக்குச் சொல்லி 

  முன் செல்ல விட்டார்.  43 

 

 

வந்தவர் அணைந்த மாற்றம் 

  கேட்டலும் வணிகன் தானும்

சிந்தையில் அச்சம் எய்திச் செழு 

  மணம் பின்பு செய்த

பைந் தொடி தனையும் கொண்டு 

  பயந்த பெண் மகவினோடு

முந்துறச் செல்வேன் என்று மொய் 

  குழல் அவர் பால் வந்தான்.  44 

 

 

தானும் அம் மனைவி யோடும் 

  தளிர் நடை மகவி னோடும்

மான் இனம் பிணை போல் 

  நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே

யான் உமது அருளால் வாழ்வேன் 

  இவ் இளம் குழவி தானும்

பான்மையால் உமது நாமம் என்று 

  முன் பணிந்து வீழ்ந்தான்.  45 

 

 

கணவன் தான் வணங்கக் 

  கண்ட காமர் பூங்கொடியனாரும்

அணைவுறும் சுற்றத்தார் பால் 

  அச்ச மோடு ஒதுங்கி நிற்ப

உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் 

  திரு மனைவி தன்னை

மணம் மலி தாரினாய் நீ 

  வணங்குவது என் கொல் என்றார்.  46 

 

 

மற்றவர் தம்மை நோக்கி மானுடம் 

  இவர் தாம் அல்லர்

நற் பெரும் தெய்வம் ஆதல் 

  நான் அறிந்து அகன்ற பின்பு

பெற்ற இம் மகவு தன்னைப் 

  பேர் இட்டேன் ஆதலாலே

பொற்பதம் பணிந்தேன் நீரும் 

  போற்றுதல் செய்மின் என்றான்.  47 

 

 

என்றலும் சுற்றத்தாரும் இது என் 

  கொல் என்று நின்றார்

மன்றலங் குழலினாரும் வணிகன் 

  வாய் மாற்றம் கேளாக்

கொன்றை வார் சடையினார் தம் 

  குரை கழல் போற்றிச் சிந்தை

ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு 

  கொண்டு உரை செய்கின்றார்.  48 

 

 

ஈங்கு இவன் குறித்த கொள்கை 

  இது இனி இவனுக்காகத்

தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி 

  கழித்து இங்கு உன் பால்

ஆங்கு நின் தாள்கள் போற்றும் 

  பேய் வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டும் என்று பரமர் 

  தாள் பரவி நின்றார்.  49 

 

 

ஆன அப்பொழுது மன்றுள் 

  ஆடுவார் அருளினாலே

மேனெறி உணர்வு கூர 

  வேண்டிற்றே பெறுவார் மெய்யில்

ஊன் அடை வனப்பை எல்லாம் 

  உதறி எற்பு உடம்பே ஆக

வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் 

  பேய் வடிவம் ஆனார்.  50 

 

 

மலர் மழை பொழிந்தது எங்கும் 

  வான துந்துபியின் நாதம்

உலகெலாம் நிறைந்து விம்ம 

  உம்பரும் முனிவர் தாமும்

குலவினர் கணங்கள் எல்லாம் குணலை 

  இட்டன முன் நின்ற

தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது 

  அஞ்சி அகன்று போனார்.  51 

 

 

உற் பவித்து எழுந்த ஞானத்து 

  ஒருமையின் உமை கோன் தன்னை

அற் புதத் திரு அந்தாதி 

  அப்பொழுது அருளிச் செய்வார்

பொற்புடைச் செய்ய பாத 

  புண்ட ரீகங்கள் போற்றும்

நற் கணத்தினில் ஒன்று ஆனேன் 

  நான் என்று நயந்து பாடி.  52 

 

 

ஆய்ந்த சீர் இரட்டை மாலை 

  அந்தாதி எடுத்துப் பாடி

ஏய்ந்த பேர் உணர்வு பொங்க 

  எயில் ஒரு மூன்றும் முன்னாள்

காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை 

  மால் வரையை நண்ண

வாய்ந்த பேரருள் முன் கூர 

  வழிப் படும் வழியால் வந்தார்.  53 

 

 

கண்டவர் வியப்புற்று அஞ்சிக் 

  கை அகன்று ஓடுவார்கள்

கொண்டது ஓர் வேடத் தன்மை 

  உள்ளவாறு கூறக் கேட்டே

அண்ட நாயகனாரென்னை அறிவரேல் 

  அறியா வாய்மை

எண் திசை மாக்களுக்கு யான் 

  எவ்வுருவாய் என் என்பார்.  54 

 

 

வட திசைத் தேசம் எல்லாம் 

  மனத்தினும் கடிது சென்று

தொடை அவிழ் இதழி மாலைச் 

  சூல பாணியனார் மேவும்

படர் ஒளிக் கைலை வெற்பின் 

  பாங்கு அணைந்து ஆங்குக் காலின்

நடையினைத் தவிர்த்து பார் மேல் 

  தலையினால் நடந்து சென்றார்.  55 

 

 

தலையினால் நடந்து சென்று 

  சங்கரன் இருந்த வெள்ளி

மலையின் மேல் ஏறும் போது 

  மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்

கலை இளம் திங்கள் கண்ணிக் 

  கண் நுதல் ஒரு பாகத்துச்

சிலை நுதல் இமய வல்லி 

  திருக் கண் நோக்குற்றது அன்றே.  56 

 

 

அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து 

  அருளித் தாழ்ந்து

தம் பெருமானை நோக்கித் தலையினால் 

  நடந்து இங்கு ஏறும்

எம் பெருமான் ஓர் எற்பின் 

  யாக்கை அன்பு என்னே என்ன

நம் பெரு மாட்டிக்கு அங்கு 

  நாயகன் அருளிச் செய்வான்.  57 

 

 

வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை 

  காண் உமையே மற்று இப்

பெருமை சேர் வடிவம் வேண்டிப் 

  பெற்றனள் என்று பின்றை

அருகு வந்து அணைய நோக்கி 

  அம்மையே என்னும் செம்மை

ஒரு மொழி உலகம் எல்லாம் 

  உய்யவே அருளிச் செய்தார்.  58 

 

 

அங்கணன் அம்மையே என்று அருள் 

  செய அப்பா என்று

பங்கயச் செம் பொற் பாதம் 

  பணிந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்

சங்க வெண் குழையினாரும் தாம் 

  எதிர் நோக்கி நம்பால்

இங்கு வேண்டுவது என் என்ன 

  இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்.  59 

 

 

இறவாத இன்ப அன்பு வேண்டிப் 

  பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு 

  உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் 

  நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போது உன் 

  அடியின் கீழ் இருக்க என்றார்.  60 

 

 

கூடு மாறு அருள் கொடுத்துக் 

  குலவு தென் திசையில் என்றும்

நீடு வாழ் பழன மூதூர் 

  நிலவிய ஆலங் காட்டில்

ஆடும் மாநடமும் நீ கண்டு 

  ஆனந்தம் சேர்ந்து எப்போதும்

பாடுவாய் நம்மை என்றான் 

  பரவுவார் பற்றாய் நின்றான்.  61 

 

 

அப் பரிசு அருளப் பெற்ற 

  அம்மையும் செம்மை வேத

மெய்ப் பொருள் ஆனார் தம்மை 

  விடை கொண்டு வணங்கிப் போந்து

செப்பரும் பெருமை அன்பால் திகழ் 

  திரு ஆலங் காடாம்

நற்பதி தலையினாலே நடந்து 

  புக்கு அடைந்தார் அன்றே.  62 

 

 

ஆலங்காடு அதனில் அண்டமுற 

  நிமிர்ந்து ஆடுகின்ற

கோலம் காண் பொழுது கொங்கை 

  திரங்கி என்று எடுத்து அங்கு

மூலம் காண்பரியார் தம்மை மூத்த 

  நற் பதிகம் பாடி

ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் 

  போற்றி நண்ணும் நாளில்.  63 

 

 

மட்டவிழ் கொன்றையினார் தம் 

  திருக்கூத்து முன் வணங்கும்

இட்ட மிகு பெருங் காதல் 

  எழுந்து ஓங்க வியப்பு எய்தி

எட்டி இலவம் மீகை என 

  எடுத்துத் திருப் பதிகம்

கொட்ட முழவம் குழகன் 

  ஆடும் எனப் பாடினார்.  64 

 

 

மடுத்த புனல் வேணியினார் அம்மை 

  என மதுர மொழி

கொடுத்து அருளப் பெற்றாரைக் 

  குலவிய தாண்டவத்தில் அவர்

எடுத்து அருளும் சேவடிக் 

  கீழ் என்றும் இருக்கின்றாரை

அடுத்த பெரும் சீர் பரவல் 

  ஆர் அளவாயினது அம்மா.  65 

 

 

ஆதியோடு அந்தம் இல்லான் அருள் 

  நடம் ஆடும் போது

கீதம் முன் பாடும் அம்மை கிளர் 

  ஒளி மலர்த்தாள் போற்றிச்

சீத நீர் வயல் 

  சூழ் திங்களூரின் அப்பூதியாராம்

போத மா முனிவர் செய்த 

  திருத் தொண்டு புகலல் உற்றேன்.  66 

 

திருச்சிற்றம்பலம்