அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சூதம்நெருங்கு குலைத் தெங்கு
பலவும் பூகஞ்சூழ் புடைத்தாய்
வீதிதோறும் நீற்றின் ஒளிவிரிய
மேவி விளங்கு பதி
நீதிவழுவா நெறியினராய் நிலவும்
குடியால் நெடு நிலத்து
மீதுவிளங்கும் தொன்மையது மிழலை
நாட்டுப் பெரு மிழலை. 1
அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்
அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர்தம்
அடியார்க்கு ஆனசெய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர்தாம்
உரையா முன்னம் எதிரேற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய்
முதிரும் அறிவின்பயன் கொள்வார். 2
தொண்டர் பலரும் வந்துஈண்டி
உண்ணத் தொலையா அமுதுஊட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவும்குழல் உமையாள்
கேள்வன் செய்யதாள் என்னும்
புண்ட ரீகம்அக மலரில்
வைத்துப் போற்றும் பொற்பினார். 3
இத்தன்மையராய் நிகழும் நாள்எல்லை
இல்லாத் திருத் தொண்டின்
மெய்த்தன்மையினை உலகு அறிய
விதியால் வணங்கி மெய்அடியார்
சித்தம் நிலவும் திருத்தொண்டத்
தொகைபாடிய நம்பியைப் பணிந்து
நித்தன்அருள் பெற்றவர் பாதம்
நினைக்கும் நியமத்தலை நின்றார். 4
மையார் தடங்கண் பரவையார்
மணவாளன் தன்மலர்க் கழல்கள்
கையால் தொழுது வாய்வாழ்த்தி
மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும்
அறியாச் செம்பொற் றாளிணைக்கீழ்
உய்வான் சேரஉற்ற நெறிஇதுவே
என்று அன்பினில் உய்த்தார். 5
நாளும் நம்பி ஆரூரர்
நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி
சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக
முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம்
பரிசு வாய்ப்பக் கெழுமினார். 6
இன்ன வாறே இவர்ஒழுக
ஏறுகொடி மேல்உயர்த்தவர் தாம்
பொன்னின் கழல்கள் மண்ணின்மேல்
பொருந்த வந்துவழக்கு உரைத்து
மன்னும் ஓலைஅவை முன்பு
காட்டி ஆண்ட வன்தொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி
கொடுங் கோளூரைச் சேர்வுற்றார். 7
அஞ்சைக் களத்து நஞ்சுண்ட
அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள்
மொழியத்தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வடகயிலைப்
பொருப்பில் எய்தவரும் வாழ்வு
நெஞ்சில் தெளியஇங்கு உணர்ந்தார்
நீடு மிழலைக் குறும்பனார். 8
மண்ணில் திகழும் திருநாவலூரில்
வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை
நாளை எய்தநான் பிரிந்து
கண்ணில் கரிய மணிகழிய
வாழ்வார் போலவாழேன் என்று
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று
அடைவன் யோகத்தால் என்பார். 9
நாலு கரணங்களும் ஒன்றாய்
நல்ல அறிவுமேல் கொண்டு
காலும் பிரமநாடி வழிக்கருத்துச்
செலுத்தக் கபால நடு
ஏலவே முன்பயின்ற நெறிஎடுத்த
மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அணைவார் கயிலைமுன் அடைந்தார். 10
பயிலைச் செறிந்த யோகத்தால்
பரவை கேள்வன் பாதமுறக்
கயிலைப் பொருப்பர் அடிஅடைந்த
மிழலைக் குறும்பர்கழல் வணங்கி
மயிலைப் புறம்கொள் மென்சாயல்
மகளிர் கிளவி யாழினொடும்
குயிலைப் பொருவும் காரைக்கால்
அம்மை பெருமை கூறுவாம். 11
திருச்சிற்றம்பலம்