பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

028 குலச்சிறை நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பன்னுதொல் புகழ்ப் பாண்டிநன் நாட்டிடைச்

செந்நெலார் வயல்தீம் கரும்பின் அயல்

துன்னுபூகப் புறம் பணை சூழ்ந்தது

மன்னு வண்மையினார் மண மேற்குடி.  1 

 

 

அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்

ஒப்பரும் பெருநம்பி என்று ஓதிய

செப்பரும் சீர்க்குலச் சிறையார் திண்மை

வைப்பினால் திருத் தொண்டில் வழாதவர்.  2 

 

 

காரணங் கண்நுதற்கு அன்பர் என்னவே

வாரமாகி மகிழ்ந்தவர் தாள் மிசை

யாருமன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து

ஈர நன்மொழி எய்த இசைத்து உள்ளார்.  3 

 

 

குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்

நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்

அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில்

செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்.  4 

 

 

உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்

அலகில் தீமையர் ஆயினும் அம்புலி

இலகு செஞ்சடையார் அடியார் எனில்

தலம் உறப்பணிந்து ஏத்தும் தகைமையார்.  5 

 

 

பண்பு மிக்கார் பலராய் அணையினும்

உண்ப வேண்டி ஒருவர் அணையினும்

எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு

நண்பு கூர்ந்து அமுதூட்டும் நலத்தினார்.  6 

 

 

பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து

ஆதி தேவர்தம் அஞ்செழுத்தாம் அவை

ஓது நாவணக் கத்தால் உரைப்பவர்

பாதம் நாளும் பரவிய பண்பினார்.  7 

 

 

இன்ன நல்லொழுக் கத்தினார் ஈறில்சீர்த்

தென்னவன் நெடு மாறற்குச் சீர்திகழ்

மன்னு மந்திரி கட்குமேல் ஆகியார்

ஒன்னலர்ச் செற்று உறுதிக்கண் நின்றுளார்.  8 

 

 

ஆய செய்கையர் ஆயவர் ஆறணி

நாயனார் திருப்பாதம் நவின்று உளார்

பாய சீர்புனை பாண்டிமா தேவியார்

மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.  9 

 

 

புன்னயத் தருகந்தர் பொய் நீக்கவும்

தென்னன் நாடு திருநீறு போற்றவும்

மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி

சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.  10 

 

 

வாதில் தோற்ற அமணரை வன்கழுத்

தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்

யாது போற்றினேன் மேல்இனி ஏத்துகேன்

வேத நீதிமிழலைக் குறும்பர் தாள்.  11 

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

புலத்தியர்
View Details
திருநாளைப் போவார் நாயனார்
View Details
வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details