பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

023 உருத்திர பசுபதி நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் 

  பெரும் புனல் நீத்தம்

மலர்த் தடம் பணை வயல் 

  புகு பொன்னி நன்னாட்டுக்

குலத்தின் ஓங்கிய குறைவு இலா 

  நிறை குடி குழுமித்

தலத்தின் மேம் படு நலத்தது 

  பெருந் திருத் தலையூர்.  1 

 

 

வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ

தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை

ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர்

தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.  2 

 

 

அங்கண் மா நகர் அதன் 

  இடை அருமறை வாய்மைத்

துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்

செங்கண் மால் விடையார் செழும் 

  பொன் மலை வல்லி

பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார்.  3 

 

 

ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு

மாயனார் அறியா மலர்ச் 

  சேவடி வழுத்தும்

தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி

நேய நெஞ்சினர் ஆகி அத் 

  தொழில் தலை நின்றார்.  4 

 

 

கரையில் கம்பலை புள் 

  ஒலி கறங்கிட மருங்கு

பிரச மென் சுரும்பு அறைந்திடக் 

  கரு வரால் பிறழும்

நிரை நெடுங் கயல் நீரிடை 

  நெருப்பு எழுந்தது அனைய

விரை நெகிழ்ந்த செங் கமலமென் 

  பொய்கையுள் மேவி.  5 

 

 

தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய

உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத்

தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்

கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்.  6 

 

 

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை

வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே

திருமலர்ப் பொகுட்டு இருந்தவன் அனையவர் சில நாள்

ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.  7 

 

 

காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த

வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி

ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்

தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.  8 

 

 

நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்

ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்

பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்

கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.  9 

 

 

அயில் கொள் முக்குடுமிப் 

  படையார் மருங்கு அருளால்

பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி

எயில் உடைத் தில்லை எல்லையில் 

  நாளைப் போவாராம்

செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.  10 

 

திருச்சிற்றம்பலம்