பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

016 கண்ணப்ப நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மேவலர் புரங்கள் செற்ற 

  விடையவர் வேத வாய்மைக்

காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் 

  திரு நாடு என்பர்

நாவலர் புகழ்ந்து போற்றும் நல் 

  வளம் பெருகி நின்ற

பூவலர் வாவி சோலை 

  சூழ்ந்த பொத்தப்பி நாடு.  1 

 

 

இத் திரு நாடு தன்னில் 

  இவர் திருப் பதியாதென்னில்

நித்தில அருவிச் சாரல் நீள் 

  வரை சூழ்ந்த பாங்கர்

மத்த வெம் களிற்றுக் கோட்டு 

  வன் தொடர் வேலி கோலி

ஒத்த பேர் அரணம் சூழ்ந்த 

  முது பதி உடுப்பூர் ஆகும்.  2 

 

 

குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் 

  செவி ஞமலி யார்த்த

வன்றிரள் விளவின் கோட்டு 

  வார்வலை மருங்கு தூங்கப்

பன்றியும் புலியும் எண்கும் 

  கடமையும் மானின் பார்வை

அன்றியும் பாறை முன்றில் 

  ஐவனம் உணங்கும் எங்கும்.  3 

 

 

வன் புலிக் குருளையோடும் 

  வயக் கரி கன்றினோடும்

புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து 

  உடன் ஆடல் அன்றி

அன்புறு காதல் கூர 

  அணையும் மான் பிணைகளோடும்

இன்புற மருவி ஆடும் 

  எயிற்றியர் மகளிர் எங்கும்.  4 

 

 

வெல் படைத் தறுகண் வெஞ்சொல் 

  வேட்டுவர் கூட்டம் தோறும்

கொல் எறி குத்து என்று 

  ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

சில்லரித் துடியும் கொம்பும் சிறு 

  கண் ஆகுளியும் கூடி

கல் எனும் ஒலியின் மேலும் 

  கறங்கிசை அருவி எங்கும்.  5 

 

 

ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் 

  புலங் கவர்ந்து கொண்ட

வேறு பல் உருவின் மிக்கு விரவும் 

  ஆன் நிரைகள் அன்றி

ஏறுடை வானம் தன்னில் இடிக் 

  குரல் எழிலி யோடு

மாறுகொள் முழக்கங் காட்டும் 

  மதக்கை மாநிரைகள் எங்கும்.  6 

 

 

மைச் செறிந்தனைய மேனி வன் 

  தொழில் மறவர் தம்பால்

அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் 

  உடை வன் தோலார்

பொச்சை யின் நறவும் ஊனின் 

  புழுக்கலும் உணவு கொள்ளும்

நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி 

  நாகன் என்பான்.  7 

 

 

பெற்றியால் தவமுன் செய்தான் 

  ஆயினும் பிறப்பின் சார்பால்

குற்றமே குணமா வாழ்வான் 

  கொடுமையே தலை நின்றுள்ளான்

வில் தொழில் விறலின் மிக்கான் 

  வெஞ்சின மடங்கல் போல்வான்

மற்றவன் குறிச்சி வாழ்க்கை 

  மனைவியும் தத்தை என்பாள்.  8 

 

 

அரும் பெறல் மறவர் தாயத்தான்ற 

  தொல் குடியில் வந்தாள்

இரும் புலி எயிற்றுத் தாலி இடை 

  இடை மனவு கோத்துப்

பெரும் புறம் அலையப் பூண்டாள் 

  பீலியும் குழையும் தட்டச்

சுரும்புறு படலை முச்சிச் சூர் 

  அரிப் பிணவு போல்வாள்.  9 

 

 

பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு 

  இனிப் புதல்வர் பேறே

அரியது என்று எவரும் 

  கூற அதற்படு காதலாலே

முருகலர் அலங்கல் செவ்வேள் 

  முருகவேள் முன்றில் சென்று

பரவுதல் செய்து நாளும் பராய்க் 

  கடன் நெறியில் நிற்பார்.  10 

 

 

வாரணச் சேவலோடும் வரிமயிற் 

  குலங்கள் விட்டுத்

தோரண மணிகள் தூக்கிச் 

  சுரும்பணி கதம்பம் நாற்றிப்

போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி 

  குரவை தூங்கப்

பேரணங்கு ஆடல் செய்து 

  பெருவிழா எடுத்த பின்றை.  11 

 

 

பயில் வடுப் பொலிந்த யாக்கை 

  வேடர்தம் பதியாம் நாகற்கு

எயிலுடைப் புரங்கள் செற்ற 

  எந்தையார் மைந்தர் ஆன

மயிலுடைக் கொற்ற ஊர்தி 

  வரையுரங் கிழித்த திண்மை

அயிலுடைத் தடக்கை வென்றி 

  அண்ணலார் அருளினாலே.  12 

 

 

கானவர் குலம் விளங்கத் 

  தத்தைபால் கருப்பம் நீட

ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் 

  வெறி ஆட்டோ டும்

ஆன அத் திங்கள் செல்ல 

  அளவில் செய் தவத்தினாலே

பான்மதி உவரி ஈன்றால் என 

  மகப் பயந்த போது.  13 

 

 

கரிப்பரு மருப்பின் முத்தும் கழை 

  விளை செழுநீர் முத்தும்

பொருப்பினின் மணியும் வேடர் பொழி 

  தரு மழையே அன்றி

வரிச் சுரும்பு அலைய வானின் மலர் 

  மழை பொழிந்தது எங்கும்

அரிக்குறுந் துடியே அன்றி 

  அமரர் துந்துபியும் ஆர்த்த.  14 

 

 

அருவரைக் குறவர் தங்கள் அகன் 

  குடிச் சீறூர் ஆயம்

பெரு விழா எடுத்து மிக்க 

  பெருங்களி கூறும் காலைக்

கருவரை காள மேகம் 

  ஏந்தியது என்னத் தாதை

பொருவரைத் தோள்களாரப் புதல்வனை 

  எடுத்துக் கொண்டான்.  15 

 

 

கருங் கதிர் விரிக்கும் மேனி 

  காமரு குழவி தானும்

இரும்புலிப் பறழின் ஓங்கி 

  இறவுளர் அளவே அன்றி

அரும் பெறல் உலகமெல்லாம் 

  அளப்பரும் பெருமை காட்டித்

தருங்குறி பலவும் சாற்றும் 

  தன்மையிற் பொலிந்து தோன்ற.  16 

 

 

அண்ணலைக் கையில் ஏந்தற்கு 

  அருமையால் உரிமைப் பேரும்

திண்ணன் என்றியம்பும் என்னத் 

  திண்சிலை வேடர் ஆர்த்தார்

புண்ணியப் பொருளாய் உள்ள 

  பொருவில் சீர் உருவினானைக்

கண்ணினுக்கு அணியாத் தங்கள் 

  கலன்பல அணிந்தார் அன்றே.  17 

 

 

வரையுறை கடவுட் காப்பு 

  மறக்குடி மரபில் தங்கள்

புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் 

  பொருந்துவ போற்றிச் செய்து

விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு 

  இழைத்து இடையே கோத்த

அரை மணிக் கவடி கட்டி 

  அழகுற வளர்க்கும் நாளில்.  18 

 

 

வருமுறைப் பருவம் தோறும் 

  வளமிகு சிறப்பில் தெய்வப்

பெருமடை கொடுத்துத் தொக்க 

  பெருவிறல் வேடர்க்கெல்லாம்

திருமலி துழனி பொங்கச் 

  செழுங்களி மகிழ்ச்சி செய்தே

அருமையில் புதல்வர் பெற்ற 

  ஆர்வமும் தோன்ற உய்த்தார்.  19 

 

 

ஆண்டு எதிர் அணைந்து செல்ல 

  விடும் அடித் தளர்வு நீங்கிப்

பூண் திகழ் சிறு புன் 

  குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி

மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு 

  முள் அரிந்து கோத்த

நாண்டரும் எயிற்றுத் தாலி 

  நலங்கிளர் மார்பில் தூங்க.  20 

 

 

பாசொளி மணியோடு ஆர்த்த பன் 

  மணிச் சதங்கை ஏங்க

காசொடு தொடுத்த காப்புக் கலன் 

  புனை அரைஞாண் சேர்த்தித்

தேசுடை மருப்பில் தண்டை 

  செறிமணிக் குதம்பை மின்ன

மாசறு கோலம் காட்டி 

  மறுகிடை ஆடும் நாளில்.  21 

 

 

தண் மலர் அலங்கல் தாதை 

  தாய் மனம் களிப்ப வந்து

புண்ணிய கங்கை நீரில் 

  புனிதமாம் திருவாய் நீரில்

உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய 

  மழலைத் தீஞ் சொல்

வண்ண மென் பவளச் செவ்வாய் 

  குதட்டியே வளரா நின்றார்.  22 

 

 

பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் 

  முழை எனப் பொற்கை நீட்டப்

பரிஉடைத் தந்தை கண்டு 

  பைந்தழை கைக் கொண்டோச்ச

இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் 

  எழில் வளர் கண்ணீர் மல்கி

வருதுளி முத்தம் அத்தாய் வாய் 

  முத்தம் கொள்ள மாற்றி.  23 

 

 

துடிக் குறடு உருட்டி ஓடித் 

  தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்

பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் 

  பேதையர் இழைத்த வண்டல்

அடிச் சிறு தளிரால் 

  சிந்தி அருகுறு சிறுவரோடும்

குடிச் செறு குரம்பை எங்கும் 

  குறு நடை குறும்பு செய்து.  24 

 

 

அனையன பலவும் செய்தே ஐந்தின் 

  மேல் ஆன ஆண்டின்

வனை தரு வடிவார் கண்ணி 

  மறச் சிறு மைந்த ரோடும்

சினை மலர்க் காவுள் ஆடிச் 

  செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த

புனை மருப் புழலை வேலிப் 

  புறச்சிறு கானிற் போகி.  25 

 

 

கடு முயல் பறழினோடுங் 

  கான ஏனத்தின் குட்டி

கொடு வரிக் குருளை செந்நாய் 

  கொடுஞ் செவிச் சாபம் ஆன

முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து 

  உடன் பற்றி முற்றத்து

இடு மரத் திரளில் 

  கட்டி வளர்ப்பன எண்ணிலாத.  26 

 

 

அலர் பகல் கழிந்த அந்தி 

  ஐயவிப் புகையும் ஆட்டிக்

குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு 

  கண் துயிற்றிக் கங்குல்

புலர ஊன் உணவு நல்கிப் 

  புரி விளையாட்டின் விட்டுச்

சில முறை ஆண்டு செல்ல 

  சிலை பயில் பருவம் சேர்ந்தார்.  27 

 

 

தந்தையும் மைந்தனாரை நோக்கித் 

  தன் தடித்த தோளால்

சிந்தை உள் மகிழப் புல்லிச் 

  சிலைத் தொழில் பயிற்ற வேண்டி

முந்தை அத் துறையில் மிக்க 

  முதியரை அழைத்துக் கூட்டி

வந்த நாள் குறித்தது எல்லாம் 

  மறவர்க்குச் சொல்லி விட்டான்.  28 

 

 

வேடர் தம் கோமான் நாகன் 

  வென்றி வேள் அருளால் பெற்ற

சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் 

  வில் பிடிக்கின்றான் என்று

ஆடியல் துடியும் சாற்றி அறைந்த 

  பேர் ஓசை கேட்டு

மாடுயர் மலைகள் ஆளும் மறக் 

  குலத் தலைவர் எல்லாம்.  29 

 

 

மலை படு மணியும் பொன்னும் 

  தரளமும் வரியின் தோலும்

கொலை புரி களிற்றுக் கோடும் 

  பீலியின் குவையும் தேனும்

தொலைவில் பல் நறவும் ஊனும் 

  பலங்களும் கிழங்கும் துன்றச்

சிலை பயில் வேடர் கொண்டு 

  திசை தொறும் நெருங்க வந்தார்.  30 

 

 

மல்கிய வளங்கள் எல்லாம் 

  நிறைந்திட மாறில் சீறூர்

எல்லையில் அடங்கா வண்ணம் 

  ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்

பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் 

  கடன் பலவும் செய்து

வில் விழா எடுக்க என்று 

  விளம்பினான் வேடர் கோமான்.  31 

 

 

பான்மையில் சமைத்துக் கொண்டு 

  படைக்கலம் வினைஞர் ஏந்த

தேனலர் கொன்றையார் தம் 

  திருச்சிலைச் செம்பொன் மேரு

வானது கடலின் நஞ்சம் 

  ஆக்கிட அவர்க்கே பின்னும்

கான ஊன் அமுதம் ஆக்கும் 

  சிலையினைக் காப்புச் சேர்த்தார்.  32 

 

 

சிலையினைக் காப்புக் கட்டும் திண் 

  புலி நரம்பில் செய்த

நலமிகு காப்பு நன்னாண் 

  நாகனார் பயந்த நாகர்

குலம் விளங் கரிய குன்றின் 

  கோலம் முன்கையில் சேர்த்தி

மலை உறை மாக்கள் எல்லாம் 

  வாழ்த்து எடுத்து இயம்பினார்கள்.  33 

 

 

ஐவன அடிசில் வெவ்வேறு 

  அமைந்தன புற்பாற் சொன்றி

மொய் வரைத் தினை மென் சோறு 

  மூங்கில் வன் பதங்கள் மற்றும்

கைவினை எயினர் ஆக்கிக் கலந்த 

  ஊன் கிழங்கு துன்றச்

செய் வரை உயர்ப்ப எங்கும் 

  கலந்தனர் சினவில் வேடர்.  34 

 

 

செம் தினை இடியும் தேனும் 

  அருந்துவார் தேனில் தோய்த்து

வெந்த ஊன் அயில்வார் வேரி 

  விளங்கனிக் கவளம் கொள்வார்

நந்திய ஈயல் உண்டி 

  நசையொடு மிசைவார் வெவ்வேறு

அந்தமில் உணவின் மேலோர் 

  ஆயினர் அளவிலார்கள்.  35 

 

 

அயல் வரைப் புலத்தின் வந்தார் 

  அருங்குடி இருப்பின் உள்ளார்

இயல் வகை உணவில் ஆர்ந்த 

  எயிற்றியர் எயினர் எல்லாம்

உயர் கதிர் உச்சி நீங்க 

  ஒழிவில் பல் நறவு மாந்தி

மயலுறு களிப்பின் நீடி 

  வரிசிலை விழவு கொள்வார்.  36 

 

 

பாசிலைப் படலைச் சுற்றிப் பன் 

  மலர்த் தொடையல் சூடிக்

காசுடை வடத் தோல் கட்டி 

  கவடி மெய்க் கலன்கள் பூண்டார்

மாசில் சீர் வெட்சி முன்னா 

  வருதுறைக் கண்ணி சூடி

ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் 

  சிலை மருங்கு சூழ்ந்தார்.  37 

 

 

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் 

  துளை கொள் வேயும்

எண்டிசை நிறைந்து விம்ம 

  எழுந்த பேர் ஒலியினோடு

திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் 

  விசும்பு இடித்துச் செல்லக்

கொண்ட சீர் விழவு பொங்கக் 

  குறிச்சியை வலம் கொண்டார்கள்.  38 

 

 

குன்றவர் களி கொண்டாடக் 

  கொடிச்சியர் துணங்கை ஆட

துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் 

  அரமகளிர் ஆட

வென்றி வில் விழவினோடும் 

  விருப்புடை ஏழாம் நாளாம்

அன்றிரு மடங்கு செய்கை 

  அழகுற அமைத்த பின்னர்.  39 

 

 

வெங்கதிர் விசும்பின் உச்சி 

  மேவிய பொழுதில் எங்கும்

மங்கல வாழ்த்து மல்க 

  மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்

தங்கள் தொல் மரபின் விஞ்சைத் 

  தனுத் தொழில் வலவர் தம்பால்

பொங்கொளிக் கரும் போர்ஏற்றைப் 

  பொருசிலை பிடிப்பித்தார்கள்.  40 

 

 

பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு 

  கடன் முன் செய்த

வில் தொழில் களத்தில் நண்ணி 

  விதிமுறை வணங்கி மேவும்

அற்றை நாள் தொடங்கி நாளும் 

  அடல் சிலை ஆண்மை முற்றக்

கற்றனர் என்னை ஆளும் 

  கானவர்க்கு அரிய சிங்கம்.  41 

 

 

வண்ணவெஞ் சிலையும் மற்றப் 

  படைகளும் மலரக் கற்று

கண்ணகல் சாயல் பொங்கக் கலை 

  வளர் திங்களே போல்

எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி 

  எய்தினார் எல்லை இல்லாப்

புண்ணியம் தோன்றி மேல் மேல் 

  வளர்வதன் பொலிவு போல்வார்.  42 

 

 

இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் 

  இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய

மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் 

  தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம்

கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் 

  கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து

மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் 

  எய்தி வில்லுழவின் பெரு முயற்சி மெலிவான் ஆனான்.  43 

 

 

அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் 

  எங்கும் அடலேனம் புலி கரடி கடமை ஆமா

வெங் கண் மரை கலையொடு மான் 

  முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத்

திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது 

  என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று

தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள 

  தண் தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார்.  44 

 

 

சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் 

  சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி

முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே 

  முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன்

என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் 

  கைக் கொண்மின் என்ற போதின்

அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் 

  அடி வணங்கி இம் மாற்றம் அறைகின்றார்கள்.  45 

 

 

இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி 

  இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்

அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் 

  அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி

மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால 

  மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை

வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து 

  நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்.  46 

 

 

சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் 

  திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டு

மலை மருவு நெடும் கானில் கன்னி 

  வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்ட

தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை 

  அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று

நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி

  நெடிது வந்து விருப்பினொடும் கடிது வந்தாள்.  47 

 

 

கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் 

  கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து

மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு 

  மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு

தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் 

  தழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப்

பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் 

  போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.  48 

 

 

நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் 

  நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி

நன்று இனிதின் இருந்தனையோ என்று 

  கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல

மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் 

  விளை வளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம்

அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் 

  அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள்.  49 

 

 

கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் 

  எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு

பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் 

  காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும்

வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து 

  வேறு புலங் கவர் வென்றி மேவு மாறு

காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி 

  உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான்.  50 

 

 

மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் 

  சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு

எற்றையினுங் குறிகள் மிக நல்ல 

  ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்

சிலையோன் நின் அளவில் அன்றி 

  மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக்

கொற்றவனத் தெய்வங்கள் மகிழ ஊட்ட 

  வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.  51 

 

 

தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற 

  பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்

மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி 

  மணிநீல மலைஒன்று வந்தது என்னக்

கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து 

  காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில்

செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் 

  புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான்.  52 

 

 

முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி 

  நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்புபோல

என்னுடைய முயற்சியினால் வேட்டை 

  ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்

மன்னு சிலை மலையர் குலக் காவல் 

  பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும்

உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் 

  என்றுடை தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே.  53 

 

 

தந்தை நிலை உட்கொண்டு தளர்வு 

  கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சாய்வு தோன்ற

வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு 

  மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு

முந்தையவன் கழல் வணங்கி முறைமை 

  தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு

சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் 

  திருத் தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்.  54 

 

 

நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை 

  நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து

தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட 

  திண் சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்

வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு 

  வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட

இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் 

  எழுக என விடை கொடுத்தான் இயல்பில் நின்றான்.  55 

 

 

செங்கண் வயக் கோளரியேறு அன்ன 

  திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற

வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி 

  நின்று விடை கொண்டு புறம் போந்து வேடரோடு

மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் 

  வைகி வைகிருளின் புலர் காலை வரிவிற் சாலைப்

பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் 

  கொள்ளப் புனை தொழில் கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.  56 

 

 

நெறி கொண்ட குஞ்சிச் சுருள் 

  துஞ்சி நிமிர்ந்து பொங்க

முறி கொண்ட கண்ணிக்கு இடை 

  மொய்யொளிப் பீலி சேர்த்தி

வெறி கொண்ட முல்லைப் 

  பிணைமீது குறிஞ்சி வெட்சி

செறி கொண்ட வண்டின் குலம் சீர் 

  கொளப் பின்பு செய்து.  57 

 

 

முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி

தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி

மின்னில் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்

மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக.  58 

 

 

கண்டத்திடை வெண் கவடிக் 

  கதிர் மாலை சேரக் 

கொண்டக் கொடு பன் மணி 

  கோத்திடை ஏனக் கோடு

துண்டப் பிறை போல்வன 

  தூங்கிட வேங்கை வன்தோல்

தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க.  59 

 

 

மார்பில் சிறு தந்த 

  மணித்திரள் மாலைத் தாழத்

தாரிற் பொலி தோள் 

  வலயங்கள் தழைத்து மின்னச்

சேர்விற் பொலி கங்கண 

  மீது திகழ்ந்த முன் கைக்

கார்விற் செறி நாண் எறி 

  கைச் செறி கட்டி கட்டி.  60 

 

 

அரையில் சரணத்து உரி 

  ஆடையின் மீது பௌவத்

திரையில் படு வெள்ளலகு 

  ஆர்த்து விளிம்பு சேர்த்தி

நிரையில் பொலி நீளுடை தோள் 

  சுரி கைப்புறம் சூழ்

விரையில் துவர் வார் விசி 

  போக்கி அமைத்து வீக்கி.  61 

 

 

வீரக் கழல் காலின் 

  விளங்க அணிந்து பாதம்

சேரத் தொடு நீடு 

  செருப்பு விருப்பு வாய்ப்பப்

பாரப் பெரு வில் வலம் 

  கொண்டு பணிந்து திண்ணன்

சாரத் திருத்தாள் மடித்து 

  ஏற்றி வியந்து தாங்கி.  62 

 

 

அங்கு அப்பொழுதில் புவனத்து 

  இடர் வாங்க ஓங்கித்

துங்கப் பெரு மா மழை போன்று 

  துண் என்று ஒலிப்ப

வெங்கண் சின நீடு 

  விலங்கு விலங்கி நீங்கச்

செங்கைத் தலத்தால் தடவிச் 

  சிறு நாண் எறிந்தார்.  63 

 

 

பல்வேறு வாளி புதை பார்த்து 

  உடன் போத ஏவி

வில் வேடர் ஆயத் துடி 

  மேவி ஒலிக்கு முன்றில்

சொல் வேறு வாழ்த்துத் 

  திசைதோறும் துதைந்து விம்ம

வல்லேறு போல்வார் அடல் 

  வாளி தெரிந்து நின்றார்.  64 

 

 

மானச் சிலை வேடர் 

  மருங்கு நெருங்கும் போதில்

பானற்குல மாமலரில் படர் 

  சோதியார் முன்

தேனற்றசை தேறல் சருப் 

  பொரி மற்றும் உள்ள

கானப் பலி நேர் 

  கடவுள் பொறையாட்டி வந்தாள்.  65 

 

 

நின்று எங்கும் மொய்க்கும் 

  சிலைவேடர்கள் நீங்கப் புக்குச்

சென்று அங்கு வள்ளல் திரு 

  நெற்றியில் சேடை சாத்தி

உன் தந்தை தந்தைக்கும் இந் 

  நன்மைகள் உள்ள வல்ல

நன்றும் பெரிது உன்விறல் நம்மளவு 

  அன்று இது என்றாள்.  66 

 

 

அப் பெற்றியில் வாழ்த்தும் 

  அணங்குடை ஆட்டி தன்னைச்

செப்பற்கு அரிதாய சிறப்பு 

  எதிர் செய்து போக்கிக்

கைப் பற்றிய திண் சிலை 

  கார் மழை மேகம் என்ன

மெய்ப் பொற்புடை வேட்டையின் 

  மேல்கொண்டு எழுந்து போந்தார்.  67 

 

 

தாளில் வாழ் செருப்பர் தோல் 

  தழைத்த நீடு தானையார்

வாளியோடு சாபம் மேவு கையர் 

  வெய்ய வன் கணார்

ஆளி ஏறு போல ஏகும் 

  அண்ணலார் முன் எண்ணிலார்

மீளி வேடர் நீடு கூட்டம் 

  மிக்கு மேல் எழுந்ததே.  68 

 

 

வன் தொடர்ப் பிணித்த பாசம் வன் 

  கை மள்ளர் கொள்ளவே

வென்றி மங்கை வேடர் வில்லின் 

  மீது மேவு பாதமுன்

சென்று நீளுமாறு போல்வ செய்ய 

  நாவின் வாய வாய்

ஒன்றொடு ஒன்று நேர் படாமல் 

  ஓடு நாய்கள் மாடெலாம்.  69 

 

 

போர் வலைச் சிலைத் 

  தொழில் புறத்திலே விளைப்ப அச்

சார் வலைத் தொடக்கு அறுக்க 

  ஏகும் ஐயர் தம் முனே

கார் வலைப் படுத்த குன்று 

  கானமா வளைக்க நீள்

வார் வலைத் திறம் சுமந்து 

  வந்த வெற்பர் முந்தினார்.  70 

 

 

நண்ணி மா மறைக் குலங்கள் 

  நாட என்று நீடும் அத்

தண்ணிலா அடம்பு கொன்றை 

  தங்கு வேணியார் தமைக்

கண்ணில் நீடு பார்வை ஒன்று 

  கொண்டு காணும் அன்பர் முன்

எண்ணில் பார்வை கொண்டு வேடர் 

  எம் மருங்கும் ஏகினார்.  71 

 

 

கோடுமுன் பொலிக்கவும் குறுங் 

  கணா குளிக்குலம்

மாடு சென்று இசைப்பவும் 

  மருங்கு பம்பை கொட்டவும்

சேடு கொண்டகை விளிச் 

  சிறந்த ஓசை செல்லவும்

காடு கொண்டு எழுந்த வேடு 

  கை வளைந்து சென்றதே.  72 

 

 

நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு 

  காடு கூட நேர்

வருங்கருஞ் சிலைத் தடக்கை மான 

  வேடர் சேனை தான்

பொருந் தடந் திரைக்கடல் பரப்பு 

  இடைப் புகும் பெருங்

கருந்தரங்க நீள் புனல் 

  களிந்தி கன்னி ஒத்ததே.  73 

 

 

தென் திசைப் பொருப்புடன் செறிந்த 

  கானின் மான் இனம்

பன்றி வெம் மரைக் கணங்கள் 

  ஆதியான பல் குலம்

துன்றி நின்ற வென்றடிச் 

  சுவட்டின் ஒற்றர் சொல்லவே

வன் தடக்கை வார்கொடு எம் 

  மருங்கும் வேடர் ஓடினார்.  74 

 

 

ஓடி எறிந்து வாரொழுக்கி 

  யோசனைப் பரப்பு எலாம்

நெடிய திண் வலைத் தொடக்கு 

  நீளிடைப் பிணித்து நேர்

கடி கொளப் பரந்த காடு காவல் 

  செய்து அமைத்த பின்

செடி தலைச் சிலைக்கை வேடர் 

  திண்ணனார் முன் நண்ணினார்.  75 

 

 

வெஞ்சிலைக்கை வீரனாரும் 

  வேடரோடு கூடி முன்

மஞ்சலைக்கு மாமலை சரிப் 

  புறத்து வந்த மா

அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் 

  அட்டமாக விட்டு நீள்

செஞ்சரத்தினோடு குழல் செய்த 

  கானுள் எய்தினார்.  76 

 

 

வெய்ய மா எழுப்ப ஏவி 

  வெற்பராயம் ஓடி நேர்

எய்யும் வாளி முன் தெரிந்து 

  கொண்டு செல்ல எங்கணும்

மொய் குரல் துடிக் குலங்கள் 

  பம்பை முன் சிலைத்து எழக்

கை விளித்து அதிர்த்து மா 

  எழுப்பினார்கள் கானெலாம்.  77 

 

 

ஏனமோடு மான் இனங்கள் எண்கு 

  திண் கலைக் குலம்

கான மேதி யானை வெம் 

  புலிக் கணங்கள் கான் மரை

ஆன மா அநேக மா 

  வெருண்டு எழுந்து பாய முன்

சேனை வேடர் மேல் அடர்ந்து 

  சீறி அம்பில் நூறினார்.  78 

 

 

தாளறுவன் இடை துணிவன 

  தலை துமிவன கலைமா

வாளிகளொடு குடல் சொரிதர மறிவன 

  சில மரை மா

நீளுடல் விடு சரம் உருவிட 

  நிமிர்வன மிடை கட மா

மீளிகொள் கணை படும் உடல் 

  எழ விழுவன பல உழையே.  79 

 

 

வெங்கணை படு பிடர் கிழிபட 

  விசை உருவிய கயவாய்

செங் கனல் விட அதனொடு கணை 

  செறிய முன் இரு கருமா

அங்கு எழும் சிரம் உருவிய பொழுது 

  அடல் எயிறு உற அதனைப்

பொங்கிய சினமொடு கவர்வன 

  புரைவன சில புலிகள்.  80 

 

 

பின் மறவர்கள் விடு பகழிகள் 

  பிற குற வயிறிடை போய்

முன் நடுமுக மிசை உருவிட 

  முடுகிய விசையுடன் அக்

கொன் முனை அடு சரம் இனம் 

  எதிர் குறுகிய முகம் உருவத்

தன் எதிர் எதிர் பொருவன 

  நிகர் தலையன பல கலைகள்.  81 

 

 

கரு வரை ஒரு தனுவொடு விசை 

  கடுகியது என முனை நேர்

குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் 

  கொலை பயில் பொழுது அவையே

பொரு கரி யொடு சின 

  அரியிடை புரையறவுடல் புகலால்

வரும் இரவொடு பகல் அணைவன 

  என மிடையும் அவ்வனமே.  82 

 

 

நீளிடை விசை மிசை குதிகொள நெடு 

  முகில் தொட எழு மான்

தாளுறு கழல் மறவர்கள் விடு 

  சரம் நிரை தொடர்வன தாம்

வாள் விடுகதிர் மதி பிரிவுற 

  வருமென விழும் உழையைக்

கோளொடு பயில் பணி தொடர் 

  நிலை கொளவுள எதிர் பலவே.  83 

 

 

கடல் விரி புனல் கொள 

  விழுவன கரு முகிலென நிரையே

படர்வொடு செறி தழை பொதுளிய 

  பயில் புதல் வனம் அதன் மேல்

அடலுறு சரம் உடலுற 

  வரை அடியிடம் அலமரலால்

மிடை கரு மரை கரடிகளொடு 

  விழுவன வன மேதி.  84 

 

 

பல துறைகளின் வெருவரலொடு பயில் 

  வலையற நுழை மா

உலமொடு படர்வன தகையுற உறு 

  சினமொடு கவர் நாய்

நிலவிய இரு வினை வலை இடை 

  நிலை சுழல் பவர் நெறி சேர்

புலனுறு மனனிடை தடைசெய்த 

  பொறிகளின் அளவுளவே.  85 

 

 

துடியடியன மடி செவியன 

  துறுகய முனி தொடரார்

வெடி பட விரி சிறு குருளைகள் 

  மிசை படு கொலை விரவார்

அடி தளர்வுறு கரு உடையன 

  அணை உறு பிணை அலையார்

கொடியன எதிர் முடுகியும் உறு 

  கொலை புரி சிலை மறவோர்.  86 

 

 

இவ்வகை வரு கொலை மறவினை 

  எதிர் நிகழ்வுழி அதிரக்

கைவரைகளும் வெருவுற இடை 

  கான் எழுவதோர் ஏனம்

பெய் கருமுகில் என இடியொடு 

  பிதிர் கனல் விழி சிதறி

மொய் வலைகளை அற நிமிர் 

  முடுகிய கடு விசையில்.  87 

 

 

போமது தனை அடுதிறலொடு 

  பொரு மறவர்கள் அரியேறு

ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி 

  வழி செலும் அளவில்

தாம் ஒருவரும் அறிகிலரவர் 

  தனி தொடர்வுழி அதன்மேல்

ஏமுனை அடு சிலை விடலைகள் 

  இருவர்கள் அடி பிரியார்.  88 

 

 

நாடிய கழல் வயவர்கள் அவர் 

  நாணனும் நெடு வரிவில்

காடனும் எனும் இருவரும் 

  மலை காவலரொடு கடிதில்

கூடினர் விடு பகழிகளொடு 

  கொலை ஞமலிகள் வழுவி

நீடிய சரி படர்வது தரு 

  நீழலின் விரை கேழல்.  89 

 

 

குன்றியை நிகர் முன் செற எரி 

  கொடு விழி இடி குரல் நீள்

பன்றியும் அடல் வன் திறலொடு 

  படர் நெறி நெடிதோடித்

துன்றியது ஒரு குன்று அடி 

  வரை சுலவிய நெறி சூழல்

சென்று அதனிடை நின்றது 

  வலிதெருமரமர நிரையில்.  90 

 

 

அத் தரு வளர் சுழல் இடை 

  அடை அதன் நிலை அறிபவர் முன்

கைத் தெரி கணையினில் அடுவது 

  கருதலர் விசை கடுகி

மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை 

  முனை பெற எதிர் உருவி

குத்தினர் உடல் முறிபட வெறி 

  குல மறவர்கள் தலைவர்.  91 

 

 

வேடர் தங்கரிய செங்கண் 

  வில்லியார் விசையில் குத்த

மாடிரு துணியாய் வீழ்ந்த 

  வராகத்தைக் கண்டு நாணன்

காடனே இதன் பின் இன்று 

  காதங்கள் பல வந்து எய்த்தோம்

ஆடவன் கொன்றான் அச்சோ 

  என்று அவர் அடியில் தாழ்ந்தார்.  92 

 

 

மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் 

  வழி வந்து ஆற்ற

உற்றது பசி வந்து எம்மை 

  உதவிய இதனைக் காய்ச்சிச்

சற்று நீ அருந்தி யாமும் 

  தின்று தண்ணீர் குடித்து

வெற்றி கொள் வேட்டைக் காடு 

  குறுகுவோம் மெல்ல என்றார்.  93 

 

 

என்று அவர் கூற நோக்கித் 

  திண்ணனார் தண்ணீர் எங்கே

நன்றும் இவ் வனத்தில் உள்ளது 

  என்று உரை செய்ய நாணன்

நின்ற இப் பெரிய தேக்கின் 

  அப்புறம் சென்றால் நீண்ட

குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த 

  பொன் முகலி என்றான்.  94 

 

 

பொங்கிய சின வில் வேடன் 

  சொன்னபின் போவோம் அங்கே

இங்கிது தன்னைக் கொண்டு 

  போதுமின் என்று தாமும்

அங்கது நோக்கிச் சென்றார் 

  காவதம் அரையில் கண்டார்

செங்கண் ஏறு உடையார் வைகும் 

  திருமலைச் சாரல் சோலை.  95 

 

 

நாணனே தோன்றும் குன்றில் 

  நண்ணுவோம் என்ன நாணன்

காண நீ போதின் நல்ல 

  காட்சியே காணும் இந்தச்

சேணுயர் திருக் காளத்தி மலை 

  மிசை எழுந்து செவ்வே

கோணமில் குடுமித் தேவர் இருப்பர் 

  கும்பிடலாம் என்றான்.  96 

 

 

ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை 

  தொறும் என் மேல் பாரம்

போவது ஒன்று உளது போலும் 

  ஆசையும் பொங்கி மேல் மேல்

மேவிய நெஞ்சும் வேறோர் 

  விருப்புற விரையா நிற்கும்

தேவர் அங்கு இருப்பது எங்கே 

  போகென்றார் திண்ணனார் தாம்.  97 

 

 

உரை செய்து விரைந்து செல்ல 

  அவர்களும் உடனே போந்து

கரை வளர் கழையின் முத்தும் 

  கார் அகில் குறடும் சந்தும்

வரை தரு மணியும் பொன்னும் 

  வயிரமும் புளினம் தோறும்

திரைகள் முன் திரட்டி வைத்த 

  திரு முகலியினைச் சார்ந்தார்.  98 

 

 

ஆங்கு அதன் கரையின் பாங்கோர் 

  அணி நிழல் கேழல் இட்டு

வாங்கு வில் காடன் தன்னை மரக் 

  கடை தீக் கோல் பண்ணி

ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் 

  இம்மலை ஏறிக் கண்டு

நாங்கள் வந்து அணைவோம் என்று 

  நாணனும் தாமும் போந்தார்.  99 

 

 

அளி மிடை கரை சூழ் சோலை 

  அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் 

தெளி புனல் இழிந்து சிந்தை 

  தெளிவுறும் திண்ணனார் தாம் 

களி வரும் மகிழ்ச்சி பொங்கக் 

  காளத்தி கண்டு கொண்டு 

குளிர் வரு நதி ஊடு 

  ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.  100 

 

 

கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் 

  மால் வரையின் உச்சி 

அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் 

  கலி முழக்கம் காட்ட 

இது என் கொல் நாணா என்றார்க்கு 

  இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து 

மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு 

  எழும் ஒலி கொல் என்றான்.  101 

 

 

முன்பு செய் தவத்தின் ஈட்டம் 

  முடிவிலா இன்பம் ஆன 

அன்பினை எடுத்துக் காட்ட 

  அளவிலா ஆர்வம் பொங்கி 

மன் பெரும் காதல் கூர 

  வள்ளலார் மலையை நோக்கி 

என்பு நெக்கு உருகி உள்ளத்து 

  எழு பெரு வேட்கை யோடும்.  102 

 

 

நாணனும் அன்பும் முன்பு நளிர் 

  வரை ஏறத் தாமும் 

பேணு தத்துவங்கள் என்னும் 

  பெருகு சோபானம் ஏறி 

ஆணையாம் சிவத்தைச் சார 

  அணைபவர் போல ஐயர் 

நீணிலை மலையை ஏறி நேர் 

  படச் செல்லும் போதில்.  103 

 

 

திங்கள் சேர் சடையார் தம்மைச் 

  சென்றவர் காணா முன்னே 

அங்கணர் கருணை கூர்ந்த 

  அருள் திரு நோக்கம் எய்தத் 

தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு 

  விட்டு அகல நீங்கிப் 

பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் 

  அன்பு உருவம் ஆனார்.  104 

 

 

மாகமார் திருக் காளத்தி மலை 

  எழு கொழுந்தாய் உள்ள 

ஏக நாயகரைக் கண்டார் எழுந்த 

  பேர் உவகை அன்பின் 

வேகம் ஆனது மேல் செல்ல 

  மிக்கது ஓர் விரைவின் ஓடும் 

மோகமாய் ஓடிச் சென்றார் 

  தழுவினார் மோந்து நின்றார்.  105 

 

 

நெடிது போது உயிர்த்து நின்று 

  நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் 

வடிவெலாம் புளகம் பொங்க 

  மலர்க் கண்ணீர் அருவி பாய 

அடியனேற்கு இவர் தாம் இங்கே 

  அகப்பட்டார் அச்சோ என்று 

படி இலாப் பரிவு தான் 

  ஓர் படிவமாம் பரிசு தோன்ற.  106 

 

 

வெம் மறக் குலத்து வந்த 

  வேட்டுவச் சாதியார் போல் 

கைம் மலை கரடி வேங்கை 

  அரி திரி கானம் தன்னில் 

உம்முடன் துணையாய் உள்ளார் 

  ஒருவரும் இன்றிக் கெட்டேன் 

இம் மலைத் தனியே நீர் இங்கு 

  இருப்பதே என்று நைந்தார்.  107 

 

 

கைச்சிலை விழுந்தது ஓரார் 

  காளையார் மீள இந்தப் 

பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு 

  நீரும் வார்த்து 

மச்சிது செய்தார் யாரோ 

  என்றலும் மருங்கு நின்ற 

அச்சிலை நாணன் தானும் நான் 

  இது அறிந்தேன் என்பான்.  108 

 

 

வன்றிறல் உந்தை யோடு மா 

  வேட்டை ஆடிப் பண்டிக் 

குன்று இடை வந்தோம் ஆகக் 

  குளிர்ந்த நீர் இவரை ஆட்டி 

ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி 

  முன் பறைந்தோர் பார்ப்பான் 

அன்றிது செய்தான் இன்றும் அவன் 

  செய்தது ஆகும் என்றான்.  109 

 

 

உண்ணிறைந்து எழுந்த தேனும் 

  ஒழிவின்றி ஆரா அன்பில் 

திண்ணனார் திருக் காளத்தி 

  நாயனார்க்கு இனிய செய்கை 

எண்ணிய இவைகொலாம் என்று இது 

  கடைப் பிடித்துக் கொண்டு அவ் 

அண்ணலைப் பிரிய மாட்டாத 

  அளவில் ஆதரவு நீட.  110 

 

 

இவர் தமைக் கண்டேனுக்குத் 

  தனியராய் இருந்தார் என்னே 

இவர் தமக்கு அமுது செய்ய 

  இறைச்சியும் இடுவார் இல்லை 

இவர் தமைப் பிரிய ஒண்ணாது 

  என்செய்கேன் இனி யான் சால 

இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு 

  எய்தவும் வேண்டும் என்று.  111 

 

 

போதுவர் மீண்டு செல்வர் 

  புல்லுவர் மீளப் போவர் 

காதலின் நோக்கி நிற்பர் கன்று 

  அகல் புனிற்று ஆப் போல்வர் 

நாதனே அமுது செய்ய நல்ல 

  மெல் இறைச்சி நானே 

கோதறத் தெரிந்து வேறு கொண்டு 

  இங்கு வருவேன் என்பார்.  112 

 

 

ஆர்தமராக நீர் இங்கு 

  இருப்பது என்று அகலமாட்டேன் 

நீர் பசித்து இருக்க இங்கு 

  நிற்கவும் இல்லேன் என்று 

சோர் தரு கண்ணீர் வாரப் 

  போய் வரத் துணிந்தார் ஆகி 

வார் சிலை எடுத்துக் கொண்டு 

  மலர்க் கையால் தொழுது போந்தார்.  113 

 

 

முன்பு நின்று அரிதில் நீங்கி 

  மொய் வரை இழிந்து நாணன் 

பின்பு வந்து அணைய முன்னைப் 

  பிற துறை வேட்கை நீங்கி 

அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் 

  அவர் திரு முகலி ஆற்றின் 

பொன் புனை கரையில் ஏறிப் 

  புது மலர்க் காவில் புக்கார்.  114 

 

 

காடனும் எதிரே சென்று தொழுது 

  தீக் கடைந்து வைத்தேன் 

கோடுடை ஏனம் உங்கள் 

  குறிப்படி உறுப்பை எல்லாம் 

மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து 

  நாம் போகைக்கு இன்று 

நீட நீர் தாழ்த்தது என்னோ 

  என்றலும் நின்ற நாணன்.  115 

 

 

அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் 

  கண்டு அணைத்துக் கொண்டு 

வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு 

  என்ன நீங்கான் 

இங்கும் அத் தேவர் தின்ன 

  இறைச்சி கொண்டு ஏகப் போந்தான் 

நம்குலத் தலைமை விட்டான் 

  நலப்பட்டான் தேவர்க்கு என்றான்.  116 

 

 

என் செய்தாய் திண்ணா நீ தான் 

  என்ன மால் கொண்டாய் எங்கள் 

முன் பெரு முதலி அல்லையோ 

  என முகத்தை நோக்கார் 

வன் பெரும் பன்றி தன்னை 

  எரியினில் வதக்கி மிக்க 

இன்புறு தசைகள் வெவ்வேறு 

  அம்பினால் ஈர்ந்து கொண்டு.  117 

 

 

கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் 

  தசை பதத்தில் வேவ 

வாலிய சுவைமுன் காண்பான் 

  வாயினில் அதுக்கிப் பார்த்துச் 

சாலவும் இனிய எல்லாம் சருகு 

  இலை இணைத்த கல்லை 

ஏலவே கோலிக் கூட அதன் 

  மிசை இடுவார் ஆனார்.  118 

 

 

மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் 

  மிக முதிர்ந்தான் என்னே 

அரும் பெறல் இறைச்சி காய்ச்சி 

  அதுக்கி வேறு உமிழா நின்றான் 

பெரும் பசி உடையன் ஏனும் 

  பேச்சிலன் எமக்கும் பேறு 

தரும் பரிசு உணரான் மற்றைத் 

  தசை புறத்து எறியா நின்றான்.  119 

 

 

தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் 

  மற்று இதனைத் தீர்க்கல் 

ஆவது ஒன்று அறியோம் 

  தேவராட்டியை நாகனோடு 

மேவி நாம் கொணர்ந்து தீர்க்க 

  வேண்டும் அவ் வேட்டைக் கானில் 

ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் 

  என்று எண்ணிப் போனார்.  120 

 

 

கானவர் போனது ஓரார் 

  கடிதினில் கல்லையின் கண் 

ஊன் அமுது அமைத்துக் கொண்டு 

  மஞ்சனம் ஆட்ட உன்னி 

மா நதி நன்னீர் தூய 

  வாயினில் கொண்டு கொய்த 

தூ நறும் பள்ளித் தாமங் 

  குஞ்சி மேல் துதையக் கொண்டார்.  121 

 

 

தனு ஒரு கையில் வெய்ய 

  சரத்துடன் தாங்கிக் கல்லைப் 

புனித மெல் இறைச்சி நல்ல 

  போனகம் ஒரு கை ஏந்தி 

இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் 

  என்று இரங்கி ஏங்கி 

நனி விரைந்து இறைவர் 

  வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்.  122 

 

 

இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் 

  சென்று எய்தி வெற்பின் 

முளைத்து எழு முதலைக் கண்டு 

  முடிமிசை மலரைக் காலில் 

வளைத்த பொற் செருப்பால் மாற்றி 

  வாயின் மஞ்சன நீர் தன்னை 

விளைத்த அன்பு உமிழ்வார் போல 

  விமலனார் முடிமேல் விட்டார்.  123 

 

 

தலை மிசைச் சுமந்த பள்ளித் 

  தாமத்தைத் தடங் காளத்தி 

மலை மிசைத் தம்பிரானார் முடி 

  மிசை வணங்கிச் சாத்திச் 

சிலைமிசைப் பொலிந்த செங்கைத் 

  திண்ணனார் சேர்த்த கல்லை 

இலை மிசைப் படைத்த ஊனின் 

  திரு அமுது எதிரே வைத்து.  124 

 

 

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் 

  தெரிந்து கோத்து அங்கு 

அழலுறு பதத்தில் காய்ச்சிப் 

  பல்லினால் அதுக்கி நாவில் 

பழகிய இனிமை பார்த்துப் படைத்த 

  இவ் இறைச்சி சால 

அழகிது நாயனீரே அமுது 

  செய்து அருளும் என்றார்.  125 

 

 

அன்ன இம் மொழிகள் சொல்லி 

  அமுது செய்வித்த வேடர் 

மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு 

  இனிய நல் ஊன் 

இன்னமும் வேண்டும் என்னும் எழு 

  பெரும் காதல் கண்டு 

பன்னெடுங் கரங்கள் கூப்பிப் 

  பகலவன் மலையில் தாழ்ந்தான்.  126 

 

 

அவ்வழி அந்தி மாலை 

  அணைதலும் இரவு சேரும் 

வெவ்விலங்கு உள என்று அஞ்சி 

  மெய்மையின் வேறு கொள்ளாச் 

செவ்விய அன்பு தாங்கித் திருக் 

  கையில் சிலையும் தாங்கி 

மைவரை என்ன ஐயர் மருங்கு 

  நின்று அகலா நின்றார்.  127 

 

 

சார்வரும் தவங்கள் செய்து 

  முனிவரும் அமரர் தாமும் 

கார்வரை அடவி சேர்ந்தும் 

  காணுதற்கு அரியார் தம்மை 

ஆர்வம் முன் பெருக ஆரா 

  அன்பினில் கண்டு கொண்டே 

நேர் பெற நோக்கி நின்றார் 

  நீள் இருள் நீங்க நின்றார்.  128 

 

 

கழை சொரி தரளக் குன்றில் 

  கதிர் நிலவு ஒருபால் பொங்க 

முழை அரவு உமிழ்ந்த செய்ய 

  மணி வெயில் ஒருபால் மொய்ப்பத் 

தழை கதிர்ப் பரிதியோடும் 

  சந்திரன் தலை உவாவில் 

குழையணி காதர் வெற்பைக் 

  கும்பிடச் சென்றால் ஒக்கும்.  129 

 

 

விரவு பன்மணிகள் கான்ற 

  விரிகதிர்ப் படலை பொங்க 

மரகதம் ஒளி கொள் நீல 

  மணிகளும் இமைக்கும் சோதி 

பொர இரு சுடருக்கு அஞ்சிப் 

  போயின புடைகள் தோறும் 

இரவு இருள் ஒதுங்கினாலே போன்று 

  உளது எங்கும் எங்கும்.  130 

 

 

செந்தழல் ஒளியில் பொங்கும் 

  தீப மா மரங்களாலும் 

மந்திகள் முழையில் வைத்த 

  மணி விளக்கு ஒளிகளாலும் 

ஐந்தும் ஆறடக்கி உள்ளார் 

  அரும் பெரும் சோதியாலும் 

எந்தையார் திருக்காளத்தி மலையினில் 

  இரவு ஒன்று இல்லை.  131 

 

 

வரும் கறைப் பொழுது நீங்கி 

  மல்கிய யாமஞ் சென்று 

சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் 

  சிலம்பு ஓசை கேட்டுக் 

கருங்கடல் என்ன நின்ற 

  கண் துயிலாத வீரர் 

அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது 

  கொண்டு அணைய வேண்டி.  132 

 

 

ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை 

  புனமான் மற்றும் 

வேறு வேறு இனங்கள் வேட்டை 

  வினைத் தொழில் விரகினாலே 

ஊறுசெய் காலம் சிந்தித்து 

  உருமிகத் தெரியாப் போதின் 

மாறடு சிலையும் கொண்டு 

  வள்ளலைத் தொழுது போந்தார்.  133 

 

 

மொய் காட்டும் இருள் வாங்கி 

  முகம் காட்டும் தேர் இரவி 

மெய் காட்டும் அன்புடைய 

  வில்லியார் தனி வேட்டை 

எய்காட்டின் மாவளைக்க இட்ட 

  கரும் திரை எடுத்துக் 

கை காட்டும் வான் போலக் 

  கதிர் காட்டி எழும் போதில்.  134 

 

 

எய்திய சீர் ஆகமத்தில் 

  இயம்பிய பூசனைக்கு ஏற்பக் 

கொய்த மலரும் புனலும் 

  முதலான கொண்டு அணைந்தார் 

மை தழையும் கண்டத்து மலை 

  மருந்தை வழி பாடு 

செய்து வரும் தவம் உடைய 

  முனிவர் சிவ கோசரியார்.  135 

 

 

வந்து திருமலையின் கண் 

  வானவர் நாயகர் மருங்கு 

சிந்தை நியமத்தோடும் செல் 

  கின்றார் திரு முன்பு 

வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு 

  அகல மிதித்து ஓடி 

இந்த அனுசிதம் கெட்டேன் யார் 

  செய்தார் என்று அழிவார்.  136 

 

 

மேவநேர் வர அஞ்சா 

  வேடுவரே இது செய்தார் 

தேவ தேவ ஈசனே 

  திருமுன்பே இது செய்து 

போவதே இவ் வண்ணம் 

  புகுத நீர் திரு உள்ளம் 

ஆவதே எனப் பதறி 

  அழுது விழுந்து அலமந்தார்.  137 

 

 

பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் 

  பூசனையும் தாழ்க்க நான் 

இருப்பது இனி ஏன் என்று அவ் 

  இறைச்சி எலும்புடன் இலையும் 

செருப்பு அடியும் நாய் அடியும் 

  திரு அலகால் மாற்றிய பின் 

விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் 

  மூழ்கி விரைந்து அணைந்தார்.  138 

 

 

பழுது புகுந்தது அது தீரப் 

  பவித்திரமாம் செயல் புரிந்து 

தொழுது பெறுவன கொண்டு 

  தூய பூசனை தொடங்கி 

வழுவில் திரு மஞ்சனமே 

  முதலாக வரும் பூசை 

முழுது முறைமையின் முடித்து 

  முதல்வனார் கழல் பணிந்தார்.  139 

 

 

பணிந்து எழுந்து தனி முதலாம் 

  பரன் என்று பன் முறையால் 

துணிந்த மறை மொழியாலே துதி 

  செய்து சுடர்த் திங்கள் 

அணிந்த சடை முடிக் கற்றை 

  அங்கணரை விடை கொண்டு 

தணிந்த மனத் திருமுனிவர் 

  தபோ வனத்தினிடைச் சார்ந்தார்.  140 

 

 

இவ் வண்ணம் பெருமுனிவர் 

  ஏகினார் இனி இப்பால் 

மைவண்ணக் கருங் குஞ்சி 

  வன வேடர் பெருமானார் 

கைவண்ணச் சிலை வளைத்துக் கான் 

  வேட்டை தனி ஆடிச் 

செய்வண்ணத் திறம் மொழிவேன் 

  தீவினையின் திறம் ஒழிவேன்.  141 

 

 

திரு மலையின் புறம் போன 

  திண்ணனார் செறி துறுகல் 

பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் 

  பன்றி புனம் மேய்ந்து 

வருவனவும் துணி படுத்து மான் 

  இனங்கள் கான் இடை நின்று 

ஒரு வழிச் சென்று ஏறு துறை 

  ஒளி நின்று கொன்று அருளி.  142 

 

 

பயில் விளியால் கலை அழைத்துப் 

  பாடு பெற ஊடுருவும் 

அயில் முகவெங் கணை போக்கி 

  அடி ஒற்றி மரை இனங்கள் 

துயில் இடையில் கிடை யெய்து 

  தொடர்ந்து கடமைகள் எய்து 

வெயில் படு வெங்கதிர் முதிரத் 

  தனி வேட்டை வினை முடித்தார்.  143 

 

 

பட்ட வன விலங்கு எல்லாம் 

  படர் வனத்தில் ஒரு சூழல் 

இட்டு அருகு தீக் கடை கோல் 

  இரும் சுரிகை தனை உருவி 

வெட்டி நறுங் கோல் தேனும் 

  மிக முறித்துத் தேக்கு இலையால் 

வட்டமுறு பெருங் கல்லை மருங்கு 

  புடை பட அமைத்தார்.  144 

 

 

இந்தனத்தை முறித்து அடுக்கி 

  எரி கடையும் அரணியினில் 

வெம் தழலைப் பிறப்பித்து 

  மிக வளர்த்து மிருகங்கள் 

கொந்தி அயில் அலகம்பால் 

  குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து 

வந்தன கொண்டு எழும் 

  தழலில் வக்குன வக்குவித்து.  145 

 

 

வாய் அம்பால் அழிப்பதுவும் 

  வகுப்பதுவும் செய்து அவற்றின் 

ஆய உறுப்பு இறைச்சி யெலாம் 

  அரிந்து ஒருகல் இலையில் இட்டு 

காய நெடும் கோல் கோத்துக் 

  கனலின் கண் உறக்காய்ச்சி 

தூய திரு அமுது அமைக்கச் 

  சுவை காணல் உறுகின்றார்.  146 

 

 

எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் 

  உணவு கொண்டு ஊட்டும் 

வண்ண எரி வாயின் கண் 

  வைத்தது எனக் காளத்தி 

அண்ணலார்க்கு ஆம் பரிசு 

  தாம் சோதித்து அமைப்பதற்குத் 

திண்ணனார் திருவாயில் அமைத்தார் 

  ஊன் திரு அமுது.  147 

 

 

நல்ல பதமுற வெந்து நாவின் 

  கண் இடும் இறைச்சி 

கல்லையினிற் படைத்துத் தேன் 

  பிழிந்து கலந்து அது கொண்டு 

வல் விரைந்து திருப் பள்ளித் 

  தாமமும் தூய் மஞ்சனமும் 

ஒல்லையினின் முன்பு போல் உடன் 

  கொண்டு வந்து அணைந்தார்.  148 

 

 

வந்து திருக் காளத்தி 

  மலை ஏறி வனசரர்கள் 

தந்தலைவனார் இமையோர் தலைவனார் 

  தமை எய்தி 

அந்தணனார் பூசையினை முன்பு 

  போல் அகற்றிய பின் 

முந்தை முறை தம்முடைய 

  பூசனையின் செயல் முடிப்பார்.  149 

 

 

ஊனமுது கல்லை உடன் வைத்து 

  இது முன்னையின் நன்றால் 

ஏனமொடு மான் கலைகள் 

  மரை கடமை இவையிற்றில் 

ஆன உறுப்பு இறைச்சி அமுது 

  அடியேனும் சுவை கண்டேன் 

தேனும் உடன் கலந்து 

  இதுதித்திக்கும் என மொழிந்தார்.  150 

 

 

இப் பரிசு திரு அமுது 

  செய்வித்துத் தம்முடைய 

ஒப்பரிய பூசனை செய்து 

  அந்நெறியில் ஒழுகுவார் 

எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் 

  அன்பால் காளத்தி 

அப்பர் எதிர் அல்லுறங்கார் 

  பகல் வேட்டை ஆடுவார்.  151 

 

 

மாமுனிவர் நாள் தோறும் வந்து 

  அணைந்து வன வேந்தர் 

தாம் முயலும் பூசனைக்குச் சால 

  மிகத் தளர்வு எய்தித் 

தீமை என அது நீக்கிச் 

  செப்பிய ஆகம விதியால் 

ஆமுறையில் அர்ச்சனை செய்து 

  அந் நெறியில் ஒழுகுவரால்.  152 

 

 

நாணனொடு காடனும் போய் 

  நாகனுக்குச் சொல்லியபின் 

ஊணும் உறக்கமும் இன்றி 

  அணங்கு உறைவாளையும் கொண்டு 

பேணு மகனார் தம் பால் 

  வந்து எல்லாம் பேதித்துக் 

காணு நெறி தங்கள் குறி 

  வாராமல் கை விட்டார்.  153 

 

 

முன்பு திருக் காளத்தி 

  முதல்வனார் அருள் நோக்கால் 

இன்புறு வேதகத்து இரும்பு பொன் 

  ஆனால் போல் யாக்கைத் 

தன் பரிசும் வினை இரண்டும் 

  சாரும் மலம் மூன்றும் அற 

அன்பு பிழம் பாய்த் திரிவார் 

  அவர் கருத்தின் அளவினரோ?.  154 

 

 

அந்நிலையில் அன்பனார் அறிந்த 

  நெறி பூசிப்ப 

மன்னிய ஆகமப் படியால் 

  மாமுனிவர் அருச்சித்து இங்கு 

என்னுடைய நாயகனே இது 

  செய்தார் தமைக் காணேன் 

உன்னுடைய திருவருளால் ஒழித்து 

  அருள வேண்டும் என.  155 

 

 

அன்று இரவு கனவின் கண் 

  அருள் முனிவர் தம்பாலே 

மின் திகழும் சடை மவுலி 

  வேதியர் தாம் எழுந்து அருளி 

வன்திறல் வேடுவன் என்று மற்று 

  அவனை நீ நினையேல் 

நன்றவன் தன் செயல் தன்னை 

  நாம் உரைப்பக் கேள் என்று.  156 

 

 

அவனுடைய வடிவு எல்லாம் 

  நம் பக்கல் அன்பு என்றும் 

அவனுடைய அறிவெல்லாம் நமை 

  அறியும் அறிவு என்றும் 

அவனுடைய செயல் எல்லாம் 

  நமக்கு இனியவாம் என்றும் 

அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ 

  என்று அருள் செய்வார்.  157 

 

 

பொருட்பினில் வந்தவன் செய்யும் 

  பூசனைக்கு முன்பென்மேல்

அருப்புறுமென் மலர்முன்னை அவை 

  நீக்கும் ஆதரவால் 

விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் 

  பெருகிற் றெனவீழ்ந்த

செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் 

  சிறப்புடைத்தால்.  158 

 

 

உருகிய அன்பொழிவின்றி நிறைந்த 

  அவன் உருவென்னும்

பெருகியகொள் கலமுகத்தில் 

  பிறங்கியினி தொழுகுதலால்

ஒருமுனிவன் செவிஉமிழும் 

  உயர்கங்கை முதல்தீர்த்தப்

பொருபுனலின் எனக்கவன்தன் 

  வாயுமிழும் புனல்புனிதம்.  159 

 

 

இம்மலைவந் தெனையடைந்த 

  கானவன்தன் இயல்பாலே

மெய்மலரும் அன்புமேல் 

  விரிந்தனபோல் விழுதலால் 

செம்மலர்மேல் அயனொடுமால் 

  முதல்தேவர் வந்துபுனை

எம்மலரும் அவன் தலையால் 

  இடுமலர்போல் எனக்கொல்வா.  160 

 

 

வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ 

  எனும் அன்பால்

நையுமனத் தினிமையினால் 

  நையமிக மென்றிடலால்

செய்யுமறை வேள்வியோர் 

  முன்புதருந் திருந்தவியில்

எய்யும்வரிச் சிலையவந்தான் 

  இட்டஊன் எனக்கினிய.  161 

 

 

மன்பெருமா மறைமொழிகள் 

  மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்

இன்பமொழித் தோத்திரங்கள் 

  மந்திரங்களியாவையினும்

முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ

அன்பில்நினைந் தெனையல்லால் 

  அறிவுறா மொழிநல்ல.  162 

 

 

உனக்கவன் தன் செயல் காட்ட 

  நாளை நீ ஒளித்து இருந்தால் 

எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் 

  பரிசு எல்லாம் காண்கின்றாய் 

மனக் கவலை ஒழிக என்று 

  மறை முனிவர்க்கு அருள் செய்து 

புனல் சடிலத் திரு முடியார் 

  எழுந்து அருளிப் போயினார்.  163 

 

 

கனவு நிலை நீங்கிய பின் 

  விழித்து உணர்ந்து கங்குல் இடைப் 

புனை தவத்து மாமுனிவர் புலர் 

  அளவும் கண் துயிலார் 

மனம் உறும் அற்புதமாகி வரும் 

  பயமும் உடன் ஆகித் 

துனை புரவித் தனித் தேர் 

  மேல் தோன்றுவான் கதிர் தோன்ற.  164 

 

 

முன்னை நாள் போல் வந்து 

  திருமுகலிப் புனல் மூழ்கிப் 

பன் முறையும் தம்பிரான் அருள் 

  செய்த படி நினைந்து 

மன்னு திருக் காளத்தி மலை 

  ஏறி முன்பு போல் 

பிஞ்ஞகனைப் பூசித்துப் 

  பின்பாக ஒளித்திருந்தார்.  165 

 

 

கருமுகில் என்ன நின்ற கண் 

  படா வில்லியார் தாம் 

வருமுறை ஆறாம் நாளில் வரும் 

  இரவு ஒழிந்த காலை 

அருமறை முனிவனார் வந்தணை 

  வதன் முன்னம் போகித் 

தருமுறை முன்பு போலத் 

  தனிப்பெரு வேட்டை ஆடி.  166 

 

 

மாறில் ஊன் அமுதும் நல்ல 

  மஞ்சனப் புனலும் சென்னி 

ஏறு நாண் மலரும் வெவ்வேறு 

  இயல்பினில் அமைத்துக் கொண்டு 

தேறுவார்க்கு அமுதம் ஆன 

  செல்வனார் திருக்காளத்தி 

ஆறுசேர் சடையார் தம்மை அணுக 

  வந்து அணையா நின்றார்.  167 

 

 

இத்தனை பொழுது தாழ்த்தேன் என 

  விரைந்து ஏகுவார் முன் 

மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை 

  முறை தீங்கு செய்ய 

இத் தகு தீய புட்கள் 

  ஈண்ட முன் உதிரங் காட்டும் 

அதனுக்கு என் கொல் கெட்டேன் 

  அடுத்தது என்று அணையும் போதில்.  168 

 

 

அண்ணலார் திருக் காளத்தி 

  அடிகளார் முனிவனார்க்கு 

திண்ணனார் பரிவு காட்டத் 

  திரு நயனத்தில் ஒன்று 

துண்ணென உதிரம் பாய 

  இருந்தனர் தூரத்தே அவ் 

வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் 

  விரைந்து ஓடி வந்தார்.  169 

 

 

வந்தவர் குருதி கண்டார் 

  மயங்கினார் வாயில் நன்னீர் 

சிந்திடக் கையில் ஊனும் 

  சிலையுடன் சிதறி வீழக் 

கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி 

  நின்று அலைந்து சோரப் 

பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து 

  இடைப் பதைத்து வீழ்ந்தார்.  170 

 

 

விழுந்தவர் எழுந்து சென்று 

  துடைத்தனர் குருதி வீழ்வது 

ஒழிந்திடக் காணார் செய்வது 

  அறிந்திலர் உயிர்த்து மீள 

அழிந்து போய் வீழ்ந்தார் தேறி 

  யாரிது செய்தார் என்னா 

எழுந்தனர் திசைகள் எங்கும் 

  பார்த்தனர் எடுத்தார் வில்லும்.  171 

 

 

வாளியுந் தெரிந்து கொண்டு இம் 

  மலையிடை எனக்கு மாறா 

மீளி வெம் மறவர் செய்தார் 

  உளர் கொலோ? விலங்கின் சாதி 

ஆளி முன்னாகி யுள்ள 

  விளைத்தவோ? அறியேன் என்று 

நீளிருங் குன்றைச் சாரல் 

  நெடிதிடை நேடிச் சென்றார்.  172 

 

 

வேடரைக் காணார் தீய 

  விலங்குகள் மருங்கும் எங்கும் 

நாடியுங் காணார் மீண்டும் 

  நாயனார் தம்பால் வந்து 

நீடிய சோகத்தோடு நிறை 

  மலர்ப் பாதம் பற்றி 

மாடுறக் கட்டிக் கொண்டு 

  கதறினார் கண்ணீர் வார.  173 

 

 

பாவியேன் கண்ட வண்ணம் 

  பரமனார்க்கு அடுத்தது என்னோ? 

ஆவியின் இனிய எங்கள் 

  அத்தனார்க்கு அடுத்தது என்னோ ? 

மேவினார் பிரிய மாட்டா 

  விமலனார்க்கு அடுத்தது என்னோ? 

ஆவது ஒன்று அறிகிலேன் யான் 

  என் செய்கேன் என்று பின்னும்.  174 

 

 

என் செய்தால் தீருமோதான்? 

  எம்பிரான் திறத்துத் தீங்கு 

முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் 

  கழல் வேடர் என்றும் 

மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் 

  மெய் மருந்து தேடிப் 

பொன்செய் தாழ் வரையிற் கொண்டு 

  வருவன் நான் என்று போனார்.  175 

 

 

நினைத்தனர் வேறு வேறு 

  நெருங்கிய வனங்கள் எங்கும் 

இனத்திடை பிரிந்த செங்கணேறு என 

  வெருக் கொண்டு எய்திப் 

புனத்திடைப் பறித்துக் கொண்டு 

  பூத நாயகன்பால் வைத்த 

மனத்தினும் கடிது வந்து தம் 

  மருந்துகள் பிழிந்து வார்த்தார்.  176 

 

 

மற்றவர் பிழிந்து வார்த்த 

  மருந்தினால் திருக் காளத்திக் 

கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை 

  படாது இழியக் கண்டும் 

இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் 

  செயல் என்று பார்ப்பார் 

உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு 

  ஊன் எனும் உரைமுன் கண்டார்.  177 

 

 

இதற்கினி என்கண் அம்பால் இடந்து 

  அப்பின் எந்தையார் கண் 

அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் 

  நிற்கவும் அடுக்கும் என்று 

மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து 

  முன் இருந்து தங்கண் 

முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் 

  தம் கண்ணில் அப்ப.  178 

 

 

நின்ற செங்குருதி கண்டார் 

  நிலத்தின் நின்றேறப் பாய்ந்தார் 

குன்றென வளர்ந்த தோள்கள் 

  கொட்டினார் கூத்தும் ஆடி 

நன்று நான் செய்த இந்த மதி 

  என நகையும் தோன்ற 

ஒன்றிய களிப்பினாலே உன் 

  மத்தர் போல மிக்கார்.  179 

 

 

வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம் 

நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில் 

உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் 

குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.  180 

 

 

கண்டபின் கெட்டேன் எங்கள் 

  காளத்தியார் கண் ஒன்று 

புண்டரு குருதி நிற்க மற்றைக் 

  கண் குருதி பொங்கி 

மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து 

  கை கண்டேன் இன்னும் 

உண்டொரு கண் அக்கண்ணை இடந்து 

  அப்பி ஒழிப்பேன் என்று.  181 

 

 

கண்ணுதல் கண்ணில் தம் கண் 

  இடந்து அப்பிற் காணும் நேர்பாடு 

எண்ணுவார் தம்பிரான் தன் திருக் 

  கண்ணில் இடக்கால் ஊன்றி 

உண்ணிறை விருப்பினோடும் ஒரு 

  தனிப் பகழி கொண்டு 

திண்ணனார் கண்ணில் ஊன்றத் 

  தரித்திலர் தேவ தேவர்.  182 

 

 

செங்கண் வெள்விடையின் பாகர் 

  திண்ணனார் தம்மை ஆண்ட 

அங்கணர் திருக் காளத்தி 

  அற்புதர் திருக்கை அன்பர் 

தங்கண் முன் இடக்குங் கையைத் 

  தடுக்க மூன்று அடுக்கு நாக 

கங்கணர் அமுதவாக்குக் 

  கண்ணப்ப நிற்க என்றே.  183 

 

 

கானவர் பெருமானார் தங்கண் 

  இடந்து அப்பும் போதும் 

ஊனமும் உகந்த ஐயர் உற்று 

  முன் பிடிக்கும் போதும் 

ஞான மாமுனிவர் கண்டார் 

  நான்முகன் முதலாய் உள்ள 

வானவர் வளர் பூ மாரி 

  பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.  184 

 

 

பேறினி இதன் மேல் உண்டோ ? 

  பிரான் திருக் கண்ணில் வந்த 

ஊறு கண்டு அஞ்சித் தம் 

  கண் இடந்தப்ப உதவும் கையை 

ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் 

  கொண்டு என் வலத்தில் 

மாறிலாய் நிற்க என்று மன்னு 

  பேர் அருள் புரிந்தார்.  185 

 

 

மங்குல் வாழ் திருக் காளத்தி 

  மன்னனார் கண்ணில் புண்ணீர் 

தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் 

  தாள் தலைமேற் கொண்டே 

கங்கை வாழ் சடையார் 

  வாழும் கடவூரில் கலயனாராம் 

பொங்கிய புகழின் மிக்கார் திருத் 

  தொண்டு புகலல் உற்றேன்.  186 

 

திருச்சிற்றம்பலம்