பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

001 பாயிரம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;

நிலவு லாவிய நீர்மலி வேணியன்,

அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.  1 

 

 

ஊன் அடைந்த உடம்பின் பிறவியே

தான் அடைந்த உறுதியைச் சாருமால்

தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்

மாநடஞ் செய்வரதர் பொற்றாள் தொழ.  2 

 

 

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்

நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்

கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.  3 

 

 

மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்

துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்

பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை

விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.  4 

 

 

அளவி லாத பெருமை யராகிய

அளவிலா அடியார் புகழ் கூறுகேன்

அளவுகூட உரைப்பது அரிது ஆயினும்

அளவி லாசை துரப்ப அறைகுவேன்.  5 

 

 

தெரிவரும் பெருமைத் திருத்தொண் டர்தம்

பொருவரும் சீர்புகல லுற்றேன் முற்றப்

பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை

ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன்.  6 

 

 

செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்

அப்பொ ருட்குஉரை யாவரும் கொள்வரால்

இப்பொ ருட்குஎன் உரைசிறிது ஆயினும்

மெய்ப்பொ ருட்குஉரியார் கொள்வர் மேன்மையால்.  7 

 

 

மேயஇவ் உரை கொண்டு விரும்புமாம்

சேயவன் திருப் பேரம்பலம் செய்ய

தூயபொன் னணிசோழன் நீடூ ழிபார்

ஆயசீர் அநபா யன்அர சவை.  8 

 

 

அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவரும்

தெருளில் நீரிதுசெப்பு தற்காம் எனின்

வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய

பொருளின் ஆகும்எனப் புகல்வாம் அன்றே.  9 

 

 

இங்கிதன் நாமம்கூறின் இவ்வுலகத்து முன்னாள்

தங்கிருள் இரண்டின்மாக்கள் சிந்தையுள் சார்ந்துநின்ற

பொங்கிய இருளைஏனைப் புறஇருள் போக்குகின்ற

செங்கதிர வன்போல்நீக்கும் திருத்தொண்டர் புராணம்என்பாம்.  10

 

திருச்சிற்றம்பலம்