பதினொன்றாம்-திருமுறை

041 திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

புலனோ டாடித் திரிமனத்தவர்

பொறிசெய் காமத் துரிசடக்கிய

புனித நேசத் தொடுத மக்கையர்

புணர்வி னாலுற் றுரைசெ யக்குடர்

சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்

சுடுவெ ணீறிட் டமணகற்றிய

துணிவி னான்முப் புரமெரித்தவர்

சுழலி லேபட் டிடுத வத்தினர்

உலகின் மாயப் பிறவி யைத்தரும்

உணர்வி லாஅப் பெரும யக்கினை

ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல

உபரி யாகப் பொருள்ப ரப்பிய

அலகில் ஞானக் கடலி டைப்படும்

அமிர்த யோகச் சிவவொ ளிப்புக

அடிய ரேமுக் கருளி னைச்செயும்

அரைய தேவத் திருவ டிக்களே.  1 

 

 

திருநாவுக் கரசடி 

  யவர்நாடற் கதிநிதி

தெளிதேனொத் தினியசொல் 

  மடவாருர்ப் பசிமுதல்

வருவானத் தரிவையர் 

  நடமாடிச் சிலசில

வசியாகச் சொலுமவை 

  துகளாகக் கருதிமெய்

உருஞானத் திரள்மன 

  முருகாநெக் கழுதுகண்

உழவாரப் படைகையில் 

  உடையான்வைத் தனதமிழ்

குருவாகக் கொடுசிவ 

  னடிசூடத் திரிபவர்

குறுகார்புக் கிடர்படு 

  குடர்யோனிக் குழியிலே.  2 

 

 

குழிந்து சுழிபெறுநா 

  பியின்கண் மயிர்நிரையார்

குரும்பை முலையிடையே 

  செலுந்தகை நன்மடவார்

அழிந்த பொசியதிலே 

  கிடந்தி ரவுபகல்நீ

அளைந்த யருமதுநீ 

  அறிந்திலை கொல்மனமே

கழிந்த கழிகிடுநாள் 

  இணங்கி தயநெகவே

கசிந்தி தயமெழுநூ 

  றரும்ப திகநிதியே

பொழிந்த ருளுதிருநா 

  வினெங்க ளரசினையே

புரிந்து நினையிதுவே 

  மருந்து பிறிதிலையே.  3 

 

 

இலைமா டென்றிடர் 

  பரியார் இந்திர

னேஒத் துறுகுறை வற்றாலும்

நிலையா திச்செல்வ 

  மெனவே கருதுவர்

நீள்சன் மக்கடலி டையிற்புக்

கலையார் சென்றரன் 

  நெறியா குங்கரை

அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்

சிலைமா டந்திகழ் புகழா மூருறை

திருநா வுக்கர சென்போரே.  4 

 

 

என்பட்டிக் கட்டிய 

  இந்தப்பைக் குரம்பையை

இங்கிட்டுச் சுட்டபின் 

  எங்குத்தைக் குச்செலும்

முன்பிட்டுச் சுட்டிவ 

  ருந்திக்கெத் திக்கென

மொய்ம்புற்றுக் கற்றறி 

  வின்றிக்கெட் டுச்சில

வன்பட்டிப் பிட்டர்கள் 

  துன்புற்றுப் புத்தியை

வஞ்சித்துக் கத்திவி 

  ழுந்தெச்சுத் தட்டுவர்

அன்பர்க்குப் பற்றிலர் 

  சென்றர்ச்சிக் கிற்றிலர்

அந்தக்குக் கிக்கிரை 

  சிந்தித்தப் பித்தரே.  5 

 

 

பித்தரசு பதையாத 

  கொத்தைநிலை உளதேவு

பெட்டியுரை செய்துசோறு 

  சுட்டியுழல் சமண்வாயர்

கைத்தரசு பதையாத 

  சித்தமொடு சிவபூசை

கற்றமதி யினனோசை 

  இத்தரசு புகழ்ஞாலம்

முத்திபெறு திருவாள 

  னெற்றுணையின் மிதவாமல்

கற்றுணையில் வருமாதி ................

பத்தரசு வசைதீர 

  வைத்தகன தமிழ்மாலை

பற்பலவு மவையோத 

  நற்பதிக நிதிதானே.  6 

 

 

பதிகமே ழெழுநூறு 

  பகருமா கவியோகி

பரசுநா வரசான 

  பரமகா ரணவீசன்

அதிகைமா நகர்மேவி 

  அருளினால் அமண்மூடர்

அவர்செய்வா தைகள்தீரும் 

  அனகன்வார் கழல்சூடின்

நிதியரா குவர்சீர்மை 

  உடையரா குவர்வாய்மை

நெறியரா குவர்பாவம் 

  வெறியரா குவர்சால

மதியரா குவர்ஈசன் 

  அடியரா குவர்வானம்

உடையரா குவர்பாரில் 

  மனிதரா னவர்தாமே.  7 

 

 

தாமரைநகும் அகவிதழ் தகுவன

சாய்பெறுசிறு தளிரினை அனையன

சார்தருமடி யவரிடர் தடிவன

தாயினும் நல கருணையை உடையன

தூமதியினை ஒருபது கொடுசெய்த

சோதியின்மிகு கதிரினை யுடையன

தூயனதவ முனிவர்கள் தொழுவன

தோமறுகுண நிலையின தலையின

ஓமரசினை மறைகளின் முடிவுகள்

ஓலிடுபரி சொடுதொடர் வரியன

ஓவறுமுணர் வொடுசிவ வொளியன

ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்

ஆமரசுயர் அகநெகு மவருள

னாரரசதி கையினர னருளுவ

னாமரசுகொ ளரசெனை வழிமுழு

தாளரசுதன் அடியிணை மலர்களே.  8 

 

 

அடிநாயைச் சிவிகைத் 

  தவிசேறித் திரிவித்

தறியாவப் பசுதைச் 

  சிறியோரிற் செறியுங்

கொடியேனுக் கருளைத் 

  திருநாவுக் கரசைக்

குணமேருத் தனைவிட் 

  டெனையாமொட் டகல்விற்

பிடியாரப் பெறுதற் 

  கரிதாகச் சொலும்அப்

பிணநூலைப் பெருகப் 

  பொருளாகக் கருதும்

செடிகாயத் துறிகைச் 

  சமண்மூடர்க் கிழவுற்

றதுதேவர்க் கரிதச் 

  சிவலோகக் கதியே.  9 

 

 

சிவசம் பத்திடைத் தவஞ்செய்து

திரியும் பத்தியிற் சிறந்தவர்

திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்

திகழும் பைம்பொடித் தவண்டணி

கவசம் புக்குவைத் தரன்கழல்

கருதுஞ் சித்தனிற் கவன்றிய

கரணங் கட்டுதற் கடுத்துள

களகம் புக்கநற் கவந்தியன்

அவசம் புத்தியிற் கசிந்துகொ

டழுகண் டத்துவைத் தளித்தனன்

அனகன் குற்றமற் றபண்டிதன்

அரசெங் கட்கொர்பற் றுவந்தறு

பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்

படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்

பசுபந் தத்தினைப் பரிந்தடு

பரிசொன் றப்பணிக் குநன்றுமே.  10 

 

 

நன்று மாதர 

  நாவினுக் கரைசடி

நளினம் வைத்துயின் அல்லால்

ஒன்று மாவது கண்டிலம் உபாயமற்

றுள்ளன வேண்டோமால்

என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்

இகபரத் திடைப்பட்டுப்

பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்

பொறியிலைம் புலனோடே.  11 

 

திருச்சிற்றம்பலம்