பதினொன்றாம்-திருமுறை

039 ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அலையார்ந்த கடலுலகத் 

  தருந்திசைதோ றங்கங்கே

நிலையார்ந்த பலபதிகம் 

  நெறிமனிதர்க் கினிதியற்றி

ஈங்கருளி யெம்போல்வார்க் 

  கிடர்கெடுத்தல் காரணமாய்

ஓங்குபுகழ்ச் சண்பையெனும் 

  ஒண்பதியுள் உதித்தனையே.

 

செஞ்சடைவெண் மதியணிந்த 

  சிவன்எந்தை திருவருளால்

வஞ்சியன நுண்ணிடையாள் 

  மலையரையன் மடப்பாவை

நற்கண்ணி அளவிறந்த 

  ஞானத்தை அமிர்தாக்கிப்

பொற்கிண்ணத் தருள்புரிந்த 

  போனகமுன் நுகர்ந்தனையே.

 

தோடணிகா தினன்என்றும் 

  தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்

தேடரிய பராபரனைச் 

  செழுமறையின் அகன்பொருளை

அந்திச்செம் மேனியனை 

  அடையாளம் பலசொல்லி

உந்தைக்குக் காணஅரன் 

  உவனாமென் றுரைத்தனையே.

 

(இவை மூன்றும் நான்கடித் தாழிசை)

 

வளமலி தமிழிசை 

  வடகலை மறைவல

முளரிநன் மலரணி 

  தருதிரு முடியினை.

 

கடல்படு விடமடை 

  கறைமணி மிடறுடை

அடல்கரி உரியனை 

  அறிவுடை அளவினை.

 

(இவை இரண்டும் அராகம்)

 

கரும்பினு மிக் கினியபுகழ்க் 

  கண்ணுதல்விண்ணவன்அடிமேல்

பரம்பவிரும் புவியவர்க்குப் 

  பத்திமையை விளைத்தனையே.

 

பன்மறையோர் செய்தொழிலும் 

  பரமசிவா கமவிதியும்

நன்மறையின் விதிமுழுதும் 

  ஒழிவின்றி நவின்றனையே.

 

(இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)

 

அணிதவத் தவர்களுக் 

  கதிகவித் தகனும்நீ

தணிமனத் தருளுடைத் 

  தவநெறிக் கமிர்தம்நீ

அமணரைக் கழுநுதிக் 

  கணைவுறுத் தவனும்நீ

தமிழ்நலத் தொகையினில் 

  தகுசுவைப் பவனும்நீ

 

(இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)

 

மறையவர்க் கொருவன் நீ

மருவலர்க் குருமு நீ

நிறைகுணத் தொருவன் நீ

நிகரில்உத் தமனும் நீ

 

(இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)

 

அரியை நீ. எளியை நீ.

அறவன் நீ. துறவன் நீ.

பெரியை நீ உரியை நீ.

பிள்ளை நீ. வள்ளல் நீ.

 

(இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)

 

எனவாங்கு (இது தனிச்சொல்)

 

அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய

நிரைச்செழு மாளிகை 

  நிலைதொறும் நிலைதொறும்

உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்

சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்

தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)

 

கற்றொகு புரிசைக் காழியர் நாத

நற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த

நின்பெருங் கருணையை நீதியின்

அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.

 

(இது சுரிதகம்)  1 

 

 

 

எனவே இடர்அகலும் 

  இன்பமே எய்தும்

நனவே அரன்அருளை 

  நாடும் - புனல்மேய

செங்கமலத் தண்தார்த் 

  திருஞான சம்பந்தன்

கொங்கமலத் தண்காழிக் கோ.  2 

 

 

 

கோலப் புலமணிச் சுந்தர 

  மாளிகைக் குந்தளவார்

ஏலப் பொழிலணி சண்பையர் 

  கோனை இருங்கடல்சூழ்

ஞாலத் தணிபுகழ் ஞானசம் 

  பந்தனை நற்றமிழே

போலப் பலபுன் கவிகொண்டு 

  சேவடி போற்றுவனே.  3 

 

 

போற்று வார்இடர் 

  பாற்றிய புனிதன்

பொழில்சு லாவிய 

  புகலியர் பெருமான்

ஏற்ற வார்புகழ் 

  ஞானசம் பந்தன்

எம்பி ரான்இருஞ் 

  சுருதியங் கிரிவாய்ச்

சேற்று வார்புனங் 

  காவல் புரிந்தென்

சிந்தை கொள்வதும் 

  செய்தொழி லானால்

மாற்றம் நீர்எமக் 

  கின்றுரை செய்தால்

வாசி யோகுற மாதுந லீரே.  4 

 

 

 

நலமலி தரும்புவனி 

  நிறைசெய்புகழ் இன்பம்நனி

பனிமதி அணைந்த பொழில்சூழ்

பொலமதில் இரும்புகலி 

  அதிபதி விதம்பெருகு

புனிதகுணன் எந்தம் இறைவன்

பலமலி தருந்தமிழின் 

  வடகலை விடங்கன்மிகு

பரசமய வென்றி அரிதன்

சலமலி தருங்கமல 

  சரண்நினைவன் என்றனது

தகுவினைகள் பொன்றும் வகையே.  5 

 

 

 

வகைதகு முத்தமி ழாகரன் 

  மறைபயில் திப்பிய வாசகன்

வலகலை வித்தகன் வானவில் 

  மதியணை பொற்குவை மாளிகை

திகைதிகை மட்டலர் வார்பொழில் 

  திகழ்புக லிக்கர சாகிய

திருவளர் விப்ரசி காமணி 

  செழுமல யத்தமிழ்க் கேசரி

மிகமத வெற்றிகொள் வாரண 

  மிடைவரு டைக்குலம் யாளிகள்

விரவிரு ளிற்றனி நீணெறி 

  வினைதுயர் மொய்த்துள வேமணி

நகையெழி லிற்குற மாதுன 

  தருமை நினைக்கிலள் நீயிவள்

நசையின் முழுப்பழி யாதல்முன் 

  நணுகலி னிக்கிரி வாணனே.  6 

 

 

வாணில வும்புன லும்பயில் 

  செஞ்சடை வண்கரு ணாகரனை

மலைமா துமையொடு மிவனா 

  வானென முன்னாளுரை செய்தோன்

சேணில வும்புகழ் மாளிகை 

  நீடிய தென்புக லிக்கரசைத்

திருவா ளனையெழி லருகா 

  சனிதனை மருவா தவர்கிளைபோல்

நாணில வும்பழி யோகரு 

  தாதய லானொரு காளையுடன்

நசைதீர் நிலைகொலை புரிவே 

  டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்

கேணில வுங்கிளி பாவையொ 

  டாயமும் யாயெனை யும்மொழியக்

கிறியா லெனதொரு மகள்போ 

  யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே.  7 

 

 

 

அறிவாகி இன்பஞ்செய் 

  தமிழ்வாதில் வென்றந்த

அமணான வன்குண்டர் 

  கழுவேற முன்கண்ட

செறிமாட வண்சண்பை 

  நகராளி யென்தந்தை

திருஞான சம்பந்தன் 

  அணிநீடு திண்குன்றில்

நெறியால மண்டுன்றி 

  முனைநாள்சி னங்கொண்டு

நிறைவார் புனந்தின்று 

  மகள்மேல் வருந்துங்க

வெறியார் மதந்தங்கு 

  கதவா ரணங்கொன்ற

வெகுளாத நஞ்சிந்தை 

  விறலான் உளன்பண்டே.  8 

 

 

பண்டமுது செய்ததுமை நங்கையருள் 

  மேவுசிவ ஞானம்

பைந்தரள நன்சிவிகை செம்பொனணி 

  நீடுகிற தாளம்

கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு 

  மானருள் படைத்துக்

கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க 

  ளுக்குலகில் இன்பம்

கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு 

  துங்கழுவில் ஏறக்

கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை 

  காதலது வன்றி

விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு 

  கின்றமணி மாட

வேணுபுர நாதன்மிகு வேதியர் 

  சிகாமணி பிரானே.  9 

 

 

 

பிரானை மெய்த்திரு ஞானசம் 

  பந்தனை மறையவர் பெருமானைக்

குராம லர்ப்பொழிற் கொச்சையர் 

  நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்

தராத லத்தினில் அவனருள் 

  நினைவொடு தளர்வுறு தமியேனுக்

கிராவி னைக்கொடு வந்ததிவ் 

  வந்திமற் றினிவிடி வறியேனே.  10 

 

 

 

ஏனமு கத்தவ புத்தரை இந்திர 

  சித்து மணம்புணர் வுற்றான்

ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை 

  வெட்டி யிசித்தனர் பட்டர்

தானம் இரக்கிற சீதை மடுப்பது 

  சாதி குடத்தொடு கண்டீர்

சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் 

  தத்துவ மிப்பரி சுண்டே

ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி 

  அத்தகு மைப்புரை யுங்கார்

ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் 

  வண்களி யேன்எளி யேனோ

சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை 

  அம்மனை சூலது கொண்டாள்

தும்புரு வாலியை வென்று நிலத்திடை 

  நின்று துலுக்குகி றாரே.  11 

 

 

ஆர்மலி புகலி நாதன் 

  அருளென இரவில் வந்தென்

வார்முலை பயலை தீர 

  மணந்தவர் தணந்து போன

தேரதர் அழியல் உம்மைச் 

  செய்பிழை எம்ம தில்லை

கார்திரை புரள மோதிக் 

  கரைபொருங் கடலி னீரே.  12 

 

 

 

கடல்மேவு புவியேறு 

  கவிநீரர் பெருமான்றன்

தடமாடு மிகுகாழி 

  தகுபேதை அருளாமல்

திடமாகில் அணிநீறு 

  செழுமேனி முழுதாடி

மடலேறி எழில்வீதி 

  வருகாதல் ஒழியேனே.  13 

 

 

 

ஒழியா தின்புறு 

  பொழில்சூழ் சண்பைமன்

உயர்பார் துன்றிய 

  தகுஞா னன்புகழ்

எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ்

இணையார் செங்கரன் 

  நிகழ்வான் விண்குயின்

பொழியா நின்றன 

  துளிதார் கொன்றைகள்

புலமே துன்றின 

  கலைமான் ஒன்றின

பழிமேல் கொண்டது 

  நுமர்தேர் அன்பொடும்

அருகே வந்தது 

  அதுகாண் மங்கையே.  14 

 

 

மங்கை யிடத்தர னைக்கவி 

  நீரெதிர் ஓட மதித்தருள்செய்

தங்கு புகழ்ச்சதுர் மாமறை 

  நாவளர் சைவசி காமணிதன்

துங்க மதிற்பிர மாபுரம் மேவிய 

  சூழ்பொழில் நின்றொளிர்மென்

கொங்கை யுடைக்கொடி ஏரிடை 

  யாள்குடி கொண்டனள் எம்மனமே.  15 

 

 

 

மனங்கொண்டு நிறைகொண்டு 

  கலையுங் கொண்டு

மணிநிறமும் இவள்செங்கை 

  வளையுங் கொண்ட

தனங்கொண்ட பெருஞ்செல்வம் 

  திகழும் கீர்த்திச்

சண்பையர்கோன் திருஞான 

  சம்பந் தற்கு

நனங்கொண்டு மெய்கொண்டு 

  பயலை கொண்டே

நன்னுதலாள் அயர்கின்றாள் 

  நடுவே நின்றும்

இனங்கொண்டு நகைகொண்டு 

  மடவீர் வாளா

என்செயநீர் அலர்தூற்றி 

  எழுகின் றீரே.  16 

 

 

 

எழுகுல வெற்பிவை 

  மிடறில் அடக்குவன்

எறிகட லிற்புனல் 

  குளறிவ யிற்றினில்

முழுதும் ஒளித்திர 

  வியையிந் நிலத்திடை

முடுகுவன் இப்பொழு 

  திவையல விச்சைகள்

கழுமல நற்பதி 

  அதிப தமிழ்க்கடல்

கவுணிய நற்குல 

  திலகன் இணைக்கழல்

தொழுது வழுத்திய 

  பிறரொரு வர்க்குறு

துயர்வரு விப்பனி 

  தரியதோர் விச்சையே.  17 

 

 

சயமி குத்தரு கரைமு ருக்கிய 

  தமிழ்ப யிற்றிய நாவன்

வியலி யற்றிரு மருக லிற்கொடு 

  விடம ழித்தருள் போதன்

கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு 

  கழும லப்பதி நாதன்

இயலு டைக்கழல் தொழநி னைப்பவ 

  ரிருவி னைத்துயர் போமே.  18 

 

 

 

மேதகுந் திகழ்பூக 

  நாகசண் பகசூத

வேரிவண் டறைசோலை 

  ஆலைதுன் றியகாழி

நாதன்அந் தணர்கோனென் 

  ஆனைவண் புகழாளி

ஞானசுந் தரன்மேவு 

  தார்நினைந் தயர்வேனை

நீதியன்றன பேசும் 

  யாயுமிந் துவும்வாசம்

நீடுதென் றலும்வீணை 

  ஓசையும் கரைசேர

மோதுதெண் திரைசேவல் 

  சேரும்அன் றிலும்வேயும்

மூடுதண் பனிவாடை 

  கூடிவன் பகையாமே.  19 

 

 

வன்பகை யாமக் 

  குண்டரை வென்றோய்

மாமலர் வாளிப் 

  பொருமத வேளைத்

தன்பகை யாகச் 

  சிந்தையுள் நையும்

தையலை உய்யக் 

  கொண்டருள் செய்யாய்

நின்புகழ் பாடிக் 

  கண்பனி சோரா

நின்றெழில் ஞானா 

  என்றகம் நெக்கிட்

டன்பக லாமெய்ச் 

  சிந்தையர் இன்பா

அம்பொழில் மாடச் 

  சண்பையர் கோவே.  20 

 

 

 

கோவின்திரு முகமீதொடு 

  வருதூதுவன் ஈர

குளிர்பைம்பொழில் வளநாடெழில் 

  நிதியம்பரி மீசம்

மாவீரியர் இவர்தங்கையென் 

  மகுடன்திறம் அமண

மறவெங்குல மறிகின்றிலன் 

  பழியச்சத வரசன்

பாவேறிய மதுரத்தமிழ் 

  விரகன்புக லியர்மன்

பயில்வண்புக ழருகாசனி 

  பணியன்றெனின் நமர்காள்

தூவேரியை மடுமின்துடி 

  யடிமின்படை யெழுமின்

தொகுசேனையும் அவனும்பட 

  மலையும்பரி சினியே.  21 

 

 

 

இனியின் றொழிமினிவ் 

  வெறியும் மறியடு

தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்

நனிசிந் தையி னிவள் 

  மிகவன் புறுவதொர்

நசையுண் டதுநரை முதுபெண்டீர்

புனிதன் புகலியர் 

  அதிபன் புனைதமிழ்

விரகன் புயமுறும் அரவிந்தம்

பனிமென் குழலியை 

  அணிமின் துயரொடு

மயலுங் கெடுவது சரதம்மே.  22 

 

 

 

சரத மணமலி 

  பரிசம் வருவன

தளர்வில் புகலியர் 

  அதிபன் நதிதரு

வரதன் அணிதிகழ் 

  விரகன் மிகுபுகழ்

மருவு சுருதிநன் 

  மலையின் அமர்தரு

விரத முடையைநின 

  டையின் அவள்மனம்

விரைசெய் குழலியை 

  அணைவ தரிதென

இரதம் அழிதர 

  வருதல் முனம்இனி

எளிய தொருவகை 

  கருது மலையனே.  23 

 

 

அயன்நெடிய மாலும்அவ 

  ரறிவரிய தாணுவரன்

அருளினொடு நீடவனி 

  இடர்முழுது போயகல

வயலணிதென் வீழிமிழ 

  லையின்நிலவு காசின்மலி

மழைபொழியு மானகுண 

  மதுரன்மதி தோய்கனக

செயநிலவு மாடமதில் 

  புடைதழுவு வாசமலி

செறிபொழில்சு லாவிவளர் 

  சிரபுரசு ரேசன்முதிர்

பயன்நிலவு ஞானதமிழ் 

  விரகன்மறை ஞானமுணர்

பரமகுரு நாதன்மிகு 

  பரசமய கோளரியே.  24 

 

 

அரியாருங் கிரிநெறிஎங் 

  ஙனம்நீர் வந்தீர்

அழகிதினிப் பயமில்லை 

  அந்திக் கப்பால்

தெரியாபுன் சிறுநெறிகள் 

  எந்தம் வாழ்விச்

சிறுகுடியின் றிரவிங்கே 

  சிரமந் தீர்ந்திச்

சுரியார்மென் குழலியொடும் 

  விடியச் சென்று

தொகுபுகழ்சேர் திருஞான 

  சம்பந் தன்றன்

வரியாரும் பொழிலுமெழில் 

  மதிலும் தோற்றும்

வயற்புகலிப் பதியினிது 

  மருவ லாமே.  25 

 

 

 

ஆமாண்பொன் கூட்டகத்த 

  அஞ்சொலிளம் பைங்கிளியே

பாமாலை யாழ்முரியப் 

  பாணழியப் பண்டருள்செய்

மாமான சுந்தரன்வண் 

  சம்பந்த மாமுனியெம்

கோமான்தன் புகழொருகால் 

  இன்புறநீ கூறாயே

கொச்சையர்கோன் தன்புகழ்யான் 

  இன்புறநீ கூறாயே.  26 

 

 

கூற தாகமெய் யடிமை தான்எனை 

  உடைய கொச்சையர் அதிபதி

வீற தார்தமிழ் விரகன் மேதகு 

  புகழி னான்இவன் மிகுவனச்

சேற தார்தரு திரள்க ளைக்கன 

  செழுமு லைக்குரி யவர்சினத்

தேறு தானிது தழுவி னாரென 

  இடிகொள் மாமுர சதிருமே.  27 

 

 

சதுரன் புகலியர் அதிபன்கூர்தவசுந் 

  தரகவு ணியர்தஞ்சீர்

முதல்வன் புகலியர் அதிபன்தாள்முறைவந் 

  தடையலர் நகரம்போல்

எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்எரிவெங் 

  கணைசொரி புரிமின்கார்

அதிர்கின் றனஇது பருவஞ்சேரலர்தம் 

  பதிமதில் இடிமின்னே.  28 

 

 

மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன்

  மாடப் புகலி நாதன்

துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் 

  பாடற் பதிகம் அன்னாள்

பொன்னு மாநல் தரள முந்தன் பொருக 

  யற்கண் தனம்நி றைந்தாள்

இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் 

  எங்ஙனேநான் எண்ணு மாறே.  29 

 

 

 

மாறி லாத பொடிநீ 

  றேறு கோல வடிவும்

வம்பு பம்பு குழலும் 

  துங்க கொங்கை இணையும்

ஊறி யேறு பதிகத் 

  தோசை நேச நுகர்வும்

ஒத்து கித்து நடையும் 

  சித்த பத்தி மிகையும்

வீற தேறும் வயல்சூழ் 

  காழி ஞான பெருமான்

வென்றி துன்று கழலின் 

  ஒன்றி நின்ற பணியும்

தேறல் போலும் மொழியும் 

  சேல்கள் போலும் விழியும்

சிந்தை கொண்ட பரிசும் 

  நன்றி மங்கை தவமே.  30 

 

 

கைதவத்தால் என்னிடைக்கு 

  நீவந்ததறியேனோ கலதிப் பாணா

மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவசிகாமணியை

   வேணுக் கோனைச்

செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்அவனுடைய 

  செம்பொன் திண்டோள்

எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்குநீபலபொய் 

  இசைக்கின் றாயே.  31 

 

 

 

இசையை முகந்தெழு 

  மிடறுமி திங்கிவன்

இடுகர ணங்களின் 

  இயல்பும் வளம்பொலி

திசைதிசை துன்றிய 

  பொழில்சுல வுந்திகழ்

சிரிபுர மன்றகு 

  தமிழ்விர கன்பல

நசைமிகு வண்புகழ் 

  பயிலு மதங்கிதன்

நளிர்முலை செங்கயல் 

  விழிநகை கண்டபின்

வசைதகு மென்குல 

  மவைமுழு துங்கொள

மதிவளர் சிந்தனை 

  மயல்வரு கின்றதே.  32 

 

 

வருகின் றனன்என் 

  றனதுள் ளமும்நின்

வசமே நிறுவிக் 

  குறைகொண் டுதணித்

தருகும் புனல்வெஞ் 

  சுரம்யான் அமரும்

மதுநீ இறையுன் 

  னினையா தெனின்முன்

கருகும் புயல்சேர் 

  மதில்வண் புகலிக்

கவிஞன் பயில்செந் 

  தமிழா கரன்மெய்ப்

பெருகுந் திருவார் 

  அருள்பே ணலர்போற்

பிழைசெய் தனைவந் 

  ததர்பெண் கொடியே.  33 

 

 

கொடிநீடு விடையுடைய 

  பெருமானை அடிபரவு

குணமேதை கவுணியர்கள் 

  குலதீப சுபசரிதன்

அடியேன திடர்முழுதும் 

  அறவீசு தமிழ்விரகன்

அணியான புகலிநகர் 

  அணையான கனைகடலின்

முடிநீடு பெருவலைகொ 

  டலையூடு புகுவன்நுமர்

முறையேவு பணிபுரிவன் 

  அணிதோணி புனைவனவை

படியாரும் நிகரரிய 

  வரியாரும் மதர்நயனி

பணைவார்மென் முலைநுளையர் 

  மடமாதுன் அருள்பெறினே.  34 

 

 

பெறுபயன் மிகப்புவியுள் 

  அருளுவன பிற்றைமுறை

பெருநெறி அளிப்பனபல் 

  பிறவியை ஒழிச்சுவன

உறுதுயர் அழிப்பனமுன் 

  உமைதிரு வருட்பெருக

உடையன நதிப்புனலின் 

  எதிர்பஃறி உய்த்தனபுன்

நறுமுறு குறைச்சமணை 

  நிரைகழு நிறுத்தியன

நனிகத வடைத்தனது 

  னருவிடம் அகற்றியன

துறுபொழில் மதிற்புறவ 

  முதுபதிமன் ஒப்பரிய

தொழில்பல மிகுத்ததமிழ் 

  விரகன கவித்தொகையே.  35 

 

 

 

தொகுவார் பொழில்சுற் றியவான் 

  மதிதோ யுமதிற் கனமார்

தொலையா ததிருப் பொழில்மா 

  ளிகைமா டநெருக் கியசீர்

மிருகா ழிமன்முத் தமிழா 

  கரன்மே தகுபொற் புனைதார்

விரையார் கமலக் கழலே 

  துணையா கநினைப் பவர்தாம்

மகரா கரநித் திலநீர் 

  நிலையார் புவியுத் தமராய்

வரலா றுபிழைப் பினினூ 

  ழியிலக்................ கிதமா

தகுவாழ் வுநிலைத் தெழில்சே 

  ரறமா னபயிற் றுவர்மா

சதுரால் வினைசெற் றதன்மே 

  லணுகார் பிறவிக் கடலே.  36 

 

 

கருமங் கேண்மதி 

  கருமங் கேண்மதி

துருமதிப் பாண 

  கருமங் கேண்மதி

நிரம்பிய பாடல் 

  நின்கண் ணோடும்

அரும்பசி நலிய 

  அலக்கணுற் றிளைத்துக்

காந்திய உதரக் 

  கனல்தழைத் தெழுதலின் (5)

 

தேய்ந்துடல் வற்றிச் 

  சின்னரம் பெழுந்தே

இறுகுபு சுள்ளி 

  இயற்றிய குரம்பை

உறுசெறித் தனைய 

  உருவுகொண் டுள்வளைஇ

இன்னிசை நல்லி 

  யாழ்சுமந் தன்னம்

மன்னிய வளநகர் 

  மனைக்கடை தோறும் (10)

 

சென்றுழிச் சென்றுழிச் 

  சில்பலி பெறாது

நின்றுழி நிலாவு 

  வன்றுயர் போயொழிந்

தின்புற் றிருநிதி 

  எய்தும் அதுநுன

துள்ளத் துள்ள 

  தாயின் மதுமலர்

வண்டறை சோலை 

  வளவயல் அகவ (15)

 

ஒண்திறற் கோண்மீன் 

  உலாவு குண்டகம்

உயர்தரு வரையில் 

  இயல்தரு பதணத்துக்

கடுநுதிக் கழுக்கடை 

  மிடைதரு வேலிக்

கனகப் பருமுரட் 

  கணையக் கபாட

விலையக் கோபுர 

  விளங்கெழில் வாயில் (20)

 

நெகிழ்ச்சியில் வகுத்துத் 

  திகழ்ச்சியில் ஓங்கும்

மஞ்சணை இஞ்சி 

  வண்கொடி மிடைந்த

செஞ்சுடர்க் கனகத் 

  திகழ்சிலம் பனைய

மாளிகை ஓளிச் 

  சூளிகை வளாகத்

தணிவுடைப் பலபட 

  மணிதுடைத் தழுத்திய (25)

 

நல்லொளி பரந்து 

  நயந்திகழ் இந்திர

வில்லொளி பலபல 

  விசும்பிடைக் காட்ட

மன்னிய செல்வத்துத் 

  துன்னிய பெருமைச்

செம்மலர் மாது 

  சேர்ந்திறை பிரியாக்

கழுமல நாதன் 

  கவுணியர் குலபதி (30)

 

தண்டமிழ் விரகன் 

  சைவ சிகாமணி

பண்டிதர் இன்பன் 

  பரசமய கோளரி

என்புனை தமிழ்கொண் 

  டிரங்கிஎன் னுள்ளத்

தன்பினை அருளிய 

  ஆண்டகை தன்புகழ்

குறைவறுத் துள்கி 

  நிறைகடை குறுகி (35)

 

நாப்பொலி நல்லிசை பாட

மாப்பெருஞ் செல்வம் 

  மன்னுதி நீயே.  37 

 

 

 

நீதியின் நிறைபுகழ்

மேதகு புகலிமன்

மாதமிழ் விரகனை

ஓதுவ துறுதியே.  38 

 

 

 

உறுதி முலைதாழ 

  எனையி கழுநீதி

உனது மனமார 

  முழுவ துமதாக

அறுதி பெறுமாதர் 

  பெயல்த ருதறானும்

அழகி தினியானுன் 

  அருள்பு னைவதாகப்

பெறுதி இவைநீயென் 

  அடிப ணிதல்மேவு

பெருமை கெடநீடு 

  படிறொ ழிபொன்மாட

நறைக மழுவாச 

  வளர்பொ ழில்சுலாவும்

நனிபு கலிநாத 

  தமிழ்வி ரகநீயே.  39 

 

 

 

நீமதித் துன்னி 

  நினையேல் மடநெஞ்சமே

காமதிக் கார்பொழிற் காழி

நாமதிக் கும்புகழ் 

  ஞானசம் பந்தனொடு

பூமதிக் குங்கழல் போற்றே.  40 

 

 

 

போற்றி செய்தரன் 

  பொற்கழல் பூண்டதே

புந்தி யானுந்தம் 

  பொற்கழல் பூண்டதே

மாற்றி யிட்டது 

  வல்விட வாதையே

மன்னு குண்டரை 

  வென்றது வாதையே

ஆற்றெ திர்ப்புனல் 

  உற்றதந் தோணியே

ஆன தன்பதி 

  யாவதந் தோணியே

நாற்றி சைக்கவி 

  ஞானசம் பந்தனே

நல்ல நாமமும் 

  ஞானசம் பந்தனே.  41 

 

 

அம்புந்து கண்ணிமைக்கும் 

  ஆன நுதல்வியர்க்கும்

வம்புந்து கோதை 

  மலர்வாடும் - சம்பந்தன்

காமரு கழுமலம் அனையாள்

ஆமிவள் அணங்கலள் 

  அடிநிலத் தனவே.  42 

 

 

 

தனமுந் துகிலுஞ் சாலிக் 

  குவையுங் கோலக் கனமாடச்

சண்பைத் திகழ்மா மறையோர் 

  அதிபன் தவமெய்க் குலதீபன்

கனவண் கொடைநீ டருகா 

  சனிதன் கமலக் கழல்பாடிக்

கண்டார் நிறையக் கொள்ளப் 

  பசியைக் கருதா தெம்பாண

புனைதண் டமிழின் இசையார் 

  புகலிக் கரசைப் புகழ்பாடிப்

புலையச் சேரிக் காளை 

  புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்

சினவெங் கதமாக் களிறொன் 

  றிந்தச் சேரிக் கொடுவந்தார்

சேரிக் குடிலும் இழந்தார் 

  இதனைச் செய்வ தறியாரே.  43 

 

 

யாரேஎம் போல 

  அருளுடையார் இன்கமலத்

தாரேயுஞ் சென்னித் 

  தமிழ்விரகன் - சீரேயும்

கொச்சை வயன்தன் 

  குரைகழற்கே மெச்சி

அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.  44 

 

 

 

அறிதரு நுண்பொருள் சேர்பதி 

  கம்மரன் கழல்மேல்

அணிதரு சுந்தர மார்தமிழ் 

  விரகன் பிறைதோய்

செறிதரு பைம்பொழில் மாளிகை 

  கலவுந் திகழ்சீர்த்

திருவளர் சண்பையில் மாடலை 

  கடலொண் கழிசேர்

எறிதிரை வந்தெழு மீனிரை 

  நுகர்கின் றிலைபோய்

இனமும் அடைந்திலை கூரிட 

  ரோடிருந் தனையால்

உறுதுயர் சிந்தையி னூடுத 

  வினரெந் தமர்போல்

உமரும் அகன்றன ரோஇது 

  உரைவண் குருகே.  45 

 

 

குருகணி மணிமுன்கைக் 

  கொடியுநல் விறலவனும்

அருகணை குவரப்பால் 

  அரிதினி வழிமீண்மின்

தருகெழு முகில்வண்கைத் 

  தகுதமிழ் விரகன்தன்

கருகெழு பொழில்மாடக் 

  கழுமல வளநாடே.  46 

 

 

நாடே றும்புகழ் 

  ஞானசம் பந்தன்வண்

சேடே றுங்கொச்சை 

  நேர்வளஞ் செய்துனை

மாடே றுந்தையல் 

  வாட மலர்ந்தனை

கேடே றுங்கொடி 

  யாய்கொல்லை முல்லையே.  47 

 

 

 

முல்லை நகையுமைதன் 

  மன்னு திருவருளை

முந்தியுறுபெரிய 

  செந்தண் முனிவன்மிகு

நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி

நாதன் மறைமுதல்வன் 

  வேத மலையதனில்

வில்லை இலர்கணையும் 

  இல்லை பகழியுறு

வேழம் இரலைகலை 

  கேழல் வினவுறுவர்

சொல்லை யிலர்விரக 

  ரல்லர் தழைகொணர்வர்

தோழி இவரொருவர் 

  ஆவ அழிதர்வரே.  48 

 

 

வழிதரு பிறவியின்உறு

தொழில்அமர் துயர்கெடுமிகு

பொழிலணி தருபுகலிமன்

எழிலிணை அடிஇசைமினே.  49 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருநீலகண்ட நாயனார்
View Details
பூசலார் நாயனார்
View Details
திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details