பதினொன்றாம்-திருமுறை

038 ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

திருந்தியசீர்ச் செந்தா 

  மரைத்தடத்துச் சென்றோர்

இருந்தண் இளமேதி 

  பாயப் - பொருந்திய

 

புள்ளிரியப் பொங்கு 

  கயல்வெருவப் பூங்குவளைக்

கள்ளிரியச் செங்கழுநீர் 

  கால்சிதையத் - துள்ளிக்

 

குருகிரியக் கூன்இறவம் 

  பாயக் களிறு

முருகுவிரி பொய்கையின்கண் 

  மூழ்க -வெருவுற்ற

 

கோட்டகத்துப் பாய்வாளைக் 

  கண்டலவன் கூசிப்போய்த்

தோட்டகத்த செந்நெல் 

  துறையடையச் - சேட்டகத்த

 

காவி முகமலரக் 

  கார்நீலம் கண்படுப்ப

வாவிக்கண் நெய்தல் 

  அலமர - மேவிய.  1 

 

 

அன்னம் துயில்இழப்ப 

  அஞ்சிறைசேர் வண்டினங்கள்

துன்னும் துணைஇழப்பச் 

  சூழ்கிடங்கில் - மன்னிய

 

வள்ளை நகைகாட்ட 

  வண்குமுதம் வாய்காட்டத்

தெள்ளுபுனற் பங்கயங்கள் 

  தேன்காட்ட - மெள்ள

 

நிலவு மலரணையின் 

  நின்றிழிந்த சங்கம்

இலகுகதிர் நித்திலங்கள் 

  ஈன - உலவிய

 

மல்லைப் பழனத்து 

  வார்பிரசம் மீதழிய

ஒல்லை வரம்பிடறி 

  ஓடிப்போய்ப் - புல்லிய

 

பாசடைய செந்நெல் 

  படரொளியால் பல்கதிரோன்

தேசடைய ஓங்கு 

  செறுவுகளும் - மாசில்நீர்.  2 

 

 

நித்திலத்தின் சாயும் 

  நிகழ்மரக தத்தோலும்

தொத்தொளி செம்பொன் 

  தொழிற்பரிய - மொய்த்த

 

பவளத்தின் செவ்வியும் 

  பாங்கணைய ஓங்கித்

திவளக் கொடிமருங்கில் 

  சேர்த்தித் - துவளாமைப்

 

பட்டாடை கொண்டுடுத்துப் 

  பைந்தோ டிலங்குகுழை

இட்டமைந்த கண்ணார் 

  இளங்கமுகும் - விட்டொளிசேர்

 

கண்கள் அழல்சிதறிக் 

  காய்சினத்த வாய்மதத்துத்

தண்டலையின் நீழல் 

  தறியணைந்து - கொண்ட

 

கொலைபுரியா நீர்மையவாய்க் 

  கொம்புவளைத் தேந்தி

மலையு மரவடிவங் 

  கொண்டாங் - கிலைநெருங்கு.  3 

 

 

சூதத் திரளும் 

  தொகுகனிக ளால்நிவந்த

மேதகுசீர்த் தெங்கின் 

  வியன்பொழிலும் - போதுற்

 

றினமொருங்கு செவ்வியவாய் 

  இன்தேன் ததும்பு

கனிநெருங்கு திண்கதலிக் 

  காடும் - நனிவிளங்கு

 

நாற்றத்தால் எண்டிசையும் 

  வந்து நலஞ்சிறப்ப

ஊற்று மடுத்த 

  உயர்பலவும் -மாற்றமரும்

 

மஞ்சள் எழில்வளமும் 

  மாதுளையின் வார்பொழிலும்

இஞ்சி இளங்காவின் 

  ஈட்டமும் - எஞ்சாத

 

கூந்தற் கமுகும் 

  குளிர்பாட லத்தெழிலும்

வாய்ந்தசீர் சண்பகத்தின் 

  வண்காடும் - ஏந்தெழிலார்.  4 

 

 

மாதவியும் புன்னையும் 

  மண்ணும் மலர்க்குரவும்

கேதகையும் எங்கும் 

  கெழீஇஇப் - போதின்

 

இளந்தென்றல் வந்தசைப்ப 

  எண்டிசையும் வாசம்

வளந்துன்று வார்பொழிலின் 

  மாடே - கிளர்ந்தெங்கும்

 

ஆலை ஒலியும் 

  அரிவார் குரல்ஒலியும்

சோலைக் கிளிமிழற்றும் 

  சொல்லொலியும் - ஆலும்

 

அறுபதங்கள் ஆர்ப்பொலியும் 

  ஆன்றபொலி வெய்தி

உறுதிரைநீர் வேலை 

  ஒலிப்ப - வெறிகமழும்

 

நந்தா வனத்தியல்பும் 

  நற்றவத்தோர் சார்விடமும்

அந்தமில் சீரார் 

  அழகினால் - முந்திப்.  5 

 

 

புகழ்வாருந் தன்மையதாய்ப் 

  பூதலத்துள் ஓங்கி

நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப 

  நேரே - திகழ

 

முளைநிரைத்து மூரிச் 

  சிறைவகுத்து மொய்த்த

புளகத்தின் பாம்புரிசூழ் 

  போகி - வளர

 

இரும்பதணஞ் சேர 

  இருத்திஎழில் நாஞ்சில்

மருங்கனைய அட்டாலை 

  யிட்டுப் - பொருந்தியசீர்த்

 

தோமரமும் தொல்லைப் 

  பொறிவீசி யந்திரமும்

காமரமும் ஏப்புழையும் 

  கைகலந்து - மீமருவும்

 

வெங்கதிரோன் தேர்விலங்க 

  மிக்குயர்ந்த மேருப்போன்

றங்கனகத் திஞ்சி 

  அணிபெற்றுப் - பொங்கொளிசேர்.  6 

 

 

மாளிகையும் மன்னியசீர் 

  மண்டபமும் ஒண்தலத்த

சூளிகையும் துற்றெழுந்த 

  தெற்றிகளும் - வாளொளிய

 

நாடக சாலையும் 

  நன்பொற் கபோதஞ்சேர்

பீடமைத்த மாடத்தின் 

  பெற்றியும் - கேடில்

 

உருவு பெறவகுத்த 

  அம்பலமும் ஓங்கு

தெருவும் வகுத்தசெய் 

  குன்றும் -மருவினிய

 

சித்திரக் காவும் 

  செழும்பொழிலும் வாவிகளும்

நித்திலஞ்சேர் நீடு 

  நிலைக்களமும் - எத்திசையும்

 

துன்னி எழில்சிறப்பச் 

  சோதி மலர்மடந்தை

மன்னி மகிழ்ந்துறையும் 

  வாய்மைத்தாய்ப் - பொன்னும்.  7 

 

 

மரகதமும் நித்திலமும் 

  மாமணியும் பேணி

இரவலர்கட் கெப்போதும் 

  ஈந்தும் - கரவாது

 

கற்பகமும் காருமெனக் 

  கற்றவர்க்கும் நற்றவர்க்கும்

தப்பாக் கொடைவளர்க்குஞ் 

  சாயாத - செப்பத்தால்

 

பொய்ம்மை கடிந்து 

  புகழ்பரிந்து பூதலத்து

மெய்ம்மை தலைசிறந்து 

  மேதக்கும் - உண்மை

 

மறைபயில்வார் மன்னு 

  வியாகரணக் கேள்வித்

துறைபயில்வார் தொன்னூல் 

  பயில்வார் - முறைமையால்

 

ஆகமங்கள் கேட்பார் 

  அருங்கலைநூல் ஆதரித்துப்

போகம் ஒடுங்காப் 

  பொருள்துய்ப்பார் - சோகமின்றி.  8 

 

 

நீதி நிலைஉணர்வார் 

  நீள்நிலத்துள் ஐம்புலனும்

காதல் விடுதவங்கள் 

  காமுறுவார் - ஆதி

 

அருங்கலைநூல் ஓதுவார் 

  ஆதரித்து வென்றிக்

கருங்கலிநீங் கக்கனல்வ 

  குப்பார் - ஒருங்கிருந்து

 

காமநூல் கேட்பார் 

  கலைஞானம் காதலிப்பார்

ஓமநூல் ஓதுவார் 

  உத்தரிப்பார் - பூமன்னும்

 

நான்முகனே அன்னசீர் 

  நானூற் றுவர்மறையோர்

தாம்மன்னி வாழும் 

  தகைமைத்தாய் - நாமன்னும்

 

ஆரணங்கும் மற்றை 

  அருந்ததியும் போல்மடவார்

ஏரணங்கு மாடத் 

  தினிதிருந்து - சீரணங்கு.  9 

 

 

வீணை பயிற்றுவார் 

  யாழ்பயில்வார் மேவியசீர்ப்

பாணம் பயில்வார் 

  பயன்உறுவார் - பேணியசீர்ப்

 

பூவைக்குப் பாட்டுரைப்பார் 

  பொற்கிளிக்குச் சொற்பயில்வார்

பாவைக்குப் பொன்புனைந்து 

  பண்புறுவார் - ஆய்எங்கும்

 

மங்கையர்கள் கூட்டமும் 

  மன்னு சிறார்குழுவும்

பொங்குலகம் எல்லாம் 

  பொலிவடையத் - தங்கிய

 

வேத ஒலியும் 

  விழாவொலியும் மெல்லியலார்

கீத ஒலியும் 

  கிளர்ந்தோங்கும் - மாதரார்

 

பாவை ஒலியும் 

  பறைஒலியும் பல்சனங்கள்

மேவும் ஒலியும் 

  வியன்நகரம் - காவலர்கள்.  10 

 

 

பம்பைத் துடிஒலியும் 

  பெளவப் படைஒலியும்

கம்பக் களிற்றொலியும் 

  கைகலந்து - நம்பிய

 

கார்முழக்கும் மற்றைக் 

  கடல்முழக்கும் போற்கலந்த

சீர்முழக்கம் எங்கும் 

  செவிடுபடப் - பார்விளங்கு

 

செல்வம் நிறைந்தஊர் 

  சீரில் திகழ்ந்தஊர்

மல்கு மலர்மடந்தை 

  மன்னும்ஊர் - சொல்லினிய

 

ஞாலத்து மிக்கஊர் 

  நானூற் றுவர்கள்ஊர்

வேலொத்த கண்ணார் 

  விளங்கும்ஊர் - ஆலித்து

 

மன்னிருகால் வேலை 

  வளர்வெள்ளத் தும்பரொடும்

பன்னிருகால் நீரில் 

  மிதந்தவூர் - மன்னும்.  11 

 

 

பிரமனூர் வேணுபுரம் 

  பேரொலிநீர் சண்பை

அரன்மன்னு தண்காழி 

  அம்பொற் - சிரபுரம்

 

பூந்தராய்க் கொச்சைவயம் 

  வெங்குருப் பொங்குபுனல்

வாய்ந்தநல் தோணி 

  புரம்மறையோர் - ஏய்ந்த

 

புகலி கழுமலம் 

  பூம்புறவம் என்றிப்

பகர்கின்ற பண்புற்ற 

  தாகித் - திகழ்கின்ற

 

மல்லைச் செழுநகரம் 

  மன்னவும் வல்லமணர்

ஒல்லைக் கழுவில் 

  உலக்கவும் - எல்லையிலா

 

மாதவத்தோர் வாழவும் 

  வையகத்தோர் உய்யவும்

மேதக்க வானோர் 

  வியப்பவும் - ஆதியாம்.  12 

 

 

வென்றிக் கலிகெடவும் 

  வேதத் தொலிமிகவும்

ஒன்றிச் சிவனடியார் 

  ஓங்கவும் - துன்றிய

 

பன்னு தமிழ்ப்பதினா 

  றாயிர நற்பனுவல்

மன்னு புவியவர்க்கு 

  வாய்ப்பவும் - முன்னிய

 

சிந்தனையாற் சீரார் 

  கவுணியர்க்கோர் சேயென்ன

வந்தங் கவதரித்த 

  வள்ளலை - அந்தமில்சீர்

 

ஞானச் சுடர்விளக்கை 

  நற்றவத்தோர் கற்பகத்தை

மான மறையவற்றின் 

  வான்பொருளை - ஆனசீர்த்

 

தத்துவனை நித்தனைச் 

  சைவத் தவர்அரசை

வித்தகத்தால் ஓங்கு 

  விடலையை - முத்தமிழின்.  13 

 

 

செஞ்சொற் பொருள்பயந்த 

  சிங்கத்தைத் தெவ்வர்உயிர்

அஞ்சத் திகழ்ந்த 

  அடல்உருமை - எஞ்சாமை

 

ஆதிச் சிவனருளால் 

  அம்பொன்செய் வட்டிலில்

கோதில் அமிர்தநுகர் 

  குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்

 

காலத் தொகுதியும் 

  நான்மறையின் காரணமும்

மூலப் பொருளும் 

  முழுதுணர்ந்த - சீலத்

 

திருஞான சம்பந்தன் 

  என்றுலகம் சேர்ந்த

ஒருநாமத் தால் உயர்ந்த 

  கோவை - வருபெருநீர்ப்

 

பொன்னிவள நாடனைப் 

  பூம்புகலி நாயகனை

மன்னர் தொழுதிறைஞ்சும் 

  மாமணியை - முன்னே.  14 

 

 

நிலவு முருகர்க்கும் 

  நீலநக் கற்கும்

தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் 

  டற்கும் - குலவிய

 

தோழமையாய்த் தொல்லைப் 

  பிறப்பறுத்த சுந்தரனை

மாழையொண்கண் மாதர் 

  மதனனைச் - சூழொளிய

 

கோதைவேல் தென்னன்தன் 

  கூடல் குலநகரில்

வாதில் அமணர் 

  வலிதொலையக் - காதலால்

 

புண்கெழுவு செம்புனலா 

  றோடப் பொருதவரை

வண்கழுவில் தைத்த 

  மறையோனை - ஒண்கெழுவு

 

ஞாலத் தினர்அறிய 

  மன்னுநனி பள்ளியது

பாலை தனைநெய்தல் 

  ஆக்கியும் - காலத்து.  15 

 

 

நீரெதிர்ந்து சென்று 

  நெருப்பிற் குளிர்படைத்தும்

பாரெதிர்ந்த பல்விடங்கள் 

  தீர்த்துமுன் - நேரெழுந்த

 

யாழை முரித்தும் 

  இருங்கதவம் தான்அடைத்தும்

சூழ்புனலில் ஓடத் 

  தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்

 

கொங்கிற் பனிநோய் 

  பரிசனத்தைத் தீர்ப்பித்தும்

துங்கப் புரிசை 

  தொகுமிழலை - அங்கதனில்

 

நித்தன் செழுங்காசு 

  கொண்டுநிகழ் நெல்வாயில்

முத்தின் சிவிகை 

  முதற்கொண்டும் - அத்தகுசீர்

 

மாயிரு ஞாலத்து 

  மன்னா வடுதுறைபுக்

காயிரஞ் செம்பொன் 

  அதுகொண்டும் - மாய்வரிய.  16 

 

 

மாண்புதிகழ் எம்பெருமான் 

  மன்னுதிரு வோத்தூரில்

ஆண்பனைகள் பெண்பனைகள் 

  ஆக்கியும் - பாண்பரிசில்

 

கைப்பாணி ஒத்திக்கா 

  ழிக்கோலக் காவிற்பொற்

சப்பாணி கொண்டு 

  தராதலத்துள் - எப்பொழுதும்

 

நீக்கரிய இன்பத் 

  திராகம்இருக் குக்குறள்

நோக்கரிய பாசுரம்பல் 

  பத்தோடும் - ஆக்கரிய

 

யாழ்முரி சக்கரமாற் 

  றீரடி முக்காலும்

பாழிமையால் பாரகத்தோர் 

  தாம்உய்ய - ஊழி

 

உரைப்பமரும் பல்புகழால் 

  ஓங்கஉமை கோனைத்

திருப்பதிகம் பாடவல்ல 

  சேயை – விருப்போடு.  17 

 

 

நண்ணு புகழ்மறையோர் 

  நாற்பத்தெண் ணாயிரவர்

எண்ணில் முனிவரர் 

  ஈட்டத்துப் - பண்ணமரும்

 

ஓலக்கத் துள்ளிருப்ப 

  ஒண்கோயில் வாயிலின்கண்

கோலக் கடைகுறுகிக் 

  கும்பிட்டாங் - காலும்

 

புகலி வளநகருள் 

  பூசுரர் புக்காங்

கிகலில் புகழ்பரவி 

  யேத்திப் - புகலிசேர்

 

வீதி எழுந்தருள 

  வேண்டுமென விண்ணப்பம்

ஆதரத்தாற் செய்ய 

  அவர்க்கருளி - நீதியால்

 

கேதகையும் சண்பகமும் 

  நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த

மாதவியின் போதை 

  மருங்கணைத்துக் - கோதில்.  18 

 

 

இருவேலி தன்னை 

  இடையிருத்தி ஈண்டு

மருவோடு மல்லிகையை 

  வைத்தாங் - கருகே

 

கருமுகையைக் கைகலக்க 

  வைத்துக் கழுநீர்ப்

பெருகு பிளவிடையே 

  பெய்து - முருகியலும்

 

புன்னாகந் தன்னைப் 

  புணர இருவாச்சி

தன்அயலே முல்லை 

  தலையெடுப்ப - மன்னிய

 

வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப 

  மெளவல் அலர்படைப்பத்

தண்குருந்தம் மாடே 

  தலையிறக்க - ஒண்கமலத்

 

தாதடுத்த கண்ணியால் 

  தண்ணறுங் குஞ்சிமேற்

போதடுத்த கோலம் 

  புனைவித்துக் - காதிற்.  19 

 

 

கனவயிர குண்டலங்கள் 

  சேர்த்திக் கழுத்தின்

இனமணியின் ஆரம் 

  இலகப் - புனைகனகத்

 

தொத்தடுத்த பூஞ்சுரிகைச் 

  சோதிசேர் தாளிம்பம்

வைத்து மணிக்கண் 

  டிகைபூண்டு - முத்தடுத்த

 

கேயூரம் தோள்மேற் 

  கிடத்திக் கிளர்பொன்னின்

வாய்மை பெறுநூல் 

  வலந்திகழ - வேயும்

 

தமனியத்தின் தாழ்வடமும் 

  தண்டரளக் கோப்பும்

சிமைய வரைமார்பிற் 

  சேர்த்தி - அமைவுற்ற

 

வெண்ணீற்றின் ஒண்களபம் 

  மட்டித்து மேவுதொழில்

ஒண்ணூற் கலிங்கம் 

  உடல்புனைந்து - திண்ணோக்கிற்.  20 

 

 

காற்றுருமோ குன்றோ 

  கடலோ அடல்உருமோ

கூற்றுருவோ என்னக் 

  கொதித்தெழுந்து - சீற்றத்

 

தழல்விழித்து நின்றெதிர்ந்து 

  தாலவட்டம் வீசிப்

புழைத்தடக்கை கொண்டெறிந்து 

  பொங்கி - மழை மதத்தாற்

 

பூத்த கடதடத்துக் 

  போகம் மிகப்பொலிந்த

காத்திரத்த தாகிக் 

  கலித்தெங்கும் - கோத்த

 

கொடுநிகளம் போக்கிநிமிர் 

  கொண்டெழுந்து கோபித்

திடுவண்டை யிட்டுக் 

  கலித்து - முடுகி

 

நெடுநிலத்தைத் தான்உழக்கி 

  நின்று நிகர்நீத்

திடிபெயரத் தாளந் 

  திலுப்பி - அடுசினத்தால்.  21 

 

 

கன்ற முகம்பருகிக் 

  கையெடுத் தாராய்ந்து

வென்றி மருப்புருவ 

  வெய்துயிர்த் - தொன்றிய

 

கூடம் அரணழித்துக் 

  கோபுரங்க ளைக்குத்தி

நீடு பொழிலை 

  நிகரழித் - தோடிப்

 

பணப்பா கரைப்பரிந்து 

  குத்திப் பறித்த

நிணப்பாகை நீள்விசும்பின் 

  வீசி - அணைப்பரிய

 

ஓடைக் கருங்களிற்றை 

  ஒண்பரிக்கா ரர்கள்தாம்

மாடணையக் கொண்டு 

  வருதலுமே - கூடி

 

நயந்து குரற்கொடுத்து 

  நட்பளித்துச் சென்று

வியந்தணுகி வேட்டம் 

  தணிந்தாங் - குயர்ந்த.  22 

 

 

உடற்றூய வாசிதனைப் 

  பற்றிமேல் கொண்டாங்

கடற்கூடற் சந்தி 

  யணுகி - அடுத்த

 

பயில்பலவும் பேசிப் 

  படுபுரசை நீக்கி

அயர்வு கெடஅணைத்துத் 

  தட்டி - உயர்வுதரு

 

தண்டுபே ரோசையின்கண் 

  தாள்கோத்துச் சீர்ச்சிறுத்

தொண்டர் பிறகணையத் 

  தோன்றுதலும் - எண்டிசையும்

 

பல்சனமும் மாவும் 

  படையும் புடைகிளர

ஒல்லொலியால் ஓங்கு 

  கடல்கிளர - மல்லல்

 

பரித்தூரங் கொட்டப் 

  படுபணிலம் ஆர்ப்பக்

கருத்தோ டிசைகவிஞர் 

  பாட - விரித்த.  23 

 

 

குடைபலவும் சாமரையும் 

  தொங்கல்களும் கூடிப்

புடைபரந்து பொக்கம் 

  படைப்பக் - கடைபடு

 

வீதி அணுகுதலும் 

  வெள்வளையார் உள்மகிழ்ந்து

காதல் பெருகிக் 

  கலந்தெங்கும் - சோதிசேர்

 

ஆடரங்கின் மேலும் 

  அணிமா ளிகைகளிலும்

சேடரங்கும் நீள்மறுகும் 

  தெற்றியிலும் - பீடுடைய

 

பேரிளம் பெண் ஈறாகப் 

  பேதை முதலாக

வாரிளங் கொங்கை 

  மடநல்லார் - சீர்விளங்கப்

 

பேணும் சிலம்பும் 

  பிறங்கொளிசேர் ஆரமும்

பூணும் புலம்பப் 

  புறப்பட்டுச் - சேண்மறுகில்.  24 

 

 

காண்டகைய வென்றிக் 

  கருவரைமேல் வெண்மதிபோல்

ஈண்டு குடையின் எழில் 

  நிழற்கீழ்க் -காண்டலுமே

 

கைதொழுவார் நின்று 

  கலைசரிவார் மால்கொண்டு

மெய்தளர்வார் வெள்வளைகள் 

  போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்

 

பூம்பயலை கொள்வார் 

  புணர்முலைகள் பொன்பயப்பார்

காம்பனைய மென்தோள் 

  கவின்கழிவார் - தாம்பயந்து

 

வென்றிவேற் சேயென்ன 

  வேனில்வேட் கோவென்ன

அன்றென்ன ஆமென்ன 

  ஐயுற்றுச் - சென்றணுகிக்

 

காழிக் குலமதலை 

  என்றுதங் கைசோர்ந்து

வாழி வளைசரிய 

  நின்றயர்வார் - பாழிமையால்.  25 

 

 

உள்ளம் நிலைதளர்ந்த 

  ஒண்ணுதலார் வெல்களிற்றை

மெள்ள நடவென்று 

  வேண்டுவார் - கள்ளலங்கல்

 

தாராமை அன்றியும் தையல்நல் 

  லார் முகத்தைப்

பாராமை சாலப் பயன் 

  என்பார் - நேராக

 

என்னையே நோக்கினான் 

  ஏந்திழையீர் இப்பொழுது

நன்மை நமக்குண் 

  டெனநயப்பார் - கைம்மையால்

 

ஒண்கலையும் நாணும் 

  உடைதுகிலும் தோற்றவர்கள்

வண்கமலத் தார்வலிந்து 

  கோடுமெனப் - பண்பின்

 

வடிக்கண் மலர்வாளி 

  வார்புருவ வில்மேல்

தொடுத்ததரந் தொண்டை 

  துடிப்பப் - பொடித்தமுலைக்.  26 

 

 

காசைக் கருங்குழலார் 

  காதற் கவுணியன்பால்

பூசற் கமைந்து 

  புறப்படுவார் - வாசச்

 

செழுமலர்த்தார் இன்றெனக்கு 

  நல்காதே சீரார்

கழுமலர்த்தார் கோவே 

  கழல்கள் - தொழுவார்கள்

 

அங்கோல் வளையிழக்கப் 

  போவது நின்னுடைய

செங்கோன்மை யோவென்று 

  செப்புவார்-நங்கைமீர்

 

இன்றிவன் நல்குமேல் 

  எண்பெருங் குன்றத்தில்

அன்றமணர் கூட்டத்தை 

  ஆசழித்துப் - பொன்ற

 

உரைகெழுவு செந்தமிழ்ப்பா 

  ஒன்றினால் வென்றி

நிரைகழுமேல் உய்த்தானை 

  நேர்ந்து - விரைமலர்த்தார்.  27 

 

 

பெற்றிடலாம் என்றிருந்த 

  நம்மிலும் பேதையர்கள்

மற்றுளரோ என்று 

  வகுத்துரைப்பார் - மற்றிவனே

 

பெண்ணிரக்கம் அன்றே 

  பிறைநுதலீர் மாசுணத்தின்

நண்ணு கடுவிடத்தால் 

  நாட்சென்று - விண்ணுற்ற

 

ஆருயிரை மீட்டன் 

  றவளை அணிமருகல்

ஊரறிய வைத்த 

  தெனஉரைப்பார் - பேரிடரால்

 

ஏசுவார் தாம்உற்ற 

  ஏசறவைத் தோழியர்முன்

பேசுவார் நின்றுதம் 

  பீடழிவார் - ஆசையால்

 

நைவார் நலன்அழிவார் 

  நாணோடு பூண்இழப்பார்

மெய்வாடு வார்வெகுள்வார் 

  வெய்துயிர்ப்பார் - தையலார்

 

பூந்துகிலைப் பூமாலை 

  என்றணிவார் பூவினைமுன்

சாந்தம் எனமெய்யில் 

  தைவருவார் - வாய்ந்த

 

கிளியென்று பாவைக்குச் 

  சொற்பயில்வார் பந்தை

ஒளிமே கலையென் 

  றுடுப்பார் -அளிமேவு

 

பூங்குழலார் மையலாய்க் 

  கைதொழமுன் போதந்தான்

ஓங்கொலிசேர் வீதி யுலா.  28 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ வல்லப சித்தர் (சுந்தரானந்ததேவர்)
View Details
பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details
அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details