பதினொன்றாம்-திருமுறை

035 ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பார்மண் டலத்தினில் பன்னிரு 

  பேரொடு மன்னிநின்ற

நீர்மண் டலப்படப் பைப்பிர 

  மாபுரம் நீறணிந்த

கார்மண் டலக்கண்டத் தெண்தடந் 

  தோளன் கருணைபெற்ற

தார்மண் டலமணி சம்பந்தன் 

  மேவிய தண்பதியே.  1 

 

 

பதிகப் பெருவழி காட்டப் 

  பருப்பதக் கோன்பயந்த

மதியத் திருநுதல் பங்கன் 

  அருள்பெற வைத்தஎங்கள்

நிதியைப் பிரமா புரநகர் 

  மன்னனை என்னுடைய

கதியைக் கருதவல் லோர்அம 

  ராவதி காப்பவரே.  2 

 

 

காப்பயில் காழிக் கவுணியர்  

  தீபற்கென் காரணமா

மாப்பழி வாரா வகைஇருப் 

  பேன்என்ன மாரன்என்னே

பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் 

  நெஞ்சரங் கப்புகுந்த

ஏப்பயில் வார்சிலை கால்வளை 

  யாநிற்கும் ஈண்டிரவே.  3 

 

 

இரவும் பகலும்நின் பாதத் 

  தலர்என் வழிமுழுதும்

பரவும் பரிசே அருளுகண் 

  டாய்இந்தப் பாரகத்தே

விரவும் பரமத கோளரி 

  யேகுட வெள்வளைகள்

தரளம் சொரியும் கடல்புடை 

  சூழ்ந்த தராய்மன்னனே.  4 

 

 

மன்னிய மோகச் சுவைஒளி 

  ஊறோசை நாற்றமென்றிப்

பன்னிய ஐந்தின் பதங்கடந் 

  தோர்க்குந் தொடர்வரிய

பொன்னியல் பாடகக் கிங்கிணிப் 

  பாதநிழல் புகுவோர்

துன்னிய காவமர் சண்பையர் 

  நாதற்குத் தொண்டர்களே.  5 

 

 

தொண்டினஞ் சூழச் சுரிகுழ 

  லார்தம் மனந்தொடர

வண்டினம் சூழ வருமிவன் 

  போலும் மயில்உகுத்த

கண்டினம் சூழ்ந்த வளைபிரம் 

  போர்கழு வாஉடலம்

விண்டினம் சூழக் கழுவின 

  ஆக்கிய வித்தகனே.  6 

 

 

வித்தகம் பேசிநம் வேணுத் 

  தலைவனை வாள்நிகர்த்து

முத்தகங் காட்டு முறுவல்நல் 

  லார்தம் மனம்அணைய

உய்த்தகம் போந்திருந் துள்ளவும் 

  இல்லா தனவுமுறு

புத்தகம் போலும் முதுபுலைப் 

  பாணன் புணர்க்கின்றதே.  7 

 

 

புணர்ந்தநன் மேகச் சிறுநுண் 

  துளியிற் சிறகொதுக்கி

உணர்ந்தனர் போல இருந்தனை 

  யால்உல கம்பரசும்

குணந்திகழ் ஞானசம் பந்தன் 

  கொடிமதிற் கொச்சையின்வாய்

மணந்தவர் போயின ரோசொல்லு 

  வாழி| மடக்குருகே.  8 

 

 

குருந்தலர் முல்லையங் கோவலர் 

  ஏற்றின் கொலைமருப்பால்

அருந்திறல் ஆகத் துழுதசெஞ் 

  சேற்றரு காசனிதன்

பெருந்திற மாமதிற் சண்பை 

  நகரன்ன பேரமைத்தோள்

திருந்திழை ஆர்வம் ............ 

  .............. முரசே.  9 

 

 

முரசங் கரையமுன் தோரணம் 

  நீட முழுநிதியின்

பரிசங் கொணர்வான் அமைகின் 

  றனர்பலர் பார்த்தினிநீ

அரிசங் கணைதலென் னாமுன் 

  கருதரு காசனிதன்

சுரிசங் கணைவயல் தந்த 

  நகரன்ன தூமொழிக்கே.  10 

 

 

மொழிவது சைவ சிகாமணி 

  மூரித் தடவரைத்தோள்

தொழுவது மற்றவன் தூமலர்ப் 

  பாதங்கள் தாமங்கமழ்ந்

தெழுவது கூந்தலம் பூந்தா 

  மரைஇனி யாதுகொலோ

மொழிவது சேரி முரிப்புதை 

  மாதர் முறுவலித்தே.  11 

 

 

வலிகெழு குண்டர்க்கு வைகைக் 

  கரைஅன்று வான்கொடுத்த

கலிகெழு திண்தோள் கவுணியர் 

  தீபன் கடல்உடுத்த

ஒலிதரு நீர்வைய கத்தை 

  உறையிட்ட தொத்துதிரு

மலிதரு வார்பனி யாம்மட 

  மாதினை வாட்டுவதே.  12 

 

 

வாட்டுவர் தத்தம் துயரைவன் 

  கேழலின் பின்புசென்ற

வேட்டுவர் கோலத்து வேதத் 

  தலைவனை மெல்விரலால்

தோட்டியல் காதன் இவனென்று 

  தாதைக்குச் சூழ்விசும்பிற்

காட்டிய கன்றின் கழற்றிற 

  மானவை கற்றவரே.  13 

 

 

அவர்சென் றணுகுவர் மீள்வதிங் 

  கன்னை அருகர்தம்மைத்

தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ 

  சிகாமணி சண்பைஎன்னப்

பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் 

  பல்கதி ரோன்பரியைக்

கவர்கின்ற சூலத் தொடுநின்று 

  தோன்றும் கடிநகரே.  14 

 

 

நகரம் கெடப்பண்டு திண்தேர் 

  மிசைநின்று நான்மறைகள்

பகர்அம் கழலவ னைப்பதி 

  னாறா யிரம்பதிகம்

மகரம் கிளர்கடல் வையந் 

  துயர்கெட வாய்மொழிந்த

நிகரங் கிலிகலிக் காழிப் 

  பிரான்என்பர் நீள்நிலத்தே.  15 

 

 

நிலமே றியமருப் பின்திரு 

  மாலும் நிலம்படைத்த

குலமே றியமலர்க் கோகன 

  தத்தய னுங்கொழிக்கும்

சலமே றியமுடி தாள்கண் 

  டிலர்தந்தை காணஅன்று

நலமே றியபுகழ்ச் சம்பந்தன் 

  காட்டிய நாதனையே.  16 

 

 

நாதன் நனிபள்ளி சூழ்நகர் 

  கானக மாக்கியஃதே

போதின் மலிவய லாக்கிய 

  கோன்அமர் பொற்புகலி

ஓத நெடுங்கடல் வாருங் 

  கயலோ விலைக்குளது

காதின் அளவும் மிளிர்கய 

  லோசொல்லு காரிகையே.  17 

 

 

கைம்மையி னால்நின் கழல்பர 

  வாதுகண் டார்க்கிவனோர்

வன்மைய னேஎன்னும் வண்ணம் 

  நடித்து விழுப்பொருளோ

டிம்மையில் யான்எய்தும் இன்பம் 

  கருதித் திரிதருமத்

தன்மையி னேற்கும் அருளுதி 

  யோசொல்லு சம்பந்தனே.  18 

 

 

பந்தார் அணிவிரல் பங்கயக் 

  கொங்கைப் பவளச்செவ்வாய்க்

கொந்தார் நறுங்குழல் கோமள 

  வல்லியைக் கூறருஞ்சீர்

நந்தா விளக்கினைக் கண்டது 

  நானெப் பொழுதும்முன்னும்

சந்தா ரகலத் தருகா 

  சனிதன் தடவரையே.  19 

 

 

வரைகொண்ட மாமதில் சண்பைத் 

  தலைவனை வாழ்த்தலர்போல்

நிரைகொண்டு வானோர் கடைந்ததில் 

  நஞ்ச நிகழக்கொலாம்

நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் 

  சுழலநொந்தோர் இரவும்

திரைகொண் டலமரும் இவ்வகன் 

  ஞாலம் செறிகடலே.  20 

 

 

கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் 

  வெய்ய கடுநரகத்

திடநமன் ஏவுதற் கெவ்விடத் 

  தான்இருஞ் செந்தமிழால்

திடமன்னு மாமதில் சண்பைத் 

  தலைவன் செந் தாமரையின்

வடமன்னு நீண்முடி யான்அடிப் 

  போதவை வாழ்த்தினமே.  21 

 

 

வாழ்த்துவ தெம்பர மேயாகும் 

  அந்தத்து வையமுந்நீர்

ஆழ்த்திய காலத்தும் ஆழா 

  ததுஅரன் சேவடியே

ஏத்திய ஞானசம் பந்தற் 

  கிடம்இசைத் தும்பிகொம்பர்க்

காத்திகழ் கேதகம் போதகம் 

  ஈனும் கழுமலமே.  22 

 

 

மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி 

  நீண்முடி வண்கமலப்

பலர்பயில் கீர்த்திக் கவுணியர் 

  தீபன் பகைவர்என்னத்

தலைபயில் பூம்புனங் கொய்திடு 

  மேகணி யார்புலம்ப

அலர்பயி லாமுன் பறித்தன 

  மாகில் அரும்பினையே.  23 

 

 

அரும்பின அன்பில்லை அர்ச்சனை 

  இல்லை அரன்நெறியே

விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி 

  செய்கிலம் பொய்க்கமைந்த

இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங 

  னேவந்து நேர்பட்டதால்

கரும்பன நீள்வயல் சூழ்காழி 

  நாதன் கழலடியே.  24 

 

 

அடியால் அலர்மிதித் தாலரத் 

  தம்பிற் கமிர்தமின்றிக்

கொடியா னொடும்பின் 

  நடந்ததெவ்வா றலர்கோகனதக்

கடியார் நறுங்கண்ணி ஞானசம் 

  பந்தன் கருதலர்சேர்

வெடியா விடுவெம் பரற்சுறு 

  நாறு வியன்சுரத்தே.  25 

 

 

சுரபுரத் தார்தந் துயருக் 

  கிரங்கிச் சுரர்கள்தங்கள்

பரபுரத் தார்தந் துயர்கண் 

  டருளும் பரமன்மன்னும்

அரபுரத் தான்அடி எய்துவன் 

  என்ப தவனடிசேர்

சிரபுரத் தான்அடி யார்அடி 

  யேன்என்னும் திண்ணனவே.  26 

 

 

திண்ணன வார்சென்ற நாட்டிடை 

  இல்லைகொல் தீந்தமிழோர்

கண்ணென ஓங்கும் கவுணியர் 

  தீபன்கை போல்பொழிந்து

விண்ணின வாய்முல்லை மெல்லரும் 

  பீனமற் றியாம்மெலிய

எண்ணின நாள்வழு வாதிறைத் 

  தோடி எழுமுகிலே.  27 

 

 

எழுவாள் மதியால் வெதுப்புண் 

  டலமந் தெழுந்துவிம்மித்

தொழுவாள் தனக்கின் றருளுங் 

  கொலாந்தொழு நீரவைகைக்

குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் 

  பறிதலைக் குண்டர்தங்கள்

கழுவா உடலம் கழுவின 

  ஆக்கிய கற்பகமே.  28 

 

 

கற்பா நறவ மணிகொழுத் 

  துந்து மலைச்சிலம்பா

நற்பா மொழிஎழில் ஞானசம் 

  பந்தன் புறவமன்ன

விற்பா நுதலிதன் மென்முலை 

  யின்னிளம் செவ்விகண்டிட்

டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் 

  றாள்அம்ம எம்அனையே.  29 

 

 

எம்அனை யாய்எந்தை யாய்என்னை 

  ஆண்டென் துயர்தவிர்த்த

செம்மலர் நீள்முடி ஞானசம் 

  பந்தன் புறவமன்னீர்

வெம்முனை வேல்என்ன என்ன 

  மிளிர்ந்து வெளுத்தரிபோன்

றும்மன வோஅல்ல வோவந்தென் 

  உள்ளத்தொளிர்வனவே.  30 

 

 

ஒளிறு மணிப்பணி நாட்டும் 

  உலகத்தும் உம்பருள்ளும்

வெளிறு படச்சில நிற்பதுண் 

  டேமிண்டி மீன்உகளும்

அளறு வயற்சண்பை நாதன் 

  அமுதப் பதிகமென்னும்

களிறு விடப்புகு மேல்தொண்டர் 

  பாடும் கவிதைகளே.  31 

 

 

கவிக்குத் தகுவன கண்ணுக் 

  கினியன கேட்கில்இன்பம்

செவிக்குத் தகுவன சிந்தைக் 

  குரியன பைந்தரளம்

நவிக்கண் சிறுமியர் முற்றில் 

  முகந்துதம் சிற்றில்தொறும்

குவிக்கத் திரைபரக் குங்கொச்சை 

  நாதன் குரைகழலே.  32 

 

 

கழல்கின்ற ஐங்கணை அந்தியும் 

  அன்றிலும் கால்பரப்பிட்

டழல்கின்ற தென்றலும் வந்திங் 

  கடர்ப்பஅன் றாயிழைக்காச்

சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் 

  தன்னைத் தொடர்ந்துபின்போய்

உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ 

  இனியின் றுறுகின்றதே.  33 

 

 

உறுகின்ற அன்பினோ டொத்திய 

  தாளமும் உள்ளுருகிப்

பெறுகின்ற இன்பும் பிறைநுதல் 

  முண்டமும் கண்டவரைத்

தெறுகின்ற வாறென்ன செய்தவ 

  மோவந்தென் சிந்தையுள்ளே

துறுகின்ற பாதன் கழுமலம் 

  போலும் துடியிடைக்கே.  34 

 

 

இடையும் எழுதா தொழியலு 

  மாம்இன வண்டுகளின்

புடையும் எழுதிலும் பூங்குழல் 

  ஒக்கும்அப் பொன்னனையாள்

நடையும் நகையும் தமிழா 

  கரன்தன் புகலிநற்றேன்

அடையும் மொழியும் எழுதிடில் 

  சால அதிசயமே.  35 

 

 

மேனாட் டமரர் தொழஇருப் 

  பாரும் வினைப்பயன்கள்

தானாட் டருநர கிற்றளர் 

  வாரும் தமிழர்தங்கள்

கோனாட் டருகர் குழாம்வென்ற 

  கொச்சையர் கோன்கமலப்

பூநாட் டடிபணிந் தாரும்அல் 

  லாத புலையருமே.  36 

 

 

புலையடித் தொண்டனைப் பூசுர 

  னாக்கிப் பொருகயற்கண்

மலைமடப் பாவைக்கு மாநட 

  மாடு மணியைஎன்றன்

தலையிடைப் பாதனைக் கற்றாங் 

  குரைத்தசம் பந்தனென்னா

முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் 

  தாள்என்றன் மொய்குழலே.  37 

 

 

குழலியல் இன்கவி ஞானசம் 

  பந்தன் குரைகழல்போல்

கழலியல் பாதம் பணிந்தேன் 

  உனையும் கதிரவனே

தழலியல் வெம்மை தணித்தருள் 

  நீதணி யாதவெம்மை

அழலியல் கான்நடந் தாள்வினை 

  யேன்பெற்ற ஆரணங்கே.  38 

 

 

அணங்கமர் யாழ்முரித் தாண்பனை 

  பெண்பனை ஆக்கிஅமண்

கணங்கழு வேற்றிக் கடுவிடந் 

  தீர்த்துக் கதவடைத்துப்

பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் 

  செலுத்தின வெண்பிறையோ

டிணங்கிய மாடச் சிரபுரத் 

  தான்தன் இருந்தமிழே.  39 

 

 

இருந்தண் புகலிகோ லக்கா 

  எழில்ஆ வடுதுறைசீர்

பொருந்தும் அரத்துறை போனகம் 

  தாளம்நன்பொன்சிவிகை

அருந்திட வொத்தமுத் தீச்செய 

  ஏறஅரன் அளித்த

பெருந்தகை சீரினை எம்பர 

  மோநின்று பேசுவதே.  40 

 

 

பேசுந் தகையதன் றேஇன்றும் 

  அன்றும் தமிழ்விரகன்

தேசம் முழுதும் மழைமறந் 

  தூண்கெடச் செந்தழற்கை

ஈசன் திருவரு ளால்எழில் 

  வீழி மிழலையின்வாய்க்

காசின் மழைபொழிந் தானென்றிஞ் 

  ஞாலம் கவின்பெறவே.  41 

 

 

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் 

  சேபிர மாபுரத்து

மறுவறு பொற்கழல் ஞானசம் 

  பந்தனை வாழ்த்துதலால்

வெறியுறு கொன்றை மறியுறு 

  செங்கை விடைஎடுத்த

பொறியுறு பொற்கொடி எம்பெரு 

  மான்அமர் பொன்னுலகே.  42 

 

 

பொன்னார் மதில்சூழ் புகலிக் 

  கரசை அருகர்தங்கள்

தென்னாட் டரண்அட்ட சிங்கத் 

  தினைஎஞ் சிவன்இவனென்

றந்நாள் சூதலைத் திருவாய் 

  மொழிகள் அருளிச் செய்த

என்னானை யைப்பணி வார்க்கில்லை 

  காண்க யமாலயமே.  43 

 

 

மாலையொப் பாகும் பிறைமுன்பு 

  நின்று மணிகுறுக்கி

வேலையைப் பாடணைந் தாங்கெழில் 

  மன்மதன் வில்குனித்த

கோலைஎப் போதும் பிடிப்பன் 

  வடுப்படு கொக்கினஞ்சூழ்

சோலையைக் காழித் தலைவன் 

  மலர்இன்று சூடிடினே.  44 

 

 

சூடுநற் றார்த்தமி ழாகரன் 

  தன்பொற் சுடர்வரைத்தோள்

கூடுதற் கேசற்ற கொம்பினை 

  நீயும் கொடும்பகைநின்

றாடுதற் கேஅத்த னைக்குனை 

  யேநின்னை ஆடரவம்

வாடிடக் காரும் மறுவும் 

  படுகின்ற வாண்மதியே.  45 

 

 

மதிக்கக் தகுநுதல் மாதொடும் 

  எங்கள் மலையில்வைகித்

துதிக்கத் தகுசண்பை நாதன் 

  சுருதி கடந்துழவோர்

மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் 

  தேனுண்டு மிண்டிவரால்

குதிக்கக் குருகிரி யுங்கொச்சை 

  நாடு குறுகுமினே.  46 

 

 

குறுமனம் முள்கல வாத்தமி 

  ழாகரன் கொச்சையன்ன

நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் 

  எம்மூர் நகுமதிசென்

றுறுமனை ஒண்சுவர் ஓவியக் 

  கிள்ளைக்கு நும்பதியிற்

சிறுமிகள் சென்றிருந் தங்கையை 

  நீட்டுவர் சேயிழையே.  47 

 

 

இழைவளர் ஆகத்து ஞானசம் 

  பந்தன் இருஞ்சுருதிக்

கழைவளர் குன்று கடத்தலும் 

  காண்பீர் கடைசியர்நீள்

முழைவளர் நண்டு படத்தடஞ் 

  சாலிமுத் துக்கிளைக்கும்

மழைவளர் நீள்குடு மிப்பொழில் 

  சூழ்ந்த வளவயலே.  48 

 

 

வயலார் மருகல் பதிதன்னில் 

  வாளர வாற்கடியுண்

டயலா விழுந்த அவனுக் 

  கிரங்கி அறிவழிந்த

கயலார் கருங்கண்ணி தன்துயர் 

  தீர்த்த கருணைவெள்ளப்

புயலார் தருகையி னான் என்னத் 

  தோன்றிடும் புண்ணியமே.  49 

 

 

புண்ணிய நாடு புகுவதற் 

  காகப் புலன்அடக்கி

எண்ணிய செய்தொழில் நிற்பதெல் 

  லாருமின் றியானெனக்கு

நண்ணிய செய்தொழில் ஞானசம் 

  பந்தனை நந்தமர்நீர்க்

கண்ணியன் மாடக் கழுமலத் 

  தானைக் கருதுவதே.  50 

 

 

கருதத் தவஅருள் ஈந்தருள் 

  ஞானசம் பந்தன்சண்பை

இரதக் கிளிமொழி மாதே 

  கலங்கல் இவர்உடலம்

பொருதக் கழுநிரை யாக்குவன் 

  நுந்தமர் போர்ப்படையேல்

மருதச் சினையில் பொதும்பருள் 

  ஏறி மறைகுவனே.  51 

 

 

மறைமுழங் குங்குழ லார்கலி 

  காட்ட வயற்கடைஞர்

பறைமுழங் கும்புக லித்தமி 

  ழாகரன் பற்றலர்போல்

துறைமுழங் குங்கரி சீறி 

  மடங்கல் சுடர்ப்பளிங்கின்

அறைமுழங் கும்வழி நீவரிற் 

  சால வரும்பழியே.  52 

 

 

பழிக்கே தகுகின்ற தின்றிப் 

  பிறைபல் கதிர்விழுந்த

வழிக்கே திகழ்தரு செக்கரைக் 

  கொச்சை வயவரென்னும்

மொழிக்கே விரும்பி முளரிக் 

  கலமரும் ஓவியர்தம்

கிழிக்கே தரும்உரு வத்திவள் 

  வாடிடக் கீள்கின்றதே.  53 

 

 

கீளரிக் குன்றத் தரவம் 

  உமிழ்ந்த கிளர்மணியின்

வாளரிக் கும்வைகை மாண்டனர் 

  என்பர் வயற்புகலித்

தாளரிக் கும்மரி யான்அருள் 

  பெற்ற பரசமய

கோளரிக் குந்நிக ராத்தமிழ் 

  நாட்டுள்ள குண்டர்களே.  54 

 

 

குண்டகழ் சூழ்தரு கொச்சைத் 

  தலைவன்தன் குன்றகஞ்சேர்

வண்டக மென்மலர் வில்லியன் 

  னீர்வரி விற்புருவக்

கண்டக வாளி படப்புடை 

  வீழ்செங் கலங்கலொடும்

புண்டகக் கேழல் புகுந்ததுண் 

  டோநுங்கள் பூம்புனத்தே.  55 

 

 

புனத்தெழு கைமதக் குன்றம 

  தாயங்கொர் புன்கலையாய்

வனத்தெழு சந்தனப் பைந்தழை 

  யாய்வந்து வந்தடியேன்

மனத்தெழு பொற்கழல் ஞானசம் 

  பந்தன்வண் கொச்சையன்னாள்

கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு 

  லாய்த்திவர் கட்டுரையே.  56 

 

 

கட்டது வேகொண்டு கள்ளுண்டு 

  நுங்கைக ளாற்சுணங்கை

இட்டது வேயன்றி எட்டனைத் 

  தான்இவள் உள்ளுறுநோய்

விட்டது வேயன்றி வெங்குரு 

  நாதன்தன் பங்கயத்தின்

மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் 

  பேதை மகிழ்வுறவே.  57 

 

 

உறவும் பொருளும்ஒண் போகமும் 

  கல்வியும் கல்வியுற்ற

துறவும் துறவிப் பயனும் 

  எனக்குச் சுழிந்தபுனல்

புறவும் பொழிலும் பொழில்சூழ் 

  பொதும்பும் ததும்பும்வண்டின்

நறவும் பொழில்எழிற் காழியர் 

  கோன்திரு நாமங்களே.  58 

 

 

நாம்உகந் தேத்திய ஞானசம் 

  பந்தனை நண்ணலர்போல்

ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் 

  இஞ்சி இடிபடுக்கத்

தீமுகந் தோன்றிகள் தோன்றத் 

  தளவ முகைஅரும்பக்

காமுகம் பூமுகம் காட்டிநின் 

  றார்த்தன காரினமே.  59 

 

 

காரங் கணைபொழிற் காழிக் 

  கவுணியர் தீபன்நல்லூர்ச்

சீரங் கணைநற் 

  பெருமணந் தன்னிற்சிவபுரத்து

வாரங் கணைகொங்கை மாதொடும் 

  புக்குறும் போதுவந்தார்

ஆரங் கொழிந்தனர் பெற்றதல் 

  லால்அவ் வரும்பதமே.  60 

 

 

அரும்பதம் ஆக்கும் அடியரொ 

  டஞ்சலித் தார்க்கரிய

பெரும்பதம் எய்தலுற் றீர்வந் 

  திறைஞ்சுமின் பேரரவம்

வரும்பத நான்மறைக் காழித் 

  தலைவன் மலர்க்கமலத்

தரும்பத ஞானசம் பந்தன்என் 

  னானைதன் தாளிணையே.  61 

 

 

தாளின் சரணம் தருஞ்சண்பை 

  நாதன் தரியலர்போல்

கீளின் மலங்க விலங்கே 

  புகுந்திடுங் கெண்டைகளும்

வாளுந் தொலைய மதர்த்திரு 

  காதின் அளவும்வந்து

மீளுங் கருங்கண்ணி மின்புரி 

  யாவைத்த மென்னகையே.  62 

 

 

நகுகின்ற முல்லைநண் ணார்எரி 

  கண்டத் தவர்கவர்ந்த

மிகுகின்ற நன்னிதி காட்டின 

  கொன்றை விரவலர்ஊர்

புகுகின்ற தீயெனப் பூத்தன 

  தோன்றிப் புறமவன்கைத்

தகுகின்ற கோடல்கள் அன்பரின் 

  றெய்துவர் கார்மயிலே.  63 

 

 

மயிலேந் தியவள்ளல் தன்னை 

  அளிப்ப மதிபுணர்ந்த

எயிலேந் தியசண்பை நாதன் 

  உலகத் தெதிர்பவர்யார்

குயிலேந் தியபொழிற் கொங்கேந் 

  தியகொம்பின் அம்புதழீஇ

அயிலேந் தியமலர் கண்டுள 

  னாய்வந்த அண்ணலுக்கே.  64 

 

 

அண்ணல் மணிவளைத் தோள்அரு 

  காசனி சண்பையன்ன

பெண்ணின் அமிர்தநல் லாள்குழல் 

  நாற்றம் பெடையொடும்பூஞ்

சுண்ணம் துதைந்தவண் டேகண்ட 

  துண்டுகொல் தூங்கொலிநீர்த்

தண்ணம் பொழில்எழிற் காசினி 

  பூத்தமென் தாதுகளே.  65 

 

 

தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி 

  யார்சட லம்படுத்துத்

தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து 

  வாளா துலுக்குகின்றீர்

போதியிற் புத்தர்கள் வம்மின் 

  புகலியர் கோனன்னநாட்

காதியிட் டேற்றுங் கழுத்திறம் 

  பாடிக் களித்திடவே.  66 

 

 

களியுறு தேன்தார்க் கவுணியர் 

  தீபன் கருதலர்போல்

வெளியுறு ஞாலம் பகல்இழந் 

  தால்விரை யார்கமலத்

தளியுறு மென்மலர்த் தாதளைந் 

  தாழி அமைப்பவரும்

துளியுறு வாடையி தாம்மட 

  மானைத் துவள்விப்பதே.  67 

 

 

தேறும் புனல்தில்லைச் 

  சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்

ஊறும் அமிர்தைப் பருகிட் 

  டெழுவதோர் உட்களிப்புக்

கூறும் வழிமொழி தந்தெனை 

  வாழ்வித்தவன் கொழுந்தேன்

நாறும் அலங்கல் தமிழா 

  கரனென்னும் நன்னிதியே.  68 

 

 

நிதியுறு வார்அறன் இன்பம்வீ 

  டெய்துவர் என்னவேதம்

துதியுறு நீள்வயற் காழியர் 

  கோனைத் தொழாரின்நைய

நதியுறு நீர்தெளித் தஞ்சல் 

  எனஅண்ணல் அன்றோஎனா

மதியுறு வாணுதல் பாதம் 

  பணிந்தனள் மன்னனையே.  69 

 

 

மன்னங் கனைசெந் தமிழா 

  கரன்வெற்பில் வந்தொருவர்

அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் 

  வேழத் திடைவிலங்கிப்

பொன்னங் கலைசா வகைஎடுத்   தாற்கிவள் பூண்அழுந்தி

இன்னந் தழும்புள வாம்பெரும்   பாலும்அவ் ஏந்தலுக்கே.  70 

 

 

ஏந்தும் உலகுறு வீர்எழில் 

  நீலநக் கற்கும்இன்பப்

பூந்தண் புகலூர் முருகற்கும் 

  தோழனைப் போகமார்ப்பைக்

காந்துங் கனலிற் குளிர்படுத் 

  துக்கடற் கூடலின்வாய்

வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் 

  போதும் விரும்புமினே.  71 

 

 

விரும்பும் புதல்வனை மெய்யரிந் 

  தாக்கிய இன்னமிர்தம்

அரும்பும் புனற்சடை யாய்உண் 

  டருள் என் றடிபணிந்த

இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் 

  தொண்டனை ஏத்துதிரேல்

சுரும்பின் மலர்த்தமி ழாகரன் 

  பாதத் தொடர்வெளிதே.  72 

 

 

எளிவந்த வாஎழிற் பூவரை 

  ஞாண்மணித் தார்தழங்கத்

துளிவந்த கண்பிசைந் தேங்கலும் 

  எங்கள் அரன்துணையாம்

கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் 

  ஞான அமிர்தளித்த

அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் 

  சிறுக்கன்தன் ஆரருளே.  73 

 

 

அருளும் தமிழா கரன்நின் 

  அலங்கல்தந் தென்பெயரச்

சுருளுங் குழலியற் கீந்திலை 

  யேமுன்பு தூங்குகரத்

துருளும் களிற்றினொ டோட்டரு 

  வானை அருளியன்றே

மருளின் மொழிமட வாள்பெயர்  

  என்கண் வருவிப்பதே.  74 

 

 

வருவார் உருவின் வழிவழி 

  வைத்த வனமருந்தும்

திருவார் இருந்த செழுநகர்ச் 

  செவ்வித் திருவடிக்காள்

தருவான் தமிழா கரன்கரம் 

  போற்சலம் வீசக்கண்டு

வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி 

  வானத்து மின்னியவே.  75 

 

 

மின்னார் குடுமி நெடுவெற் 

  பகங்கொங்கில் வீழ்பனிநோய்

தன்னார் வழிகெட் டழிந்தமை 

  சொல்லுவர் காண்இறையே

மன்னார் பரிசனத் தார்மேற் 

  புகலும் எவர்க்கும்மிக்க

நன்னா வலர்பெரு மான்அரு 

  காசனி நல்கிடவே.  76 

 

 

நல்கென் றடியின் இணைபணி 

  யார்சண்பை நம்பெருமான்

பல்கும் பெரும்புகழ் பாடகில் 

  லார்சிலர் பாழ்க்கிறைத்திட்

டொல்கும் உடம்பின ராய்வழி 

  தேடிட் டிடறிமுட்டிப்

பில்கும் இடம்அறி யார்கெடு 

  வார்உறு பேய்த்தனமே.  77 

 

 

தனமே தருபுகழ்ச் சைவ 

  சிகாமணி தன்அருள்போல்

மனமே புகுந்த மடக்கொடி 

  யேமலர் மேல்இருந்த

அனமே அமிர்தக் குமுதச் 

  செவ்வாய்உங்கள் ஆயமென்னும்

இனமே பொலியவண் டாடெழிற் 

  சோலையுள் எய்துகவே.  78 

 

 

உகட்டித்து மோட்டு வராலினம் 

  மேதி முலைஉரிஞ்ச

அகட்டிற் சொரிபால் தடம்நிறை 

  கொச்சை வயத்தரசைத்

தகட்டில் திகழ்மணிப் பூண்தமி 

  ழாகரன் தன்னையல்லால்

பகட்டில் பொலியினும் வேண்டேன் 

  ஒருவரைப் பாடுதலே.  79 

 

 

பாடிய செந்தமி ழாற்பழங் 

  காசு பரிசில்பெற்ற

நீடிய சீர்த்திரு ஞானசம் 

  பந்தன் நிறைபுகழான்

நேடிய பூந்திரு நாவுக் 

  கரசோ டெழில்மிழலைக்

கூடிய கூட்டத்தி னால்உள 

  தாய்த்திக் குவலயமே.  80 

 

 

வலையத் திணிதோள் மிசைமழ 

  வேற்றி மனைப்புறத்து

நிலைஎத் தனைபொழு தோகண்ட 

  தூரனை நீதிகெட்டார்

குலையக் கழுவின் குழுக்கண்ட 

  வன்திகழ் கொச்சையன்ன

சிலையொத்த வாள்நுதல் முன்போல் 

  மலர்க திருக்கண்களே.  81 

 

 

கண்ணார் திருநுத லோன்கோலக் 

  காவில் கரநொடியால்

பண்ணார் தரப்பாடு சண்பையர் 

  கோண்பாணி நொந்திடுமென்

றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் 

  தாளங்கள் ஈயக்கண்டும்

மண்ணார் சிலர்சண்பை நாதனை 

  ஏத்தார் வருந்துவதே.  82 

 

 

வருந்துங் கொலாங்கழல் மண்மிசை 

  ஏகிடின் என்றுமென்றார்த்

திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம் 

  பந்தற்குச் சீர்மணிகள்

பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் 

  காண்புண ரித்திகழ்நஞ்

சருந்தும் பிரான்நம் அரத்துறை 

  மேய அரும்பொருளே.  83 

 

 

பொருளென என்னைத்தன் பொற்கழல் 

  காட்டிப் புகுந்தெனக்கிங்

கருளிய சீர்த்திரு ஞானசம் 

  பந்தன் அருளிலர்போல்

வெருளின மானின்மென் நோக்கியை 

  விட்டு விழுநிதியின்

திரளினை ஆதரித் தானன்று 

  சாலஎன் சிந்தனைக்கே.  84 

 

 

சிந்தையைத் தேனைத் திருவா 

  வடுதுறை யுள்திகழும்

எந்தையைப் பாடல் இசைத்துத் 

  தொலையா நிதியம்எய்தித்

தந்தையைத் தீத்தொழில் மூட்டிய 

  கோன்சரண் சார்விலரேல்

நிந்தையைப் பெற்றொழி யாதிரந் 

  தேகரம் நீட்டுவரே.  85 

 

 

நீட்டுவ ரோதத்தொ டேறிய 

  சங்கம் நெகுமுளரித்

தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை 

  நாதன் தொழாதவரில்

வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் 

  குண்ணீர் உணக்குழித்த

காட்டுவர் ஊறல் பருகுங் 

  கொலாம்எம் கணங்குழையே.  86 

 

 

குழைக்கின்ற கொன்றைபொன் போல 

  மலரநுங் கூட்டமெல்லாம்

அழைக்கின்ற கொண்டல் இயம்புன் 

  னிலையகன் றார்வரவு

பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் 

  சண்பைப் பிரான்புறவத்

திழைக்கின்ற கூடல் முடியஎண் 

  ணாத இளங்கொடிக்கே.  87 

 

 

கொடித்தேர் அவுணர் குழாம்அனல் 

  ஊட்டிய குன்றவில்லி

அடித்தேர்கருத்தின் அருகா 

  சனியை அணியிழையார்

முடித்தேர் கமலம் கவர்வான் 

  முரிபுரு வச்சிலையால்

வடித்தேர் நயனக் கணையிணை 

  கோத்து வளைத்தனரே.  88 

 

 

வளைபடு தண்கடல் கொச்சை 

  வயவன் மலர்க்கழற்கே

வளைபடு நீண்முடி வார்புன 

  லூரன்தன் நீரிலங்கு

வளைபடு கண்ணியர் தம்பொதுத் 

  தம்பலம் நாறும்இந்த

வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் 

  வாயின் மணிமுத்தமே.  89 

 

 

முத்தன வெண்ணகை யார்மயல் 

  மாற்றி முறைவழுவா

தெத்தனை காலம்நின் றேத்தும் 

  அவரினும் என்பணிந்த

பித்தனை எங்கள் பிரானை 

  அணைவ தெளிதுகண்டீர்

அத்தனை ஞானசம் பந்தனைப் 

  பாதம் அடைந்தவர்க்கே.  90 

 

 

அடைத்தது மாமறைக் காடர்தம் 

  கோயிற் கதவினையன்

றுடைத்தது பாணன்தன் யாழின் 

  ஒலியை உரகவிடம்

துடைத்தது தோணி புரத்துக் 

  கிறைவன் சுடரொளிவாய்

படைத்தது தண்மையை நள்ளாற் 

  றரசு பணித்திடவே.  91 

 

 

பணிபடு நுண்ணிடை பாதம் 

  பொறாபல காதம்என்று

தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் 

  தேற்குத் தழல்உமிழ்கான்

மணிபடு பொற்கழல் ஞானசம் 

  பந்தன் மருவலர்போல்

துணிபடு வேலன்ன கண்ணியென் 

  னோவந்து தோன்றியதே.  92 

 

 

தோன்றல்தன் னோடுடன் ஏகிய 

  சுந்தரப் பூண்முலையை

ஈன்றவ ரேஇந்த ஏந்திழை 

  யாரவர் இவ்வளவில்

வான்றவர் சூழுந் தமிழா 

  கரன்தன் வடவரையே

போன்றபொன் மாடக் கழுமல 

  நாடு பொருந்துவரே.  93 

 

 

பொருந்திடு ஞானத் தமிழா 

  கரன்பதி பொற்புரிசை

திருந்திய தோணி புரத்துக் 

  கிறைவன் திருவருளால்

கருந்தடம் நீரெழு காலையில் 

  காகூ கழுமலமென்

றிருந்திட வாம்என்று வானவ 

  ராகி இயங்கியதே.  94 

 

 

இயலா தனபல சிந்தைய 

  ராய்இய லுங்கொல்என்று

முயலா தனவே முயன்றுவன் 

  மோகச் சுழிஅழுந்திச்

செயலார் வரைமதில் காழியர் 

  கோன்திரு நாமங்களுக்

கயலார் எனப்பல காலங்கள் 

  போக்குவர் ஆதர்களே.  95 

 

 

ஆதர வும்பயப் பும்இவள் 

  எய்தினள் என்றயலார்

மாதர் அவஞ்சொல்லி என்னை 

  நகுவது மாமறையின்

ஓதர வம்பொலி காழித் 

  தமிழா கரனொடன்றே

தீதர வம்பட அன்னைஎன் 

  னோபல செப்புவதே.  96 

 

 

செப்பிய என்ன தவம்முயன் 

  றேன்நல்ல செந்தமிழால்

ஒப்புடை மாலைத் தமிழா 

  கரனை உணர்வுடையோர்

கற்புடை வாய்மொழி ஏத்தும் 

  படிகத றிட்டிவர

மற்படு தொல்லைக் கடல்புடை 

  சூழ்தரு மண்ணிடையே.  97 

 

 

மண்ணில் திகழ்சண்பை நாதனை 

  வாதினில் வல்அமணைப்

பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் 

  பந்த வினைஅறுக்கும்

கண்ணைக் கதியைத் தமிழா 

  கரனைஎங் கற்பகத்தைத்

திண்ணற் றொடையல் கவுணியர் 

  தீபனைச் சேர்ந்தனமே.  98 

 

 

சேரும் புகழ்த்திரு ஞானசம் 

  பந்தனை யான்உரைத்த

பேருந் தமிழ்ப்பா இவைவல் 

  லவர்பெற்ற இன்புலகம்

காருந் திருமிடற் றாய்அரு 

  ளாய்என்று கைதொழுவர்

நீரும் மலரும் கொளாநெடு 

  மாலும் பிரமனுமே.  99 

 

 

பிரமா புரம்வெங் குருசண்பை 

  தோணி புகலிகொச்சை

சிரமார் புரம்நற் புறவந் 

  தராய்காழி வேணுபுரம்

வரமார் பொழில்திரு ஞானசம் 

  பந்தன் பதிக்குமிக்க

பரமார் கழுமலம் பன்னிரு 

  நாமம்இப் பாரகத்தே.  100 

 

 

பாரகலத் துன்பம் 

  கடந்தமர ராற்பணியும்

ஏரகலம் பெற்றாலும் 

  இன்னாதால் - காரகிலின்

தூமம் கமழ்மாடத் 

  தோணி புரத்தலைவன்

நாமஞ் செவிக்கிசையா நாள்.  101 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பெருமிழலைக் குறும்ப நாயனார்
View Details
கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
View Details