பதினொன்றாம்-திருமுறை

023 சிவபெருமான் திருவந்தாதி

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஒன்று முதலாக நூறளவும் 

  ஆண்டுகள்வாழ்ந்

தொன்றும் மனிதர் 

  உயிரையுண் - டொன்றும்

மதியாத கூற்றுதைத்த 

  சேவடியான் வாய்ந்த

மதியான் இடப்பக்கம் மால்.  1 

 

 

மாலை ஒருபால் 

  மகிழ்ந்தானை வண்கொன்றை

மாலை ஒருபால் 

  முடியானை - மாலை

ஒளியானை உத்தமனை 

  உண்ணாநஞ் சுண்டற்

கொளியானை ஏத்தி உளம்.  2 

 

 

உளமால்கொண் டோடி 

  ஒழியாது யாமும்

உளமாகில் ஏத்தவா 

  றுண்டே - உளம்மாசற்

றங்கமலம் இல்லா 

  அடல்வெள்ளே றூர்ந்துழலும்

அங்கமல வண்ணன் அடி.  3 

 

 

அடியார்தம் ஆருயிரை 

  அட்டழிக்குங் கூற்றை

அடியால் அருவாகச் 

  செற்றான் - அடியார்தம்

அந்தரத்தால் ஏத்தி 

  அகங்குழைந்து மெய்யரும்பி

அந்தரத்தார் சூடும் அலர்.  4 

 

 

அலராளுங் கொன்றை 

  அணியலா ரூரற்

கலராகி யானும் 

  அணிவன் - அலராகி

ஓதத்தான் ஒட்டினேன் 

  ஓதுவன்யான் ஓங்கொலிநீர்

ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.  5 

 

 

ஊரும தொற்றியூர் 

  உண்கலனும் வெண்தலையே

ஊரும் விடையொன் 

  றுடைதோலே - ஊரும்

படநாகம் மட்டார் 

  பணமாலை ஈதோ

படநாகம் அட்டார் பரிசு.  6 

 

 

பரியானை ஊராது 

  பைங்கணே றூரும்

பரியானைப் பாவிக்க 

  லாகா - பரியானைக்

கட்டங்கம் ஏந்தியாக் 

  கண்டுவாழ் நன்னெஞ்சே

கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.  7 

 

 

கண்டங் கரியன் 

  உமைபாலுந் தன்பாலும்

கண்டங் கரியன் 

  கரிகாடன் - கண்டங்கள்

பாடியாட் டாடும் 

  பரஞ்சோதிக் கென்னுள்ளம்

பாடியாக் கொண்ட பதி.  8 

 

 

பதியார் பழிதீராப் 

  பைங்கொன்றை தாவென்

பதியான் பலநாள் 

  இரக்கப் - பதியாய

அம்மானார் கையார் 

  வளைகவர்ந்தார் அஃதேகொல்

அம்மானார் கையார் அறம்.  9 

 

 

அறமானம் நோக்கா 

  தநங்கனையும் செற்றங்

கறமாநஞ் சுண்ட 

  அமுதன் - அறமான

ஓதியாள் பாகம் 

  அமர்ந்தான் உயர்புகழே

ஓதியான் தோற்றேன் ஒளி.  10 

 

 

ஒளியார் சுடர்மூன்றுங் 

  கண்மூன்றாக் கோடற்

கொளியான் உலகெல்லாம் 

  ஏத்தற் - கொளியாய

கள்ளேற்றான் கொன்றையான் 

  காப்பிகந்தான் நன்னெஞ்சே

கள்ளேற்றான் கொன்றை கடிது.  11 

 

 

கடியரவர் அக்கர் 

  கரிதாடு கோயில்

கடியரவர் கையதுமோர் 

  சூலம் - கடியரவர்

ஆனேற்றார்க் காட்பட்ட 

  நெஞ்சமே அஞ்சல்நீ

ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.  12 

 

 

யாமான நோக்கா 

  தலர்கொன்றைத் தார்வேண்ட

யாமானங் கொண்டங் 

  கலர்தந்தார் - யாமாவா

ஆவூரா ஊரும் 

  அழகா அனலாடி

ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம்.  13 

 

 

யானென்றங் கண்ணா 

  மலையான் அகம்புகுந்து

யானென்றங் கையறிவும் 

  குன்றுவித்து - யானென்றங்

கார்த்தானே யாயிடினும் 

  அம்பரன்மேல் அங்கொன்றை

ஆர்த்தானேல் உய்வ தரிது.  14 

 

 

அரியாரும் பூம்பொழில் சூழ் 

  ஆமாத்தூர் அம்மான்

அரியாரும் பாகத் 

  தமுதன் - அரியாரும்

வேங்கடத்து மேயானை 

  மேவா உயிரெல்லாம்

வேங்கடத்து நோயால் வியந்து.  15 

 

 

வியந்தாழி நன்னெஞ்சே 

  மெல்லியலார்க் காளாய்

வியந்தாசை யுள்மெலிய 

  வேண்டா - வியந்தாய

கண்ணுதலான் எந்தைகா 

  பாலி கழலடிப்பூக்

கண்ணுதலாம் நம்பாற் கடன்.  16 

 

 

கடனாகம் ஊராத 

  காரணமுங் கங்கை

கடனாக நீகவர்ந்த 

  வாறும் - கடனாகப்

பாரிடந்தான் மேவிப் 

  பயிலும் பரஞ்சோதி

பாரிடந்தான் மேயாய் பணி.  17 

 

 

பணியாய் மடநெஞ்சே 

  பல்சடையான் பாதம்

பணியாத பத்தர்க்குஞ் 

  சேயன் - பணியாய

ஆகத்தான் செய்துமேல் 

  நம்மை அமரர்கோ

னாகத்தான் செய்யும் அரன்.  18 

 

 

அரன்காய நைவேற் 

  கநங்கவேள் அம்பும்

அரன்காயும் அந்தியும்மற் 

  றந்தோ - அரங்காய

வெள்ளில்சேர் காட்டாடி 

  வேண்டான் களிறுண்ட

வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.  19 

 

 

வெறியானை ஊர்வேந்தர் 

  பின்செல்லும் வேட்கை

வெறியார்பூந் தாரான் 

  விமலன் - வெறியார்தம்

அல்லல்நோய் தீர்க்கும் 

  அருமருந்தாம் ஆருர்க்கோன்

அல்லனோ நெஞ்சே அயன்.  20 

 

 

அயமால்ஊண் ஆடரவம் 

  நாண்அதள தாடை

அயமாவ தானேறூர் 

  ஆரூர் - அயமாய

என்னக்கன் தாழ்சடையன் 

  நீற்றன் எரியாடி

என்னக்கன் றாழும் இவள்.  21 

 

 

ஆழும் இவளையும் 

  கையகல ஆற்றேனென்

றாழும் இவளை 

  அயராதே - ஆழும்

சலமுடியாய் சங்கரனே 

  சங்கக் குழையாய்

சலமுடியா தின்றருளும் தார்.  22 

 

 

தாராய தண்கொன்றை 

  யானிரப்பத் தானிதனைத்

தாராதே சங்கம் 

  சரிவித்தான் - தாராவல்

ஆனைமேல் வைகும் 

  அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்

ஆனையும் வானோர்க் கரசு.  23 

 

 

அரசுமாய் ஆள்விக்கும் 

  ஆட்பட்டார்க் கம்மான்

அரசுமாம் அங்கொன்று 

  மாலுக் - கரசுமான்

ஊர்தி எரித்தான் 

  உணருஞ் செவிக்கின்பன்

ஊர்தி எரித்தான் உறா.  24 

 

 

உறாவேயென் சொற்கள் 

  ஒளிவளைநின் உள்ளத்

துறாவேதீ உற்றனகள் 

  எல்லாம் - உறாவேபோய்க்

காவாலி தார்நினைந்து 

  கைசோர்ந்து மெய்மறந்தாள்

காவாலி தாநின் கலை.  25 

 

 

கலைகாமின் ஏர்காமின் 

  கைவளைகள் காமின்

கலைசேர் நுதலீர்நாண் 

  காமின் - கலையாய

பான்மதியன் பண்டரங்கன் 

  பாரோம்பு நான்மறையன்

பான்மதியன் போந்தான் பலிக்கு.  26 

 

 

பலிக்குத் தலையேந்திப் 

  பாரிடங்கன் சூழப்

பலிக்கு மனைப்புகுந்து 

  பாவாய் - பலிக்குநீ

ஐயம்பெய் என்றானுக் 

  கையம்பெய் கின்றேன்மேல்

ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.  27 

 

 

ஆயம் அழிய 

  அலர்கொன்றைத் தார்வேண்டி

ஆயம் அழிய 

  அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்

தீங்குழலும் தென்றலும் 

  தேய்கோட் டிளம்பிறையும்

தீங்குழலும் என்னையே தேர்ந்து.  28 

 

 

தேரோன் கதிரென்னுஞ் 

  செந்தழலால் வெந்தெழுபேய்த்

தேரோன் கதிரென்னுஞ் 

  செய்பொருள்நீ - தேராதே

கூடற்கா வாலி 

  குரைகழற்கா நன்னெஞ்சே

கூடற்கா வாலிதரக் கூர்.  29 

 

 

கூரால மேயாக் 

  குருகோடு நைவேற்குக்

கூரார்வேற் கையார்க்காய்க் 

  கொல்லாமே - கூரார்

பனிச்சங்காட் டார்சடைமேற் 

  பால்மதியைப் பாம்பே

பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.  30 

 

 

பாயும் விடையூர்தி 

  பாசுபதன் வந்தெனது

பாயிற் புகுதப் பணை 

  முலைமேல் - பாயிலனற்

கொன்றாய் குளிர்சடையாற் 

  கென்நிலைமை கூறாதே

கொன்றாய் இதுவோ குணம்.  31 

 

 

குணக்கோடி கோடாக் 

  குளிர்சடையான் வில்லின்

குணக்கோடி குன்றஞ்சூழ் 

  போகிக் - குணக்கோடித்

தேரிரவில் வாரான் சிவற் 

  காளாஞ் சிந்தனையே

தேரிரவில் வாழும் திறம்.  32 

 

 

திறங்காட்டுஞ் சேயாள் 

  சிறுகிளியைத் தான்தன்

திறங்காட்டுந் தீவண்ணன் 

  என்னும் - திறங்காட்டின்

ஊரரவம் ஆர்த்தானோ 

  டென்னை உடன்கூட்டின்

ஊரரவஞ் சால உடைத்து.  33 

 

 

உடையோடு காடாடி 

  ஊர்ஐயம் உண்ணி

உடையாடை தோல்பொடிசந் 

  தென்னை - உடையானை

உன்மத் தகமுடிமேல் 

  உய்த்தானை நன்னெஞ்சே

உன்மத் தகமுடிமேல் உய்.  34 

 

 

உய்யாதென் ஆவி 

  ஒளிவளையும் மேகலையும்

உய்யா துடம்பழிக்கும் 

  ஒண்திதலை - உய்யாம்

இறையானே ஈசனே 

  எம்மானே நின்னை

இறையானும் காண்கிடாய் இன்று.  35 

 

 

இன்றியாம் உற்ற 

  இடரும் இருந்துயரும்

இன்றியாம் தீர்தும் 

  எழில்நெஞ்சே - இன்றியாம்

காட்டாநஞ் சேற்றாஅன் 

  காமரு வெண்காட்டான்

காட்டான்அஞ் சேற்றான் கலந்து.  36 

 

 

கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் 

  வின்மேரு என்னும்

கலம்பெரிய ஆற்கீழ் 

  இருக்கை - கலம்பிரியா

மாக்கடல்நஞ் சுண்டார் 

  கழல்தொழார்க் குண்டாமோ

மாக்கடனஞ் சேரும் வகை.  37 

 

 

கையா றவாவெகுளி 

  அச்சங் கழிகாமம்

கையாறு செஞ்சடையான் 

  காப்பென்னும் - கையாறு

மற்றிரண்ட தோளானைச் 

  சேர்நெஞ்சே சேரப்போய்

மற்றிரண்ட தோளான் மனை.  38 

 

 

மனையாய் பலிக்கென்று 

  வந்தான்வண் காமன்

மனையா சறச்செற்ற 

  வானோன் - மனையாய

என்பாவாய் என்றேனுக் 

  கியானல்லேன் நீதிருவே

என்பாவாய் என்றான் இறை.  39 

 

 

இறையாய வெண்சங் 

  கிவைதருவேன் என்னும்

இறையாகம் இன்றருளாய் 

  என்னும் - இறையாய்

மறைக்காட்டாய் மாதவனே 

  நின்னுருவம் இங்கே

மறைக்காட்டாய் என்னும்இம் மாது.  40 

 

 

மாதரங்கந் தன்னரங்கஞ் 

  சேர்த்தி வளர்சடைமேல்

மாதரங்கக் கங்கைநீர் 

  மன்னுவித்து - மாதரங்கத்

தேரானை யூரான் 

  சிவற்காளாஞ் சிந்தனையே

தேரானை யூரானைத் தேர்.  41 

 

 

தெருளிலார் என்னாவார் 

  காவிரிவந் தேறும்

அருகில் சிராமலையெங் 

  கோமான் - விரியுலகில்

செல்லுமதில் மூன்றெரித்தான் 

  சேவடியே யாம்பரவிச்

செல்லும்எழில் நெஞ்சே தெளி.  42 

 

 

தெளியாய் மடநெஞ்சே 

  செஞ்சடையான் பாதம்

தெளியாதார் தீநெறிக்கட் 

  செல்வர் - தெளியாய

பூவார் சடைமுடியான் 

  பொன்னடிக்கே ஏத்துவன்நற்

பூவாய வாசம் புனைந்து.  43 

 

 

புனைகடற்குப் பொன்கொடுக்கும் 

  பூம்புகார் மேயான்

புனைகடுக்கை மாலைப் 

  புராணன் - புனைகடத்து

நட்டங்கம் ஆட்டயரும் 

  நம்பன் திருநாமம்

நட்டங்க மாட்டினேன் நக்கு.  44 

 

 

நக்கரை சாளும் 

  நடுநாளை நாரையூர்

நக்கரை வக்கரையோம் 

  நாமென்ன - நக்குரையாம்

வண்டாழங் கொன்றையான் 

  மால்பணித்தான் மற்றவர்க்காய்

வண்டாழங் கொண்டான் மதி.  45 

 

 

மதியால் அடுகின்ற 

  தென்னும்மால் கூரும்

மதியாதே வைதுரப்பர் 

  என்னும் - மதியாதே

மாதெய்வம் ஏத்தும் 

  மறைக்காடா ஈதேகொல்

மாதெய்வம் கொண்ட வனப்பு.  46 

 

 

வனப்பார் நிறமும் 

  வரிவளையும் நாணும்

வனப்பார் வளர்சடையான் 

  கொள்ள - வனப்பாற்

கடற்றிரையு மீருமிக் 

  கங்குல்வா யான்கட்

கடற்றிரையு மீருங் கனன்று.  47 

 

 

கனன்றாழி நன்னெஞ்சே 

  கண்ணுதலார்க் காளாய்க்

கனன்றார் களிற்றுரிமால் 

  காட்டக் - கனன்றோர்

உடம்பட்ட நாட்டத்தர் 

  என்னையுந்தன் ஆளா

உடம்பட்ட நாட்டன் உரு.  48 

 

 

உருவியலுஞ் செம்பவளம் 

  ஒன்னார் உடம்பில்

உருவியலுஞ் சூலம் 

  உடையன் - உருவியலும்

மாலேற்றான் நான்முகனும் 

  மண்ணோடு விண்ணும்போய்

மாலேற்றாற் கீதோ வடிவு.  49 

 

 

வடிவார் அறப்பொங்கி 

  வண்ணக்கச் சுந்தி

வடிவார் வடம்புனைந்தும் 

  பொல்லா - வடிவார்மேல்

முக்கூடல் அம்மா 

  முருகமருங் கொன்றையந்தார்

முக்கூட மாட்டா முலை.  50 

 

 

முலைநலஞ்சேர் கானப்பேர் 

  முக்கணான் என்னும்

முலைநலஞ்சேர் மொய்சடையான் 

  என்னும் -முலைநலஞ்சேர்

மாதேவா என்று 

  வளர்கொன்றை வாய்சோர

மாதேவா சோரல் வளை.  51 

 

 

வளையாழி யோடகல 

  மால்தந்தான் என்னும்

வளையாழி நன்னெஞ்சே 

  காணில் - வளையாழி

வன்னஞ்சைக் கண்டமரர் 

  வாய்சோர வந்தெதிர்ந்த

வன்னஞ்சக் கண்டன் வரில்.  52 

 

 

வரிநீல வண்டலம்பு 

  மாமறைக்காட் டங்கேழ்

வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்

இடுமணல்மேல் அந்நலங்கொண் 

  டின்னாநோய் செய்தான்

இடுமணல்மேல் ஈசன் எமக்கு.  53 

 

 

அக்காரம் ஆடரவம் 

  நாண்அறுவை தோல்பொடிசாந்

தக்காரம் தீர்ந்தேன் 

  அடியேற்கு -வக்காரம்

பண்டரங்கன் எந்தை 

  படுபிணஞ்சேர் வெங்காட்டுப்

பண்டரங்கன் எங்கள் பவன்.  54 

 

 

பவனடிபார் விண்நீர் 

  பகலோன் மதிதீப்

பவனஞ்சேர் ஆரமுதம் 

  பெண்ஆண் -பவனஞ்சேர்

காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்

காலங்கை ஏந்தினான் காண்.  55 

 

 

காணங்கை இன்மை 

  கருதிக் கவலாதே

காணங்கை யாற்றொழுது 

  நன்னெஞ்சே - காணங்கை

பாவனையாய் நின்றான் 

  பயிலும் பரஞ்சோதி

பாவனையாய் நின்ற பதம்.  56 

 

 

பதங்க வரையுயர்ந்தான் 

  பான்மகிழ்ந்தான் பண்டு

பதங்கன் எயிறு 

  பறித்தான் - பதங்கையால்

அஞ்சலிகள் அன்பாலும் 

  ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்

தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.  57 

 

 

ஆக்கூர் பனிவாடா 

  ஆவிசோர்ந் தாழ்கின்றேன்

ஆக்கூர் அலர்தான் 

  அழகிதா - ஆக்கூர்

மறையோம்பு மாடத்து 

  மாமறையோ நான்கு

மறையோம்பு மாதவர்க்காய் வந்து.  58 

 

 

வந்தியான் சீறினும் 

  ஆழி மடநெஞ்சே

வந்தியா உள்ளத்து 

  வைத்திராய் -வந்தியாய்

நம்பரனை யாடும் 

  நளிர்புன் சடையானை

நம்பரனை நாள்தோறும் நட்டு.  59 

 

 

நட்டமா கின்றன 

  வொண்சங்கம் நானவன்பால்

நட்டமா நன்னீர்மை 

  வாடினேன் - நட்டமா

டீயான் எரியாடி 

  எம்மான் இருங்கொன்றை

ஈயானேல் உய்வ திலம்.  60 

 

 

இலமலரஞ் சேவடியார் 

  ஏகப் பெறாரே

இலமலரே ஆயினும் 

  ஆக - இலமலரும்

ஆம்பல்சேர் செவ்வாயார்க் 

  காடாதே ஆடினேன்

ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.  61 

 

 

ஆளானம் சேர்களிறும் 

  தேரும் அடல்மாவும்

ஆளானார் ஊரத்தான் 

  ஏறூரும் - தாளான்பொய்

நாடகங்க ளாட்டயரும் 

  நம்பன் திருநாமம்

நாடகங்கள் ஆடி நயந்து.  62 

 

 

நயந்தநாள் யானிரப்ப 

  நற்சடையான் கொன்றை

நயந்தநாள் நன்னீர்மை 

  வாட - நயந்தநாள்

அம்பகலஞ் செற்றான் 

  அருளான் அநங்கவேள்

அம்பகலம் பாயும் அலர்ந்து.  63 

 

 

அலங்காரம் ஆடரவம் 

  என்புதோல் ஆடை

அலங்கார வண்ணற் 

  கழகார் - அலங்காரம்

மெய்காட்டு வார்குழலார் 

  என்னாவார் வெள்ளேற்றான்

மெய்காட்டும் வீடாம் விரைந்து.  64 

 

 

விரையார் புனற்கங்கை 

  சேர்சடையான் பொன்னார்

விரையார் பொழிலுறந்தை 

  மேயான் - விரையாநீ

றென்பணிந்தான் ஈசன் 

  இறையான் எரியாடி

என்பணிந்தான் ஈசன் எனக்கு.  65 

 

 

எனக்குவளை நில்லா 

  எழில்இழந்தேன் என்னும்

எனக்குவளை நில்லாநோய் 

  செய்தான் - இனக்குவளைக்

கண்டத்தான் நால்வேதன் 

  காரோணத் தெம்மானைக்

கண்டத்தான் நெஞ்சேகாக் கை.  66 

 

 

காக்கைவளை என்பார்ப்பார்க் 

  கன்பாப்பா னையாதே

காக்கைவளை யென்பார்ப்பான் 

  ஊன்குரக்குக் - காக்கைவளை

ஆடானை ஈருரியன் 

  ஆண்பெண் அவிர்சடையன்

ஆடானை யான தமைவு.  67 

 

 

அமையாமென் தோள்மெலிவித் 

  தம்மாமை கொண்டிங்

கமையாநோய் செய்தான் 

  அணங்கே - எமையாளும்

சாமத்த கண்டன் 

  சடைசேர் இளம்பிறையன்

சாமத்தன் இந்நோய்செய் தான்.  68 

 

 

தானக்கன் நக்க பிறையன் 

  பிறைக்கோட்டுத்

தானக் களிற்றுரியன் 

  தண்பழனன் - தானத்

தரையன் அரவரையன் 

  ஆயிழைக்கும் மாற்கும்

அரையன் உடையான் அருள்.  69 

 

 

அருள்நம்பாற் செஞ்சடையன் 

  ஆமாத்தூர் அம்மான்

அருள்நம்பால் நல்கும் 

  அமுதன் - அருள்நம்பால்

ஓராழித் தேரான் 

  எயிறட்ட உத்தமனை

ஓராழி நெஞ்சே உவ.  70 

 

 

உவவா நறுமலர்கொண் 

  டுத்தமனை உள்கி

உவவா மனமகிழும் 

  வேட்கை - உவவா

றெழுமதிபோல் வாண்முகத் 

  தீசனார்க் கென்னே

எழுமதிபோல் ஈசன் இடம்.  71 

 

 

இடமால் வலமாலை 

  வண்ணமே தம்பம்

இடமால் வலமானஞ் 

  சேர்த்தி -இடமாய

மூளா மதிபுரையும் 

  முன்னிலங்கு மொய்சடையான்

மூவா மதியான் முனி.  72 

 

 

முனிவன்மால் செஞ்சடையான் 

  முக்கணான் என்னும்

முனிவன்மால் செய்துமுன் 

  நிற்கும் - முனிவன்மால்

போற்றார் புரமெரித்த 

  புண்ணியன்தன் பொன்னடிகள்

போற்றாநாள் இன்று புலர்ந்து.  73 

 

 

புலர்ந்தால்யான் ஆற்றேன் 

  புறனுரையும் அஃதே

புலர்ந்தானூர் புன்கூரான் 

  என்னும் - புலர்ந்தாய

மண்டளியன் அம்மான் 

  அவர்தம் அடியார்தம்

மண்டளியன் பின்போம் மனம்.  74 

 

 

மனமாய நோய்செய்தான் 

  வண்கொன்றை தாரான்

மனமாய உள்ளார 

  வாரான் -மனமாயப்

பொன்மாலை சேரப் 

  புனைந்தான் புனைதருப்பைப்

பொன்மாலை சேர்சடையான் போந்து.  75 

 

 

போந்தார் புகஅணைந்தார் 

  பொன்னேர்ந்தார் பொன்னாமை

போந்தார் ஒழியார் 

  புரமெரித்தார் - போந்தார்

இலங்கோல வாள்முகத் 

  தீசனாற் கெல்லே

இலங்கோலந் தோற்ப தினி.  76 

 

 

இனியாரும் ஆளாக 

  எண்ணுவர்கொல் எண்ணார்

இனியானஞ் சூணிருக்கைக் 

  குள்ளான் - இனியானைத்

தாளங்கை யாற்பாடித் 

  தாழ்சடையான் தானுடைய

தாளங்கை யால்தொழுவார் தாம்.  77 

 

 

தாமரைசேர் நான்முகற்கும் 

  மாற்கும் அறிவரியார்

தாமரைசேர் பாம்பர் 

  சடாமகுடர் - தாமரைசேர்

பாணியார் தீர்ந்தளிப்பர் 

  பாரோம்பு நான்மறையார்

பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.  78 

 

 

பார்கால்வான் நீர்தீப் 

  பகலோன் பனிமதியோன்

பார்கோல மேனிப் 

  பரனடிக்கே - பார்கோலக்

கோகரணத் தானறியக் 

  கூறுதியே நன்னெஞ்சே

கோகரணத் தானாய கோ.  79 

 

 

கோப்பாடி ஓடாதே நெஞ்சம் 

  மொழி கூத்தன்

கோப்பாடிக் கோகரணங் 

  குற்றாலம் -கோப்பாடிப்

பின்னைக்காய் நின்றார்க் 

  கிடங்கொடுக்கும் பேரருளான்

பின்னைக்காம் எம்பெருமான் பேர்.  80 

 

 

பேரானை ஈருரிவை 

  போர்த்தானை ஆயிரத்தெண்

பேரானை ஈருருவம் 

  பெற்றானைப் - பேராநஞ்

சுண்டானை உத்தமனை 

  உள்காதார்க் கெஞ்ஞான்றும்

உண்டாம்நா ளல்ல உயிர்.  81 

 

 

உயிராய மூன்றொடுக்கி 

  ஐந்தடக்கி உள்ளத்

துயிராய ஒண்மலர்த்தாள் 

  ஊடே - உயிரான்

பகர்மனத்தான் பாசுபதன் 

  பாதம் பணியப்

பகர்மனமே ஆசைக்கட் பட்டு.  82 

 

 

பட்டாரண் பட்டரங்கன் 

  அம்மான் பரஞ்சோதி

பட்டார் எலும்பணியும் 

  பாசுபதன் - பட்டார்ந்த

கோவணத்தான் கொல்லேற்றன் 

  என்றென்று நெஞ்சமே

கோவணத்து நம்பனையே கூறு.  83 

 

 

கூற்றும் பொருளும்போற் 

  காட்டியென் கோல்வளையைக்

கூற்றின் பொருள்முயன்ற 

  குற்றாலன் - கூற்றின்

செருக்கழியச் செற்ற 

  சிவற்கடிமை நெஞ்சே

செருக்கழியா முன்னமே செய்.  84 

 

 

செய்யான் கருமிடற்றான் 

  செஞ்சடையான் தேன்பொழில்சூழ்

செய்யான் பழனத்தான் 

  மூவுலகும் - செய்யாமுன்

நாட்டுணாய் நின்றானை 

  நாடுதும்போய் நன்னெஞ்சே

நாட்டுணாய் நின்றானை நாம்.  85 

 

 

நாவாய் அகத்துளதே 

  நாமுளமே நம்மீசன்

நாவாய்போல் நன்னெறிக்கண் 

  உய்க்குமே - நாவாயால்

துய்க்கப் படும்பொருளைக் 

  கூட்டுதும் மற்றவர்க்காள்

துய்க்கப் படுவதாஞ் சூது.  86 

 

 

சூதொன் றுனக்கறியச் 

  சொல்லினேன் நன்னெஞ்சே

சூதன் சொலற்கரிய 

  சோதியான் - சூதின்

கொழுந்தேன் கமழ்சோலைக் 

  குற்றாலம் பாடிக்

கொழுந்தே இழந்தேன் குருகு.  87 

 

 

குருகிளவேய்த் தோள்மெலியக் 

  கொங்கைமார் புல்கிக்

குருகிளையார் கோடு 

  கொடாமே - குருகிளரும்

போதார் கழனிப் 

  புகலூர் அமர்ந்துறையும்

போதாநின் பொன்முடிக்கட் போது.  88 

 

 

போதரங்க வார்குழலார் 

  என்னாவார் நன்னெஞ்சே

போதரங்க நீர்கரந்த 

  புண்ணியனைப் - போதரங்கக்

கானகஞ்சேர் சோதியே 

  கைவிளக்கா நின்றாடும்

கானகஞ்சேர் வாற்கடிமை கல்.  89 

 

 

கற்றான்அஞ் சாடுகா 

  வாலி களந்தைக்கோன்

கற்றானைக் கல்லாத 

  நாளெல்லாம் - கற்றான்

அமரர்க் கமரர் 

  அரர்க்கடிமை பூண்டார்

அமரர்க் கமரரா வார்.  90 

 

 

ஆவா மனிதர் 

  அறிவிலரே யாதொன்றும்

ஆவார்போற் காட்டி 

  அழிகின்றார் - ஆஆ

பகல்நாடிப் பாடிப் 

  படர்சடைக்குப் பல்பூப்

பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.  91 

 

 

பகனாட்டம் பாட்டயரும் 

  பாட்டோ டாட் டெல்லி

பகனாட்டம் பாழ்படுக்கும் 

  உச்சி - பகனாட்டம்

தாங்கால் தொழுதெழுவார் 

  தாழ்சடையார் தம்முடைய

தாங்கால் தொழுதல் தலை.  92 

 

 

தலையாலங் காட்டிற் 

  பலிதிரிவர் என்னும்

தலையாலங் காடர்தாம் 

  என்னும் -தலையாய

பாகீ ரதிவளரும் 

  பல்சடையீர் வல்விடையீர்

பாகீ ரதிவளரும் பண்பு.  93 

 

 

பண்பாய நான்மறையான் 

  சென்னிப் பலிதேர்ந்தான்

பண்பாய பைங்கொன்றைத் 

  தார்அருளான் - பண்பால்

திருமாலு மங்கைச் சிவற் 

  கடிமை செய்வான்

திருமாலு மங்கைச் சிவன்.  94 

 

 

சிவன்மாட் டுகவெழுதும் 

  நாணும் நகுமென்னும்

சிவன்மேய செங்குன்றூர் 

  என்னும் -சிவன்மாட்டங்

காலிங் கனம்நினையும் 

  ஆயிழையீர் அங்கொன்றை

யாலிங் கனம்நினையு மாறு.  95 

 

 

ஆறாவெங் கூற்றுதைத் 

  தானைத்தோல் போர்த்துகந்தங்

காறார் சடையீர்க் 

  கமையாதே - ஆறாத

ஆனினித்தார் தாந்தம் 

  அணியிழையி னார்க்கடிமை

ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.  96 

 

 

ஆட்டும் அரவர் அழிந்தார் 

  எலும்பணிவார்

ஆட்டும் இடுபலிகொண் 

  டார்அமரர் - ஆட்டுமோர்

போரேற்றான் கொன்றையான் 

  போந்தான் பலிக்கென்று

போரேற்றான் போந்தான் புறம்.  97 

 

 

புறந்தாழ் குழலார் 

  புறனுரைஅஞ் சாதே

புறந்தாழ் புலிப்பொதுவுள் 

  ஆடி - புறந்தாழ்பொன்

மேற்றளிக்கோன் வெண்பிறையான் 

  வெண்சுடர்போல் மேனியான்

மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.  98 

 

 

மெய்யன் பகலாத 

  வேதியன் வெண்புரிநூல்

மெய்யன் விரும்புவார்க் 

  கெஞ்ஞான்றும் -வெய்ய

துணையகலா நோக்ககலா 

  போற்றகலா நெஞ்சே

துணையிகலா கூறுவான் நூறு.  99 

 

 

நூறான் பயன்ஆட்டி 

  நூறு மலர்சொரிந்து

நூறா நொடிஅதனின் 

  மிக்கதே - நூறா

உடையான் பரித்தஎரி 

  உத்தமனை வெள்ளே

றுடையானைப் பாடலால் ஒன்று.  100 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஏனாதிநாத நாயனார்
View Details
வேதப் பொருளுரைத்தல்
View Details
வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details