பதினொன்றாம்-திருமுறை

016 கார் எட்டு

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அரவம் அரைக்கசைத்த 

  அண்ணல் சடைபோல்

விரவி எழுந்தெங்கும் 

  மின்னி - அரவினங்கள்

அச்சங்கொண் டோடி 

  அணைய அடைவுற்றே

கைச்சங்கம் போல்முழங்கும் கார்.  1 

 

 

மையார் மணிமிடறு 

  போற்கருகி மற்றவன்தன்

கையார் சிலை விலகிக் 

  காட்டிற்றே - ஐவாய்

அழலரவம் பூண்டான் 

  அவிர்சடைபோல் மின்னிக்

கழலரவம் காண்புற்ற கார்.  2 

 

 

ஆலமர் கண்டத் 

  தரன்தன் மணிமிடறும்

கோலக் குழற்சடையும் 

  கொல்லேறும் - போல

இருண்டொன்று மின்தோன்றி 

  அம்பொனவ் வானம்

கருண்டொன்று கூடுதலிற் கார்.  3 

 

 

இருள்கொண்ட கண்டத் 

  திறைவன்தன் சென்னிக்

குருள்கொண்ட செஞ்சடைபோல் 

  மின்னிச் - சுருள்கொண்டு

பாம்பினங்கள் அஞ்சிப் 

  படம்ஒடுங்க ஆர்த்ததே

காம்பினங்கள் தோள்ஈயக் கார்.  4 

 

 

கோடரவங் கோடல் 

  அரும்பக் குருமணிகான்

றாடரவம் எல்லாம் 

  அளையடைய - நீடரவப்

பொற்பகலம் பூண்டான் 

  புரிசடைபோல் மின்னிற்றே

கற்பகலம் காண்புற்ற கார்.  5 

 

 

பாரும் பனிவிசும்பும் 

  பாசுபதன் பல்சடையும்

ஆரும் இருள்கீண்டு 

  மின்விலகி - ஊரும்

அரவஞ் செலவஞ்சும் 

  அஞ்சொலார் காண்பார்

கரவிந்தம் என்பார்அக் கார்.  6 

 

 

செழுந்தழல் வண்ணன் 

  செழுஞ்சடைபோல் மின்னி

அழுந்தி அலர்போல் 

  உயர - எழுந்தெங்கும்

ஆவிசோர் நெஞ்சினரை 

  அன்பளக்க உற்றதே

காவிசேர் கண்ணாய்அக் கார்.  7 

 

 

காந்தள் மலரக் 

  கமழ்கொன்றை பொன்சொரியப்

பூந்தளவம் ஆரப் 

  புகுந்தின்றே - ஏந்தொளிசேர்

அண்டம்போல் மீதிருண்ட 

  ஆதியான் ஆய்மணிசேர்

கண்டம்போல் மீதிருண்ட கார்.  8 

 

திருச்சிற்றம்பலம்