முதல்-திருமுறை

111 அருத்தனை அறவனை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  கடைமுடி

திருச்சிற்றம்பலம்

 

அருத்தனை அறவனை அமுதனைநீர்

விருத்தனைப் பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்

கருத்தவன் வளநகர் கடைமுடியே.  1 

 

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்

அரைபொரு புலியதள் அடிகளிடந்

திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்

கரைபொரு வளநகர் கடைமுடியே.  2 

 

ஆலிள மதியினொ டரவுகங்கை

கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி

ஏலநன் மலரொடு விரைகமழுங்

காலன வளநகர் கடைமுடியே.  3 

 

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்

மையணி மிடறுடை மறையவனூர்

பையணி யரவொடு மான்மழுவாள்

கையணி பவனிடங் கடைமுடியே.  4 

 

மறையவன் உலகவன் மாயமவன்

பிறையவன் புனலவன் அனலுமவன்

இறையவன் எனவுல கேத்துங்கண்டங்

கறையவன் வளநகர் கடைமுடியே.  5 

 

படவர வேரல்குற் பல்வளைக்கை

மடவர லாளையொர் பாகம்வைத்துக்

குடதிசை மதியது சூடுசென்னிக்

கடவுள்தன் வளநகர் கடைமுடியே.  6 

 

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்

அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்

கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்

கடிபுல்கு வளநகர் கடைமுடியே.  7 

 

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்

சாதல்செய் தவனடி சரணெனலும்

ஆதர வருள்செய்த அடிகளவர்

காதல்செய் வளநகர் கடைமுடியே.  8 

 

அடிமுடி காண்கிலர் ஓரிருவர்

புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்

சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்

கடைமுடி யதனயல் காவிரியே.  9 

 

மண்ணுதல் பறித்தலு மாயமிவை

எண்ணிய காலவை யின்பமல்ல

ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த

கண்ணுதல் வளநகர் கடைமுடியே.  10 

 

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்

சென்றடை கடைமுடிச் சிவனடியை

நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன

இன்றமி ழிவைசொல இன்பமாமே. 11

 

திருச்சிற்றம்பலம்