பதினொன்றாம்-திருமுறை

011 திருஈங்கோய்மலை எழுபது

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அடியும் முடியும் 

  அரியும் அயனும்

படியும் விசும்பும்பாய்ந் 

  தேறி - நொடியுங்கால்

இன்ன தென அறியா 

  ஈங்கோயே - ஓங்காரம்

அன்னதென நின்றான் மலை.  1 

 

 

அந்தஇள மாக்குழவி 

  ஆயம் பிரிந்ததற்குக்

கொந்தவிழ்தேன் தோய்த்துக் 

  குறமகளிர் - சந்தின்

இலைவளைக்கை யாற்கொடுக்கும் 

  ஈங்கோயே மேரு

மலைவளைக்கை வில்லி மலை.  2 

 

 

அம்பள வாய்மகளிர் 

  அம்மனைக்குத் தம்மனையைச்

செம்பவளந் தாவென்னச் 

  சீர்க்குறத்தி - கொம்பின்

இறுதலையி னாற்கிளைக்கும் 

  ஈங்கோயே நம்மேல்

மறுதலைநோய் தீர்ப்பான் மலை.  3 

 

 

அரிகரியைக் கண்டவிடத் 

  தச்சலிப்பாய் ஓடப்

பிரிவரிய தன்பிடியைப் 

  பேணிக் - கரிபெரிதும்

கையெடுத்து நீட்டிக் 

  கதஞ்சிறக்கும் ஈங்கோயே

மையடுத்த கண்டன் மலை.  4 

 

 

அரியும் உழுவையும் 

  ஆளியுமே ஈண்டிப்

பரியிட்டுப் பன்மலர்கொண் 

  டேறிச் - சொரிய

எரியாடி கண்டுகக்கும் 

  ஈங்கோயே கூற்றம்

திரியாமற் செற்றான் சிலம்பு.  5 

 

 

ஆளி தொடர 

  அரிதொடர ஆங்குடனே

வாளி கொடுதொடரும் 

  மாக்குறவர் - கோளின்

இடுசிலையி னாற்புடைக்கும் 

  ஈங்கோயே நம்மேற்

கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.  6 

 

 

இடுதினைதின் வேழங் 

  கடியக் குறவர்

வெடிபடு வெங்கவண்கல் 

  ஊன்ற - நெடுநெடென

நீண்டகழை முத்துதிர்க்கும் 

  ஈங்கோயே ஏங்குமணி

பூண்டகழை யேறி பொருப்பு.  7 

 

 

ஈன்ற குறமகளிர்க் 

  கேழை முதுகுறத்தி

நான்றகறிக் கேறசலை 

  நற்கிழங் - கூன்றவைத்

தென்னன்னை உண்ணென் 

  றெடுத்துரைக்கும் ஈங்கோயே

மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.  8 

 

 

ஈன்ற குழவிக்கு மந்தி 

  இறுவரை மேல்

நான்ற நறவத்தைத் 

  தான்நணுகித் - தோன்ற

விரலால்தேன் தோய்த்தூட்டும் 

  ஈங்கோயே நம்மேல்

வரலாம்நோய் தீர்ப்பான் மலை.  9 

 

 

உண்டிருந்த தேனை 

  அறுபதங்கள் ஊடிப்போய்ப்

பண்டிருந்த யாழ்முரலப் 

  பைம்பொழில்வாய்க் -கண்டிருந்த

மாமயில்கள் ஆடி 

  மருங்குவரும் ஈங்கோயே

பூமயிலி தாதை பொருப்பு.  10 

 

 

ஊடிப் பிடியுறங்க 

  ஒண்கதலி வண்கனிகள்

நாடிக் களிறு 

  நயந்தெடுத்துக் - கூடிக்

குணமருட்டிக் கொண்டாடும் 

  ஈங்கோயே வானோர்

குணமருட்டுங் கோளரவன் குன்று.  11 

 

 

எய்யத் தொடுத்தோன் 

  குறத்திநோக் கேற்றதெனக்

கையிற் கணைகளைந்து 

  கன்னிமான் - பையப்போ

என்கின்ற பாவனைசெய் 

  ஈங்கோயே தூங்கெயில்கள்

சென்றன்று வென்றான் சிலம்பு.  12 

 

 

ஏழை இளமாதே 

  என்னொடுநீ போதென்று

கூழை முதுவேடன் 

  கொண்டுபோய் - வேழ

இனைக்குவால் வீட்டுவிக்கும் 

  ஈங்கோயே நந்தம்

வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.  13 

 

 

ஏனம் உழுத 

  புழுதி இனமணியைக்

கானவர்தம் மக்கள் 

  கனலென்னக் - கூனல்

இறுக்கங் கதிர்வெதுப்பும் 

  ஈங்கோயே நம்மேல்

மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.  14 

 

 

ஏனங் கிளைத்த 

  இனபவள மாமணிகள்

கானல் எரிபரப்பக் 

  கண்டஞ்சி - யானை

இனம்இரிய முல்லைநகும் 

  ஈங்கோயே நம்மேல்

வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு.  15 

 

 

ஒருகணையுங் கேழல் 

  உயிர்செகுத்துக் கையில்

இருகணையும் ஆனைமேல் 

  எய்ய - அருகணையும்

ஆளரிதான் ஓட 

  அரிவெருவும் ஈங்கோயே

கோளரிக்கும் காண்பரியான் குன்று.  16 

 

 

ஓங்கிப் பரந்தெழுந்த 

  ஒள்ளிலவத் தண்போதைத்

தூங்குவதோர் கொள்ளி 

  எனக்கடுவன் - மூங்கில்

தழையிறுத்துக் கொண்டோச்சும் 

  ஈங்கோயே சங்கக்

குழையிறுத்த காதுடையான் குன்று.  17 

 

 

ஓடும் முகிலை 

  உகிரால் இறஊன்றி

மாடுபுக வான்கை 

  மிகமடுத்து - நீடருவி

மாச்சீயம் உண்டு 

  மனங்களிக்கும் ஈங்கோயே

கோச்சீயம் காண்பரியான் குன்று.  18 

 

 

கண்ட கனிநுகர்ந்த 

  மந்தி கருஞ்சுனைநீர்

உண்டு குளிர்ந்திலஎன் 

  றூடிப்போய்க் -கொண்டல்

இறைக்கீறி வாய்மடுக்கும் 

  ஈங்கோயே நான்கு

மறைக்கீறு கண்டான் மலை.  19 

 

 

கருங்களிற்றின் வெண்கொம்பால் 

  கல்லுரல்வாய் நல்லார்

பெருந்தினைவெண் பிண்டி 

  இடிப்ப - வருங்குறவன்

கைக்கொணருஞ் செந்தேன் 

  கலந்துண்ணும் ஈங்கோயே

மைக்கொணருங் கண்டன் மலை.  20 

 

 

கனைய பலாங்கனிகள் 

  கல்லிலையர் தொக்க

நனைய கலத்துரத்தில் 

  ஏந்தி - மனைகள்

வரவிரும்பி ஆய்பார்க்கும் 

  ஈங்கோயே பாங்கார்

குரவரும்பு செஞ்சடையான் குன்று.  21 

 

 

கடக்களிறு கண்வளரக் 

  கார்நிறவண் டார்ப்பச்

சுடர்க்குழையார் பாட்டெழவு 

  கேட்டு - மடக்கிளிகள்

கீதந் தெரிந்துரைக்கும் 

  ஈங்கோயே ஆல்கீழ்நால்

வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.  22 

 

 

கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் 

  கார்யானை சந்தம்

இறுத்துக்கை நீட்டும்ஈங் 

  கோயே - செறுத்த

கடதடத்த தோலுரிவைக் 

  காப்பமையப் போர்த்த

விடமிடற்றி னான்மருவும் வெற்பு.  23 

 

 

கங்குல் இரைதேரும் 

  காகோ தரங்கேழற்

கொம்பி னிடைக் கிடந்த 

  கூர்மணியைப் - பொங்கி

உருமென்று புற்றடையும் 

  ஈங்கோயே காமன்

வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.  24 

 

 

கலவிக் களிறசைந்த 

  காற்றெங்குங் காணா

திலைகைக்கொண் டேந்திக்கால் 

  வீச - உலவிச்சென்

றொண்பிடிகாற் றேற்றுகக்கும் 

  ஈங்கோயே பாங்காய

வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.  25 

 

 

கன்னிப் பிடிமுதுகிற் 

  கப்பருவ முட்பருகி

அன்னைக் குடிவர 

  லாறஞ்சிப் - பின்னரே

ஏன்தருக்கி மாதவஞ்செய் 

  ஈங்கோயே நீங்காத

மான்தரித்த கையான் மலை.  26 

 

 

கள்ள முதுமறவர் 

  காட்டகத்து மாவேட்டை

கொள்ளென் றழைத்த 

  குரல்கேட்டுத் -துள்ளி

இனக்கவலை பாய்ந்தோடும் 

  ஈங்கோயே நந்தம்

மனக்கவலை தீர்ப்பான் மலை.  27 

 

 

கல்லைப் புனம்மேய்ந்து 

  கார்க்கொன்றைத் தார்போர்த்துக்

கொல்லை எழுந்த 

  கொழும்புறவின் - முல்லையங்கண்

பல்லரும்பு மொய்த்தீனும் 

  ஈங்கோயே மூவெயிலும்

கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.  28 

 

 

கல்லாக் குரங்கு 

  பளிங்கிற் கனிகாட்ட

எல்லாக் குரங்கும் 

  உடன்ஈண்டி - வல்லே

இருந்துகிராற் கற்கிளைக்கும் 

  ஈங்கோயே மேனிப்

பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.  29 

 

 

கண்கொண் டவிர்மணியின் 

  நாப்பண் கருங்கேழல்

வெண்கோடு வீழ்ந்த 

  வியன்சாரல் -தண்கோ

டிளம்பிறைசேர் வான்கடுக்கும் 

  ஈங்கோயே வேதம்

விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.  30 

 

 

காந்தளங் கைத்தலங்கள் 

  காட்டக் களிமஞ்ஞை

கூந்தல் விரித்துடனே 

  கூத்தாடச் - சாய்ந்திரங்கி

ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் 

  ஈங்கோயே செஞ்சடைமேல்

கார்க்கொன்றை ஏற்றான் கடறு.  31 

 

 

குறமகளிர் கூடிக் 

  கொழுந்தினைகள் குத்தி

நறவமாக் கஞ்சகங்கள் 

  நாடிச் - சிறுகுறவர்

கைந்நீட்டி உண்ணக் 

  களித்துவக்கும் ஈங்கோயே

மைந்நீட்டுங் கண்டன் மலை.  32 

 

 

கூழை முதுமந்தி 

  கோல்கொண்டு தேன்பாய

ஏழை இளமந்தி 

  சென்றிருந்து - வாழை

இலையால்தேன் உண்டுவக்கும் 

  ஈங்கோயே இஞ்சி

சிலையால்தான் செற்றான் சிலம்பு.  33 

 

 

கொல்லை இளவேங்கைக் 

  கொத்திறுத்துக் கொண்டுசுனை

மல்லைநீர் மஞ்சனமா 

  நாட்டிக்கொண் - டொல்லை

இருங்கைக் களிறேறும் 

  ஈங்கோயே மேல்நோய்

வருங்கைக் களைவான் மலை.  34 

 

 

கொவ்வைக் கனிவாய்க் 

  குறமகளிர் கூந்தல்சேர்

கவ்வைக் கடிபிடிக்கும் 

  காதன்மையாற் -செவ்வை

எறித்தமலர் கொண்டுவிடும் 

  ஈங்கோயே அன்பர்

குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.  35 

 

 

கொடுவிற் சிலைவேடர் 

  கொல்லை புகாமல்

படுகுழிகள் கல்லுதல்பார்த் 

  தஞ்சி - நெடுநாகம்

தண்டூன்றிச் செல்லுஞ்சீர் 

  ஈங்கோயே தாழ்சடைமேல்

வண்டூன்றுந் தாரான் மலை.  36 

 

 

கோங்கின் அரும்பழித்த 

  கொங்கைக் குறமகளிர்

வேங்கைமணி நீழல் 

  விளையாடி - வேங்கை

வரவதனைக் கண்டிரியும் 

  ஈங்கோயே தீங்கு

வரவதனைக் காப்பான் மலை.  37 

 

 

சந்தனப்பூம் பைந்தழையைச் 

  செந்தேனில் தோய்த்தியானை

மந்த மடப்பிடியின் 

  வாய்க்கொடுப்ப - வந்ததன்

கண்களிக்கத் தான்களிக்கும் 

  ஈங்கோயே தேங்காதே

விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.  38 

 

 

சந்தின் இலையதனுள் 

  தண்பிண்டி தேன்கலந்து

கொந்திஇனி துண்ணக் 

  குறமகளிர் - மந்தி

இளமகளிர் வாய்க்கொடுத்துண் 

  ஈங்கோயே வெற்பின்

வளமகளிர் பாகன் மலை.  39 

 

 

சாரற் குறத்தியர்கள் 

  தண்மருப்பால் வெண்பிண்டி

சேரத் தருக்கி 

  மதுக்கலந்து - வீரத்

தமர்இனிதா உண்ணுஞ்சீர் 

  ஈங்கோயே இன்பக்

குமரன்முது தாதையார் குன்று.  40 

 

 

தாயோங்கித் தாமடருந் 

  தண்சாரல் ஒண்கானம்

வேயோங்கி முத்தம் 

  எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்

கண்கன்றித் தீவிளைக்கும் 

  ஈங்கோயே செஞ்சடைமேல்

வண்கொன்றைத் தாரான் வரை.  41 

 

 

செடிமுட்டச் சிங்கத்தின் 

  சீற்றத்தீக் கஞ்சிப்

பிடியட்ட மாக்களிறு 

  பேர்ந்து - கடம்முட்டி

என்னேசீ என்னுஞ்சீர் 

  ஈங்கோயே ஏந்தழலிற்

பொன்னேர் அனையான் பொருப்பு.  42 

 

 

சுனைநீடு தாமரையின் 

  தாதளைந்து சோதிப்

புனைநீடு பொன்னிறத்த 

  வண்டு - மனைநீடி

மன்னி மணம்புணரும் 

  ஈங்கோயே மாமதியம்

சென்னி அணிந்தான் சிலம்பு.  43 

 

 

செந்தினையின் வெண்பிண்டி 

  பச்சைத்தே னாற்குழைத்து

வந்தவிருந் தூட்டும் 

  மணிக்குறத்தி - பந்தியாத்

தேக்கிலைகள் இட்டுச் 

  சிறப்புரைக்கும் ஈங்கோயே

மாக்கலைகள் வைத்தான் மலை.  44 

 

 

தடங்குடைந்த கொங்கைக் 

  குறமகளிர் தங்கள்

இடம்புகுந்தங் கின்நறவம் 

  மாந்தி - உடன்கலந்து

மாக்குரவை ஆடி 

  மகிழ்ந்துவரும் ஈங்கோயே

கோக்குரவை ஆடிகொழுங் குன்று.  45 

 

 

தாமரையின் தாள்தகைத்த 

  தாமரைகள் தாள்தகையத்

தாமரையிற் பாய்ந்துகளும் 

  தண்புறவில் - தாமரையின்

ஈட்டம் புலிசிதறும் 

  ஈங்கோயே எவ்வுயிர்க்கும்

வாட்டங்கள் தீர்ப்பான் மலை.  46 

 

 

தெள்ளகட்ட பூஞ்சுனைய 

  தாமரையின் தேமலர்வாய்

வள்ளவட்டப் பாழி 

  மடலேறி -வெள்ளகட்ட

காராமை கண்படுக்கும் 

  ஈங்கோயே வெங்கூற்றைச்

சேராமற் செற்றான் சிலம்பு.  47 

 

 

தேன்பலவின் வான்சுளைகள் 

  செம்முகத்த பைங்குரங்கு

தான்கொணர்ந்து மக்கள்கை 

  யிற்கொடுத்து - வான்குணங்கள்

பாராட்டி யூட்டுஞ்சீர் 

  ஈங்கோயே பாங்கமரர்

சீராட்ட நின்றான் சிலம்பு.  48 

 

 

தேன்மருவு பூஞ்சுனைகள் 

  புக்குச் செழுஞ்சந்தின்

கானமர்கற் பேரழகு 

  கண்குளிர - மேனின்

றருவிகள்தாம் வந்திழியும் 

  ஈங்கோயே வானோர்

வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.  49 

 

 

தோகை மயிலினங்கள் 

  சூழ்ந்து மணிவரைமேல்

ஓகை செறியாயத் 

  தோடாட - நாகம்

இனவளையிற் புக்கொளிக்கும் 

  ஈங்கோயே நம்மேல்

வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.  50 

 

 

நறவம் நனிமாந்தி 

  நள்ளிருட்கண் ஏனம்

இறவி லியங்குவான் 

  பார்த்துக் - குறவர்

இரைத்துவலை தைத்திருக்கும் 

  ஈங்கோயே நங்கை

விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.  51 

 

 

நாக முழைநுழைந்த 

  நாகம்போய் நன்வனத்தில்

நாகம் விழுங்க 

  நடுக்குற்று -நாகந்தான்

மாக்கையால் மஞ்சுரிக்கும் 

  ஈங்கோயே ஓங்கியசெந்

தீக்கையால் ஏந்தி சிலம்பு.  52 

 

 

நாகங் களிறுநு(ங்)க 

  நல்லுழுவை தாமரையின்

ஆகந் தழுவி 

  அசைவெய்த - மேகங்

கருவிடைக்க ணீர்சோரும் 

  ஈங்கோயே ஓங்கு

பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.  53 

 

 

பணவநிலைப் புற்றின் 

  பழஞ்சோற் றமலை

கணவ னிடந்திட்ட 

  கட்டி - உணவேண்டி

எண்கங்கை ஏற்றிருக்கும் 

  ஈங்கோயே செஞ்சடைமேல்

வண்கங்கை ஏற்றான் மலை.  54 

 

 

பன்றி பருக்கோட்டாற் 

  பாருழுத பைம்புழுதித்

தென்றி மணிகிடப்பத் 

  தீயென்று - கன்றிக்

கரிவெருவிக் கான்படரும் 

  ஈங்கோயே வானோர்

மருவரியான் மன்னும் மலை.  55 

 

 

பாறைமிசைத் தன்நிழலைக் 

  கண்டு பகடென்று

சீறி மருப்பொசித்த 

  செம்முகமாத் - தேறிக்கொண்

டெல்லே பிடியென்னும் 

  ஈங்கோயே மூவெயிலும்

வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.  56 

 

 

பிடிபிரிந்த வேழம் 

  பெருந்திசைதான் கோடிப்

படிமுகிலைப் பல்காலும் 

  பார்த்திட் - டிடரா

இருமருப்பைக் கைகாட்டும் 

  ஈங்கோயே வானோர்

குருவருட்குன் றாய்நின்றான் குன்று.  57 

 

 

பொருத கரியின் 

  முரிமருப்பிற் போந்து

சொரிமுத்தைத் தூநீரென் 

  றெண்ணிக் - கருமந்தி

முக்கிவிக்கி நக்கிருக்கும் 

  ஈங்கோயே மூவெயிலும்

திக்குகக்கச் செற்றான் சிலம்பு.  58 

 

 

மறவெங் களிற்றின் 

  மருப்புகுத்த முத்தம்

குறவர் சிறார்குடங்கைக் 

  கொண்டு - நறவம்

இளவெயில்தீ யட்டுண்ணும் 

  ஈங்கோயே மூன்று

வளவெயில்தீ யிட்டான் மலை.  59 

 

 

மலைதிரிந்த மாக்குறவன் 

  மான்கொணர நோக்கிச்

சிலைநுதலி சீறிச் 

  சிலைத்துக் - கலைபிரிய

இம்மான் கொணர்தல் 

  இழுக்கென்னும் ஈங்கோயே

மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.  60 

 

 

மரையதளும் ஆடு 

  மயிலிறகும் வேய்ந்த

புரையிதணம் பூங்கொடியார் 

  புக்கு -நுரைசிறந்த

இன்நறவுண் டாடி 

  இசைமுரலும் ஈங்கோயே

பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.  61 

 

 

மலையர் கிளிகடிய 

  மற்றப் புறமே

கலைகள் வருவனகள் 

  கண்டு -சிலையை

இருந்தெடுத்துக் கோல்தெரியும் 

  ஈங்கோயே மாதைப்

புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.  62 

 

 

மத்தக் கரிமுகத்தை 

  வாளரிகள் பீறஒளிர்

முத்தம் பனிநிகர்க்கும் 

  மொய்ம்பிற்றால் - அத்தகைய

ஏனற் புனம்நீடும் 

  ஈங்கோயே தேங்குபுனல்

கூனற் பிறையணிந்தான் குன்று.  63 

 

 

மந்தி இனங்கள் 

  மணிவரையின் உச்சிமேல்

முந்தி இருந்து 

  முறைமுறையே - நந்தி

அளைந்தாடி ஆலிக்கும் 

  ஈங்கோயே கூற்றம்

வளைந்தோடச் செற்றான் மலை.  64 

 

 

மந்தி மகவினங்கள் 

  வண்பலவின் ஒண்சுளைக்கண்

முந்திப் பறித்த 

  முறியதனுள் -சிந்திப்போய்த்

தேனாறு பாயுஞ்சீர் 

  ஈங்கோயே செஞ்சடைமேல்

வானாறு வைத்தான் மலை.  65 

 

 

முள்ளார்ந்த வெள்ளிலவம் 

  ஏறி வெறியாது

கள்ளார்ந்த பூப்படியும் 

  கார்மயில்தான் - ஒள்ளார்

எரிநடுவுட் பெண்கொடியார் 

  ஏய்க்கும்ஈங் கோயே

புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.  66 

 

 

வளர்ந்த இளங்கன்னி 

  மாங்கொம்பின் கொங்கை

அளைந்து வடுப்படுப்பான் 

  வேண்டி - இளந்தென்றல்

எல்லிப் புகநுழையும் 

  ஈங்கோயே தீங்கருப்பு

வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.  67 

 

 

வான மதிதடவல் 

  உற்ற இளமந்தி

கான முதுவேயின் 

  கண்ணேறித் - தானங்

கிருந்துயரக் கைநீட்டும் 

  ஈங்கோயே நம்மேல்

வருந்துயரந் தீர்ப்பான் மலை.  68 

 

 

வேய்வனத்துள் யானை 

  தினைகவர வேறிருந்து

காய்வனத்தே வேடன் 

  கணைவிசைப்ப - வேயணைத்து

மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் 

  கோயே மறைபரவு

பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.  69 

 

 

வழகிதழ்க் காந்தள்மேல் 

  வண்டிருப்ப ஒண்தீ

முழுகிய தென் றஞ்சிமுது 

  மந்தி -பழகி

எழுந்தெழுந்து கைநெரிக்கும் 

  ஈங்கோயே திங்கட்

கொழுந்தெழுந்த 

  செஞ்சடையான் குன்று.  70 

 

திருச்சிற்றம்பலம்