பதினொன்றாம்-திருமுறை

010 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சொல்லும் பொருளுமே 

  தூத்திரியும் நெய்யுமா

நல்லிடிஞ்சில் என்னுடைய 

  நாவாகச் -சொல்லரிய

வெண்பா விளக்கா 

  வியன்கயிலை மேலிருந்த

பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.  1 

 

 

பெற்ற பயனிதுவே 

  அன்றே பிறந்தியான்

கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் 

  காளத்திக் - கொற்றவர்க்குத்

தோளாகத் தாடரவம் 

  சூழ்ந்தணிந்த அம்மானுக்

காளாகப் பெற்றேன் அடைந்து.  2 

 

 

அடைந்துய்ம்மின் அம்மானை 

  உம்ஆவி தன்னைக்

குடைந்துண்ண எண்ணியவெங் 

  கூற்றம் - குடைந்துநும்

கண்ணுளே பார்க்கும் 

  பொழுது கயிலாயத்

தண்ணலே கண்டீர் அரண்.  3 

 

 

அரணம் ஒருமூன்றும் 

  ஆரழலாய் வீழ

முரணம்பு கோத்த 

  முதல்வன் சரணமே

காணுமால் உற்றவன்றன் 

  காளத்தி கைதொழுது

பேணுமால் உள்ளம் பெரிது.  4 

 

 

பெரியவர்கா ணீர்என் 

  உள்ளத்தின் பெற்றி

தெரிவரிய தேவாதி 

  தேவன் - பெரிதும்

திருத்தக்கோர் ஏத்துந் 

  திருக்கயிலைக் கோனை

இருத்தத்தான் போந்த திடம்.  5 

 

 

இடப்பாகம் நீள்கோட் 

  டிமவான் பயந்த

மடப்பாவை தன்வடிவே 

  ஆனால் - விடப்பாற்

கருவடிசேர் கண்டத்தெங் 

  காளத்தி ஆள்வார்க்

கொருவடிவே அன்றால் உரு.  6 

 

 

உருவு பலகொண் 

  டுணர்வரிதாய் நிற்கும்

ஒருவன் ஒருபால் 

  இருக்கை - மருவினிய

பூக்கையிற் கொண் டெப்பொழுதும் 

  புத்தேளிர் வந்திறைஞ்சு

மாக்கயிலை என்னும் மலை.  7 

 

 

மலைவரும்போல் வானவருந் 

  தானவரும் எல்லாம்

அலைகடல்வாய் நஞ்செழல்கண் 

  டஞ்சி -நிலைதளரக்

கண்டமையால் நண்சாரல் 

  காளத்தி ஆள்வார்நஞ்

சுண்டமையால் உண்டிவ் வுலகு.  8 

 

 

உலகம் அனைத்தினுக்கும் 

  ஒண்ணுதல்மேல் இட்ட

திலகம் எனப்பெறினுஞ் 

  சீசீ - இலகியசீர்

ஈசா திருக்கயிலை 

  எம்பெருமான் என்றென்றே

பேசா திருப்பார் பிறப்பு.  9 

 

 

பிறப்புடையர் கற்றோர் 

  பெருஞ்செல்வர் மற்றும்

சிறப்புடையர் ஆனாலுஞ் 

  சீசீ - இறப்பில்

கடியார் நறுஞ்சோலைக் 

  காளத்தி யாள்வார்

அடியாரைப் பேணா தவர்.  10 

 

 

அவரும் பிறந்தவராய்ப் 

  போவார்கொல் ஆவி

எவரும் தொழுதேத்தும் 

  எந்தை - சிவமன்னு

தேக்குவார் சோலைத் 

  திருக்கயிலை ஏத்தாதே

போக்குவார் வாளா பொழுது.  11 

 

 

வாளா பொழுது 

  கழிக்கின்றார் மானுடவர்

கேளார்கொல் அந்தோ 

  கிறிபட்டார் - கீளாடை

அண்ணற் கணுக்கராய்க் 

  காளத்தி யுள்நின்ற

கண்ணப்ப ராவார் கதை.  12 

 

 

கதையிலே கேளீர் 

  கயிலாயம் நோக்கிப்

புதையிருட்கண் மாலோடும் 

  போகிச் - சிதையாச்சீர்த்

தீர்த்தன்பால் பாசுபதம் 

  பெற்றுச் செருக்களத்தில்

பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.  13 

 

 

பண்டு தொடங்கியும் 

  பாவித்தும் நின்கழற்கே

தொண்டு படுவான் 

  தொடர்வேனைக் - கண்டுகொண்டு

ஆளத் தயாவுண்டோ 

  இல்லையோ சொல்லாயே

காளத்தி யாய்உன் கருத்து.  14 

 

 

கருத்துக்குச் சேயையாய்க் 

  காண்தக்கோர் காண

இருத்தி திருக்கயிலை 

  என்றால் - ஒருத்தர்

அறிவான் உறுவார்க் 

  கறியுமா றுண்டோ

நெறிவார் சடையாய் நிலை.  15 

 

 

நிலையிற் பிறவி 

  நெடுஞ்சுழியிற் பட்டுத்

தலைவ தடுமாறு 

  கின்றேன் - தொலைவின்றிப்

போந்தேறக் கைதாராய் 

  காளத்திப் புத்தேளிர்

வேந்தேஇப் பாசத்தை விட்டு.  16 

 

 

பாசத்தை விட்டுநின் 

  பாதத்தின் கீழேஎன்

நேசத்தை வைக்க 

  நினைகண்டாய் - பாசத்தை

நீக்குமா வல்ல 

  கயிலாயா நீஎன்னைக்

காக்குமா றித்தனையே காண்.  17 

 

 

காணா தலக்கின்றார் 

  வானோர்கள் காளத்திப்

பூணார மார்பன்தன் 

  பொற்பாதம் - நாணாதே

கண்டிடுவான் யானிருந்தேன் 

  காணீர் கடல்நஞ்சை

உண்டிடுவான் தன்னை ஒருங்கு.  18 

 

 

ஒருங்கா துடனேநின் 

  றோரைவர் எம்மை

நெருங்காமல் நித்தம் 

  ஒருகால் -நெருங்கிக்

கருங்கலோங் கும்பல் 

  கயிலாயம் மேயான்

வருங்கொலோ நம்பால் மதித்து.  19 

 

 

நம்பால் மதித்துறையும் 

  காளத்தி நண்ணாதே

வம்பார் மலர்தூய் 

  வணங்காதே - நம்பாநின்

சீலங்கள் ஏத்தாதே 

  தீவினையேன் யானிருந்தேன்

காலங்கள் போன கழிந்து.  20 

 

 

கழிந்த கழிகிலாய் 

  நெஞ்சே கழியா

தொழிந்தநாள் மேற்பட் 

  டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்

கண்ணுதலான் எந்தை 

  கயிலாய மால்வரையை

நண்ணுதலாம் நன்மை நமக்கு.  21 

 

 

நமக்கிசைந்த வாநாமும் 

  ஏத்தினால் நம்பர்

தமக்கழகு தாமே 

  அறிவர் -அமைப்பொதும்பிற்

கல்லவா நீடருவிக் 

  காளத்தி ஆள்வாரை

வல்லவா நெஞ்சமே வாழ்த்து.  22 

 

 

வாழ்த்துவாய் வாழ்த்தா 

  தொழிவாய் மறுசுழியிட்

டாழ்த்துவாய் அஃதறிவாய் 

  நீயன்றே - யாழ்த்தகைய

வண்டார் பொழிற்கயிலை 

  வாழ்கென் றிருப்பதே

கண்டாய் அடியேன் கடன்.  23 

 

 

கடநாகம் ஊடாடுங் 

  காளத்திக் கோனைக்

கடனாகக் கைதொழுவார்க் 

  கில்லை - இடம்நாடி

இந்நாட்டிற் கேவந்திங் 

  கீண்டிற்றுக் கொண்டுபோய்

அந்நாட்டில் உண்டுழலு மாறு.  24 

 

 

மாறிப் பிறந்து 

  வழியிடை ஆற்றிடை

ஏறி இழியும் 

  இதுவல்லால் -தேறித்

திருக்கயிலை ஏத்தீரேல் 

  சேமத்தால் யார்க்கும்

இருக்கையிலை கண்டீர் இனிது.  25 

 

 

இனிதே பிறவி 

  இனமரங்கள் ஏறிக்

கனிதேர் கடுவன்கள் 

  தம்மில் -முனிவாய்ப்

பிணங்கிவருந் தண்சாரற் 

  காளத்தி பேணி

வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.  26 

 

 

மகிழ்ந்தலரும் வண்கொன்றை 

  மேலே மனமாய்

நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே 

  நெக்குத் - திகழ்ந்திலங்கும்

விண்ணிறங்கா ஓங்கும் 

  வியன்கயிலை மேயாய்என்

பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.  27 

 

 

பேசும் பரிசறியாள் 

  பேதை பிறர்க்கெல்லாம்

ஏசும் பரிசானாள் 

  ஏபாவம் - மாசுனைநீர்க்

காம்பையலைத் தாலிக்குங் 

  காளத்தி என்றென்று

பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.  28 

 

 

போர்த்த களிற்றுரியும் 

  பூண்ட பொறியரவும்

தீர்த்த மகளிருந்த 

  செஞ்சடையும் - மூர்த்தி

குயிலாய மென்மொழியாள் 

  கூறாய வாறும்

கயிலாயா யான்காணக் காட்டு.  29 

 

 

காட்டில் நடமாடிக் 

  கங்காள ராகிப்போய்

நாட்டிற் பலிதிரிந்து 

  நாடோறும் - ஓட்டுண்பார்

ஆனாலும் என்கொலோ 

  காளத்தி ஆள்வாரை

வானோர் வணங்குமா வந்து.  30 

 

 

வந்தமரர் ஏத்தும் 

  மடைக்கூழும் வார்சடைமேல்

கொந்தவிழும் மாலை 

  கொடுத்தார்கொல் - வந்தித்து

வாலுகுத்த வண்கயிலைக் 

  கோனார்தம் மாமுடிமேல்

பாலுகுத்த மாணிக்குப் பண்டு.  31 

 

 

பண்டிதுவே அன்றாயிற் 

  கேளீர்கொல் பல்சருகு

கொண்டிலங்கத் தும்பிநூற் 

  கூடிழைப்பக் - கண்டு

நலந்திக் கெலாம்ஏத்தும் 

  காளத்தி நாதர்

சிலந்திக்குச் செய்த சிறப்பு.  32 

 

 

செய்த சிறப்பெண்ணில் 

  எங்குலக்குஞ் சென்றடைந்து

கைதொழுவார்க் கெங்கள் 

  கயிலாயர் -நொய்தளவிற்

காலற்காய்ந் தார்அன்றே 

  காணீர் கழல்தொழுத

பாலற்காய் அன்று பரிந்து.  33 

 

 

பரிந்துரைப்பார் சொற்கேளாள் 

  எம்பெருமான் பாதம்

பிரிந்திருக்க கில்லாமை 

  பேசும் - புரிந்தமரர்

நாதாவா காளத்தி 

  நம்பாவா என்றென்று

மாதாவா உற்ற மயல்.  34 

 

 

மயலைத் தவிர்க்கநீ 

  வாராய் ஒருமூன்

றெயிலைப் பொடியாக 

  எய்தாய் - கயிலைப்

பருப்பதவா நின்னுடைய 

  பாதத்தின் கீழே

இருப்பதவா உற்றாள் இவள்.  35 

 

 

இவளுக்கு நல்லவா 

  றெண்ணுதிரேல் இன்றே

தவளப் பொடிஇவள்மேற் 

  சாத்தி - இவளுக்குக்

காட்டுமின்கள் காளத்தி 

  காட்டிக் கமழ்கொன்றை

சூட்டுமின்கள் தீரும் துயர்.  36 

 

 

துயர்க்கெலாம் கூடாய 

  தோற்குரம்பை புக்கு

மயக்கில் வழிகாண 

  மாட்டேன் - வியற்கொடும்போர்

ஏற்றானே வண்கயிலை 

  எம்மானே என்கொலோ

மேற்றான் இதற்கு விளைவு.  37 

 

 

விளையும் வினையரவின் 

  வெய்ய விடத்தைக்

களைமினோ காளத்தி 

  ஆள்வார்- வளைவில்

திருந்தியசீர் ஈசன் 

  திருநாமம் என்னும்

மருந்தினைநீர் வாயிலே வைத்து.  38 

 

 

வாயிலே வைக்கும் 

  அளவில் மருந்தாகித்

தீய பிறவிநோய் 

  தீர்க்குமே - தூயவே

கம்பெருமா தேவியொடு 

  மன்னு கயிலாயத்

தெம்பெருமான் ஓரஞ் செழுத்து.  39 

 

 

அஞ்செழுத்துங் கண்டீர் 

  அருமறைகள் ஆவனவும்

அஞ்செழுத்துங் கற்க 

  அணித்தாகும் - நஞ்சவித்த

காளத்தி யார்யார்க்குங் 

  காண்டற் கரிதாய்ப்போய்

நீளத்தே நின்ற நெறி.  40 

 

 

நெறிவார் சடையாய் 

  நிலையின்மை நீயொன்

றறியாய் கொல் அந்தோ 

  அயர்ந்தாள் - நெறியிற்

கனைத்தருவி தூங்குங் 

  கயிலாயா நின்னை

நினைத்தருவி கண்சோர நின்று.  41 

 

 

நின்றும் இருந்தும் 

  கிடந்தும் நடந்தும்யாம்

என்றும் நினைந்தாலும் 

  என்கொலோ -சென்றுதன்

தாள்வா னவர்இறைஞ்சுந் 

  தண்சாரற் காளத்தி

ஆள்வான் அருளாத வாறு.  42 

 

 

அருளாத வாறுண்டே 

  யார்க்கேனும் ஆக

இருளார் கறைமிடற்றெம் 

  ஈசன் -பொருளாய்ந்து

மெய்ம்மையே உன்னில் 

  வியன்கயிலை மேயான்வந்

திம்மையே தீர்க்கும் இடர்.  43 

 

 

இடரீர் உமக்கோர் 

  இடம்நாடிக் கொண்டு

நடவீரோ காலத்தால் 

  நாங்கள் - கடல்வாய்க்

கருப்பட்டோங் கொண்முகில்சேர் 

  காளத்தி காண

ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.  44 

 

 

உணருங்கால் ஒன்றை 

  உருத்தெரியக் காட்டாய்

புணருங்கால் ஆரமுதே 

  போலும் - இணரிற்

கனியவாஞ் சோலைக் 

  கயிலாயம் மேயாய்

இனியவா காண்நின் இயல்பு.  45 

 

 

நின்னியல்பை யாரே 

  அறிவார் நினையுங்கால்

மன்னியசீர்க் காளத்தி 

  மன்னவனே - நின்னில்

வெளிப்படுவ தேழுலகும் 

  மீண்டே ஒருகால்

ஒளிப்பதுவும் ஆனால் உரை.  46 

 

 

உரையும் பொருளும் 

  உடலும் உயிரும்

விரையும் மலரும்போல் 

  விம்மிப் -புரையின்றிச்

சென்றவா றோங்குந் 

  திருக்கயிலை எம்பெருமான்

நின்றவா றெங்கும் நிறைந்து.  47 

 

 

நிறைந்தெங்கும் நீயேயாய் 

  நின்றாலும் ஒன்றின்

மறைந்தைம் புலன்காண 

  வாராய் - சிறந்த

கணியாருந் தண்சாரற் 

  காளத்தி ஆள்வாய்

பணியாயால் என்முன் பரிசு.  48 

 

 

பரிசறியேன் பற்றிலேன் 

  கற்றிலேன் முற்றும்

கரியுரியாய் பாதமே 

  கண்டாய் - திரியும்

புரம்மாளச் செற்றவனே 

  பொற்கயிலை மன்னும்

பரமா அடியேற்குப் பற்று.  49 

 

 

பற்றாவான் எவ்வுயிர்க்கும் 

  எந்தை பசுபதியே

முற்றாவெண் திங்கள் 

  முளைசூடி -வற்றாவாங்

கங்கைசேர் செஞ்சடையான் 

  காளத்தி யுள்நின்ற

மங்கைசேர் பாகத்து மன்.  50 

 

 

மன்னா கயிலாயா 

  மாமுத்தம் மாணிக்கம்

பொன்னார மாக்கொண்டு 

  பூணாதே - எந்நாளும்

மின்செய்வார் செஞ்சடையாய் 

  வெள்ளெலும்பு பூண்கின்ற

தென்செய்வான் எந்தாய் இயம்பு.  51 

 

 

இயம்பாய் மடநெஞ்சே 

  ஏனோர்பால் என்ன

பயம்பார்த்துப் பற்றுவான் 

  உற்றாய் - புயம்பாம்பால்

ஆர்த்தானே காளத்தி 

  அம்மானே என்றென்றே

ஏத்தாதே வாளா இருந்து.  52 

 

 

இருந்தவா காணீர் 

  இதுவென்ன மாயம்

அருந்தண் கயிலாயத் 

  தண்ணல் - வருந்திப்போய்த்

தான்நாளும் பிச்சை 

  புகும்போலும் தன்னடியார்

வான்ஆள மண்ஆள வைத்து.  53 

 

 

வைத்த இருநிதியே 

  என்னுடைய வாழ்முதலே

நித்திலமே காளத்தி 

  நீள்சுடரே - மொய்த்தொளிசேர்

அக்காலத் தாசை 

  அடிநாயேன் காணுங்கால்

எக்காலத் தெப்பிறவி யான்.  54 

 

 

யானென்று தானென் 

  றிரண்டில்லை என்பதனை

யானென்றுங் கொண்டிருப்பன் 

  ஆனாலும் - தேனுண்

டளிகள்தாம் பாடும் 

  அகன்கயிலை மேயான்

தெளிகொடான் மாயங்கள் செய்து.  55 

 

 

மாயங்கள் செய்தைவர் 

  சொன்ன வழிநின்று

காயங்கொண் டாடல் 

  கணக்கன்று -காயமே

நிற்பதன் றாதலாற் 

  காளத்தி நின்மலன்சீர்

கற்பதே கண்டீர் கணக்கு.  56 

 

 

கணக்கிட்டுக் கொண்டிருந்து 

  காலனார் நம்மை

வணக்கி வலைப்படா 

  முன்னம் - பிணக்கின்றிக்

காலத்தால் நெஞ்சே 

  கயிலாயம் மேவியநற்

சூலத்தான் பாதந் தொழு.  57 

 

 

தொழுவாள் பெறாளேதன் 

  தோள்வளையுந் தோற்றாள்

மழுவாளன் காளத்தி 

  வாழ்த்தி - எழுவாள்

நறுமா மலர்க்கொன்றை 

  நம்முன்னே நாளைப்

பெறுமாறு காணீர்என் பெண்.  58 

 

 

பெண்ணின் றயலார்முன் 

  பேதை பிறைசூடி

கண்ணின்ற நெற்றிக் 

  கயிலைக்கோன் - உண்ணின்ற

காமந்தான் மீதூர 

  நைவாட்குன் கார்க்கொன்றைத்

தாமந்தா மற்றிவளைச் சார்ந்து.  59 

 

 

சார்ந்தாரை எவ்விடத்துங் 

  காப்பனவுஞ் சார்ந்தன்பு

கூர்ந்தார்க்கு முத்தி 

  கொடுப்பனவும் -கூர்ந்துள்ளே

மூளத் தியானிப்பார் 

  முன்வந்து நிற்பனவும்

காளத்தி யார்தம் கழல்.  60 

 

 

தங்கழல்கள் ஆர்ப்ப 

  விளக்குச் சலன்சலனென்

றங்கழல்கள் ஆர்ப்ப 

  அனலேந்திப் - பொங்ககலத்

தார்த்தா டரவம் 

  அகன்கயிலை மேயாய்நீ

கூத்தாடல் மேவியவா கூறு.  61 

 

 

கூறாய்நின் பொன்வாயால் 

  கோலச் சிறுகிளியே

வேறாக வந்திருந்து 

  மெல்லனவே - நீல் தாவு

மஞ்சடையும் நீள்குடுமி 

  வாளருவிக் காளத்திச்

செஞ்சடைஎம் ஈசன் திறம்.  62 

 

 

ஈசன் திறமே 

  நினைந்துருகும் எம்மைப்போல்

மாசில் நிறத்த 

  மடக்குருகே - கூசி

இருத்தியால் நீயும் 

  இருங்கயிலை மேயாற்

கருத்தியாய்க் காமுற்றா யாம்.  63 

 

 

காமுற்றா யாம்அன்றே 

  காளத்தி யான்கழற்கே

யாமுற்ற துற்றாய் 

  இருங்கடலே - யாமத்து

ஞாலத் துயிரெல்லாங் 

  கண்துஞ்சும் நள்ளிருள்கூர்

காலத்துந் துஞ்சாதுன் கண்.  64 

 

 

கண்ணுங் கருத்துங் 

  கயிலாய ரேஎமக்கென்

றெண்ணி இருப்பன்யான் 

  எப்பொழுதும் - நண்ணும்

பொறியா டரவசைத்த 

  பூதப் படையார்

அறியார்கொல் நெஞ்சே அவர்.  65 

 

 

நெஞ்சே அவர்கண்டாய் 

  நேரே நினைவாரை

அஞ்சேல்என் றாட்கொண் 

  டருள் செய்வார் - நஞ்சேயும்

கண்டத்தார் காளத்தி 

  ஆள்வார் கழல்கண்டீர்

அண்டத்தார் சூடும் அலர்.  66 

 

 

அலரோன் நெடுமால் 

  அமரர்கோன் மற்றும்

பலராய்ப் படைத்துக் காத் 

  தாண்டு - புலர்காலத்

தொன்றாகி மீண்டு 

  பலவாகி நிற்கின்றான்

குன்றாத சீர்க்கயிலைக் கோ.  67 

 

 

கோத்த மலர்வாளி கொண் 

  டநங்கன் காளத்திக்

கூத்தன்மேல் அன்று 

  குறித்தெய்யப் - பார்த்தலுமே

பண்பொழியாக் கோபத்தீச் 

  சுற்றுதலும் பற்றற்று

வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.  68 

 

 

வெந்திறல்வேல் பார்த்தற் 

  கருள்செய்வான் வேண்டிஓர்

செந்தறுகண் கேழல் 

  திறம்புரிந்து -வந்தருளும்

கானவனாம் கோலமியான் 

  காணக் கயிலாயா

வானவர்தங் கோமானே வா.  69 

 

 

வாமான்தேர் வல்ல வயப்போர் 

  விசயனைப் போல்

தாமார் உலகில் 

  தவமுடையார் - தாம்யார்க்குங்

காண்டற் கரியராய்க் 

  காளத்தி ஆள்வாரைத்

தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.  70 

 

 

சென்றிறைஞ்சும் வானோர்தம் 

  சிந்தைக்குஞ் சேயராய்

என்றும் அடியார்க்கு 

  முன்னிற்பர் - நன்று

கனியவாஞ் சோலைக் 

  கயிலாயம் மேயார்

இனியவா பத்தர்க் கிவர்.  71 

 

 

இவரே முதல்தேவர் 

  எல்லார்க்கும் மிக்கார்

இவரல்லர் என்றிருக்க 

  வேண்டா -கவராதே

காதலித்தின் றேத்துதிரேல் 

  காளத்தி ஆள்வார்நீர்

ஆதரித்த தெய்வமே ஆம்.  72 

 

 

ஆமென்று நாளை 

  உளஎன்று வாழ்விலே

தாமின்று வீழ்கை 

  தவமன்று - யாமென்றும்

இம்மாய வாழ்வினையே 

  பேணா திருங்கயிலை

அம்மானைச் சேர்வ தறிவு.  73 

 

 

அறியாம லேனும் 

  அறிந்தேனுஞ் செய்து

செறிகின்ற தீவினைகள் 

  எல்லாம் - நெறிநின்று

நன்முகில்சேர் காளத்தி 

  நாதன் அடிபணிந்து

பொன்முகிலி ஆடுதலும் போம்.  74 

 

 

போகின்ற மாமுகிலே 

  பொற்கயிலை வெற்பளவும்

ஏகின் றெமக்காக 

  எம்பெருமான் - ஏகினால்

உண்ணப் படாநஞ்சம் 

  உண்டாற்கென் உள்ளுறுநோய்

விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.  75 

 

 

வேறேயுங் காக்கத் 

  தகுவேனை மெல்லியலாள்

கூறேயும் காளத்திக் 

  கொற்றவனே - ஏறேறும்

அன்பா அடியேற் 

  கருளா தொழிகின்ற

தென்பாவ மேயன்றோ இன்று.  76 

 

 

இன்று தொடங்கிப் 

  பணிசெய்வேன் யானுனக்

கென்றும் இளமதியே 

  எம்பெருமான் - என்றும்என்

உட்காதல் உண்மை 

  உயர்கயிலை மேயாற்குத்

திட்காதே விண்ணப்பஞ் செய்.  77 

 

 

செய்ய சடைமுடியென் 

  செல்வனையான் கண்டெனது

கையறவும் உள்மெலிவும் 

  யான்காட்டப் -பையவே

காரேறு பூஞ்சோலைக் 

  காளத்தி ஆள்வார்தம்

போரேறே இத்தெருவே போது.  78 

 

 

போது நெறியனவே 

  பேசிநின் பொன்வாயால்

ஊதத் தருவன் 

  ஒளிவண்டே - காதலால்

கண்டார் வணங்குங் 

  கயிலாயத் தெம்பெருமான்

வண்தார்மோந் தென்குழற்கே வா.  79 

 

 

வாவா மணிவாயால் 

  மாவின் தளிர்கோதிக்

கூவா திருந்த 

  குயிற்பிள்ளாய் - ஓவாதே

பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் 

  சூழ் காளத்திக்

கோமான் வரவொருகாற் கூவு.  80 

 

 

கூவுதலும் பாற்கடலே 

  சென்றவனைக் கூடுகஎன்

றேவினான் பொற்கயிலை 

  எம்பெருமான் - மேவியசீர்

அன்பாற் புலிக்காலன் 

  பாலன்பால் ஆசையினால்

தன்பாற்பால் வேண்டுதலுந் தான்.  81 

 

 

தானே உலகாள்வான் 

  தான்கண்ட வாவழக்கம்

ஆனால்மற் றார்இதனை 

  அன்றென்பார்- வானோர்

களைகண்தா னாய்நின்ற 

  காளத்தி ஆள்வார்

வளைகொண்டார் மால்தந்தார் வந்து.  82 

 

 

வந்தோர் அரக்கனார் 

  வண்கயிலை மால்வரையைத்

தந்தோள் வலியினையே 

  தாம்கருதி - அந்தோ

இடந்தார் இடந்திட் 

  டிடார்க்கீழ் எலிபோற்

கிடந்தார் வலியெலாங் கெட்டு.  83 

 

 

கெட்ட அரக்கரே 

  வேதியரே கேளீர்கொல்

பட்டதுவும் ஓராது 

  பண்டொருநாள் - ஒட்டக்

கலந்தரனார் காளத்தி 

  ஆள்வார்மேற் சென்று

சலந்தரனார் பட்டதுவுந் தாம்.  84 

 

 

தாம்பட்ட தொன்றும் 

  அறியார்கொல் சார்வரே

காம்புற்ற செந்நெற் 

  கயிலைக் கோன் - பாம்புற்ற

ஆரத்தான் பத்தர்க் 

  கருகணையார் காலனார்

தூரத்தே போவார் தொழுது.  85 

 

 

தொழுது நமனுந்தன் 

  தூதுவர்க்குச் சொல்லும்

வழுவில்சீர்க் காளத்தி 

  மன்னன் - பழுதிலாப்

பத்தர்களைக் கண்டால் 

  பணிந்தகலப் போமின்கள்

எத்தனையுஞ் சேய்த்தாக என்று.  86 

 

 

வென்றைந்துங் காமாதி 

  வேரறுத்து மெல்லவே

ஒன்ற நினைதிரேல் 

  ஒன்றலாம் - சென்றங்கை

மானுடையான் என்னை 

  உடையான் வடகயிலை

தானுடையான் தன்னுடைய தாள்.  87 

 

 

தாளொன்றால் பாதாளம் 

  ஊடுருவத் தண்விசும்பில்

தாளொன்றால் அண்டங் 

  கடந்துருவித் -தோளொன்றால்

திக்கனைத்தும் போர்க்குந் 

  திறற்காளி காளத்தி

நக்கனைத்தான் கண்ட நடம்.  88 

 

 

நடமாடுஞ் சங்கரன்தாள் 

  நான்முகனுங் காணான்

படமாடு பாம்பணையான் 

  காணான் - விடமேவும்

காரேறு கண்டன் கயிலாயன் 

  தன் உருவை

யாரே அறிவார் இசைந்து.  89 

 

 

இசையுந்தன் கோலத்தை 

  யான்காண வேண்டி

வசையில்சீர்க் காளத்தி 

  மன்னன் - அசைவின்றிக்

காட்டுமேல் காட்டிக் 

  கலந்தென்னைத் தன்னோடும்

கூட்டுமேல் கூடவே கூடு.  90 

 

 

கூடி யிருந்து 

  பிறர்செய்யுங் குற்றங்கள்

நாடித்தம் குற்றங்கள் 

  நாடாதே - வாடி

வடகயிலை யேத்தாதே 

  வாழ்ந்திடுவான் வேண்டில்

அடகயில ஆரமுதை விட்டு.  91 

 

 

விட்டாவி போக 

  உடல்கிடந்து வெந்தீயில்

பட்டாங்கு வேமாறு 

  பார்த்திருந்தும் - ஒட்டாதாம்

கள்ளலைக்கும் பூஞ்சோலைக் 

  காளத்தி யுள்நின்ற

வள்ளலைச்சென் றேத்த மனம்.  92 

 

 

மனமுற்றும் மையலாய் 

  மாதரார் தங்கள்

கனமுற்றுங் காமத்தே 

  வீழ்வர் -புனமுற்

றினக்குறவர் ஏத்தும் 

  இருங்கயிலை மேயான்

தனக்குறவு செய்கலார் தாழ்ந்து.  93 

 

 

தாழ்ந்த சடையுந் 

  தவளத் திருநீறும்

சூழ்ந்த புலியதளும் 

  சூழ்அரவும் - சேர்ந்து

நெருக்கிவா னோர்இறைஞ்சுங் 

  காளத்தி யாள்வார்க்

கிருக்குமா கோலங்கள் ஏற்று.  94 

 

 

ஏற்றின் மணியே 

  அமையாதோ ஈர்ஞ்சடைமேல்

வீற்றிருந்த வெண்மதியும் 

  வேண்டுமோ - ஆற்றருவி

கன்மேற்பட் டார்க்குங் 

  கயிலாயத் தெம்பெருமான்

என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.  95 

 

 

ஈங்கேவா என்றருளி 

  என்மனத்தில் எப்பொழுதும்

நீங்காமல் நீவந்து 

  நின்றாலும் - தீங்கை

அடுகின்ற காளத்தி 

  ஆள்வாய் நான்நல்ல

படுகின்ற வண்ணம் பணி.  96 

 

 

பணியாது முன்னிவனைப் 

  பாவியேன் வாளா

கணியாது காலங் 

  கழித்தேன் - அணியும்

கருமா மிடற்றெங் 

  கயிலாயத் தெங்கள்

பெருமான தில்லை பிழை.  97 

 

 

பிழைப்புவாய்ப் பொன்றறியேன் 

  பித்தேறி னாற்போல்

அழைப்பதே கண்டாய் 

  அடியேன் - அழைத்தாலும்

என்னா தரவேகொண் 

  டின்பொழில்சூழ் காளத்தி

மன்னா தருவாய் வரம்.  98 

 

 

வரமாவ தெல்லாம் 

  வடகயிலை மன்னும்

பரமாஉன் பாதார 

  விந்தம் - சிரமார

ஏத்திடும்போ தாகவந் 

  தென்மனத்தில் எப்பொழுதும்

வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.  99 

 

 

மற்றும் பலபிதற்ற 

  வேண்டாம் மடநெஞ்சே

கற்றைச் சடைஅண்ணல் 

  காளத்தி - நெற்றிக்கண்

ஆரா அமுதின் 

  திருநாமம் அஞ்செழுத்தும்

சோராமல் எப்பொழுதுஞ் சொல்.  100

 

திருச்சிற்றம்பலம்