பதினொன்றாம்-திருமுறை

009 திருக்கயிலாய ஞானவுலா

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

திருமாலும் நான்முகனுந் 

  தேர்ந்துணரா தன்றங்

கருமால் உறஅழலாய் 

  நின்ற - பெருமான்

பிறவாதே தோன்றினான் 

  காணாதே காண்பான்

துறவாதே யாக்கை 

  துறந்தான் - முறைமையால்

ஆழாதே ஆழ்ந்தான் 

  அகலா தகலியான்

ஊழால் உயராதே 

  ஓங்கினான் - சூழொளிநூல்

ஓதா துணர்ந்தான் 

  நுணுகாது நுண்ணியான்

யாதும் அணுகா தணுகியான் - ஆதி

அரியாகிக் காப்பான் 

  அயனாய்ப் படைப்பான்

அரனாய் அழிப்பவனும் 

  தானே – பரனாய

தேவர் அறியாத 

  தோற்றத்தான் தேவரைத்தான்

மேவிய வாறே 

  விதித்தமைத்தான் - ஓவாதே

எவ்வுருவில் யாரொருவர் 

  உள்குவார் உள்ளத்துள்

அவ்வுருவாய்த் தோன்றி 

  அருள்கொடுப்பான் - எவ்வுருவும்

தானேயாய் நின்றளிப்பான் 

  தன்னிற் பிறிதுருவம்

ஏனோர்க்குங் காண்பரிய 

  எம்பெருமான் - ஆனாத

சீரார் சிவலோகந் 

  தன்னுள் சிவபுரத்தில்

ஏரார் திருக்கோயில் 

  உள்ளிருப்ப - ஆராய்ந்து

செங்கண் அமரர் புறங்கடைக்கட் 

  சென் றீண்டி

எங்கட்குக் காட்சியருள் 

  என்றிரப்ப - அங்கொருநாள் (10)  1 

 

 

 

பூமங்கை பொய்தீர் 

  தரணி புகழ்மங்கை

நாமங்கை என்றிவர்கள் 

  நன்கமைத்த - சேமங்கொள்

ஞானக் கொழுந்து 

  நகராசன் தன்மடந்தை

தேன் மொய்த்த குஞ்சியின்மேற் 

  சித்திரிப்ப - ஊனமில்சீர்

நந்தா வனமலரும் 

  மந்தா கினித்தடஞ்சேர்

செந்தா மரைமலர்நூ 

  றாயிரத்தால் - நொந்தா

வயந்தன் தொடுத்தமைத்த 

  வாசிகை சூட்டி

நயந்திகழும் நல்லுறுப்புக் 

  கூட்டிப் - பயன்கொள்

குலமகளிர் செய்த 

  கொழுஞ்சாந்தம் கொண்டு

நலமலிய ஆகந் 

  தழீஇக் - கலைமலிந்த (15)

கற்பகம் ஈன்ற 

  கமழ்பட் டினைஉடுத்துப்

பொற்கழல்கள் கால்மேற் 

  பொலிவித்து - விற்பகரும்

சூளா மணிசேர் 

  முடிகவித்துச் சுட்டிசேர்

வாளார் நுதற்பட்டம் 

  மன்னுவித்துத் - தோளா

மணிமகர குண்டலங்கள் 

  காதுக் கணிந்தாங்

கணிவயிரக் கண்டிகை 

  பொன்னாண் - பணிபெரிய

ஆரம் அவைபூண் 

  டணிதிக ழுஞ்சன்ன

வீரந் திருமார்பில் 

  வில்லிலக - ஏருடைய

எண்டோட்கும் கேயூரம் 

  பெய்துதர பந்தனமும்

கண்டோர் மனமகிழக் 

  கட்டுறீஇக் - கொண்டு (20)

கடிசூத் திரம்புனைந்து 

  கங்கணங்கைப் பெய்து

வடிவுடைய கோலம் 

  புனைந்தாங் - கடிநிலை மேல்  2 

 

 

நந்திமா காளர் 

  கடைகழிந்த போழ்தத்து

வந்து வசுக்கள் 

  இருக்குரைப்ப - அந்தமில்சீர்

எண்ணருங் கீர்த்தி 

  எழுவர் இருடிகளும்

அண்ணல்மேல் ஆசிகள் 

  தாமுணர்த்த - ஒண்ணிறத்த

பன்னிருவர் ஆதித்தர் 

  பல்லாண் டெடுத்திசைப்ப

மன்னும் அகத்தியன்* யாழ் 

  வாசிப்பப் பொன்னியலும்

அங்கி கமழ்தூபம் 

  ஏந்த யமன்வந்து

மங்கல வாசகத்தால் 

  வாழ்த்துரைப்பச் - செங்கண் (25)

நிருதி முதலோர் 

  நிழற்கலன்கள் ஏந்த

வருணன் மணிக்கலசந் 

  தாங்கத் -தெருவெலாம்

வாயு நனிவிளக்க 

  மாமழை நீர்தெளிப்பத்

தூயசீர்ச் சோமன் 

  குடையெடுப்ப - மேவியசீர்

ஈசானன் வந் தடைப்பை 

  கைக்கொள்ள அச்சுனிகள்

வாயார்ந்த மந்திரத்தால் 

  வாழ்த்துரைப்பத் - தூய

உருத்திரர்கள் தோத்திரங்கள் 

  சொல்லக் குபேரன்

திருத்தகு மாநிதியஞ் 

  சிந்தக் - கருத்தமைந்த

கங்கா நதியமுனை 

  உள்ளுறுத்த தீர்த்தங்கள்

பொங்கு கவரி 

  புரையிரட்டத் - தங்கிய (30)

பைந்நாகம் எட்டும் 

  சுடரெடுப்பப் பைந்தறுகண்

கைந்நாகம் எட்டும் 

  கழல்வணங்க - மெய்ந்நாக

மேகம் விதானமாய் 

  மின்னெலாஞ் சூழ்கொடியாய்

மேகத் துருமு 

  முரசறையப் - போகஞ்சேர்

தும்புரு நாரதர்கள் 

  பாடத் தொடர்ந்தெங்கும்

கொம்புருவ நுண்ணிடையார் 

  கூத்தாட - எம்பெருமான்

விண்ணோர் பணிய 

  உயர்ந்த விளங்கொளிசேர்

வெண்ணோர் மழவிடையை 

  மேற்கொண்டாங் - கெண்ணார்

கருத்துடைய பாரிடங்கள் 

  காப்பொத்துச் செய்யத்

திருக்கடைகள் ஏழ்கழிந்த 

  போதில் - செருக்குடைய (35)

சேனா பதிமயில்மேல் 

  முன்செல்ல யானைமேல்

ஆனாப்போர் இந்திரன் 

  பின்படர - ஆனாத

அன்னத்தே ஏறி 

  அயன்வலப்பால் கைபோதக்

கன்னவிலுந் திண்டோட் 

  கருடன்மேல் – மன்னிய

மால்இடப்பாற் செல்ல 

  மலரார் கணைஐந்து

மேலிடப்பால் மென்கருப்பு 

  வில்லிடப்பால் - ஏல்வுடைய

சங்கணையும் முன்கைத் தடமுலையார் 

  மேல் எய்வான்

கொங்கணையும் பூவாளி 

  கோத்தமைத்த - ஐங்கணையான்

காமன் கொடிப்படைமுன் 

  போதக் கதக்காரி

வாமன் புரவிமேல் 

  வந்தணைய - நாமஞ்சேர் (40)

வேழ முகத்து 

  விநாயகனை உள்ளுறுத்துச்

சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை 

  ஒண்கண் - தாழ்கூந்தல்

மங்கை எழுவருஞ் சூழ மடநீலி

சிங்க அடலேற்றின் 

  மேற்செல்லத் - தங்கிய

விச்சா தரர்இயக்கர் 

  கின்னரர் கிம்புருடர்

அச்சா ரணர்அரக்க 

  ரோடசுரர் - எச்சார்வும்

சல்லரி தாளந் 

  தகுணிதந் தத்தளகம்

கல்லலகு கல்ல 

  வடம்மொந்தை - நல்லிலயத்

தட்டழி சங்கஞ் 

  சலஞ்சலந் தண்ணுமை

கட்டழியாப் பேரி 

  கரதாளம் - கொட்டும் (45)

குடமுழவம் கொக்கரை 

  வீணை குழல்யாழ்

இடமாந் தடாரி 

  படகம் - இடவிய

மத்தளந் துந்துபி 

  வாய்ந்த முருடிவற்றால்

எத்திசை தோறும் 

  எழுந்தியம்ப - ஒத்துடனே

மங்கலம் பாடுவார் 

  வந்திறைஞ்ச மல்லரும்

கிங்கரரும் எங்குங் 

  கிலுகிலுப்பத் - தங்கிய

ஆறாம் இருதுவும் 

  யோகும் அருந்தவமும்

மாறாத முத்திரையும் 

  மந்திரமும் - ஈறார்ந்த

காலங்கள் மூன்றுங் 

  கணமுங் குணங்களும்

வால கிலியரும் 

  வந்தீண்டி - மேலை (50)

இமையோர் பெருமானே 

  போற்றி எழில்சேர்

உமையாள் மணவாளா 

  போற்றி - எமையாளும்

தீயாடி போற்றி 

  சிவனே அடிபோற்றி

ஈசனே எந்தாய் 

  இறைபோற்றி - தூயசீர்ச்

சங்கரனே போற்றி 

  சடாமகுடத் தாய்போற்றி

பொங்கரவா பொன்னங் 

  கழல்போற்றி - அங்கொருநாள்

ஆய விழுப்போர் 

  அருச்சுனன் ஆற்றற்குப்

பாசுபதம் ஈந்த 

  பதம்போற்றி - தூய

மலைமேலாய் போற்றி 

  மயானத்தாய் வானோர்

தலைமேலாய் போற்றிதாள் 

  போற்றி - நிலைபோற்றி (55)

போற்றியெனப் பூமாரி 

  பெய்து புலன்கலங்க

நாற்றிசையும் எங்கும் 

  நலம்பெருக - ஏற்றுக்

கொடியும் பதாகையும் 

  கொற்றக் குடையும்

வடிவுடைய தொங்கலுஞ் 

  சூழக் -கடிகமழும்

பூமாண் கருங்குழலார் 

  உள்ளம் புதிதுண்பான்

வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே

 

மன்னும் மகதியன் என்றும் பாடம் 

  ( மகதி எனும் வீணையை வாசிக்கும் நாரதர் என்பது பொருள்)  3 

 

 

வாமான ஈசன் 

  மறுவில்சீர் வானவர்தம்

கோமான் படைமுழக்கம் 

  கேட்டலுமே -தூமாண்பில்

வானநீர் தாங்கி 

  மறையோம்பி வான்பிறையோ

டூனமில் சூலம் 

  உடையவாய் - ஈனமிலா (60)

வெள்ளை அணிதலால் 

  வேழத் துரிபோர்த்த

வள்ளலே போலும் 

  வடிவுடைய - ஒள்ளிய

மாட நடுவில் 

  மலரார் அமளியே

கூடிய போர்க்கள 

  மாக்குறித்துக் - கேடில்

சிலம்பு பறையாகச் 

  சேயரிக்கண் அம்பா

விலங்கு கொடும்புருவம் 

  வில்லா - நலந்திகழும்

கூழைபின் தாழ 

  வளையார்ப்பக் கைபோந்து

கேழ்கிளரும் அல்குலாந் 

  தேருந்திச் - சூழொளிய

கொங்கைமாப் பொங்கக் 

  கொழுநர் மனங்கவர

அங்கம் பொருதசைந்த 

  ஆயிழையார் - செங்கேழற் (65)

பொற்கலசத் துள்ளால் 

  மணிநீர் முகஞ்சேர்த்தி

நற்பெருங் கோலம் 

  மிகப்புனைந்து - பொற்புடைய

பேதை முதலாகப் 

  பேரிளம்பெண் ஈறாக

மாதரவர் சேர 

  மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்

சூளிகையுஞ் சூட்டுஞ் 

  சுளிகையுஞ் சுட்டிகையும்

வாளிகையும் பொற்றோடும் 

  மின்விலக - மாளிகையின்

மேல்ஏறி நின்று 

  தொழுவார் துயர்கொண்டு

மால்ஏறி நின்று 

  மயங்குவார் - நூல்ஏறு

தாமமே தந்து 

  சடாதாரி நல்கானேல்

யாமமேல் எம்மை 

  அடுமென்பார் - காமவேள் (70)

ஆமென்பார் அன்றென்பார் 

  ஐயுறுவார் கையெறிவார்

தாம்முன்னை நாணோடு 

  சங்கிழப்பார் - பூமன்னும்

பொன்னரி மாலையைப் 

  பூண்பார்அப் பூண்கொண்டு

துன்னரி மாலையாச் 

  சூட்டுவார் - முன்னம்

ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித்

தெருவம் புகுவார் 

  திகைப்பார் - அருகிருந்த

கண்ணாடி மேற்பஞ்சு 

  பெய்வார் கிளிஎன்று

பண்ணாடிச் சொற்பந்துக் 

  குற்றுரைப்பார் - அண்ணல்மேற்

கண்ணென்னும் மாசாலங் 

  கோலிக் கருங்குழலார்

திண்ண நிறைத்தாழ் 

  திறந்திட்டார் - ஒண்ணிறத்த (75)  4 

 

 

 

பேதைப் பருவம் 

  பிழையாதாள் வெண்மணலால்

தூதைச் சிறுசோ 

  றடுதொழிலாள் - தீதில்

இடையாலும் ஏக்கழுத்த 

  மாட்டாள் நலஞ்சேர்

உடையாலும் உள்ளுருக்க 

  கில்லாள் - நடையாலும்

கெளவைநோய் காளையரைச் 

  செய்யாள் கதிர்முலைகள்

எவ்வநோய் செய்யுந் 

  தொழில்பூணாள் - செவ்வனேர்

நோக்கிலும் நோய்நோக்கம் 

  நோக்காள்தன் செவ்வாயின்

வாக்கும் பிறர்மனத்தை 

  வஞ்சியாள் - பூக்குழலும்

பாடவந் தோன்ற 

  முடியாள் இளவேய்த்தோள்

ஆடவர் தம்மை 

  அயர்வுசெய்யாள் - நாடொறும் (80)

ஒன்றுரைத் தொன்றுன்னி 

  ஒன்றுசெய் தொன்றின்கண்

சென்ற மனத்தினளாஞ் 

  சேயிழையாள் - நன்றாகத்

தாலி கழுத்தணிந்து 

  சந்தனத்தால் மெய்பூசி

நீல அறுவை 

  விரித்துடுத்துக் - கோலஞ்சேர்

பந்தரிற் பாவை 

  கொண்டாடும்இப் பாவைக்குத்

தந்தையார் என்றொருத்தி 

  தான்வினவ - அந்தமில்சீர்

ஈசன் எரியாடி 

  என்ன அவனையோர்

காய்சின மால்விடைமேற் 

  கண்ணுற்றுத் - தாய்சொன்ன

இக்கணக்கு நோக்காள் 

  இவள்போல்வாள் காமன்நூல்

நற்கணக்கின் மேற்சிறிதே 

  நாட்செய்தாள் - பொற்புடைய (85)  5 

 

 

 

பேரொளிசேர் காட்சிப் 

  பெதும்பைப் பிராயத்தாள்

காரொளிசேர் மஞ்ஞைக் 

  கவின்இயலாள் - சீரொளிய

தாமரை ஒன்றின் 

  இரண்டு குழையிரண்டு

காமருவு கெண்டையோர் 

  செந்தொண்டை - தூமருவு

முத்த முரிவெஞ் 

  சிலைசுட்டி செம்பவளம்

வைத்தது போலும் 

  மதிமுகத்தாள் - ஒத்தமைந்த

கங்கணஞ் சேர்ந்திலங்கு 

  கையாள் கதிர்மணியின்

கிங்கிணி சேர்ந்த 

  திருந்தடியாள் - ஒண்கேழல்

அந்துகில் சூழ்ந்தசைந்த 

  அல்குலாள் ஆய்பொதியிற்

சந்தனந் தோய்ந்த 

  தடந்தோளாள் - வந்து (90)

திடரிட்ட திண்வரைக்கண் 

  செய்த முலையாள்

கடல்பட்ட இன்னமுதம் 

  அன்னாள் - மடல்பட்ட

மாலை வளாய 

  குழலாள் மணம்நாறு

சோலை இளங்கிளிபோல் 

  தூமொழியாள் - சாலவும்

வஞ்சனை செய்து 

  மனங்கவரும் வாட்கண்ணுக்

கஞ்சனத்தை இட்டங் 

  கழகாக்கி - எஞ்சா

மணியாரம் பூண்டாழி 

  மெல்விரலிற் சேர்த்தி

அணியார் வளைதோள்மேல் 

  மின்ன - மணியார்த்த

தூவெண் மணற்கொண்டு 

  தோழியருந் தானுமாய்க்

காமன் உருவம் 

  வரஎழுதிக் - காமன் (95)

கருப்புச் சிலையும் 

  மலரம்புந் தேரும்

ஒருப்பட் டுடன் எழுதும் 

  போழ்தில் - விருப்பூரும்

தேனமருங் கொன்றையந்தார்த் 

  தீர்த்தன் சிவலோகன்

வானமால் ஏற்றின்மேல் 

  வந்தணையத் - தானமர

நன்றறிவார் சொன்ன 

  நலந்தோற்று நாண்தோற்று

நின்றறிவு தோற்று 

  நிறைதோற்று - நன்றாகக்

கைவண்டுங் கண்வண்டும் 

  ஓடக் கலைஓட

நெய்விண்ட பூங்குழலாள் 

  நின்றொழிந்தாள் - மொய்கொண்ட  6 

 

 

மங்கை யிடங்கடவா 

  மாண்பினாள் வானிழிந்த

கங்கைச் சுழியனைய 

  உந்தியாள் - தங்கிய (100)

அங்கை கமலம் 

  அடிகமலம் மான்நோக்கி

கொங்கை கமலம் 

  முகங்கமலம் - பொங்கெழிலார்

இட்டிடையும் வஞ்சி 

  இரும்பணைத்தோள் வேயெழிலார்

பட்டுடைய அல்குலுந் 

  தேர்த்தட்டு - மட்டுவிரி

கூந்தல் அறல்பவளம் 

  செய்யவாய் அவ்வாயில்

ஏய்ந்த மணி முறுவல் 

  இன்முத்தம் - வாய்ந்தசீர்

வண்டு வளாய 

  வளர்வா சிகைசூட்டிக்

கண்டி கழுத்திற் 

  கவின்சேர்த்திக் - குண்டலங்கள்

காதுக் கணிந்து 

  கனமே கலைதிருத்தித்

தீதில் செழுங்கோலஞ் 

  சித்திரித்து - மாதராள் (105)

பொற்கூட்டிற் பூவையை 

  வாங்கி அதனோடும்

சொற்கோட்டி கொண்டிருந்த 

  ஏல்வைக்கண் - நற்கோட்டு

வெள்ளி விலங்கல்மேல் 

  வீற்றிருந்த ஞாயிறுபோல்

ஒள்ளிய மால்விடையை 

  மேல்கொண்டு - தெள்ளியநீர்

தாழுஞ் சடையான் 

  சடாமகுடந் தோன்றுதலும்

வாழுமே மம்மர் 

  மனத்தளாய்ச் - சூழொளியான்

தார்நோக்குந் தன்தாரும் 

  நோக்கும் அவனுடைய

ஏர்நோக்குந் தன்ன தெழில் 

  நோக்கும் - பேரருளான்

தோள்நோக்குந் தன்தோளும் 

  நோக்கும் அவன்மார்பின்

நீள்நோக்கம் வைத்து 

  நெடிதுயிர்த்து - நாண் நோக்கா (110)

துள்ளம் உருக 

  ஒழியாத வேட்கையாம்

வெள்ளத் திடையழுந்தி 

  வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய  7 

 

 

 

தீந்தமிழின் தெய்வ 

  வடிவாள் திருந்தியசீர்

வாய்ந்த மடந்தைப் 

  பிராயத்தாள் - ஏய்ந்தசீர்

ஈசன் சிலையும் 

  எழில்வான் பவளமும்

சேய்வலங்கை வேலுந் 

  திரள்முத்தும் - பாசிலைய

வஞ்சியும் வேயும் 

  வளர்தா மரைமொட்டும்

மஞ்சில்வரு மாமதிபோல் 

  மண்டலமும் - எஞ்சாப்

புருவமுஞ் செவ்வாயும் 

  கண்ணும் எயிறும்

உருவ நுசுப்பும்மென் 

  தோளும் - மருவினிய (115)

கொங்கையும் வாண்முகமு 

  மாக்கொண்டாள் கோலஞ்சேர்

பங்கயப் போதனைய 

  சேவடியாள் - ஒண்கேழல்

வாழைத்தண் டன்ன 

  குறங்கினாள் வாய்ந்தசீர்

ஆழித்தேர்த் தட்டனைய 

  அல்குலாள் - ஊழித்

திருமதியம் மற்றொன்றாம் 

  என்று முகத்தை

உருவுடைய நாண்மீன்சூழ்ந் 

  தாற்போல் - பெருகொளிய

முத்தாரங் கண்டத் 

  தணிந்தாள் அணிகலங்கள்

மொய்த்தார வாரம் மிகப் 

  பெருகி -வித்தகத்தால்

கள்ளுங் கடாமுங் 

  கலவையுங் கைபோந்திட்

டுள்ளும் புறமுஞ் 

  செறிவமைத்துத் - தெள்ளொளிய (120)

காளிங்கஞ் சோதி 

  கிடப்பத் தொடுத்தமைத்த

தாளிம்பத் தாமம் 

  நுதல்சேர்த்தித் - தோளெங்கும்

தண்ணறுஞ் சந்தனம் 

  கொண் டப்பிச் சதிர்சாந்தை

வண்ணம் பெறமிசையே 

  மட்டித்தாங் - கொண்ணுதலாள்

தன்னமர் தோழியர்கள் 

  சூழத் தவிசேறிப்

பின்னுமோர் காமரம் யாழ் 

  அமைத்து - மன்னும்

விடவண்ணக் கண்டத்து 

  வேதியன் மேல்இட்ட

மடல்வண்ணம் பாடும் 

  பொழுதீண் - டடல்வல்ல

வேல்வல்லான் வில்வல்லான் 

  மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்

மால்வல்லான் ஊர்கின்ற 

  மால்விடையின் - கோல (125)

மணியேறு கேட்டாங்கு 

  நோக்குவாள் சால

அணியேறு தோளானைக் 

  கண்டாங் - கணிஆர்ந்த

கோட்டி ஒழிய 

  எழுந்து குழைமுகத்தைக்

கோட்டி நுதல்சிவப்ப 

  வாய்துலக்கி - நாட்டார்கள்

எல்லாருங் கண்டார் எனக் 

  கடவுள் இங்காயம்

நல்லாய் படுமேற் 

  படுமென்று -மெல்லவே

செல்ல லுறுஞ்சரணம் 

  கம்பிக்குந் தன்னுறுநோய்

சொல்லலுறுஞ் சொல்லி 

  உடைசெறிக்கும் - நல்லாகம்

காண லுறுங்கண்கள் 

  நீர்மல்கும் காண்பார்முன்

நாண லுறும்நெஞ்சம் 

  ஒட்டாது - பூணாகம் (130)

புல்லலுறும் அண்ணல்கை 

  வாரான்என் றிவ்வகையே

அல்லலுறும் அழுந்தும் 

  ஆழ்துயரால் - மெல்லியலாள்

தன்னுருவம் பூங்கொன்றைத் 

  தார்கொள்ளத் தான்கொன்றைப்

பொன்னுருவங் கொண்டு 

  புலம்புற்றாள் - பின்னொருத்தி  8

 

 

 

செங்கேழல் தாமரைபோல் 

  சீறடியாள் தீதிலா

அங்கேழ் அரிவைப் 

  பிராயத்தாள் -ஒண்கேழல்

திங்களுந் தாரகையும் 

  வில்லுஞ் செழும்புயலும்

தங்கொளிசேர் செவ்வாயும் 

  உண்மையாற் - பொங்கொளிசேர்

மின்னார்வான் காட்டும் 

  முகவொளியாள் மெய்ம்மையே

தன்னாவார் இல்லாத் 

  தகைமையாள் - எந்நாளும் (135)

இல்லாரை எல்லாரும் 

  எள்ளுவர் செல்வரை

எல்லாருஞ் செய்வர் 

  சிறப்பென்னும் - சொல்லாலே

அல்குற்கு மேகலையைச் 

  சூழ்ந்தாள் அணிமுலைமேல்

மல்கிய சாந்தொடு 

  பூண்புனைந்து - நல்கூர்

இடையிடையே உள்ளுருகக் 

  கண்டாள் எழிலார்

நடைபெடை அன்னத்தை 

  வென்றாள் - அடியிணைமேற்

பாடகங் கொண்டு 

  பரிசமைத்தாள் பன்மணிசேர்

சூடகம் முன்கை 

  தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்

பொன்னரி மாலை 

  தலைக்கணிந்து பூண்கொண்டு

மன்னுங் கழுத்தை 

  மகிழ்வித்தாள் - பொன்னனாள் (140)

இன்னிசை வீணையை 

  வாங்கி இமையவர்தம்

அண்ணல்மேல் தானிட்ட 

  ஆசையால் - முன்னமே

பாடல் தொடங்கும் 

  பொழுதிற் பரஞ்சோதி

கேடிலா மால்விடைமேல் 

  தோன்றுதலும் - கூடிய

இன்னிசையும் இப்பிறப்பும் 

  பேணும் இருந்தமிழும்

மன்னிய வீணையுங் 

  கைவிட்டுப் -பொன்னனையீர்

இன்றன்றே காண்ப தெழில் 

  நலம் கொள்ளேனேல்

நன்றன்றே பெண்மை 

  நமக்கென்று - சென்றவன்தன்

ஒண்களபம் ஆடும் 

  ஒளிவாள் முகத்திரண்டு

கண்களபம் ஆடுவபோல் 

  கட்டுரைத்தும் - ஒண்கேழற் (145)

கூந்தல் அவிழ்க்கும் 

  முடிக்கும் கலைதிருத்தும்

சாந்தந் திமிரும் 

  முலைஆர்க்கும் - பூந்துகிலைச்

சூழும் அவிழ்க்கும் தொழும் 

  அழும் சோர்துயருற்

றாழும் அழுந்தும் 

  அயாவுயிர்க்கும் – சூழொளிய

அங்கை வளைதொழுது 

  காத்தாள் கலைகாவாள்

நங்கை இவளும் 

  நலந்தோற்றாள் - அங்கொருத்தி  9 

 

 

 

ஆரா அமுதம் 

  அவயவம் பெற்றனைய

சீரார் தெரிவைப் 

  பிராயத்தாள் - ஓரா

மருளோசை இன்மழலை 

  வாய்ச்சொலால் என்றும்

இருள்தீர் புலரியே 

  ஒப்பாள் - அருளாலே (150)

வெப்பம் இளையவர்கட் 

  காக்குதலால் உச்சியோ

டொப்பமையக் கொள்ளும் 

  உருவத்தாள் - வெப்பந்தீர்ந்து

அந்தளிர்போல் சேவடியும் 

  அங்கையும் செம்மையால்

அந்திவான் காட்டும் 

  அழகினாள் - அந்தமில்

சீரார் முகம்மதியம் 

  ஆதலாற் சேயிழையாள்

ஏரார் இரவின் 

  எழில்கொண்டாள் - சீராரும்

கண்ணார் பயோதரமும் 

  நுண்ணிடையும் உண்மையால்

தண்ணிளங் காரின் 

  சவிகொண்டாள் -வண்ணஞ்சேர்

மாந்தளிர் மேனி 

  முருக்கிதழ்வாய் ஆதலால்

வாய்ந்த இளவேனில் 

  வண்மையாள் - மாந்தர் (155)

அறிவுடையீர் நின்மின்கள் 

  அல்லார்போம் என்று

பறையறைவ போலுஞ் 

  சிலம்பு - முறைமையால்

சீரார் திருந்தடிமேற் 

  சேர்த்தினாள் தேரல்குல்

ஓரா தகலல் 

  உறாதென்று - சீராலே

அந்துகிலும் மேகலையும் 

  சூழ்ந்தாள் அணிமுலைகள்

மைந்தர் மனங்கவரும் 

  என்பதனால் - முந்துறவே

பூங்கச்சி னால்அடையப் 

  பூட்டுறீஇப் பொற்றொடியால்

காம்பொத்த தோளிணையைக் 

  காப்பேவி - வாய்ந்தசீர்

நற்கழுத்தை நல்லாரத் 

  தால்மறைத்துக் காதுக்கு

விற்பகருங் குண்டலங்கள் 

  மேவுவித்து - மைப்பகரும் (160)

காவியங் கண்ணைக் 

  கதந்தணிப்பாள் போலத்தன்

தாவிய அஞ்சனத்தை 

  முன்னூட்டி - யாவரையும்

ஆகுலம் ஆக்கும் 

  அழகினாள் அன்னமும்

கோகிலமும் போலும் 

  குணத்தினாள் - ஆகிப்

பலகருதிக் கட்டிக் 

  கரியவாய்க் கோடி

அலர்சுமந்து கூழைய 

  ஆகிக் - கலைகரந்து

உள்யாதும் இன்றிப் 

  புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து

கள்ளாவி நாறுங் 

  கருங்குழலாள் - தெள்ளொளிய

செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் 

  செங்குங் குமம்எழுதி

அங்கழுநீர்த் தாமம் 

  நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் (165)

பொற்கவற்றின் வெள்ளிப் 

  பலகை மணிச்சூது

நற்கமைய நாட்டிப் 

  பொரும்பொழுதில் - விற்பகிரும்

தோளான் நிலைபேறு 

  தோற்றங்கே டாய்நின்ற

தாளான் சடாமகுடம் 

  தோன்றுதலும் - கேளாய

நாணார் நடக்க 

  நலத்தார்க் கிடைஇல்லை

ஏணார் ஒழிக 

  எழில்ஒழிக - பேணும்

குலத்தார் அகன்றிடுக 

  குற்றத்தார் வம்மின்

நலத்தீர் நினைமினீர் 

  என்று - சொலற்கரிய

தேவாதி தேவன் 

  சிவனாயில் தேன்கொன்றைப்

பூவார் அலங்கல் 

  அருளாது - போவானேல் (170)

கண்டால் அறிவன் 

  எனச்சொல்லிக் கைசோர்ந்து

வண்டார்பூங் கோதை 

  வளந்தோற்றாள் - ஒண்டாய  10 

 

 

பெண்ணரசாய்த் தோன்றிய 

  பேரிளம் பெண்மையாள்

பண்ணமரும் இன்சொல் 

  பணிமொழியாள் - மண்ணின்மேல்

கண்டுகேட் டுண்டுயிர்த் 

  துற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே 

  உளவென்று - பண்டையோர்

கட்டுரையை மேம்படுத்தாள் 

  கண்ணாடி மண்டலம்போல்

விட்டிலங்கு நல்லுகிர்சேர் 

  மெல்விரலாள் - கட்டரவம்

அஞ்சப் பரந்தகன்ற 

  அல்குலாள் ஆய்நலத்த

வஞ்சிக்கொடி நுடங்கும் 

  நுண்ணிடையாள் - எஞ்சாத (175)

பொற்செப் பிரண்டு 

  முகடு மணியழுத்தி

வைத்தன போல 

  வளர்ந்தேந்தி - ஒத்துச்

சுணங்கும் திதலையுஞ் 

  சூழ்போந்து கண்டார்க்

கணங்கும் அமுதமுமாய்த் 

  தோன்றி - இணங்கொத்த

கொங்கையாள் கோலங்கட் 

  கெல்லாமோர் கோலமாம்

நங்கையாள் நாகிளவேய்த் 

  தோளினாள் - அங்கையாற்

காந்தட் குலம்பழித்தாள் 

  காமவேள் காதலாள்

சாந்தம் இலங்கும் 

  அகலத்தாள் - வாய்ந்துடனே

ஏய்ந்து குவிந்து 

  திரண்டு மறிந்திருபால்

தேய்ந்து துடித்த 

  செழும்பவளம் -காய்த்திலங்கி (180)

முத்தமுந் தேனும் 

  பொதிந்து முனிவரையும்

சித்தந் திறைகொள்ளும் 

  செவ்வாயாள் - ஒத்து

வரிகிடந் தஞ்சனம் 

  ஆடி மணிகள்

உருவம் நடுவுடைய 

  வாகிப் - பெருகிய

தண்ணங் கயலும் 

  சலஞ்சலமுந் தோன்றுதலால்

வண்ணங் கடலனைய 

  வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த

குண்டலஞ்சேர் காதினாள் 

  கோலக் குளிர்மதிய

மண்டலமே போலும் 

  மதிமுகத்தாள் - வண்டலம்ப

யோசனை நாறு 

  குழலாள் ஒளிநுதல்மேல்

வாசிகை கொண்டு 

  வடிவமைத்தாள் - மாசில்சீர்ப் (185)

பாதாதி கேசம் 

  பழிப்பிலாள் பாங்கமைந்த

சீதாரி கொண்டுதன் 

  மெய்புகைத்தாள் - மாதார்ந்த

பண்கவரும் சொல்லார்பல் 

  லாண்டேத்தப் பாயொளிசேர்

வெண்கவரி வெள்ளத் 

  திடையிருந்து - ஒண்கேழற்

கண்ணவனை அல்லாது 

  காணா செவிஅவன

தெண்ணருஞ்சீர் அல்ல 

  திசைகொள்ளா - அண்ணல்

கழலடி அல்லது 

  கைதொழா அஃதான்று

அழலங்கைக் கொண்டான்மாட் 

  டன்பென் - றெழிலுடைய

வெண்பா விரித்துரைக்கும் 

  போழ்தில் விளங்கொளிசேர்

கண்பாவு நெற்றிக் 

  கறைக்கண்டன் - விண்பால் (190)

அரிஅரணஞ் செற்றாங் 

  கலைபுனலும் பாம்பும்

புரிசடைமேல் வைத்த 

  புராணன் - எரிஇரவில்

ஆடும் இறைவன் 

  அமரர்குழாம் தற்சூழ

மாட மறுகில் 

  வரக்கண்டு - கேடில்சீர்

வண்ணச் சிலம்படி 

  மாதரார் தாமுண்ட

கண்ணெச்சில் எம்மையே 

  ஊட்டுவான் - அண்ணலே

வந்தாய் வளைகவர்ந்தாய் 

  மாலும் அருந்துயரும்

தந்தாய் இதுவோ 

  தகவென்று - நொந்தாள்போற்

கட்டுரைத்துக் கைசோர்ந் 

  தகமுருகி மெய்வெளுத்து

மட்டிவரும் பூங்கோதை 

  மால்கொண்டாள் - கொட்டிமைசேர் (195)

பண்ணாரும் இன்சொற் 

  பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்

பெண்ணார வாரம் 

  பெரிதன்றே - விண்ஓங்கி

மஞ்சடையும் நீள்குடுமி 

  வாள்நிலா வீற்றிருந்த

செஞ்சடையான் போந்த தெரு.  11 

 

 

 

பெண்ணீர்மை காமின் 

  பெருந்தோள் இணைகாமின்

உண்ணீர்மை மேகலையும் 

  உள்படுமின் - தெண்ணீரக்

காரேறு கொன்றையந்தார்க் 

  காவாலி கட்டங்கன்

ஊரேறு போந்த துலா.  12 

 

திருச்சிற்றம்பலம்