பதினொன்றாம்-திருமுறை

005 அற்புதத் திருவந்தாதி

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பிறந்து மொழி பயின்ற 

  பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே 

  சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து 

  வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.  1 

 

 

இடர்களையா ரேனும் 

  எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறிபணியா 

  ரேனும் -சுடர்உருவில்

என்பறாக் கோலத் 

  தெரியாடும் எம்மானார்க்

கன்பறா தென்னெஞ் சவர்க்கு.  2 

 

 

அவர்க்கே எழுபிறப்பும் 

  ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ 

  தல்லாற் - பவர்ச்சடைமேற்

பாகாப்போழ் சூடும் 

  அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.  3 

 

 

ஆளானோம் அல்லல் 

  அறிய முறையிட்டாற்

கேளாத தென்கொலோ 

  கேளாமை - நீளாகம்

செம்மையா னாகித் 

  திருமிடறு மற்றொன்றாம்

எம்மைஆட் கொண்ட இறை.  4 

 

 

இறைவனே எவ்வுயிரும் 

  தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம் 

  செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும் 

  எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்.  5 

 

 

வானத்தான் என்பாரும் 

  என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் 

  தாமென்க - ஞானத்தான்

முன்நஞ்சத் தாலிருண்ட 

  மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தானென்பன் யான்.  6 

 

 

யானே தவமுடையேன் 

  என்நெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் 

  எண்ணினேன் - யானேயக்

கைம்மா உரிபோர்த்த 

  கண்ணுதலான் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயி னேன்.  7 

 

 

ஆயினேன் ஆள்வானுக் 

  கன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே 

  யாமாறு - தூய

புனற்கங்கை ஏற்றானோர் 

  பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்.  8 

 

 

அருளே உலகெலாம் 

  ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப 

  தானால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் 

  விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளு மாவ தெனக்கு.  9 

 

 

எனக்கினிய எம்மானை 

  ஈசனையான் என்றும்

மனக்கினிய வைப்பாக 

  வைத்தேன் - எனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் 

  கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே யெனக்கரிய தொன்று.  10 

 

 

ஒன்றே நினைந்திருந்தேன் 

  ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தின் 

  உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்

கங்கையான் திங்கட் 

  கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது.  11 

 

 

அதுவே பிரானாமா 

  றாட்கொள்ளு மாறும்

அதுவே இனியறிந்தோ 

  மானால் - அதுவே

பனிக்கணங்கு கண்ணியா 

  ரொண்ணுதலின் மேலோர்

தனிக்கணங்கு வைத்தார் தகவு.  12 

 

 

தகவுடையார் தாமுளரேல் 

  தாரகலஞ் சாரப்

புகவிடுதல் பொல்லாது 

  கண்டீர் - மிகவடர

ஊர்ந்திடுமா நாகம் 

  ஒருநாள் மலைமகளைச்

சார்ந்திடுமே லேபாவந் தான்.  13 

 

 

தானே தனிநெஞ்சந் 

  தன்னையுயக் கொள்வான்

தானே பெருஞ்சேமஞ் 

  செய்யுமால் - தானேயோர்

பூணாகத் தாற்பொலிந்து 

  பொங்கழல்சேர் நஞ்சுமிழும்

நீணாகத் தானை நினைந்து.  14 

 

 

நினைந்திருந்து வானவர்கள் 

  நீள்மலராற் பாதம்

புனைந்தும் அடிபொருந்த 

  மாட்டார் - நினைந்திருந்து

மின்செய்வான் செஞ்சடையாய் 

  வேதியனே என்கின்றேற்

கென்செய்வான் கொல்லோ இனி.  15 

 

 

இனியோ நாம்உய்ந்தோம் 

  இறைவன் அருள்சேர்ந்தோம்

இனியோ ரிடரில்லோம் 

  நெஞ்சே - இனியோர்

வினைக்கடலை யாக்குவிக்கும் 

  மீளாப் பிறவிக்

கனைக்கடலை நீந்தினோம் காண்.  16 

 

 

காண்பார்க்குங் காணலாந் 

  தன்மையனே கைதொழுது

காண்பார்க்குங் காணலாங் 

  காதலாற் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே 

  தோன்றுமே தொல்லுலகுக்

காதியாய் நின்ற அரன்.  17 

 

 

அரனென்கோ நான்முகன் 

  என்கோ அரிய

பரனென்கோ பண்புணர 

  மாட்டேன் - முரணழியத்

தானவனைப் பாதத் 

  தனிவிரலாற் செற்றானை

யானவனை எம்மானை இன்று.  18 

 

 

இன்று நமக்கெளிதே 

  மாலுக்கும் நான்முகற்கும்

அன்றும் அளப்பரியன் 

  ஆனானை - என்றுமோர்

மூவா மதியானை 

  மூவே ழுலகங்கள்

ஆவானைக் காணும் அறிவு.  19 

 

 

அறிவானுந் தானே 

  அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் 

  தானே - அறிகின்ற

மெய்ப்பொருளுந் தானே 

  விரிசுடர்பார் ஆகாயம்

அப்பொருளுந் தானே அவன்.  20 

 

 

அவனே இருசுடர்தீ 

  ஆகாசம் ஆவான்

அவனே புவிபுனல்காற் 

  றாவான் - அவனே

இயமானனாய் அட்ட 

  மூர்த்தியுமாய் ஞான

மயனாகி நின்றானும் வந்து.  21 

 

 

வந்திதனைக் கொள்வதே 

  யொக்கும்இவ் வாளரவின்

சிந்தை யதுதெரிந்து 

  காண்மினோ- வந்தோர்

இராநீர் இருண்டனைய 

  கண்டத்தீர் எங்கள்

பிரானீர்உம் சென்னிப் பிறை.  22 

 

 

பிறையும் புனலும் 

  அனலரவுஞ் சூடும்

இறைவர் எமக்கிரங்கா 

  ரேனுங் - கறைமிடற்ற

எந்தையார்க் காட்பட்டேம் 

  என்றென் றிருக்குமே

எந்தையா உள்ள மிது.  23 

 

 

இதுவன்றே ஈசன் 

  திருவுருவம் ஆமா

றிதுவன்றே என்றனக்கோர் 

  சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் 

  மீண்டாயென் சிந்தனைக்கே

இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.  24 

 

 

இங்கிருந்து சொல்லுவதென் 

  எம்பெருமான் எண்ணாதே

எங்கும் பலிதிரியும் 

  எத்திறமும் - பொங்கிரவில்

ஈமவனத் தாடுவதும் 

  என்னுக்கென் றாராய்வோம்

நாமவனைக் காணலுற்ற ஞான்று.  25 

 

 

ஞான்ற குழற்சடைகள் 

  பொன்வரைபோல் மின்னுவன

போன்ற கறைமிடற்றான் 

  பொன்மார்பின் - ஞான்றெங்கும்

மிக்கயலே தோன்ற 

  விளங்கி மிளிருமே

அக்கயலே வைத்த அரவு.  26 

 

 

அரவமொன் றாகத்து 

  நீநயந்து பூணேல்

பரவித் தொழுதிரந்தோம் 

  பன்னாள் - முரணழிய

ஒன்னாதார் மூவெயிலும் 

  ஓரம்பால் எய்தானே

பொன்னாரம் மற்றொன்று பூண்.  27 

 

 

பூணாக வொன்று 

  புனைந்தொன்று பொங்கதளின்

நாணாக மேல்மிளிர 

  நன்கமைத்துக் - கோள்நாகம்

பொன்முடிமேற் சூடுவது 

  மெல்லாம் பொறியிலியேற்

கென்முடிவ தாக இவர்.  28 

 

 

இவரைப் பொருளுணர 

  மாட்டாதா ரெல்லாம்

இவரை இகழ்வதே 

  கண்டீர் -இவர் தமது

பூக்கோல மேனிப் 

  பொடிபூசி என்பணிந்த

பேய்க்கோலங் கண்டார் பிறர்.  29 

 

 

பிறரறிய லாகாப் 

  பெருமையருந் தாமே

பிறரறியும் பேருணர்வுந் 

  தாமே - பிறருடைய

என்பே அணிந்திரவில் 

  தீயாடும் எம்மானார்

வன்பேயும் தாமும் மகிழ்ந்து.  30 

 

 

மகிழ்தி மடநெஞ்சே 

  மானுடரில் நீயும்

திகழ்தி பெருஞ்சேமஞ் 

  சேர்ந்தாய் - இகழாதே

யாரென்பே யேனும் 

  அணிந்துழல்வார்க் காட்பட்ட

பேரன்பே இன்னும் பெருக்கு.  31 

 

 

பெருகொளிய செஞ்சடைமேற் 

  பிள்ளைப் பிறையின்

ஒருகதிரே போந்தொழுகிற் 

  றொக்கும் - தெரியின்

முதற்கண்ணான் முப்புரங்கள் 

  அன்றெரித்தான் மூவா

நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.  32 

 

 

நூலறிவு பேசி 

  நுழைவிலா தார்திரிக

நீல மணிமிடற்றான் 

  நீர்மையே - மேலுவந்த

தெக்கோலத் தெவ்வுருவா 

  யெத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத் தவ்வுருவே ஆம்.  33 

 

 

ஆமா றறியாவே 

  வல்வினைகள் அந்தரத்தே

நாமாளென் றேத்தார் 

  நகர்மூன்றும் - வேமாறு

ஒருகணையாற் செற்றானை 

  உள்ளத்தால் உள்ளி

அருகணையா தாரை அடும்.  34 

 

 

அடுங்கண்டாய் வெண்மதியென் 

  றஞ்சி யிருள்போந்

திடங்கொண் டிருக்கின்ற 

  தொக்கும் - படங்கொள்

அணிமிடற்ற பேழ்வாய் 

  அரவசைத்தான் கோல

மணிமிடற்றின் உள்ள மறு.  35 

 

 

மறுவுடைய கண்டத்தீர் 

  வார்சடைமேல் நாகம்

தெறுமென்று தேய்ந்துழலும் 

  ஆஆ - உறுவான்

தளரமீ தோடுமேல் 

  தான்அதனை அஞ்சி

வளருமோ பிள்ளை மதி.  36 

 

 

மதியா அடலவுணர் 

  மாமதில்மூன் றட்ட

மதியார் வளர்சடையி 

  னானை - மதியாலே

என்பாக்கை யாலிகழா 

  தேத்துவரேல் இவ்வுலகில்

என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.  37 

 

 

ஈண்டொளிசேர் வானத் 

  தெழுமதியை வாளரவம்

தீண்டச் சிறுகியதே 

  போலாதே - பூண்டதோர்

தாரேறு பாம்புடையான் 

  மார்பில் தழைந்திலங்கு

கூரேறு காரேனக் கொம்பு.  38 

 

 

கொம்பினைஓர் பாகத்துக் 

  கொண்ட குழகன்தன்

அம்பவள மேனி 

  அதுமுன்னஞ் - செம்பொன்

அணிவரையே போலும் 

  பொடியணிந்தால் வெள்ளி

மணிவரையே போலும் மறித்து.  39 

 

 

மறித்து மடநெஞ்சே 

  வாயாலுஞ் சொல்லிக்

குறித்துத் தொழுதொண்டர் 

  பாதம் - குறித்தொருவர்

கொள்ளாத திங்கள் 

  குறுங்கண்ணி கொண்டார்மாட்

டுள்ளாதார் கூட்டம் ஒருவு.  40 

 

 

ஒருபால் உலகளந்த 

  மாலவனாம் மற்றை

ஒருபால் உமையவளாம் 

  என்றால் - இருபாலும்

நின்னுருவ மாக 

  நிறந்தெரிய மாட்டோமால்

நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.  41 

 

 

நேர்ந்தரவங் கொள்ளச் 

  சிறுகிற்றோ நீயதனை

ஈர்ந்தளவே கொண்டிசைய 

  வைத்தாயோ - பேர்ந்து

வளங்குழவித் தாய்வளர 

  மாட்டாதோ என்னோ

இளங்குழவித் திங்கள் இது.  42 

 

 

திங்க ளிதுசூடிச் 

  சில்பலிக்கென் றூர்திரியேல்

எங்கள் பெருமானே 

  என்றிரந்து - பொங்கொளிய

வானோர் விலக்காரேல் 

  யாம்விலக்க வல்லமே

தானே அறிவான் தனக்கு.  43 

 

 

தனக்கே அடியனாய்த் 

  தன்னடைந்து வாழும்

எனக்கே அருளாவா 

  றென்கொல் - மனக்கினிய

சீராளன் கங்கை 

  மணவாளன் செம்மேனிப்

பேராளன் வானோர் பிரான்.  44 

 

 

பிரானவனை நோக்கும் 

  பெருநெறியே பேணிப்

பிரானவன்தன் பேரருளே 

  வேண்டிப் - பிரானவனை

எங்குற்றான் என்பீர்கள் 

  என்போல்வார் சிந்தையினும்

இங்குற்றான் காண்பார்க் கெளிது.  45 

 

 

எளிய திதுவன்றே 

  ஏழைகாள் யாதும்

அளியீர் அறிவிலீர் 

  ஆஆ - ஒளிகொள்மிடற்

றெந்தைஅராப் பூண்டுழலும் 

  எம்மானை உள்நினைந்த

சிந்தையராய் வாழுந் திறம்.  46 

 

 

திறத்தான் மடநெஞ்சே 

  சென்றடைவ தல்லால்

பெறத்தானும் ஆதியோ 

  பேதாய் - நிறத்த

இருவடிக்கண் ஏழைக் 

  கொருபாகம் ஈந்தான்

திருவடிக்கட் சேருந் திரு.  47 

 

 

திருமார்பில் ஏனச் 

  செழுமருப்பைப் பார்க்கும்

பெருமான் பிறைக்கொழுந்தை 

  நோக்கும் - ஒருநாள்

இதுமதியென் றொன்றாக 

  இன்றளவுந் தேரா

ததுமதியொன் றில்லா அரா.  48 

 

 

அராவி வளைத்தனைய 

  அங்குழவித் திங்கள்

விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்

பொன்னோடு வெள்ளிப் 

  புரிபுரிந்தாற் போலாவே

தன்னோடே யொப்பான் சடை.  49 

 

 

சடைமேல்அக் கொன்றை 

  தருகனிகள் போந்து

புடைமேவித் தாழ்ந்தனவே 

  போலும் - முடிமேல்

வலப்பால்அக் கோல 

  மதிவைத்தான்தன் பங்கின்

குலப்பாவை நீலக் குழல்.  50 

 

 

குழலார் சிறுபுறத்துக் 

  கோல்வளையைப் பாகத்

தெழிலாக வைத்தேக 

  வேண்டா - கழலார்ப்பப்

பேரிரவில் ஈமப் 

  பெருங்காட்டில் பேயோடும்

ஆரழல்வாய் நீயாடும் அங்கு.  51 

 

 

அங்கண் முழுமதியஞ் 

  செக்கர் அகல்வானத்

தெங்கும் இனிதெழுந்தால் 

  ஒவ்வாதே - செங்கண்

திருமாலைப் பங்குடையான் 

  செஞ்சடைமேல் வைத்த

சிரமாலை தோன்றுவதோர் சீர்.  52 

 

 

சீரார்ந்த கொன்றை 

  மலர்தழைப்பச் சேணுலவி

நீரார்ந்த பேரியாறு 

  நீத்தமாய்ப் - போரார்ந்த

நாண்பாம்பு கொண்டசைத்த 

  நம்மீசன் பொன்முடிதான்

காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.  53 

 

 

காருருவக் கண்டத்தெங் 

  கண்ணுதலே எங்கொளித்தாய்

ஓருருவாய் நின்னோ 

  டுழிதருவான் - நீருருவ

மேகத்தாற்செய்தனைய 

  மேனியான் நின்னுடைய

பாகத்தான் காணாமே பண்டு.  54 

 

 

பண்டமரர் அஞ்சப் 

  படுகடலின் நஞ்சுண்டு

கண்டங் கறுத்ததுவு 

  மன்றியே - உண்டு

பணியுறுவார் செஞ்சடைமேற் 

  பால்மதியி னுள்ளே

மணிமறுவாய்த் தோன்றும் வடு.  55 

 

 

வடுவன் றெனக்கருதி 

  நீமதித்தி யாயின்

சுடுவெண் பொடிநிறத்தாய் 

  சொல்லாய் - படுவெண்

புலாற்றலையின் உள்ளூண் 

  புறம்பேசக் கேட்டோம்

நிலாத்தலையிற் சூடுவாய் நீ.  56 

 

 

நீயுலகம் எல்லாம் 

  இரப்பினும் நின்னுடைய

தீய அரவொழியச் 

  செல்கண்டாய் - தூய

மடவரலார் வந்து 

  பலியிடார் அஞ்சி

விடஅரவம் மேலாட மிக்கு.  57 

 

 

மிக்க முழங்கெரியும் 

  வீங்கிய பொங்கிருளும்

ஒக்க வுடனிருந்தால் 

  ஒவ்வாதே - செக்கர்போல்

ஆகத்தான் செஞ்சடையும் 

  ஆங்கவன்தன் பொன்னுருவில்

பாகத்தாள் பூங்குழலும் பண்பு.  58 

 

 

பண்புணர மாட்டேன்நான் 

  நீயே பணித்துக்காண்

கண்புணரும் நெற்றிக் 

  கறைக்கண்டா - பெண்புணரும்

அவ்வுருவோ மாலுருவோ 

  ஆனேற்றாய் நீறணிவ

தெவ்வுருவோ நின்னுருவ மேல்.  59 

 

 

மேலாய மேகங்கள் 

  கூடியோர் பொன்விலங்கல்

போலாம் ஒளிபுதைத்தால் 

  ஒவ்வாதே - மாலாய

கைம்மா மதக்களிற்றுக் 

  காருரிவை போர்த்தபோ

தம்மான் திருமேனி அன்று.  60 

 

 

அன்றுந் திருவுருவங் 

  காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் 

  காண்கிலேன் - என்றுந்தான்

எவ்வுருவோன் உம்பிரான் 

  என்பார்கட் கென்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது.  61 

 

 

ஏதொக்கும் ஏதொவ்வா 

  தேதாகும் ஏதாகா

தேதொக்கும் என்பதனை 

  யாரறிவார் - பூதப்பால்

வில்வேட னாகி 

  விசயனோ டேற்றநாள்

வல்வேட னான வடிவு.  62 

 

 

வடிவுடைய செங்கதிர்க்கு 

  மாறாய்ப் பகலே

நெடிதுலவி நின்றெறிக்குங் 

  கொல்லோ - கடியுலவு

சொன்முடிவொன் றில்லாத 

  சோதியாய் சொல்லாயால்

நின்முடிமேல் திங்கள் நிலா.  63 

 

 

நிலாஇலங்கு வெண்மதியை 

  நேடிக்கொள் வான்போல்

உலாவி உழிதருமா 

  கொல்லோ - நிலாஇருந்த

செக்கரவ் வானமே 

  ஒக்குந் திருமுடிக்கே

புக்கரவங் காலையே போன்று.  64 

 

 

காலையே போன்றிலங்கும் 

  மேனி கடும்பகலின்

வேலையே போன்றிலங்கும் 

  வெண்ணீறு - மாலையின்

தாங்குருவே போலுஞ் 

  சடைக்கற்றை மற்றவற்கு

வீங்கிருளே போலும் மிடறு.  65 

 

 

மிடற்றில் விடமுடையீர் 

  உம்மிடற்றை நக்கி

மிடற்றில் விடங்கொண்ட 

  வாறோ - மிடற்றகத்து

மைத்தாம் இருள்போலும் 

  வண்ணங் கரிதாலோ

பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.  66 

 

 

பாம்பும் மதியும் 

  மடமானும் பாய்புலியுந்

தாம்பயின்று தாழருவி 

  தூங்குதலால் - ஆம்பொன்

உருவடிவில் ஓங்கொளிசேர் 

  கண்ணுதலான் கோலத்

திருவடியின் மேய சிலம்பு.  67 

 

 

சிலம்படியாள் ஊடலைத் 

  தான்தவிர்ப்பான் வேண்டிச்

சிலம்படிமேற் செவ்வரத்தஞ் 

  சேர்த்தி - நலம்பெற்

றெதிராய செக்கரினும் 

  இக்கோலஞ் செய்தான்

முதிரா மதியான் முடி.  68 

 

 

முடிமேற் கொடுமதியான் 

  முக்கணான் நல்ல

அடிமேற் கொடுமதியோங் 

  கூற்றைப் - படிமேற்

குனியவல மாம்அடிமை 

  கொண்டாடப் பெற்றோம்

இனிஅவலம் உண்டோ எமக்கு.  69 

 

 

எமக்கிதுவோ பேராசை 

  யென்றுந் தவிரா

தெமக்கொருநாள் காட்டுதியோ 

  எந்தாய் - அமைக்கவே

போந்தெரிபாய்ந் தன்ன 

  புரிசடையாய் பொங்கிரவில்

ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.  70 

 

 

இடப்பால வானத் 

  தெழுமதியை நீயோர்

மடப்பாவை தன்னருகே 

  வைத்தால் - இடப் பாகங்

கொண்டாள் மலைப்பாவை 

  கூறொன்றுங் கண்டிலங்காண்

கண்டாயே முக்கண்ணாய் கண்.  71 

 

 

கண்டெந்தை என்றிறைஞ்சிக் 

  கைப்பணியான் செய்யேனேல்

அண்டம் பெறினும் 

  அதுவேண்டேன் - துண்டஞ்சேர்

விண்ணாளுந் திங்களாய் 

  மிக்குலகம் ஏழினுக்கும்

கண்ணாளா ஈதென் கருத்து.  72 

 

 

கருத்தினால் நீகருதிற் 

  றெல்லாம் உடனே

திருத்தலாஞ் சிக்கென 

  நான்சொன்னேன் - பருத்தரங்க

வெள்ளநீ ரேற்றான் 

  அடிக்கமலம் நீவிரும்பி

உள்ளமே எப்போதும் ஓது.  73 

 

 

ஓத நெடுங்கடல்கள் 

  எத்தனையும் உய்த்தட்ட

ஏது நிறைந்தில்லை 

  என்பரால் - பேதையர்கள்

எண்ணா திடும்பலியால் 

  என்னோ நிறைந்தவா

கண்ணார் கபாலக் கலம்.  74 

 

 

கலங்கு புனல்கங்கை 

  ஊடால லாலும்

இலங்கு மதிஇயங்க 

  லாலும் - நலங்கொள்

பரிசுடையான் நீண்முடிமேற் 

  பாம்பியங்க லாலும்

விரிசடையாங் காணில் விசும்பு.  75 

 

 

விசும்பில் விதியுடைய 

  விண்ணோர் பணிந்து

பசும்பொன் மணிமகுடந் 

  தேய்ப்ப - முசிந்தெங்கும்

எந்தாய் தழும்பேறி 

  யேபாவம் பொல்லாவாம்

அந்தா மரைபோல் அடி.  76 

 

 

அடிபேரிற் பாதாளம் 

  பேரும் அடிகள்

முடிபேரின் மாமுகடு 

  பேரும் - கடகம்

மறிந்தாடு கைபேரின் 

  வான்திசைகள் பேரும்

அறிந்தாடும் ஆற்றா தரங்கு.  77 

 

 

அரங்கமாய்ப் பேய்க்காட்டில் 

  ஆடுவான் வாளா

இரங்குமோ எவ்வுயிர்க்கும் 

  ஏழாய் - இரங்குமேல்

என்னாக வையான்தான் 

  எவ்வுலகம் ஈந்தளியான்

பன்னாள் இரந்தாற் பணிந்து.  78 

 

 

பணிந்தும் படர்சடையான் 

  பாதங்கள் போதால்

அணிந்தும் அணிந்தவரை 

  ஏத்தத் - துணிந்தென்றும்

எந்தையார்க் காட்செய்யப் 

  பெற்ற இதுகொலோ

சிந்தையார்க் குள்ள செருக்கு.  79 

 

 

செருக்கினால் வெற்பெடுத்த 

  எத்தனையோ திண்டோள்

அரக்கனையும் முன்னின் 

  றடர்த்த - திருத்தக்க

மாலயனுங் காணா 

  தரற்றி மகிழ்ந்தேத்தக்

காலனையும் வென்றுதைத்த கால்.  80 

 

 

காலனையும் வென்றோம் 

  கடுநரகம் கைகழன்றோம்

மேலை இருவினையும் 

  வேரறுத்தோம் - கோல

அரணார் அவிந்தழிய 

  வெந்தீயம் பெய்தான்

சரணார விந்தங்கள் சார்ந்து.  81 

 

 

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே 

  ஒத்திலங்கிச் சாராது

பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் 

  பெற்றியதாம் - தேர்ந்துணரில்

தாழ்சுடரோன் செங்கதிருஞ் 

  சாயுந் தழல்வண்ணன்

வீழ்சடையே என்றுரைக்கும் மின்.  82 

 

 

மின்போலும் செஞ்சடையான் 

  மாலோடும் ஈண்டிசைந்தால்

என்போலுங் காண்பார்கட் 

  கென்றிரேல் - தன்போலும்

பொற்குன்றும் நீல 

  மணிக்குன்றும் தாமுடனே

நிற்கின்ற போலும் நெடிது.  83 

 

 

நெடிதாய பொங்கெரியுந் 

  தண்மதியும் நேரே

கடிதாங் கடுஞ்சுடரும் 

  போலும் - கொடிதாக

விண்டார்கள் மும்மதிலும் 

  வெந்தீ யினில்அழியக்

கண்டாலும் முக்கணான் கண்.  84 

 

 

கண்ணாரக் கண்டும்என் 

  கையாரக் கூப்பியும்

எண்ணார எண்ணத்தால் 

  எண்ணியும் - விண்ணோன்

எரியாடி என்றென்றும் 

  இன்புறுவன் கொல்லோ

பெரியானைக் காணப் பெறின்.  85 

 

 

பெறினும் பிறிதியாதும் 

  வேண்டேம் நமக்கீ

துறினும் உறாதொழியு 

  மேனும் - சிறிதுணர்த்தி

மற்றொருகண் நெற்றிமேல் 

  வைத்தான்தன் பேயாய

நற்கணத்தி லொன்றாய நாம்.  86 

 

 

நாமாலை சூடியும் 

  நம்ஈசன் பொன்னடிக்கே

பூமாலை கொண்டு 

  புனைந்தன்பாய் - நாமோர்

அறிவினையே பற்றினால் 

  எற்றே தடுமே

எறிவினையே என்னும் இருள்.  87 

 

 

இருளின் உருவென்கோ 

  மாமேகம் என்கோ

மருளின் மணிநீலம் 

  என்கோ - அருளெமக்கு

நன்றுடையாய் செஞ்சடைமேல் 

  நக்கிலங்கு வெண்மதியம்

ஒன்றுடையாய் கண்டத் தொளி.  88 

 

 

ஒளிவி லிவன்மதனை 

  ஒண்பொடியா நோக்கித்

தெளிவுள்ள சிந்தையினிற் 

  சேர்வாய் - ஒளிநஞ்சம்

உண்டவா யஃதிருப்ப 

  உன்னுடைய கண்டமிருள்

கொண்டவா றென்இதனைக் கூறு.  89 

 

 

கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை 

  மீதழித் திட்

டேற மிகப்பெருகின் 

  என்செய்தி - சீறி

விழித்தூரும் வாளரவும் 

  வெண்மதியும் ஈர்த்துத்

தெழித்தோடுங் கங்கைத் திரை.  90 

 

 

திரைமருவு செஞ்சடையான் 

  சேவடிக்கே ஆளாய்

உரைமருவி யாமுணர்ந்தோங் 

  கண்டீர் - தெரிமினோ

இம்மைக்கும் அம்மைக்கும் 

  எல்லாம் அமைந்தோமே

எம்மைப் புறம்உரைப்ப தென்.  91 

 

 

என்னை உடையானும் 

  ஏகமாய் நின்றானுந்

தன்னை அறியாத 

  தன்மையனும் - பொன்னைச்

சுருளாகச் செய்தனைய 

  தூச்சடையான் வானோர்க்

கருளாக வைத்த அவன்.  92 

 

 

அவன்கண்டாய் வானோர் 

  பிரானாவான் என்றும்

அவன்கண்டாய் அம்பவள 

  வண்ணன் - அவன் கண்டாய்

மைத்தமர்ந்த கண்டத்தான் 

  மற்றவன்பால் நன்னெஞ்சே

மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.  93 

 

 

விருப்பினால் நீபிரிய 

  கில்லாயோ வேறா

இருப்பிடமற் றில்லையோ 

  என்னோ - பொருப்பன்மகள்

மஞ்சுபோல் மால்விடையாய் 

  நிற்பிரிந்து வேறிருக்க

அஞ்சுமோ சொல்லாய் அவள்.  94 

 

 

அவளோர் குலமங்கை 

  பாகத் தகலாள்

இவளோர் சலமகளும் 

  ஈதே - தவளநீ

றென்பணிவீர் என்றும் 

  பிரிந்தறியீர் ஈங்கிவருள்

அன்பணியார் சொல்லுமின்இங் கார்.  95 

 

 

ஆர்வல்லார் காண 

  அரனவனை அன்பென்னும்

போர்வை அதனாலே 

  போர்த்தமைத்துச் - சீர்வல்ல

தாயத்தால் நாமுந் 

  தனிநெஞ்சி னுள்ளடைத்து

மாயத்தால் வைத்தோம் மறைத்து.  96 

 

 

மறைத்துலகம் ஏழினிலும் 

  வைத்தாயோ அன்றேல்

உறைப்போடும் உன்கைக் 

  கொண்டாயோ - நிறைத்திட்

டுளைந்தெழுந்து நீயெரிப்ப 

  மூவுலகும் உள்புக்

களைந்தெழுந்த செந்தீ யழல்.  97 

 

 

அழலாட அங்கை 

  சிவந்ததோ அங்கை

அழகால் அழல்சிவந்த 

  வாறோ - கழலாடப்

பேயோடு கானிற் 

  பிறங்க அனலேந்தித்

தீயாடு வாயிதனைக் செப்பு.  98 

 

 

செப்பேந் திளமுலையாள் 

  காணவோ தீப்படுகாட்

டப்பேய்க் கணமவைதாங் 

  காணவோ - செப்பெனக்கொன்

றாகத்தான் அங்காந் 

  தனலுமிழும் ஐவாய

நாகத்தா யாடுன் நடம்.  99 

 

 

நடக்கிற் படிநடுங்கும் 

  நோக்கிற் திசைவேம்

இடிக்கின் உலகனைத்தும் 

  ஏங்கும் - அடுக்கற்

பொருமேறோ ஆனேறோ 

  பொன்னொப்பாய் நின்னே

றுருமேறோ ஒன்றா உரை.  100 

 

 

உரையினால் இம்மாலை 

  அந்தாதி வெண்பாக்

கரைவினாற் காரைக்காற் 

  பேய்சொல் - பரவுவார்

ஆராத அன்பினோ 

  டண்ணலைச்சென் றேத்துவார்

பேராத காதல் பிறந்து.  101 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details
பெருமிழலைக் குறும்ப நாயனார்
View Details
உருத்திர பசுபதி நாயனார்
View Details