முதல்-திருமுறை

109 வாருறு வனமுலை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  சீர்காழி - 07-சிரபுரம்

திருச்சிற்றம்பலம்

 

வாருறு வனமுலை மங்கைபங்கன்

நீருறு சடைமுடி நிமலனிடங்

காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்

சீருறு வளவயற் சிரபுரமே.  1 

 

அங்கமொ டருமறை யருள்புரிந்தான்

திங்களொ டரவணி திகழ்முடியன்

மங்கையொ டினிதுறை வளநகரஞ்

செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.  2 

 

பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்

திரிந்தவர் புரமவை தீயின்வேவ

வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்

தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.  3 

 

நீறணி மேனியன் நீள்மதியோ

டாறணி சடையினன் அணியிழையோர்

கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்

சேறணி வளவயல் சிரபுரமே.  4 

 

அருந்திறல் அவுணர்கள் அரணழியச்

சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்

குருந்தொடு கொடிவிடு மாதவிகள்

திருந்திய புறவணி சிரபுரமே.  5 

 

கலையவன் மறையவன் காற்றொடுதீ

மலையவன் விண்ணொடு மண்ணுமவன்

கொலையவன் கொடிமதில் கூட்டழித்த

சிலையவன் வளநகர் சிரபுரமே.  6 

 

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்

தானவர் புரமெய்த சைவனிடங்

கானமர் மடமயில் பெடைபயிலுந்

தேனமர் பொழிலணி சிரபுரமே.  7 

 

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்

கறுத்தவன் காரரக் கன்முடிதோள்

இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்

செறுத்தவன் வளநகர் சிரபுரமே.  8 

 

வண்ணநன் மலருறை மறையவனுங்

கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்

விண்ணுற வோங்கிய விமலனிடம்

திண்ணநன் மதிலணி சிரபுரமே.  9 

 

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்

கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்

பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்

செற்றவன் வளநகர் சிரபுரமே.  10 

 

அருமறை ஞானசம் பந்தனந்தண்

சிரபுர நகருறை சிவனடியைப்

பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்

திருவொடு புகழ்மல்கு தேசினரே. 11

 

திருச்சிற்றம்பலம்