பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 10. ஞானோதயம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மனசந் தியில்கண்ட மன்நன வாகும்

கனவுற ஆனந்தம் காண்டல் அதனை

வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப

இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே.  1 

 

 

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை

அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்

கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.  2 

 

 

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்

தக்கார் உரைத்த தவநெறியே சென்று

புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை

நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.  3 

 

 

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு

விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.  4 

 

 

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு

தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை

தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்

தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.  5 

 

 

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே

அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்

பசும்பொன் திகழும் படர்சடை மீதே

குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.  6 

 

 

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்

கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்

ஒத்துஉயர் அண்டத் துள் அமர் சோதியை

எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.  7 

 

 

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்

நான்என்று தான்என்று இரண்டில்லை என்பது

நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்

நான்என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.  8 

 

 

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி

ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்

ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்

ஞானத்தின் நன்மோன நாதாந்த வேதமே.  9 

 

 

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே

உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்

உய்யவல் லார்அறி வுள்அறி வாமே.  10 

 

 

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்

பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி

ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே.  11 

 

 

ஓம்எனும் ஓர்எழுத் துள்நின்ற ஓசைபோல்

மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி

ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.  12 

  

 

திருச்சிற்றம்பலம்