பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 08.6 அற்புதக் கூத்து

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம்

அருவுரு வாவது அந்த அருவே

திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்

உருவரு வாகும் உமையவள் தானே  1 

 

 

திருவழி யாவது சிற்றம் பலத்தே

குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே

உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு

அருள்வழி யாவதும் அவ்வழி தானே.  2 

 

 

நீரும் சிரசிடைப் பன்னிரண்டு அங்குலம்

ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட

நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து

ஆடும் இடந்திரு அம்பலந் தானே.  3 

 

 

வளிமேகம் மின்வில்லு வானகஓசை

தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்

களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்

ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே.  4 

 

 

தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும்

ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்

மாயைமா மாயை கடந்துநின் றார்காண

நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே.  5 

 

 

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்

கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்

கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.  6 

 

 

இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்

நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்

படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்

அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே.  7 

 

 

சத்தி வடிவு சகல ஆனந்தமும்

ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்

சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு

ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே.  8 

 

 

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.  9 

 

 

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம்

தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்

தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே

கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.  10 

 

 

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்

நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை

சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள

நின்றது தான்நெடு மண்டல மாமே.  11 

 

 

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி

தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி

எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி

அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே.  12 

 

 

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்

ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்

மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக

மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.  13 

 

 

அம்பல மாவது அகில சராசரம்

அம்பல மாவது ஆதிப் பிரானடி

அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்

அம்பல மாவது அஞ்செழுத் தாமே.  14 

 

 

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று

ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன

நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள்

பாடிய வாறுஒரு பாண்டரங் காமே.  15 

 

 

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்

தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்

புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்

கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.  16 

 

 

புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல்

களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்

துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்

ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே.  17 

 

 

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது

உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்

கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்

கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.  18 

 

 

அங்கி தமருகம் அக்குமா லைபாசம்

அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்

தங்குஉ பயந்தரு நீல மும்உடன்

மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.  19 

 

 

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக்

கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி

நீடிய நாதம் பராற்பர நேயத்தே

ஆடிய நந்தி புறம்அகத் தானே.  20 

 

 

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட

அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட

இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட

அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.  21 

 

 

ஏழினில் ஏழாய் இகந்தெழுத்து ஏழதாய்

ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாய்

ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி

ஏழிசை நாடகத் தேஇசைந் தானே.  22 

 

 

மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய்

மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்

மூன்றினில் அக்கம் முடிவாகி முந்தியே

மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.  23 

 

 

தாமுடி வானவர் தம்முடி மேலுறை

மாமணி ஈசன் மலரடித் தாளினை

வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்

காமணி ஞாலம் கடந்துநின் றானே.  24 

 

 

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்

தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை

புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும்

எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே.  25 

 

 

ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்

ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்

ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின்

ஆதி நடமாட லாம் அருட் சத்தியே.  26 

 

 

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து

அன்புறு கோணம் அசிபதத்து ஆடிடத்

துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே

அன்புறும் எந்தை நின்று ஆடலுற் றானே.  27 

 

 

தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்

சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட

வைத்த சராசரம் ஆட மறையாட

அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.  28 

 

 

இருவருங் காண எழில்அம் பலத்தே

உருவோடு அருவோடு உருபர ரூபமாய்த்

திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன்

அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே.  29 

 

 

சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில்

அவமாட ஆடாத அம்பரம் ஆட

நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்

சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே.  30 

 

 

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்

வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்

தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து

நாதப் பிரமம் சிவநாட மாமே.  31 

 

 

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்

தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்

தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்

தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.  32 

 

 

கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள்

வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத்

தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி

ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே.  33 

 

 

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி

பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்

நேதத் துவமும் அவற்றோடு நேதியும்

பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.  34 

 

 

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்

தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே.  35 

 

 

திருந்துநல் சீஎன்று உதறிய கையும்

அருந்தவர் வாஎன்று அணைத்த மணிக்கையும்

பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும்

திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே.  36 

 

 

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு

மருவிய அப்பும் அனலுடன் கையும்

கருவின் மிதித்த கமலப் பதமும்

உருவில் சிவாய நமவென வோதே.  37 

 

 

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்

அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்

அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி

அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே.  38 

 

 

தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி

கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்

மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் 

பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.  39 

 

 

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை

மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து

அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர

சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.  40 

 

 

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே

ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்

தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை

ஆயுறு மேனி அணைபுக லாமே.  41 

 

 

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்

தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை

ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்

ஆனால் அரனடி நேயத்த தாமே.  42 

 

திருச்சிற்றம்பலம்