பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 06. சூக்கும பஞ்சாக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை

ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்

தெளிய ஒதிச்சிவாயநம என்னும்

குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே.  1 

 

 

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை

அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர

அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.  2 

 

 

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்

சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை

சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்

பவமது அகன்று பரசிவன் ஆமே.  3 

 

 

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்

ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்

தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்

ஓதும் சிவாய மலமற்ற உண்மையே.  4 

 

 

நமாதி நனாதி திரோதாயி யாகித்

தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்

சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே

நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே  5 

 

 

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்

ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை

திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்

அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.  6 

 

 

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்

சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்

சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்

சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.  7 

 

 

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே.  8 

 

 

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்

பவமது தீரும் பரிசும்அது அற்றால்

அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.  9 

 

திருச்சிற்றம்பலம்