பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 34. முத்திநிந்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்

நரகதி செல்வது ஞாலம் அறியும்

இரகதி செய்திடு வார்கடை தோறும்

துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.  1 

 

 

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு

நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்

பாடகில் லாரவன் செய்த பரிசறிந்

தாடவல் லாரவர் பேறெது வாமே.  2 

 

 

புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்

திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி

அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்

இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே  3 

 

 

திடரிடை நில்லாத நீர்போல் ஆங்கே

உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்

கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல்

அடலெரி வண்ணனும் அங்குநின் றானே.  4 

 

 

தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்

போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்

காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்

தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.  5 

 

 

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்

கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்

காடும் மலையுங் கழனி கடந்தோறும்

ஊடும் உருவினை யுன்னகி லாரே.  6 

 

 

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்

போவார் குடக்கும் குணக்கும் குறிவழி

நாவினின் மந்திர மென்று நடுவங்கி

வேவது செய்து விளங்கிடு வீரே.  7 

 

 

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்

தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்

சினக்குறப் பேசின தீவினை யாளர்

தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கடலை வற்றடித்தல்
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details
விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
View Details