பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 19. முப்பதம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர

ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்

ஆன்ற பராபர மாகும் பிறப்பற

ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.  1 

 

 

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்

ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு

பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு

வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.  2 

 

 

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்

நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்

சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்

கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.  3 

 

 

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து 

கணுஒன் றிலாத சிவமும் கலந்தால்

இணையறு பால்தேன் அமுதென இன்பத்

துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.  4 

 

 

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்

நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்

அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்

செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.  5 

 

 

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்

செம்பர மாகிய வாசி செலுத்திடத்

தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.  6 

 

 

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்

இந்தியம் சத்தாதி விடவிய னாகும்

நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து

நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.  7 

 

 

பரதுரி யத்து நனவு படியுண்ட

விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து

துரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால்

அரிய துரியம் அசிபதம் ஆமே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

நின்றசீர் நெடுமாற நாயனார்
View Details
திருமூலர்
View Details
விறன்மிண்ட நாயனார்
View Details