பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 13. நின்மல அவத்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள

வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்

ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.  1 

 

 

காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்

மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்

மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்

காலனும் இல்லை கருத்தில்லை தானே.  2 

 

 

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது

தான்மா மறையறை தன்மை அறிகிலர்

ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்

ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.  3 

 

 

உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்

கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி

பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து

அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே.  4 

 

 

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி

நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்

பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்

செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.  5 

 

 

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்

வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்

ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்

தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.  6 

 

 

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து

ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்

ஆன வகையை விடும்அடைத் தாய்விட

ஆன மலாதீதம் அப்பரந் தானே.  7 

 

 

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்

அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்

சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து

அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.  8 

 

 

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை

வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்

வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு

வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.  9 

 

 

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை

நிறஞ்சேர் மத்தின் மலத்தினின் நின்ற

அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந்து 

இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.  10 

 

 

தானே சிவமான தன்மை தலைப்பட

ஆன மலமும்அப் பாச பேதமும்

ஆன குணமும் பரான்மா உபாதியும்

பானுவின் முன்மதி போல்படராவே.  11 

 

 

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு

அருக்கனும் சோமனும் அங்கே அமரும்

திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்

உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.  12 

 

 

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்

ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு

ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு

வானகம் ஏற வழிஎளி தாமே.  13 

 

 

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்

தாடித் தெழுந்த தமருக ஓசையும்

பாடி எழுகின்ற வேதாக மங்களும்

நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.  14 

 

 

முன்னை அறிவினில் செய்த முதுதவம்

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்

தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்

பின்னை அறிவது பேயறி வாகுமே.  15 

 

 

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்

செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்

செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்

செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.  16 

 

 

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்

ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்

ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து

ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.  17 

 

 

தொலையா அரனடி தோன்றும் அச்சத்தி

தொலையா இருளொளி தோற்ற அணுவும்

தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்

தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.  18 

 

 

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி

மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை

தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்

ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.  19 

 

 

அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்

அறிகின்ற என்னை அறியா திருந்தேன்

அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி

அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.  20 

 

 

தான்அவ னாகிய ஞானத் தலைவனை

வானவ ராதியை மாமணிச் சோதியை

ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை

ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.  21 

 

 

ஒளியும் இருளும் பரையும் பரையுள்

அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி

அளியும் அருளும் தெருளும் கடந்து

தெளிய அருளே சிவானந்த மாமே.  22 

 

 

ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்

தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து

ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்

கோன்அந்தம் வாய்க்கும் மகாவாக் கியமாமே.  23 

 

 

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.  24 

 

 

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்

சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்

சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்

சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.  25 

 

 

தானே அறியான் அறிவிலோன் தானல்லன்

தானே அறிவான் அறிவு சதசத்தென்று

ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்

தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.  26 

 

 

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே

தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்

தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே

தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.  27 

 

 

தன்னை அறிந்து சிவனுடன் தானாக

மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்

பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி

நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.  28 

 

 

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்

தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்

மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலான்

மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.  29 

 

 

உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்

உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்

உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே

உயிர்ச்செயல் அன்றி அவ்வுள்ளத்து ளானே.  30 

 

 

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்

கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்

பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு

அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.  31 

 

 

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி

இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்

சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்று

ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.  32 

 

 

உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி

உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்

உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே

உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.  33 

 

 

சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்

ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்

பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்

ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே.  34 

 

 

எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்

எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்

எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்

எய்தினர் செய்யும் இறையருள் தானே.  35 

 

 

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்

திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்

திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்

திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.  36 

 

 

அவமும் சிவமும் அறியார் அறியார்

அவமும் சிவமும் அறிவார் அறிவார்

அவமும் சிவமும் அருளால் அறிந்தால்

அவமும் சிவமும் அவனரு ளாமே.  37 

 

 

அருளான சத்தி அனல் வெம்மை போல

பொருள் அவனாகத்தான் போதம் புணரும்

இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்

திருவருளா னந்தி செம்பொருளாமே.  38 

 

 

ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்

பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப

ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்

பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.  39 

 

 

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்

போதம் புணர்போதம் போதமும் நாதமும்

நாத முடன்நாத நாதாதி நாதமும்

ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.  40 

 

 

மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்

பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி

பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்

ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.  41 

 

 

ஆறாது அகன்று தனையறிந் தானவன்

ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த

வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்

தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.  42 

 

 

தீண்டற்கரிய அரிய திருவடி நேயத்தை

மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று

தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்

தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.  43 

 

 

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்

சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்

சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்

சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.  44 

 

 

தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்

தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்

தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்

தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.  45 

 

 

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்

தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்

தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்

தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.  46 

 

 

அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்

நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை

இருசுட ராகி இயற்றவல் லானும்

ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.  47 

 

 

மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்

உள்கின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே

கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா

அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.  48 

 

 

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று

கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்

தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்

கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.  49 

 

 

குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்

குறிஅறி யார்கடங் கூடல் பெரிது

குறிஅறி யாவகை கூடுமின் கூடி

அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.  50 

 

 

ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்

வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்

தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்

தானே பிறப்போடு இறப்பறி யாரே.  51 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
View Details
பொன் முத்திரையர் (ஸ்ரீ ஸ்வர்ண பைரவர்)
View Details
அங்கம் வெட்டுதல்
View Details