பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 01. உடலிற் பஞ்சபேதம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள

மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு

காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்

மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.  1 

 

 

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்

சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்

சத்த பரிச ரூப ரசகந்தம்

புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.  2 

 

 

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்

கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்

ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே

கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.  3 

 

 

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி

உருவ மலால்உடல் ஒன்றென லாமே.  4 

 

 

ஆரே அறிவார் அடியின் பெருமையை

யாரே அறிவார் அங்கவர் நின்றது

யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை

யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.  5 

 

 

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்

கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்

புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற

நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே.  6 

 

 

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்

ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்

கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி

அடங்கியே அற்றது ஆரறி வாறே.  7 

 

 

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்

தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்

கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே

ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.  8 

 

 

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்

பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்

கையினில் துல்லியம் காட்டும் உடலையும்

ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.  9 

 

 

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்

சேய இடம்அண்மை செல்லவும் வல்லது

காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு

ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.  10 

 

 

நாகம் உடல்உரி போலும்நல் அண்டச

மாக நனாவில் கானாமறந் தல்லது

போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று

ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே.  11 

 

 

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன

கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்

பண்டு தொடரப் பரகாய யோகிபோல்

பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.  12 

 

 

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்

ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்

ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்

வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.  13 

 

 

ஞானிக்குக் காயம் சிவமே தனுவாகும் 

ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்

மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்

மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.  14 

 

 

விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு

எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப

அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்

மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.  15 

 

 

மலமென்று உடம்பை மதியாத ஊமர்

தலமென்று வேறு தரித்தமை கண்டீர்

நலமென்று இதனையே நாடி இருக்கில்

பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.  16 

 

 

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்

மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே

அல்ல செவிசத்த மாதி மனத்தையும்

மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.  17

 

திருச்சிற்றம்பலம்