பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆக மதத்தன ஐந்து களிறுள

ஆக மதத்தறி யோடுஅணை கின்றில

பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின்

யோகு திருந்துதல் ஒன்று அறி யோமே.  1 

 

 

கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன்

திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா

எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே

வருத்தினும் அம்மா வழிநட வாதே.  2 

 

 

புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்

நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து

குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்

உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.  3 

 

 

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன

அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுக மேபுகும்

அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்

எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.  4 

 

 

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்

ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்

ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்

ஐவர்க் கிறைஇறுத்து ஆற்றகி லோமே.  5 

 

 

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்

சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள

வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்

கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.  6 

 

 

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை

எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும்

எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்

எண்ணிலி இல்லதோர் இன்பமது ஆமே.  7 

 

 

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்

துதியின் பெருவலி தொல்வான் உலகம்

மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை

நிதியின் பெருவலி நீர்வலி தானே.  8 

 

திருச்சிற்றம்பலம்