பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 31. போதன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை

சீவ னார்சிவ னாரை அறிகிலர்

சீவ னார்சிவ னாரை அறிந்தபின்

சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.  1 

 

 

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்

மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்

பணவிளக் காகிய பல்தலை நாகம்

கணவிளக் காகிய கண்காணி யாகுமே.  2 

 

 

அறிவாய் அறியாமை நீங்கி யவனே

பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்

அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்

செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.  3 

 

 

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு

ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி

ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்

ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே.  4 

 

 

சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்

அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்

தவமான செய்து தலைப்பறி கின்றார்

நவமான தத்துவம் நாடகி லாரே.  5 

 

 

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்

நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்

நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்

நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே.  6 

 

திருச்சிற்றம்பலம்