பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 24. மன ஆதித்தன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்

எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப

விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி

ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.  1 

 

 

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை

முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை

அந்த இரண்டும் உபய நிலத்தில்

சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.  2 

 

 

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி

ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்

ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற

ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.  3 

 

 

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி

ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது

பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றது 

ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.  4 

 

 

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்

ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை

முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்

இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.  5 

 

திருச்சிற்றம்பலம்