பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 05. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்)

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்

உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்

அகார உகாரம் இரண்டும் அறியில்

அகார உகாரம் இலிங்கம தாமே.  1 

 

 

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்

மேதாதி நாதமும் மீதே விரிந்தன

ஆதார விந்து அதிபீட நாதமே

போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே.  2 

 

 

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்

சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்

சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்

சத்தி சிவமாகும் தாபரம் தானே.  3 

 

 

தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம்

வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம்

பூனேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்

தானேர் எழுகின்ற அகாரமது ஆமே.  4 

 

 

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்

விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம்

அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்

வந்து கருஐந்தும் செய்யும் அவைஐந்தே.  5 

 

 

சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா

சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்

சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்

சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே.  6 

 

 

மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை

மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது

நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும்

இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே.  7 

 

 

பராபரன் எந்தை பனிமதி சூடி

தராபரன் தன்னடி யார்மனக் கோயில்

சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்

அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே.  8 

 

 

பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம்

குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்

அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்

பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.  9 

 

 

அன்று நின் றான்கிடந் தான்அவன் என்றென்று

சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள்

என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை

ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே.  10

 

திருச்சிற்றம்பலம்