பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 03. பிண்டலிங்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.  1 

 

 

உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்

நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்

புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக

வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.  2 

 

 

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்

வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்

தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக

வாயில்கொண்டு ஈசனும் ஆளவந் தானே.  3 

 

 

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை

வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள

பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு

வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே.  4 

 

திருச்சிற்றம்பலம்