முதல்-திருமுறை

099 வம்பார் குன்றம்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : குற்றாலம்

திருச்சிற்றம்பலம்

 

வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்

கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்

அம்பால் நெய்யோ டாட லமர்ந்தான் அலர்கொன்றை

நம்பான் மேய நன்னகர்போலுந் நமரங்காள்.  1 

 

பொடிகள் பூசித் தொண்டர்பின் செல்லப் புகழ்விம்மக்

கொடிக ளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்

கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்

அடிகள் மேய நன்னகர் போலும் மடியீர்காள்.  2 

 

செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்

கொல்லை முல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்

வில்லின் ஒல்க மும்மதி லெய்து வினைபோக

நல்கு நம்பான் நன்னகர் போலுந் நமரங்காள்.  3 

 

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்றேன்

கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்றாலம்

அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்

நக்கன் மேய நன்னகர் போலுந் நமரங்காள்.  4 

 

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி

குலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்

இலையார் சூலம் ஏந்திய கையான் எயிலெய்த

சிலையான் மேய நன்னகர் போலுஞ் சிறுதொண்டீர்.  5 

 

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்

கொய்ம்மா ஏனல் உண்கிளி யோப்புங் குற்றாலம்

கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்ளெம்

பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்.  6 

 

நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்

கோல மஞ்ஞை பேடையொ டாடுங் குற்றாலம்

காலன்தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்ளெம்

சூல பாணி நன்னகர் போலுந் தொழுவீர்காள்.  7 

 

போதும் பொன்னும் உந்தி யருவி புடைசூழக்

கூதன் மாரி நுண்துளி தூங்குங் குற்றாலம்

மூதூரி லங்கை முட்டிய கோனை முறைசெய்த

நாதன் மேய நன்னகர் போலுந் நமரங்காள்.  8 

 

அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப அரும்பீன்று

குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்

பிரமன் னோடு மாலறி யாத பெருமையெம்

பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள்.  9 

 

பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்

குருந்தம் மேறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்

இருந்துண் தேரும் நின்றுண் சமணும் எடுத்தார்ப்ப

அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்.  10 

 

மாடவீதி வருபுனற் காழி யார்மன்னன்

கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்

நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்

பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
கணநாத நாயனார்
View Details
சித்தர் சாங்கதேவர்
View Details